Advertisement

  இதழ் 28
ப்ரனிஷா அவள் வீட்டில் விழி பிதுங்கியபடி அமர்ந்திருக்க, அவள் அருகே அவந்திகா பாவம் போல் அமர்ந்திருக்க, அவர்கள் எதிரில் அமர்ந்திருந்த கீதா ப்ரனிஷாவை விடாமல் திட்டிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் ப்ரனிஷா ‘அப்பாடா தப்பிச்சேன்’ என்ற எண்ணத்துடன் எழ போக, 
சுட்டு விரலை நீட்டி, “எழுந்த கொண்ணுடுவேன்” என்று மிரட்டிய கீதா அவந்திகாவை பார்த்த பார்வையில் அவள் சட்டென்று எழுந்து சென்று கதவை திறந்தாள்.
அவந்திகாவுடன் உள்ளே வந்த விமலை பார்த்து ப்ரனிஷா எழுந்து நிற்க, கீதா, “உட்காருடி” என்று மிரட்டினாள்.
விமல் அதிர்ச்சியுடன், “அடி பாவி! அபி குட்டியை ஸ்கூலில் விட்டுட்டு வந்து ஒன்பது மணிக்கு திட்ட ஆரம்பித்த இப்போ மணி பதினொன்று.. இன்னுமா நீ முடிக்கலை!!!”
கீதா முறைப்புடன், “உன்னை யாரு இப்போ வர சொன்னது?”
“அது சரி!!!” என்றவன் அவந்திகாவை பார்த்து, “நீங்களாவது சொல்லக் கூடாதா?”
“நான் வாயை திறந்தால் என்னையும் சேர்த்து திட்டுறாங்க” என்று பாவம் போல் கூற, 
சிரிப்பை அடக்கிய விமல், “கீது உன் கொடுமைக்கு அளவே இல்லையா?” 
கீதா அவனை முறைக்கவும் அவன், “ப்ரனிஷா பாவம் விட்டுரு”
“நான் பாதி தான் முடிச்சு இருக்கிறேன்”
“என்னது!!!” என்று அவந்திகா அதிர, கீதா அலட்டிக் கொள்ளாமல், “இவ்ளோ நேரம் இவ சொல்லாமல் கொள்ளாமல் ஓடியதிற்கு மட்டும் தானே திட்டினேன்.. ப்ரனேஷை ஏற்காமல் இருக்கிறதுக்கு இன்னும் திட்டவே ஆரம்பிக்கலை” என்றாள்.
அவந்திகா மகிழ்ச்சியுடன், “இதை நானும் வழி மொழிகிறேன் அக்கா” என்றாள்.  
விமல் ப்ரனிஷாவை பார்க்க கீதா, “அவளுக்கு சப்போர்ட் பண்ணி ஏதாவது பேசின உன்னை கொண்ணுடுவேன்.. ஓடிப் போய்டு”
“நான் எங்கே போக?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. நான் போன் பண்ணும் போது வந்தா போதும்.. இப்போ கிளம்பு” என்று விரட்டினாள்.
“வந்ததிற்கு ஒரு கிளாஸ் தண்ணியாது கொடுடி”
அவள் அவந்திகாவை பார்க்க அவள் சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
விமல் சிரிப்புடன், ”என்னை மட்டும் இல்லை எல்லோரையும் கண்ணசைவில் ஆட்டி படைக்கிற கீது” என்றான்.
“தண்ணி குடிச்சாச்சு தானே! கிளம்பு” என்று விரட்ட அவன் பெரு மூச்சொன்றை வெளியிட்டபடி, “இதுக்கு நான் ஊரிலேயே இருந்து இருக்கலாம்” என்று முணங்கியபடி கிளம்பினான்.
விமல் கிளம்பியதும் ப்ரனிஷா ஆர்வத்துடன், “இப்பவாது சொல்லுடி.. எப்போ கல்யாணம்?”
“அதான் நான் வேண்டாம் னு சொல்லாம வந்துட்டியே! அப்பறம் என்ன அக்கறை?”
“உன் மேல் அக்கறை இருந்ததால் தானே வந்தேன்”
“என்னிடமாவது சொல்லியிருக்கலாமே!”
“திரும்ப ஆரம்பிக்காதே.. இவ்ளோ நேரம் நீ திட்டியதை கேட்டேன் தானே.. நான் கேட்டதுக்கு பதிலை சொல்லுடி”
“பேச்சை மாற்றாதே.. நான் உன் மேல் இன்னும் செம்ம கோபத்தில் இருக்கிறேன்.. அறிவை அடகு கடையில் வச்சிட்டியா இல்லை அறிவே இல்லையா? உனக்குன்னு காத்திருக்கிற நல்ல வாழ்க்கையை வேணாம் னு சொல்லிட்டு இருக்கிற! ஏழு வருஷமா உன்னையே நினைச்சிட்டு இருக்கிற அந்த மனுஷனை பற்றி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியாடி! சரி அவரை விடு அபியை பற்றி யோசிச்சியா? அம்மா இல்லாமல் ஒரு குழந்தை நல்லா வளரும் ஆனா அப்பா இல்லாமல்! அதுவும் பெண் குழந்தை! உன்னையெல்லாம் என்ன செய்ய…………..” என்று ஆரம்பித்து அரை மணி நேரம் திட்டியவள் இறுதியாக, “ப்ரனேஷை ஏன் ஏற்க மறுக்கிற?” என்று கேட்டாள்.
“அவரை பற்றி யோசிக்கலையா னு கேட்டியே! அவரை பற்றி யோசித்ததால் தான் இந்த முடிவு”
“என்ன காரணம்?”
“..”
“சொல்லுடி”
“அதை பற்றி நான் அவரிடம் சொல்லிட்டேன்”
“அப்போ என்னிடம் சொல்ல மாட்ட!”
“ப்ளீஸ் கீது.. புரிஞ்சுகோ.. சிலது வெளியே சொல்ல முடியாததா இருக்கும்” என்று கலங்கிய கண்களுடன் கூறினாள்.
“அப்படி இருக்கிற விஷயத்தை கூட நீ அவரிடம் சொல்லி இருக்க னா……………….”
“அவர் என் விலகலுக்கான காரணத்தை புரிந்து விலகனும் னு தான் சொன்னேன்.. அவருக்காகத் தான் சொன்னேன்”
“போடி முட்டாள்.. நிச்சயம் அது மட்டும் காரணம் இல்லை.. உன் மனதை நீயே சரியா புரிஞ்சுக்கலை”
“இல்லை…………”
“அந்த விஷயத்தை ப்ரனேஷ் கிட்ட சொன்ன பிறகு உன் மனம் லேசானது போல் உணர்ந்தியா இல்லையா?”
இப்பொழுதெல்லாம் இரவில் பயந்து எழுவதில்லை என்றதை நினைவு கூர்ந்தவள் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
கீதா, “நீ அவரிடம் ஆறுதல் தேடி இருக்க புரியுதா! ஒருத்தி ஒரு பெண்ணிடம் சொல்ல முடியாத விஷயத்தை ஒரு ஆணிடம் சொல்கிறாள் என்றால் அந்த ஆண் அவள் மனசுக்கு நெருக்கமானவனா கணவனா தான் இருக்க முடியும்.. நீ எப்பவோ அவரை கணவனரா பார்க்க ஆரம்பிச்சிட்ட”
ப்ரனிஷா அதிர்ச்சியுடன் தோழியை பார்த்தாள்.
“அவருக்காக தான் இந்த முடிவை எடுத்தேன் னு சொல்றியே! இந்த முடிவால் அவருக்கு சந்தோஷமா? அட்லீஸ்ட் கொஞ்சமாவது நிம்மதியுடன் இருக்கிறாரா? அவர் நிம்மதி சந்தோசம் எல்லாம் நீ தான் னு ஏன் உனக்கு புரியலை? அவரை கஷ்டப்படுத்த கூடாது னு நினைத்து நீ அதை மட்டும் தான் செஞ்சிட்டு இருக்கிற” 
“இல்லை டி.. நான்.. அவர்..” என்று அவள் திணற,
கீதா, “நீ என்ன நினைக்கிற! நீ விலகினால் அவர் வேறு கல்யாணம் பண்ணிப்பார் னா! நிச்சயம் இல்லை” என்று அடித்துக் கூறியவள், “உனக்கு கல்யாணம் ஆனதாக நினைத்த போதே ஏழு வருஷம் உன் நினைவில் வாழ்ந்தவர் இனி வேறு கல்யாணம் பண்ணிப்பார் னு நீ எப்படிடி யோசிக்கிற?”
