Advertisement

இதழ் 6
கோபத்துடன் நின்ற சர்வேஷ், “உனக்கென்ன பெரிய கிளியோபேட்ரா னு நினைப்பா! இந்த உலகத்தில் இருக்கும் கடைசி பெண் நீ தான் என்ற நிலை வந்தாலும் என் மனம் உன் பக்கம் சரியாது.. இந்த உணவை குழந்தைக்கு கொடு” என்றவன் அருகில் இருந்த பெஞ்சில் ஒரு கிண்ணத்தை வைத்துவிட்டு, அலறிய தனது கைபேசியை அவள் கையில் இருந்து பிடுங்கி, “ஹலோ” என்று சொன்னபடி நகர்ந்தான்.
“ப்ரனிஷா இருக்காளா டா?”
“அம்மா! அவள் என்ன பெரிய இவளா? ரொம்ப தான் இடம் கொடுக்கிறீங்க?” என்று அவன் கோபத்துடன் கத்தியது அவள் காதிலும் விழுந்தது.
“அவள் பேசியதை கேட்டாயா? எப்போதிருந்து இப்படி மாறினாய்?”
“நான் ஒன்றும் மாறவில்லை.. நீங்க தான்………….”
“அவள் நிச்சயம் உன் முன்னாடி பேசியிருக்க மாட்டாள்.. நீ அவள் இருக்கும் இடத்திற்கு செல்லாமல் அவள் பேசியதை கேட்டிருக்க மாட்ட..”
“குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க போனேன்..”
“அதற்கு எதற்கு நீ? சொர்ணம் எங்கே போனாள்?”
“அம்மா அவள் பேசியது என் அம்மாவிடம்.. அதுவும் என் செல்லில் என் வீட்டில் இருந்து”
“இருக்கட்டுமே!”
“அவள் பேசியது சரியா?”
“ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டு.. அவள்…………………”
“அவளை பற்றி நான் தெரிந்துக்கொள்ள விரும்பவில்லை.. நான் கிளம்பி ஊருக்கு வரேன்” என்றபடி அவன் அழைப்பை துண்டிக்க அவனது கைபேசி மீண்டும் அலறியது.
அதை எடுத்து, “என்ன மா?”
“போனை ப்ரனிஷாவிடம் கொடு”
“அம்மா!” 
“கொடுன்னு சொன்னேன்”
அவன் கோபத்துடன் சென்று கைபேசியை அவளிடம் நீட்டினான். 
சில நொடிகள் அவள் அதிர்ச்சியுடன் நிற்க, அவள் தோளை தட்டிய குழந்தை, “மம்மி.. அங்தில்(அங்கிள்) தோவம்(கோபம்).. வா.. போலாம்”
“இதோ நாம கிளம்பிடலாம்.. மம்மி பைல் எடுத்துட்டு கிளம்பிடலாம்” என்றபடி வரவேற்பு அறை நோக்கி நகர்ந்தாள். அப்பொழுது தான் சர்வேஷ் கோபத்துடன் வந்து கைபேசியை நீட்டினான்.
அவள் ‘என்ன’ என்பது போல் பார்க்கவும், அவன் மனதினுள், ‘பெரிய இவ! வாய் திறந்தா முத்து உதிர்ந்திடும்’ என்று அவளை திட்டியவன், “அம்மா பேசணுமாம்” என்றான்.
அவள் அதை வாங்கி, “ஹலோ” என்றதும், சாரதா, “என்ன முடிவு பண்ணியிருக்க?”
“நான் யோசிக்கணும் மேடம்”
“உனக்கு இது தான் பாதுகாப்பு”
“..”
“ரோஸி என்னை நம்பி தான் உன்னை அனுப்பி இருக்கிறாள்.. நான் தான் அவளுக்கு பதில் சொல்லணும்”
“நீங்க பதில் சொல்லும் நிலையில் உங்களை நிச்சயம் வைக்க மாட்டேன் மேடம்”
“சரி.. உன் நம்பர் சொல்லு”
“இனி தான் வாங்கணும்”
“என்ன!”
“நேத்து கிளம்பும் போது சிம்மை ஒடச்சு தூர போட்டுட்டு செல்லையும் தூர போட்டுட்டு தான் வந்தேன்”
“செல்லை ஏன்?”
“IME நம்பர் வைத்து ட்ரக் பண்ணலாமே!”
“விமல் அவ்ளோ பெரிய ஆளா?”
“இல்லை அவர் நண்பர் ஒருவர் இந்த லைனில் இருக்கிறார்”
“சரி முதலில் ஒரு போனையும் சிம்மையும் வாங்கு”
“சரி மேடம்”
“வீடு பற்றி சொர்ணம் ஏதும் சொன்னாளா? ஏதும் பார்த்திருக்கிறாளா?”
“தெரிந்தவங்க கிட்ட சொல்லியிருக்கிறதா சொன்னாங்க”
“சரி அதை போய் பாரு.. ஒன்றை நன்றாக நினைவில் வை.. தேவை இல்லாத பயம் வேண்டாம்.. சர்வேஷால் உனக்கு எந்த பிரச்சனையும் வராது..”
“சரி மேடம்” என்று இறங்கிய குரலில் அவள் கூற, அதை கண்டுகொள்ளாதவர், “ஒழுங்கா சாப்டுட்டு கிளம்பு.. நீ பட்டினி கூட இருப்ப குழந்தை பாவம்”
“ஏன் மேடம் எனக்காக இவ்ளோ செய்றீங்க?”
“தெரியலை.. செய்யணும் தோணுது.. ரோஸி மட்டுமே இதற்கு காரணம் இல்லை.. சிலரை காரணமே இல்லாமல் பார்த்தவுடன் ரொம்ப பிடித்து போகும்.. அப்படி வச்சுக்கோ” என்று அவர் சிறு புன்னகையுடன் கூற,
அவள், “வேண்டாம் மேடம்.. என் மேல் இந்த அன்பு வேண்டாம்”
“ஏன்?”
“சிறு வயதில் இருந்தே என்னை பிடிக்காதவர்களை தான் பார்த்திருக்கிறேன்.. என்னை பிடித்த ஜீவன்களை விதியோ என் ராசியோ என்னிடமிருந்து பிரித்துவிட்டது..”
“என்ன பேச்சு இது? உன் குழந்தைக்கு உன்னை பிடிக்காதா?”
“அவள் கடவுள் எனக்கு கொடுத்த வரம்.. என் வாழ்வின் பிடிப்பு, உயிர் எல்லாமே அவள் தான்”
“அதிகமா யோசிக்காதே.. சாப்டுட்டு சொர்ணம் சொன்ன வீட்டை போய் பார்.. பிடித்திருந்தால் ஹோட்டல் ரூமை காலி செய்து இங்கே வந்திடு.. அத்தைக்கு இப்போ கொஞ்சம் பரவா இல்லை.. நான் இன்னும் இரண்டு நாட்களில் வந்திருவேன்”
“சரி மேடம்” என்று சொல்வதை தவிர அவளுக்கு வேறு வழி இல்லை.
“சர்வேஷிடம் போனை கொடு”
“சரி மேடம்” என்றவள் அவனை தேட, அங்கே வந்த சொர்ணம், “தம்பி ரூமில் இருக்குது மா.. கொடுங்க நான் கொடுத்துடுறேன்..” என்றவர், “ஈஸ்வரி” என்று குரல் கொடுக்க, ஒரு பெண், “என்ன கா?” என்றபடி வந்தாள்.
“இதை தம்பி கிட்ட கொடு” என்றதும் அந்த பெண் கைபேசியை வாங்கி செல்ல, சொர்ணம், “நீங்க வாங்க.. சாப்பிடலாம்”
“இல்லை வேணாம்……..”
“அம்மா இருந்திருந்தா விட்டிருக்க மாட்டாங்க.. வாங்க.. பாப்பா வேற பசியில் இருக்குது” என்று அழைத்து செல்ல வேறு வழியில்லாமல் சென்றவள் ஐந்தே நிமிடத்தில் குழந்தைக்கு ஊட்டிவிட்டு தானும் ஏதோ கொறித்துவிட்டு, “நீங்க சொன்ன வீட்டை இப்போ போய் பார்க்கலாமா?” என்று வினவினாள்.
சொர்ணம், “ஒரு பத்து நிமிஷம் மா.. தம்பி இப்போ கிளம்பிடும்.. அப்பறம் நாம போகலாம்”
“சரி நான் தோட்டத்தில் இருக்கிறேன்” என்றவள் அவர் பதிலை எதிர் பார்க்காமல் சர்வேஷ் கண்ணில் படாமல் இருக்க குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றாள்.
——————————————————————————————————————————————————–
வீட்டிற்கு சென்ற ப்ரனேஷின் மனம் தன் ஸ்வீட்டியை சுற்றியே வலம் வந்தது. அவனது மனம் பின்னோக்கி சென்றது…….
அவளை முதல் முறையாக சந்தித்த பிறகு அவ்வபோது அவன் மனதில் வந்து வந்து போனவளை சில மாதங்கள் கடந்த நிலையிலும் அவனால் மறக்க முடியவில்லை. அவளை தினமும் செல்லும் இடமெல்லாம் சாலையோரங்களில் தேடி தோல்வியை சந்தித்தான். 
அவனது முகத்திலிருந்து எதை கண்டரோ அவன் தந்தை ஒரு நாள் அவனை அவர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு வரச் சொன்னார்.
அவரை அவர் அறைக்கு சென்று பார்த்த போது அவர், “ஆர் யூ இன் லவ் மை சன்?” என்று தான் கேட்டார்.
அவன் அதிர்வுடன், “டாட்” என்று கூறி புன்னகைத்தான்.
“என்ன?”
“எனக்கே தெரியலை.. பட் யூ ஆர் சான்ஸ்லெஸ் டாட்”
அவர் புன்னகையுடன், “என் மருமகள் பெயரென்ன?”  
அவன் உதட்டை பிதுக்கி, “தெரியாது.. அவ யாரு? பெயரென்ன? என்ன பண்றா? எங்கே இருக்கிறாள்? எதுவும் தெரியாது”
ஒரு நொடி கூட தாமதிக்காமல், “கண்டு பிடிச்சிரலாம்..” என்றவர், “இதற்கு முன் எங்கே பார்த்த?” என்று வினவினார்.
தந்தையை கட்டிக் கொண்டு, “தன்க் யூ டாட்” என்றவன் பிறகு அவளை சந்தித்த சம்பவத்தை பற்றி கூறினான்.
“தைரியமான பொண்ணு தான்.. அவள் கையில் என்ன வைத்திருந்தாள்?”
“ஏன்?”
“சொல்லு.. பர்ஸ்.. ஹன்ட் பக் இப்படி ஏதும் இருந்ததா?”
சிறிது யோசித்தவன், “ஒற்றை தோளில் பேக் போட்டிருந்தது போல் தான் இருந்தது” என்று சிறு சந்தேகத்துடன் கூற,
அவர், “அப்போ காலேஜ் படிக்கிறாள்”
“எஸ் டாட்” என்றபோது அவன் கண்ணில் ஒளி வந்தது.
“உன் காலேஜ் சரௌண்டிங்ஸ் பக்கத்தில் இருக்கும் மற்ற காலேஜ் லிஸ்ட் எடு.. அதுவும் ஆட்டோ சென்ற திசை வைத்து ஒரு பக்கம் லிஸ்ட் எடுத்தால் போதும்.. ஆட்டோ என்பதால் ரொம்ப தொலைவில் காலேஜ் இருக்காது.. இது தான் சரின்னு சொல்லவில்லை.. அவள் காலேஜில் இருந்து தான் வந்திருக்கணும் னு சொல்ல முடியாது ஆனால் முதலில் இந்த முறையில் தேடு.. பிறகு பார்க்கலாம்..”
“சூப்பர் டாட்”
“ஒருவேளை அந்த பெண் உன்னை…………………”
“நிச்சயம் அவள் எனக்கு தான் டாட்”
“சரி.. ஒருவேளை நூற்றிற்கு ஒரு சதவிதம் என்ற முறையில் அவள் உன்னை விரம்பவில்லை என்றாலோ அவள் வேறு யாரையாவது விரும்பினாலோ…………”
“நான் அவளை தொந்தரவு செய்ய மாட்டேன்”
“அது எனக்கே தெரியும்.. நான் சொல்ல வருவது நீ மனம் ஒடிந்து விடக் கூடாது.. மேலும் இந்த தேடலில் உன் படிப்பை விட்டிரவும் கூடாது”
“நிச்சயம் டாட்”
“சரி நீ கிளம்பு.. நான் கிளம்ப லேட் ஆகும்”
“லவ் யூ டாட்.. பை” என்றபடி வெளியே வந்தவன் தன் கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான். ஏனெனில் அவன் கண் முன் வந்துக் கொண்டிருந்தது அவன் மனம் கவர்ந்தவள்.
அவள் இவனை பார்க்கவில்லை. எட்டு வயது சிறுவனை கையில் ஏந்தியபடி பரபரப்பாக உள்ளே வந்தவள் எதிரே தென்பட்ட மருத்துவரிடம், “டாக்டர் எமர்ஜென்சி.. ஒரு கார் இடிச்சிருச்சு” என்றவள் அந்த சிறுவனின் சிகிச்சைக்கு தேவையான பத்திரங்களில் கையெழுத்திட்டு சிறிது முன் பணமும் செலுத்தினாள். 
அந்த சிறுவனை சிகிச்சைக்காக உள்ளே அழைத்து சென்ற பிறகே சுற்றுபுறத்தை கவனித்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த ப்ரனேஷை பார்த்தவளின் கண்களில் இரண்டு நொடிகளில் அவனை அடையாளம் தெரிந்ததிற்கான அறிகுறி தோன்றியது.
அவளுக்கு தன்னை அடையாளம் தெரிகிறது என்பதை புரிந்துக் கொண்டவன் அவளிடம் மெல்லிய புன்னகையுடன், “என்னை ஞாபகம் இருக்கிறதா?”
அவள் ‘ஆம்’ என்பது போல் தலை அசைக்கவும் அவன், “அன்றைக்கு என் நண்பன் என்னை வற்புருத்தியது நிஜம் ஆனால் அது எனக்கு முதல் முறை இல்லை(அவள் கண்கள் அதிர்ச்சியில் சிறிது விரிந்தது) வெகு சில நேரங்களில் பிடித்திருக்கிறேன் ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பழக்கத்தை விட்டுவிட்டேன்..”
அவளது விழிகள் ஆச்சரியம் மற்றும் சிறு மகிழ்ச்சியை வெளிபடுத்தியது. 
அப்பொழுது அந்த சிறுவனின் பெற்றோர்கள் வரவும் அவள் அவனிடம் சிறு தலை அசைப்புடன் விடை பெற்று விலகினாள்.
அவன் அவள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் இருந்து அவளது பெயரையும் வீட்டு முகவரியையும் அறிந்துக் கொண்டு தந்தை அறைக்கு சென்றான்.
“டாட்” என்றபடி உள்ளே சென்றவன் அங்கே நோயாளி அமர்ந்திருக்கவும், “சாரி.. சாரி” என்று கூறிவிட்டு வெளியே சென்று அவளை தேட, அவள் சென்றிருந்தாள். அந்த சிறுவனின் பெற்றோரிடம் கேட்ட போது அவர்களுக்கு அவளை யாரென்றே தெரியவில்லை. அடிபட்ட அவர்கள் மகனை மருத்துவமனை அழைத்து வரும் வழியில் தகவல் சொன்னதாக கூறினார்கள்.
