Advertisement

அத்தியாயம்- 13

 

வாகனைக்கண் டுருகுதையோ – ஒரு
மயக்கமதாய் வருகுதையோ
மோகம்என்பது இதுதானோ – இதை
முன்னமே நான் அறியேன்! ஓ!
ஆகம் எல்லாம் பசந்தேனே – பெற்ற
அன்னைசொல்லும் கசந்தேனே
தாகம் அன்றிப் பூணேனே – கையில்
சரிவளையும் காணேனே.


– திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)

 

 

அன்று குந்தவையின் உறவினர் பெண்ணொருத்தியின் திருமண வரவேற்பு விழா ஆதிக்கும் குந்தவைக்கும் தனியே அழைப்பு விடுத்திருந்தனர்.

 

 

குந்தவையின் வீட்டினர் எல்லோருமே வீட்டிலிருந்து நேராக மண்டபத்திற்கு வந்து விடுவதாக கூறியிருந்தனர்.

 

 

குந்தவை அவளின் திருமணத்திற்காக ஏற்கனவே நிறைய விடுப்பு எடுத்திருந்ததால் அன்று அவளால் விடுப்பெடுக்க முடியவில்லை. அதனால் ஐந்து மணிக்கு பர்மிஷன் வாங்கியிருந்தாள்.

 

 

ஆதியின் அலுவலகம் இருந்த அந்த பகுதியில் தான் மண்டபமிருந்ததால் குந்தவை அவன் அலுவலகத்திற்கு சென்று உடைமாற்றி கிளம்பி வரச்சொல்லி மணிமேகலை சொல்லியிருந்தார்.

 

 

குந்தவையும் பர்மிஷன் வாங்கியவள் ஆதிக்கு போன் செய்ய அவன் அழைப்பை ஏற்காமல் இருக்க அய்யோ என்றிருந்தது அவளுக்கு. ‘அச்சோ இப்போவே நேரமாச்சே…

 

 

‘இவருக்கு வேற நான் பர்மிஷன் வாங்கிட்டேன்னு சொல்லணுமே… சொன்னா தானே கிளம்பி வருவார்… என்று யோசித்துக் கொண்டே அவனுக்கு மீண்டும் முயற்சி செய்தாள் இப்போதும் அவன் அழைப்பை ஏற்கவில்லை.

 

 

“என்ன தேவி பர்மிஷன் சீக்கிரம் கிளம்பணும் சொல்லிட்டு இங்கயே இருக்க, கிளம்பலியா… என்று அவளருகில் வந்தார் கல்பனா. “இல்லைக்கா அவர் வருவார் அதுக்காக தான் வெயிட் பண்ணறேன்..

 

 

“அவருக்கு போன் போட்டா எடுக்கலை, அதான் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்கேன்…

 

 

“ஏன் தேவி போன் எடுக்கலை… புது பொண்டாட்டி போன் பண்ணி புருஷன் எடுக்காம இருக்கார்ன்னா உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையா?? என்று அவளை அளவெடுப்பது போல் பார்த்துக் கொண்டே கேட்டார்.

 

 

குந்தவையோ ‘ஐயோ என் மேல இருக்க கோபத்துல தான் இப்படி பண்ணுறாரா, அக்கா நேரா வந்து பார்த்த மாதிரி கேக்குறாங்க… என்று எண்ணியவளின் முகம் குழப்பத்தை சுமந்தது.

 

 

கல்பனா அவளின் முகத்தை திருப்தியாக பார்த்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார். குந்தவை அவள் கைப்பையை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள். அவள் வெளியில் வந்து ஆதி எப்போதும் வண்டி நிறுத்துமிடத்தில் வந்து நின்றவளின் கைகள் இப்போது கோபமாக ஆதிக்கு போன் செய்தது.

 

 

அழைப்பு மணி சென்றுக் கொண்டே இருக்க அவளின் முன்னே ஒரு வண்டி வந்து நின்றது. இடிப்பது போல் வந்து நின்றவனை திட்டவென்று அவள் நிமிர ஹெல்மெட்டை கழற்றியவனை கண்டதும் நிம்மதி வந்தது அவளுக்கு.

 

 

அவள் அழைத்தும் எடுக்காதவன் இப்போது எதிரே வந்து நின்றது மகிழ்வாக இருந்தாலும் போனை எடுக்கவில்லையே என்ற கோபத்தில் “நான் போன் பண்ணேன், அப்படி என்ன வேலை போனை கூட எடுக்காம… என்று சிடுசிடுத்தாள்.

 

 

“சாரி குந்தவை போன் பேண்ட் பாக்கெட்ல இருந்துச்சு அதான் எடுக்கலை… வண்டி ஓட்டும் போது எப்படி போன் எடுத்து பேச, நாலு மணி வரைக்கும் பார்த்தேன்.. நீ போன் பண்ணுவன்னு…

 

 

“அப்புறம் தான் சரி நேராவே போய் பார்த்திடலாம்ன்னு வந்திட்டேன்… சாரி… நாம கிளம்புவோமா… இப்போவே நேரமாச்சு… என்றவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

 

 

‘ச்சே இவரை போய் தப்பா நினைச்சுட்டோமே… என்று தன்னையே நொந்துக் கொண்டாள் அவள். ஆதிக்கு தன்னை நினைத்தே சிரிப்பாக இருந்தது. சற்று முன் நடந்ததை நினைவு கூர்ந்தான்.

 

____________________

 

 

அவன் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது ஜோதிஷ் சிரித்தான். ‘பயபுள்ள இப்போலாம் டான்னு பொண்டாட்டியை கூப்பிட கிளம்புது… என்னடா நடக்குது இங்க…ரொம்ப ஓவரா பண்ணுறானே…

 

 

‘பிடிக்கலை… பிடிக்கலைன்னு சொல்லிட்டு பிடிச்சுடுச்சு போல… கொஞ்சம் இவனை போட்டு வாங்குவோம்…என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க நண்பன் சிரிப்பதை பார்த்து ஆதியே ஆரம்பித்தான்.

 

 

“என்னடா எதுக்கு இப்போ சிரிக்குற…

 

 

“ஆமா நீ எங்க கிளம்பிட்ட…

 

 

“அதான் சொன்னேனேடா குந்தவையோட சித்தி பொண்ணுக்கு இன்னைக்கு ரிஷப்ஷன் இருக்குன்னு… அதுக்கு தான் கிளம்பணும் அவளை போய் ஆபீஸ்ல இருந்து கூட்டிட்டு வரணும்…

 

 

“இங்க இருந்து மண்டபம் கிட்ட தானே இருக்கு அதான் அவளை இங்க கூட்டிட்டு வர்றேன்… இங்க இருந்து கிளம்பி ரெடியாகி மண்டபம் போகணும்… அவ போன் பண்ணறேன்னு சொன்னான் அதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்ற நண்பனை வித்தியாசமாக பார்த்தான் ஜோதிஷ்.

 

 

“சரி அவங்க பண்ணலைன்னா நீ பண்ணி கேட்க வேண்டியது தானே…

 

 

“அவளோட ஆபீஸ் நேரத்துல நான் வேற போன் பண்ணா டிஸ்டர்பா இருக்கும்டா ஜோ… அதான் பார்த்தேன்…

 

 

“டேய் இங்க ஆதி ஆதின்னு ஒரு நல்லவன் இருந்தான், ரொம்ப விரைப்பா இருப்பான்… அவனை ஒரு மாசமா காணோம்டா… அதான் யோசிக்கறேன் அவனை காணோம்னு எங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணுறதுன்னு…

 

 

“டேய் ஜோ என்னை கிண்டல் எதுவும் பண்ணுறியா???

 

 

“ஏன்டா ஆதி அது இப்போ தான் உனக்கு தெரியுதா…

 

 

“ஆமா எதுக்கு கிண்டல் பண்ணுற… என்றவனை முறைத்தான் ஜோதிஷ். ‘இவனுக்கு தேவியை பிடித்துவிட்டது… அதை கேட்டால் ஒரு வேளை இந்த வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டால் என்னாவது…

 

 

‘சரி போடுற பிட்டை வேற மாதிரி போடுவோம்… என்று எண்ணிய ஜோதிஷ் “ஏன் ஆதி உனக்கு இப்போலாம் தேவி மேல எதுவும் கோபமில்லை போல… என்று நாசுக்காக கேள்வி கேட்டான்.

 

 

“கோபமா என்ன கோபம்??? என்றவனை என்ன செய்வது என்பது போல் பார்த்தான் மற்றவன்.

 

 

“முதல்ல உனக்கு ரொம்ப கோபமிருந்துதே அதை கேட்டேன்…

 

 

“ஓ!!! அதுவா ஜோ, அது இப்போ இல்லை…

 

 

“அதான் எப்படி போச்சுன்னு கேட்டேன்…

 

 

“தெரியலை… ஆனா இப்போ எந்த கோபமும் இல்லை, அவளோட நிலையில இருந்து யோசிச்சு பார்த்தா அவ மேல எதுவும் தப்பு தெரியலை…

 

 

‘என்னடா நடக்குது இங்க… இந்த பயபுள்ளை சம்சார சாகரத்துல தொபுகடீர்ன்னு குதிச்சுருச்சே, எப்படி நீந்தி கரையேருமான்னு நினைச்சேன்… ஆனா நல்லா நீச்சல் அடிக்க பழகிட்டான் போலயே…

 

 

‘இவனுக்கு காதல் எதுவும் வந்திருச்சா பொண்டாட்டி மேல… ஆனா ஜோ இப்படி கூட நடக்குமா… எதிரும் புதிருமா இருந்ததுங்க ஒண்ணா சேர்ந்ததே நம்ப முடியலை…

 

 

‘இதுல இவனுக்கு லவ் வேற வந்திருந்தா… ஐயோ ஒண்ணுமே புரியலையே… இவன்கிட்ட கேட்டு தெரிஞ்சு வைச்சுக்கறது நல்லது… பின்னாடி நமக்கும் உதவும்…

 

 

“நீ சொல்றது புரியலைடா ஆதி…

 

 

“அது ஒண்ணுமில்லை ஜோ ஆரம்பத்துல இருந்து அவளுக்கு நான் தப்பாவே தெரிஞ்சிருக்கேன்… அதுனால தான் அவ என்கிட்ட அப்படி நடந்துகிட்டா… ஆனா இந்த ஒரு மாசமா நான் அவளை பார்த்திட்டு தானே இருக்கேன்…

 

 

“என்னை மரியாதையா கூப்பிடுறதும், பேசறதும், என்னை உபசரிக்கறதும் பார்த்தா அவளை தப்பா நினைக்க முடியலைடா… என்று எதையோ யோசிக்க ஆரம்பித்துவிட்டான் அவன்.

 

 

“சரி ஆதி எனக்கு நேரமாச்சு… நான் கிளம்பறேன்… என்று எழுந்தான்.

 

 

“நீ எங்கடா கிளம்பிட்ட, நான் தான் பொண்டாட்டியை கூப்பிட போறேன் உனக்கென்ன அவசரம்….

 

 

“நான் என் பொண்டாட்டியை தேட புறப்பட்டேன் போதுமா… என்றான் ஜோதிஷ்.

 

 

“டேய் என்னடா சொல்ற???

 

 

“ஆதி நீ வேற தேவியை இங்க கூட்டிட்டு வர்ற, அவங்க வரும் போது நான் வேற இங்க இருந்தா தர்மசங்கடமா இருக்கும் அவங்களுக்கு… அதான் நான் கிளம்பறேன்… சரியா… என்றவன் தயங்கி நின்றான்.

 

 

ஜோவை நினைத்து ஒருபுறம் ஆதிக்கு சந்தோசமே, குந்தவை இங்கு வரும் போது சங்கடமாக உணர்வாளோ… ஜோவை கிளம்பச் சொல்லலாம் என்று எண்ணியவன் அதை சொல்ல தயங்க அவனே அதை சொல்லியதில் நிம்மதியடைந்தான் ஆதி.

 

 

ஜோ தயங்கி நிற்பதை பார்த்த ஆதி “என்னடா?? என்றான்.

 

 

“இல்லை உங்க மாமனார் மாமியார் எல்லாம் இங்க தான் வர்றாங்களா??

 

 

“இல்லடா அவங்க நேர மண்டபத்துக்கு போயிடுவாங்க…

 

 

“ஹ்ம்ம் சரிடா… நான் கிளம்பறேன்… என்று கிளம்பி விட்டான்…

 

____________________

 

ஆதிக்கு தெரியும் ஜோ எதையோ நினைத்து தான் தன்னிடம் போட்டு வாங்கியிருக்கிறான் என்று அவனுக்குமே இப்போதெல்லாம் குந்தவையின் மீது எந்த கோபமும் பெரிதாக இல்லை…

 

 

மாறாக அவளை தன் மனைவியாக நினைக்க ஆரம்பித்துவிட்டான்… அவன் எண்ணத்தில் அவள் கலக்க ஆரம்பித்ததை ஜோவிடம் பேசும் போது அவன் உணர்ந்து கொண்டான். அவளை அழைத்து வரும் போது அதை நினைத்தே அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

 

 

அவன் அலுவலகம் வந்து இறங்கியதும் மனைவியை இறங்கச் சொன்னவன் சாவியை அவளிடம் கொடுத்து திறக்கச் சொன்னான். “உங்… உங்க பிரின்ட் இல்லையா???

