தன்னை அனுராதா அவமதித்ததால் அவளுக்கும் தம்பிக்குமிடையே சிறிய அளவிலாவது சண்டையை மூட்டி விடவேண்டும் என்று நினைத்திருந்த சுரேகாவின் எண்ணம் நிறைவேறாமல் போனபோதும், அவள் எதிர்பார்த்து வந்த பள்ளிக்கட்டணம் நந்தாவின் தயவில் தாராளமாகவே கிடைத்திருந்தது.
“ஸ்கூலில் அப்ளை பண்ணுக்கா. பீஸ் எல்லாம் விசாரி. பார்த்துக்கலாம்” என்று நந்தகுமார் சொல்லிவிட, சுரேகா லக்ஷனாவிற்கு அந்த வாரமே அட்மிஷன் வாங்கி டொனேஷன் என்று சொல்லி பெரியளவு தொகையைத் தம்பியிடமிருந்து கறந்து விட்டாள். ‘பள்ளி திறக்க இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதாகவும் அப்பொழுது பீஸ் கட்டினால் போதும்’ என்று தாராள மனதோடு அவள் சொன்னதை தான் அனுராதாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
தொழில் செய்கிறேன், தொழில் செய்கிறேன் என்று அலப்பறை செய்யும் பெண்ணுக்கு மகளின் பள்ளிக் கட்டணத்திற்குக் கூட பணத்தைப் போட முடியாதா என்ன?
அதோடு ப்ரீ.கே.ஜி., படிக்க இத்தனை பணத்தை யாராவது கொட்டி கொடுப்பார்களா அதுவும் தம்பியிடம் வாங்கி என்றிருந்தது அனுவிற்கு.
லக்ஷனாவிற்கு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. ஆனால், இந்த பணம் இருந்திருந்தால் குறைந்தபட்சம் சில மாத பர்சனல் லோன் டியூவிற்காகவாவது பிரவீன் அண்ணாவிற்கு உதவியாக இருந்திருக்கும் என்று எண்ணாமல் அவளால் இருக்க முடியவில்லை.
சொந்த கணவர் இப்படியொரு இக்கட்டிலிருக்க, அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் தொழில் என்று வீண் செலவு செய்வதும், பிறந்த வீட்டில் கறந்து மகளை பள்ளியில் சேர்ப்பதுமாக இருக்கும் சுரேகாவின் செய்கையில் அனுவிற்கு மிகுந்த அதிருப்தியாக இருந்தது.
அனுவிற்கெல்லாம் கணவன் இக்கட்டில் இருக்கும்போது பத்து லட்சங்கள் செலவு செய்து தனக்கு வேலை வாங்கித்தர வேண்டிய சூழல் ஆகிவிட்டதே என்று அந்த விஷயம் தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை மிகவும் உறுத்தலாக இருக்கிறது.
ஆனால், சுரேகாவானால் கணவனின் கஷ்டத்திற்கு மனதளவில் கவலைப் பட்டதாகக்கூடத் தெரியவில்லை எனும்போது அதிருப்தியும் மனக்கசப்பும் எழுவது இயல்பு தானே!
சில நாட்கள் கடந்திருந்தது. மீண்டும் இந்த முறையும் கிரெடிட் கார்ட் பில் கட்டும் தேதி வந்தபிறகும் பிரவீன் பணம் கட்டவில்லை. இன்று கட்டாவிட்டால் மீண்டும் சிவில் ஸ்கோர் அடிவாங்கிவிடும்.
அனுராதா மீண்டும் கணவனிடம் உதவி கேட்பதில் பலன் இருக்காது என்று புரிந்தவளாய் அவளே பிரவீனுக்கு அழைத்திருந்தாள்.
அனுவின் எண்ணை யோசனையாகப் பார்த்தபடி அழைப்பை ஏற்ற பிரவீன், “சொல்லும்மா எல்லாரும் நல்லா இருக்கீங்க தானே? யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே?” என்றான் அக்கறையான குரலில்.
மனதார கேட்கிறார் என்று அனுவிற்கு புரியும். அவரது நல்ல குணத்திற்கு உதவி கிடைக்காமல் அல்லாடும் நிலையில் இருக்கிறாரே என்று அவனுக்காக கவலை கொண்டாள்.
தன் வருத்தத்தை வெளியில் காட்டாத இயல்பான குரலில், “எல்லாரும் நல்லா இருக்காங்க அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று பதிலுக்கு விசாரித்தாள்.
“நான் நல்லா இருக்கேன் மா. நீ இன்னைக்கு வேலைக்குப் போகலையா? இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்க?” என்று புரியாமல் பிரவீன் கேட்க,
“வேலையில் தான் இருக்கேன் அண்ணா. பில்ஸ் டியூஸ் பெண்டிங் இருக்கிறவங்க லிஸ்ட் பார்த்துட்டு இருந்தேன். அப்ப தான் உங்க பேருல கிரெடிட் கார்ட் பில் இன்னைக்கு டியூவில் இருந்தது தெரிஞ்சது. வேலை பிஸியில மறந்திருப்பீங்க. அதுதான் ஞாபகப் படுத்த போன் பண்ணினேன், நேரம் இருக்கப்ப கட்டிடுங்கண்ணா” அவனுக்கு சங்கடம் வராத வகையில் அனு பேசி முடிக்க மறுபக்கம் ஆழ்ந்த மௌனம்.
இயலாமை என்பது எத்தனை கொடுமை என்பதை அவளும் அறிவாளே!
பிரவீனுக்கு தன்னை மீட்க சில நொடிகள் தேவையாக இருந்தது போலும். பிறகும் மீள முடியாமல் உள்ளே போன குரலில், “ஆமாம் மா. மறந்துட்டேன். ஞாபகப் படுத்தினதுக்கு தேங்க்ஸ்” என்றான் உள்ளே போய்விட்ட குரலில்.
அந்த குரலின் வலி அவள் மனதையும் பிசைந்தது. இருந்தும் ஒன்றும் காட்டிக் கொள்ளாதவள் போல, “சரிங்கண்ணா நான் வைக்கிறேன்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
மீண்டும் கணவன் மீது கோபம் தான் வந்தது. உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவாமல் இவன் ஏன் தான் இப்படி இருப்பானோ? ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பது சரியாகத்தான் இருக்கிறது என்று மனதில் அவனை வறுத்தெடுத்தாள்.
என்னதான் இவள் பிரவீனுக்கு நினைவு படுத்தியபோதும், அவனால் கிரெடிட் கார்ட் பில்லை கட்ட முடியவில்லை. அவனது சம்பளம் ஹவுசிங் லோன், பர்சனல் லோன் கட்டவே பெருமளவு போய் விடுவது இவளுக்குத் தெரியும் தான். அதுபோக பெரிதாகச் செலவு செய்வது போலவும் தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட தொகையை ஒன்றாம் தேதி எடுத்துக் கொண்டிருக்கிறான். அது வீட்டுச் செலவிற்காக இருக்கும் என்பது இவளது அனுமானம்.
ஆனால், இப்பொழுது யோசித்தால் அது வெளியில் எங்காவது வாங்கிய கடனுக்காக இருக்குமோ என்று தோன்றுகிறது. அப்படியானால் வீட்டு செலவிற்கு அவர் தந்தையின் பென்சன் பணத்தை உபயோகிக்கிறார்களா?
நினைத்த மாத்திரத்தில் அவளுக்கே அத்தனை சங்கடமாக இருந்தது. இந்த அண்ணா ஏன் இத்தனை கடன் வாங்கியிருக்கிறார். அதுவும் திருமணத்திற்குப் பிறகு இவ்வளவு வாங்க வேண்டியளவு அப்படியென்ன இக்கட்டான சூழல் வந்திருக்கப் போகிறது? எப்படி இதிலிருந்து மீளப் போகிறாரோ என்று கவலை கொண்டாள்.
பிரவீனை அனுவிற்கு அதிகம் தெரியாது தான்! ஆனால், நம்மிடம் நல்லமாதிரியாகப் பழகுபவர், நம் மதிப்பில் உயர்ந்து நிற்பவர் ஓர் இக்கட்டில் இருக்கும்போது நம்மால் எப்படி வேடிக்கை பார்க்க முடியும் என்ற நிலைதான் அவளுக்கு!
கணவனின் உதவியில்லாமல் அவளால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. மாமியாரிடம் சொல்லலாம் என்றாலும், அவரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவரிடம் இந்த விஷயத்தைக் கொண்டு செல்ல முடியவில்லை. அதுவும் கணவனைப் புறக்கணித்து அவரிடம் கொண்டு செல்வதில் அவளுக்கே நாட்டமில்லை. வெறுமனே சூழலை வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர அப்போதைக்கு அவளிடம் வேறு வழி இருக்கவில்லை.
அது அவளது மனதை ஆழமாகப் பாதித்தது. தன் கண்முன்னால் தனக்கு நெருங்கிய உறவில் இருக்கும் ஒருவர் கஷ்டப்படுவதை அவளால் ஏனோ தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இந்த சூழலைக் கையாளத் தெரியாமல் அவளது வதனம் சோர்வைப் பிரதிபலித்தது. அதை புரிந்துகொள்ள வேண்டிய கணவன் பெரும்பாலும் தாமதமாகத்தானே வீடு வருகிறான். அவளைக் கவனித்துப் பார்த்திருந்தால் கேட்டிருப்பானாக இருக்கும். இப்பொழுது அவனுக்கு எதுவுமே தெரியவரவில்லை.
ஆனால், மாமியார் கனகதேவி கவனித்தார். “என்ன பாப்பா ரொம்ப சோர்ந்து தெரியற? எதுவும் பிரச்சனையா?” என அவளிடம் விசாரிக்க, “அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை” என்று வேகமாக மறுத்து விட்டாள்.
“இல்லையே உன் முகமே வாடி தான் தெரியுது. வேலை எதுவும் கஷ்டமா இருக்கா? பத்து லட்சம் கட்டி சேர்ந்த வேலைன்னு பொறுத்து போயிட்டு இருக்கியா?”
“அத்தை என்ன நீங்க? பேங்க் வேலையில என்ன கஷ்டம். நான் நல்லா தான் இருக்கேன்” என்றாள் சிரிப்புடன்.