“ச.. மிஸ் பண்ணிட்டேனே!” என்று நினைத்தவன் பிறகு ’அதான் பெயரும் வீடும் தெரிந்து விட்டதே! பார்த்துக்கலாம்’ என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு அவளது பெயரை கூறிப்பார்த்தன்.
இனியமலர்! அழகான பெயர்.. உன்னை போல் உன் பெயரிலும் இனிமை இருக்கிறதே ஸ்வீட்டி” என்று மென்னகையுடன் கூறிக்கொண்டவன், கைபேசியில் வந்த அழைப்பில் தந்தை அறைக்கு சென்று தான் அறிந்ததை பற்றி மகிழ்ச்சியுடன் கூறிவிட்டு தன் வீட்டிற்கு சென்றான். 
  
அடுத்து இரண்டு நாட்களிலேயே தனது சிறு வயது தோழன் திருமணத்தில் அவளை சந்தித்தான். இவன் முதலில் அவளை பார்க்கவில்லை. மணமக்கள் ஒன்றாக மேடையில் அமர்ந்த பொழுது தான் மணப்பெண்ணின் அருகில் நின்றிருந்தவளை பார்த்தான். பார்த்த நொடியில் இருந்து கண்களை விலக்க முடியாமல் தவித்தான். முதல் முறையாக அவளை புடவையில் பார்க்கவும் அவள் தேவதையாகவே தோன்றினாள். முதல் முறையாக அவளது அழகு வெகுவாக அவனை ஈர்த்தது. எதேர்ச்சையாக அவனை பார்த்தவளின் கண்களிலும் சிறு மகிழ்ச்சி தெரிந்தது ஆனால் யாரோ அவளை அழைக்கவும் அந்த இடத்தை விட்டு சற்று நகர்ந்தாள்.
அவனது எண்ணமும் பார்வையும் அவளையே தொடர்ந்தது.
அப்பொழுது, “இந்த கல்யாணம் நடக்காது.. நானும் சித்ராவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்” என்று கூறியபடி ஒரு இளைஞன் வந்தான்.
அந்த சத்தத்தில் சிறிது தெளிந்த ப்ரனேஷ் மணப்பெண்ணை பார்த்தான். அவளது முகத்தில் சிறு பயமும் கலக்கமும் குடியிருக்க அவளது கரமோ இறுக்கமாக மணமகனின் கரத்தை பற்றியிருந்தது.
ப்ரனேஷ் நண்பன் அருகே சென்று மெல்லிய குரலில், “என்ன டா?”
மணமகன், “சித்ரா முதலில் விரும்பியது உண்மை தான் ஆனால் அவன் நல்லவன் இல்லை டா.. பொண்ணு பார்க்க போன அன்னைக்கே இதை சொல்லிவிட்டாள்.. அவளது நேர்மை பிடித்து போய் தான் கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னேன்”
“மெயில், போன் மெசேஜ் இந்த மாதிரி ஏதாவது?”
“மெயில் அனுப்பியது இல்லை.. போன் மெசேஜ் நிறைய உண்டு ஆனால் அந்த போனையும் நம்பரையும் மாத்திட்டா”
“சரி நான் பார்த்துக்கிறேன்” என்றவன் அந்த இளைஞன் அருகே சென்று, “நீ சிஸ்டரை லவ் பண்ணியிருக்கலாம்.. அவங்க உன்னை லவ் பண்ணாங்களா?”
“ஆமா”
“அப்படியா சிஸ்டர்?” என்று ப்ரனேஷ் மணப்பெண்ணிடம் கேட்கவும் அவள் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், “இல்லை.. பொய் சொல்றான்.. என்னை லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணான்”
வந்தவன், “இல்லை பொய் சொல்றா… அவளை இப்படி சொல்லச் சொல்லி மிரட்டி இருக்கிறாங்க.. ப்ளீஸ் சார்.. எங்களை பிரிச்சிடாதீங்க” என்று கெஞ்சலும் உருக்கமுமாக கத்தினான்.
ப்ரனேஷ், “நீ சொல்வது உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?”
“இதோ இந்த போடோஸ்” என்று அவன் பல புகைப்படங்களை காட்டினான்.
“இப்போது இருக்கும் டெக்னாலஜியில் இதை போல எவ்வளவோ கிரியேட் பண்ணலாம்.. வேற ஏதாவது சொல்லு.. வேற யாரவது சாட்சி இருக்கிறாங்களா?”
“இதோ அவள் எனக்கு அனுப்பிய மெசேஜ்ஸ்” என்று தனது கைபேசியை காட்டினான்.
அதை வாங்கி பார்த்தவன், “எந்த எண்ணில் இருந்து உனக்கு மெசேஜ் வந்திரிக்கிறதோ அந்த எண்ணிற்கு அழைக்கிறேன்” என்றபடி அழைத்து ஒலிபெருக்கியை இயக்கினான்.
அழைப்பு எடுக்கப்பட்டு, “ஹெலோ” என்று ஒரு ஆண் குரல் கேட்டது.
ப்ரனேஷ், “ஹலோ.. சித்ரா இருக்காங்களா?”
“அப்படி யாருமில்லை.. ராங் நம்பர்” என்று கூறி அந்த ஆள் அழைப்பை துண்டித்தார்.
வந்தவன், “அவ நம்பர் மாத்திட்டா”
“நீ சொல்லும் ஆதாரத்தில் வலுவே இல்லை” என்றவன் மணமக்கள் பக்கம் திரும்பி, “இவன் கிடக்கிறான்.. நீ தாலியை கட்டு மச்சான்.. இவன் என்ன செய்றான்னு பார்க்கலாம்” என்றதும் மணமகன் அவசரமாக தாலியை கட்ட, அனைவரும் அட்சதை தூவ, வந்தவனோ கெட்ட வார்த்தையில் திட்டி சாபம் கொடுத்துவிட்டு செல்ல,
ப்ரனேஷ் நண்பனின் கையை குலுக்கி, “விடு மச்சான்.. பொறுக்கியின் சாபமெல்லாம் பலிக்காது.. உன் வாழ்க்கை சிஸ்டருடன் ரொம்ப சந்தோஷமா இருக்கும்”
“தேங்க்ஸ் டா” , “தேங்க்ஸ் அண்ணா” என்று மணமக்கள் அவனிடம் கூறினார்கள்.
பிறகு பெண்ணின் பெற்றோர் வந்து அவனிடம் நன்றியை கூறினார்கள். 
ஒருவழியாக பரபரப்பு அடங்கி மண்டபம் இயல்பு நிலைக்கு திரும்பியது. நண்பர்கள் கூட்டம் மணமக்களை கிண்டல் செய்வதில் இறங்கவும் சிரிப்பு சத்தம் மீண்டது.
அவன் உணவறைக்கு சென்றபோது, வழியில் அவனை பார்த்த அவன் தேவதை, “தேங்க்ஸ்” என்றாள்.
“எதுக்கு?”
“சித்ரா அக்கா என் தோழியின் அக்கா”
“அதனால்?”
“சொல்லணும் னு தோனுச்சு சொன்னேன்”
“நானும் சொல்லணும் னு தோன்றுவதை சொல்லலாமா?”
அவள் கண்கள் எப்பொழுதும் போல் அழகாக விரிந்தது.
அவன் வசீகர புன்னகையுடன், “என்ன சொல்லட்டுமா?”
அப்பொழுது சித்ரா அவளை அழைக்கவும் புன்னகையுடன், “இன்னொரு நாள் சந்தித்தால் சொல்லுங்க” என்று கூறிச் சென்றாள்.
“நிச்சயமாக சொல்றேன்” என்ற அவனது கூற்றில் ஒரு நொடி திரும்பி பார்த்துவிட்டு சென்றாள். அதன் பிறகு அன்று தனிமையில் அவளை சந்திக்க முடியவில்லை.
கைபேசியில் வந்த அழைப்பில் நிகழ் காலத்திற்கு திரும்பினான்.
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement