Advertisement

இதழ் 4
சாரதா ப்ரனிஷா கிளம்பியதும் மகனை தான் அழைத்தார் ஆனால் அவன் அப்பொழுது வேறு ஒருவருடன் பேசிக் கொண்டு இருக்கவும் அவர் குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து விஷயத்தை கூறினார். பிறகு மீண்டும் சர்வேஷை அழைத்த போது அழைப்பு போகவில்லை. அதன் பிறகு அவரது கணவரின் அன்னை உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் அவர் சாரதாவை பார்க்க ஆசைபடுவதாகவும்  தகவல் வரவும் ஊருக்கு கிளம்பும் அவசரம் மற்றும் பதற்றத்தில் ப்ரனிஷாவை பற்றி கூற மறந்திருந்தார். சர்வேஷ் பன்னிரெண்டாம் வகுப்பு ஆசிரியரை மட்டும் தேர்வு செய்துவிட்டு கிளம்பி வருவதாக கூறியிருந்தான். 
சர்வேஷ் ப்ரனிஷா இருவருமே தங்கள் குணத்திற்கு சற்று மாறுபட்டு தான் இன்று நடந்துக் கொண்டனர். 
சர்வேஷ் தவறாக கணிப்பது இதுவே முதல் முறை. அதற்கு அவன் மூளையின் ஒரு மூலையில் ஆச்சி பற்றி யோசித்துக் கொண்டிருந்த மனநிலை ஒரு காரணம் என்ற போதிலும் அவன் அன்னை ப்ரனிஷா பற்றி கூறாதது தான் முழுக்காரணம்.
ப்ரனிஷாவிடம் தன்னம்பிக்கை நிறைய இருந்த போதிலும் சிறு வயதில் இருந்து எப்பொழுதும் அமைதியாகவே இருந்து அணைத்து விஷயங்களிலும் விட்டுக் கொடுத்து போவதே அவள் குணம் என்று சொல்வதை விட அப்படி பழக்கபடுத்தப் பட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.. இன்று தான் முதல் முறையாக தனக்காக குரல் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறாள். தெரியாத ஊரில் தான் தான் தனியாக போராடி மகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு காரணம் என்றால் நேற்று இவள் கிளம்பும் போது ரோஸ்மேரி கூறிய ‘உன்னை கொஞ்சம் மாற்றிக்கொள்.. வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் னு பழமொழியே இருக்கிறது.. என் கணிப்பு சரி என்றால் உன் இயல்பு இது இல்லை, உன்னை நீயே அமைதிபடுத்திக் கொள்கிறாய்.. இப்படி அமைதியாவே இருக்காமல் கூட்டை விட்டு வெளியே வந்து எப்பொழுதும் உற்சாகத்துடன் இரு.. உன்னை பார்த்து தான் உன் மகள் வளர்வாள்.. தன்னம்பிக்கை மட்டும் போதாது பாஸிடிவ் எனர்ஜியும் ரொம்ப முக்கியம்’ என்ற அறிவுரையும் ஒரு காரணம்.   
ப்ரனிஷா வெளியே செல்லவும் சர்வேஷ் கைபேசி அலறியது. அழைத்தது அவன் அன்னை தான்.
அவன் அவசரமாக எடுத்து, “அம்மா………………..” என்று ஆரம்பிக்கும் முன்,
அவர் அவசரமாக பேசினார், “சர்வா.. ஆச்சி பற்றிய நியூஸ் வரவும் ஊருக்கு கிளம்பிய அவசரத்தில் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. இண்டர்வியுவிற்கு ப்ரனிஷா னு ஒரு பொண்ணு வருவா.. அவளிடம் எக்ஸ்பிரியன்ஸ் சர்டிபிகேட் இல்லை ஆனால் அவள் திறமையில் உனக்கு நம்பிக்கை இருந்தால் தயங்காம வேலை கொடு.. அவள்………………………..” என்று சொல்லிக் கொண்டிருந்த போதே சிக்னல் பிரச்சனையால் தொடர்பு துண்டிக்கப் பட்டது.
‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணியிருக்க கூடாதா மா’ என்று மனதினுள் சொல்லிக் கொண்டவன், அருகில் இருந்தவரை பார்த்து, “ப்ரனிஷா சொன்னது உண்மை தான்” என்றவன் “இனி நீங்க பார்த்துக்கோங்க.. நான் ஊருக்கு கிளம்புறேன்”
அவர், “டுவள்த் பயோலாஜி ப்ரனிஷாவை முடிவு பண்ணிறலாமா?”
அவன் அங்கே இருந்த பெண்மணியை பார்த்து, “நீங்க என்ன நினைக்கிறீங்க மேடம்?”
“ஷீ இஸ் டலென்ட்டட்”
அவன், “இன்னும் ஆறு பேரு இருக்காங்களே”
அவர், “அம்மா…………..”
“அவங்க ப்ரனிஷா திறமையில் நம்பிக்கை இருந்தால் வேலை கொடுன்னு தான் சொன்னாங்க, கண்டிப்பா கொடுன்னு சொல்லலை”
அங்கே இருந்த சற்று வயதான ஆண் அவனை ஆழ்ந்து நோக்கவும் அவன், “நான் வேணும் னு எதுவும் பண்ணலை”
“வேணாம் னு பண்ணலை என்றால் சரி”
இப்பொழுது அவன் அவரை ஆழ்ந்து நோக்கவும் அவர் சிறு புன்னகையுடன், “சரி சரி.. மீதம் இருக்கிற ஆறு பேரில் யாரும் ப்ரனிஷாவை விட பெட்டராக இல்லாத பட்சத்தில் ப்ரனிஷாவை தேர்வு செய்கிறேன்”
அவன் சிறு தோள் குலுக்கலுடன் கிளம்பினான்.
சிறு பெருமூச்சுடன் தன்னை ஆசுவாசப்படுத்திய அந்த பெண்மணி, “எப்படி சார் இவரை இவ்ளோ ஈஸியா டீல் பண்றீங்க?”
அவர் மெலிதாக சிரித்தார்.
“எப்போதும் இதுக்கு மட்டும் பதில் சொல்லாதீங்க”
“உங்களிடம் தப்பு இல்லை என்றால் பயமேன்?”
“அப்போ நாங்க தப்பு பண்றோமா?”
“அப்படி சொல்லலை.. தேவை இல்லாம பயப்படாதீங்க னு சொல்றேன்.. ப்ரனிஷா எப்படி தைரியமா பேசினாங்க”
“ஹ்ம்ம்.. அதுக்காகவே அந்த பொண்ணை செலக்ட் பண்ணனும் னு நான் முடிவு பண்ணிட்டேன் சார்”
“இதை மட்டும் சர்வேஷ் கேட்கணும்”
“உங்களுக்கு ஏன் சார் இந்த கொலைவெறி!”
“சரி சரி… அடுத்த ஆளை கூப்பிடுவோம்” என்றபடி நேர்காணலை தொடர்ந்தார்கள்.
ர்வேஷ் காரை கிளப்பிக் கொண்டு பள்ளி நுழைவாசல் கதவருகே வந்த பொழுது அங்கே இருந்த வேப்ப மரத்தின் அடியில் குழந்தையுடன் நின்றுக் கொண்டிருந்த ப்ரனிஷாவை பார்த்தான். அவளிடம் மன்னிப்பு கேட்கலாமா என்று நினைத்தவனை ஏதோ ஒன்று தடுக்க நிற்காமல் சென்றுவிட்டான்.
கையில் இருந்த பிஸ்கட்டை சாப்பிட்டு முடித்த அபிசாரா, “இதான் நம்ம ஸ்தூல்(ஸ்கூல்) ஆ?”
குழந்தையின் வாயை துடைத்து தண்ணீர் கொடுத்தபடி புன்னகையுடன், “ஆமா.. இனி அபி குட்டியும் அம்மாவும் இங்கே தான் வருவோம்.. அபி செல்லமாவுக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கா?”
குழந்தை தலையை ஆட்டி கண்களை உருட்டியபடி, “ஹ்ம்ம்.. ரொம்ப பிடிச்சி” என்றது. 
அவள், “பாப்பாக்கு பசிக்குதா?”
குழந்தை ‘இல்லை’ என்று தலையை ஆட்டி, “இப்போ பாப்பா பித்தி(பிக்கி அதாவது பிஸ்கட்) சாப்தேன்”     
“ஓகே.. கிளம்பலாமா?”
“ஹ்ம்ம்” என்று குழந்தை தலையை ஆட்டியது.
சர்வேஷ் சென்றதை கவனிக்காத ப்ரனிஷா அவன் வீட்டிற்கு தான் கிளம்பினாள். சாரதா இல்லை என்று தெரிந்தாலும் அவர் வர சொன்ன காரணத்தால் வேலையாளிடம் விஷயத்தை சொல்லிவிட்டு அவள் தங்கியிருக்கும் விடுதிக்கு செல்லும் எண்ணத்துடன் சர்வேஷ் வீட்டிற்கு சென்றாள். சர்வேஷ் அங்கிருப்பது தெரிந்திருந்தால் நிச்சயம் சென்றிருக்க மாட்டாள். 
சிறிது நேரம் தீவிரமாக யோசித்த ப்ரனேஷ் ஒரு முடிவுடன் தந்தையை அழைத்தான். அவர் அழைப்பை எடுத்து, “எப்போ வர? டிக்கெட் நீ போடுறியா இல்லை நான் போடணுமா?”
அவன் சிறு புன்னகையுடன், “எப்போதும் போல் இப்பவும் பிண்றீங்க பா”
அவரும் புன்னகையுடன், “இங்கே வர முடிவை நீ எடுக்கலை என்றால் எனக்கு போன் பண்ணியிருக்க மாட்ட, சரி சொல்லு”

“இங்கே எல்லாத்தையும் முடிச்சிட்டு ஒரு மாசத்தில் அங்கே இருப்பேன்.. சூழ்நிலையை பார்த்துட்டு டிக்கெட் நானே புக் பண்ணிக்கிறேன்..”
“அம்மா கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவா”
“அப்போ உங்களுக்கு சந்தோஷமில்லையா?”
அவர் வாய்விட்டு சிரித்தபடி, “சரி அடுத்த விஷயத்தை சொல்லு”
“அப்பா என்னிடம் பேசும் போது என் அப்பாவா பேசுங்க.. சைக்காட்ரிஸ்ட்டா இல்லை..”
“சரி”
“என்ன சரி?”
“இப்போ நான் என்ன சொல்லணும்! அப்போ வேற ஏதும் விஷயம் இல்லையே வச்சிரவா னு கேட்கணுமா?”
“இதுக்கு முதல்ல கேட்டதே பெட்டர்”
அவர் மெலிதாக சிரித்தார்.
“சரி பா.. விஷயத்திற்கு வரேன்.. புது ஹாஸ்பிடல் என்ன நிலைமையில் இருக்கிறது?”
“இன்னும் மூணு வாரத்தில் முடிந்துவிடும்.. டாக்டர்ஸ் எல்லாம் அல்மோஸ்ட் அப்பாயிண்டட்”
“என்னென்ன பிரிவுகள்”
“எல்லாமே இருக்கிறது.. முக்கிய பிரிவு உன்னுடையது தான்”
“நர்ஸ், கேர் டேக்கர், அட்மின் பீப்பிள் எல்லாம்”
“நர்ஸ் அண்ட் அட்மின் பீப்பிள் கூட ஓகே தான்.. கேர் டேக்கர் தான் ஏற்பாடு செய்யணும்”
“ஹ்ம்ம்.. ஒன்னு பண்ணுங்க.. அதுக்கு ஆட்களை வர சொல்லுங்க.. தாமதமா வரவங்களை அப்படியே வெளியே அனுப்பிடுங்க.. சரியான நேரத்திற்கு வந்தவங்களை ஒரு அறையில் இருக்க சொல்லுங்க.. அவர்களை கேமரா மூலம் கண்கானிங்க.. நாலு மணி நேரம் எந்த தகவலும் கொடுக்க வேண்டாம்.. அந்த நாலு மணி நேரத்தில் யாரு முகம் சுழிக்காம பொறுமையா இருந்தாங்களோ அவங்களை தேர்வு செயுங்க.. நம்மளை விட பேஷன்ட்ஸ் கூட அதிகமா இருக்க போவது கேர் டக்கர்ஸ் அண்ட் நர்ஸ் தான்.. ரெண்டு பேருக்குமே சகிப்புத் தன்மையும் பொறுமையும் ரொம்ப அவசியம்”
“சரி.. அப்படியே செய்திடலாம்.. அப்புறம் அம்மா கிட்ட நீ சொல்றியா இல்லை………..”
“நீங்களே சொல்லுங்க”
“ஏன்?”
“உங்களுக்கு தெரியாதா?”
“நீ தான் உன் அப்பா வா மட்டும் பேச சொன்ன!”
“என் அப்பாவிற்கு என்னை தெரியும்.. பை” என்று கூறி அழைப்பை துண்டித்தான். 
ப்ரனிஷா சர்வேஷின் வீட்டிற்கு சென்ற போது அவன் தன் அறையில் கிளம்பிக் கொண்டிருந்தான்.
வரவேற்பறையில் வேலையாள் ப்ரனிஷாவிடம், “அம்மா இல்லை.. ஊருக்கு போயிருக்காங்க………………”
“தெரியும்.. அவங்க வர சொன்னாங்களே னு வந்தேன்.. மேடம் போன் பேசினால்.. நான் நன்றி சொன்னதாக சொல்லிடுங்க.. நான் இண்டர்வியு நல்லா பண்ணினேனும் சொல்லிடுங்க.. இதை சொல்லத் தான் வந்தேன்”
“அம்மா உங்களுக்கு வீடு பார்க்க சொன்னாங்க”
“இல்லை நானே பார்த்துக்கிறேன்”
“அது..” என்று அவர் சிறிது தயங்கவும் அவள், “என்ன?”
“அம்மா சொன்னாங்களே னு நான் தெரிந்தவங்க கிட்ட சொல்லி வச்சிருக்கிறேன்.. அதான்……..” என்று அவர் இழுக்கவும்,
“ஓ!” என்றவள் சிறிது யோசித்தாள்.
சர்வேஷுடன் நிகழ்ந்த உரையாடலுக்கு பிறகு இனி சாரதாவிடம் உதவி கேட்க கூடாது என்று முடிவெடுத்திருந்தாள். இப்பொழுது இவரின் கூற்றில் சிறிது திணறியவள், ‘ஏதாவது சொல்லி தட்டி கழிக்க முடியுதா பார்ப்போம்’ என்று மனதினுள் கூறிக் கொண்டாள்.
பிறகு வேலையாளிடம், “சிங்கிள் பெட்ரூம் வீடா இல்லை டபிள் பெட் ரூமா? எங்கே இருக்கிறது? என்ன வாடகை? அட்வான்ஸ் எவ்வளவு?”
அவர், “ஏன் மா இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனால் தான் நீங்க டீச்சரமா னு நான் நம்புவேன்னு சொன்னேனா!”
ப்ரனிஷா புன்னகைக்கவும் அவர், “இப்படி கேள்விகளை கேட்டால் பசங்க ரொம்ப பாவம்”
“நீங்க இப்படி நேரத்தை கடத்தினால் என் மகள் பாவம்”
“என்னமா சொல்றீங்க?”
“இனி தான் மதியம் சாப்பிடனும்”
“என்ன மா நீங்க! பச்சை பிள்ளையை இப்படியா பட்டினி போடுவீங்க?”
“பால் பிஸ்கட் சாப்பிட்டா.. நீங்க பதிலை சொன்னால் நான் சீக்கிரம் கிளம்பிடுவேன்”
வேலையாள் ஏதோ சொல்ல வந்த போது, “சொர்ணம் அவங்களை சாப்பிட வர சொல்லுங்க” என்ற சர்வேஷின் குரலில் அவள் அதிர்ச்சியுடன் குரல் வந்த திசையை பார்த்தாள்.
அவர்கள் பேசத் தொடங்கிய போதே வந்தவன் அவளது குணத்தை கணிக்கும் பொருட்டு அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்க தொடங்கினான். அவளது பேச்சில் இருந்தே அவளது குணத்தை ஓரளவிற்கு புரிந்துக் கொண்டவன், அன்னை அவளிற்காக வீடு பார்க்க சொன்னதில் இருந்தே அன்னை அவளிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிந்துக் கொண்டான். குழந்தை சாப்பிடவில்லை என்றதும் அவன் அன்னை இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதை நினைத்து தான் அவளை சாப்பிட அழைத்தான். ஆனால் அவனது இந்த அழைப்பே அவளை இந்த வேலை வேண்டாம் என்ற முடிவை எடுக்க வைக்கும் என்பதை அறிந்தால் என்ன செய்வானோ!!!
னைவியின் அதிகபடியான பேச்சினை மனதில் கொண்டு மகன் தன்னை விஷயத்தை கூற சொல்வது புரிந்து ஆனந்தன் மனைவியிடம் விஷயத்தை சொன்னார்.
அமுதா மகிழ்ச்சியுடன், “நிஜமாவா சொல்றீங்க” 
“..”
“என்ன அமைதியா இருக்கிறீங்க?”
“ஒரே கேள்வியை எத்தனை முறை தான் கேட்ப?”
“ஏன் பதில் சொல்ல மாட்டீங்களா?”
அவர் அமைதியாக பார்க்கவும், “சரி.. அவன் ஏன் என்னிடம் சொல்லலை? ஏன் உங்களை சொல்ல சொன்னான்?”
“ஏன் னு உனக்கு தெரியாதா?”
ஒரு நொடி மெளனமாக இருந்தவர், “ஹ்ம்ம்.. அப்படி பேசியது அதிகம் தான் ஆனால் அதனால் தானே வருகிறான்”
“அப்படியா!”
“சரி.. நீங்க தான் உங்கள் மகனின் மனதை மாத்துனீங்க.. போதுமா!!!”  என்று அவர் சிறு கோபத்துடன் கூறவும் ஆனந்தன் புன்னகையுடன் மனைவியின் தோளில் கை வைத்து, “இன்னமும் நீ ஒரு குழந்தை தான் டா” என்று செல்லம் கொஞ்சினார்.
சட்டென்று பூத்த மெல்லிய புன்னகையுடன் அமுதா, “ஹம்.. நான் ஒன்னும் குழந்தை இல்லை” என்று சிணுங்கினார்.
ஆனந்தன் விரிந்த புன்னகையுடன் மனைவியை மென்மையாக அணைத்துக் கொண்டார்.
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement