Advertisement

அத்தியாயம் – 1

 

 

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன்எந்தை இணையடி நீழலே

 

 

இளங்காலை பொழுது சன்னலின் வழியாக பின்புற தோட்டத்தில் இருந்து பறவைகளின் கீச்கீச்சென்ற சத்தம் அவள் காதில் தேனாய் ஒரு புறம் இசைக்க மறுபுறம் அவள் அன்னை பாடும் பன்னிரண்டாம் திருமுறை பாடல் அப்பர் பெருமானின் மாசில் வீணையும் வீணா கானமாய் காதில் ஒலித்தது.

 

 

இன்னும் சில நொடிகளில் காபியுடன் அன்னை அறைக்கு வருவார் என்று தெரிந்திருந்தும் சில்லென்று வீசிய காற்றின் சுகத்தில் அவள் மீண்டும் ஒரு சிறு தூக்கம் போடலானாள்.

 

 

ஏன் தான் குட்டித்தூக்கம் வந்ததோ என்று இன்னும் சற்று நேரத்தில் அவள் நினைக்கப் போவது அறியாமல் அவள் தூக்கம் அவளை எப்போதும் காணும் கனவுக்கு இழுத்துச் சென்றது….

 

 

முதல் நாள் சிறு பயத்துடனே கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தவளுக்குள் ‘கடவுளே எந்த பிரச்சனையும் இல்லாம இந்த மூணு வருஷமும் நல்ல படியா கடந்து போகணும் என்ற பிரார்த்தனையை முன் வைத்து உள்ளே சென்றாள்…..

அவள் உள்ளே நுழைந்து அவள் வகுப்பினை தேட ‘ச்சே அப்பாவை கூட்டி வந்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது. அவள் அங்குமிங்கும் தெரியாமல் அலைந்து கொண்டிருக்க அதை கவனித்துக் கொண்டிருந்தவன் போன்று ஒருவன் எழுந்து அருகில் வந்தான்.

 

 

“என்ன தேடறீங்க… எதையாச்சும் தொலைச்சுட்டீங்களா

 

 

“இல்லை பி.காம்… பர்ஸ்ட் இயர் கிளாஸ்ரூம் போகணும், எங்கன்னு தெரியலை… என்று முழிக்க அவனோ “தெரியலைன்னா யார்கிட்டயாச்சும் கேட்கணும்… அதைவிட்டு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி நீயே அங்கிட்டும் இங்கிட்டும் நடந்தா உன் கிளாஸ் வந்திருமா… என்று கடிந்தான்.

 

 

“யார்கிட்ட கேட்குறதுன்னு தெரியலை… அதான்… என்று அவள் இழுக்க “ஏன் நான் இங்க தானே உட்கார்ந்திருக்கேன்… அங்க எவ்வளோ பசங்க உட்கார்திருக்காங்க… இல்லை ஆபீஸ் ரூம் போய் யாரையாச்சும் கேட்டிருக்கலாம், இல்லை வாட்ச்மேனை கேட்டிருக்கலாம்…

 

 

அவன் பேச்சு அவளுக்கு கடுப்பாக இருக்க “சரி சார் மன்னிச்சுடுங்க… இப்போ சொல்லுங்க கிளாஸ் எங்க இருக்கு…

 

 

“என்னது சாரா??? இதுக்கே நான் பதில் சொல்ல கூடாது, புதுசாச்சேன்னு பேசாம விடறேன்… நேரா போய் செகண்ட் லெப்ட்ல போ… அப்படியே ஸ்டெப்ஸ் ஏறு… செகண்ட் ப்ளோர்ல செகண்ட் கிளாஸ் உன்னோடது…

 

 

“ரொம்ப தேங்க்ஸ் சார்… என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தவளுக்கு தெரியாது அவன் சொன்ன வழி தவறென்று…

 

 

அவள் அவன் சொன்னது போல் நேராய் சென்று இரண்டாவது வளைவில் திரும்பயத்தனித்த வேளை அவளருகில் புயல் போல் மற்றொருவன் வந்தான்.

