Advertisement

கீதா அவந்திகாவை பார்த்து, “உன் பிளான் என்ன?”
“மற்ற டாக்டர்ஸ் கூட சேர்ந்து இன்னைக்கு கிளம்புறதுக்கு எனக்கு ட்ரெயினில் டிக்கட் இருக்குது கா”
“சரி” என்றபோது அங்கே வந்த ப்ரனிஷா, “நான் அவரை பார்த்துட்டு வரேன்” என்றாள்.
கீதா, “சரி” என்றதும் கிளம்பியவள் வெளியே சென்றதும் கைபேசியில் ப்ரனேஷை அழைத்தாள்.
அவன் அழைப்பை எடுத்து, “நான் இப்போ வீட்டில் தான் இருக்கிறேன்” என்றான்.
அவள் ஆச்சரியத்துடன், “நான் உங்களை பார்க்க வரதை பற்றி தான் சொல்ல போறேன்னு எப்படி தெரியும்?”
“அதான் வேப்பிலை அடிக்க ஆள் அனுப்பினேனே!” என்று அவன் சிரிப்புடன் கூறவும், 
அவள், “உங்க வேலை தானா! நான்ஸ்டாப்பா திட்டினா தெரியுமா!” என்று சோகமாக கூறினாள்.
“இந்த ஒரு முறை விட்டுடலாம்.. ஏன்னா அதனால் தானே நீ மனசு மாறி இருக்கிற! இனி திட்டினா ஸ்பெஷல் ஆ கவனிச்சிருவோம்”
“நான் மனசு மாறினதா சொல்லவே இல்லையே!” 
“அதான் குரலே சொல்லுதே”
“என்னன்னு?”
“அதை நான் உன் வாயால் கேட்க ஆசைப் படுறேன்”
“இது போங்கு”
வாய்விட்டு சிரித்தவன், “தேங்க்ஸ் ஸ்வீட்டி” என்றான்.
“எதுக்கு?”
“நேரில் வா சொல்றேன்” என்றவன் அழைப்பை துண்டித்தான்.
புன்னகையுடன் சர்வேஷ் வீட்டை நோக்கி வேகமாக நடந்தவள் அடுத்த ஐந்தாவது நிமிடம் அவன் அறையில் இருந்தாள்.  
அவள் வருவதற்குள் தன் தந்தையை கைபேசியில் அழைத்தவன் அவர் அழைப்பை எடுத்ததும், “டாட்” என்று மட்டுமே கூறினான்.
அவனது குரலில் தெரிந்த மகிழ்ச்சியை வைத்தே அவரும் மகிழ்ச்சியுடன், “வாழ்த்துகள் மை சன்” என்றார்.
“தேங்க்ஸ் டேட்.. இனியா இப்போ வந்திருவா.. நான் அவளிடம் பேசிட்டு கூப்பிடுறேன்” என்றான்.
அவன் குரல் உணர்ச்சிவசப் பட்டிருப்பதை கண்டுக் கொண்டவர் சிரிப்புடன், “ஆல் தி பெஸ்ட்” என்றார்.
“தேங்க்ஸ் டேட்.. பை” என்றபடி அழைப்பை அவன் துண்டிக்கவும் அறைக் கதவு தட்டப் பட்டது. 
அவன், “திறந்து தான் இருக்கிறது” என்றதும் உள்ளே வந்து கதவை மூடியவள் படபடத்த இதயத்துடன் கதவின் அருகே நின்றுக் கொண்டாள்.
அவனும் கூட சிறிது படபடத்த இதயத்துடன் தான் இருந்தான். தான் ஒரு இதய நோய் மருத்துவன் என்பதை மறந்தவனாய் காதலை சொன்ன பிறகு காதலியை முதல் முறையாக சந்திக்கும் விடலை பையனின் மனநிலையில் தான் அவன் இருந்தான்.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனரே தவிர எதுவும் பேசவில்லை. நான்கு விழிகளும் இரு இதயமும் மெளனமாக பேசிக் கொண்ட அழகான தருணம் அது.
அவன் விழிகளில் ஆனந்த கண்ணீருடன் இதழில் விரிந்த புன்னகையுடன் வலது கரத்தை நீட்டினான். அவளும் ஆனந்த கண்ணீருடனும் புன்னகையுடனும் அவன் அருகே வந்து அவன் கையை பற்றினாள்.
ஒரு நொடி அவள் கையை இறுக்கமாக பற்றியவன் அடுத்த நொடி அவளை தோளோடு மென்மையாக அணைத்தான். அவளும் நிம்மதியுடன் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
இப்பொழுது அவள் இடையை இரு கைகள் கொண்டு அணைத்தபடி அவள் தலை மீது கண்களை மூடியபடி கன்னம் பதித்தான். அவளும் கண்களை மூடியபடி அவனை இடையோடு அணைத்தபடி நின்றிருந்தாள். 
காடு மலையெல்லாம் அலைந்து திரிந்து வீட்டிற்கு வந்தது போன்ற நிம்மதியையும் பாதுகாப்பையும் உணர்ந்தவளின் அணைப்பு இறுகியது.
அவளது மனநிலையை உணர்ந்ததாலோ என்னவோ, “இனி நமக்கு மகிழ்ச்சி மட்டும் தான்டா” என்றவன் மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் மென்மையாக இதழ் ஒற்றினான்.
அவள் சிறு தவிப்புடனும் வருத்ததுடனும், “நான் உங்களை ரொம்ப கஷ்டப்…………….”  
தனது கை கொண்டு அவள் வாயை மூடியவன், “நான் லண்டன் போகாமல் இருந்து இருந்தால் உனக்கு கஷ்டமே வந்திருக்காதே!!!”
அவன் கையை விலக்கியவள், “என் விதி.. நீங்க என்ன செய்வீங்க.. விடுங்க”
“ஹ்ம்ம்..” என்று ஆரம்பித்து கடந்த ஏழு ஆண்டுகளாக அவன் அடைந்த துயரங்களை சுருக்கமாகவும் இந்தியா வந்த பிறகு அவளை தவிப்புடன் தேடியதை பற்றி விரிவாக கூறி முடித்தவன், “இப்போ நீ சொல்லு” என்றான்.
“அது எதுக்கு! விடுங்க”
“இல்லை டா.. இந்த ஒரே ஒரு முறை மட்டும் பேசி முடிச்சிரலாம்.. உன் சின்ன வயதில் இருந்து சொல்லு டா.. உனக்கும் மனசு லேசாகும்”
அவளது குழந்தை பருவத்தில் இருந்து கூற ஆரம்பித்தாள். அவள் கரண்டியால் நாகேஸ்வரியிடம் அடி வாங்கியதை சொன்னதும் அவன், “நான் அந்த காயத்தை பார்க்கணும்” என்றான்.
அவள் முழிக்கவும் அவன், “என்ன?”
அவள் சிறு வெக்கத்துடன், “வேணாமே”
அவளது வெக்கத்தை ரசித்தவன், “ப்ளீஸ்” என்றான்.
“இப்போ வேணாமே”
“இப்பவே தான் பார்க்கணும்” என்று அவன் பிடிவாதத்துடன் கூறவும் அவள் சங்கோஜத்துடன் சேலையை சற்று தூக்கி வலது கரண்டைக் காலை காட்டினாள்.
தரையில் அமர்ந்தவன் காயப்பட்ட இடத்தை ஒற்றை விரலால் மென்மையாக வருடினான். இரண்டு நொடிகள் கழித்து அவளை நிர்மிந்து பார்த்தான். அவளோ உணர்ச்சியை கட்டுபடுத்தியபடி உதட்டை கடித்து கண்களை மூடி இருந்தாள்.
அவள் முகத்தில் தெரிந்த வர்ணஜாலத்தில் தன்னை தொலைத்தவன் அவளது காயத்தின் மீது மென்மையாக இதழ் ஒற்றினான்.
சட்டென்று கண்களை திறந்தவள் புடவையை கீழே விட்டு சற்று நகர்ந்து நின்றாள். 
அவளது ஒதுக்கத்தை பெரிது படுத்தாமல் மெல்ல எழுந்தவன் அவளது கையை மென்மையாக பற்றி அவளுடன் கட்டிலில் அமர்ந்து, “மேலே சொல்லு” என்றான்.
அவள் கலங்கிய விழிகளுடன் தரையை பார்த்தபடி, “சாரி” என்றாள்.  
அவன் எதுவும் நடக்காதது போல் சாதாரண குரலில், “எதற்கு?”
