அலை 25

                      நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா

                      நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா

                     அன்பே அன்பே எந்தன் அன்பே

                     வாழும் ஜீவன் நீ தான் அன்பே

                     துணை நீயே அன்பே

              தாமரையின் முன் முழங்கால்கள் மடக்கி அமர்ந்தவன் , “ஃபோன்லயும் பேச மாட்ட.. லெட்டரும் எழுதி அனுப்ப மாட்ட… உன் கண்கள் மட்டும் தான் பேசும் .. இருக்கிற கொஞ்ச நேரத்துல அதையும் மறைச்சுக்கிட்டா எப்படி.. என்னைய பார்..” என்றவன் அவள் வலது கரம் பிடித்தான். உடல் சிலிர்த்து மெல்ல முகம் நிமிர்த்தியவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் ,

சிறிய தாமரைப் பூ வடிவிலான மோதிரம் ஒன்றை அணிவித்துக் கொண்டே,

” உனக்காக மட்டும் தான் காலையில கிளம்பி வந்தேன். இப்ப உடனே கிளம்பணும் .. நீ அழுதா எனக்கு கிளம்ப மனசே வராது.. நாம நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்க காலம் இன்னும் இருக்கின்ற நம்பிக்கைல தான் நான் இப்ப கிளம்பறேன்… உன்கிட்ட ஏற்கனவே சொன்னது தான்..  மனசளவுல  எப்பவோ நமக்கு கல்யாணம் ஆகிருச்சுனு நம்பறேன்… அதற்கான சின்ன அடையாளம்தான் இது.” என்றவன், அவள் விழிகளைப் பார்த்துக் கொண்டே ,

“அடுத்து ட்ரைனிங் முடிஞ்சதும் தான் நான் வருவேன். அதற்கப்புறம் எப்படினு தெரியல…” எனவும் மீண்டும் தாமரைக்கு அழுகை வரப் பார்க்க , கண்களை நன்கு விரித்து உள்ளிழுத்துக் கொண்டாள்.

அவன் அறியாமல் இருப்பானா… பிடித்திருந்த பிஞ்சு விரல்களுக்கும் ,அந்த கண்களுக்கு முத்தம் கொடுக்கும் ஆவல் எழுந்தது. இப்போது முடியாது என்பதும் தெரியும்…  ஆனாலும் கிளம்ப வேண்டுமே … “உனக்கு நிறையத் தரணும் போல இருக்கு.. ஆனா ” என்றவன் எழுந்துக் கொண்டான். கூடவே எழுந்து நின்றவளிடம் தொண்டை கரகரக்க…

“நல்லா படி.. இப்ப உனக்கு ஒரு குட்டி ஃபிரண்ட் கிடைச்சுருக்காங்க.. அவங்களோட நேரத்தை செலவளி… “என்றதும் அண்ணன் மகன் நினைவில் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது..அதில் மயங்கியவன் ,

“நீ நிறைய அர்த்தத்துல ஆதவ் பையனுக்கு அந்த பெயரை வச்சுருந்துருக்கலாம்.. எனக்கு தோணினது ஒன்னு தான்.. அது என்னனா அந்த சூரியனப் பார்த்து தாமரை அழகா மலருதோ என்னவோ..தாமரையைப் பார்த்து தான் இந்த விஜயிற்கு ஆனந்தமே… ” என்றதும் முகம் அழகாக சிவந்து விட்டது தாமரைக்கு.

” கொடுத்துட்டுத்தான் கிளம்புவேன் போல.. ” என மென்மையாக உரைக்கவும் , தாமரைக்கு அவனது கொடுக்க என்ற வார்த்தையில் , தான் அவனுக்காக கொண்டு வந்த பை நியாபகம் வரவும் ,  அதனை வேகமாக எடுத்தவள் , அதனுள்ளிருந்து ஒரு புதிய டீ ஷர்டையும் எடுத்துக் கொடுத்தாள்.

பெயர் சூட்டும் விழாவுக்கு புது துணிகள் எடுக்கையில் ஆதவனுக்கு வாங்கிய ஒன்றில் விஜயிற்காக எடுத்து வைத்திருந்தாள்..

மகிழ்ந்து அதை வாங்கிக் கொண்டவனையே ஆவலோடுப் பார்க்க, அவள் எண்ணம் புரிந்து , தான் அணிந்திருந்த டீ ஷர்டை கழற்ற முனைந்தவன் முன் நிற்க நாணி… திரும்பிக் கொண்டாள். மாற்றிக் கொண்டவன் ,

“எப்படி இருக்கு…” என்ற குரலில் திரும்பிப் பார்த்தவளிடம் , “கிளம்புறேன்.” என்றவன் கையில் வைத்திருந்த டீ ஷர்ட்டை வேகமாகப் பிடித்துக் கொண்டவளின் அன்பில் கலங்கிப் போனவன் , அடுத்த நொடி தாமரையை இறுக்கமாக அணைத்தவன் , அவள் முகம் முழுவதும் முத்தங்கள் பதித்து விடுவித்து விட்டு பைகளை எடுத்துக் கொண்டு மாடிப்படிகளில் இறங்கி விட்டான்.

கூவி வரும் புதுக் குயிலின் குரல் வழியே ஒரு துயரம்

பாடி வரும் மொழிதனிலே பாதியிலே ஒரு சலனம்

ஓடும் நதி நீரில் மலர் பூப்பதில்லை

உண்மை இதை கண்டும் மனம் கேட்பதில்லை

அணைப்பும் முத்தங்களும் உடலை ஏதோ செய்ய .. விதிர்விதிர்த்து அப்படியே நின்றவள் , அடுத்த நொடி அவன் போய் விட்டான் என்பதை அறிந்து மாடிச் சுவற்றோரம் அவனது டீ ஷர்ட்டை நெஞ்சோடு அணைத்துக் கொண்டே அவன் கீழிறங்கி அவனது புல்லட்டை எடுத்துக் கொண்டு அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பியதைப் பார்த்தவள் அழுதுக் கொண்டே நின்றிருந்தாள்.

காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்கும்

கையோடு கையென்று சேர்ந்திருக்கும்

வாடாதே வாடாதே வாசம் இந்த பூவைத் தேடும்…

விஜய் ஆனந்த் கிளம்பி விட்டான். அப்போதுதான் வீட்டில் எதையோ எடுக்க வந்த பாக்யம் விஜய் வெளி மாடிப்படிகள் வழியாக கீழே வருவதை கவனித்தவள், அவன் திரும்பி மேலேப் பார்க்கும் போது தான் தாமரை அழுதுக் கொண்டு நின்றிருப்பதைக் கவனித்தாள்.

தாமரையை விட ஒரு வயது தான் பெரியவள் பாக்யம் ,விஜய் ஆனந்த் குடும்பமும் சரி ஆதவன் குடும்பமும் சரி அவளுக்கு தூரத்து உறவினர்களே.. எந்த காலத்திலும் காசு இருந்தால் மட்டுமே அவர்கள் உறவுகள் என்பதையே சொல்லக் கூடிய காலம் .. வறுமையான குடும்பம் கூடவே படிப்பறிவும் கிடையாது. இப்படி தாமரையையும் விஜயையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதே தவறு… அப்படியே தான் நினைப்பது உண்மையாக இருந்தால் கூட வெளியில் சொல்லக் கூட முடியாத நிலைதான். எனவே பாக்யம் அதனை அப்படியே கடந்துப் போய் விட்டாள்.

உறவினர்கள் அனைவரையும் வழியனுப்பிய ஆதவன் குடும்பத்தினர் இரவு பதினொரு மணி போல் தான் வீட்டுக்குள் வந்தனர். அதற்கு முன்னமே தில்லை தாமரையைத் தேடியிருக்க பாக்யம் தான் தாமரை வீட்டிலிருப்பதை தெரிவித்து இருந்தாள். எனவே சாவகாசமாக ஆதவன் தம்பதியருக்கு திருஷ்டிக் கழித்து வீட்டுக்குள் அழைத்து வந்தார் தேவகி .

தாமரை புடவையைக் கூட மாற்றாமல் அப்படியே உறங்கியிருந்தாள்.தில்லை அவளின் முதுகுப் புறம்பார்த்ததால் தாமரையின் முகத்தில் கண்ணீர் சுவடுகளைப் பார்க்கவில்லை. குழந்தையைத் தூக்கிக் கொண்டு தங்களது அறைக்குச் சென்றவள் பின்னோடு வந்த தேவகி ,

 “பார்த்தியா பாப்பா அந்த புள்ளைக்கும் என் பையன் மேல ஆசையிருக்கப் போய் தான் இந்த பெயரை வச்சுருக்கா.. ஆனா இப்ப கல்யாணத்த பத்தியே பேசக்கூடாதுனு மருமவன் சொல்லிட்டாப்புல… அதேன் வாய மூடிட்டு இருக்கேன்… இல்ல பேரனுக்கு பெயர் வைக்கும்போதே கல்யாணத்த முடிக்கலாம்னு இருந்தேன்… ” என்றவருக்கு தில்லை எந்த பதிலும் சொல்லவில்லை.

ஆதவன் சொன்னது போல் தாமரை படிப்பை முடிக்கும் வரை திருமண பேச்சை தள்ளி வைக்கலாம் தான் … ஆனால் தாமரை மனதிலும் ஆசை வந்து , அது தன்னைப்போல் அவளது படிப்புக் கெடக் காரணமாகிடக்கூடாது என எண்ணினாள். எனவே தேவகியிடமும் ,

“ம்மா உங்க மருமகன் சொல்றத கேளுங்க… நேரம் வரும் போது அது பத்திப் பேசிக்கலாம்.. அந்த நேரமும் இன்னும் நாலு வருஷம் தாமரை படிப்ப முடிக்கிறப்ப தான் வரும்… அதுவரையிலும் அவ முன்னாடி கல்யாணப் பேச்சையே பேசிராதீங்க… ” என்று விட்டாள்.

எதற்கும் தாமரையிடம் குழந்தையின் பெயர் காரணம் கேட்க…, “தாத்தா பெயர் இந்திர மூர்த்தி .அண்ணன் பெயர் ஆதவ மூர்த்தி .. அப்புறம் உன் பேரு அத்தை , அத்தான் எல்லாருடைய பெயர் இங்கிலீஷ் வெட்டர்ஸ் வர ஆசைப்பட்டு வச்சேன்… அதோட …” என்றவளுக்கு விஜய் கூறிய காரணம் மனதில் வர,

“படிப்பு படிப்புனு டென்ஷனா போய்ட்டு வரப்போ இவர் முகத்தைப் பார்த்தா எல்லாமே காணாம போகுது டி… சூரியனப் பார்த்து இந்த தாமரையும் மலருது இல்லயா.. அதான்…” என்ற தாமரையின் விளக்கத்தில் தேவராஜனின் மீது ஈர்ப்பு இருப்பது போலெல்லாம் தெரியவில்லை. “இந்த அம்மா ஈறப்பேனாக்கி.. பேனபெருமாளாக்கிடும் … ” என தேவகியை தாள் நினைத்துக் கொண்டாள்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல ஆரம்பித்தது.ஆதவன் தில்லையின் வாழ்க்கையும் எப்போதும் போல் தான் தொடர்ந்தது. மனைவியை நெருங்க ஆசைப்பட்டாலும் , “படித்து விட்டாயா..” என்ற கேள்வியைக் கேட்டு வைப்பவன் , ” அவன் படிப்பைத் தொடர ஊக்கப்படுத்தினான். “அடடா இந்த மாமாவுக்காக டிகிரிய வாங்கிரனும் போலவே ..” என நினைத்துக் கொண்ட தில்லை , குழந்தை வளர்ப்போடு படிப்பிலும் கவனம் செலுத்தலானாள்.

வீட்டிற்கு வந்தால் குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்ளும் தாமரை , இரவில் உறங்கும் போது தான் தில்லையிடம் கொடுப்பாள். “நீ படிக்கணும்டி…” என தில்லை சொன்னாளென்றால் , “நீயும் தான் படிக்கணும்…” என்று விட்டாள். “என்னடி இது அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் படிபடிங்கிறீங்க…”

“நாங்க அப்படித்தான். சீக்கிரம் டிகிரி வாங்கு…” என்று விடுவாள் தாமரை. வருடமும் ஓட , விஜய் பணியில் சேர்ந்து விட்டான். கடிதம் தவறாமல் வந்தது.. ஒரு பதில் கூட தாமரை அனுப்பியதில்லை.அதுபோல ஃபோன் பேசினால் மெளனம் மட்டுமே பதில் … தான் எங்கு பணியில் இருக்கிறோம் ,திரும்ப எப்போது பேசுவான் என்ற தகவல்களை அவளுக்குத் தருவான்.

காதலர் தினம் இந்தியாவில் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம் … வாழ்த்து அட்டை .. அதுவும் திறந்தால் ஐ லவ் யூ என சத்தமாக காதலைச் சொன்னது. ஐ டூ  என்ற பதிலை மனதில் மட்டுமே சொல்லிக் கொண்டாள். பணியில் இணைந்த முதல் வருடம் வர இயலாதவன் அடுத்த வருடத்தில் அழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று விடுமுறையில் வந்திருந்தான்.

அவர்களது டெலிபோன் பூத்தில் சந்தித்துக் கொண்ட இருவருக்கும் மெளனமே மொழியாகிப் போனது. விஜய் தான் , ” நம்மளை இணைச்சு வச்சது இந்த சித்திரை திருவிழா தான்.. அதான் இப்ப லீவு எடுத்து வந்தேன்… நிறைய நாள் லீவு இருக்கு.. ஆனா அதையெல்லாம் ஊரறிய உன் கையப் பிடிச்சுக்கிற நாளுக்காக சேர்த்து வச்சுருக்கேன்…” என்றவன், இம்முறை அவள் கைகளை மட்டும் பற்றி முத்தமிட்டுச் சென்றான். அதனைக் கூட இளம் பெண்ணால் தாங்க முடியவில்லை. மிகவும் தவித்துப் போனாள் தாமரை.

தேனிலவு… நான்வாழ ஏன் இந்த சோதனை

வான் நிலவை நீ கேளு.. கூறும் என் வேதனை

 என்னைத்தான்…அன்பே மறந்தாயோ

 மறப்பேன் என்றே…நினைத்தாயோ..

வருடங்கள் ஓட தில்லை ஒரு வழியாக  இளங்கலை பட்டம் பெற்று விட்டாள். காலம் மாற காட்சிகள் மாற… செயற்கை கோள் ஒளிபரப்பில் நிறைய தொலைக்காட்சி சேனல்கள் வருகிறது. புது நடிகர்கள் , புதுவித சினிமா படைப்புகள் என காலம் வேகமாக செல்ல …. வயது மூப்பில் அருணாச்சலமாகட்டும் , சொக்கலிங்கமாகட்டும் மகன்களிடம் பொறுப்பினை ஒப்படைத்து விட்டு தங்கள் ஊரில் இருக்கும் விவசாயம் சார்ந்த தொழில்களோடு, அரசியல் பணிகளையும் கவனிக்கத் துவங்கினர்.

முன்பே அரசியல் செல்வாக்கோடு இருந்தவர்கள் தான் .. ஆனால் இப்போது முழு நேரமும் பணியாற்றத் துவங்கினர்.

ஆதவனும் சரி, தேவாவும் சரி தங்கள் தொழில்களை காலத்திற்கேற்ப விரிவாக்கத் துவங்கி தந்தைமாரைக் காட்டிலும் பதினாறு அல்ல இருபத்து நான்கு அடிகள் பாயத் துவங்கினர்.

தேவா மருத்துவர் தாமரை செல்வியை கரம் பிடிக்க தான் என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமோ அத்தனையையும் வளர்த்து தாமரையை கரம் பிடிக்கும் நாளுக்காக காத்துக் கொண்டிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும். தங்கை வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவனது கண்கள் தாமரையைச் சுற்றுவதை தில்லையும் கவனித்துக் கொண்டு தானிருந்தாள்.

சித்திரை திருவிழா நெருங்கவும் விஜய் வருவான் என ஆர்வமாக இருக்கையில் இம்முறையும் வர இயலவில்லை என தொலைப்பேசியில் கூறியவனிடம் சத்தமாகவே அழுது விட்டாள் தாமரை. அவன் எவ்வளவு சமாதானம் செய்தும் ரீசிவரை கீழே வைக்கும் வரை அழுகை தான்.

வாய் மொழிந்த வார்த்தை யாவும் 

காற்றில் போனால் நியாயமா 

பாய் விரித்து பாவைப் பார்த்த

காதல் இன்பம் மாயமா…

அவனுக்கும் உடனே வர தான் தோன்றியது … ஆனால் நாட்டுக்கு பணியாற்ற வேண்டுமே …

வாள் பிடித்து நின்றால் கூட 

நெஞ்சில் உந்தன் ஊர்வலம்

போர்க்களத்தில் சாய்ந்தால்கூட

 ஜீவன் உன்னை சேர்ந்திடும்…

விஜய் தாமரையின் கல்லூரியின் இறுதி வருடத்தில் கட்டாயம் வருவதாக தெரிவித்திருந்தான். அதுவரை நலம் நலமறிய ஆவல் தான் …

இந்நிலையில் வழக்கம் போல் ஆதவன் தில்லையின் திருமண நாளுக்கு வாழ்த்துச் சொன்ன தாமரை …” இந்த வருஷமாவது பொண்ணு பெத்துக் கொடுடி..” என்றாள்.தில்லை பட்டம் வாங்கியதிலிருந்து கணவனோடு இல்லற வாழ்வைத் துவங்க மிகவும் ஆர்வமாகவே இருந்தாள். ஆனால் குழந்தையை ஆதவன் நடுவில் படுக்க வைக்க , தானாக அருகில் செல்ல தயங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் மனது தாமரைக்கும் படிப்பு முடிய ஒரு வருடம் தான்.. அவளுக்கும் திருமணம் பேச இருக்கிறார்கள். எனவே தன்னைப்போல் அவளும் பக்குவப்பட்டிருப்பாள் , தேவகி சொன்னது போல் இனி வீண் சலனங்களுக்கு இடமிருக்காது என்பதால்  ஆதவனோடான உறவை எதிர் பார்க்க துவங்கினாள். எவ்வளவு வாயடித்தாலும் இந்த விவகாரத்தில் தானாக சென்று பேசக் கூட முடியவில்லை.

அடுத்து வந்த மீனாட்சியின் நினைவு நாளில் தாமரை தாயை எண்ணியதோடு … விஜயின் நினைவில் கண்ணீர் தரதரவென வர , தில்லையின் மனது மிகவும் வாடிவிட்டது. தாயின் நினைவில் அழுதுக் கொண்டிருக்கும் தோழியை மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்தவள் தனக்காகவோ கணவனுக்காகவோ என தங்களுக்காக இல்லாமல் தாமரைக்காக மட்டுமே கணவனை நெருங்க விரும்பினாள்.