 

 

வந்தவன் வந்த வேகத்தில் அவள் கையை பிடித்து இழுக்க அவள் அப்படியே அவன் மேல் சாய்ந்தாள். நொடியில் நடந்துவிட்ட நிகழ்வில் தடுமாறியவள் வந்த ஆத்திரத்தில் நிதானமிழந்தவளாய் பளாரென்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள்….

 

 

“முட்டாள் அறிவில்லை உனக்கு… ஈவ் டீசிங் பண்ணுறேன்னு பிரின்சிபால்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணுறேன் இரு… என்று அவனை பார்த்து முறைக்க ஆங்காங்கு நின்றிருந்த மாணவர்கள் நொடியில் அங்கு கூடிவிட்டனர்.

“என்னாச்சு சார்… என்று அவனை எல்லோரும் விசாரிக்க ‘என்னது சாரா… என்று மனதிற்குள் நினைத்தவள் ‘யாரா இருந்தா என்ன… என் கையை ஏன் பிடிக்கணும்…

 

 

‘அய்யோ ஒரு வேளை எனக்கு கிளாஸ் எடுக்கற லெக்சரரா இருந்தா என்ன செய்ய… யாரா இருந்தா என்ன செஞ்சது தப்பு அதான் அடிச்சேன்… இருந்தாலும் நீ பண்ணது தப்பு… என்று அவள் மனசாட்சி அன்னியனாய் அம்பியாய் மாறி மாறி பதில் கொடுக்க அமைதியாக நின்றிருந்தாள் அவள்.

 

 

அடிவாங்கியவனோ நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான். அவளருகில் வந்த பெண்ணொருத்தி “நீ எதுக்கு அவரை அடிச்ச என்றாள்…

 

 

“அவர் என்ன பண்ணார்ன்னு உங்களுக்கு தெரியாது…

 

 

“நான் எல்லாம் பார்த்திட்டு தான் இருந்தேன்… உன்னை காப்பாத்தினதுக்கு நல்ல மரியாதை காமிச்ச, எதுக்கு என்னன்னு கூட விசாரிக்காம கையை நீட்டுற… இதான் உங்க வீட்டில உனக்கு சொல்லி கொடுத்தாங்களா…

 

 

“போதும் எங்க வீட்டை பத்தி பேச நீங்க யாருங்க… எங்களுக்கு எல்லாம் தெரியும் நீங்க உங்க வேலையை பாருங்க… என்று சொல்லி அவள் நகர போக “ஓ!! தாராளமா அந்த பக்கமே போ… போ நல்லா அந்த மறைஞ்சு இருக்கற குழில விழு…

 

 

“என்னது குழியா???

 

 

“ஆமா குழியே தான் அங்க பாரு என்றவள் அந்த குழியின் அருகில் அவளை கூட்டி சென்று காட்டினாள். “பாரு… எல்லாம் அந்த பைனல் இயர் படிக்கிற பசங்க பண்ணுற வேலை… திமிர் பிடிச்சதுங்க… என்று முனகினாள் அப்பெண்.

 

 

“என்ன சொல்றீங்க… எனக்கு புரியலை…

 

 

“உனக்கு எப்படி புரியும்… அதான் எங்க சாரை கையை நீட்டி அடிச்சிட்டியே…

 

 

“அய்யோ… தப்பு பண்ணிட்டேனே… என்று அவள் முனக “தப்பு பண்ணது நீ மட்டும் இல்லை… உனக்கு வழி காட்டினானே அவனையும் சேர்த்து தான் சொல்லணும்…

 

“அய்யோ பாவம் அவரை ஏன் கோவிக்கறீங்க… அவர் ஏதோ தெரியாம சொல்லியிருப்பாரு…

 

 

“தெரியாம எல்லாம் சொல்லலை தெரிஞ்சே தான் சொன்னான்… நான் சொன்ன பைனல் இயர் அருந்த வாலு அவனும் அவன் கும்பலும் தான்… என்று சொல்ல அவளுக்கு ஆத்திரம் தலைக்கேறியது…

 

 

‘ச்சே… இது புரியாமல் ஒரு பேராசிரியரை போய் கை நீட்டி அடித்து விட்டோமே… என்று குற்ற உணர்ச்சி எழ ஆரம்பித்தது அவளுக்கு…

 

 

‘அந்த வழி காமிச்சவனை சும்மா விடக்கூடாது என்று எண்ணியவள் அருகிலிருந்த அப்பெண்ணிடம் வகுப்புக்கு செல்லும் வழி கேட்டு நடக்க முதலில் அவளுக்கு வழிகாட்டியவன் அவளை கடந்து சென்றான்.

 

 

அவனோ அவன் நண்பர்களுடன் கும்மாளமிட்டுக் கொண்டு குதூகலமாக வந்துக் கொண்டிருக்க “ஒரு நிமிடம் என்று நிறுத்தியவளை திரும்பி பார்த்தவன் “என்ன நீ இன்னும் கிளாஸ்க்கு போகலையா… என்று அவன் கேட்க அவன் கும்பல் ஓவென்று கத்தியது கோரஸாக.

 

 

அவளோ பதிலேதும் சொல்லாமல் பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்துவிட்டு விடுவிடுவென அவள் வகுப்புக்கு சென்று விட்டாள்… அன்று மாலை, காலையில் சந்தித்த அந்த பெண்ணை மீண்டும் சந்திக்க அவள் சொன்ன சேதி அவள் மனதை அறுத்தது….

 

 

அந்த பேராசிரியர் வேலையை விட்டு கல்லூரியை விட்டே சென்று விட்டார் என்று கூறிவிட்டு அவள் சென்றுவிட்டாள்… அன்றிலிருந்து இன்று வரை அந்த நினைவு அவளுக்கு கனவாய் வந்து உறுத்த ஆரம்பித்தது.

 

 

அவள் அன்னை வந்து எழுப்பும் முன்னே அவள் பதறிக் கொண்டு எழுந்தாள்… யோசனையுடன் எழுந்து குளித்து அவள் வெளியே வரவும் அவள் அன்னை  அவளுக்கு காபியை கொடுக்க கடனே என்று அதை வாங்கிக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.

 

 

“என்ன மந்தி என்ன யோசனை உனக்கு… என்ன வழக்கமா வர்ற அந்த நினைப்பா என்றவாறே அதே சோபாவில் அவளருகே அமர்ந்தான் அவளின் தம்பி வானவன்…

 

 

“டேய் மந்தின்னு கூப்பிடாதேன்னு உன்னை எத்தனை முறை சொல்லியிருக்கேன்… ஏன்டா எருமை என்னை அப்படி கூப்பிடுற… என்று முறைத்தாள் அவள்.

 

 

“உனக்கு அப்பா அப்படி பேரு தானே வைச்சிருக்காரு… அதான் அப்படி கூப்பிட்டேன்…

 

 

“அப்பா எனக்கு எவ்வளவு அழகா குந்தவை தேவின்னு பேரு வைச்சிருக்கார்… மந்தின்னா வைச்சிருக்கார்…

 

 

“உன்னை குந்தின்னு கூப்பிடுறதை விட மந்தின்னு கூப்பிடுறது எனக்கு பிடிச்சிருக்கு அதான்… ஆமா நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலை…

 

 

“ஆமாடா அதே கனவு தான்…

 

 

“நான் ஒண்ணு சொல்லவா… உன்னோட எண்ணம் முழுக்க தப்பு பண்ணிட்டோம்ன்னு உறுத்திட்டே இருக்கு… ஒருவேளை அவர்கிட்ட மன்னிப்பு கேட்டிருந்தா உறுத்தல் இல்லாம போயிருக்குமோ என்னவோ…

 

 