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “அது” என்று தயக்கத்துடன் இழுக்க, அவன் மென்னகையுடன் அவள் கன்னத்தை தட்டி கொடுத்து, “இதெல்லாம் ஒண்ணுமே இல்லை டா.. நீ மேலே சொல்லு”
அவள் குற்ற உணர்ச்சியுடன் அமைதியாக இருக்கவும் அவள் கையை பற்றியவன், “இதில் நீ பீல் பண்ண எதுவுமே இல்லை.. இதெல்லாம் தெரிந்து தானே நாம் இணைகிறோம்.. அப்பறம் என்ன? நீ விலகுவதால் நான் உன்னை அப்படியே விட்டுட போறதில்லை.. அதற்காக உடனே எல்லாம் வேண்டும் னு நினைக்க போறதும் இல்லை.. மெல்ல மெல்ல உன் மனம் மாறி நடக்க வேண்டியது அதுவே நடக்கும்.. நம்பிக்கை தான் வாழ்க்கை.. உன் ப்ரனேஷ் மேல் நம்பிக்கை வை மா”
அவள் சற்று தெளிந்தவளாக புன்னகையுடன், “என்னை விட நான் உங்களை தான் நம்புறேன்”
அவன் விரிந்த புன்னகையுடன், ”அப்பறம் என்ன!” என்றான்.
“ஹ்ம்ம்”
“ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக்கொள்.. உன்னால் முடியாமலோ உன்னை அறியாமல் விலகும் எந்த ஒரு தருணத்திலும் எந்த நொடியிலும் உனக்கு குற்ற உணர்ச்சி வரவே கூடாது.. மாறாக ‘என் ப்ரனேஷ் என்னை புரிந்துப்பார்.. என்னால் முடியும்.. என் மனம் மாறும்’ னு தான் நினைக்கணும்..”
“ஹ்ம்ம்”
“என்ன டா?”
“நான் மாறிடுவேன் தானே?” என்று அவள் தவிப்புடன் வினவ,
அவன் நம்பிக்கை ஊட்டும் புன்னகையுடன், “நிச்சயம் மாறிடுவ ஸ்வீட்டி.. மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது.. என்ன! மாற்றம் வரும் னு நாம உறுதியா நம்பனும்.. தேவை இல்லாதது நினைவில் வரும் போது என் முகத்தையோ அம்மு முகத்தையோ மனதில் கொண்டு வா.. உன்னால் நிச்சயமா பழையதை விட்டு வெளியே வர முடியும்..” 
அவள் நெஞ்சில் சாய்ந்து அவனை கட்டிக் கொண்டவள், “ஹ்ம்ம்.. நான் நிச்சயம் மாறுவேன்” என்றாள்.
அவள் தோளை சுற்றி கை போட்டவன் புன்னகையுடன், “குட்.. தட்’ஸ் மை ஸ்வீட்டி” என்றான்.
முகத்தை அவன் நெஞ்சில் இருந்து விலக்காமல் பார்வையை மட்டும் நிமிர்த்தியவள் அவன் முகத்தை பார்த்து, “என்னை ஏன் ஸ்வீட்டி னு கூப்பிடுறீங்க?”
“உன் பெயர் தெரியாத போது என் வாழ்க்கையை இனிமையாக்க போகும் என்னவளுக்கு ஸ்வீட்டி னு பெயர் வைத்தேன்.. உன் பெயர் தெரிந்ததும் உன் பெயரிலேயே இனிமை இருக்கவும் செம்ம ஹாப்பி.. அதான் உன்னை இனியா னு கூப்பிட ஆரம்பித்தேன்.. ஆனால் இந்த ஸ்வீட்டியையும் விட முடியலை.. உனக்கு பிடிச்சு இருக்கா?”
“ஹ்ம்ம்.. பிடிச்சு இருக்குது.. ஆனா நீங்க இனியா னு கூப்பிடுறது தான் ரொம்ப பிடிக்கும்.. அப்படி நீங்க கூப்பிடும் போது.. ஹம்.. எப்படி சொல்ல!!” என்று ஒரு நொடி யோசித்தவள், “உடல் சிலிர்த்து என்னுள் ஒரு சுகமான உணர்வு வரும்..”
அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தவன், “லவ் யூ ஸோ மச் இனியா பேபி” என்றான்.
அவள் வார்த்தைகளற்ற மகிழ்ச்சியுடனும் காதலுடனும் அவனை பார்த்துக் கொண்டிருக்க,
அவன், “நீ சொல்ல மாட்டியா?” என்றதும் வெக்கத்துடன் பார்வையை தாழ்த்தினாள்.
“சரி உனக்கு எப்போ தோணுதோ அப்போ சொல்” என்று அவன் உடனே விட்டுக் கொடுக்கவும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் அழகான புன்னகையுடன், “ஐ லவ் யூ ப்ரனு” என்றாள்.
இப்பொழுது வார்த்தைகளற்ற ஆனந்தத்துடனும் காதலுடனும் பார்ப்பது அவனது முறை ஆயிற்று.
சில நொடிகள் மௌனத்தில் கழிய பிறகு அவள் தனது குழந்தை பருவத்தை பற்றி தொடர்ந்தாள். 
அவளது மாமன் குடும்பத்தின் இறப்பை பற்றி அழுகையுடன் கூறியவள், “அந்த ஒரே ஒரு நாள்.. பிரெண்ட்ஸ் வற்புறுத்தினாங்க னு அண்ணா குடிக்காம இருந்து இருந்தால் அவங்களாம் இப்போ உயிருடன் இருந்து இருப்பாங்க”
“ஹ்ம்ம்.. என்ன பண்றது! அவங்க விதி..”
இரண்டு நொடிகள் மௌனத்தில் இருந்தவள் பின், “அன்னைக்கு உங்க பிரெண்ட் உங்களை சிகரெட் பிடிக்க வற்புறுத்தவும் எனக்கு அண்ணா ஞாபகம் தான் வந்தது.. அதான் என்னையும் அறியாமல் கோபம் வந்து அவரை அடிச்சேன்.. ஆனா அதன் பிறகு ஒரு வாரத்திற்கு பயத்துடன் தான் சுத்தினேன்.. எங்கே உங்க பிரெண்ட் வந்து ஏதும் செய்திருவாரோ னு”
அவன் வாய்விட்டு சிரிக்கவும், அவள், “கிண்டல் பண்ணாதீங்க” என்று சிணுங்கினாள்.  
அவளது சிணுங்களில் தன்னை தொலைத்தவன் அவள் இதழில் பட்டும் படாமல் மிக லேசாக இதழ் ஒற்றினான்.
 
அவனது சட்டையை இறுக்கமாக பற்றியபடி கண்களை மூடி சிறு பயத்துடன் படபடத்த இதயத்தை சமன் செய்ய சில நொடிகள் எடுத்தவள் மெல்ல அவன் முகத்தை பார்த்தாள்.  
அவன் புன்னகையுடன், “மேலே சொல்லு” என்றான்.
அவன் காதல் பார்வையுடன் பார்த்திருந்தால் விலகியிருப்பாளோ என்னவோ அவன் புன்னகையுடன் இயல்பாக பேசி அவளை பேச்சில் திசை திருப்பவும் அவள் இயல்பாகி மெல்ல பேசத் தொடங்கினாள்.
அவனை இரண்டாவது முறையாக சந்தித்தது. அதன் பிறகு அவள் மனதில் ஏற்பட்ட மாற்றங்கள், அவன் மேல் காதல் தோன்றியதை பற்றியெல்லாம் கூறியவள் அவன் மருத்துவ முகாமிற்கு செல்லும் முன் கடைசியாக சந்தித்தது வரை கூறினாள்.
இரண்டு நொடிகள் மெளனமாக இருந்தவள் பிறகு அவன் முகாமிற்கு சென்ற பின் அவள் அவனை தேடியது.. அவன் நண்பனுடனான கல்யாணத்தை தடுக்க முயற்சித்தது.. சித்ராவின் தங்கை மூலம் அவனை தொடர்பு கொள்ள முயற்சித்து தோல்வியை தழுவியது.. பிறகு கல்யாணம் நின்றதும் அவனை தொடர்புக்கொள்ள முடியாமல் குற்ற உணர்ச்சியுடன் தவித்தது.. கீதா அவனை பற்றி விசாரித்து கூறியது.. மாமா உயில் பற்றியும், அந்த பணத்தை வக்கீலின் மறுப்பை மீறி அவந்திகா படிப்பிற்காக சித்தியிடம் கொடுத்தது.. அதன் பிறகு அவளது திருமணம் நடந்தது.. மாமியார் வீட்டில் கணவனின்றி இருந்தது.. கணவனின் மனநிலையை கணிக்க முடியாமல் தவிப்புடனும் பயத்துடனும் அவள் லண்டன் சென்றது வரை கூறியவள் பேச்சை நிறுத்தி கண்கள் கலங்க உதடு துடிக்க கைகள் நடுங்க அவனை பார்த்தாள்.
அவளை மிக இறுக்கமாக அணைத்தவன் அவள் தலையில் முகம் புதைத்து, “போதும் டா.. இனி பழையது பற்றி நாம என்னக்கும் நினைக்கவே வேண்டாம்” என்றான்.
அவளும் அவனை இறுக்கமாக அணைத்து, “ஹ்ம்ம்” என்றாள் கண்ணீர் வடிய. 
சில நிமிடங்களில் அவன் அணைப்பில் இருந்து விலகாமல் மெல்லிய குரலில், “விமல் பற்றி சொல்லலையே!” என்றாள்.
அவன், “தெரியும்.. நீ இந்தியா வந்ததும் நேரே கீதாவை தான் போய் பார்த்த.. உன் மாமாவின் வக்கீல் நண்பர் உதவியுடன் டைவர்ஸ் வாங்கியது.. அதன் பிறகு கோயம்புத்தூர் சென்று விமல் ஸ்கூலில் வேலை பார்த்தது.. அங்கே சென்ற ஒரு வருடத்தில் விமல் தன் விருப்பத்தை உன்னிடம் சொன்னது.. உன் மறுப்பை பொருட்படுத்தாமல் அவன் பெற்றோரிடம் சம்மதம் வாங்கியது.. அவனை தவிர்ப்பதற்காகவும் உன் வாழ்விற்கு ஒரு அர்த்தம் கொடுப்பதற்காகவும் ஒரு வயது பெண் குழந்தையை தத்தெடுத்து அபிசாரா னு பெயர் வைத்தது.. அப்பொழுதும் குழந்தையுடன் உன்னை ஏற்றுக் கொள்வதாக விமல் சொன்னது.. ஒரு வருடம் உன் சம்மதத்திற்காக காத்திருந்தவர் பொறுமை இழந்து அம்முவிடம் தன்னை அப்பா என்று அழைக்க சொன்னதை கேட்ட அன்று நீ அங்கிருந்து மறைந்துவிட்டாய்.. அங்கிருந்து ரோஸ்மேரி மேடத்தின் கடிதத்துடன் அவங்க தோழியான என் சித்தியை பார்க்க இங்கே வந்து, வந்த முதல் நாளே சர்வா கூட மோதி ஒருவழியா வேலையில் சேர்ந்தது.. என்று எல்லாமே தெரியும்”
அவன் சொல்ல சொல்ல ஆச்சரியத்துடன் அணைப்பில் இருந்து விலகியவள் இப்பொழுதும் அவனை ஆச்சரியத்துடன் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் மென்னகையுடன், “டிடெக்டிவ் பிரேம், கீதா மற்றும் விமல் மூலம் உன் கடந்த காலம் தெரியும்.. இங்கே வந்த பிறகு நடந்தது அனைத்தும் சர்வா மற்றும் அன்பு மூலம் தெரியும்” என்றவன் வசீகரமாக சிரித்து கண்ணடித்தான்.
அவள் சிறு வெக்கத்துடன் பார்வையை தாழ்த்தினாள். அவளை தீண்ட துடித்த இதழை அடக்கி, “அபிசாரா.. அழகான பெயர்.. உன் வாழ்விற்கு ஒளி தருபவள் என்ற எண்ணத்தில் வைத்த பெயர்” என்றான்.
“ஹ்ம்ம்.. நீங்க உயிர் தருபவர் நம் மகள் ஒளி தருபவள்” என்று புன்னகையுடன் கூற,
அவன் காதலுடன், “நீ எங்கள் இருவருக்கும் இனிமையை தருபவள்” என்றான்.
இருவரும் மனம்விட்டு சிரித்தனர்.
இப்பொழுது அவள் மனம் பயமின்றி நிர்மலமாக இருந்தது. ‘இனி தன்னவன் தன்னை பார்த்துக் கொள்வான்’ என்ற எண்ணம் அவளுள் வேரூன்றி இருந்தது. 
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement