Advertisement

இதழ் 9
அமுதா பரபரப்பாக சுற்றிக் கொண்டு வீட்டு வேலையாட்களை ஏவிக் கொண்டிருந்தார்.
ஆனந்தன் மனைவியின் கையை பற்றி அமர செய்து, “எதுக்கு இவ்ளோ பரபரப்பு! ப்ரனேஷை தானே பேட்டி எடுக்க வராங்க!!!!”
“ப்ரனு என்ன பண்றான்?”
“அவனுடைய ஜிம்மில் இருக்கிறான்”
“என்ன! மணி எட்டு.. ஒன்பது மணிக்கு………………..”
“ஜிம் என்ன வேறு ஏதோ கிரகத்திலா இருக்குது! அவனோட அறைக்கு அடுத்த அறை தானே! சரியான நேரத்திற்கு கிளம்பிடுவான்.. அவன் என்ன சின்ன குழந்தையா? புகழ் பெற்ற ஹார்ட் சர்ஜன் மா”
“எனக்கு மகன் தானே!”
ஆனந்தன் புன்னகையுடன், “சரி.. சரி.. உன் உடம்பை கெடுத்துக்காதே.. முதலில் இந்த ஜுஷை குடி”
பழசாரை வாங்கி அருந்தியபடி, “நீங்க?”
“நான் இப்போ தான் சாப்பிட்டேன்”
“சரி நீங்க போய் ப்ரனுவை பாருங்க” என்று கணவனை விரட்டியவர் மீண்டும் வேலையாட்களை விரட்டத் தொடங்கினார்.
அவரது பரபரப்பிற்கு காரணம் இல்லாமல் இல்லை. இன்று ப்ரனேஷை பேட்டி எடுக்க ஒரு தனியார் தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து வருகிறார்கள். ஆம் பிறந்து ஐந்து நாட்களே ஆன பெண் சிசுவிற்கு இதயத்தில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததோடு அதற்கு மிக குறைந்த தொகையை சிகிச்சை செலவிற்காக பெற்று ஒரே நாளில் பிரபலமானான் ப்ரனேஷ். 
 
ப்ரனேஷ் இந்தியா வந்து ஒன்னரை மாதம் கடந்து இருந்தது. ஆனந்தன் அவனுக்காக கட்டிய “Healthy Life” மருத்துவமனையை திறந்து வெற்றிகரமாக ஒரு மாதம் கடந்திருந்தது. ப்ரனேஷின் மருத்துவ மற்றும் நிர்வாக திறமையால் “Healthy Life” மருத்துவமனை பேசப்பட்டு ஓரளவிற்கு பெயர் பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அவன் செய்த இந்த அறுவை சிகிச்சை அனைத்து ஊடகங்களிலும் பேசப்பட்டு தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. 
தனது அறையில் கிளம்பிக் கொண்டிருந்த ப்ரனேஷ் இந்த ஒன்னரை மாத காலத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை பற்றி நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
———————————————————————————————————————————————————-
ன்று காலையில் ப்ரனிஷா பெண் ஆசிரியர்கள் அறையினுள் நுழைந்த போது இரு ஆசிரியர்கள் ‘அன்பரசி’ என்ற ஆசிரியரை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
முதலில் ஏதோ புரளி பேசுகிறார்கள் என்ற எண்ணத்தில் கண்டுகொள்ளாமல் இருந்தவள் ஒரு ஆசிரியை சிறு நக்கல் குரலில், “அன்பை வாரி வழங்குவதில் அரசியாக இருக்க வேண்டும் னு ‘அன்பரசி’ னு பெயர் வைத்து இருப்பார்கள் ஆனால் இவளோ எதை வாரி வழங்க தயாராக இருக்கிறாள் பார்” என்று கூறவும், 
கோபத்துடன் அவர் அருகே சென்ற ப்ரனிஷா, “பெயரிற்கு ஏற்றார் போல் அவங்க அன்பிற்கு அரசி தான் மேடம்.. தேவை இல்லாமல் ஒருவரை பற்றி தப்பா சொல்லாதீங்க”
“நான் ஒன்றும் இல்லாததை சொல்லலை”
“நீங்க உங்கள் கண்ணால் பார்த்தீங்களா இல்லை காதால் கேட்டீங்களா? கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் னு சொல்லுவாங்க.. ஆனால் நீங்க” என்று நிறுத்தி அவள் பார்த்த பார்வையில்,
அந்த ஆசிரியை குன்றளுடன் எழும்பாத குரலில், “இல்லை.. சுகுணா மேடம் தான் சொன்னாங்க”
“என்னனு?”
“அவங்களே சில நேரங்களில் பார்த்ததாக………..”
அவள் கோபத்துடன், “என்ன பார்த்தாங்களாம்? அன்பு மேடம் ராகுல் சார் கையை பிடிச்சி இழுத்ததையா இல்லை கண்ணால் வலை வீசியதையா?”
அந்த ஆசிரியை அவசரமாக, “இல்லை.. இல்லை.. ரெண்டு பேரும் சிரித்து பேசியதை”
ப்ரனிஷா நக்கல் புன்னகையுடன், “நீங்க எந்த ஜென்ட்ஸ் ஸ்டாஃப் கூடவும் சிரித்து பேசியது இல்லையா?”
“மேடம் நீங்க அதிகமா பேசுறீங்க”
“உங்களை சொன்னதும் கோபம் வருது! அதே போல் தானே அன்பு மேடமும்”
“அது…”
“வேணாம் மேடம்.. உண்மை தெரியாமல் யாரையும் எதுவும் சொல்லாதீங்க.. நான் தப்பா பேசியிருந்தால் சாரி” என்றவள் பொதுவாக அனைத்து ஆசிரியர்களையும் பார்த்து, “நீங்க ஜஸ்ட் லைக் தட் போற போக்கில் கல் வீசுவது போல் வார்த்தைகளை வீசிவிட்டு உங்களது அடுத்த வேலையை பார்க்க போய்டுவீங்க ஆனால் உங்கள் வார்த்தைகள் அந்த நபரை வாழ்வின் கடைசி வரை துரத்துவதோடு ஈட்டி போல் அவரின் இதயத்தை குத்தி கிழித்துக் கொண்டே இருக்கும்.. ஸோ பார்த்து பேசுங்க” என்று கூறி திரும்பியவளை அன்பசரி கண்ணீர் வழிந்த கண்களோடு நோக்க சுகுணாவோ இகழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தார்.
அன்பரசியை பார்த்து லேசாக புன்னகைத்தவள் சுகுணாவை கண்டுக் கொள்ளாமல் தான் செல்ல வேண்டிய வகுப்பிற்கு சென்றாள். 
அவள் சென்றதும் அன்பரசி யார் முகத்தையும் பார்க்காமல் தான் எடுக்க வந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள். 
தன் இடத்தில் அமர்ந்தபடி சுகுணா, “இவளுக்கு அவள் வக்காலத்து.. ரெண்டும் சரியான ஜோடி தான்”  என்று இகழ்ச்சியாகவும் நக்கலாகவும் கூறினார்.
அவரது கூற்றை யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்றதும் சிறு கோபத்துடன், “என்ன எல்லோரும் அமைதியா இருக்கிறீங்க?”
ஒரு ஆசிரியர், “என்னைக்கும் பேசாதவள் இன்னைக்கு பேசவும் அவள் சொன்னதை நம்பிட்டாங்க போல” என்று கூறி நக்கலாக சிரிக்க, சுகுணாவும் சிரித்தார்.
மற்றொரு ஆசிரியர், “அவங்க சொன்னதில் உண்மை இருப்பதால் தான் அமைதியா இருக்கிறோம்”
சுகுணா கோபத்துடன், “அப்போ நான் பொய் சொல்றேனா?”
ஒரு ஆசிரியர், ‘அதில் என்ன சந்தேகம்’ என்று முணுமுணுக்க,
சுகுணா அவரை பார்த்து, “என்ன சொன்ன? சத்தமா சொல்லு” 
சுகுணாவின் வாய்க்கு பயந்த அந்த ஆசிரியை, “இல்லை மேடம்.. நீங்க தெரியாம சொல்லியிருக்கலாமே னு சொன்னேன்”
“நான் எதையும் தெரியாமல் சொல்வதில்லை”
மீண்டும் மௌனம் நிலவ சுகுணா கோபத்துடன், “இப்போவே நான் சர்வேஷ் சாரிடம் புகார் கொடுக்க போறேன்.. இப்படி கேடுகெட்ட குணம் கொண்ட ஆசிரியர் நம்ம ஸ்கூலில் இருக்க கூடாதுன்னு சொல்ல போறேன்” என்றபடி எழ மற்றவர்கள் சிறு அதிர்ச்சியுடன் அவரை பார்க்க,
மகாலட்சுமி என்ற மூத்த ஆசிரியர்(அன்று நேர்முக தேர்வில் இருந்தவர்), “சுகுணா இது உங்களுக்கு தேவை இல்லாத வேலை.. இந்த விஷயம் இந்நேரம் சர்வேஷ் சாருக்கு தெரியாமல் இருக்கும் என்றா நினைக்கிறீங்க!!!!”
“தெரிந்து இருக்கும் தான்.. அவர் ஏன் அமைதியா இருக்கிறார் னு இப்போ தானே தெரியுது!”
“என்ன தெரிந்தது?”
“அவருக்கு வேண்டியவங்க இவளுக்கு சப்போர்ட் பண்றதால் அமைதியா இருக்கிறார்”
“சுகுணா!!!”
“என்ன! நான் சொன்னதில் என்ன தவறு?”
“இன்னைக்கு நீங்க ரொம்பவே தப்பு தப்பா பேசுறீங்க” 
சுகுணா ஏதோ சொல்ல வர அந்த நேரத்தில் பியூன் உள்ளே வந்து ஒரு காகிதத்தை மகாலட்சுமி ஆசிரியரிடம் கொடுத்தான்.
சுகுணா அவனிடம், “என்ன சர்குலர்?”
அவன், “12.45க்கு மீட்டிங்.. சீக்கிரம் லஞ்ச் முடிச்சிட்டு வர சொன்னார் சார்” என்று கூறிச் சென்றான். 
———————————————————————————————————————————————————
ப்ரனேஷ் இந்தியா திரும்பிய முதல் இரண்டு நாட்களுக்கு அமுதா சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் சுற்றிக் கொண்டிருக்க, ஆனந்தனோ அமைதியாக இருந்தார்.
வேலைகள் சீக்கிரம் முடிந்ததால் ஒரு வாரம் முன்னதாக வந்ததாக அவன் கூறிய போது ஒரு நொடி அவனை ஆழ்ந்து நோக்கிய ஆனந்தன் அதன் பிறகு அதை பற்றி ஏதும் கேட்கவில்லை. ஆனால் அமைதியாக அவன் அறியாமல் அவனை கவனிக்க தொடங்கினார். 
ப்ரனேஷ் இந்தியா வந்ததும் தனக்கு தெரிந்த முறையில் தன்னவளை தேடினான் தான் ஆனால் அவனது தேடல் தொடக்க புள்ளியிலேயே இருக்கவும் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் திணறினான் இருபினும் ஏதோ ஒரு நம்பிக்கை அவனுள் இருந்தது. மருத்துவமனை திறப்பு விழாவிற்கான நாளும் நெருங்கவும் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு தேவையானவற்றை செயல்படுத்துவதில் தனது கவனத்தை திருப்பினான். பல நேரங்களில் அவனது கவனம் சிதறத் தான் செய்தது.
இனியமலரின் நினைவு அவனுள் தகித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு நாள் இரவு அவன் அறைக்கு வந்த ஆனந்தன் எதுவும் பேசாமல் அவனை ஆழ்ந்து நோக்கவும், அந்த பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமல், “என்ன பா?” என்று சிறு திணறலுடன் வினவினான்.
அவர் கைகளை கட்டிக் கொண்டு தீர்க்கமான பார்வையுடன், “என்ன னு நீ தான் சொல்லணும்”
அவன் அமைதியாக இருக்கவும் அவர், “இத்தனை வருடங்கள் இல்லாமல் இந்த திடீர் தேடலுக்கு காரணம் என்ன?”
“டாட்!!!!!!!!!”
“சொல்லு”
அவன் இனியமலர் பற்றி தான் அறிந்ததை சொல்லி முடித்ததும், அவர், “அவள் உன்னை பார்க்கும் போது அவளிடம் சொன்னது போல் சிறந்த ஹார்ட் சர்ஜனாக நீ இருக்க வேண்டாமா?”
“..” 
“மனதை குழப்பி உன் திறமையை வீணாக்கி உன்னை நீயே தாழ்த்திக்காதே!”
“டாட்”
“அவள் உனக்கென்று இருந்தால் நிச்சயம் அவள் கிடைப்பாள்……”
“நிச்சயம் அவள் எனக்காக பிறந்தவள் தான் பா.. அவளை பற்றி ஜீவா மூலம் தெரிந்ததும் நான் நானாக இல்லை.. நெஞ்சுக்குள் தவிப்பு பதற்றம் போராட்டம் னு பிரளையமே வெடித்தது.. என்னால் அங்கே இருக்கவே முடியலை.. ஆனால் இங்கே வந்ததும் என் மனதினுள் சிறு பலம் பிறந்தது.. என்னுள் ஏதோ ஒன்று சொல்லிட்டே இருக்கிறது.. அவள் எனக்கானவள் தான் என்று..” 
அவனது தோளை தடவியவர், “நெருப்பை ஆக்கத்திற்கும் பயன் படுத்தலாம் அழிவிற்கும் பயன் படுத்தலாம்.. உனக்குள் தகிக்கும் ஜுவாலையை ஆக்கத்திற்கு பயன் படுத்து.. நீ பல உயிர்களை காக்க பிறந்தவன்.. உன் பெயரின் அர்த்தம் ‘லார்ட் ஆஃப் லைப்’.. நீ செய்யும் ஒவ்வொரு சர்ஜரி மூலம் அந்த உயிர்களை காப்பதோடு அதற்கு புத்துயிர் தருகிறாய்.. மனதை ஒருநிலை படுத்தி திடமாய் செயல்படு.. உன்னால் நிச்சயம் முடியும்.. எல்லாம் நல்லதாவே நடக்கும்”
அவன் அமைதியாகவே இருக்கவும் அவர் மீண்டும் பேசினார்.
“அதான் நீயே சொல்றியே அவள் உனக்காக பிறந்தவள் என்று.. அப்போ அந்த நம்பிக்கையை இறுக்கி பிடிச்சுக்கோ! மனசு தெளிவா இருந்தால் தான் தெளிவா யோசிக்க முடியும்.. தியானம் செய்து மனதை ஒருநிலை படுத்து.. அதன் பிறகு உனக்கே தெளிவு பிறக்கும்.. உன் தேடலை வெற்றியில் முடிப்பதற்கு என்ன வழி னு யோசி.. முன்பு உன் தேடலுடன் சேர்த்து எப்படி நன்றாக படித்தாயோ அதை போல் இப்போ தேடலுடன் சேர்த்து உன் கரியரையும் முன்னுக்கு கொண்டு போ.. நாளைக்கு இனியமலருடன் நீ வாழும் வாழ்க்கை செழிப்பாக சந்தோஷமாக இருக்கணும்.. அதை மனதில் நிறுத்தி செயல்படு”  
சில நொடிகள் மௌனத்தில் கழிய தந்தையை இறுக்கமாக அணைத்து விடுவித்தவன் தெளிந்த முகத்துடன் இதழில் புன்னகையுடன், “லவ் யூ டாட்” என்றான்.
அவரும் புன்னகையுடன் அவனது கையை பற்றி, “மீ டூ லவ் யூ மை சன்” என்று கூறி பிடியில் ஒரு அழுத்தம் கொடுத்தார்.
அதன் பிறகு பெற்றோரை மனதில் கொண்டு தனது சிந்தனையை ஆக்கபூர்வமாக செயல்படுத்த தொடங்கினான். தியானத்தின் உதவியுடன் தனது கவனம் சிதறாமல் இருக்க கற்றுக் கொண்டதோடு அதை செவ்வன செயல் படுத்தவும் செய்தான். அதன் விளைவே “Healthy Life” மருத்துவமனையின் வெற்றி.
தனது நண்பன் ஒருவன் மூலம் தனியார் துப்பறிவாளர் ஒருவரை சந்தித்து இனியமலரை தேடும் பொறுப்பை கொடுத்தான்.
நடுவில் ஒரு நாள் அவனிடம் மீண்டும் தனியே பேசிய ஆனந்தன், ‘இனியமலர் கிடைக்கவில்லை என்றாலோ அவளுக்கு திருமணம் நடந்திருந்தாலோ மனம் தளரக் கூடாது’ என்று கூறி சில பல அறிவுரைகளை சொல்லத் தவறவில்லை.
இவை அனைத்தையும் நினைத்துப் பார்த்தவன், இறுதியாக, “எங்கடி இருக்க! எப்படி இருக்க? என் தவிப்பிற்கு என்று தான் முடிவு? முடிவு வருமா? நான் ஜீவாவை சந்தித்தது நல்லதிற்கா கெட்டதிற்கா?” என்று மனதினுள் புலம்பியவன் ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்டு, “இந்திய மண்ணை மிதித்ததும் நீ எனக்கு கிடைத்து விடுவாய் என்ற புது நம்பிக்கை என்னுள் பிறந்து என்னை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.. சீக்கிரம் என்னிடம் வந்துவிடு.. இல்லை உன்னை பற்றிய தகவலையாது அனுப்பு” என்று தன்னுள் இருக்கும் தன்னவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
கைபேசியின் சத்தத்தில் தன் சிந்தனையில் இருந்து வெளியே வந்தவன் கைபேசியை எடுத்து பார்த்தான். அழைத்தது அவன் தந்தை.
அழைப்பை எடுத்து, “இதோ வந்துட்டேன் பா”
“சரிப்பா.. பேட்டி எடுக்க ஆட்கள் வந்துட்டாங்க” என்று கூறி அழைப்பை துண்டித்தார்.
சிறிது நேரத்தில் கீழே இறங்கி வந்த ப்ரனேஷை பெருமிதத்துடன் அவனது பெற்றோர் பார்க்க, பேட்டி எடுக்க வந்த பெண்ணோ அவனது கவர்ச்சிகரமான கம்பீரத்தில்  தன்னையறிமால் எழுந்து நின்றாள். 
அவன் கீழே வந்த பிறகும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை பார்த்து அவன் புருவம் உயர்த்த நிழற்பட பதிவாளர்(Camera-Man) அவளது கையை தட்டவும் சுய உணர்வு பெற்றவள் அவனைப் பார்த்து சிரித்தாள்.
சிறு தலை அசைப்புடன் அதை அங்கீகரித்தவன் கையை நீட்டி அமருமாறு கூறி எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான்.
அவனது செய்கையில் மேலும் கவரபட்டவள் புன்னகையுடன், “இப்படி ஒரு யங் டாக்டரை எதிர்பார்க்கவில்லை”
அவன் மென்னகையுடன், “என்னை பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ளாமலா இங்கே வந்தீங்க?”
அவள் சிறிது அசடு வழிந்தபடி, “அது.. சரியா சொல்லணும்னா இப்படி ஒரு ஹன்ட்சம் யங் டாக்டரை எதிர்பார்க்கவில்லை”
“ஓ! பேட்டியை ஸ்டார்ட் பண்ணலாமா?”
“எஸ்.. ஸ்டார்ட் பண்ணலாம்” என்று அவள் அவசரமாக கூறினாள்.
சிறிய ஒலிவாங்கியை(Mike) அவனிடம் நீட்ட, அதை தன் சட்டையில் பொருத்தியபடி, “நோ பர்சனல் குவெஸ்டீன்ஸ்”
“ஓகே சார்” என்றபோது அவள் முற்றிலும் இயல்பிற்கு திரும்பி இருந்தாள்.
இரண்டு நொடிகளில் பேட்டி தொடங்கியது.
அவள் நிழற்பட கருவியை பார்த்து ப்ரனேஷ் பற்றிய சிறு முன்னுரையை கூறிவிட்டு அவனிடம் திரும்பினாள்.
“வணக்கம் சார்.. இந்த குறுகிய கால வெற்றியை பற்றி என்ன நினைக்கிறீங்க?”
“டெக்னாலஜி வளர்ச்சியே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்”
“அப்போ இதில் உங்கள் திறமை என்று பெரிதாக எதுவும் இல்லை என்று சொல்றீங்களா?”
“அப்படி சொல்லவில்லை.. இந்த அளவிற்கு பேசப்படுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை என்று சொல்கிறேன்..”
அவள் சிறு மெச்சுதல் பார்வை பார்த்துவிட்டு அடுத்த கேள்வியை கேட்டாள்.
“நீங்க இதில் எதுவும் கஷ்டப்படலையா?”
“கஷ்டமான ஆபிரேஷன் தான் இல்லைன்னு சொல்லலை.. பிறந்து ஒரு நாள் ஆன குழந்தைக்கு கூட ஹார்ட் சர்ஜரி சக்செஸ்புல்லா பண்ணியிருக்காங்க..”
“இந்த மாதிரி குழந்தைங்க நார்மல் லைப் வாழ முடியுமா?”
“அது அந்த குழந்தையின் உடல் நிலையை பொருத்து.. ஒவ்வொரு கேஸும் வித்தியாசப்படும்.. பிரி-மெச்சூர் குழந்தை என்றால் தேறி வருவதற்கு ரொம்ப கஷ்டப் படுவாங்க.. இன்னும் சில குழந்தைகளுக்கு அடுத்து ஒன்று அல்லது இரண்டு ஆபிரஷன் செய்ய வேண்டி கூட வரலாம்.. பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் சேர்வதோடு டாக்டர் அட்வைஸ் படி சரியாக நடந்து தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொண்டு ரெகுலரா செக்-அப் செய்து வந்தால் இந்த மாதிரி குழந்தைங்க நார்மல் லைப் லீட் பண்ண முடியும்..”
“நீங்கள் செய்த ஆபரேஷன் பற்றி சொல்லுங்க” என்று ஆரம்பித்து சில மருத்துவ கேள்விகளை கேட்க, அதற்கு பொறுமையாக எளிய முறையில் பதில் அளித்தான்.
மருத்துவ கேள்விகளை முடித்ததும், “இத்தனை வருடங்கள் லண்டனில் இருந்தீர்கள்.. திடீரென்று இங்கே வர காரணம்?” என்று வினவினாள்.
“திடீர் முடிவு என்று இல்லை.. சிறந்த ஹர்ட் சர்ஜன் ஆக வேண்டும் என்பது என் லட்சியம்.. குறைந்த கட்டணத்தில் அதை செய்ய வேண்டும் என்பதும் என் லட்சியம்.. அதனால் நிறுவ பட்டதே “Healthy Life” மருத்துவமனை.. என் திறமையை வளர்த்துக்கொள்ள லண்டன் சென்றேன்..  பிறகு இங்கே வந்து என் லட்சியத்தை நிறைவேற்ற தொடங்கி உள்ளேன்”
“இந்த வெற்றி மூலம் அது நிறைவேறி விட்டதாக நினைக்கிறீங்களா?”
“இது தொடக்கம் மட்டுமே”
“ஒன் லாஸ்ட் குவெஸ்டீன் டாக்டர்”
“எஸ்”
“நீங்கள் வசூலிக்கும் இந்த குறைந்த கட்டணத்தை கூட கட்ட இயலாத நோயாளிகளுக்கு நீங்க எதுவும் செய்ய விரும்புறீங்களா?”
“கட்டனமின்றி அறுவை சிகிச்சையை செய்ய எனக்கும் ஆசை தான் ஆனால் மருத்துவமனை பராமரிப்பு என்று ஒரு இருக்கிறதே! அதற்கு தான் இந்த குறைந்த கட்டண வசூலிப்பு.. இலவச அறுவை சிகிச்சை செய்ய ட்ரஸ்ட் ஆரம்பிக்கும் எண்ணமும் இருக்கிறது”
“உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் டாக்டர்”
“நன்றி”
“இத்தனை நேரம் எங்களுக்கு பொறுமையாக பதில் தந்ததிற்கு நன்றி டாக்டர்” என்று கூறியவள் அவன் புன்னகையுடன் கைகூப்பி, “நன்றி” சொன்னதும் நிழற்பட கருவியை பார்த்து, “இத்துடன் உங்களிடமிருந்து விடை பெறுவது புனிதா.. நன்றி.. வணக்கம்” என்று கூறி பேட்டியை முடித்தாள்.
அதன் பிறகு ப்ரனேஷை நோக்கி, “ஆப் தி ரெக்கார்ட் ஒரு கேள்வி கேட்கலாமா?”
அவன் சிறு புன்னகையுடன், “சாரி” என்றான்.
“அப்படி என்ன சார் மர்மம் இருக்கிறது உங்கள் வாழ்வில்.. நீங்கள் தவிர்ப்பதினால் தான் அதில் ஒரு கியுரியாசிட்டி வருது”
“மர்மம் எல்லாம் இல்லைங்க.. பெருசா என்ன கேட்க போறீங்க! என் திருமணத்தை பற்றி.. எனக்கு அதில் ஏனோ பெரிதாக இன்ட்ரெஸ்ட் இல்லை.. தட்ஸ் ஆல்”
“பெரிதாக இன்ட்ரெஸ்ட் இல்லை என்றால் சின்னதா இருக்கிறதோ!”
அவன் புன்னகையுடன் மறுப்பாக தலையை ஆட்டினான். அவளும் புன்னகையுடன், “சிரித்தே நல்ல எஸ்கேப் ஆறீங்க.. இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு உங்கள் பேட்டி ஒளிபரப்பாகும்.. நைஸ் மீட்டிங் யூ டாக்டர்”  என்றபடி அவனுடன் கை குலுக்கி விடைபெற்றாள்.
அவர்கள் சென்றதும் அமுதா, “நல்லா பேசுறா.. பார்க்கவும் நல்லா இருகிறா.. என்ன ப்ரனு!!!”
அவன் புன்னகையுடன், “அம்மா.. அவளுக்கு சொன்னது தான் உனக்கும் எனக்கு கல்யாணத்தில் இன்ட்ரெஸ்ட் இல்லை”
“இதையே எவ்வளவு நாள் சொல்லுவ?”
ஆனந்தன், “விடுமா.. அவன் மனம் கவர்ந்த பெண்ணை பார்க்கும் வரை தானே சொல்ல போறான்”
“எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான்” என்று அவர் கணவரை முறைக்க, ப்ரனேஷ் சத்தமின்றி கிளம்பினான்.
“டேய்……” என்றபடி திரும்பியவர் மகன் இல்லை என்றதும் கணவரை கடுமையாக முறைக்க, அவர் இவரை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார்.
.  
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement