Advertisement

அத்தியாயம்- 16

 

சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை

நின்றாடப் புனை
பாடக முஞ்சிறு பாதமு மங்கொரு பாவனை

கொண்டாட நய
நாடக மாடிய தோகை மயிலென நன்னகர்

வீதியிலே அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி

அடர்ந்துபந் தாடினளே.

 

– திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)

 

 

நாட்கள் அதன் போக்கில் விரைந்து செல்ல குந்தவை ஆதியின் உறவில் சில மாற்றங்கள் ஆரம்பித்தது. இருவருமே ஒருவருக்காக மற்றொருவர் தங்களை மாற்றிக் கொள்ள முனைந்தனர்.

 

 

இருவருக்குமான இடைவெளி சற்றே குறைந்து கொண்டு வந்தாலும் கணவன் மனைவியாக அவர்கள் தங்கள் உறவை இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை.

 

 

இருவருமே உணராத ஒரு விஷயம் தங்களுக்குள் உண்டான பிணைப்பு நேசமாய் காதலாய் மாறியிருக்கிறது என்று. இருவருமே அப்போதைய சந்தோசத்தை மட்டுமே பெரிதாக உணர்ந்ததால் தங்களுக்குள் உண்டான மாற்றத்தை தீவிரமாய் எண்ணியிராததால் அவர்கள் முழுமையான கணவன் மனைவியாய் மாறியிருக்கவில்லை.

 

 

அந்தவார சனிக்கிழமை குந்தவைக்கு அலுவலகம் இருக்க ஆதி அவளை விடவென்று கிளம்பிச் சென்றிருந்தான். அர்ஷிதா வேறு இப்போதெல்லாம் ஜோதிஷ் சரியாக வீட்டுக்கே வருவதில்லை என்று கூறியிருக்க ஆதி ஜோதிஷை அன்று வீட்டிற்கு வரச்சொல்லியிருந்தான்.

 

 

“ஹேய் அர்ஷும்மா, என்னடா என்னை பார்க்கணும்ன்னு சொன்னியாம்… அண்ணாவை பார்க்கணும்ன்னா நீயே எனக்கு ஒரு போட்டிருக்கலாமேடா…

 

 

“இருந்தாலும் சார் பிஸியான நேரத்தை எல்லாம் ஒதுக்கி வைச்சு உன்னை பார்க்க வந்திட்டேன்… இப்போ உனக்கு திருப்தி தானே…

 

 

“ஓஹோ!!! நீங்க பிஸி இதை நாங்க நம்பணும்…. சரி சரி நம்பிட்டேன்…சாப்பிட்டாச்சா…

 

 

“அதெல்லாம் காலையிலேயே மங்களம் கொடுத்தாச்சு நானும் ஒரு வெட்டு வெட்டியாச்சு…

 

 

“சரிண்ணா கொஞ்சம் நேரம் இரு நான் ரஞ்சி வீட்டு வரைக்கும் போயிட்டு வர்றேன்…

 

 

“என்ன அர்ஷும்மா என்னை வரச்சொல்லிட்டு ரஞ்சி வீட்டுக்கு போறேன்னு சொல்ற, சரி நான் வேணா நாளைக்கு வர்றேன்… என்று எழுந்தான் அவன்.

 

 

“ஏன் உன்னால கொஞ்சம் நேரம் எனக்காக காத்திட்டு இருக்க முடியாது, மணிக்கணக்கா காத்திருக்கற ஆளு தானே நீ… ஒரு அரைமணி நேரம் டிவி பார்த்திட்டு இருங்கண்ணா நான் போயிட்டு சீக்கிரமே வந்திடறேன்…

 

 

“அரைமணி நேரமா அப்படி என்ன வேலை, அந்த பொண்ணை நாளைக்கு போய் பார்த்துக்க கூடாதா??