 

 

“இல்லை அவனுக்கு வேலையிருக்குன்னு கிளம்பிட்டான்…

 

 

அவன் அலுவலகத்திற்கு முதன் முறையாக வருகிறாள். ஒரு பதட்டத்துடனே கதவை திறந்தாள். “ஆபீஸ் நல்லா இருக்கு… என்றவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் அவன்.

 

 

‘என்னாச்சு இவருக்கு எதுக்கு இப்படி பார்க்குறார்… என்று நினைத்தாள். “சரி நீ போய் கிளம்பு குந்தவை… உள்ள ஒரு சின்ன பெட் ரூம் இருக்கு, அங்கேயே கிளம்பி தயாராகிக்கோ…

 

 

“என்னாச்சு குந்தவை எதுக்கு அப்படி பார்க்குற??

 

 

“இல்லை ஆபீஸ்ல எதுக்கு பெட் ரூம்??? என்று கேள்வியாக அவனை பார்த்தாள்.

 

 

“ஓ அதுவா!!! அது ஒண்ணுமில்லை இங்க இந்த ஆடிட் நேரத்துல நைட் பகல்ன்னு வேலை பார்ப்போம்… அப்போ வீட்டுக்கு கூட போக முடியாம வேலையிருக்கும்… அந்த நேரத்துல நாங்க படுக்க வசதியா இருக்க ஏற்பாடு பண்ணது… என்று விளக்கம் கொடுத்தான்.

 

 

“அப்போ அர்ஷி என்ன பண்ணுவா… வீட்டில தனியா இருப்பாளா?? என்றவளை சற்று பெருமிதமாய் பார்த்தான்.

 

 

‘எதுக்கு இப்படி மாத்தி மாத்தி பார்க்குறாரு… என்று யோசித்தாள் அவள்.

 

 

“அப்போலாம் அவளை ஜோதிஷோட அம்மா அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவாங்க… அங்க தான் இருப்பா, அவங்களுக்கு பொண்ணு இல்லையா அதுனால அவளை ரொம்ப நல்லா பார்த்துக்குவாங்க…

 

 

“ஹ்ம்ம்…

 

 

“என்ன ஹ்ம்ம்… கிளம்பலியா… என்று அவன் சொன்னதும் நினைவு வந்தவளாக அவன் காட்டிய அறைக்கு சென்றாள். கதவை அடைத்துக் கொண்டவள் கையில் எடுத்து வந்திருந்த பட்டுப்புடவையை மாற்றிக் கொண்டு தயாரானாள்.

 

 

அங்கேயே பவுடர் சீப்பு என்று எல்லாமே இருக்க ‘வேலை பார்க்கச் சொன்னா இதெல்லாம் பண்ணுறாங்க போல… என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்த பாத்ரூமில் முகம் கழுவி வந்தவள் லேசாக ஒப்பனையிட்டு முடித்தாள்.

 

 

வரும் வழியிலே ஒரு இடத்தில் நிறுத்தி மல்லிகை பூவை வாங்கி வைத்திருந்தாள். கூந்தலை விரித்து பின்னலிட்டு மல்லிகை பூவை எடுத்து சூடிக் கொண்டு அவள் வெளியே வர ஆதியும் தயாராகியிருந்தான்.

 

 

அவள் வெளியில் வரவும் அவன் இதயம் சுரம் தப்பியது. ஒரு கணம் நின்று துடித்த இதயத்தை ஏதோ சமாதானம் செய்வது போல் அவன் கையை வைத்து தேய்த்துக் கொண்டான்.

 

 

“நீங்க எங்க கிளம்புனீங்க?? என்று அவள் கேட்ட கேள்வியில் அவன் முகம் கருத்தது. ‘தன்னை அங்கு வரவேண்டாம் என்று எவ்வளவு நாசூக்காக சொல்கிறாள்… என்று நினைத்தவனின் முகம் கோபத்தை பூசிக் கொண்டது.

 

 

அவன் முகமாறுதல்களை கவனிக்காதவள் “ஏங்க நீங்க பவுடர் கூட போட்ட மாதிரி தெரியலையே… உள்ள போய் முகம் கழுவி தயாராகி வாங்க… நான் கொஞ்சம் லேட் பண்ணிட்டேன்… சாரி…

 

 

“ஆனா இங்க வேற எதுவும் ரூம் இருக்கா, உங்க டிரஸ் கூட இங்கயே வைச்சு இருக்கீங்களா… நீங்க எப்படி கிளம்பி தயாரா இருக்கீங்க… என்று அவள் கேட்டதும் தான் அவனுக்கு நிம்மதியே வந்தது.

 

 

அவள் கேட்டதின் அர்த்தமும் புரிந்தது. ‘ச்சே ஒரு நிமிஷம் இவளை தப்பா நினைச்சுட்டோமே… என்று ஒரு மனம் எண்ணிக் கொள்ள மறு மனமோ ‘ஏன் இதுக்கு முன்னாடி இவளை நீ தப்பா நினைச்சதே இல்லையா…

 

 

‘எவ்வளவு திட்டியிருப்ப, என்னெல்லாம் பேசியிருப்ப… என்று சொல்லி கெக்கலி கொட்டி சிரித்தது.

 

 

“நான் இந்த ரூம்லயே வைச்சு ரெடி ஆகிட்டேன்… போவோமா, அத்தை அப்போவே போன் பண்ணிட்டாங்க… அவங்க எல்லாரும் மண்டபத்துக்கு வந்திட்டாங்களாம்… நம்மை தான் எதிர்பார்த்திட்டு இருக்காங்களாம்…

 

 

“ஹ்ம்ம் போவோம்… என்றவள் அவன் பின்னோடு சென்றாள். இருவரும் மண்டபத்திற்கு வந்து சேர புது மாப்பிள்ளை பெண்ணென்று எல்லோரும் வந்து அவளை வரவேற்க ஆதிக்கு கூச்சமாக இருந்தது.

 

 

குந்தவையும் அவர்கள் கேலியில் முகம் சிவந்து தான் போனாள். அவள் வயதுடைய திருமணமான பெண்கள் எல்லோரும் அவரவர் கணவன்மார்களுடன் வந்திருந்தனர்.

 

 

எல்லோரும் சூழ அமர்ந்து புதுப்பெண்ணான அவளை ஓட்டிக் கொண்டிருந்தனர். ஆதிக்கோ எல்லாமே புதிதாக இருந்தது. ‘இவளை மட்டும் அனுப்பியிருக்கணுமோ… என்று தோன்ற ஆரம்பித்தது.

 

 

“ஏய் தேவி நம்ம ஜான்சிராணி யாரை கல்யாணம் பண்ணப் போறான்னு தெரியும்ல… என்றாள் அவள் அத்தை பெண் பவானி.

 

 

“யாரைடி?? என்றாள் குந்தவை.

 

 

“அதான் நம்ம அடக்கத்தின் சிகரம் ஏவிஎம் சரவணன் சார் மாதிரி எப்போ பார்த்தாலும் கையை கட்டிட்டே இருப்பானே, நெத்தி பூரா விபூதி பட்டையோட சுத்துவானே… எங்க பெரியம்மா பையன் அசோக்

 

 

“என்னடி சொல்ற அசோக்கா ராணியை கட்டிக்க போறான்… எப்படிடி?? என்று நிஜமாகவே வியந்தாள் குந்தவை.

 

 

ஆதியோ தனிமையாக உணர்ந்ததினால் எழுந்து சென்று வெளியில் நின்றுவிட்டான். அப்போது தான் வானவன் மண்டபத்திற்கு வந்தான், ஆதியை பார்த்தவன் “என்ன மாமா இங்க நிக்குறீங்க தனியா??

 

 

“ஒண்ணுமில்லை வானவா… எனக்கு ரொம்ப போரடிச்சுது அதான் வெளிய வந்தேன்… எனக்கு யாரும் அவ்வளவு பழக்கமில்லைல உங்கக்கா அவங்க செட்டோட பேசிட்டு இருக்கா… தொந்திரவு பண்ண வேண்டாம்ன்னு வந்திட்டேன்…

 

 

‘இவருக்கு அக்காவை புரியுது இந்த அக்காவுக்கு இவரை புரியலையே… இப்படி தனியா மாமா இங்க வந்து நிக்கற அளவுக்கு அப்படி என்ன பேச்சு வேண்டி கிடக்கு… என்று திட்டிக் கொண்டவன் “சரி உள்ள வாங்க மாமா, அதான் நான் வந்திட்டேன்ல உங்க கூட பேச்சு துணைக்கு… உள்ள போவோம் வாங்க…

 

 

ஆதியும் வானவனுடன் உள்ளே சென்றான் ‘இந்த அப்பா அம்மாவுக்கும் கொஞ்சம் கூட விவஸ்த்தை இல்லை, இப்படி மாமாவை தனியா விட்டு இவங்களுக்கு அப்படி என்ன வேலை வேண்டி கிடக்கு என்று அவர்களையும் திட்டிக் கொண்டான்.

 

 

தூரத்தில் குந்தவை அவள் உறவின் முறைகளோடு பேசிக் கொண்டிருப்பது தெரிய “மாமா ஒரு நிமிஷம், இப்போவே வந்திடறேன்… என்றுவிட்டு அவனை ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு குந்தவையை நாடிச் சென்றான்.

 

 

வழியில் வானதி வர அவளிடம் “ஏய் வானரம் அப்பா அம்மா எங்கடி…

 

 

“ஏன்டா வாமனா அதை என்கிட்ட கேட்குற??

 

 

“வீட்டு மாப்பிள்ளை வந்திருக்காரே அவரோட யாராச்சும் உட்காருவோம்… பேசுவோம்னு இல்லாம எல்லாம் எங்க தான் போனீங்க… கொஞ்சம் கூட  உங்களுக்கெல்லாம் அறிவேயில்லை???

 

 

“நமக்கு எல்லாரையும் தெரியும், பாவம் அவர் நம்ம குந்தவைக்காகவும் நமக்காவும் தானே இங்க வந்திருக்கார்… அவரை தனியா விட்டு என்ன வேலை உங்களுக்கெல்லாம்… என்று பொரிந்தான் அவன்.

 

 

“அண்ணா சாரிண்ணா… அக்கா இருக்காளேன்னு நான் அந்த பக்கம் போனேன்…

 

 

“நல்லா பார்த்தா அந்த மந்தி… நீ போய் அம்மா அப்பாவை வரச்சொல்லி அவரோட போய் இருக்கச் சொல்லு… அம்மா தான் வேலையா போறாங்கன்னு இந்த அப்பா யார் கூட மொக்கை போட போனாரோ… என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

குந்தவையை தேடி அவன் போக அவளோ வெகு சுவாரசியமாக மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். “என்ன சுவாதி, ரஞ்சனி, அலமு… எல்லாம் ரொம்ப பிசியா பேசிட்டு இருக்கீங்க போல… என்று இடைபுகுந்தான் அவன்.

 

 

“டேய் வானவா… எப்போடா வந்த?? என்றாள் அதிலொருத்தி.

 

 

“எங்கம்மா உங்க வீட்டுக்காரங்க எல்லாம்…

 

 

“அவங்களா அங்க யார் கூடவாச்சும் பேசிட்டு இருப்பாங்க… இல்லன்னா எங்க புள்ளைங்களை பார்த்திட்டு இருப்பாங்க… என்றாள் ரஞ்சனி அசுவாரசியமாக.

 

 

“ஏய் மந்தி அவங்க வீட்டுக்காரங்க தான் பிள்ளைக்குட்டியை பார்க்க போய்ட்டாங்க… ஆமா உங்க வீட்டுக்காரர் எங்கே?? என்றவனை முறைத்தாள் குந்தவை.

 

 

“என்னடா கொழுப்பா… இல்லை கொழுப்பான்னு கேட்குறேன்… அதென்ன உங்க வீட்டுக்காரர்ன்னு சொல்ற… ஒழுங்கா மாமான்னு கூப்பிட தெரியாதா…

 

 

“ஓ!!! அவ்வளவு அக்கறையா உனக்கு அவர் மேல அப்போ எதுக்கு இங்க வந்து வெட்டியா அரட்டை அடிச்சுட்டு இருக்க… அங்க திருதிருன்னு முழிச்சுட்டு வாசல்ல நிக்கற உன் புருஷனை போய் பார்க்க வேண்டியது தானே… என்று மேலும் அவளை சீண்டினான்.

 

 

“உன் வேலையை பாரு வானு… வந்திட்டான் பெரிசா எனக்கு அட்வைஸ் பண்ண, உங்க மாமா இங்க தான்… என்று அவள் திரும்பி பார்க்க அவனோ தூரத்தில் தனியாக ஒரு இடத்தில் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு வானவன் சொன்னது போல் அமர்ந்திருந்தான்.

 

 

‘அச்சோ பாவம் தனியா உட்கார்ந்திருக்காரே… நான் பேச்சு சுவாரசியத்துல இவரை பார்க்காம விட்டுட்டேனே… இவன் வேற சும்மாவே அட்வைஸ் பண்ணுவான்…

 

 

‘இப்போ வேற ஏறி மிதிப்பானே… என்று நினைத்தவள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேகமாக அங்கிருந்து எழுந்தவள் ஆதியை நாடிச் சென்றாள்.

 

 

“இங்க ஏன் தனியா வந்து உட்கார்ந்திருக்கீங்க…

 

 

“இல்லை இங்க யாரையும் எனக்கு தெரியாது… நீ வேற ரொம்ப நாள் கழிச்சு பார்க்கற உன் சொந்தத்து கூட பேசிட்டு இருக்க… உன்னை தொல்லை பண்ண வேணாம்ன்னு தான் இங்க வந்து உட்கார்ந்திருக்கேன்…

 

 

“சாரி… நான் வேணுமின்னு செய்யலை… என்றாள் அவனிடம் மன்னிப்பு கோரும் குரலில். “அதனாலென்ன குந்தவை நீ போய் பேசிட்டு வா… என்றான் அவன்.

 

 

குந்தவைக்கு அவனை பற்றிய நல்ல எண்ணம் அவளின் மனதில் ஆழமாய் பதிய ஆரம்பித்தது. தன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவன் எப்படி தப்பாக இருக்க முடியும் என்று அவனை பற்றி அவள் மனம் யோசிக்க ஆரம்பித்தது.

 

 

அப்போது நடந்த விஷயங்கள் எல்லாம் நினைக்க நினைக்க அதெல்லாம் இப்போது ஒன்றுமில்லாதது போல தோன்றியது. கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை கிண்டல் செய்வது ஒன்றும் புதிதில்லையே…

 

 

அதையேன் நான் தப்பாக எடுத்துக் கொண்டேன், எதுவும் தப்பாக ஒன்றும் நடந்து விடவில்லையே… அன்று பேருந்தில் கூட முதலில் இடித்தவன் வேறு ஒருவானாயிற்றே, அவள் முதலில் திரும்பி பார்க்கும் போது ஆதி அங்கில்லையே…

 

 

பின் அவள் மேல் விழுந்தவன் ஏதோ பிடித்து தள்ளிவிட்டவர்கள் விழுவது போல் தானே விழுந்தான் என்று சரியான கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தது அவள் மனம்.

தன்னை மறந்து அவனை பற்றிய யோசனையில் அவள் முழ்கியிருக்க ஆதியோ “குந்தவை… என்று நான்காம் முறையாக அழைக்க இப்போதும் அவள் காதுகள் யாருக்கோ கடன் கொடுத்தவள் போன்று சிந்தனையிலேயே உழன்றிருந்தாள்.

 

 

“குந்தவை… என்று அவள் தோள் பற்றி உலுக்கவும் தான் தன்னிலைக்கு வந்தாள் அவள். “என்னங்க… என்றவளை “மாமாவும் அத்தையும் மேடைக்கு வரச்சொல்லிட்டு போறாங்க… என்றான்.

 

 

“போகலாமா… என்றவனுக்கு தலையசைத்து அவனுடன் மேடைக்கு சென்றாள். வானவன் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவன் அவர்களருகே வந்தான். “எங்க கிளம்பிட்டீங்க… என்றவாறே.

 

 

“கிப்ட் கொடுக்கலாம்ன்னு போறோம்டா… நேரமாச்சே, வீட்டில அர்ஷிதா வேற தனியா இருப்பா… நாங்க கிளம்பணும்… என்ற குந்தவையை இப்போது வானவன் திருப்தியாக பார்த்தான்.

 

 

‘ஆஹா அக்காவுக்கு குடும்பப் பொறுப்பு வந்துவிட்டது… தன் நாத்தியை பற்றி எல்லாம் கவலைப்படுகிறாளே என்று எண்ணிக் கொண்டான்.

 

 

மேடையில் ஏறியவள் ராணியிடமும் அசோக்கிடமும் பரிசைக் கொடுத்துவிட்டு ஆதியை அவர்களுக்கு அறிமுகப் படுத்தினாள். சட்டென்று நினைவு வந்தவளாய் ராணியை அழைத்தாள்.

 

 

“ஏய் ராணி எப்படி இந்த அதிசயம் நடந்திச்சு… சின்ன வயசில இவனை கண்டாலே உனக்கு பிடிக்காதே… இப்போ எப்படி நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா எனக்கு ஒண்ணுமே புரியலை…

 

 

“பவானி, சுவாதிகிட்ட பேசும் போது தான் சொன்னாங்க அசோக் தான் மாப்பிள்ளைன்னு… ரொம்ப வருஷமா நீ அவனோட பேசாமலே இருந்தியேடி…

 

 

“என்ன தேவி என்னை பத்தி விசாரணையா… இந்த தயிர் சாதம் அந்த பிரியாணியை எப்படி உஷார் பண்ணிச்சுன்னு விசாரிக்கிறியா?? என்று அசோக் நேராக குந்தவையிடமே கேட்டு விட்டான்.

 

 

குந்தவையோ பதில் சொல்லாமல் திருதிருவென விழித்தாள் “என்ன ஆதி நீங்க எப்படி எங்க தேவியை கட்டி மேய்க்கறீங்க?? வாயை திறந்தா மூடவே மாட்டாளே… என்று கிண்டலடித்தான் அசோக்.

“இந்த ஜான்சிராணிக்கும் இந்த தேவியாருக்கும் வாயை விட கை தானே பேசும்… என்றவனின் பார்வை ராணியின் மேல் விழ அவளோ நாணினாள்.

 

 

“டேய் அசோக் ஏன்டா என் மானத்தை வாங்குற?? என்று பல்லைக் கடித்தாள் குந்தவை. ஆதி எதுவும் பேசாமல் சிரித்தான்.

 

 

“என்ன தேவி உனக்கு இப்போ என்ன தெரியணும் நாங்க எப்படி சேர்ந்தோம்ன்னு தானே… எல்லாத்துக்கும் காரணம் இவ தான், ஆரம்பத்துல இவளை எனக்கு பிடிக்காது தான்…

 

 

“ஆனா எப்போ எப்படி இவளை பிடிச்சுதுன்னு எனக்கு தெரியலை… கொஞ்சம் கொஞ்சமா இவளை நேசிக்க ஆரம்பிச்சுட்டேன்… உன்னோட சடங்குல வைச்சு இவ என்னை கேலி பண்ணி ரொம்பவே அசிங்கப்படுத்தினதுல நான் இவ கூட பேசறதையே நிறுத்திட்டேன்…

 

 

“அதுல இருந்து தான் இவளுக்கு என்னை பிடிக்க ஆரம்பிச்சிருக்கு… நான் எப்பவும் போல திரும்ப வந்து பேசுவேன்னு நினைச்சிருந்தவ நான் பேசாம இருக்கவும் ரொம்ப பயந்திட்டா…

 

 

“அப்புறம் எங்களுக்குள்ள என்னென்னவோ நடந்து இதோ இங்க உங்க முன்னாடி கணவன் மனைவியா நிக்கறோம்… என்றவன் தன்னவளை காதலுடன் பார்க்க அவளோ வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

 

 

குந்தவைக்கு இன்னமும் ஆச்சரியம் தாங்கவில்லை… அசோக்கை கண்டாலே பிடிக்காதவள் ராணி, ஆனால் இன்று அவனை கண்டு வெட்கப்படுகிறாள், நாணுகிறாள்… இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று குழம்பினாள்.

 

 

இவர்களுக்கு காதல் எப்படி வந்தது என்று அவள் மூளை யோசிக்க ஆரம்பித்தது. “ஏய் என்னடி எங்க யோசனை போயிட்டு இருக்கு உனக்கு… எங்க மாமா உன்னை எவ்வளவு நேரமா கூப்பிடுறார்… அப்படி என்ன யோசனை உனக்கு…

 

 

“முதல்ல உன் மாமனை கவனி, அப்புறம் எங்களை பத்தி யோசிக்கலாம்… என்று ராணி கிண்டலடிக்க தன்னினைவுக்கு வந்தாள் குந்தவை. ‘என்னாச்சு இவளுக்கு இன்னைக்கு பூரா யோசிச்சுட்டே இருக்காளே…என்று குழம்பிக் கொண்டிருந்தான்….

 

Advertisement