Advertisement

இதழ் 7
தன்னை முறைத்துக் கொண்டு நின்றிருந்த சர்வேஷை பார்த்த அவனது ஆச்சி பழச்சாற்றை உறிஞ்சி குடித்தபடி, “என்ன பேராண்டி எதுக்கு முறைக்கிற?”
“ஏய் கிழவி.. வேணாம்.. நானே கடுப்புல இருக்கிறேன்”
“கடுப்பை அடுப்பில் போட்டுட்டு இங்க வந்து உட்காரு”
“ஏன் அதை வைச்சு சோறாக்க போறியா?” என்று வினவியவன் அங்கே இருக்கையில் அமர்ந்திருந்த தாத்தாவிடம், “எப்படி தாத்தா இந்த கிழவியை சமாளிக்கிறீங்க?”
“கஷ்டம் தான் பேராண்டி” என்று தாத்தா கூற, ஆச்சி அவரை முறைத்தார்.
அப்போது காபியுடன் உள்ளே வந்த சாரதா, “சர்வா மரியாதையா பேசு” என்று அதட்டியபடி காபியை மகனிடமும் மாமனாரிடமும் கொடுத்தார்.
அவனது ஆச்சி, “விடு சாரு” என்று கூற, 
அவனோ, “அம்மா! இந்த கிழவி மட்டும் படுத்து ஸீன் போடாம இருந்து இருந்தால் நீங்க அவளை பற்றி சொல்லாமல் இருந்து இருக்க மாட்டீங்க.. எனக்கும் அவமானம் நடந்து இருக்காது”
“நீ நிதானமின்றி நடந்துக் கொண்டு அடுத்தவங்களை குறை சொல்லாதே.. ஆச்சியிடம் மன்னிப்பு கேளு” என்று சாரதா கோபத்துடன் கூற, 
ஆச்சியோ, “விடுன்னு சொல்றேன் ல சாரு.. அவன் கோபத்தில் என்னை இப்படி தானே கூப்பிடுவான்” என்றவர் பேரனிடம், “அது யாரு டா?” என்று கேட்டு கண் சிமிட்டினார்.
அவன் கடுப்புடன் அவர் கழுத்தை நெரிப்பது போல் செய்கை செய்ய, சாரதா அவன் முதுகில் ஒரு அடி போட்டார்.
அவன், “உன் ஆசை மருமக கிட்ட கேட்டுக்கோ!” என்றவன், “வாங்க தாத்தா தோட்டத்துக்கு போகலாம்” என்று கூறி தாத்தாவை அழைத்துக் கொண்டு சென்றான்.
ஆச்சி சாரதாவை கேள்வியாய் பார்க்க, அவர், “ஒன்னுமில்லை அத்தை.. என் தோழி அனுப்பி ஒரு பொண்ணு வேலைக்கு வந்தாள்.. அவ(ள்) வாழ்க்கையில் சில பிரச்சனைகள் அதனால் அவசரமா கிளம்பி இங்கே வந்திருக்கா.. நான் அவளை இவனை போய் பார்க்க சொன்னேன்.. மாமாவிடமிருந்து போன் வரவும், உங்களை பார்க்க வர அவசரத்தில் அவளை பற்றி இவனிடம் சொல்ல மறந்துட்டேன்.. அதனால் சில குழப்பங்கள்.. அவ்ளோ தான்”
“பொண்ணு எப்படி?” என்று கண்ணில் சிறு மின்னலுடன் அவர் வினவ, 
விட்டுப் போன கைபேசியை எடுக்க வந்த சர்வேஷ் கோபத்துடன், “ஏய் கிழவி! சும்மாவே இருக்க மாட்டியா?”
சாரதா பேசும் முன் ஆச்சி, “உனக்கு இங்கென்னடா ஜோலி! தோட்டத்துக்கு போ”
“இரு.. வரும் போது ஒரு பாறாங்கல்லை எடுத்துட்டு வந்து உன் தலையில் போடுறேன்”
“அதை தூக்க உடம்பில் தெம்பிருக்கா! போடா போக்கத்தவனே!”
ஏதோ பதில் சொல்ல வந்தவன் அன்னையில் முறைப்பில் ஆச்சியை பார்த்து குரங்கு போல் முகத்தை வைத்து உறுமிவிட்டு கைபேசியை எடுத்துக்கொண்டு சென்றான்.
“இப்போ தான் உன் முகம் அழகா இருக்குது ராசா” என்ற பாட்டியின் குரல் அவனை தொடர்ந்தது.
என்ன தான் ஆச்சியுடன் மல்லுக்கு நின்னாலும் ஆச்சியிடம் அவனுக்கு பிரியம் அதிகம். அவருக்கும் இவன் செல்லப் பேரனே.
அவன் சென்றதும் ஆச்சி, “அவன் கெடக்கிறான்.. நீ அந்த பொண்ணு பத்தி சொல்லு”
சாரதா சிறு புன்னகையுடன், “நல்ல பொண்ணு ஆனா நீங்க நினைப்பது சரிவராது அத்தை.. அவளுக்கு ரெண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது”
“ஓ! அவ கணவன் என்ன செய்றான்?” 
“அவளை பற்றிய பேச்சு வேணாமே அத்தை”
“சரி விடு.. சர்வாக்கு ஒரு வரன் வந்திருக்கிறது”
“பொண்ணு யாரு? யாரு சொன்ன வரன்?”
“பொண்ணு பேரு ஆராதனா.. இன்ஜினியரிங் படிச்சிட்டு காலேஜில் வேலைக்கு போகுது.. தூத்துக்குடியில் இருக்கிறாங்க.. அப்பா பெரிய மளிகைக் கடை வச்சிருக்கிறார்.. ஒரே பொண்ணு.. மாமாவுக்கு தெரிந்தவங்க தான் இந்த வரனை சொன்னாங்க.. உன் அத்தான் ஆனந்தனுக்கு தூரத்து சொந்தம்.. உன் அத்தானிடம் விசாரிக்க சொல்லு”
“சரிங்க அத்தை.. நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்றபடி அவர் படுக்க உதவி செய்து போர்வையை போர்த்திவிட்டு வெளியே சென்றார்.  
 
திருநெல்வேலியில் ப்ரனிஷாவிற்கு சொர்ணம் காட்டிய வீடு திருப்தியாக இருக்கவும் அன்றே தங்கியிருந்த விடுதி அறையை காலி செய்துவிட்டு அந்த வீட்டிற்கு குடியேறினாள். அது ஒற்றை படுக்கை அறை கொண்ட தனி வீடு. சர்வேஷ் வீடு அடுத்த தெருவில் இருந்தது.
னியமலரின் நினைவுகளுடன் போராடிக் கொண்டிருந்த ப்ரனேஷ் கைபேசியின் அலறலில் நிகழ் காலத்திற்கு திரும்பினான்.   அழைத்தது மார்க். 
(அவர்களின் ஆங்கில உரையாடல் தமிழில்..)  
மார்க், “எப்படி இருக்கிற?”
“இதற்கு என்ன பதிலை சொல்லனும்னு எதிர் பார்க்கிற?”
“உண்மையான பதிலை”
“பையித்தியம் பிடிப்பது போல் இருக்கிறது”
“உன் அப்பாவிடம் பேசு”
“வேணாம்”
“ஏன்? உன் நெருங்கிய தோழன் அவர் தானே.. இந்த விஷயத்தில் உன் உணர்வுகளை முழுமையாக தெரிந்தவர்”
“அவர் நிம்மதியையும் கெடுக்க விரும்பவில்லை”
“என்ன செய்ய போற?”
“ஒரு வாரத்தில் இந்தியா செல்லப் போறேன்”
“நோயாளிகள்!!!”
