அம்மாவின் உடல்நிலையில் மனம் கலங்கிப் போயிருந்தவனுக்கு அக்காவின் சுயரூபம் மனதை தைத்தது என்றால், மனைவியை அவன் நடத்திய விதத்தின் தவறு புரிந்ததும் நெஞ்சம் சிதறி சின்னாபின்னமானது.

பிரவீன் பார்வையில் விழாமல் அவன் இருக்கும் பக்கமே போகாமல் அவசரமாக தன் வாகனத்தை நோக்கி விரைந்தபடியே பிரவீனுக்கு அழைத்தான்.

நந்தாவின் அழைப்பை யோசனையாகப் பார்த்தபடி பிரவீன் ஏற்க, “மாமா அம்மா கிட்ட அக்கா மட்டும் தான் இருக்கா. நீங்க கூட இருங்க. ராது தனியா வீட்டுல இருக்கா. ரொம்பவும் பயந்துட்டா. நான் போயி பார்த்துட்டு வந்துடறேன்” என்று சொல்ல, அவனின் மாமா என்ற அழைப்பே பல ஆண்டுகள் கழித்து இப்பொழுது தான் வருவதால் அதிர்ச்சியில் பிரவீனுக்கு பேச்சே வரவில்லை.

பதில் வராததால், “மாமா…” என்று மீண்டும் அழைக்க,

“சரிங்க மச்சான். நீங்க வீட்டிலேயே இருங்க. நான் நைட்டுக்கு இங்கே இருந்துக்கிறேன். நீங்க காலையில தங்கச்சியோட வாங்க” என்று பிரவீன் சொல்லவும், “அதெல்லாம் வேண்டாம் மாமா. நைட் வந்துடுவேன்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான். கைப்பேசியையே சில நொடிகள் யோசனையாக பார்த்திருந்த பிரவீன், வள்ளியும் லக்ஷனாவும் மருத்துவமனைக்கு வரவும் எல்லாருமாக கனகதேவி சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் தளத்திற்குச் சென்றனர்.

இயன்றமட்டும் வேகமாக வீடு வந்திருந்த நந்தா சோபாவில் சுருண்டிருந்த மனைவியைக் கண்டதும் மனம் உடைந்தான். மெல்ல அவளின் அருகில் சோபாவின் கீழே முட்டிப்போட்டு அமர்ந்து அவளின் தலையை வருடிக் கொடுக்க, அவளிடம் அசைவில்லை.

நெற்றியில் முத்தம் வைத்து, “சாரிடி” என்றான். அவன் ஸ்பரிசத்தில் அரை தூக்கத்தில் இருந்தவள் விழித்து அவனிடமிருந்து விலகிப் படுக்க முயற்சி செய்தாள். சோபாவில் என்ன நகர முடியும்? அது முடியாமல் போகவே வெடுக்கென முகத்தைத் திருப்பினாள்.

அதைத் தாங்கமாட்டாமல், அவளின் முகத்தை மீண்டும் தன்புறமே திருப்பி, “சாரிடி” என்றான் குரல் அடைக்க.

“எதுக்கு சாரி… எழுந்து போங்க” என்று கோபத்தில் எரிந்து விழுந்தாள்.

“அது நீ அழுதுட்டே இருக்கவும் உன் மேல ஏதோ தப்புன்னு நினைச்சு அழற போலன்னு தப்பா நினைச்சுட்டேன்டி. அக்காவை நம்பி உன்னை நம்பாம அப்படி பேசலை. தப்பா புரிஞ்சுட்டு அப்படி பேசிட்டேன்” என்றான் அவள் கோபம் என்னவாக இருக்கும் என்று கணித்து தன் மனதிலிருந்து.

“அதுதான் நம்பலை தானே? அதோட போடி சொல்லறீங்க?” மூக்கை உறிஞ்சினாள்.

“தப்புதான் ராதும்மா. தோப்புக்கரணம் கூட போட்டுடறேன். நீ பிரவீன் மாமா பத்தி சொல்ல வந்தப்ப கேட்டுக்காம போனது, இப்ப உன்கிட்ட என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம கேள்வி கேட்டது, உன்னை போன்னு சொன்னது, உன்னைப் போக விட்டது எல்லாமே என் தப்பு தான். ஆனா, ப்ளீஸ் ஏற்கனவே அம்மாவுக்கு என்ன ஆகுமோன்னு உடைஞ்சு போயிருக்கேன், இப்ப நீயும் பனிஷ் பண்ணாதடி” என்றான் கெஞ்சலாக.

என்னவோ இப்படி இறங்கி வந்து கெஞ்சிக் கொண்டிருப்பவனிடம் கோபம் கூட வர மறுத்தது. அதற்கும் தன்னையே வெறுத்தாள் உனக்கு ரோஷமே இல்லையா என்பதாக!

அவள் முகத்தில் கோபத்தின் சாயல் குறைந்ததை நொடியில் கண்டு கொண்டவன், இப்பொழுது பெண்ணவளின் கன்னம் பற்றி, “ரொம்ப ரொம்ப சாரிடி” என்று அவளின் கண்களைப் பார்த்து கண்கள் கலங்கச் சொல்ல, “ம்ப்ச்… விடுங்க. எத்தனை சாரி கேட்பீங்க?” என்றாள் அதற்குமேல் பொறுக்க மாட்டாமல்.

“தேங்க்ஸ்…” என்றான் நெற்றி முட்டி.

அந்த நேரம் அவனின் கைப்பேசி இசைத்தது. பிரவீன் தான் அழைத்திருந்தான். அவசரமாக அழைப்பை ஏற்க, “மச்சான் அத்தை மெடிசனுக்கு ரெஸ்பாண்ட் செய்யறாங்களாம். இனி பயப்பட ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. இன்னும் மயக்கத்துல தான் இருக்காங்களாம். காலையில கான்ஷியஸ் வந்துடும், அப்பறம் ரூமுக்கு மாத்திடலாம் சொல்லிட்டாங்க. நீங்க பயப்படாம இருங்க” என்று சொல்ல,

“இப்ப தான் நிம்மதியா இருக்கு மாமா. தேங்க்ஸ். இருங்க நான் வந்துடறேன்” என்று இவன் பரபரப்பாக சொல்ல, “வேணாம் மச்சான். இங்கே எப்படியும் ரெண்டு பேர் தான் இருக்கலாம். நானும் உங்க அக்காவும் இருக்கோம். நீங்க நாளைக்கு காலையில வாங்க” என்று சொல்லி வைத்து விட்டான்.

பிரவீன் பேசியது அனுராதாவிற்கும் கேட்டது. இவர்கள் இருவரும் எப்படி ராசியானார்கள் என்பது போல ஆச்சரியமாகப் பார்த்தாள்.

அழைப்பை வைத்ததும், “அதென்ன திடீர்ன்னு அண்ணா மேல நம்பிக்கை? அவர் விஷயத்துக்கும் சேர்த்து சாரி சொல்லறீங்க” என்றாள் புரியாமல்.

அம்மாவிற்கு ஒன்றும் இல்லை என்ற தகவல் அவனையும் ரொம்பவும் ஆசுவாசப்படுத்தியிருந்தது. அதில் அவன் முகமும் கொஞ்சம் தெளிந்தது. கூடவே துடுக்குத்தனமும் சேர்ந்திட, “ஓ சொல்லலாமே! அதுக்கு முன்னாடி என் பொண்டாட்டி எனக்கு ஒரு கதை சொல்லணும்” என்றான் பீடிகையோடு.

“கதையா? என்ன கதை?” என்று அவள் சொல்வதற்குள் அவளை கைகளில் அள்ளி தங்கள் அறைக்குத் தூக்கிப் போனான்.

“ம்ப்ச் விடுங்க… என்ன செய்யறீங்க” என்று அவள் அடிக்க, “ஐயே ஒன்னும் செய்ய மாட்டேன், பாவம் சோபாவில் படுத்துட்டு இருக்கியேன்னு தூக்கிட்டு வந்தா ரொம்பத்தான்” என்று கணவன் சீண்டி விடவும், “ஒன்னும் வேணாம் விடுங்க. என் கோபம் இன்னும் முழுசா போகலை” என்றாள் உம்மென்று! கோபம் இல்லை தான், ஆனாலும் இன்னும் ஊடல் குறையவில்லை. இவன் எப்படி என்னை நம்பாமல் பேசலாம் என்ற குறை இன்னுமே அவளுக்குள் முணுமுணுத்துக் கொண்டுதான் இருந்தது.

“மேடம் இங்கே படுத்துட்டு கோபப்படுங்க…” என்று படுக்கையில் இறக்கி விட, உருண்டு போய் மறுமுனையில் படுத்துக் கொண்டாள்.

“ஹே இதெல்லாம் ரொம்ப ஓவர் பார்த்துக்க…” என்று அவன் விரல் நீட்டி எச்சரிக்க, அவள் அலட்டிக் கொள்ளவே இல்லை.

“சரி சொல்லுங்க, என்ன இன்னைக்கு திடீர் ஞானோதயம்?” முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு அனு விசாரிக்க, “அதெல்லாம் சொல்லணும்ன்னா என் பொண்டாட்டிக்கு என்னை எப்ப இருந்து பிடிக்கும்ன்னு கதை சொல்லணும் எனக்கு” என்றான் நந்தா கண்களை சிமிட்டி.

அனுவின் விழிகள் விரிந்து போனது. ‘என்ன என்ன இவனுக்கு ஏதாவது தெரிந்து விட்டதா?’ பெண்ணவளின் மனம் பதற, முழுதாக மூச்செடுக்க முடியாமல் திணறினாள்.

“நான் கூட ஒரு சின்னப்பிள்ளையை காப்பாத்தி இருக்கோம்ன்னு தான் நினைச்சேன், பார்த்தா என் பொண்டாட்டியை அப்பவே இம்ப்ரெஸ் பண்ணி இருப்பேன் போலவே…” சீண்டலாக நந்தா தொடங்க, முகத்தை மறைக்க முடியாமல் திணறினாள் பெண்ணவள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை இந்த கிருத்தி ஏதாவது உளறினா நம்பிட்டு…” குரலே எழும்பாமல் அவசரமாக மறுக்க, “ஹாஹா நான் எப்ப கிருத்தி சொன்னதா சொன்னேன்?” என்று வம்பிழுத்தான்.

ஐயோ உளறிட்டோமோ என்று கீழுதட்டை அவள் பற்களால் கடிக்க, அவளின் வெட்கத்தை ரசித்து அட்டகாசமாக சிரித்தான் கணவன். கூடவே வேகமாக அவளின் அருகில் நெருங்கி பெண்ணவளின் இதழில் பட்டும் படாமல் ஒரு மென்முத்தம் வைக்க, அவளுக்கு அவஸ்தையாகிப் போனது.

மீண்டும் மருத்துவமனைக்குப் போகவில்லை என்பதால் ஓரமாகப் போன மனைவியை இழுத்து நந்தா தன் கையணைவில் வைத்துக் கொண்டான். அவனை ஏறிட்டுப் பார்க்கவும் கூச்சப்பட்டவளாய் கணவனின் நெஞ்சில் பூமாலையாக படந்திருந்தாள் அனு.

அவளாக மீண்டும் கேட்காத போதும், அவன் அக்காவைப்பற்றி அறிந்து கொண்ட விதத்தை மனைவியிடம் விளக்கினான். “நான் தான் அவ கேட்கும்போதெல்லாம் பணம் தந்து, அவங்க வாழ்க்கையை இந்த நிலைக்குக் கொண்டு வந்துட்டேனோன்னு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு ராது…” என்று சொன்னவனின் குரலில் வேதனை நிறைந்திருந்தது.

அது பொறுக்க மாட்டாமல், “விடுங்க, தெரியாம தானே செஞ்சீங்க” என்றாள் ஆறுதலாக.

“ம்ப்ச்… அம்மா எச்சரிக்கை பண்ணினப்ப அவங்களுக்கு தெரியாம செஞ்சேன், நீ பிரவீன் மாமா பத்தி எடுத்துச் சொல்ல வந்தப்ப அலட்சியப்படுத்தினேன். எனக்கு தான் எல்லாம் தெரியும்ன்னு நினைப்பு. இன்னைக்கு மாமா சொன்னதெல்லாம் கேட்கக் கேட்க எப்படி இருந்தது தெரியுமா?” என்று மீண்டும் தவிப்பாகச் சொல்ல, “விடுங்க, இனி சரியாயிடும்” என்று கணவனைத் தேற்றினாள்.

கணவன் தன்னிடம் மனம் விட்டுப் பேசத் தொடங்கியிருப்பதில் அவள் மனம் வெகுவாக நிறைந்து போயிருந்தது. கொஞ்ச நேரம் முன்பு தன்மீது நம்பிக்கை இல்லாமல் பேசி விட்டானே என்று கவலையில் இருந்தவளை நொடியில் காதலால் சூழ்ந்து ஆக்கிரமித்துக் கொண்டான். இவனிடம் இவ்வளவு எளிதாகக் கோபம் மறந்து மயங்கிய விந்தை அவளுக்கு புரியவே இல்லை.

இனி பிரவீன் அண்ணா வாழ்வும் சரியாகிவிடும் என்று அனுவிற்கு ஆசுவாசமானது. அவள் எண்ணியது போலத்தான் அதற்கடுத்து வந்த நாட்களில் சுரேகாவிற்கு பண விஷயமாக நந்தா உதவி செய்யவே இல்லை.

சுரேகா கணித்தது போல கனகதேவி அவளைக் காட்டிக் கொடுக்கவில்லை தான்! ஆனால், குற்றவுணர்வில் தாய் வீட்டில் சுரேகாவால் சீராட முடியவில்லை. இங்கே வந்தாலே அன்னை பார்க்கும் பார்வையே அவளை விரட்டியது. அம்மா வீட்டில் கிடைத்து வந்த சௌகரியங்கள் குறைய குறைய பல் பிடுங்கிய பாம்பு ஆனாள்.

பிரவீனின் வாழ்வை வெறுத்த நிலை மோட்சம் பெற்றதா என்றால் அந்தளவிற்கு முன்னேற்றம் வரவில்லை. ஆனால், முன்பிருந்த நிம்மதியின்மை குறைந்தது. வீட்டில் சண்டை சச்சரவுகள் குறையத் தொடங்கியது. சுரேகாவின் தொழில் படு நஷ்டத்தில் போக வேறு வழியில்லாமல் இழுத்து மூடிவிட்டு கணவன், குழந்தை என்று அமைதியாக இருக்கிறாள். இப்பொழுது தான் கணவனின் பாராமுகம் புரிகிறது. அவன் அருமை தெரிகிறது. ஆனால், அவனது அன்பை மீட்டெடுக்க முடியவில்லை. அந்த முயற்சியில் தான் இறங்கியிருக்கிறாள்.

ஊரில் கிருத்திகாவும் விவேக்கும் ரொம்பவே ராசியாகிப் போனதன் விளைவு காதல் வலையில் விழுந்து விட்டிருந்தனர். பெற்றவர்கள் பார்வையில் விழாமல் காதல் செய்வது ரொம்பவும் சிரமமாக இருக்க இருவரும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நந்தாவின் தொழில் பிரச்சனைகள் எல்லாம் ஓரளவு நேர்த்தியாகியிருந்தது. அதில் அவன் வேலைப்பளுவும் நன்கு குறைந்திருந்தது. அம்மா என்ன மறுத்தும் கேட்காமல் அவரோடு முழுநேரமும் இருப்பதற்கு வேலையாளையும் நியமித்து விட்டான்.

சமீபமாகத்தான் நந்தாவும், அனுராதாவும் தேனிலவுக்கு மேகாலயா சென்று வந்தார்கள். அவர்கள் அன்னியோன்னியம் நாளுக்கு நாள் கூடியது. அவள் மனதில் கொஞ்ச நஞ்சம் இருந்த ஊடலையும் அவன் கொட்டிய காதல் மறக்கடித்தது.

அவர்கள் உலகம் காதலால் மட்டுமே சூழ்ந்திருக்க ஊடல்கள் கடல் அலை போல மெல்ல மேலெழுந்தாலும் அது விரைவிலேயே தணிந்து போகிறது அவர்களின் எல்லையற்ற நேசத்தினால்! எப்பொழுதுமே இப்படி சுபிக்ஷமாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு நாமும் அவர்களை வாழ்த்தி விடைபெறுவோம்.

*** சுபம் ***

கதையைக் குறித்த உங்களது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அமேசான் கமெண்ட்டிலோ அல்லது மின்னஞ்சலிலோ தெரிவியுங்கள். அதனை வாசிக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

எனது கதைகள் YOUTUBE தளத்தில் – “Sugamathi Tamil Novels” என்ற சேனலில் ஒலி வடிவில் பதிவு செய்து வருகிறோம். விருப்பம் இருப்பவர்கள் கேட்டுப் பாருங்கள்.

எனது மின்னஞ்சல் முகவரி sugamathistories [at] gmail [dot] com

நன்றி!!!