Advertisement

அத்தியாயம்- 15

 

பூவென்ற பாதம் வருடி வருடிப் 

புளக முலையை நெருடி நெருடி
ஏவென்ற கண்ணுக்கோ ரஞ்சனம் தீட்டி

எடுத்த சுருளு மிதழா லிடுக்குவள்
வாவென்று கைச்சுருள் தாவென்று வாங்காள்

மனக்குறி கண்டு நகக்குறி வைத்தபின்
ஆவென் றொருக்கா லிருக்கா லுதைப்பள்

அதுக்குக் கிடந்து கொதிக்குதென் பேய்மனம்

 

– திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)

 

 

“என்ன இங்க சண்டை… என்ன இங்க சண்டை… என்று கரகாட்டக்காரன் கோவை சரளா போல் கேட்டுக் கொண்டே வந்தான் வானவன்.

 

 

‘ஐயோ இவன் வேற வந்துட்டானே, இவன் சும்மாவே ஆடுவான்… இப்போ ரொம்ப அட்வைஸ் மழை பொழிவானே… என்று எண்ணியவள் சட்டென்று முடிவெடுத்து அவனை பார்த்தாள்.

“மந்தி இந்தா குருமா மாமாக்கு பிடிக்கும்ன்னு அம்மா கொடுத்து விட்டாங்க… என்று அவள் கையில் நீட்ட அவளோ “மாமா மேல தான் இருக்கார், போய் சாப்பிட கூப்பிடு… என்று விட்டு அவன் கையில் இருந்ததை வாங்கிக் கொண்டு சமையலறை சென்று மறைந்தாள்.

 

 

படியேற சென்றவனை வானதி தடுத்து விபரமுரைக்க அவன் நேராக சமையலறைக்கு வந்தான். “என்ன பிரச்சனை உங்களுக்குள்ள??

 

 

“அதெல்லாம் உன்கிட்ட சொல்லணும் அவசியமில்லை… என்றாள் அவள் பதிலுக்கு.“சரி சொல்ல வேணாம்…நீயே போய் மாமாவை கூப்பிட்டுக்கோ… என்றுவிட்டு அவன் வெளியில் வந்தான்.

 

 

அவளும் அவன் பின்னே வர “என்ன எல்லாரும் சேர்ந்து சதி பண்ணுறீங்களா?? அர்ஷி அவங்க என் பேச்சை கேட்க மாட்டேங்குறாங்க, நீ போய் உங்கண்ணாவை சாப்பிட கூப்பிடு… என்று சொல்ல அவளும் எழுந்தாள்.

 

 

“சரிங்கண்ணி… நான் போய் கூப்பிடுறேன்… என்று அர்ஷிதா எழ “நீ ஏன் அர்ஷி இப்படி இருக்க, ஒரு நிமிஷம் இரு… என்ற வானதி வானவனை பார்த்தாள் ஏதாவது செய்யேன் என்பது போல்.

 

 

அவன் குந்தவையை இழுத்துக் கொண்டு வெளியில் சென்றான். “அக்கா நீ ஏன் இப்படி பண்ற, உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது… ஆனா இப்போ சின்னதா இருக்கற ஒரு விஷயத்தை இப்படி எல்லாம் செஞ்சு பெரிசாக்கிடாதே…

 

 

“நீ அர்ஷியை அனுப்பி சாப்பிட கூப்பிடுவ, மாமா ஏன் இவ வந்து கூப்பிடக் கூடாதான்னு நினைப்பார்… மாமா கீழ வரலைன்னதும் நீ என்ன நினைப்ப… நாம கூப்பிட்டு அனுப்பினா இவர் வரலைன்னு நினைப்ப…

 

 

“இப்படியே பிரச்சனை வளர்ந்திட்டே போகும்… கடைசில எதுக்கு பிரச்சனை ஆரம்பிச்சுதுன்னே தெரியாத அளவுக்கு தொட்டதுக்கெல்லாம் குத்தம் கண்டுபிடிக்கற மாதிரி ஆகிடும்…

 

 

“சொன்னா கேளுக்கா, நீயே போய் மாமாவை சாப்பிட கூப்பிடு… தேவையில்லாம எதையும் பெரிசாக்காதே… என்று நீளமாக அட்வைஸ் செய்ய அவளுக்கும் அதுவே சரியென்று தோன்ற படியேறி அவளே மாடிக்கு சென்றாள்…

 

ஆதியோ தலையில் கை வைத்தவாறே அகலமாய் இருந்த சுவர் மதிலில் ஏறி அமர்ந்திருந்தான். அவனுக்குள் கலவையான உணர்வுகள் அணிவகுத்து நின்றிருந்தன.