 

 

“பார்க்க கூடாதுண்ணா ஏன்னா நாளைக்கு அவ ஊருக்கு போற… ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் வெயிட் பண்ணேன்… என்றவள் டிவி ரிமோட்டை எடுத்து அவன் கையில் திணித்துவிட்டு வெளியே ஓடினாள்.

 

அவள் அப்புறம் செல்லவும் இந்தப்புறம் வானதி உள்ளே வந்தாள்… சோபாவில் அமர்ந்திருந்த ஜோவின் தலை மட்டுமே தெரிந்ததால் ஆதி தான் அமர்ந்திருக்கிறான் என்று எண்ணினாள் அவள்.

 

 

“மாமா நீங்க ஆபீஸ் கிளம்பலையா?? என்றவாறே உள்ளே வந்து பார்த்தவள் ஜோதிஷை அங்கு எதிர்பார்க்கவில்லை.

 

 

“ஏன் இந்த வீட்டில உன் மாமனை தவிர வேற யாரும் இருக்க மாட்டாங்களா??

 

 

“அப்போ அர்ஷு எங்க போனா??

 

 

“அவ பிரின்ட் பார்க்க போயிருக்கா…

 

 

“என்னை இங்க வரச்சொல்லிட்டு அவ எங்க போனா??

 

 

“அவ தானே… அதோ எதிர்வீட்டில இருக்கற ரஞ்சி, அந்த குரங்கை பார்க்க போயிருக்கா, இங்க வரச்சொன்ன வானரத்தை பத்தி மறந்திட்டா போல?? என்றதும் வானதி அவனை பார்த்து முறைத்தாள்.

 

 

“நான் கிளம்புறேன்… என்றவள் “திரும்ப அரைமணி நேரம் கழிச்சு வர்றேன்னு அவகிட்ட சொல்லிடுங்க…

 

 

“ஹான் சரி சரி சொல்லிடறேன்… அவளும் அரைமணி நேரத்தில வந்திடுவா, நீ கிளம்பு… கிளம்பு… என்றவன் அதிமுக்கியமாக சேனலை மாற்றி வேறு ஒரு நிகழ்ச்சி வைத்துக் கொண்டிருந்தான்.

 

 

திரும்பிச் சென்ற வானதி வாசலை கூட தாண்டியிருக்க மாட்டாள், கண்மூடி திறக்கும் நொடியில் அவளை இருகைகளால் தாங்கியிருந்தான் ஜோதிஷ். “ஜோஷ் விடுங்க… என்ன பண்ணுறீங்க??

 

 

“பார்த்தா தெரியலை தூக்கிட்டு இருக்கேன்…எப்படி எப்படி நீ வருவ, வந்திட்டு நீ பாட்டுக்கு கிளம்புறேன்னு சொல்லுவ, நான் பார்த்திட்டு பேசாம இருப்பேன்னு பார்த்தியா???

 

 

“ஐயோ ப்ளீஸ் ஜோஷ் இறங்கி விடுங்க எனக்கு பயமா இருக்கு… என்னமோ பண்ணுது… ஏன் இப்படி எல்லாம் செய்யறீங்க… அர்ஷி வந்திடுவா… என்றாள்.

 

“அப்போ உனக்கு அர்ஷி வந்திடுவான்னு தான் பயம், வேற எதுவும் இல்லை… அப்படி தானே…

 

 

“ஏன் ஜோஷ் இப்படி எல்லாம் பேசறீங்க… எனக்கு கூச்சமா இருக்கு… இறங்கி விடுங்க…

 

 

“முடியாது… முடியாது… என்று சொன்னவன் அவள் முகத்துக்கு நேரே குனிந்தான்.

 

 

“என்ன நடக்குது இங்க??

 

 

“ஏன்டி திடிர்னு இப்படி கேட்குற??

 

 

“நான் ஒண்ணும் கேட்கலை… என்று சிணுங்கினாள் அவள்.

 

 

“கேட்டது நானு… என்று உள்ளே வந்தான் அர்ஷிதா.