“அதனால தான் அந்த எண்ணங்கள் உன்னை சுத்தி சுத்தி வந்து உனக்குள்ள கனவா வந்து உன்னை மறக்க விடாம செய்யுது… முன்ன விட இப்போலாம் உனக்கு அந்த கனவு அடிக்கடி வருது… எனக்கென்னமோ நீ அந்த ஆளை சீக்கிரமே பார்ப்பேன்னு தோணுது…

 

 

“நிஜமாவாடா சொல்ற… என்று ஆர்வத்துடன் கேட்டாள் குந்தவை…

 

 

“நிஜமா தான் சொல்றேன் குந்தி… உதாரணத்துக்கு நமக்கு ஒரு விஷயம் தோணும் இன்னைக்கு இவரை பார்க்கணும் அப்படின்னு… எதிர்பாராம அவரை நாம அன்னைக்கு பார்ப்போம்… அது போல தான் இதுவும்…

 

 

“டேய் ஆராய்ச்சி உன்னோட ஆராய்ச்சி எல்லாம் உன்னோட காலேஜோட நிறுத்திக்க, சும்மா வந்து அக்காவை பயமுறுத்திகிட்டு போடா… என்று வந்தாள் வானவனுக்கு அடுத்தவள் வானதி…

 

 

வானவன் மருத்துவ கல்லூரி மாணவன் எம்பிபிஎஸ் கடைசி வருடத்தில் இருந்தவனுக்கு மனோதத்துவ டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்ததில் படிக்கும் போதே அது சம்மந்தமான புத்தகங்களை வாங்கி படித்தான்.

அதன் தாக்கமே அவன் குந்தவைக்கு சொல்லிக் கொண்டிருந்தது. வானதியும் பிஎஸ்சி(ஐடி) கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தாள். குந்தவைக்கும் வானவனுக்கும் ஒரு வருட இடைவெளி மட்டுமே, வானதிக்கும் வானவனுக்கும் இரண்டு வருட இடைவெளி.

 

 

குந்தவை பிகாம் முடித்துவிட்டு அரசாங்க உத்தியோகத்திற்காக முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்… கல்லூரி முடித்ததும் அவள் தந்தைக்கு தெரிந்த அலுவலகத்திலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தற்போது தான் அரசாங்க வேலைக்கான நியமன உத்திரவு வந்திருந்தது.

 

 

அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து அவள் புது வேலையில் சேர வேண்டும். தற்போது பார்த்துக் கொண்டிருந்த வேலை இன்றோடு கடைசி நாள் என்பதால் அன்னை உணவருந்த அழைத்தவுடன் எழுந்து சென்றவளின் பின்னே மற்ற இருவரும் உடன் சென்றனர்.

 

 

“ஹேய் வானரமே மந்திகிட்ட பேசினா நீ எதுக்கு இடையில வர்ற… நான் உண்மையை தான் சொன்னேன்… நீ வேணும்னா பாரு இந்த கனவு வர்றது இவளுக்கு இனி குறைஞ்சு போகும்…

 

 

“ஏன்னா அந்த கனவு வர காரணமானவனை இவ கண்டிப்பா பார்ப்பா… என்று ஆருடக்காரன் போல் கூறினான்…

 

 

“டேய் அண்ணா… வானரம் கீனரம்ன்னு கூப்பிட்ட அப்புறம் நானும் சும்மா இருக்க மாட்டேன்… அக்கா நீ இவன் சொல்றதை நம்பாதேக்கா… இவனை நம்பி எப்படி தான் நோயாளிங்க வந்து ஊசி போட்டுக்க போறாங்களோ…

 

 

“இப்படி பயமுறுத்தியே சாகடிச்சுடுவான் போல… என்று மிக மரியாதையாக கூற “சொன்னாலும் சொல்லலைன்னாலும் நீ வானரம் தான்டி வானதி… வானரம் வானதி… எப்படி ரைமிங்கா வருதுல…

 

 

“ஆமாடா வாமணன் வானவன்… என்று சொல்லி அவள் அவனுக்கு பழிப்பு காட்டினாள்…

 

 

“அய்யோ… நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் உங்க வாயை மூடுறீங்களா… உங்கப்பா ஊர்ல இல்லைன்னா உங்க சத்தம் இந்த தெருக்கோடி வரை கேட்குமே… அவளும் தான் இருக்கா… உங்களை மாதிரியா சத்தம் போட்டுட்டு இருக்கா… என்று திட்டிக் கொண்டே டிபனை பரிமாறினார் அந்த மக்களை பெற்ற மகராசி மணிமேகலை.

 

“வாயை மூடிட்டு சாப்பிட்டு பேசாம எழுந்து போங்க… காலையில நேரத்துல சும்மா கத்திட்டு இருந்தீங்க… அப்புறம் உங்களுக்கு மதிய சாப்பாடு கிடையாது…

 

 

“டேய் அண்ணா இன்னைக்கு நாம எஸ்கேப்டா, அம்மா சாப்பாட்டுல இருந்து விடுதலை… விடுதலை… விடுதலை…

 

 

“அம்மா நிஜமாவாம்மா சொல்ற… சூப்பரும்மா… இன்னைக்கு தான் நீ எங்களுக்கு நல்லது சொல்லியிருக்க… வானதி வா நம்ம கச்சேரியை ஆரம்பிப்போம்… என்று மீண்டும் அவர்கள் தொடர மணிமேகலை இருவரையும் முறைத்தார்…

 

 

“சாப்பாடும் கிடையாது உங்கப்பா கொடுக்க சொன்ன பாக்கெட் மணியும் கிடையாது… அப்புறம் எப்படி நீங்க கான்டீன்ல போய் சாப்பிடுவீங்கன்னு பார்க்கறேன்… என்று சொல்லிவிட்டு அவர் சமையலறை செல்ல அவரின் செல்ல கண்மணிகள் பின்னோடு சென்றனர் சமாதானம் செய்ய.

 

 

எப்போதும் தம்பி தங்கை செய்யும் குறும்பை ரசிப்பவள் இன்றோ வானவன் சொன்னதையே மனதிற்குள் நினைத்துக் கொண்டு அந்த நாள் என்று வரும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

 

அவளின் யோசனையை தள்ளிவைத்து விட்டு அவள் அன்னையிடம் விடைபெற்று அலுவலகம் கிளம்பிச் சென்றாள்…

 

____________________

 

 

ஆதி& ஜோதி அசோசியேட்ஸ் என்ற பெயர் பலகையை வாசலில் மாட்டிக் கொண்டிருக்க திருப்தியுடன் அதை ஒருமுறை பார்த்துக் கொண்டான் ஆதித்யா…

 

 

ஜோதியும் உள்ளிருந்து வந்தவன் ஆதியின் பார்வையை பார்த்துவிட்டு அங்கேயே நின்றான். “என்னடா போர்டையே பார்த்திட்டு இருக்க… என்றான்.

 

 

“இல்லை ஜோ… இது நம்மோட கனவில்லையா… அது பலிச்சதுல ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா… நம்பவே முடியலைடா… நாம CA முடிச்சு இப்படி தனியா நமக்கே நமக்குன்னு ஒரு ஆபீஸ் வைக்கணும்ன்னு எவ்வளோ நாளா ஆசைப்பட்டோம்… அது நிறைவேறிய சந்தோசம்டா…

 

 

“நம்ம குரு நாராயணன் சாருக்கு தான் நன்றி சொல்லணும்… எப்படியோ அவர் கைடன்ஸ்ல படிச்சு பாஸாகி விழுந்து எழுந்து வாழ ஆரம்பிச்சிருக்கோம்… என்றவனின் கண்களில் சாதிக்க வேண்டும் என்ற ஒளி தெரிந்தது.

 

 

ஜோதிஷ் ஆதியின் நெருங்கிய நண்பன் கல்லூரி காலத்தில் இருந்தே உற்ற நண்பனாய் இருப்பவன்… ஆதியை விட வசதியில் உயர்ந்தவனாய் இருந்தாலும் ஒரு நாளும் தன்னை பெரியவனாய் அவன் காட்டிக் கொண்டதில்லை…

 

 

ஜோதிஷின் தந்தை கிரானைட் நிறுவனம் வைத்திருக்க அவன் தாய் வீட்டை கவனித்துக் கொண்டார்… அவன் வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் தந்தையின் பணியை அவனை ஏற்றுக் கொள்ள சொல்ல அவனோ ஆதியின் உடன் சேர்ந்து CA முடித்தான்…

 

 

ஆதி வீட்டில் அவனும் அவன் தங்கை அர்ஷிதாவும் மட்டுமே… சிறுவயதில் தந்தையை இழந்தவன் சில மாதத்திற்கு முன் உடல் நலம் குன்றி அவன் தாயும் இறந்து போயிருந்தார்…

 

 

தாய் உயிருடன் இருந்தவரை விளையாட்டாய் சிறகடித்துக் கொண்டிருந்தவனுக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது அவனின் தாய்மாமன் தான்.

 

 

தங்கையின் கணவன் இறந்ததும் அவர்கள் சொத்தை சரியான முறையில் பாதுகாத்து அதன் வருமானம் தங்கைக்கு மாதாமாதம் கிடைக்க செய்திருந்தார் அவர்.

 

 

அவர் அதிகம் பேசியதில்லை என்றாலும் அவர் ஒன்று சொன்னால் அதை மறுக்கவே முடியாது. அவன் கல்லூரி படிக்கும் போதே அவன் அக்கௌண்டசி படிப்பில் எடுத்திருந்த மார்க்கை கண்டுவிட்டிருந்தவர் அவனை படிக்கும் போதே CA சேர சொன்னார்.

 

 

மாமனின் சொல் பேச்சின் படி சேர்ந்திருந்தாலும் அவனுக்கும் அதில் ஆர்வம் வந்திருக்க இதோ இன்று இப்படி தங்களுக்காய் ஒரு அலுவலகம் அவர்கள் கண்முன்னே, கண்ணில் நீர் பணித்தது அவனுக்கு.

 

 

தாயை இழந்த பின்னே அவனை அழைத்து தங்கைக்கு தாயாயும் தந்தையாயும் இருக்கச் சொன்னவர் அவனை பொறுப்புடன் நடந்துக் கொள்ளுமாறு கூற அன்றிலிருந்து அவன் விளையாட்டு தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்தான்.

 

மறுநாள் அவர்கள் அலுவலகம் திறக்க நல்ல நாள் என்பதால் எல்லாம் தயார் செய்துக் கொண்டிருந்தார்கள். ஆதியின் கனவு நாளும் விடிந்தது, ஆதியின் தங்கை அர்ஷிதா அவனின் தாய் மாமன் குடும்பத்தினர் ஜோதிஷின் குடும்பத்தினர் எல்லோரும் வந்திருக்க விழா நிறைந்திருந்தது.

 

 

அவன் தங்கையும் ஜோதிஷின் அன்னையும் குத்து விளக்கை ஏற்றி வைக்க ஆதியின் மாமா ராஜராஜன் பூஜையை செய்தார். ஜோதிஷின் தந்தை முதல் படியாக அவர்களின் அலுவலக கணக்குகளை அவர்களிடம் ஒப்படைக்க சந்தோசத்துடன் இருவரும் அதை பெற்றுக் கொண்டனர்.

 

 

வந்தவர்கள் எல்லோரும் விடைபெற்று கிளம்பிச் சென்றுவிட ஆதியும் ஜோதியும் மட்டுமே அங்கிருந்தனர். “என்னடா இப்போ உனக்கு சந்தோசம் தானே… என்றான் ஜோதி.

 

 

“பின்ன சந்தோசம் இல்லாமலா இதே சந்தோசத்தோட நான் நினைச்ச அந்த இன்னொன்னும் நடக்கணும்டா… அப்போ தான் எனக்கு முழு சந்தோசமே… என்றவனின் முகம் வேறு பாவனைக்கு மாறியது.

 

 

“டேய்… நீ இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கியாடா… அதையெல்லாம் எப்போடா மறப்ப…

 

 

“மறந்தா தானேடா… மறக்கவே முடியலைடா…  தூங்கினாலும் என் கண்ணு முன்னாடி அது மட்டும் தான் வருதுடா…

 

 

“டேய் அதெல்லாம் வேணாம்டா… பாவம் விட்டுடு… உன்னோட எண்ணத்துக்கு அவங்களை பலிகடா ஆக்கிடாதே…

 

 

“ஜோ… நீ என்னை என்ன வேணும்னாலும் சொல்லு கேட்கிறேன்… ஆனா இந்த விஷயத்துல நான் அப்படி இருக்க மாட்டேன்… அதை நினைச்சா எனக்கு கொலைவெறி வருதுடா… ஆனா என்று நிறுத்தியவன் மீண்டும் தொடர்ந்தான்.

 

 

“என்னையே அடிச்சிட்டாளேடா… நான் என்னடா தப்பு செஞ்சேன்… இதுக்கெல்லாமா ஒருத்தி ஒருத்தனை அடிப்பா… தாங்க முடியலைடா ஜோ…அவமானமா இருக்கு…

 

 

“அவ என் கண்ணுல பட்டா அப்புறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லைடா ஜோ… என்றவனை பார்க்க ஜோவிற்கு கவலையாக இருந்தது. “ஆதி ப்ளீஸ்டா நடந்ததை மறந்திடுடா… அர்ஷிதா பத்தி மட்டும் நினைடா…

“அர்ஷிதாவை மட்டும் தான்டா நினைச்சுட்டு இருக்கேன்… அவளுக்கு ஒரு நல்லது செஞ்சி அவளை ஒருத்தன் கையில ஒப்படைச்சுட்டேன்னுவை அப்புறம் எதை பத்தியும் யோசிக்க மாட்டேன்… என்றவனை மீண்டும் கவலையாக பார்த்தான் ஜோ…

 

____________________

 

 

ரவிச்சந்திரன் இருபத்தி ஒன்பது வயது நிறைந்தவன் சிறு வயதிலேயே தன் திறமை கொண்டு முன்னேறியிருந்தவன் வருமான வரித்துறை அலுவலகத்தில் உதவி கமிஷனராக பதவி வகிப்பவன்.

 

 

இன்னமும் திருமணமாகமல் இருக்கும் அவனுக்கு அவன் அலுவலகத்தில் திருமணமாகாமல் இருக்கும் பெண் ஊழியர்கள் பலவிதமாக கொக்கி போட்டு பார்க்க எவருக்கும் சிக்காமல் போக்கு காட்டிக் கொண்டிருப்பவன்.

 

 

அவன் மட்டுமே சென்னையில் தனித்து வசிக்கிறான், இது மட்டுமே எல்லோராலும் அறியப்பட்ட தகவல், மற்றப்படி அவனை பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை…

 

 

வழக்கம் போலே அன்று அவன் அலுவலகம் செல்ல அவன் அறைக்கதவை யாரோ மெல்லியதாக தட்ட உள்ளே வருமாறு கூறிவிட்டு கையிலிருந்த ஒரு கோப்பில் கவனத்தை வைத்தவன் பென்சிலால் அதில் எதையோ வட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

 

 

“எக்ஸ்க்யூஸ் மீ சார்… என்ற மென்குரலில் கலைந்தவன் நிமிர்ந்து எதிரில் இருந்தவளை ஏறிட்டு பார்க்க இப்போது அதிர்வது அவளின் முறையானது.

 

 

‘இது அவர்… அவர் தானே…அய்யோ கடவுளே இது என்ன எனக்கு மறுபடியும் சோதனையா… ஆனா வானு சொன்ன மாதிரியே நடந்திடுச்சே… என்று அவள் விழிவிரிய நின்றுக் கொண்டிருந்தாள்.

 

 

“ஹலோ மேடம்… யார் நீங்க?? என்ன வேணும் உங்களுக்கு?? என்றான்.

 

 

“சார் நான் என்னை உங்களுக்கு தெரியலையா?? அன்னைக்கு காலேஜ்ல நீங்க எனக்கு இல்லை நான் உங்களை… என்று திக்கினாள்.

 

 

“ஹலோ என்ன வேணும் உனக்கு, நான் ஒண்ணு கேட்டா நீ ஒண்ணு உளறிட்டு இருக்க… வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்பு…

 

“என்னமோ ஆம்பிளையை பார்க்காத மாதிரி ஆன்னு பார்த்திட்டு இருக்கே… என்று வெளிப்படையாக அவன் சலிக்க அவளுக்கு அவமானமாக இருந்தது.

 

 

ஒரு வகையில் இந்த நிலைக்கு அவள் தானே காரணம், அதனால் அவள் பழைய எண்ணங்களை மூட்டைக் கட்டி விட்டு “சாரி சார்… ஆனா நான் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை சார்…

 

 

“நான் என்ன நினைச்சேன்னு உன்னை கேட்டேனா… என்றவனை பார்த்து அவள் எதுவும் பேச முடியாமல் அமைதியானாள்.

 

 

“என்ன வந்த வேலை என்னன்னு சொல்லப் போறீங்களா… இல்லையா… எனக்கு வேலை இருக்கு தயவு செய்து வெளிய போங்க… என்றுவிட்டு குனிந்து கொண்டான் அவன்…

 

 

“சார்… நான் குந்தவை… குந்தவை தேவி இங்க புதுசா சேர்ந்திருக்கேன்… என்றவள் அவள் வேலைக்கான நியமன கடிதத்தை அவனிடம் நீட்டினாள்.

 

 

நிமிர்ந்து அவளை ஒரு மாதிரியாக பார்த்தவன் “இதை வந்தவுடனே சொல்றதுக்கென்ன என்று கடிந்துவிட்டு இன்டர்காமில் யாருக்கோ அழைத்து விட்டு போனை வைக்க ஒரு பெண் உள்ளே வந்தாள்.

 

 

“கல்பனா இவங்க குந்தி தேவி… புதுசா ஜாயின் பண்ணியிருக்காங்க… பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சுட்டு வேலை என்னன்னு சொல்லிடுங்க… என்றுவிட்டு அவளை பார்த்து நீ போகலாம் என்பது போல் தலையசைத்தான்.

 

 

“சார் ஒரு நிமிஷம் என்று அவள் கூற என்ன என்பது போல் அவளை பார்த்தான். “என் பேரு குந்தி தேவி இல்லை சார்… குந்தவை தேவி… என்றவள் “நன்றி சார்… என்றுவிட்டு கல்பனாவுடன் நடந்தாள்.

 

 

அவள் சென்றதும் ரவிச்சந்திரன் நிமிர்ந்து அவள் வெளியே செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தான். பலநாள் கனவு பலித்தது போல் இருந்தது அவனுக்கு… உதட்டில் ஒரு வெற்றி புன்னகையை தவழவிட்டவன் உல்லாசமாக சீட்டி அடித்துக் கொண்டான்.

 

 

ஒரு ஞாயிறு அவளை நிந்தித்துக் கொண்டிருக்க மற்றொரு ஞாயிறு அவளை நினைத்துக் கொண்டிருக்க இனி குந்தவையின் பாடு…

 

 

ஞாயிறு – ஆதித்யா& ரவி

பாலையாய் இருந்த

என் நெஞ்சில்

சாரலாய்

உன் நினைவுகள்

கொடுத்தாய்…

 

கானலே உன்னை

காணாமல் போவேனோ

கனவாகி போகுமோ

உன் நினைவுகள்

என்றிருந்தேன்…

 

என் நெஞ்சில்

பாலை ஊற்றி

சோலையாய் மாற்றி

பூக்கள் பூக்க செய்தது

உன் நினைவுகள் மட்டுமல்ல

உன் விழிகளின் அசைவும் தான்…

 

Advertisement