Advertisement

அத்தியாயம்- 14

 

தரைப்பெண்ணுக் கணிபோல் வந்த
தமனியக் கொடியே மாதர்
துரைப்பெண்ணே வசந்த வல்லி 

சொன்னபேதை மைக்கென் சொல்வேன்

வரைப்பெண்ணுக் காசை பூண்டு

வளர்சங்க  மறுகி னூடே

நரைத்தமா டேறுவார்க்கோ

நங்கைநீ மயல்கொண் டாயே.


– திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)

 

குந்தவையை அலுவலகம் கொண்டு விட்டுச் செல்ல வந்தவனை ஒரு நிமிடம் நிற்குமாறு கூறியவளை “என்ன விஷயம்… என்று கேட்டான் ஆதி.

 

 

“இல்லை என்னோட வேலை பார்க்கற கல்பனாக்கா உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க… நம்ம கல்யாண போட்டோ கேட்டாங்க… அது என்கிட்ட இல்லை, அதான் உங்களை நேர்ல கூட்டி வந்து காட்டுறேன்னு சொன்னேன்…

 

 

“ஒரு ஐஞ்சு நிமிஷம் ப்ளீஸ் எனக்காக… நான் உடனே போய் அவங்களை கூட்டிட்டு வந்திடறேன்… என்றவள் அவன் பதிலுக்காய் காத்திராமல் விரைவாக அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

 

எங்கே அவன் அதெல்லாம் முடியாது என்று சொல்லி மல்லுகட்டுவானோ என்ற எண்ணம் அவளுக்கு… ஆதியோ ‘ஒரு கல்யாண போட்டோ கூடவா இவளோட போன்ல இல்லை… என்று திட்டிக் கொண்டு அங்கேயே நின்றிருந்தான்.

 

 

குந்தவை திரும்பி வரும் போது கல்பனாவுடன் வந்து சேர்ந்தாள்… “அக்கா இவர் தான் என்னோட ஹஸ்பன்ட்… என்று அறிமுகப்படுத்தியவள் “என்னங்க இவங்க தான் நான் சொன்னேன்ல கல்பனாக்கா… என்று தன் கணவனிடம் கூறினாள்.

 

 

“ஹலோ… என்று சம்பிரதாயமாக கூறியவனிடம் “ஹலோ… எப்படியிருக்கீங்க?? எப்படி நீங்க தேவியை கல்யாணம் பண்ணீங்க??இப்படி திடுதிப்புன்னு ரெண்டு பேரும் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டீங்களே???

 

 

“சொல்லாம கொள்ளாம எல்லாம் இல்லைங்க… ஊருக்கே சொல்லிட்டு தான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்… என்றான் அவன். ஏனோ ஆதிக்கு கல்பனாவை பிடிக்கவில்லை.

 

 

அவள் பொடி வைத்து பேசுவது போல் தோன்றியது அவனுக்கு. அதனால் அவனும் அவளுக்கு பதிலை சற்று காட்டமாகவே கொடுத்தான். “நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பொருத்தமா இருக்கீங்க…

 

 

“நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க சார்… என்ன வேலை பார்க்கறீங்க?? என்றார் அவர் தொடர்ந்து.

 

 

கல்பனா இப்படி பேசியது குந்தவைக்குமே பிடிக்கவில்லை. ஆதி சிரமப்பட்டு முகத்தை ஒழுங்காக வைத்துக் கொண்டான் குந்தவைக்காக. “நான் ஆடிட்டரா இருக்கேன்… என்றான்.

 

 

“ஓ ஆடிட்டரா, தேவி நீ புளியங்ககொம்பா தான் பிடிச்சிருக்க… சரி சரி நீங்க பேசுங்க… நான் கிளம்புறேன்… என்றுவிட்டு அவர் கிளம்பிச் சென்றுவிட்டார்.

 

 

ஆதிக்கு அப்போது தான் நிம்மதியாக மூச்சு வந்தது… “நான் கிளம்பறேன் குந்தவை… என்று அவளிடம் சொல்லிவிட்டு அவன் கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

 

கல்பனா ஆதியிடம் சகஜமாக பேசியது குந்தவைக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் உடன் வேலை செய்பவர் என்று அமைதியாக இருந்தாள். அதை கண்டுவிட்டிருந்த கல்பனா அவளிடம் வந்து பேச ஆரம்பித்தார்.

 

 

“என்ன குந்தவை ஏன் ஒரு மாதிரியா இருக்க…

 

 

“ஒண்ணுமில்லைக்கா…

 

 

“நான் உன்னோட ஹஸ்பன்ட்டை உன் முன்னாடியே ஸ்மார்ட்ன்னு சொன்னது உனக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்… அவ்வளோ பொஸசிவ்வா??? கண்டிப்பா இருக்க வேண்டியது தான்…

 

 

“எனக்குமே அப்படி தான் என் ஹஸ்பன்ட் பத்தி யாராச்சும் பேசினா தோணும்… நீ நினைச்சதுல ஒண்ணும் தப்பில்லை…

 

 

“ஆனா நீ ஒண்ணை புரிஞ்சுக்கணும் அவர் என்னோட தம்பி மாதிரி இருக்கார்… ஏதோ மனசுல பட்டதை நான் பட்டுன்னு சொல்லிட்டேன்… தப்புன்னா மன்னிச்சுடு தேவி…

 

 

“ஐயோ அக்கா நீங்க இவ்வளவு தூரம் என்கிட்ட விளக்கம் சொல்லணும்ன்னு அவசியமில்லைக்கா… நான் நல்லா தான் இருக்கேன், எதைபத்தியும் நான் யோசிக்கலை…

 

 

“நாங்களே இப்போ தான் சகஜமா பேசவே ஆரம்பிச்சு இருக்கோம்… என்று வாயை விட்டாள் கல்பனாவிடம்.

 

 

அதை கேட்ட கல்பனா யதார்த்தம் போல் அவளிடம் பலவிதமாக பேசினார், முதலில் எதையும் சொல்லத் தயங்கியவள் கல்பனா உதாரணம் போல் அவர் கதையையும் பேச அவளும் மனதில் உள்ளதை வெளியில் சொன்னாள்.

 

 

ரவி பலவிதமாக கேட்டும் பதில் சொல்லாதவள் இயல்பாக பழகும் பெண்ணென்று நம்பி கல்பனாவிடம் அவள் திருமண வாழ்க்கை பற்றி கூற ஆரம்பித்தாள்.

 

 

எல்லாமே கேட்டு முடித்தவள் “என்ன தேவி நீ அப்போ பிடிக்காம தான் வாழ்ந்திட்டு இருக்கியா??

 

 

“ச்சே ச்சே… அப்படி எல்லாம் இல்லைக்கா… பிடிக்கலைன்னு எல்லாம் இல்லை… நான் இன்னும் அந்த வாழ்க்கைக்கு தயார் ஆகலைன்னு தான் சொல்லணும்…

 

 

“ஓ அதுவும் சரி தான் தேவி… ஆனா நீ எப்படி அவரை அடிச்சது எல்லாம் மறந்திட்ட… மஞ்சள் கயிறு மாஜிக்ன்னு சொல்லுவாங்களே… அது போல உன் மனசும் மாற ஆரம்பிச்சுடுச்சு போல…

 

 

“சரி தேவி சார் அப்போவே கூப்பிட்டார், நான் உன் கூட பேசிட்டு இருந்ததுல போக மறந்துட்டேன்… நீ வேலையை பாரு… நான் போய் என்னன்னு கேட்டுட்டு வர்றேன்… என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார் கல்பனா.

 

 

இரண்டு நாட்கள் சென்றிருந்த வேளை ஆதி குந்தவையை அலுவலகத்தில் விட்டுவிட்டு கிளம்பிச் சென்று விட்டவன் ஒரு அலுவல் வேலையாக அன்று மதிய வேளை அங்கு வந்து சேர்ந்தான்.

 

 

அவன் வேலை முடிந்து கிளம்பும் தருவாய் கல்பனாவை அவன் சந்திக்க நேர்ந்தது. அவளாகவே வந்து அவனிடம் பேச ஆரம்பித்தார். “என்ன சார் உங்க வைப் பார்க்க வந்தீங்களா…

 

 

“இல்லைங்க எனக்கு வேற ஆபீஸ் வேலை இருக்கு அதை பார்க்க தான் வந்தேன்… என்றுவிட்டு நகரப் போனவனை “அதுக்கென்ன சும்மா பார்த்திட்டு போக வேண்டியது தானே… என்று இருபொருள் பட பேசியவரின் பார்வை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

 

 

“எப்படியும் அவளை கூப்பிட மறுபடியும் வரத்தானே போறேன்… அப்போ பார்த்துக்கறேன் இப்போ என்னோட கிளையன்ட் எனக்காக காத்திட்டு இருக்கார்.. நான் கிளம்பணும்… என்று நகர ஆரம்பித்தான்.

 

 

“நான் பார்த்திட்டு போக சொன்னது உங்க மனைவியை மட்டுமில்லை… என்றவளை எரிப்பது போல் திரும்பி பார்த்தான். “இல்லையில்லை உங்க ஆசை மனைவியைன்னு சொல்ல வந்தேன்…

 

 

“நீங்க பேசறது சரியில்லையே… என்றான் முகத்துக்கெதிராகவே.

 

 

“அச்சோ தப்பா எடுத்துக்காதீங்க… நீங்க எனக்கு தம்பி மாதிரி, அதான் உங்ககிட்ட நின்னு பேசிட்டு இருந்தேன்… என்று அவசரமாக அவள் கூறியதை அவன் மனம் ஏற்கத் தான் இல்லை…

கல்பனாவை முறைத்தவாறே தன் வேலையை கவனிக்கச் சென்றான்.‘குந்தவைக்கிட்ட இவங்களை பத்தி சொல்லி எச்சரிக்கணும், இவங்க பேசறதும் பார்க்கறதும் எதுவுமே சரியில்லை… என்று எண்ணிக் கொண்டான் அவன்.

 

 

ஏதோ வேலையாக குந்தவையை தேடி வந்த கல்பனா அவளிடம் ஒரு பைலை கொடுத்து சரிபார்க்குமாறு கூறி நகரப் போனவர் சட்டென்று நின்று அவளிடம் பேச்சு கொடுத்தார்.

 

 

“தேவி உன்னோட ஹஸ்பன்ட் இன்னைக்கு இங்க ஏதோ வேலையா வந்திருந்தார் போல… நான் கூட அவரை பார்த்து விசாரிச்சேன், உன்னை வந்து பார்த்திட்டு போகச் சொன்னேன்…

 

 

“பார்த்திட்டு போனாரா?? என்று கொக்கி வைத்தார்…

 

 

‘என்ன இது அவர் இங்க வந்தாரா, என்கிட்ட எதுவும் சொல்லவேயில்லையே… என்னை வந்து பார்த்திட்டு கூட போகலை… இருக்கட்டும் வீட்டில போய் பேசிக்கறேன்… என்று மனதிற்குள் குமைந்துக் கொண்டாள்.

 

 

ஆனால் கல்பனாவிடம் அவனை விட்டுக் கொடுக்காமலே பேசினாள், “என்னக்கா நீங்க வேற அவர்க்கு ஆயிரம் வேலை இருக்கும்… ஒரு ஒரு தரமும் என்னை வந்து பார்த்திட்டு போக முடியுமா என்ன??

 

 

“உங்களுக்கு தான் அவர் வேலை பத்தி தெரியுமே… ஒரு நாளைக்கு அவங்க பத்து தரம் கூட இங்க வரலாம்… அப்பப்போ என்னை வந்து டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு தான் அவர் வரலை…இது ஒரு விஷயமா… என்று சரியான பதில் கொடுத்தாள்.

 

 

கல்பனாவிற்கு பதில் கொடுத்தவள் அந்த பதிலை தனக்கு சொல்லிக் கொள்ளாதது தான் அவளின் தவறு… அவள் பதிலில் கல்பனா அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.

 

 

ரவி இப்போதெல்லாம் அவளிடம் எதுவும் பேச்சு கொடுப்பதில்லை… மாறாக அவளுக்கு அவ்வப்போது வேலைகள் கொடுத்து அடிக்கடி அவன் அறைக்கு வரவைத்தான். வேலை விஷயமாக என்பதால் குந்தவையும் சென்று வந்தாள்.

 

 

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் மாலை கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். முன்பெல்லாம் நினைத்தால் கோவிலுக்கு செல்பவள் திருமணமாகி இத்தனை நாளில் இரண்டே முறை மட்டுமே சென்று வந்திருக்கிறாள்.

 

 

மாலை ஆதி வந்ததும் அவனிடம் கோவிலுக்கு செல்லலாம் என்று கூற அவனோ “வீட்டுக்கு போய் குளிச்சுட்டு போகலாமா… என்றான். அவனுக்கு இம்மென்று அவள் பதிலிறுக்க இருவருமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

 

 

ஆதி குளித்துவிட்டு வருவதற்குள் குந்தவையும் முகம் கழுவி தயாராகியிருந்தாள். அர்ஷிதாவிற்கு பரிட்சை நேரமென்பதால் அவள் படித்துக் கொண்டிருந்தாள், வானதியும் வந்திருக்க இருவருமாக கலந்தாலோசித்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தனர்.

 

 

குளித்துவிட்டு வேறு உடை மாற்றிக் கொண்டு வந்த ஆதி கோவிலுக்கு செல்லவென்று பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் நின்றான். குந்தவையை அழைக்க அவசரமாக அவர்கள் அறையில் இருந்து வந்தவள் அர்ஷிதா, வானதி இருவரிடமும் சொல்லிக் கொண்டு வெளியில் விரைந்தாள்.

 

 

அவள் ஏறியதும் வண்டியை கிளம்பியவனுக்கு அப்போது தான் கேட்கத் தோன்றியது போலும் “எந்த கோவிலுக்கு போகணும்?? என்றான்.

 

 

“இங்க பக்கத்துல இருக்க அம்மன் கோவிலுக்கே போகலாம்… என்று அவள் கூற அவனும் வண்டியை செலுத்தினான்.

 

 

கோவிலில் இருவருமாக இறங்கவும் குந்தவை அவனிடம் “நான் போய் அர்ச்சனைக்கு வாங்கிட்டு வர்றேன்… என்று கூற அவனும் இம் என்றுவிட்டு வண்டியின் அருகிலேயே நின்றான்.

 

 

குந்தவை கிளம்பிய அவசரத்தில் அவள் ஹாண்ட்பேக்கை எடுத்து வர மறந்திருந்தாள், அர்ச்சனைக்கு வாங்கிய பின்னே கையில் காசு இல்லாதது ஞாபகத்தில் வர செய்வதறியாது விழித்தாள்.

 

 

ஆதியிடம் சென்று கேட்கவும் தயக்கமாக இருந்தது. ஆதியும் அவளை கவனித்தானில்லை, எப்போது கோவிலுக்கு வந்தாலும் அவன் அன்னையோ இல்லை தங்கையோ தான் பொருட்களை வாங்கிவிட்டு காசு கொடுப்பர்.

 

 

காசு இல்லை என்றால் அர்ஷிதா நேராக அவனிடம் வந்து அவன் சட்டையில் கையை விட்டு காசை எடுத்து செல்வாள்… அதனால் அவனுக்கு அதெல்லாம் பெரிதாக தோன்றவில்லை…

குந்தவை விழிப்பதை பார்த்த பூக்கடைக்காரம்மா “என்னம்மா… என்றார்.

 

 

“இல்லை காசு கொண்டு வரலை மறந்திட்டேன்… என்று அவள் இழுக்க அந்தம்மா அவளை ஏற இறங்க பார்த்தார். அவள் ஆதியுடன் வந்ததை அவர் முன்னமே பார்த்திருந்ததால் ஆதிக்கு சைகை காண்பித்து அருகே வருமாறு கூறினார்.

 

 

ஆதியும் அருகே வந்தவன் என்ன என்பதாய் குந்தவையையும் பூக்கடைக்கார அம்மாவையும் மாறி மாறி பார்த்தான். அவரோ இருவரையும் பார்த்துவிட்டு “புதுசா கல்யாணமாகியிருக்கா??? என்றார்.

 

 

ஆம் என்பதாய் அவள் தலையசைத்தும் ஆதி வாய் மொழியாய் கூறவும் பூக்காரம்மா அவனிடம் “ஏன்பா உன் பொண்டாட்டியை அர்ச்சனை வாங்க சொல்லி அனுப்பினியே காசு கொடுத்து அனுப்பினியா??

 

 

“அது பாவம் உன்கிட்ட கேட்க சங்கடப்பட்டுகிட்டு நிக்குது… நீயாச்சும் கூட வந்து வாங்கி கொடுக்க கூடாதா?? அம்மா அப்பாகிட்ட எல்லாம் இந்த காலத்து புள்ளைங்க நல்லா தான் வாய் பேசுதுங்க…

 

 

“கட்டின புருஷன்கிட்ட என்ன கவுரதையோ?? என்றார் அவர்.

 

 

ஆதி குந்தவையை பார்க்க அவள் சங்கடத்துடன் நின்றாள். “என்கிட்ட வந்து கேட்க வேண்டியது தானே… இங்க தானே நின்னுட்டு இருந்தேன்…

 

 

“இல்லை… நான் எப்பவும் பர்ஸ் கொண்டு வருவேன்… மறந்திட்டேன் உங்ககிட்ட கேட்க வர்றதுக்குள்ள அம்மாவே பேசிட்டாங்க… என்று தயங்கி தயங்கி அவள் பதில் சொன்னது அவனுக்கு புதிதாய் இருந்தது.

 

 

“சரி நீ உள்ள போ, அர்ச்சனை டிக்கெட் வாங்க காசு தேவைப்படும்ல என்றவன் அவளிடம் ஐம்பது ரூபாய் தாள் ஒன்றை நீட்டினான். தயக்கத்துடன் அவள் அதை வாங்கிக் கொண்டு உள்ளே நகர்ந்தாள்…

 

 

“ஏன்பா சொல்றேன்னு தப்பா நினைக்காத, உனக்கும் அந்த பொண்ணுக்கும் எதுவும் சண்டையா… இல்லை புடிக்காம கட்டிகினீங்ளா??

 

 

“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைம்மா… ஆனா நீங்க ஏன் இப்படி கேட்குறீங்க?? என்றான்.

 

“இல்லை அந்த பொண்ணு உன்கிட்ட கேட்க கூச்சப்படுது… நீ என்னடான்னா அந்தான்ட பக்கம் தள்ளி நின்னுக்குன்னு இருக்க… அதான் கேட்டேன்… அந்த புள்ளைக்கு தலைல வைக்க ஒரு முழம் பூ கூட வாங்கி கொடுக்காம விட்டியேப்பா?? என்று அங்கலாய்த்தார் அப்பெண்மணி.

 

 

“எனக்கு இதெல்லாம் அவ்வளவா தெரியாதுங்க…எப்பவும் அம்மாவோ இல்லை தங்கையோ தான் வந்து வாங்குவாங்க… என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டாங்க…

 

 

“அம்மா போனபிறகு நானோ இல்லை தங்கையோ தனித்தனியா தான் கோவிலுக்கு வருவோம்… அதான் எனக்கு தெரியலைம்மா… என்றவனை கனிவாக பார்த்தார்.

 

 

“ஏன் நீ காதல் கீதல் பண்ணதில்லையா… இந்த காலத்துல இப்படி ஒரு பிள்ளையா, எனக்கெல்லாம் இப்படி புள்ள இல்லாம போச்சே…

 

 

“ஏன்மா அப்படி சொல்றீங்க??

 

 

“என் கதையை வுடுப்பா உன் பொண்டாட்டிக்கு பூ வாங்கி கொடு… வெளிய ரெண்டு பேருமா சேர்ந்து வந்துகுறீங்க அதுவும் கோவிலுக்கு… கல்யாணம் ஆனா பொண்ணு வெள்ளிக்கிழமை அதுமா பூவைக்காம இருந்தா நல்லாவா இருக்குது… என்றார்.

 

 

“சரி பூ கொடுங்க… என்றான்

 

 

“இங்க பாருப்பா எனக்கு வியாபாரம் ஆவுன்னு நான் சொல்லலை… இதெல்லாம் எப்பவும் செய்யணும் அதுக்கு தான் சொல்றேன்… தப்பா எதும் எடுத்துக்காதப்பா… என்றவர் பூவை அளந்து அவனிடம் கொடுத்தார்.

 

 

அவரிடம் பூவை வாங்கிக் கொண்டு அர்ச்சனை டிக்கெட் வாங்கிக் கொண்டு நிற்கும் அவள் முன் சென்று நின்றான். “பூ வைச்சுக்கோ… என்று அவள் கையில் கொடுத்துவிட்டு அவளிடம் இருந்த அர்ச்சனை பொருட்களை வாங்கிக் கொண்டான்.

 

 

குந்தவைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…. அவள் மனம் மகிழ்வதை அவள் நன்றாகவே உணர்ந்தாள்… பூவை கூந்தலில் சூடிக் கொண்டவள் போகலாம் என்பதாய் தலையசைக்க அவள் பின்னோடே அவனும் சென்றான்.

இருவரும் மனமார கடவுளை வேண்டிக் கொண்டு அர்ச்சனை முடிந்து பிரகாரம் சுற்றி வந்து அமர்ந்தனர். வாய்விட்டு பேசிக் கொள்ளவில்லை என்றாலும் இருவரின் மனமும் ஒரு வித நிம்மதியை உணர்ந்திருந்தது.

 

 

அவர்களின் மௌன நிலை நீடித்துக் கொண்டிருக்க ஆதியே அந்த நிலையை கலைத்தான். “சாரி குந்தவை எனக்கு அதெல்லாம் தெரியாது… அம்மாவோ இல்லை அர்ஷியோ தான் எல்லாம் செஞ்சுக்குவாங்க…

 

 

“காசு வேணும்னா அர்ஷு என் சட்டை பையில இருந்து எடுத்துட்டு போவா… அதனால நான் அதெல்லாம் பெரிசா நினைக்கலை… ஆனா நீ வந்து என்கிட்ட கேட்டிருக்கலாம்ல…

 

 

“இல்லை எப்படி கேட்கன்னு யோசிச்சுட்டே இருந்தேன்… அதுக்குள்ள அந்தம்மாவே கூப்பிட்டாங்க… என்றாள்.

 

 

“என்கிட்ட எப்பவும் உனக்கு எந்த தயக்கமும் வேண்டாம்… எதுவா இருந்தாலும் கேளு… எனக்கு தெரியாதுங்கறதுனால தான் சொன்னேன்… ஒரேடியா எனக்கு தெரியாதுன்னு அர்த்தமில்லை…

 

 

“நீ சொன்னா என்னால புரிஞ்சுக்க முடியும்… இனி இப்படி இருக்காதே… போவோமா… என்று கூற இருவரும் கிளம்பினர்.

 

 

வண்டி அருகில் செல்லும் முன் அவன் ஏதோ சொல்ல வர “என்ன என்கிட்ட எதுவும் சொல்லணுமா?? என்றாள்.

 

 

“ஹ்ம்ம் ஆமாம்… இப்போவே நேரமாச்சு… வீட்டில போய் பேசிக்கலாம்… என்று கிளம்பினர்.

 

 

எப்போதும் இரவு உணவை அர்ஷிதாவே செய்து விடுவாள்… காலையும் மதியமும் குந்தவை செய்வதால் அலுவலகத்தில் இருந்து அவள் அலுப்பாக வருவாள் என்றெண்ணி அவளே வேலையை முடித்துவிடுவாள்.

 

 

வீட்டிற்கு வந்ததும் செய்வதற்கு எந்த வேலையும் இல்லாததால் ஆதி ஏதோ பேச வேண்டும் என்று சொன்னானே என்று எண்ணி அவர்கள் அறைக்குள் நுழைந்தாள்.

 

 

அந்த அறையை வெகு நேரமாக அவள் சுற்றி சுற்றி வருவதை கண்டவன் “என்ன… என்றான்.

“இல்லை ஏதோ சொல்லணும்ன்னு சொன்னீங்களே…

 

 

“ஹ்ம்ம் ஆமாமில்லை மறந்துட்டேன்… உட்காரு… என்றவன் தொடர்ந்தவாறே “நான் சொல்ல வர்றதை தப்பா எடுத்துக்காத… நீ யாரோ ஒரு அக்கான்னு சொல்லுவியே…

 

 

“கல்பனாக்காவா??

 

 

“ஹாங் அவங்க தான்…

 

 

“அவங்களுக்கு என்ன…

 

 

“இன்னைக்கு நான் உங்க ஆபீஸ்க்கு வந்தேன்… தெரியுமா… உன்கிட்ட அதை பத்தி எதுவும் சொன்னாங்களா…

 

 

“ஹ்ம்ம் சொன்னாங்க… உங்களை வந்து என்னை பார்த்திட்டு போகலையான்னு கேட்டாங்களாமே… என்றவளின் வார்த்தையில் ஏன் வந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கம் இருந்தது.

 

 

அவளையே கூர்ந்து பார்த்தவன் “அதுக்கு நான் என்ன சொன்னேன் சொன்னாங்களா??? நான் சொன்னது இருக்கட்டும் நீ அவங்ககிட்ட என்ன சொன்ன…

 

 

“உங்களுக்கு வேலையிருக்கும் தினமும் வந்து என்னை பார்த்திட்டு போக முடியாதுன்னு சொன்னேன்… ஆனா நீங்க வந்து என்னை பார்த்திட்டு போயிருக்கலாமே… என்றவள் மனதில் தோன்றியதை அவனிடம் கேட்டே விட்டாள்.

 

 

“ஏன் குந்தவை நீ அவங்களுக்கு சரியா தானே பதில் சொல்லியிருக்க… ஆனா ஏன் என்கிட்ட இப்படி கேள்வி கேட்குற… உனக்கே தெரியும் எனக்கு அங்க அடிக்கடி வேலையிருக்கும்ன்னு ஒரு ஒரு தரமும் நான் வந்து உன்னை பார்க்க முடியுமா…

 

 

“அப்படி நான் வந்து உன்னை பார்த்தா அது நல்லாயிருக்குமா… நான் எப்பாவாச்சும் வந்தா பரவாயில்லை… நான் அடிக்கடி வந்து பார்க்கறதால உன்னோட வேலை கெடாதா??

 

 

“ஏன் அமைதியாயிருக்கே பதில் சொல்லு…

 

 

“அதான் அமைதியாகிட்டேனே அதுலயே உங்களுக்கு புரியலையா?? என்றவளின் பதிலில் என்ன இருந்தது என்று உண்மையிலேயே அவனால் புரிந்து கொள்ள முடிவில்லை…

 

 

“சரி அதை விடு நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்… அந்த கல்பனா அவங்ககிட்ட நீ எப்படி பேசறேன்னு எனக்கு தெரியலை… ஆனா அவங்க பேசறவிதம் பார்க்கற விதம் எதுவும் சரியில்லை…

 

 

“என்ன தப்பை கண்டுட்டீங்க அவங்க மேல… என்றாள்.

 

 

“நான் தான் சொல்றேனே அவங்க சரியில்லை… நான் சொல்றதை புரிஞ்சுக்கோ… அவங்ககிட்ட பார்த்து கவனமா பழகு…

 

 

“அதை நீங்க எனக்கு சொல்ல வேண்டாம்… என்றவளின் பதிலில் அப்பட்டமான கோபமிருந்தது, உண்மையிலேயே அவன் கல்பனா பற்றி சொன்னதில் வந்த கோபமில்லை அது.

 

 

அவன் வந்து அவளை பார்த்திருக்கலாம் என்றதில் இருந்த கோபத்தை அவள் கல்பனா விஷயம் அவன் பேசியதில் காட்டினாள்.

 

 

“இங்க பாரு புருஷன்ங்கற கடமைக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்… கேட்கிறதும் கேட்காததும் உன்னிஷ்டம்… என்றான் அவனும் கோபமாக.

 

 

“ஓ இங்க எல்லாம் புருஷங்கற கடமையை ஒழுங்கா செய்யற மாதிரி தான்… என்று பதிலுக்கு அவள் கொடுக்க அவனுக்கு வந்ததே கோபம் அந்த கோபத்தில் வார்த்தையை விட்டான்.

 

 

“என்ன கடமையை நான் தவறிட்டேன்… புருஷங்கற கடமைக்கு சொல்லிட்டேன்… புருஷங்கற உரிமையை எடுத்துக்கட்டுமா… என்று அவளுக்கு வெகு அருகில் வந்து சொல்ல முதலில் ஒன்றும் புரியாதவள் புரிந்தபின் வாயடைத்து போய் நின்றாள்.

 

 

அவள் அவனை காயப்படுத்த என்று அப்படி பேசியிருக்கவில்லை… அவள் மனதில் இன்று வந்தவன் தன்னை வந்து பார்க்கவில்லையே என்ற கோபமும் கோவிலில் நடந்ததை வைத்தும் பேசியிருந்தாள்.

ஆனால் அவனோ பதிலுக்கு ஏதேதோ பேசிவிட்டான். அப்படியே அவள் கட்டில் மேல் அமர்ந்தாள். ‘ச்சே நெறைய பேசிட்டேன், ஆனாலும் அவர் இப்படி எல்லாம் பேசலாமா…

 

 

‘நான் என்ன நினைச்சு சொன்னேன்… இவர் என்னென்னமோ சொல்லிட்டு போறார்… என்று கலக்கமாக அமர்ந்திருந்தாள். ‘இவருக்கு இவ்வளவு கோபம் கூட வருமா… என்று எண்ணி தவித்தாள்.

 

 

ஆதியோ அவளிடம் கத்திவிட்டு படியேறி மாடிக்கு சென்றுவிட்டான். வெகு நேரம் கட்டிலில் அமர்ந்தவளை அந்த வீட்டின் சுவர் கடிகாரம் ஒன்பது முறை அழைத்து தான் இருப்பதை கூறியது.

 

 

‘அச்சோ நேரமாச்சே… எட்டு மணிக்கெல்லாம் சாப்பிடுவாரே… என்று நினைத்துக் கொண்டே எழுந்தாள்.

 

 

அர்ஷிதாவிடம் “உங்க அண்ணா எங்க?? என்றாள்.

 

 

“மாடியில இருக்காங்க அண்ணி… என்றாள்.

 

 

“போய் சாப்பிட கூட்டிட்டு வா அர்ஷு… என்று குந்தவை கூற “சரிங்கண்ணி… என்று எழுந்தவளை வானதி பிடித்து இழுத்துஅவளருகில் அமர வைத்தாள்.

 

 

“அக்கா உனக்கென்ன வேணும், மாமா தானே கூப்பிடணும்… நீயே போய் கூப்பிடு… அதை விட்டு படிக்கற எங்களை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணுற… என்றாள்.

 

 

“உன் வேலையை பாருடி… எப்போ பார்த்தாலும் என்கிட்டயே வந்து வம்பிழு… அர்ஷு நீ போ… என்றாள் குந்தவை.

 

 

வானதியோ “அர்ஷு நீ போகாதே… என்றாள்.

 

 

“இல்லை வானதி நான் போய் அண்ணாவை கூட்டிட்டு வர்றேன்…

 

 

“போதுமா உனக்கு சந்தோசமா… எங்களோட படிப்பை கெடுத்திட்ட… என்று முறைத்துக் கொண்டிருக்கும் போதே வானவனுக்கு மூக்கு வேர்த்தது போல் அங்கு வந்து சேர்ந்தான்….

Advertisement