 

 

திடுக்கிட்டு போன ஜோதிஷ் சட்டென்று அவளை கீழே விட சோபாவில் தொம்மென்று விழுந்தாள் வானதி. “ஐயோ அம்மா… வலிக்குதே இப்படியா போடுறது… என்றாள்.

 

 

“நான் கேட்டதுக்கு பதில் வரலையே… இங்க என்ன நடக்குது…

 

 

“ஆ… அது… அது வந்தும்மா அவங்க கீழே விழப்பாத்தாங்களா… நான் அவங்க கீழ விழாம தாங்கி பிடிச்சேன்…

 

 

“அச்சோ அப்படியா ஏன் வானதி நீ என்ன ஆகாசத்துல இருந்தா கீழ விழுந்த?? ஆமா அண்ணா அதனால தான் நீ கைல தாங்கி பிடிச்சியோ?? என்று வானதியில் ஆரம்பித்து ஜோதிஷிடம் சொன்னவளின் பேச்சி நம்பாத தன்மை இருந்தது.

 

 

“இல்லைடா அர்ஷி இவ கீழ தடுக்கி விழ பாத்தா… நான் தான் காப்பாத்தினேன்…

 

 

‘ச்சே இவருக்கு ஒரு பொய் கூட ஒழுங்கா சொல்ல வரமாட்டேங்குது… என்று தலையில் அடித்துக் கொண்டாள் வானதி.

 

 

“அப்படியா ஜோ அண்ணா, கீழ விழ பார்த்தா கையை பிடிச்சி இழுத்து தாங்கி நிறுத்துவாங்க… நீ தூக்கி நிறுத்திட்ட போல… எனக்கு தான் இந்த விபரம் எல்லாம் தெரியலை…

 

 

“சரிண்ணே இவ்வளவு நேரம் நாம விளையாடினது போனதும்… இப்போ சொல்லு என்கிட்ட நீ ஏதும் மறைக்கிறியா?? என்றாள்.

 

 

“ஏன்டா அப்படி கேட்குற, நான் உன்கிட்ட என்ன மறைச்சிருப்பேன்னு நீ நினைக்கிற?? என்றவன் ஏனோ அந்த பதிலை அர்ஷிதாவை பார்த்து சொல்ல முடியாமல் வேறு எங்கோ பார்த்து சொன்னான்.

 

 

“சரி வானதி அண்ணா வாய்ல இருந்து எதுவும் வராதுன்னு நினைக்கிறேன்… நீயாச்சும் சொல்றியா??

 

 

“அது வந்து அர்ஷி அதான் நான் நேத்தே உன்கிட்ட சொன்னேனே… என்றதும் இப்போது ஜோதிஷின் பார்வை வானதியின் மேல் விழுந்தது.

 

 

“எதுக்கு அண்ணா இப்போ அவளை பார்க்கறீங்க??? ஆனா நீங்க என்னை ஏமாத்திட்டீங்க, உங்க வாய்ல நீங்களே சொல்லுவீங்கன்னு நினைச்சேன்… ஆனா கடைசி வரை நீங்க எதுவுமே சொல்லவே இல்லை…

 

 

“உங்களை என்னோட அண்ணாக்கும் மேல நான் நினைச்சிருந்தேன்… என்கிட்ட மறைச்சிட்டீங்களே… என்றாள் அர்ஷிதா நிஜமான வருத்தத்துடன்.

 

 

“போதுமா உனக்கு…. இப்போ திருப்தியா உனக்கு… என்று வானதியை பார்த்து கேட்டான்.

 

 

“நான் சொல்றேன் சொல்லும் போதெல்லாம் படிப்பு, அது இதுன்னு ஒரு ஒரு காரணமா அடிக்கி யார்கிட்டயும் சொல்ல வேணாம்ன்னு சத்தியம் வாங்கி எனக்கு முக்கியமானவங்களுக்கே என்னை வில்லனாக்கிட்ட சந்தோசமா…

 

 

“இல்லை அது வந்து… நான்… என்ற வானதி அதற்கு மேல் பேச முடியாமல் கண்ணீர் வடித்தாள்.

 

 

“அண்ணா… நீங்க எதுக்கு அவ மேல பாயறீங்க… உங்களுக்கு எங்களை விட நேத்து வந்தவளோட பேச்சு தான் முக்கியமா போச்சுல… என்றதும் இப்போது ஜோதிஷும் வானதியும் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தனர்.

 

“சாரி வானதி… நீ தப்பா எடுத்துக்காத, உன்னை தப்பா பேசிட்டேன்னு நினைக்காத… அண்ணா எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லைங்கற ஆதங்கம்…

 

 

“அது தான் என்னை பேசவைக்குது… நிச்சயம் உன்னை தப்பா பேசலை… எனக்கு மங்களம் அம்மா, ஜோதிஷ் அண்ணா, ஆதி அண்ணா எல்லாரும் எவ்வளவு முக்கியம்ன்னு தெரியுமா உனக்கு…

 

 

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… சாரி அண்ணா உங்களை இப்படி நிக்க வைச்சு கேள்வி கேட்கணும்னு நான் நினைக்கலை… நாங்க எல்லாரும் வேண்டாம்ன்னா சொல்லிட போறோம்…

 

 

“உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை நாங்க ஏத்துக்குவோம்ன்னு தெரியாதா அண்ணா உங்களுக்கு… என்று அவள் முடிக்கவில்லை சோபாவில் இருந்து இறங்கியவன் அர்ஷிதாவின் காலுக்கருகில் அமர்ந்து அவள் இருகைகளையும் பிடித்துக் கொண்டான்.

 

 

“என்னை மன்னிச்சுடுடா… நீ சொல்றது எனக்கு புரியது தப்பு என்னோடது தான்டா… நீங்க எல்லாரும் எவ்வளவு முக்கியம்ன்னு நான் அவளுக்கு புரிய வைச்சிருக்கணும்… தப்பு தான்டா…

 

 

“அண்ணா இதெல்லாம் வேணாம்… நீங்க சொல்லலைன்னு தான் ஒரு வருத்தம் உங்களை இப்படி கேள்வி கேட்க எனக்கு பிடிக்கலன்னா… மன்னிச்சுடுங்க…

 

 

வானதிக்கு இப்போது குற்ற உணர்வு பிடிங்கி தின்றது. அவளுக்காய் தானே ஜோதிஷ் யாரிடமும் சொல்லாமல் இருந்தான்.

 

 

சில நாட்களாகவே வானதியின் நடவடிக்கையில் வித்தியாசத்தை கண்ட அர்ஷிதா எப்படியோ ஜோதிஷும் அவளும் காதலிப்பதை பற்றி கண்டுபிடித்து கேட்க அவளால் மறுக்க முடியாமல் உண்மையை கூறிவிட்டாள்.

 

 

“சாரி அர்ஷி, எல்லாத்துக்கும் நான் தான் காரணம்… என்றாள் அழுகுரலில்.

 

 

“ஹலோ அண்ணி… இதெல்லாம் வேணாம்… எனக்கு பிடிக்கலை… நீங்க ரெண்டு பேரும் எப்பவும் போல இருங்க… ஆனா வானதி நான் ஒண்ணு சொல்வேன் நீ கேட்பியா…

 

 

“கேட்குறேன் ஆனா அர்ஷி நீ என்னை எப்பவும் போல வானதின்னு கூப்பிடு… அண்ணின்னு கூப்பிட்டு கலாட்டா எல்லாம் பண்ணாதே…

 

 

“ஹா ஹா ஜோதிஷ் அண்ணா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை நான் வேற எப்படி கூப்பிட முடியும்…அண்ணா சொல்லுங்க உங்க ஆளுகிட்ட…

 

 

“வானதி அவ சரியா தான் சொல்றா… அவ உன்னை அப்படி தான் கூப்பிடுவா, நீ என்ன பண்ணுவியோ பண்ணிக்கோ… என்று சொல்ல வானதி அவனை முறைத்தாள்.

 

 

“அர்ஷிம்மா சாரிடா உன்கிட்ட சொல்லாததுக்கு… நன்றிடா நீ என்னை புரிஞ்சுகிட்டதுக்கு… சரி வானதிகிட்ட ஏதோ சொல்ல வந்தியே என்ன விஷயம்…

 

 

“அது வந்து நான் சொல்றதை நீங்க வித்தியாசமா எடுத்துக்க கூடாது சரியா…

 

 

“என்ன அர்ஷி ஏன் இப்படி பில்ட்அப் கொடுக்கறீங்க…

 

 

“உங்க அண்ணாவை உங்களுக்கு பிடிக்கும் தானே… நீங்க அடிக்கடி ஒண்ணு சொல்லுவீங்க எங்க அண்ணாக்கு என் மேல நெறைய நம்பிக்கை இருக்குன்னு…

 

 

“அவங்களுக்கு உங்க காதல் பத்தி நீங்களே சொல்லிடுங்க… நம்ம மேல உண்மையான அன்பு வைச்சு இருக்கவங்களுக்கும் நம்பிக்கை வைச்சு இருக்கவங்களுக்கும் நாம உண்மையா இருக்கணும்…

 

 

“அண்ணா இது அண்ணிக்கு மட்டுமில்லை… உங்களுக்கும் தான் சேர்த்து சொல்றேன்…

 

 

“நீ கேட்க ஆரம்பிச்சதுமே நான் முடிவு பண்ணிட்டேன்டா, ஆதி வந்ததும் நான் அவன்கிட்ட பேசிடறேன்… ஆதிக்கிட்ட எதுவும் மறைக்கணும்ன்னு நான் நினைக்கலை…

 

 

“ஒரு வேளை நான் அந்த எதிர் வீட்டு பொண்ணையோ இல்லை வேற யாரையாச்சும் விரும்பியிருந்தா கண்டிப்பா உங்ககிட்ட சொல்லியிருப்பேன்… உங்க அண்ணன் இவளோட அக்காவை கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தா கூட கண்டிப்பா உங்க அண்ணாகிட்ட சொல்லியிருப்பேன்…

“ஆனா நீங்க எல்லாரும் சொந்தமாகிட்டீங்க அதான் எப்படி சொல்றதுன்னு யோசனை பண்ணேன்டா… கண்டிப்பா ஆதி இப்போ வந்ததுமே நான் சொல்லிடறேன் போதுமா…

 

 

“வானதி நீ எப்படி உங்கண்ணாகிட்ட சொல்லப் போறியா… இல்லை…. என்று இழுத்தான் ஜோதிஷ்.

 

 

“அர்ஷி இவங்க உங்க அண்ணாகிட்ட சொல்லட்டும், நான் எங்க அண்ணாகிட்ட சொல்லிடறேன்… அப்போ தான் மனசு கொஞ்சம் லேசாகும்… ஆனா அக்காகிட்ட சொல்ல எனக்கு பயமாயிருக்கு… என்றாள் வானதி.

 

 

“அண்ணிகிட்ட சொல்றதை அண்ணா பார்த்துக்குவாங்க… என்றாள் அர்ஷிதா மூவரும் ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டிருக்க ஆதி உள்ளே வந்தான்.

 

 

“என்னடா நடக்குது இங்க… என்றவாறே.

 

 

‘அடப்பாவி குடும்பம் மொத்தமும் ஒரே மாதிரி கேள்வியே கேட்டு வைக்குதுங்க என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ஜோதிஷ்.

 

 

“என்னடா கேட்டுட்டேன் இருக்கேன்… என்ன பேசிட்டு இருக்கீங்க… எனக்கு தெரியாம எதுவும் நடக்குதா இங்க?? என்றான் தொடர்ந்து.

 

 

‘அட பக்கி பயபுள்ள தங்கச்சிக்கு குறையாத அண்ணனா எப்படி பேசுது பாரு… என்று மீண்டும் மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டான்.

 

 

“ஜோ அண்ணா உங்களுக்கு காது கேட்கலையா… அண்ணா என்னமோ கேட்டுட்டு இருக்காங்களே…

 

 

“எல்லாம் நல்லாவே கேட்குது… என்றான் அவன்.

 

 

“என்ன நடக்குது இங்க… எனக்கு ஒண்ணுமே புரியலையே… என்றான் ஆதி.

 

 

“டேய் ஆதி அது ஒண்ணுமில்லை நான் ஒரு பொண்ணை விரும்பறேன்… அதை பத்தி தான் அர்ஷிக்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்…

 

 

“அதான் எனக்கு முதல்லயே தெரியுமே?? என்று அதிர்ச்சி கொடுத்தான் ஆதி.

 

“என்னது தெரியுமா?? என்று மூன்று குரல்கள் கோரசாக ஒலிக்க ஆம் என்றான் அவன்.

 

 

“எப்படி தெரியும் அந்த பொண்ணு யாருன்னு… என்று பாதியிலேயே நிறுத்தினான் ஜோதிஷ்.

 

 

“வானதின்னு நல்லாவே தெரியும்… என்றதும் மூவருமே அதிர்ந்து அவனை பார்த்தனர்.

 

 

“என்னடா சொல்றே?? என்றான் ஜோதிஷ்.

 

 

“ஆமாம்டா அந்த பொண்ணு வானதின்னு எப்பவோ கெஸ் பண்ணிட்டேன்…

 

 

“நான் அவளுக்கு உறவாகிட்டேன்னு என்கிட்ட சொல்ல தயங்கியிருப்பா சரி தானே…நீ இவளை காதலிக்க ஆரம்பிச்சது எப்போன்னு சொல்லவா…

 

 

“என்னோட கல்யாணத்துல சரியா?? நீ அடிக்கடி காணாம போனதும் அதுனால தான் சரியா??

 

 

“டேய் ஏதோ நேர்ல பார்த்த மாதிரியே சொல்றியே?? என்றான் ஜோதிஷ்.

 

 

“சரி இப்போ நீயே உன் வாயால எல்லாமே சொல்லு எப்படி ஆரம்பிச்சுது உங்களோட லவ்… என்று ஜோதிஷை பார்த்து சொன்னவன் வானதி தயங்கி நிற்பதை பார்த்து “வானதி என்கிட்ட உனக்கு எந்த பயமும் வேணாம்...”

 

 

“நான் எதுவும் சொல்லிடுவேன்னு நீ நினைக்க வேண்டாம்… ஜோ நிஜமாவே நல்ல பையன்… கொஞ்சம் பீர் அடிப்பான், ஆனா குடிக்காரன் எல்லாம் இல்லை… இப்போ அவன் அந்த தப்பு எல்லாம் பண்ணறது இல்லை…

 

 

“நீ அவனை நம்பலாம்… உங்க அக்காவுக்கு இந்த விஷயம் இப்போதைக்கு தெரிய வேண்டாம்… சந்தர்ப்பம் பார்த்து நானே சொல்லிக்கறேன் சரியா… என்று அவன் சொன்னதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.

 

 

“தேங்க்ஸ் மாமா… ஆனா மாமா இவர் தண்ணி எல்லாம் அடிப்பாரா… என்றாள் நிஜமான கவலையுடன் ஜோதிஷை பார்த்தவாறே.

 

 

“போதுமாடா நீ நல்லவன் ஆகறதுக்காக என்னை கெட்டவனா ஆக்கிட்டியேடா… கேக்குறாளே நீயே பதில் சொல்லு சாமி… என்றான் ஜோதிஷ்.

 

 

“வானதி அவ சும்மா எப்பவாச்சும் அப்படி செய்யறதுண்டு, உனக்கு அந்த விஷயம் தெரியாதுன்னு பின்னாடி நீ நினைக்க கூடாது இல்லையா அதான் நானே சொன்னேன்… ஆனா இப்போ அவனுக்கு அந்த பழக்கம் இல்லை…

 

 

“நீங்க சொன்னா சரி தான் மாமா…

 

 

“டேய் நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லை…

 

 

“அதான் நீயே எல்லாம் சொல்லிட்டியே கல்யாணத்துல இருந்து தான்னு அது தான் சரியும் கூட, கல்யாணத்துக்கு முன்னாடியே இவளை பலமுறை பார்த்திருக்கேன்…

 

 

“இந்த வீட்டிலேயே ஒரு முறை பார்த்தேன், அப்புறம் நம்ம அர்ஷு ஒரு முறை இது தான் உனக்கு பார்த்த பொண்ணுன்னு சொல்லி போட்டோ காமிச்சா…

 

 

“அண்ணா நான் எங்க வானதியோட போட்டோ காமிச்சேன், நான் காமிச்சது அண்ணியோட போட்டோ தானே…

 

 

“இப்போ எல்லாம் சரியா சொல்லு, ஆனா அன்னைக்கு அண்ணா இந்தாங்க இது தான் பொண்ணு போட்டோன்னு கையை காமிச்சுட்டு போய்ட்ட… நான் இவ தான் பொண்ணுன்னு நினைச்சு கொஞ்ச நாள் தாடி இல்லாத தேவதாஸா இருந்தேன்… என்று பழசை நினைத்து பெருமூச்சு விட்டான்.

 

 

“ஹா ஹா நீ தப்பா பார்த்ததுக்கு நான் என்னண்ணா பண்ணுவேன்…

 

 

“நீ கல்யாண பொண்ணுன்னு வானதியை நினைச்சதா சொன்னியே அன்னைக்கு தான் எனக்கு லேசா பொறி தட்டிச்சு நீ வானதியை விரும்பி இருப்பியோன்னு… நான் வேற எண்ணத்துல இருந்ததுல அப்போ அதை பெரிசா நினைக்கலை… என்றான் ஆதி.

 

 

“டேய் நான் சொல்லவா இல்லை நீயே சொல்லி முடிக்க போறியா??

 

 

“இல்லை இல்லை நீயே சொல்லுடா…

 

“அந்த பயம் இருக்கட்டும்… அப்புறம் அப்படி இப்படின்னு உன் கல்யாணம் முடிஞ்சுது… இவளும் வேற என்னைய லுக் விட்டாளா… சரி இதுக்கு மேல தாங்காது சாமின்னு நேரா போய் இவளை பார்த்து ஐ லவ் யூ சொல்லிட்டேன்…

 

 

“விடற லுக் எல்லாம் விட்டுட்டு எனக்கு ஓகே சொல்ல ஒரு வாரம் ஆக்கிட்டாடா இவ… என்று வானதியை பார்த்து முறைத்தான்.

 

 

“ஹான் அதெப்படி உடனே ஓகே சொல்லிட முடியும்… அதான் பொறுமையா சொன்னேன்… என்றாள் அவள்.

 

 

நால்வரும் சந்தோசமாய் பேசிக் கொண்டிருக்க வானவன் வெளியே சென்றுவிட்டு வந்தவன் நேரே அங்கு வந்து சேர்ந்தான். “என்ன நடக்குது இங்க… என்றான்.

 

 

‘டேய் பாவிகளா இன்னைக்கு எல்லாருமா இதை கேட்குறானுங்களே… என்று மனதிற்குள் புலம்பினான் ஜோதிஷ்.

 

 

“என்ன எல்லாரும் நான் வந்ததும் அமைதியாகிட்டீங்க, ஹேய் டெட்டி பியர் என்ன ஒரே யோசனையா இருக்கே…திருவிழாவில காணாம போன ஆடு மாதிரி முழிக்கிற…

 

 

“என்ன எதுவும் தப்பு பண்ணிட்டியா… என்கிட்டே சொல்லாம எதுவும் மறைக்கிறியா… பார்த்துக்கோ நீ மறைச்சா நான் ஈசியா கண்டுபிடிச்சுடுவேன்… என்று அவளை பயமுறுத்துவது போல் பேசினான்.

 

 

“அண்ணா அது… அது வந்து… என்று விழித்தாள் வானதி, அருகிலிருந்த அர்ஷிதாவின் கையை பிடித்துக் கொள்ள அவள் ஆறுதல் தரும்விதமாய் பிடித்துக் கொள்ள மனம் சற்று சமனப்பட்டது அவளுக்கு.

 

 

“என்ன வானரம் என்ன ஏன் இப்படி தடுமாறுற என்னை வேற அண்ணான்னு கூப்பிடுற… என்ன மாமா என்னாச்சு இவளுக்கு… என்றான் ஆதியிடம்.

 

 

“அதை நீ உன் தங்கைகிட்டவே கேளுப்பா… என்று நழுவினான் ஆதி.

 

 

அதுவரை ஏதோ விளையாட்டாய் பேசிக் கொண்டிருந்த வானவனுக்கு ஏதோ விஷயம் இருப்பதாய் தோன்றியது. தனியாய் இருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் நிமிர்ந்து அமர்ந்தான்.

முகமும் சீரியஸாகி விட “என்ன வானதி என்ன விஷயம்?? என்றான்.

 

 

“வானதி நீங்க ரெண்டு பேரும் உள்ள போய் பேசுங்க… என்றாள் அர்ஷிதா.

 

 

இப்போது வானவனுக்கு மண்டை வெடித்தது என்ன விஷயமாக இருக்குமென்று, “ஜோ வா நாம வெளிய போய் பேசுவோம்… என்றவன் நண்பனை அழைத்துக் கொண்டு அர்ஷிக்கு கண்ணைக் காட்ட அவளும் ஏதோ வேலை போல் எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

 

 

ஜோதிஷோ “டேய் ஆதி அவன் எதுவும் கோபமா திட்டிட போறான்டா… ரொம்பவும் பயந்தவடா, அடிச்சிட மாட்டான்ல… என்ற நண்பனை வித்தியாசமாய் பார்த்தான் ஆதி.

 

 

“காதல் வந்தா இப்படிதான் பதறுவாங்களோ?? என்றான் ஆதி.

 

 

“ஏன்டா நானே கவலையா பேசிட்டு இருக்கேன் நீ என்னடா காமெடி பண்ணுற, வாடா உள்ள போகலாம்… நானே அவன்கிட்ட சொல்லிடறேன்… என்றான் ஜோதிஷ்.

 

 

“டேய் நீ என்ன அவனோட தங்கச்சியா, பெரிசா நீயே போய் சொல்றேன்னு போற… வானதி தான் இதை அவன்கிட்ட சொல்லணும்… வானவன் ஒண்ணும் முரடனில்லை…

 

 

“அவன் ரொம்பவும் புத்திசாலி எதையும் பக்குவமா தான் யோசிப்பான், செய்வான்… உனக்கு எப்பவும் அவனை பத்தி எந்த பயமும் கவலையும் வேண்டாம்… இது அண்ணன் தங்கச்சி விவகாரம் அவங்க பார்த்துக்குவாங்க… நீ கொஞ்சம் பேசாம இரு… என்று நண்பனை அடக்கினான் ஆதி.

 

 

எங்கே ஜோதிஷின் மனது அவன் சொன்னதை கேட்டால் தானே, அது வானதிக்கு என்னாகுமோ என்று துடித்தது.

 

 

உள்ளேயோ வானதி வானவனிடம் “அண்ணா உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்….

 

 

Advertisement