 

 

எல்லாவற்றுக்கும் மேல் அவன் மேலேயே அவனுக்கு கோபம் எழுந்தது. முதலிரவன்று குந்தவையிடம் ஜம்பமாக பேசியதென்ன, ஆனால் இப்போது அவன் மனதில் தோன்றும் எண்ணம் என்ன என்றெண்ணியே கோபம் வந்தது அவனுக்கு.

 

 

உன்னை எந்தவிதத்திலும் தொந்திரவு செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளிடம் நான் எதிர்பார்ப்பது தான் என்ன… எனக்கு ஏன் புத்தி இப்படி எல்லாம் போகிறது என்று அவனையே திட்டிக் கொண்டான்.

 

 

குந்தவை படியேறி வந்ததை கூட கவனிக்காமல் தன் நினைவில் உழன்றிருந்தவனை குந்தவை அழைக்க அவன் காதுகளை கழற்றி வைத்தவன் போல் ஒரே நிலையிலேயே அமர்ந்திருந்தான்.

 

 

‘என்னாச்சு இவருக்கு… எதுக்கு இப்படி கப்பல் கவிழ்ந்து போன மாதிரி தலையில கையை வைச்சு உட்கார்ந்திருக்காரு… கூப்பிட்டாலும் காதுல விழலை… ரொம்ப பேசிட்டமோ… என்று எண்ணியவள் அவன் அருகில் சென்று அவனை உலுக்கினாள்.

 

 

திடுக்கிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் தெரிந்தது என்ன என்பதை அவளால் உணர முடியவில்லை… “சாப்பிட வாங்க…என்று அவள் கூறிவிட்டு திரும்ப “குந்தவை ஒரு நிமிஷம் ப்ளீஸ்… என்றான்.

 

 

“ப்ளீஸ் கொஞ்சம் இங்க உட்காரேன்… உன்கிட்ட பேசணும்… என்று சொன்னதும் எந்த மறுப்பும் சொல்லாமல் அவன் காட்டிய இடத்தில் அமர்ந்தாள்.

 

 

இருவருக்கும் இடையில் ஒரு ஆள் அமரும் அளவு இடைவெளி இருக்க திரும்பி அவளை பார்த்தவன் “சாரி குந்தவை, ஏதோ வாய்க்கு வந்தது எல்லாம் பேசிட்டேன்…

 

 

“நான் பேசினது எவ்வளவு முட்டாள்தனம்ன்னு எனக்கு புரியுது… அன்னைக்கு உன்கிட்ட அப்படி எல்லாம் பேசிட்டு இன்னைக்கு இப்படி நான் பேசினது உனக்கு அதிர்ச்சியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்… இனி இப்படி பேச மாட்டேன்… ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு…

 

குந்தவைக்கு ஆச்சரியமாக இருந்தது, இதற்கு முன் அவள் அவனை அடித்திருக்கிறாள் அவமானமாக கூட பேசியிருக்கிறாள், அப்போதெல்லாம் நிமிர்ந்து நின்றே அவளுக்கு பதில் சொல்லியிருக்கிறான்.

 

 

ஏனோ இன்று தலைகுனிந்தவனாய் அவன் பதிலிறுத்தது அவள் மனதின் ஒரு புறம் வலித்தது. தவறு செய்த சிறுவனாய் அவள் முன் அவன் நின்றது போல் இருந்த நிலை அவளுக்கு பிடித்தமாய் தோன்றவில்லை…

 

 

“நீங்க ஏன் என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்கறீங்க… நான் தான் வழக்கம் போல அவசரப்பட்டு வார்த்தையை விட்டேன்… தப்பு என் மேல தான்… என்று அவள் சொல்ல “நீ என்ன சொல்லியிருந்தாலும் நான் அப்படி பேசினது தப்பு…

 

 

“என்னோட எதிர்பார்ப்பு அது தான்னு நீ நினைச்சுட கூடாது… நீ என்னை தப்பா நினைக்கிறதை என்னால ஒத்துக்க முடியலை…

 

 

“நான் உங்களை தப்பா நினைக்கவே இல்லைங்க…

 

 

“குந்தவை நான் பேசி முடிச்சிடறேன், நீ பதில் பேசக் கூட முடியாத அளவுக்கு நான் உன் மேல என்னோட கருத்தை திணிச்சிருக்கேன்னு தான் சொல்லணும்…

 

 

“இதுக்கு முன்னாடி நீ என்னை தப்பா நினைச்சியா சரியா நினைச்சியான்னு நான் எப்பவும் கவலைப்பட்டதேயில்லை… ஏன் நம்மோட முதலிரவு அன்னைக்கு கூட நான் அதே தான் உன்கிட்ட சொன்னேன்…

 

 

“உன்னோட கருத்து மாறுற வரைக்கும் காத்திட்டு இருப்பேன்னு… நான் பேசினது உன்னை கஷ்டப்படுத்தும்ன்னு தோணிச்சு… அதான் சாரி கேட்கறேன், அப்புறம் நீ என்னை தப்பா நினைக்க கூடாதுன்னு என் மனசுக்கு தோணுது…

 

 

“என் பொண்டாட்டி என்னை அப்படி நினைக்கிறதை என்னால தாங்க முடியலை… என்றவன் சற்று தள்ளி அமர்ந்து அந்த இடைவெளியை குறைத்தவன் அவளிருகைகளையும் பிடித்துக் கொண்டான்.

 

 

அவள் அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் பார்வையால் அவளிடம் மன்னிப்பை யாசித்துக் கொண்டிருந்தான். அவளும் பதில் பார்வையாய் இதெல்லாம் தேவையில்லை என்று விழியால் மொழிபெயர்த்து கொண்டிருந்தாள்.

 

 

இருவருமே அந்த நிலையை நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை, நேரம் கடந்ததே ஒழிய அவர்கள் இருவரின் பார்வையும் விலகவேயில்லை. இவர்கள் இப்படியிருக்க கீழே வானதி, அர்ஷிதா வானவன் மூவரும் நேரத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 

“ஹேய் வானதி என்னாச்சு இவ்வளவு நேரமாகுது அவங்க ரெண்டு பேரையும் காணோமே… மறுபடியும் எதுவும் சண்டை போடுறாங்களா… என்று தங்கையின் காதில் கிசுகிசுத்தான் வானவன்.

 

 

“எனக்கும் கொஞ்சம் சொன்னா நானும் கேட்டுப்பேன்ல… என்றாள் அர்ஷிதா.

 

 

“ஓ உங்களுக்கு பேச கூட வருமா… என்று வியப்பாய் கேட்டான் வானவன்.

 

 

“ஏன் எனக்கு வாய் இருக்கே நான் நல்லா பேசுவேனே… என்றாள் அவள் பதிலுக்கு.

 

 

“நீங்க என்னன்னு சொல்லவேயில்லை… என்று அவள் கேட்க “அதொண்ணுமில்லை ரெண்டு பேரும் மேல இன்னும் என்ன பண்ணுறாங்கன்னு கேட்கிறான் எங்கண்ணன்… என்றாள் வானதி.

 

 

“என்ன பண்ணுவாங்க, வேற எதுவும் பேசிட்டு இருப்பாங்க… ஒழுங்கா நானே போய் அண்ணாவை கூப்பிட்டு வந்திருப்பேன்… மணி பத்தாக போகுது… இனி எப்போ சாப்பிடுறது… என்றாள் அர்ஷிதா.

 

 

வானவனோ “ஹேய் டெட்டி பியர் நீ போய் கூப்பிடுடா அவங்களை… என்றான் மொட்டையாக…

 

 

“யாரை பார்த்து இப்படி சொன்னே??? என்றாள் வானதி…

 

 

“என்னருமை தங்கையை தான் சொன்னேன்…

 

 

“என்னது எருமை தங்கையா?? என்று அவள் முறைக்க “உனக்கு காது கேட்கலையா, நான் என் அருமை தங்கை தான் டெட்டி பியர்ன்னு சொன்னேன்…

 

 

“அண்ணா நிஜமாவா சொல்ற, நான் டெட்டி பியர் மாதிரியா இருக்கேன்… என்று வானதி மகிழ்ந்து போனாள்.

 

“ஆமாடா செல்லம் அண்ணா சொல்றேன்ல போடா மேல போய் அவங்க ரெண்டு பேரையும் சாப்பிடறதுக்காக கீழ வரச்சொல்லு பார்க்கலாம்… என்றான் வானவன்.

 

 

“சரிண்ணா நீ சொன்னா சரியா தான் இருக்கும், நான் போய் அவங்களை கூட்டிட்டு வர்றேன்… ஆனா அண்ணா இன்னும் ஒரே ஒரு முறை அப்படி சொல்லேன்… என்றாள் வானதி.

 

 

“டெட்டி பியர் தங்கமே போடா போய் அவங்களை கூட்டிட்டு வா… என்று வானவன் கூற அவள் சிட்டாக பறந்து வெளியில் வந்தவள் மான் குட்டி போல் துள்ளிக் கொண்டு படியேறினாள்…

 

 

“ஆமா உங்க தங்கையை பார்த்தா டெட்டி பியர் மாதிரி இருக்கா?? என்றாள் அர்ஷிதா.

 

 

“அது டெட்டி பியர் இல்லைங்க பூஜா பியர்…

 

 

“என்னது பூஜா பியரா அப்படின்னா…

 

 

“பூஜை வேளை கரடின்னு தமிழ்ல சொல்லுவாங்க… என்று அவன் பதில் கொடுக்கவும் அர்ஷிதாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை…

 

 

மாடியில் ஆதிக்குள்ளும் குந்தவைக்குள்ளும் ஏதோவொரு ரசாயன மாற்றம் (அதாங்க கெமிஸ்ட்ரி) நிகழ்ந்து கொண்டிருக்க அது பொறுக்காத விலங்கியல் (அதாங்க ஜூவாலஜி) உள்ளே நுழைந்தது. (வானதியை தான் சொன்னேன்)

 

 

“அக்கா… என்று படியேறும் போதே சத்தமிட்டுக் கொண்டே ஏறினாள் வானதி. மோன நிலையில் இருந்த இருவருக்கும் அது சென்று அடையாததால் அவர்கள் அதே நிலையிலேயே இருந்தனர்.

 

 

மேல் மாடிக்கு வந்தவள் அவர்கள் இருவரும் நோக்கியாவாக இருப்பதை பார்த்து கடுப்பாகி “அக்கா… என்று இன்னும் சத்தமாக குரல் கொடுக்க முதலில் சுதாரித்த குந்தவை எழுந்து நின்றாள்.

 

 

ஆனால் ஆதியோ பிடித்திருந்த அவள் கையை விடாமலே ஒரு கையால் அவள் கையை தனக்குள் சேர்த்துக் கொண்டு “என்ன வானதி இப்படி பூஜை வேளை கரடியா வந்து நிக்குற என்ன விஷயம்… என்றான்.

அவன் சொன்னது தான் தாமதம் “மாமா என்ன சொன்னீங்க திரும்ப சொல்லுங்க?? என்றாள் வானதி.

 

 

“என்ன விஷயம்ன்னு கேட்டேன் வானதி…

 

 

“அதில்லை ஏதோ பூஜைன்னு சொன்னீங்களே அதை கொஞ்சம் திரும்ப சொல்லுங்க…

 

 

“அது… அது பூஜை வேளை கரடி மாதிரி வந்து நிக்குறியேன்னு சொன்னேன்… சாரிம்மா தப்பா எடுத்துக்காத… என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அவள் “அடடேய்… என்று ஆதித்யாவின் மொக்கை ஆப் தி டேவில் வருவது போல் சொல்லிக் கொண்டே கீழே இறங்கினாள்.

 

 

“என்னாச்சு இவளுக்கு… என்றவன் குந்தவையுடன் கீழே இறங்கினான். “கை… கையை விடுங்க நான் முதல்ல கீழே போறேன், அவ அங்க போய் எதுவும் உளறி வைக்க போறா… என்றாள் குந்தவை தயங்கிக் கொண்டே.

 

 

“சரி போ… என்று பிடித்திருந்த அவள் கையை விட்டான் ஆதி. வேகமாக கீழே இறங்கியவள் நின்று அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்று விட்டாள். அவனும் பின்னோடு இறங்கி வந்தான்.

 

 

அதற்குள் கீழே இறங்கி வந்திருந்த வானதி “டேய் அண்ணா உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா என்னை பூஜை வேளை கரடின்னு சொல்லியிருப்ப… என்று சொல்லி அவனை அடிக்க துரத்தினாள்.

 

 

“ஹேய் உனக்கெப்படி தெரியும், ஏங்க அர்ஷு அவகிட்ட நீங்க சொல்லிட்டீங்களா… என்றான் வானவன் அவளிடம் பிடிபடாமல் ஓடிக்கொண்டே.

 

 

“ஓ!!! இந்த விஷயம் அர்ஷுவுக்கும் தெரியுமா, ரெண்டு பேரும் சேர்ந்து தான் என்னை கலாட்டா பண்ணீங்களா… அர்ஷு நீயுமா… என்று சற்று நின்று அர்ஷிதாவை பார்த்தாள்.

 

 

“வானதி நிஜமாவே எனக்கு ஒண்ணும் தெரியாது, உங்கண்ணா தான் நீ மேல போனதும் அதுக்கு அர்த்தம் சொல்லிட்டு இருந்தாங்க… ஆனா உனக்கு எப்படி அதுக்குள்ள இந்த விஷயம் தெரிஞ்சுது…

 

 

“மாமா தான் சொன்னாங்க… என்றவள் நடந்ததை கூற வானவன் அப்படியே நின்றுவிட்டான். அப்போது சரியாக குந்தவை உள்ளே நுழைய தமக்கையின் முகம் பார்த்தவன் சற்றே நிம்மதியடைந்தான்.

 

 

பின்னோடு வந்த ஆதியின் முகம் மகிழ்ச்சியை பிரதிபலிக்க எல்லாம் மாறிவிடும் என்ற நம்பிக்கை அவனுக்குள் துளிர்விட்டது… அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் வானதி அவனை கொட்டியதை கூட மறந்திருந்தான்.

 

 

வானவனும் வானதியும் கூட அன்று அங்கேயே சாப்பிட வானதி அர்ஷிதாவுடன் இருந்து இரவு படிக்க போவதாக சொல்லிவிட வானவன் மட்டும் விடைபெற்று சென்றான்.

 

 

குந்தவை சமையலறையில் ஏதேதோ உருட்டிக் கொண்டிருக்க வானதி வேகமாக உள்ளே வந்தாள். “உனக்கென்ன பிரச்சனை இப்போ, இங்க என்னத்தை இப்போ உருட்டிட்டு இருக்க?? என்று இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

பின்னால் வந்த அர்ஷிதா “என்னண்ணி எதுவும் தேடுறீங்களா, நான் ஹெல்ப் பண்ணவா?? என்றாள்.

 

 

அவள் எதையாவது தேடினால் தானே, ஆதியை எப்படி நேருக்கு நேர் சந்திப்பது என்று நாணியவளாக அவன் தூங்கிய பிறகு அவர்கள் அறைக்கு செல்லலாம் என்று எண்ணி அவள் சமையலறையில் உருட்டிக் கொண்டிருந்தாள்.

 

 

படித்துக் கொண்டிருந்த வானதியும் அர்ஷிதாவும் வருவார்கள் என்று அவள் எண்ணவேயில்லை. “என்னக்கா நாங்க கேக்குறோம்ல என்ன பண்ணிட்டு இருக்க??

 

 

“ஒண்ணுமில்லைடி நா… நாளைக்கு வடைக்கு ஊற வைக்கலாம்ன்னு வந்தேன்… இட்லிக்கு வேற மாவு ஆட்டணும்ல அதான் செஞ்சுட்டு இருக்கேன்… நீங்க போங்க… போய் படிங்க… என்று வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டினாள்.

 

 

“வானதி வா போகலாம் அதான் அண்ணி ஏதோ வேலையிருக்குன்னு சொல்றாங்கல, நாம போய் நம்ம வேலையை பார்ப்போம்… என்று அங்கிருந்து நகர்த்தி சென்றாள் அர்ஷிதா.

 

‘அப்பாடா இதுங்ககிட்ட இருந்து தப்பிச்சாச்சு… என்று நினைத்து கூட அவள் முடிக்கவில்லை ஆதி அவளை தேடி வந்தான். “இன்னும் இங்க என்ன பண்ணுற… என்றவாறே.

 

 

“இல்லை மா… மாவுக்கு ஊற வைச்சேன்… நீங்க போய் படுங்க நான் பின்னாடியே வர்றேன்

 

 

“ஊற வைச்சாச்சா?? என்றான்.

 

 

அவள் தலை தன்னையுமறியாமல் ஆம் என்பதாய் ஆடியது. “அப்போ லைட் ஆப் பண்ணிட்டு போவோம்… என்றவன் எட்டி அவள் கையை பிடித்துக் கொண்டே விளக்கணைத்து அவர்கள் அறைக்குள் சென்றான்.

 

 

“இப்போ என்ன அவசரம்ன்னு என்னை இழுத்திட்டு வந்தீங்க…

 

 

“அவசரம் எல்லாம் ஒண்ணுமில்லை, எனக்கு தெரியும் நீ என்னை எப்படி பேஸ் பண்ணுறதுன்னு தெரியாம தான் கிச்சன்ல இருந்தேன்னு… அர்ஷியும் வானதியும் பேசும் போதே கவனிச்சேன்…

 

 

“நான் தான் சொன்னேன்ல உனக்கு என்கிட்ட எந்த பயமும் தயக்கமும் வேண்டாம்ன்னு… அப்புறம் ஏன் கிச்சன்ல போய் ஒளிஞ்சுகிட்ட… நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா… என்றவனின் முகம் சிறுத்து போனது.

 

 

“அப்படி எல்லாம் ஒண்ணும்மில்லை, உங்ககிட்ட எனக்கென்ன பயம், நீங்க என்ன அவ்வளவு பயங்கரமாவா இருக்கீங்க… அதெல்லாம் ஒண்ணுமில்லை…

 

 

“நிஜமாவே எனக்கு வேலையிருந்துச்சு அதான்… நாளைக்கு சனிக்கிழமை இல்லையா நான் வீட்டில இருப்பேன்ல அதான் எல்லா வேலையும் நாளைக்கு முடிக்க வேண்டி இப்போவே எடுத்து வைச்சேன்… என்றாள் சற்றே ஏறிய குரலில்.

 

 

“அப்படின்னா சந்தோசம் தான்… சரி படுத்துக்கோ, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு… என்றுவிட்டு அவன் மடிகணினியை எடுத்துக் கொண்டு அமர்ந்துவிட அவளுக்கு தான் உறக்கம் தூரச் சென்றிருந்தது.

 

 

சட்டென்று ஒன்று ஞாபகம் வர “என்னங்க…

 

 

“என்ன குந்தவை?? கூப்பிட்டியா என்ன விஷயம்???

 

 

“உங்ககிட்ட ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்…

 

 

“என்னன்னு சொல்லு??

 

 

“நீங்க சொன்ன விஷயம் தான், கல்பனா அக்காகிட்ட பார்த்து பழகுன்னு சொன்னீங்கள்ள, அது தான்…

 

 

“அதுக்கென்ன இப்போ… என்றவனின் குரலில் அவள் நம் பேச்சை இன்னமும் கேட்கவில்லையே என்ற ஆதங்கம் தெரிந்தது.

 

 

“நான் அவங்ககிட்ட இனி பார்த்து பழகுறதுன்னு முடிவு பண்ணிட்டேன்… நீங்க எனக்காக தான் சொல்றீங்கன்னு புரியுது… அந்த நேரத்துல வேற கோபம் நீங்க ஆபீஸ்க்கு வந்தவர் ஒரு எட்டு என்னை வந்து பார்த்திட்டு போயிருக்கலாம்ன்னு…

 

 

“அந்த ஆதங்கத்துல தான் நான் ஏதேதோ பேசி நீங்க பேசி, மேல வைச்சே இதை சொல்லணும்ன்னு நினைச்சேன்… ஆனா நீங்க என்னை சொல்லவே விடலை… நீங்க மட்டும் தான் தப்பு செஞ்ச மாதிரி பேசிட்டு இருந்தீங்க…

 

 

“சாரி விக்ரம்… என்று அவள் சொல்ல அதுவரை இவளிடம் எப்படி இந்த மாற்றம் என்று யோசித்துக் கொண்டிருந்தவன் அவளின் விக்ரம் என்ற அழைப்பில் கிறங்கிப் போனான்.

 

 

அவன் பார்வையில் மாற்றம் உணர்ந்தவள் “விக்ரம் எனக்கு தூக்கம் வருது, நான் தூங்கறேன்… என்று சொல்லிவிட்டு போர்வையை எடுத்து தலைவரை போர்த்திக் கொண்டு அவனுக்கு முதுகுகாட்டி படுத்துக் கொண்டாள்.

 

 

ஏனோ படபடப்பாக இருந்தது அவளுக்கு, கை கால் எல்லாம் சில்லென்று ஆனது போல் இருந்தது, ஆனால் உடல் மட்டும் சுரம் வந்தது போல் கொதித்தது அவளுக்கு.

 

 

‘நான் எப்படி இவ்வளவு அமைதியா இவர்கிட்ட பேசினேன்… அவர் என்னை பத்தி என்ன நினைச்சா எனக்கென்னன்னு இருக்க முடியலையே… இதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் தோணவே இல்லையே… என்று யோசித்தவள் அருகில் அரவமில்லாமல் இருக்க மெதுவாக திரும்பி படுத்தாள்.

 

முட்டைக்குள் இருந்து கோழிக்குஞ்சு தன் ஓட்டை திறந்து எட்டிப் பார்ப்பது போல் போர்வைக்குள் இருந்து லேசாக தலையை நீட்டி அவள் எட்டிப் பார்க்க ஆதி அவளையே பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் மீண்டும் படபடப்பானது அவள் உள்ளம்.

 

 

மீண்டும் போர்வைக்குள் தலையை உள்ளே இழுத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்தாள். தூக்கம் வருவேனா என்று சண்டித்தனம் செய்தது அவளிடம்.

 

 

சில மணி நேரமாக அதனுடன் போராடி தோற்றவள் இன்னமும் விளக்கு எரிவதை பார்த்து எழுந்து அமர்ந்தாள். இப்போது ஆதி அவன் வேலையில் முழ்கியிருந்தான்.

 

 

“என்னங்க… என்று அவள் அழைக்க கவனம் கலைந்து திரும்பி பார்த்தான்.

 

 

“என்ன குந்தவை இன்னும் தூங்கலையா, இல்லை தூக்கம் வரலையா?? என்று கேலி இழையோட கேட்டான்.

 

 

“நான் தூங்கறது இருக்கட்டும்… நீங்க எப்போ தூங்க போறீங்க… மணியை பாருங்க ஒண்ணாச்சு… பேசாம படுங்க எந்த வேலையா இருந்தாலும் காலையில பார்த்துக்கலாம்…

 

 

“நானும் வேணும்ன்னா உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்… என்றவள் எழுந்து விளக்கணைக்க சென்றாள்.

 

 

“ஹேய்… ஹேய் இரு குந்தவை… எல்லாம் எடுத்து வைச்சுக்கறேன்… அப்புறம் ஆப் பண்ணு… என்று அவன் சொல்ல “நான் சொல்ல வந்ததை நீங்க கூட தான் கேட்காம கிச்சன் லைட் ஆப் பண்ணீங்கல்ல

 

 

“ஹேய் நான் நீ வேலை முடிச்சுட்டியான்னு கேட்டு தானே ஆப் பண்ணேன்… இது அநியாயம் குந்தவை… ஒரு ரெண்டு நிமிஷம் இதை நான் ஷட்டவுன் பண்ணிக்கறேன்… என்றான்.

 

 

“சரி சரி பண்ணுங்க… என்றாள் கறாரான குரலில்.

 

 

“ரொம்ப மிரட்டுற… என்று சொல்லிக் கொண்டே அவன் மடிகணினியை அணைத்து பையில் வைத்தான்.

 

“ஏன் நீங்க ரொம்ப பயந்துட்டீங்களோ??

 

 

“ஆமாமா இவங்களை பார்த்து நாங்க பயப்படுறோமா?? நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உனக்கு போய் யாராச்சும் பயப்படுவாங்களா??

 

 

29C மைலாப்பூர் பஸ்…

 

 

“அம்மா தாயே நீ எதுக்கு இப்போ பழசெல்லாம் ஞாபகப்படுத்துற, எனக்கு தூக்கம் வருது… நான் தூங்கிட்டேன்… என்று அவன் கன்னத்தை பிடித்துக் கொண்டு கட்டிலில் விழுந்தான்.

 

 

குந்தவையும் விளக்கணைத்து வந்து அவனருகில் படுக்க நிம்மதியாக இருவரும் உணர்ந்தனர். அரும்பாகியிருந்த அவர்களின் மகிழ்ச்சிக்கு ஆயள் குறைவு போலும், குந்தவை நத்தையாய் மீண்டும் சுருக்கிக் கொள்ளப் போவது அறியாமல் மகிழ்ச்சியுடன் கண்ணுறங்கினாள்…

Advertisement