ப்ரனிஷா கண்ணீருடன் தோழியின் மடியில் தலை சாய்த்துக்கொள்ள, கீதா அவள் முதுகை வருடியபடி சிறிது நேரம் அவளை அழ விட்டவள் அவள் சற்று தெளிந்து எழுந்து அமரவும் மீண்டும் பேசினாள்.
கீதா, “ப்ரனேஷை விடு.. அவர் பரென்ட்ஸ் பத்தி யோசிச்சியா? உன்னுடனும் அபியுடனும் பழகுவதற்காகவே அவர் அம்மா இங்கே வந்திருக்காங்க.. உன்னை வற்புறுத்தாமல் உன் சம்மதத்திற்காக ஆன்ட்டி காத்திருக்காங்க.. ப்ரனேஷ் அப்பா அம்மா ரெண்டு பேருமே கிரேட் தான்.. மகனுக்காக  ஏற்கனவே திருமணமான உன்னை ஏற்றுக் கொண்டாலும் அபி!!!!
உன் சொந்த மகளை ஏற்பதே பெருசு.. அவங்களோ நீ தத்தெடுத்த மகளை தங்கள் பேத்தியாவே பார்க்கிறாங்க.. அவங்க மகனுக்காக மட்டுமல்லாமல் உனக்காகவும் தான் பார்க்கிறாங்க.. அபி குட்டியுடன் பழகிய யாரும் அவளை வேண்டாம் னு சொல்ல மாட்டாங்க ஆனா ப்ரனேஷ் அபியை பார்ப்பதற்கு முன்பே அவளை தன் மகள் னு தான் சொன்னார்..”
அவந்திகா, “ஆமா அக்கா.. மாமா அன்பு கிட்டயும் சர்வேஷ் சாரிடம் கூட அப்படி தான் சொன்னாராம்.. அப்பறம் தான் அவர் காதலை பற்றியும் உன்னை பற்றியும் சொல்லி அபியை நீ தத்தெடுத்த விஷயத்தையும் சொல்லி இருக்கார்.. அபி குட்டி மேல் மாமாவும் அவங்க அம்மாவும் வச்சிருக்கும் பாசத்தை பற்றி நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்லை.. சம்மதம் சொல்லு கா” என்றாள்.
கீதா, “நல்லா யோசித்து நல்ல முடிவை மட்டும் எடு.. நானும் அவந்தியும் சமைக்க போறோம்” என்றபடி எழுந்தவள் அவந்திகாவை பார்த்து, “உனக்காவது சமைக்க தெரியுமா?”
“ஹீ..ஹீ.. அதான் நீங்க இருக்கீங்களே அக்கா”
“சுத்தம்! நான் கேட்டதை கவனிக்கலையா! உனக்காவது னு கேட்டேனே! சரி விடு இன்னைக்கு மலரும் விமலும் தான் நம்ம சோதனை எலிகள்.. ஜமாய்ச்சிடுவோம்” என்றவள், “வையித்தியமாவது ஒழுங்கா தெரியுமா?”
“அக்கா!!!!!”
“இல்லை அவங்களுக்கு ஏதாவது ஆனால் அவசரத்துக்கு ஒரு டாக்டர் இருப்பது நல்லது தானே! அதான் கேட்டேன்” என்றவள், “சரி விடு.. ப்ரனேஷை கூப்பிட்டுக்கலாம்”
“ஹா ஹா ஹா” என்று சிரித்த அவந்திகா, “அக்காக்கு மட்டும் ஏதாவது ஆச்சு.. மாமா உங்க ஆளுக்கு வயித்தியம் பார்ப்பதற்கு முன் உங்களை புத்தூருக்கு அனுப்பிடுவார்”
“ரொம்ப சிரிக்காத! என்னுடன் சேர்ந்து நீயும் தான் சமைக்க போற!”
“அப்போ நான் தான் பலி ஆடா!”
“அதில் உனக்கு சந்தேகம் வேறயா!” என்று பேசியபடி இருவரும் சமையலை ஆரம்பித்தனர்.
ஒருவாறு போராடி வாராத சமையலை இழுத்து பிடித்து இருவரும் ஏதோ செய்து முடித்தனர்.
அப்பொழுதும் ப்ரனிஷா அமர்ந்திருந்த நிலையில் மாற்றம் இல்லை ஆனால் அவள் எண்ணத்தில் மாற்றம் வரத் தொடங்கியிருந்தது. வெள்ளத்தில் அடித்து செல்லப்படுபவர் பற்றுகோல் கிடைத்ததும் இறுக்கமாக பற்றிக்கொள்வது போல் ப்ரனேஷ் பக்கம் சாய துடித்துக் கொண்டிருந்த அவளது காதல் மனம் கீதாவின் அறிவுரையை இறுக்கமாக பற்றிக் கொண்டது.
கீதா கைபேசியை எடுத்து விமலை அழைத்தாள்.
அவன் அழைப்பை எடுத்ததும், “வீட்டுக்கு வா” என்றாள்.
“கீதுமா நாம ஒரு ஒப்பந்தம் போட்டுக்குவோமா?”
“என்ன?”
“கல்யாணத்திற்கு பிறகு நான் எதாவது தப்பு செய்தால் அரை மணி நேரத்துடன் உன் திட்டை முடிச்சிக்கனும்.. இப்படி லீவ் போட சொல்லி நாள் பூரா திட்டபிடாது.. மீ பாவம்”
“யாரு நீ பாவமா?”
“எஸ் டா செல்லக் குட்டி” என்று கொஞ்சியவன், “சரி நான் கேட்டது ஓகே வா?”
“அது நீ செய்யும் தப்பை பொருத்தது.. இப்பவே வாக்கு கொடுக்க முடியாது”
“ரைட்டு.. விதி வலியது..”
“ஹ்ம்ம்.. சீக்கிரம் வந்து சேரு.. நானே சமைத்து வச்சிருக்கிறேன்”
“என்னது!!” என்று அலறியவன், “இது உனக்கே நியாயமா? சீக்கிரம் வா னு சொல்லிட்டு அடுத்து ஒரு அணு குண்டை தூக்கி போடுறியே! நான் இப்படியே ஊருக்கு ஓடி போய்டவா!”
“டேய்!!!!!!!!!!!!” என்று இவள் பல்லை கடிக்க,
அவன், “சும்மா டா.. சும்மா சொன்னேன்.. மாமா இதோ கிளம்பிட்டேன்” என்று கொஞ்சிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
கீதா புன்னகையுடன் திரும்ப அவந்திகா அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கீதா, “என்ன?”
“ஒன்னு கேட்கலாமா கா”
“கேளு”
“விமல் எப்படி மனசு மாறினார்?”
“அவனுக்கு சின்ன வயசில் இருந்தே என்னை பிடிக்கும்.. நானும் அவனும் ரொம்ப க்ளோஸ்.. நான் திட்ட அவன் என்னை கொஞ்ச னு தான் எப்பொழுதும் இருப்போம்.. வேற வேற ஊரில் இருந்தாலும் லீவ் நாளில் ரெண்டு பெரும் ஒன்னா தான் இருப்போம்.. கிட்ட திட்ட ஒன்னாவே வளர்ந்ததாலோ என்னவோ அவனுக்கு என் மேல் லவ் பீல் வரலை.. அந்த பீல் அவனுக்கு மலர் மேல் வந்தது பட் அதை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை.. அவனுக்காகவும் மலருக்காகவும் யோசித்து நான் மலரை அவனை கல்யாணம் செய்துக்க சொன்னேன்.. ஆனா அவ சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டா.. அப்பறம் தான் நான் தயங்கி தயங்கி என் காதலை அவனிடம் சொன்னேன்.. முதலில் அதிர்ந்தவன் அப்பறம் சரி னு சொல்லிட்டான்.. காதல் தோல்வியின் வலி தெரிந்ததாலோ, நான் அவனுக்காக மலரிடம் பேசியதலோ என்னவோ அவன் சம்மதித்து இருக்கலாம்.. இப்போது அவனுக்கு என் மேல் காதல் இல்லை ஆனால் சின்ன வயதில் இருந்து இருக்கும் அதிக அன்பும் பாசமும் இருக்கிறது.. மெல்ல மெல்ல என் காதலால் அவன் மனதில் காதலை மலரச் செய்வேன்”
“நிச்சயம் கூடிய சீக்கிரம் உங்களை காதலிப்பார் கா”
“பின்ன! என்னை காதலிக்கமா எங்கே போய்ட போறான்” என்று புன்னகையுடன் கூறினாள்.
“நீங்க சான்சே இல்லை கா.. நெகிழ்ச்சியான கவலையான சிஷ்சுவேஷனை சட்டு சட்டு னு சந்தோஷமா மாத்திடுறீங்க”
அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும், “வா.. சோதனை எலி வந்திருச்சு” என்றபடி சென்று கதவை திறந்தாள்.
உள்ளே வந்த விமல் ப்ரனிஷா இருந்த நிலையை பார்த்து மனதினுள், ‘இனி தெரியாம கூட தப்பு பண்ணிடாத டா விமல்’ என்று சொல்லிக்கொள்ள
கீதா, “என்ன! இனி தெரியாம கூட தப்பு பண்ணிட கூடாது னு நினைக்கிறியா?”
“ஹீ ஹீ ஹீ” என்று அவன் அசடு வழிய அவள், “அப்போ அதைத்தான் நினைத்து இருக்கிற!”
விமல் மனதினுள், ‘பயபுள்ள போட்டு வாங்கிருச்சே!”
“ஆமா நீ நினைப்பதை கண்டு பிடிக்க சிபிஐ-யில் இருந்தா வரணும்”
“சாப்பிடலாமா?”
“கண்டிப்பா.. நீ தானே எங்கள் சோதனை எலி இன்னைக்கு”
“அதான் பக்கத்தில் டாக்டர் இருக்காங்களே!”
“அவளுக்கும் நீ தான் சோதனை எலி” என்றதும் விமல் முழித்ததை பார்த்து வாய் விட்டு சிரித்த அவந்திகா, “பாவம் கா விட்டுருங்க” என்றவள் விமலை பார்த்து, “பயப்படாதீங்க.. எனக்கு சமையல் தான் வராது.. வையித்தியம் நல்லாவே வரும்”
“அப்பாடா தப்பிச்சேன்” என்றபடி சாப்பிட அமர்ந்தவன், “ப்ரனிஷாவை கூப்பிடு”
“அவளா தெளிஞ்சு வரட்டும்.. நாம சாப்பிடலாம்”
“அதுக்காக சாப்பிடாம…………”
“ஒரு நேரம் லேட்டா சாப்பிடுவதால் ஒன்றுமில்லை.. சாப்பாட்டை விட இப்போ அவள் யோசிக்கிறது தான் முக்கியம்.. விடு”
“ஹ்ம்ம்.. நல்ல முடிவை எடுத்தால் சரி”
“இல்லாட்டி யாரு விடுறா!”
“அதுக்கு தானே டாக்டர் சார் உன்னை வர வச்சிருக்கார்”
“இன்னைக்கு நைட் நானும் ஊருக்கு வரேன்.. கார் புக் பண்ணிடு”
“ஏன்? நீ ஒரு வாரம் இருந்துட்டு தானே வரதா சொன்ன?”
“மலரே இன்னைக்கு நைட் கிளம்பினதுக்கு அப்பறம் எனக்கு இங்கே என்ன வேலை?”
“என்ன சொல்ற?”
“ப்ரனேஷ் இன்னைக்கு கிளம்புறார்” 
“ஆனா ப்ரனிஷா கிளம்பிடுவாங்க னு எப்படி உறுதியா சொல்ற?”
“கிளம்பிடுவா.. இல்லை நாம கிளம்ப வைக்கிறோம்.. அவ்ளோ தான்”
கட்டை விரலை காட்டி, “டன்” என்றான் புன்னகையுடன்.

Advertisement