“நீ பார்த்துக்கோ”
“நீ செய்ய வேண்டிய நான்கு முக்கியமான அறுவை சிகிச்சைகள் இருக்கிறது.. அவர்கள் உயிர் முக்கியமில்லையா உனக்கு!!!”
“அவர்கள் உயிர் முக்கியம் என்பதால் தான் இந்த முடிவு”
“என்ன சொல்ற?”
“இந்த மனநிலையில் என்னால் முடியாது.. அவர்களின் உயிருடன் விளையாட விரும்பவில்லை.. ஸ்டீபன் சாரிடம் நாளைக்கு பேசணும்.. அவர் பார்த்துப்பார்..”
“சரி.. உன் பெற்றோரிடம் என்ன சொல்லுவ?”
“யோசிக்கணும்.. அம்மாவை சுலபமா சமாளிச்சிடலாம் ஆனா அப்பா.. ஹ்ம்ம்.. நம்ப வைப்பது கஷ்டம் தான்”
“ஒருவேளை உன் தேடல் தோல்வியில் முடிந்தால்! அதாவது அவளுக்கு கல்யாணம் ஆகி இருந்தால்?”
“அவளை தொந்தரவு செய்ய மாட்டேன்.. இத்தனை நாட்கள் எப்படியோ! ஆனா இப்போ.. அவள் என்ன ஆனாள்? எப்படி இருக்கிறாள்? என்ற தவிப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. என் தேடலின் முடிவு வெற்றியோ தோல்வியோ எனக்கு ஒரு முடிவு தெரிந்தாகனும்..”
“சரி.. என் கேள்விக்கு பதில் சொல்லவில்லையே”
“அதான் சொன்னேனே.. அவளை………”
“நான் உன்னை பற்றி கேட்கிறேன்”
அவன் சிறு விரக்தி புன்னகையுடன், “இத்தனை நாட்கள் இல்லாமல் போனது மீண்டும் இல்லாமல் போவதில் புதிதாக மாற்றம் வர போவதில்லை”
“நீ ஏன் வேறு பெண்…………..”
“முதலில் இதற்கு விடையை தேடுகிறேன்”
“அதன் பிறகு”
“அதை அப்போது பார்ப்போம்”
“சரி.. உன் தேடல் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்”
“நன்றி” என்றவன் “சரி நாளைக்கு பார்க்கலாம்” என்று கூறி அழைப்பை துண்டித்தான். 
ரண்டு வாரங்கள் கடந்திருந்தது. சர்வேஷும் சாரதாவும் திருநெல்வேலி திரும்பி இருக்க, ப்ரனிஷா வேறு வழியில்லாமல் சர்வேஷ் பள்ளியில் வேலைக்கு சேர்ந்திருந்தாள். சர்வேஷிற்கு அவன் ஆச்சி சொன்ன வரன், பெண் வீட்டில் மூன்று மாதங்கள் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டது.
ப்ரனிஷா பள்ளியில் சர்வேஷ் கண்ணில் படாமல் இருந்துக் கொண்டாள். தன் சொந்த வாழ்க்கையை பற்றி மற்றவர்கள் விமர்சிக்க விரும்பாததால் சக ஆசிரியர்களிடம் இருந்து விலகியே இருந்தாள் ஆனால் மாணவர்களிடம் தோழியை போல் பழகினாள். அவளது இந்த செய்கையால் மாணவர்களின் அபிமான ஆசிரியையாக மாறியிருக்க, ஒரு சில ஆசிரியர்களிடம் ‘திமிர் பிடித்தவள்’, ‘தலை கணம் கொண்டவள்’ என்ற பெயரையும் ஒரு சில ஆசிரியர்களிடம் ‘பசங்க தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.. சரியான மாயக்காரி’ என்ற பெயரையும் வெகு சில ஆசிரியர்களின் மனதில் ‘நல்ல பெண்.. திறமைசாலி’ என்ற பெயரையும் பெற்றிருந்தாள்.
சென்னை விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்த விமானத்தில் அமர்ந்திருந்த ப்ரனேஷின் மனம் இனியமலரிடம் இறுதியாக பேசிய நாளை பற்றி நினைத்துக் கொண்டிருந்தது.
பள்ளி நண்பன் திருமணத்தில் அவளை சந்தித்தவன் அடுத்து அவளை தேடி அவளது கல்லூரிக்கு சென்றான். அவள் கல்லூரி அருகே இருந்த மரத்தடியில் அவளுக்காக காத்திருந்தான்.
தோழியுடன் பேசியபடி வந்துக் கொண்டிருந்தவள் இவனை முதலில் பார்க்கவில்லை.
அவள் தோழி, “ஹே மலர் அந்த மரத்துக்கிட்ட பாரேன்.. செம்ம ஹன்ட்சம்மா ஒருத்தன் நிற்கிறான்”
“ச்ச்.. உனக்கு வேற வேலையே இல்லைடி.. பசங்க தான் இப்படி போற வர பொண்ணுங்களை சைட் அடிப்பாங்க”
“ஏன் பொண்ணுங்க சைட் அடிக்க கூடாதுன்னு ஏதும் சட்டம் இருக்கிறதா?”
“இருந்தா மட்டும் நீ அடங்கவா போற?”
“இல்லை தான்..”
“உன்னை..”
“சரி.. நீ கொஞ்சம் திரும்பி பாரேன்.. நிஜமாவே செம்ம பிகர்.. கூலர்ஸ் மாட்டிட்டு அவன் நிக்கிற ஸ்டைலே தனி அழகா இருக்குது”
“சும்மா இருடி”
“ஹே அவன் நம்மை நோக்கி தான் வரான்”
“கனவு காணாதே”
“கானவில்லை நிஜம்.. பக்கத்தில் வந்துட்டான்டி” என்றபோது அவள் குரலில் சிறு பதற்றம் இருந்தது.
“இது தான் பில்டிங் ஸ்டராங் பேஸ்மென்ட் வீக் ஆ!!”
அவளது தோழி அவளை முறைக்க, “ஹாய் இனியா!” என்ற குரலில் கண்ணில் மின்னலுடன் திரும்பிப் பார்த்தாள். 
அவளது கண்களில் தெரிந்த ஆர்வத்தில் அவன் மனதினுள் சாரல் அடித்தது. அவன் கண்ணில் இருந்த கண்ணாடியை கழட்டி டீ-ஷர்ட்டில் மாட்டியபடி வசீகர புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
அவள் தோழி, “யாருடி? உனக்கு தெரியுமா?” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தாள் ஆனால் அது அவள் காதில் விழவில்லை, அவள் கவனமோ ப்ரனேஷிடம் இருந்தது.
அவளது நிலை உணர்ந்தோ என்னவோ அவன் அவள் தோழியிடம், “கொஞ்ச நேரம் அங்கே வெயிட் பண்ண முடியுமா சிஸ்டர்? இனியா கிட்ட கொஞ்சம் பேசணும்”
அவள் இனியமலரை பார்க்க, அவள் பதில் சொல்வதரியாது திணறினாள்.
அவளது தோழி, “என்ன சார்! வந்தீங்க என்னவோ சொல்றீங்க! அதெல்லாம் போக முடியாது.. நீங்க யாருன்னே தெரியாது…………..”
“இனியாவிற்கு என்னை தெரியும்”
அவள் தோழி, “உனக்கு இவரை தெரியுமா?” 
அவள் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினாள். தோழி பார்த்த பார்வையில் மெல்லிய குரலில், “ப்ளீஸ்டி.. அப்பறம் சொல்றேன்” என்று கெஞ்சினாள்.
அவள் தோழி, “சீக்கிரம் பேசிட்டு வா” என்றவள் அவன் பக்கம் திரும்பி, “அஞ்சு நிமிஷம் தான்” என்று கறாராக கூறிவிட்டு சற்று தள்ளி நின்றுக் கொண்டாள்.
அவன், “எப்படி இருக்கிற?”
“நல்லா இருக்கிறேன்” என்று அவள் மெல்லிய குரலில் சிறு தயக்கத்துடனும் படபடப்புடனும் கூறினாள். 
அவன் மெல்லிய புன்னகையுடன், “முதல் நாள் பார்த்ததுக்கு நீ ரொம்ப தைரியமான பொண்ணு.. பட பட பட்டாசுன்னு நினைத்தேன்”
“அது.. அது ஏதோ தெரியாம”
“தெரியாம னா?”
“நிஜமா அவ்ளோ கோபம் எனக்கு வரும் னு எனக்கே தெரியாது.. ஏதோ ஒரு வேகத்தில்..” என்று தடுமாறியவள் ஏதோ ஒரு நினைவில் சிறிது கண் கலங்க,
அவன், “ஹே.. என்னாச்சு?” என்று பதறினான்.
சட்டென்று தன்னை சமாளித்தவள், சிறு புன்னகையுடன், “ஒன்னுமில்லை.. நீங்க என்ன இந்த பக்கம்?”
அவள் பேச்சை மாற்றுவது புரிந்து அவன் துருவி கேட்காமல் அவளது கேள்விக்கு பதிலை சொன்னான். “உன்னை பார்க்க தான் வந்தேன்”
அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிய எப்பொழுதும் போல் அவளது விழி வலையில் விழுந்தான்.
அவள் ஆச்சரியத்துடன், “நான் இங்கே படிப்பது தெரியுமா?”
“தெரியும்”
“எப்படி?”
அவன் மென்னகையுடன், “தெரிந்து கொண்டேன்”
“ஏன்?”
“உன்னை பார்க்க”
“என்னை எதற்கு பார்க்கணும்?”
அவன் விரிந்த புன்னகையுடன், “எனக்கு தோணினதை உன்னிடம் சொல்ல” என்றதும் அவளிடம் படபடப்பு வந்து ஒட்டிக் கொண்டது. தோளில் போட்டிருந்த பையின் வாரை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
காதலை சொல்ல நினைத்தவன் அவளுடன் இப்படி பேசுவது பிடித்திருக்கவும் சிறிது நாட்கள் இப்படி பழகிவிட்டு தன் காதலை சொல்லலாம் என்ற முடிவை எடுத்தான். ஒருவேளை இந்த தருணத்தில் அவன் தன் காதலை சொல்லியிருந்தால் அவளை இழந்திருக்க மாட்டன் என்பதை அவன் அறியவில்லை.
அவளது படபடப்பை ரசித்தபடி மென்னகையுடன், “என்ன சொல்லட்டுமா?” என்று வினவினான்.
“எ..ன்..ன சொல்..லனும்?”
“உனக்கு சரியான பெயரை தான் வைத்திருக்கிறார்கள்”
‘ஏன்?’ என்று அவள் வாய் திறந்து கேட்கவில்லை ஆனால் அவள் கண்கள் கேட்டது.
அவன், “மலரை போல் மென்மையானவளா பழகுவதற்கு இனிமையாகவும் இருக்கிற”
அவள் சிறு வெக்கம் கலந்த புன்னகையுடன், “தேங்க்ஸ்” என்றாள்.
“என் பெயர் என்னனு தெரியுமா?”
“ப்ரனேஷ்”
அவன் கண்ணில் சிறு ஆச்சரியம் தெரியவும் அவள் மெல்லிய குரலில், “சித்ரா (அக்)கா கல்யாண வீட்டில் உங்களை கூப்பிடும் போது கேட்டேன்”
“அப்போ நீ கவனித்து இருக்கிற”
அவள் சிறு பதற்றத்துடன், “அப்படியெல்லாம் இல்லை” என்று மறுக்க, 
அவன் மென்னகையுடன், “அதில் தப்பில்லை.. நான் உன்னை பற்றி தெரிந்துக்கொள்ள வில்லையா!”
“என்னை பற்றி என்ன தெரியும்?” என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள்.
“உன் வீட்டு முகவரி அப்பறம் இந்த காலேஜில் படிக்கிறன்னு தெரியும்.. என்ன படிக்கிற?”
“B.Sc ஜூவாலஜி.. பைனல் இயர்”
“நான் என்ன பண்றேன்னு தெரியுமா?”
அவள் ‘தெரியாது’ என்பது போல் உதட்டை பிதுக்க அதன் அழகில் அவன் சொக்கித் தான் போனான். அவளது இதழை தீண்ட துடித்த தன் இதழ்களை அடக்கி, “MBBS முடிச்சிட்டு ரெசிடென்சி பைனல் இயரில் இருக்கிறேன்.. சிறந்த ஹார்ட் சர்ஜன் ஆகணும் என்பது தான் என் கனவு லட்சியம் எல்லாம்”
“உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்”
“தேங்க்ஸ்”
“நான் கிளம்பட்டுமா?”
“அதுக்குள்ளேயா?”
அவனது சுருங்கிய முகத்தை பார்த்தவள் தயக்கத்துடன், “பிரெண்ட் வெயிட் பண்றா”
“இன்னும் கொஞ்ச நேரம்”
“ப்ளீஸ்”
சிறு பெருமூச்சொன்றை வெளியிட்டவன், “சரி.. உன் போன் நம்பர் சொல்லு”
“என்னிடம் செல் இல்லை”
“வாட்!”
அவள் அமைதியாக இருக்கவும் அவன், “நிஜமா இல்லையா?”
அவள் ‘இல்லை’ என்று தலையை ஆட்டினாள்.
அவன், “ஏன்?”
“கண்டிப்பா இருக்கனுமா என்ன?”
“இந்த காலத்தில் சின்ன பசங்க கூட வச்சிருக்காங்க”
“என்னிடம் இல்லை”
“அது தான் ஏன்?”
“செல் இல்லை என்றால் என்னிடம் பேச மாட்டீங்களா?”
“பேச தானே கேட்கிறேன்” என்று புன்னகையுடன் கூறவும் அவளும் புன்னகைத்தாள் பிறகு மணியை பார்த்தவள், “டைம் ஆச்சு.. நான் கிளம்புறேன்” என்றாள்.
“நான் த்ரீ வீக்ஸ் மெடிக்கல் கேம்ப் போறேன்.. கிளம்புவதற்கு முன் உன்னை பார்த்து பேசணும் தோனுச்சு.. அதான் வந்தேன்..”
“ஓ” என்றபோது அவள் குரலில் சிறு ஏமாற்றம் இருந்தது.
“நான் உன்னை தொடர்பு கொள்ள வேறு வழி இல்லையா? உன் பிரெண்ட் நம்பருக்கு பேசவா?”
“வேண்டாம்”
“ப்ளீஸ்”
“ப்ளீஸ்.. எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை”
“எனக்காக கொஞ்சம் மாற்றக் கூடாதா?”
“ப்ளீஸ்” என்று அவள் தவிப்புடன் கெஞ்சவும் அவன் தான் மனம் இறங்க வேண்டியதாகியது. 
“சரி..  த்ரீ வீக்ஸ் கழித்து பார்க்கலாம்.. டேக் கேர்..”
“யூ டூ டேக் கேர்” என்று கூறி புன்னகையுடன் இருவரும் விடை பெற்றனர்.
ஒருவேளை அவள் தோழியின் எண்னை பெற்றிருந்தாலோ அல்லது தனது கைபேசி எண்னை அவளிடம் கொடுத்திருந்தாலோ அவளை இழந்திருக்க மாட்டான் தான். இதான் விதி வலியது என்பதோ!
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement