Advertisement

அத்தியாயம்- 11

 

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து 
மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர் 
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல் 
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

  • ஆண்டாள் (நாச்சியார் திருமொழி பாடல்)

 

 

விழித்ததும் அவசரமாக எழுந்து அமர்ந்தவன் “என்னாச்சு… என்றான்.“விடிஞ்சிருச்சு… நீங்க ஆபீஸ் போக வேண்டாமா??? என்றவள் “காபி என்று நீட்ட ஆதிக்கு தான் காண்பது கனவோ என்றிருந்தது.

 

 

“தேங்க்ஸ்… என்றவன் எழுந்து அவளிடம் இருந்த காபியை வாங்கி அருகில் வைத்தவன் பிரஷ் செய்துவிட்டு வந்து அதை பருகினான்.

 

 

“அர்ஷிதா நீ காலேஜ் கிளம்பலையா… உனக்கு நேராமச்சுல, நீ கிளம்பு டிபன் வேலை நான் பார்த்துக்கறேன்… என்றவள் அர்ஷிதாவை சமையலறையில் இருந்து அனுப்பிவிட்டு ரவையை எடுத்து உப்புமா செய்ய ஆரம்பித்தாள்.

 

 

ஆதிக்கு உப்புமா பிடிக்காது என்பது அவளுக்கு எப்படி தெரியும்… அவளும் அலுவலகம் கிளம்ப தயாரானவள் ஒரு புடவையை எடுத்துக் கொண்டு அர்ஷிதாவின் அறைக்கு சென்றாள் அதை மாற்றுவதற்கு.

புடவையை அணிந்து தயாராகி வந்தவள் அவர்கள் அறையின் கண்ணாடியில் நின்று தலைவாரி பின்னலிட்டுக் கொண்டு பெரிய வட்ட பொட்டை எடுத்து நெற்றியில் வைத்தவள் வகிட்டில் பளிச்சென்று தெரியுமாறு குங்குமம் இட்டாள்…

 

 

குளித்துவிட்டு வெளியில் வந்த ஆதியின் கண்களில் குந்தவை கட்டிலில் ஒரு காலை மடித்து ஒரு காலை கீழே விட்டிருந்த தோற்றம் தான் தெரிந்தது. ‘இவ என்ன அம்மன் படத்துல வர்ற ரம்யா கிருஷ்ணன் மாதிரி போஸ் கொடுக்கறா…

 

 

“என்னாச்சு… என்றான் அவளருகில் சென்று…

 

 

“இல்லை மெட்டி லூசா இருக்கு… அதான் டைட் பண்ணிட்டு இருக்கேன்… என்றாள்.

 

 

‘உன்னை மாதிரி அதுவும் லூசு போல என்று எண்ணிக் கொண்டவன் “இரு நானே சரி பண்ணறேன்… என்று கீழே அமர “இல்லை பரவாயில்லை நானே… என்று அவள் தொடங்க… “நீ டைட் பண்ணுற லட்சணம் தான் நான் பார்த்தேனே…

 

 

“விடு நானே பண்ணுறேன்… என்றவன் அவள் ஒரு காலை பிடித்து அந்த மெட்டியை இறுக்கினான். மறு காலையும் இறக்கச் சொல்ல மெதுவாக இறக்கியவள் பாலன்ஸ் தவறி அவன் தோளை பற்றிக் கொண்டாள்.

 

 

ஆதி மறுகாலிலும் அவள் மெட்டியை இறுக்கிவிட்டவன் “இப்போ நடந்து பாரு… என்றான்.

 

 

“ஹ்ம்ம் சரியா இருக்கு… என்றவள் அவனுக்கு காலை உணவை எடுத்து வைத்தாள். தட்டில் உப்புமாவை அவள் வைக்கவும் “அர்ஷிம்மா… என்றான் ஆதி…….

 

 

“அண்ணா கூப்பிட்டீங்களா???

 

 

“ஆமாம்மா என்னமா இன்னைக்கு உப்புமாவா…

 

 

“ஆமாம் அண்ணா சாப்பிடுங்க அண்ணி செஞ்சது ரொம்ப நல்லாயிருக்கு… நான் சாப்பிட்டேன்… என்று நாசுக்காக அதை சாப்பிடும் படி அவனுக்கு புரியுமாறு சொன்னாள்.

“என்னாச்சு உங்களுக்கு உப்புமா பிடிக்காதா??

 

 

“அவ்வளவா விரும்பி சாப்பிட மாட்டேன்… ஆனா இன்னைக்கு நல்லா இருக்கு… நெய் எல்லாம் போட்டு இஞ்சி வேற போட்டிருக்கு போல… சுவை கொஞ்சம் வித்தியாசமா நல்லாயிருக்கு…

 

 

“தேங்க்ஸ்… என்றவள் உண்மையிலேயே அகமகிழ்ந்து தான் போனாள். அவள் அப்புறம் உள்ளே செல்லவும் அவன் புறம் வந்த அர்ஷிதா அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தாள்.

 

 

“அது ஒண்ணுமில்லை அர்ஷிம்மா, உப்புமா எனக்கு பிடிக்காது தான்… ஆனா இன்னைக்கு நல்லா தான் இருந்திச்சு… என்று அசடு வழிந்தான் அவன்.

 

 

“ஹ்ம்ம் நடத்து நடத்து… என்றுவிட்டு நமுட்டு சிரிப்புடன் அர்ஷிதா உள்ளே சென்றுவிட்டாள். உணவு விஷயத்தில் ஆதி எப்போதுமே கருத்துகள் சொன்னதில்லை, அர்ஷிதாவை திட்டியும் அவன் பேசியதில்லை.

 

 

பிடிக்கவில்லை என்றால் அதற்காக சாப்பிடாமல் எழும் ரகம் அவனில்லை… அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் இனி செய்ய வேண்டாம் என்று நேராகவே சொல்லிவிடுவான்…

 

 

இன்று அவனுக்கு பிடிக்காததை குந்தவை செய்த போதும் சாப்பிட்டுவிட்டு நல்ல கருத்துக்களை கூறியிருக்கிறான். இது அவனுக்கே ஆச்சரியம் தான்… அவனும் அலுவலகம் செல்ல வேண்டுமே அவசரமாக அவன் அறைக்கு சென்றான் உடை மாற்ற…

 

 

அப்போது வானதி அவர்கள் வீட்டிற்கு வந்தாள். “என்னடி என்ன காலையிலேயே வந்திருக்க, காலேஜ் போகலையா… உனக்கு நேரமாகலை, அம்மா எதுவும் சொல்லி அனுப்பினாங்களா… என்று அடுக்கடுக்காய் கேள்விகள் தொடுத்தாள் தமக்கை.

 

 

“அதெல்லாம் காலேஜ்க்கு தான் கிளம்பிட்டு இருக்கோம், அர்ஷுவை கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன்…

 

 

“அர்ஷுவை எதுக்குடி கூப்பிட்டு போகப் போறே…

 

 

“ரெண்டு பேரும் ஒண்ணா காலேஜ் போகறதுக்கு தான்… வேற எதுக்காம்… என்றாள் வானதி.

“நீங்க ரெண்டு பேரும் வேற வேற காலேஜ் தானே… அப்புறம் எப்படி ஒண்ணா போவீங்க…

 

 

“நான் எத்திராஜ், அர்ஷு காயிதேமில்லத் காலேஜ்… ரெண்டும் பக்கத்து பக்கத்துல தானே இருக்கு… சும்மா கேள்வி கேட்டுட்டே இருக்காதேக்கா… நீ ஆபீஸ் கிளம்பலையா…

 

 

“கிளம்பணும்டி, என்னோட வண்டி எடுத்துட்டு வாயேன்… என்றாள் தமக்கை.

 

 

“என்னது உன்னோட வண்டியா… அதெல்லாம் போன வாரம், இது இந்த வாரம் வண்டி என்னோடதா மாறி ஒருவாரம் ஆகப் போகுது…

 

 

“ஏன்டி கழுதை அப்படி சொல்ற, அது என்னோட வண்டி… அப்பா எவ்வளோ ஆசையா எனக்கு வாங்கி கொடுத்த வண்டி தெரியுமா அது…

 

 

“அப்பா தான் வாங்கி கொடுத்தார் யார் இல்லைன்னு சொன்னது… ஆனா இப்போ நீ வேற வீட்டுக்கு போய்ட்ட… இனி உனக்கு எதுவும் வேணும்ன்னா நீ மாமாகிட்ட கேளு அவங்க வாங்கி தருவாங்க…

 

 

“ஏன் மாமா உங்க பொண்டாட்டிக்கு வண்டி வாங்கி தரமாட்டீங்க… என்று அப்போது அவர்கள் அறையில் இருந்து வந்துக் கொண்டிருந்த ஆதியிடம் கூறினாள்.

 

 

“ஹ்ம்ம் வாங்கிடலாம் வானதி… என்றான் ஆதித்யா.

 

 

“கேட்டுக்கோ மாமா வாங்கி தர்றேன்னு சொல்லிட்டாங்க… ஆனா அக்கா உனக்கு எதுக்கு வண்டி, நீ அழகா மாமா கூட வண்டியில போயேன்… மாமா தினமும் உன்னை தாண்டி தானே அவரோட ஆபீஸ்க்கு போறார்…

 

 

“ஏன் மாமா நான் சொல்றது சரி தானே… நீங்களே தினமும் அக்காவை கூட்டிட்டு போய் கூட்டிட்டு வந்திடுங்க… உங்களுக்கும் காசு மிச்சம், அப்படியே நீங்க ரெண்டு பேரும் பேசிட்டே ஜாலியா வீட்டுக்கு வரலாம்… என்று கண்சிமிட்டினாள் வானதி.

 

 

“விவஸ்தை இல்லாம பேசிட்டு… எனக்கு வண்டியும் வேணாம் ஒண்ணும் வேணாம்… நீ வாயை மூடிட்டு கிளம்பு… என்றாள் குந்தவை.

 

 

‘இவ அக்கா கூட நான் அப்படியே பேசிட்டாலும்… இந்தா குதிக்க ஆரம்பிச்சுட்டாள்ள… இனி என்ன போட்டாலும் வெடிக்க ஆரம்பிப்பா… என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

 

 

“அண்ணா புது வண்டி வாங்கறவரைக்கும் நீங்க என்னோட வண்டியை வேணா யூஸ் பண்ணிக்கோங்க அண்ணி…

 

 

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்று கைப்பையுடன் திரும்பி வந்தாள்.

 

 

தங்கையிடம் அவள் அப்படி முகத்தில் அடித்தது போல் பேசியது ஆதிக்கு துளியும் பிடிக்கவில்லை. அவன் முகம் கோபத்தை பிரதிபலித்தது.

 

 

“அண்ணி நான் கிளம்பறேன்… அண்ணா நான் கிளம்பறேன்… என்று இருவரிடம் விடைபெற்று அர்ஷிதா கல்லூரி கிளம்பிச் சென்றாள்.

 

 

“கிளம்பலாம்… என்று அவனிடம் ஒற்றை சொல்லை உதிர்த்தவள் “பூட்டு சாவி எங்க இருக்கு?? என்றாள் அவனை பார்த்து.

 

 

“பூஜை மாடத்திலே இருக்கு…

 

 

“எப்போமே அங்க தான் வைப்பீங்களா??

 

 

“ஏன் அதுக்கென்ன?? அது எடுக்க உனக்கு ரொம்ப கஷ்டமோ??

 

 

“இல்லை, எடுக்க முடியாத சமயத்துல என்ன செய்ய… அதான் கேட்டேன்…

 

 

‘இவ என்ன சொல்றா… என்று அவன் சில நொடி விழிக்க தாமதமாய் அவள் சொல்ல வந்தது புரியவும் “இனி அந்த ஆணில வேணும்னா மாட்டி வைச்சுடு… என்றான்.

 

 

“எப்போமே நான் தான் கடைசியா கிளம்புவேன்… அதான் ரொம்ப தேடக் கூடாதுன்னு சாமி மாடத்திலே வைக்கிற பழக்கம் எனக்கு… என்று சேர்த்து சொன்னான்.

 

 

“போகலாமா… என்றவளுக்கு “ஹ்ம்ம்… என்று பதிலிறுத்தவன் வெளியே சென்று அவன் அப்பாச்சியை எடுத்தான்.

பின்னோடு கதவை பூட்டிவிட்டு வந்தவள் சாவியை என்ன செய்ய என்பது போல் பார்த்தாள். “அதை நீயே வைச்சுக்கோ… நான் சாயங்காலம் வந்து உன்னை கூட்டிட்டு தான் வருவேன்… அது உன்கிட்டயே இருக்கட்டும்…

 

 

“ஹ்ம்ம் சரி… என்றவள் அதை தன் கைப்பையில் போட்டுவிட்டு பின்னால் ஏறி அமர்ந்தவள் பிடிப்புக்காய் அவன் தோள் பற்றினாள்.

 

 

ஆதிக்கு இதெல்லாம் புதிதாய் இருந்தது, அவன் தங்கையை அன்னையை அவன் வண்டியில் இதற்கு முன் ஏற்றி சென்றிருக்கிறான் தான், ஆனால் வேறு பெண்ணை ஏற்றுவது இதுவே முதல் முறை…

 

 

அதுவும் அவள் அவன் மனைவி என்பது வேறு அவன் மனதில் ஏதோவொரு இனிமையை பரப்பி சில்லென்று ஆனது போல் இருந்தது. நேற்று இல்லாத மாற்றம் என்னது என்று அவன் பாடாதது தான் குறை.

 

 

‘இவளை தான் எனக்கு பிடிக்காதே… அப்புறம் ஏன் இப்படி எல்லாம் எனக்கு இருக்கு… பொண்டாட்டின்னதும் பாசம் வந்திருச்சோ… என்று ஏதேதோ சிந்தனையுடனே அவன் வண்டியை செலுத்தினான்.

 

 

அவள் அலுவலகத்தில் வண்டியை நிறுத்தவும் முதலில் இறங்கியவள் ஒரு முடிவெடுத்தவளாய் “நீங்களும் வாங்க… என்றாள்.

 

 

‘என்ன… என்ன சொன்னா இவ?? நான் நானும் வரணுமா??? ஆனா ஏன்?? எதுக்கு?? என்று வாய்விட்டு அவளிடம் கேளாதவன் அவன் மனதிடம் கேள்வி தொடுத்துக் கொண்டிருந்தான்.

 

 

அவள் துறைக்கு விரைந்து அவள் செல்ல அவளை பார்த்ததும் அவளுடன் பணிபுரிபவர்கள் எல்லோரும் எழுந்து அவளருகில் வந்தனர்.

 

 

“என்ன தேவி… என்ன இது கோலம்?? இப்படி திடுதிப்புன்னு ரெண்டு நாள்ல எங்களுக்கு கூட சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குறீங்க… என்றாள் ரேவதி.

 

 

“ரெண்டு நாள்ல எல்லாம் இல்லை… எனக்கு போன வாரமே கல்யாணமாகிடுச்சு…

 

 

அவள் சொல்லவும் எல்லோரும் வாயை பிளந்தனர். “என்ன சொல்றீங்க நீங்க… ஏன் எங்களுக்கு எல்லாம் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை… என்று அனைவருமே உரிமையாய் கோபித்துக் கொள்ள எல்லோரிடமும் சொல்லியிருக்கலாமோ என்று அவளுக்கே தோன்ற ஆரம்பித்தது.

 

 

எதையோ மனதிற்குள் நினைத்தவள் சொல்லாதது தான் நல்லது என்று எண்ணிக் கொண்டு… “அதில்லை, இங்க நான் யார்கிட்டயும் அவ்வளவு நெருக்கமா பழகினது இல்லை..

 

 

“அதுவும் இல்லாம என்னோட கல்யாணம் திடிர்னு தான் பிக்ஸ் ஆச்சு… யாருக்கும் அதிகம் தகவல் தரமுடியலை… தப்பா எடுத்துக்காதீங்க… என் மேலயும் தப்பிருக்கு…

 

 

“அட்லீஸ்ட் ஒரு வார்த்தையாச்சும் உங்ககிட்ட நான் சொல்லியிருக்கலாம்… எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க…என்று அவள் கரம் கூப்ப “அட விடுங்க மேடம்… ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாங்களும் சந்தோசப்பட்டிருப்போம்

 

 

“மத்தப்படி நீங்க இப்படி மன்னிப்பு கேட்கிறது எல்லாம் வேண்டாம் மேடம்… நீங்க சொன்ன மாதிரி நாம எல்லாம் இன்னும் மனசுவிட்டு பழகலை தானே… இனியாச்சும் நாம இப்படி இல்லாம எல்லாரும் ஒத்துமையா ஒண்ணா இருப்போமே… என்றாள் வாணி என்ற பெண்ணொருத்தி.

 

 

“தேங்க்ஸ் வாணி… என்றாள் குந்தவை.

 

 

“மேடம், கல்யாணத்துக்கு தான் கூப்பிடலை… உங்க ஹஸ்பன்ட் போட்டோவாச்சும் காட்டலாம் தானே… அப்புறம் எங்களுக்கு ட்ரீட் எல்லாம் உண்டு தானே… என்றாள் ஒருவர்.

 

 

“ஆமாம் மேடம் சார் போட்டோ காட்டுங்க… என்றார் உடன் பணிபுரியும் சம்மந்தம்.

 

 

“அவரும் வந்திருக்காரு… என்றவள் சுற்றுமுற்றும் பார்த்தாள்.

 

 

“என்ன மேடம் இது… ரோஜா படத்துல அரவிந்த்சாமி மதுபாலாவை வெளிய விட்டுட்டு வந்த மாதிரி நீங்க அவரை விட்டுட்டு வந்து இங்க தேடறீங்க…

 

 

“ரொம்ப மிரட்டி வைச்சிருக்கீங்க போல சாரை… என்று கிண்டலடித்தாள் ஒருத்தி.

‘அச்சோ அவரை இருந்து உள்ள கூட்டிட்டு வராம போயிட்டேனே… என்று வேக நடைப்போட்டு அவள் வெளியே வர அவன் வெளியில் நடை பயின்று கொண்டிருந்தவன் போல் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான்.

 

 

“சாரி நான் பாட்டுக்கு உள்ள போயிட்டேன்… உள்ள வாங்க… என்றாள்

 

 

“ஹலோ சார் வாங்க வாங்க… வாழ்த்துக்கள்… என்று ஆளாளுக்கு அவன் கையை பிடித்து உலுக்கினர். ஆண் பெண் என்று பேதமில்லாமல் எல்லோரும் கைக்கொடுக்க பெண்கள் அவன் கைப்பிடிப்பதை பார்த்து குந்தவைக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

 

 

ஏன் என்று புரியாவிட்டாலும் அவளுக்கு அது பிடித்தமில்லை என்று புரிந்தது. “என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க… எங்க மேடமை இப்படி சொல்லாம கொள்ளாம கொத்திட்டு போயிட்டீங்க… உங்க பேரு என்ன சார்?? என்றாள் ஒரு பெண்.

 

 

அவனுக்கு முன் குந்தவை பதில் கொடுத்தாள் அவளுக்கு “விக்கிரமன்… என்று.

 

 

“வாவ்… சூப்பர் சார்… விக்கிரமன் குந்தவை நல்ல பெயர் பொருத்தம்… அந்த விக்கிரமன் குந்தவை போல நீங்களும் காதல் தானா… அதான் இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம்… என்றார் உடன் பணிபுரியும் ஒருவர்.

 

 

“காதல் கல்யாணம் எல்லாம் இல்லை சார்… பெரியவங்க பார்த்து வைச்ச கல்யாணம் தான்… என்றவன் இயல்பாக அவர்களுடன் உரையாடுவது அவளுக்கு பொறாமையாக இருந்தது.

 

 

வெளியில் கேட்ட சலசலப்பில் ரவி அவனறையில் இருந்து எழுந்து வெளியே வந்தான். அவன் பார்வை அங்கு நின்றிருந்த குந்தவையின் மேல் அதிர்ச்சியாய் விழுந்து பின் அவளருகில் நின்றிருந்த ஆதியின் மேல் தொட்டு நின்றது.

 

 

“தேவி… என்ற அவனழைப்பில் அவர்களை சூழ்த்திருந்தோர் சட்டென்று கலைந்து அவரவர் இருக்கைக்கு சென்றனர்.

 

 

“சார்… என்றாள் அவள் பதிலுக்கு…

 

 

“கொஞ்சம் உள்ள வாங்க… என்றவனின் பார்வை இருவரையுமே கேள்வியாய்தொட்டு நின்றது.

“ஹாய் ஆதி… நீங்க எங்க இங்க….. என்று இழுத்தான் ரவி.

 

 

“என்னோட வைப் கொண்டு வந்து விடறதுக்காக வந்தேன் சார்… என்றான் இயல்பாய்.

 

 

“வைப்!!!???…” என்றவன் “உள்ள வாங்க பேசுவோம்… என்று உள்ளே செல்ல மற்ற இருவரும் அவனை தொடர்ந்து அவன் அறைக்கு சென்றனர்.

 

 

“சார் இவர் தான் என்னோட ஹஸ்பென்ட், போன வாரம் தான் எங்களுக்கு கல்யாணம் ஆச்சு… நீங்க ஊருக்கு போயிருந்ததால நான் சொல்ல முடியலை… சாந்தி மேடம்கிட்ட மட்டும் சொல்லிட்டு போனேன்…

 

 

“இங்க கூட யாருக்கும் தெரியாது… திடிர்னு ஏற்பாடு பண்ணிட்டாங்க… என்றாள் கோர்வையாக.

 

 

அவளை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தவன் ஆதியிடம் திரும்பி “அன்னைக்கு இவங்களை தெரியாதுன்னு சொன்னீங்க… கண்டதும் காதலா??? என்றான் கேள்வியாக.

 

 

“அதெல்லாம் இல்லை சார்… வீட்டில பார்த்து பிக்ஸ் பண்ண கல்யாணம் தான்… அன்னைக்கு எனக்கு இவளை தெரியாது… அதனால அப்படி சொன்னேன்… இன்னைக்கு என் பொண்டாட்டியை தெரியாதுன்னு சொல்ல முடியுமா சார்…

 

 

ரவி இயல்பாய் சிரிப்பது போல் காட்டிக் கொள்ள அவனிடம் ஏதோ தப்பாய் தோன்றியது ஆதிக்கு… அவர்களை பற்றி சாதாரணமாக அவன் விசாரித்திருக்கலாம் என்று தோன்றியது. ஏதோ பொறாமையாக பேசுவது போல் இருக்கிறதே…

 

 

இதுவரை ஒரு வாழ்த்தை கூட சொல்லியிருக்கவில்லையே… குந்தவையின் மீதான அவன் பார்வை ஆதிக்கு நெருடலாய் தோன்றியது. ஒருவேளை குந்தவையை விரும்பியிருப்பாரோ, அதனால் தான் பதட்டமாய் இருக்கிறாரோ…

 

 

அதனால் தான் குந்தவையை ஒரு மாதிரியாக பார்த்து வைக்கிறாரோ என்று எண்ணினான் ஆதி. அவனுக்கும் அலுவலகத்துக்கு நேரமாகியதால் “குந்தவை நான் கிளம்பறேன், ஈவினிங் வந்து கூட்டிட்டு போறேன்… நீ போய் உன் வேலையை பார்க்க ஆரம்பி… ரொம்ப லேட் ஆகிடுச்சு…

கணவனின் குந்தவை என்ற அழைப்பில் அவள் சிலையென நின்றாள். பொதுவாகவே அவளுடைய பெயரை யாருமே சரியாக உச்சரித்ததில்லை.. வானவனுக்கு அவள் எப்போதும் மந்தி அல்லது குந்தி, வானதியோ அக்காவென்று அழைப்பாள்.

 

 

அவளின் தந்தையும் தாயும் மட்டுமே அவளுக்கு அவர்களிட்ட பெயரை திருத்தமாக உச்சரிப்பர். அவர்களும் அவளை செல்லமாக கண்ணம்மா, செல்லம்மா என்று பெரும்பாலான நேரங்களில் அழைப்பதால் அவளின் குந்தவை என்ற பெயரை யாருமே அவ்வளவாக தெளிவாக கூறியதில்லை.

 

 

யாராவது அவளை குந்தி என்று அழைத்தால் தயவு செய்து தேவி என்றே கூப்பிடுங்கள் என்று கூறிவிடுவாள். எந்தவித தடங்கலும் இல்லாமல் தெளிவாக அவள் பெயரை உச்சரித்தவனை விழிவிரிய பார்த்தாள்.

 

 

அவன் மீண்டும் “குந்தவை… என்றழைக்க தன் நினைவு மீண்டவளுக்கு அவன் அடுத்து பேசியது நினைவில் வர அவளுக்குமே சந்தோசமாய் இருக்க, ரவியை பார்த்து “சரி சார் நான் போய் வேலையை தொடங்குறேன்… என்றாள்.

 

 

பின் ஆதியிடம் திரும்பியவள் “நீங்க போயிட்டு வாங்க விக்ரம் நான் உங்களுக்காக காத்திட்டு இருப்பேன்… என்றாள்.

 

 

‘இதென்ன பேசுவது இவள் தானா… விக்ரம் என்று வேறு அழைத்து வைக்கிறாளே… எனக்காக காத்திருப்பாளாமே… இப்போது ஆதிக்கு மயக்கம் வராத குறை தான்.

 

 

“சரி குந்தவை நான் கிளம்பறேன்… என்று அவளிடம் விடைபெற்றவன் “கிளம்புறேன் சார்… என்று ரவியை பார்த்து கூற அப்போது தான் சுயஉணர்வு வந்தவன் போல் “சாரி ஆதி ஏதோ யோசனையில இருந்திட்டேன்…

 

 

“உங்க ரெண்டு பேருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்… என்றான் செயற்கையாக.

 

 

ஆதியும் குந்தவையும் வெளியே செல்லும் தருவாயில் ரவியை திரும்பி பார்த்த குந்தவை ஆதியிடம் “நீங்க ஆபீஸ் போனதும் எனக்கு ஒரு போன் போடுங்க விக்ரம்…என்றதில் உண்மையிலேயே ஆதிக்கு போதை ஏறியது.

 

 

ஆதி இப்போது டோடல் பிளாட் ஆகிவிட்டான். என்ன நடக்குது இங்க, ‘பேசுறது என் பொண்டாட்டி தானா… நான் கல்யாணத்துக்கு முன்ன பார்த்த அந்த ராட்சசி எங்கே மாயமா போனா… அன்பா எல்லாம் இவளுக்கு பேசக் கூட தெரியுமா…

 

 

‘ஆதி இது கூட நல்லா தான்டா இருக்கு… என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

 

 

அவள் இருக்கைக்கு சென்று வேலைகளை தொடங்கி அரைமணி நேரம் கூட சென்றிருக்காது ரவி மீண்டும் வெளியில் வந்தான். “தேவி அன்னைக்கு கொடுத்த பிரிண்ட் அவுட் எல்லாம் எனக்கு இன்னொரு காபி கொடுங்க… என்றுவிட்டு உள்ளே சென்று விட்டான்.

 

 

குந்தவைக்கு ஒன்று மட்டும் புரிந்தது ரவி தன்னிடம் பேசவே மீண்டும் அழைக்கிறான் என்பது. அவன் கேட்டபடி எடுத்துக் கொண்டு அவனறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

 

 

“உட்காரு தேவி… என்று அவன் இருக்கையை காட்ட அவளோ “சார் நீங்க கேட்டது என்று சொல்லி அந்த பேப்பர் எல்லாம் அவனிடம் கொடுத்தாள்.

 

 

“தேவி உனக்கு எதுவும் பிரச்சனையா?? உண்மையை சொல்லு…

 

 

“அப்படி எதுவும் இல்லையே சார்…

 

 

“அப்புறம் நீ ஏன் என்னைவிட்டு அவனை கல்யாணம் பண்ணே??

 

 

“சார்!!!… என்று அதிர்ச்சியாக பார்த்தாள் அவள். “இங்க பாருங்க சார்… எனக்கு எப்பவும் உங்க மேல காதல் இருக்கலை… அதை புரிஞ்சுக்கோங்க… தேவையில்லாதது எல்லாம் கற்பனை பண்ணி பேசாதீங்க…

 

 

“தேவி நீ பொய் சொல்ற, உன்னை அவன் ஏதோ மிரட்டி தான் கல்யாணம் பண்ணி இருக்கான்… எனக்கு தெரியும், நீ அவனை காலேஜ்ல அடிச்சதும் எனக்கு தெரியும்…

 

 

“உன்னை காமிச்சு அவன்கிட்ட கேட்டதுக்கு என்னமா அன்னைக்கு நடிச்சான் நீ யாருன்னே தெரியாதுன்னு… ஏதோ தப்பிருக்கு, சொல்லு தேவி…

 

 

இப்போது அதிர்ந்து நின்றது குந்தவையே ‘ஒருவேளை ஆதி இவன் சொன்னது போல் என் வீட்டினரை மிரட்டி என்னை கல்யாணம் செய்திருப்பானோ… என்று தோன்றிய எண்ணத்தை சட்டென்று அழித்தாள். ‘இவன் வேண்டுமென்றே நம்மை போட்டு வாங்குகிறான் என்று தோன்றியது.

 

 

“ஆமா தெரியாதுன்னு தான் சொன்னார், அதுல என்ன தப்பிருக்கு… யாராச்சும் இவ தான் என்னை அடிச்சவ எனக்கு ரொம்ப நல்லா தெரியும்ன்னு பெருமையா சொல்லிக்குவாங்களா…

 

 

“அவர் தெரியாதுன்னு சொன்னதுல எந்த தப்பும் எனக்கு தெரியலை… நீங்க தேவையில்லாம இந்த விஷயத்தை பெரிசு படுத்துறீங்கன்னு தோணுது… எல்லா விஷயமும் தெரிஞ்சும் இத்தனை நாளா தெரியாத மாதிரியே நீங்கஇருந்ததை என்னன்னு நான் நினைக்கிறது…

 

 

அவளின் கேள்விக்கு ஒரு நொடி அமைதியானவன் உடனேயே “தேவி இதை பத்தி நான் உன்கிட்ட முன்னமே பேச நினைச்சேன், ஆனா அதுக்கான சந்தர்ப்பங்கள் சரியா அமையலை… அதனால தான் என்னால சொல்ல முடியலை… ஆனாலும் நீ அவனை நம்புறது எனக்கு சரியா படலை…

 

 

“அவன் ஏதோ செஞ்சி தான் உன்னை கல்யாணம் பண்ணியிருக்கான் அது மட்டும் தெளிவா தெரியுது… எதுவா இருந்தாலும் சொல்லு தேவி, நான் உன்னை அதுல இருந்து மீட்கறேன்…

 

 

“சார் நீங்க தேவையில்லாம யோசிக்கறீங்க… உங்க இஷ்டத்துக்கு கற்பனை பண்ணாதீங்க சார்… இதுக்கு மேல என் கல்யாண விஷயத்தை பத்தி உங்ககிட்ட பேச எனக்கு இஷ்டமில்லை… நான் கிளம்பறேன்… என்று சொல்லிவிட்டு வெளியில் சென்று விட்டாள்.

 

 

ரவி வளைத்து வளைத்து கேட்டும் அவர்கள் இருவரின் வாழ்க்கை பற்றி வாயை விடாதவள் தன்னையறியாமலே இயல்பாக அதை ஒருவரிடம் சொல்லி பெரும் பிரச்சனையை ஏற்படுத்திக் கொள்ளப் போகிறாள் என்பதை அப்போது அவள் அறியாள்….

Advertisement