Advertisement

அத்தியாயம்- 12

 

பெண்ணிலே குழல்மொழிக்கோர் பங்குகொடுத் தவர்கொடுத்த
பிரமை யாலே
மண்ணிலே மதிமயங்கிக் கிடக்கின்றே னுனக்குமதி 

மயக்கந் தானோ
கண்ணிலே நெருப்பை வைத்துக் காந்துவா ருடன்கூடிக் 

காந்திக் காந்தி
விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண்ணிலாக் கொடும்பாவி 

வெண்ணி லாவே...


– திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)

 

 

“டேய் ஆதி… ஆதி… என்று கத்தியே விட்டான் ஜோதிஷ். “என்னடா எதுக்கு இப்போ கத்துற… என்றான் ஆதி.

 

 

“நான் இவ்வளவு நேரம் உன்னை தான் கூப்பிட்டு இருந்தேன்… இப்போ தான் என் குரல் உன்னை எட்டலையோன்னு கத்திக் கூப்பிட்டேன்…. என்றவனை மனதார திட்டினான் ஆதி.

 

 

திடீர் என்று “டேய் ஜோ நீ என்னை எப்படி கூப்பிடுவ… என்றவனை நன்றாக முறைத்தான் ஜோதிஷ். “ஏன்டா நான் உன்னை எப்படி கூப்பிடுவேன்னு உனக்கு தெரியாதா??? புதுசா கேட்குற…

 

 

“டேய் கேள்வி கேட்டா பதில் சொல்லுடா…

 

 

“ஆதின்னு கூப்பிடுவேன்… அதுக்கென்ன இப்போ என்றான் முறைப்புடன்.

 

 

“ஏன்டா ஜோ?? என்றவனை இப்போது கொலைவெறியாக பார்த்தான் நண்பன்.

 

 

“டேய் ஏன்னு கேட்டா பதில் சொல்லேன்டா ஜோ… இப்படி பார்த்தா என்ன நினைக்கிறது…

 

 

“என்னன்னு நினைக்கிறது… நொன்னை நினைக்கிறதுன்னுட்டு உனக்கு இப்போ என்னடா பிரச்சனை… நான் ஆதின்னு கூப்பிடுறதா, இனிமே அப்படி கூப்பிடலைடா…

 

 

“டேய் நீ எப்பவும் போல அப்படியே கூப்பிடுடா… நான் அதை பத்தி கேட்கலை ஜோ, என்னோட முழுபேரை விட்டு ஏன் சுருக்கமா கூப்பிடுற…

 

 

“ஏன்டா அதுக்குன்னு உன்னை விக்கிரமாதித்தான்னா ஒரு ஒரு தரமும் கூப்பிட முடியும்…செல்லமா ஆதின்னு கூப்பிடுறேன், அதுவே ரத்தினசுருக்கமா தானே இருக்கு… இதுக்கு மேல என்ன வேணும்…

 

 

“ஏன் விக்கிரமா, விக்ரம் அப்படின்னு கூப்பிடக்கூடாதா…. என்றவனின் குரல் நெகிழ்ந்திருந்தது.

 

 

“உன் பேரை எப்போ கேட்டாலும் ஆதித்யான்னு சொல்லிட்டு இப்போ தான் உனக்கு விக்கிரமாதித்தா விக்கிரமா, விக்ரம் அப்படின்னு கூப்பிட சொல்லத் தோணுதா… போடா டேய், போடா… என்று நண்பனை மீண்டும் முறைத்தான் ஜோதிஷ்.

 

 

சட்டென்று ஏதோ தோன்ற “உன்னை யாருடா விக்ரம்ன்னு கூப்பிட்டது… என்று நேரடியாக கேட்டான் அவன்.

 

 

“ஜோ உனக்கு எப்படிடா தெரியும்… எப்படி கண்டுபிடிச்ச குந்தவை அப்படி சொல்லும் போது நீ அங்க இல்லையேடா என்று அசடு வழிந்த நண்பனை பார்த்து ஜோதிஷிற்கு ஒன்று நன்றாக புரிந்தது, அவன் மனைவியிடம் விழுந்துவிட்டான் என்று.

 

 

“ஒபாமா போன மாசம் இந்தியா வந்திருக்கும் போது சொல்லிட்டு போனார்… என்று நக்கலடித்தான் ஜோதிஷ்.

 

 

“உன் பொண்டாட்டி உன்னை விக்ரம்ன்னு கூப்பிட்டதும் உனக்கு ரம்மு சாப்பிட்ட மாதிரி கிக்கு ஏறிப்போச்சு… அதான் இப்படி போதையா சுத்திட்டு இருக்கியா…

 

 

“நீ ஒரு மாதிரியா தான் பேசினேன்னு அந்த ரகு சொன்னப்பவே யோசிச்சேன்… ஆனா நீ தண்ணி போட மாட்டியே அப்புறம் என்னாகியிருக்கும் யோசிச்சேன்… இப்போ தானே தெரியுது நீ ஏன் இப்படி இருக்கேன்னு…

 

 

“எப்படிடா இருக்கேன் ஜோ???

 

 

“நீ தானே… எனக்கு பைத்தியம் பிடிக்க வைக்கிற மாதிரி இருக்க, காலேஜ் படிக்கும் போது கூட நீ ரொம்ப நல்ல பையனா தானே ஆதி இருந்தே… இப்போ ஏன்டா இப்படி இருக்க… என்று நண்பனை உலுக்க “ஜோ எதுக்குடா இப்படி உலுக்குற… என்றான் ஆதி.

 

 

“கடவுளே இவனுக்கு என்னமோ ஆச்சு… கிழ்பாக்கம் போக வேண்டிய நேரம் வந்தாச்சு போலவே… என்று வாய்விட்டு புலம்பினான் ஜோதிஷ்.

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லைடா நீ வேற ஏதேதோ சொல்லி குழப்பாதே… எனக்கு நெறைய வேலை இருக்கு… உன்னோட வெட்டியா பேச எனக்கு நேரமில்லை… என்றவன் எதுவும் நடக்காதது போல ஒரு பைலை எடுத்துக் கொண்டு கணினியின் முன் அமர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

 

 

இப்போது குழம்பிப் போனது ஜோதிஷ்… ஆதி பேசுனது எல்லாம் உண்மை தானா… கனவொன்னும் இல்லையே, ஆனா பயபுள்ளை எதுவுமே நடக்காதது மாதிரி போய் வேலை பார்க்குது… என்று யோசித்தான் ஜோ.

 

 

அப்போது ஆதிக்கு வானவன் போன் செய்தான். போனை எடுத்து காதில் வைத்தவன் “ஹலோ சொல்லு வானவா… என்றான்.

 

 

“என்ன மாமா என்ன செஞ்சிட்டு இருக்கீங்க??

 

‘ஆபீஸ்ல வேலை தானே செய்வோம்… இவன் எதுக்கு போன் பண்ணி என்ன செய்யறேன்னு கேட்குறான்… என்று யோசித்த ஆதி “என்னாச்சு வானவா எதுவும் என்கிட்ட பேசணுமா??

 

 

“நான் ஆபீஸ்ல தான் இருக்கேன்… என்றான்

 

 

“சும்மா தான் மாமா போன் பண்ணேன்… அப்புறம் மாமா ஹனிமூனுக்கு எங்கயும் போகலையா… என் பிரின்ட் ஒரு இடம் சொன்னான் மாமா… அதான் மாமா உங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்… என்று இழுத்தான்.

 

 

‘இவங்கக்கா பத்தி தெரிஞ்சு சொல்றானா… இல்லை என்னை வைச்சு செய்ய எதுவும் ப்ளான் பண்ணுறானா… கல்யாணத்தன்னைக்கு என் கை அவ மேலபட்டதோட சரி…

 

 

‘இதுல எங்களுக்கு ஹனிமூன் ஒண்ணு தான் குறைச்சல்… என்று நினைத்தவன் ‘ஆனா வானவன் சொன்னா எதுவும் விஷயமிருக்கும்… ஆனாலும் இப்போ நாங்க அதுக்கெல்லாம் தயார் ஆகலையே… என்று எண்ணினான்.

 

 

“மாமா… என்னாச்சு… நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்… நீங்க பதில் ஒண்ணும் சொல்லலையே… நீங்களும் அக்காவும் எங்காச்சும் வெளிய போயிட்டு வரலாம்ல…

 

 

“இல்லை வானவா இங்க எனக்கு ஆபீஸ்ல முடிக்க வேண்டிய வேலை நெறைய இருக்கு… அதெல்லாம் முடிஞ்ச பிறகு தான் அதை பத்தி எல்லாம் யோசிக்கணும்…

 

 

“நாங்க அதை பத்தி யோசிக்கும் போது உன்கிட்ட சொல்றேன் அப்போ பார்த்துக்கலாம்… என்று சொல்லி அப்போதைக்கு அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் அவன்.

 

 

ஜோதிஷிடம் சொல்ல அவனும் ஆதியை ஹனிமூன் சென்று வரச்சொன்னான். “டேய் நீ என்ன புரிஞ்சு தான் பேசறியா… அவன் தான் அக்கா பாசத்துல பேசறான் சரி… உனக்கு தான் எல்லாம் தெரியுமே அப்புறம் என்ன…

 

 

“எல்லாம் எங்களுக்கு தெரியும்… அதுக்குன்னு நீ இப்படியே இருக்க போறியா என்ன கடைசி வரைக்கும்… எப்படியும் நீங்க ஒண்ணா சேர்ந்து தான் ஆகணும்…

“அதுக்கு முதல்ல ஒரு அஸ்திவாரம் போட வேண்டாமா… ஹனிமூன் கூட்டிட்டு போ, அங்கேயே எல்லாம் நடந்திரும்ன்னு நான் சொல்ல வரலை…

 

 

“ஆனா நீங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க சந்தர்ப்பம் கிடைக்கும்ல… அதுக்கு தான்டா ஆதி சொல்றேன்…

 

 

“அதெல்லாம் சரியா வராது ஜோ… வீட்டில அர்ஷு இருக்கா, அவளை தனியா விட்டு அங்கெல்லாம் போக முடியாது… குந்தவை `கொஞ்ச நாள் எங்க வீடு பழகட்டும்… அப்புறம் பார்க்கலாம் ஹனிமூன் போறது பத்தி எல்லாம்…

 

 

“நீ என்னடா புரியாம பேசிட்டு இருக்க, சரி விடு… ஹனிமூன் வேணா அப்புறம் போய்க்கோ… அட்லீஸ்ட் ஒரு சினிமா, பார்க், பீச் கோவில்னு கூட்டிட்டு போயேன்டா… அதுவும் கூட கஷ்டம்ன்னு சொல்லாத என்றான் ஜோதிஷ்.

 

 

நண்பன் சொல்வது அவனுக்கும் சரியென்றே பட்டது அதனால் அவன் சினிமாவிற்கு போக முடிவு செய்தான். அந்த வார சனிக்கிழமை படத்திற்கு பதிவு செய்திருந்தான்.

 

 

இரவு குந்தவை அவர்கள் அறைக்கு வர ஆதி அவளை அழைத்தான். “குந்தவை நாளைக்கு நாம படத்துக்கு போறோம் டிக்கெட் புக் பண்ணிட்டேன்… என்றதும் அவனை பார்த்து விழித்தாள் அவள்.

 

 

“ஏன்?? எதுக்கு?? என்ன விஷயம்?? என்றாள் அவள்.

 

 

‘இவ என்ன லூசா?? புருஷன் சினிமாக்கு போகலாம்ன்னு சொன்னா ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்குறா… என்னோட சினிமாவுக்கு வர்றதுக்கு இவளுக்கு கசப்பா இருக்கோ… என்று எண்ணி முகம் கடுத்தது அவனுக்கு.

 

 

“ஏன்?? எதுக்கு?? என்ன விஷயம்ன்னு சொன்னா தான் வருவியா???

 

 

“இல்லை திடீர்ன்னு கூப்பிட்டீங்களே, அதான் எதுவும் விசேஷமான்னு நினைச்சேன்…

 

 

‘ஓ இவ சாதாரணமா தான் கேட்டிருக்கா போல… நாம தான் இவளை தப்பா நினைச்சுட்டோம்… என்று எண்ணியவன் “இல்லை சும்மா தான்… ஏன் போகக் கூடாதா???

 

 

“அப்படியெல்லாம் இல்லை சும்மா தான் கேட்டேன்… எத்தனை மணிக்கு, எந்த தியேட்டர்… என்று விசாரித்தவளுக்கு பதில் கொடுத்தான் அவன்.

 

 

ஒரு புறம் ஆதி அவளை தனியே வெளியே அழைத்து செல்வது அவளுக்கு சந்தோசமாக இருந்தது போலவும் இல்லாதது போலவும் உணர்ந்தாள் அவள்.

 

 

‘இப்போதெல்லாம் அவன் பார்வையை நேருக்கு நேர் அவளால் சந்திக்க முடியவில்லை… ரவியிடம் அவளை விட்டுக் கொடுக்காமல் அவன் பேசியது அவள் மனதில் அவனை உயர்த்தியிருந்தது…

 

 

தினமும் அவனுடன் பயணிக்கும் அந்த அரைமணி நேரப்பயணத்தை அவள் ரசிக்க ஆரம்பித்திருந்தாள்… எப்போதடா மாலை ஆகும் ஆதி வருவான் என்று தோன்ற ஆரம்பித்த மனதை முயன்று அடக்கினாள்…

 

 

‘நான் ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறேன்… எனக்கு தான் அவரை பிடிக்காதே… என்று எண்ணினாலும் மாலை மணி ஐந்தை தாண்டியதுமே அவள் கண்கள் வாசலை நோக்கியே பாயும்…

 

 

சனிக்கிழமை பொழுதும் விடிந்தது, ஆதி அன்று எப்போதும் போல் அலுவலகம் கிளம்பினான். குந்தவைக்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் அவள் வீட்டிலிருந்தாள்.

 

 

ஆதி மாலை ஐந்து மணிக்கு தயாராகி இருக்கும்படி கூறியிருந்தான்… மதிய வேளை தாண்டிய போது தான் அவளுக்கு அது உரைத்தது. ‘அச்சோ நாம மட்டும் எப்படி சினிமாக்கு போறது…

 

 

‘வீட்டில அர்ஷுவை எப்படி தனியா விட்டு போக முடியும்… பாவம் அவளும் சின்ன பொண்ணு தானே படத்துக்கு போகணும்ன்னு ஆசைப்பட மாட்டாளா… இவரை யாரு படத்துக்கு புக் பண்ண சொன்னது… என்று ஆதியை திட்டினாள் அவள்.

 

 

‘இவள் இப்படி நினைத்தால் அவன் எப்படி நினைப்பான் என்பதை உணராமல் விட்டுவிட்டாள் அவள்… ஏதேதோ எண்ணியவள் இன்று படத்திற்கு செல்ல வேண்டாம் என்று எண்ணிக் கொண்டு ஆதி வந்ததும் சொல்லிக் கொள்ளலாம் என்று கிளம்பாமலே இருந்தாள் அவள்.

 

 

கொஞ்சம் அப்புறம் இப்புறம் பார்வையை பதித்திருந்தால் ஆதியை பற்றி அவளும் அறிந்துக் கொண்டிருப்பாள். அவள் எண்ணங்கள் வேறு ஏதோ சிந்தனையில் வயப்பட்டிருந்தன. கண்களை திறந்து கொண்டு கனவு காண்பார்கள் என்பார்களே அது போல தான் அவளிருந்தாள்.

 

 

குந்தவை மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்து மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் ஆதி உள்ளே நுழைந்தான், குந்தவையை தேட அவளை காணாததால் அர்ஷுவை அழைத்தான்.

 

 

“சொல்லுங்கண்ணா என்று வந்து நின்றாள் அவள்.

 

 

“அண்ணி எங்கே???

 

 

“மேல துணி எடுக்க போயிருக்காங்கன்னு நினைக்கிறேன்… என்னாச்சுண்ணா??

 

 

“ஒண்ணுமில்லைடா உள்ள காணோமேன்னு கேட்டேன்… சரி நீ கிளம்பிட்டியா??

 

 

“ஏன்ண்ணா பார்த்தா அப்படி தெரியலையா?? ஆனா அண்ணா நாங்க எல்லாம் எதுக்கு உங்களோட சினிமாவுக்கு… என்று மறுப்பாக ஆரம்பித்தாள் அர்ஷிதா..

 

 

“அர்ஷு… போதும் நீ எதுவும் சொல்ல வேண்டாம், நீ போய் அங்க எல்லாரும் ரெடியான்னு பார்த்திட்டு வா… நான் அண்ணியை கூட்டிட்டு வர்றேன்… என்று படியேறி மாடிக்கு சென்றான்.

 

 

குந்தவையோ காலையில் கட்டியிருந்த அந்த சேலையையே கட்டியிருக்க ‘இவ என்ன இப்படியேவா வரப் போறா… நாம எதுவும் கேட்டா வம்பு… சரி இவளை கூட்டிட்டு கிளம்புவோம்… என்று எண்ணியவன் “குந்தவை கிளம்பலாமா?? என்றான்.

 

 

அவள் “எங்கே?? என்று கேட்டதும் அவனுக்கு வந்ததே கோபம் “என்ன எங்கயா… ஏன் நான் தான் காலையிலேயே சொன்னேனே படத்துக்கு போகப் போறோம்ன்னு… இப்போ வந்து எங்கன்னு கேட்குற… என்றவனிடம் “நான் வரலை… என்றாள் அவள் மொட்டையாக.

 

 

“நீ என்ன லூசா?? வரலைன்னா அதை காலையிலேயே சொல்லியிருக்க வேண்டியது தானே… நான் டிக்கெட் எல்லாம் புக் பண்ணதும் இப்போ வந்து சொல்ற… என்று பொரிந்தான் அவன்.

 

“நீங்க என்ன என்கிட்ட சம்மதம் வாங்கவா வந்தீங்க… புக் பண்ணிட்டேன் போகலாம்ன்னு தானே சொன்னீங்க… என்றாள் அவளும் பதிலுக்கு

 

 

‘என்னடா இவ ராங்கி தனம் எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டான்னு நினைச்சேன்… அதையெல்லாம் மூளையில ஒரு ஓரத்தில போட்டு வைச்சிருக்கான்னு இப்போ தானே புரியுது…

 

 

“சரி இப்போ என்னாங்குற, வர்றியா இல்லையா?? என்றான் அவன்.

 

 

“அதான் சொல்லிட்டேனே வரலைன்னு… என்று சொன்னதும் அவன் எதுவும் பேசவில்லை, இவளிடம் பேசினால் கோபம் வரும் தேவையில்லாமல் எதற்கு பேசி மனதை புண்ணாகிக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவன் இறங்கி சென்றுவிட்டான்.

 

 

‘ஒருத்தி வரலைன்னு சொல்றாளே என்ன ஏதுன்னு விசாரிச்சா இவருக்கு முத்தா உதிர்ந்து போகும்… என்று எண்ணியவள் மடித்து வைத்த துணியை எடுத்துக் கொண்டு கீழே இறங்க வானதி, வானவன் சகிதம் அர்ஷிதா வந்தாள்.

 

 

“மந்தி என்ன பழைய ட்ரெஸ்ல இருக்க, சினிமாக்கு கிளம்பலையா… இந்த மாமா எங்க எல்லாரையும் கிளம்பச் சொல்லிட்டு உன்னை எதுவும் சொல்லாம இருக்கார் பாரேன்… என்றான் வானவன்.

 

 

‘என்ன எல்லாருக்கும் டிக்கெட் எடுத்திருக்காரா, அய்யோ நான் எங்க ரெண்டு பேருக்கு மட்டும் எடுத்திருக்கார்ன்னு நினைச்சு வரமாட்டேன்னு சொல்லிட்டேனே…

 

 

‘இப்போ என்ன செய்யறது… என்று தவறு செய்த குழந்தையாக விழித்தாள்…

 

 

‘இந்த அக்கா ஏன் இப்படி முழிக்குது, என்னமோ பண்ணி வைச்சிருக்கா போல இருக்கே… என்று எண்ணிய வானவன் “என்ன மந்தி என்ன யோசனை போ… போய் கிளம்பு… என்றான்.

 

 

குந்தவை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தாள், அவர்கள் அறைக்குள் செல்ல ஆதி கணினியின் முன் அமர்ந்திருப்பது தெரிந்தது. ‘அச்சோ டிக்கெட் கான்செல் பண்ண தான் உட்கார்ந்திருக்காரா…

 

 

“என்னங்க… என்று அழைக்க அவனிடமிருந்து பதிலில்லை…

 

“உங்களை தான் கூப்பிட்டேன்…

 

 

“காது கேட்குது… என்ன???

 

 

“இல்லை டிக்கெட் கான்செல் பண்ணலையே… சாரி நீங்க நமக்கு மட்டும் தான் டிக்கெட் எடுத்திருக்கீங்களோன்னு நினைச்சு தான் வரலைன்னு சொன்னேன். அர்ஷுவை தனியா வீட்டில விட்டு போணுமேன்னு பார்த்தேன்…

 

 

“அதான் வரலைன்னு சொல்லிட்டேன்… சாரி எனக்கு தெரியாது எல்லாரும் வர்றாங்கன்னு… ஆனா தப்பு உங்க பேருல தான் நீங்க யார் யார் வர்றாங்கனு என்கிட்ட சொல்லவேயில்லை… என்று தவறு முழுவதையும் அவன் மேல் திருப்பிவிட்டாள்.

 

 

ஆதியோ அப்போதும் எதுவும் சொன்னானில்லை… “இப்போ என்ன சொல்றீங்க… அதான் நான் சாரி சொல்லிட்டேன்ல, கிளம்பலாம் தானே… என்று அவனை பார்த்தாள்.

 

 

“நான் உன்னை கிளம்பச் சொல்லி ரொம்ப நேரமாச்சு… நீ கிளம்பாம இருந்தா நான் என்ன பண்ண முடியும்… என்று அவன் பதிலுக்கு சொல்ல அவள்புடவை மாற்றச் சென்றாள்.

 

 

பெரியவர்கள் படத்திற்கு வரவில்லை என்றுவிட ஆதியே வீட்டிலிருந்த மற்றவர்களை அழைத்து செல்வதாக கூறி எல்லோருக்கும் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்ததால் அவர்கள் மட்டுமே சென்றனர்.

 

 

தியேட்டருக்கு செல்லவும் அங்கு ஜோதிஷும் வந்திருந்தான். எல்லோரையும் ஒரு சிரிப்புடன் பார்த்தவன் ஆதியின் அருகில் வந்து “டேய் மச்சி குடும்பத்தோட படம் பார்க்க வந்தவன் நீ மட்டும் தான்டா…

 

 

“நீ நல்லா வருவடா மச்சி… நீயும் உன் பொண்டாட்டியும் நல்லா மனசுவிட்டு பேசின மாதிரி தான்… இதுல எனக்கு வேற ஒரு டிக்கெட்டு… ஹ்ம்ம் நீயெல்லாம்… என்று சொல்லி வாழ்த்தினானா இல்லை திட்டினானா என்று தெரியாத அளவுக்கு பேசிவிட்டு சென்றான்.

 

 

அவர்கள் செல்லும் முன் படம் ஆரம்பித்துவிட அவர்கள் இருக்கை தேடி ஒவ்வொருவராக அடுத்தவர்களை தொந்திரவு செய்யா வண்ணம் அப்படி அப்படியே அமர்ந்தனர். கடைசியாக குந்தவையும் ஆதியும் அருகருகே அமர்ந்தனர்.

தனிஒருவன் படத்திற்கு சென்றிருந்தனர் அனைவரும், எல்லோரும் படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். இரு ஜோடி கைகள் முதன் முதலாக ஒன்றோடொன்று பின்னி பிணைந்தது.

 

 

படம் முடிந்ததும் அவரவர் வீட்டிற்கு திரும்ப இரு இதயங்கள் அப்போது இடம் மாறியிருந்ததை மற்றவர்கள் உணரவில்லை… ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிந்தனையில் இருந்தனர்.

 

 

சினிமாவிற்கு சென்று வந்ததில் இருந்தே குந்தவைக்கு ஆதியின் முகம் பார்த்தே பேச முடியவில்லை. அவனிடம் எதிர்த்து பேசியிருக்கிறாள் தான் அப்போதெல்லாம் தோன்றாத உணர்வுகள் இப்போது தோன்றி அவளை அலைகழித்தது.

 

 

நாட்கள் அதன் போக்கில் விரைந்து சென்றது. தினசரியாக ஆதியே குந்தவையை அலுவலகம் அழைத்து செல்வதும் கொண்டு வந்து விடுவதும் என்பது வழமையாகியது போல் தினமும் அவளிடம் ரவி ஆதியை பற்றியும் அவர்கள் திருமணம் பற்றி விசாரிப்பதும் வழமையாகி போனது.

 

 

ரவியின் தொடர்ந்த இந்த தொல்லைக்கு அவள் ஒரு நாளும் நின்று பதில் சொன்னதில்லை. அந்த வேலை இந்த வேலை என்று அவளை அழைத்து அவ்வப்போது கேள்வி கேட்டு நச்சரித்தவனை ஒரு நாள் மிகக் கடுமையாக எச்சரித்தாள்.

 

 

அவள் அவனை முகத்துக்கு நேரே கண்டிப்பாக பேசியதில் இருந்து ரவி அவளிடம் எதையும் விசாரிப்பதில்லை. குந்தவையும் மனதிற்கு மிகவும் சந்தோசமாக உணர்ந்தாள்.

 

 

வேலையை விட்டுவிடலாமா என்று சில நாட்களாக தோன்றிய எண்ணத்தை ஒரு புறம் ஓரமாக ஒதுக்கி வைத்தாள்… குந்தவை ஆதியின் உறவில் எந்த முன்னேற்றமும் இல்லாதது போல் இருந்தது.

 

 

உண்மையில் ஆதி அறியாத ஒருவிஷயமும் உண்டு, ஏன் குந்தவையும் கூட அதை அறியாள்… இருவரும் அதை உணரும் நாளும் வந்தது. நாட்கள் அதன் போக்கில் மெதுவாக நகர்ந்துக் கொண்டிருந்தது.

 

 

இந்நிலையில் விடுமுறையில் சென்றிருந்த கல்பனா வேலைக்கு திரும்பியிருந்தார்.அன்று காலை அலுவலகம் வந்த கல்பனா அவளுக்கு முன்னமே வந்திருந்த குந்தவையை கண்டதும் நேரே அவளிடத்தில் வந்து நின்றாள்.அவள் மேஜையின் முன் நிழலாட நிமிர்ந்து பார்த்தாள் குந்தவை. “அக்கா… எப்படி இருக்கீங்க?? என்றாள் குஷியாக.

 

 

“போ தேவி என்கிட்ட பேசாதே, நான் உன் மேல கோபமா இருக்கேன்… ஒரு இருபது நாளா ஊர்ல இல்லை… இங்க என்னென்னமோ நடந்திருக்கு… உனக்கு கல்யாணம்ன்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொன்னியா…

 

 

“அக்கா உங்களுக்கு மட்டுமில்லை நான் யாருக்குமே சொல்லலைக்கா…

 

 

“மத்தவங்களும் நானும் ஒண்ணா தேவி??

 

 

“அக்கா நான் அப்படி எல்லாம் நினைக்கலைக்கா…

 

 

“அப்போ நீ என்கிட்ட மட்டுமாச்சும் சொல்லியிருப்ப தானே… என்று அவர் அடுத்த கொக்கி வைக்க குந்தவைக்கு சலிப்பாக இருந்தது.‘இப்போ என்ன நடந்து போச்சுன்னு இவங்க இவ்வளவு கேள்வி கேட்குறாங்க… என்று யோசித்தவளின் முகம் சுருங்க கல்பனா பேச்சை மாற்றினார்.

 

 

“நீ என்னை பத்தி என்ன நினைச்சன்னு எனக்கு தெரியலை… ஆனா நான் உன்னை என்னோட தங்கையா தான் நினைச்சேன்… என்ன இருந்தாலும் நீ ஒரு வார்த்தையாச்சும் என்கிட்ட சொல்லி இருக்கலாம்…

 

 

“எனக்கும் வருத்தம் தான்… அந்த வருத்ததுல தான் உன்கிட்ட கேட்டேன்… மன்னிச்சுடு தேவி… இனி இப்படி கேட்க மாட்டேன்… என்று நகரப் போனார்.

 

 

குந்தவைக்கு சற்றே சங்கடமாகிப் போக “அக்கா சாரிக்கா… நான் சொல்லாதது தப்பு தான்… ஆனா நீங்களும் தான் அப்போ ஊர்லயே இல்லையே…

 

 

“ஏன் தேவி உனக்கு முன்னாடியே தெரியாதா… என்கிட்ட கூட மனசுவிட்டு பேச மாட்டியா???

 

 

“அப்படி எல்லாம் எதுவுமில்லைக்கா… வீட்டில திடீர்ன்னு தான் முடிவு பண்ணிட்டாங்க… எல்லாம் வேகவேகமா நடந்திருச்சு… யோசிக்க கூட நேரமில்லாம ரொம்ப விரைவாவே நடந்து முடிஞ்சு போச்சு… எதுவும் நம்ம கையில இல்லை…

 

 

“என் கதையை விடுங்கக்கா… உங்க மாமனார் எப்படி இருக்கார், அவருக்கு உடம்பு சரியில்லைன்னு தானே ஊருக்கு போனீங்க… என்று பேச்சை மாற்றினாள்.

 

 

அவரும் புரிந்தவராக “அவரை வழியனுப்பி வைச்சுட்டு தான் திரும்பி வந்திருக்கேன் தேவி…சரி நீ வேலையை பாரு… உன் வேலையை நான் கெடுக்கலை… என்றவர் அங்கிருந்து நகரவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.

 

 

Advertisement