Advertisement

இதழ் – 3
நேர்காணல் அறையினுள் சென்றதும் ப்ரனிஷா சிறு புன்னகையுடன், “குட் அப்ட்டர்-நூன்” என்றபடி தனது கோப்பியத்தை நடுவில் அமர்ந்திருந்த நபரிடம் கொடுத்தாள். அங்கே மூவர் அமர்ந்திருந்தனர். நடுவில் அவள் வயதை ஒத்த இளைஞன் அமர்ந்திருக்க அவனுக்கு வலதுபுறம் நாற்பதைந்து வயதில் ஒரு பெண்மணி அமர்ந்திருக்க, இடதுபுறம் ஐம்பத்தியெட்டு வயதில் ஒரு ஆண் அமர்ந்திருந்தார்.
இரண்டே நிமிடத்தில் அவளது கோப்பியத்தை பார்த்து முடித்த அந்த இளைஞன் அடுத்து அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டான்.
“கோல்ட் மெடலிஸ்ட்.. முன்பு வேலை பார்த்த பள்ளியில் நல்ல ரிசல்ட் தந்ததா சொல்லியிருக்கிறீங்க ஆனா எக்ஸ்பிரியன்ஸ் சர்டிபிகேட் இல்லை!!! நேற்றுவரை அங்கே தான் வேலை பார்த்து இருக்கிறதா சொல்லியிருக்கிறீங்க.. ஸோ இன்று காலையில் தான் இங்கே வந்திருக்கணும்.. வந்ததும் இண்டர்வியுக்கு வந்திருக்கீங்க! எப்படி! யார் மூலம் தெரிந்து வந்தீங்க? ஏன் இந்த திடீர் மாற்றம்? எக்ஸ்பிரியன்ஸ் சர்டிபிகேட் இல்லாமல் எப்படி நீங்கள் சொல்வதை நம்புவது? எந்த தைரியத்தில் இங்கே வந்தீங்க? இல்லை இதில் ஏதும் உள் நோக்கம் இருக்கிறதா?”
அவனது வேகத்திலும் திறமையிலும் ஆச்சரியம் அடைந்தவள் அவனது கேள்விகளில் குழப்பத்துடன் அவனை பார்த்தவள், “நான் சர்வேஷ் சாரை பார்க்க முடியுமா?”
“நான் கேட்ட கேள்விகளுக்கு இது பதில் இல்லையே!”
“இல்லை தான் ஆனால் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அவருக்கு தெரியும்” 
இப்பொழுது குழப்பத்துடன் பார்ப்பது அவன் முறையாயிற்று.
அவன், “சர்வேஷ் சார் உங்களுக்கு வேண்டியவாரா?”
“தெரிந்தவர்”
“அப்படியா?” என்றபோது அவன் கண்ணில் வந்துபோன மின்னலுக்கு அவளுக்கு அர்த்தம் புரியவில்லை.
அவன், “இங்கே சிபாரிசுக்கு இடமில்லை”
“நான் சிபாரிசுடன் வரவில்லையே!”
“இப்பொழுது தானே சர்வேஷ் சார் தெரிந்தவர் என்று சொன்னீங்க!”
“தெரிந்தவர் என்று தானே சொன்னேன்.. எனக்கு வேலை தர சொல்லி அவர் சொல்லுவார் என்று சொல்லவில்லையே.. என் திறமையை பார்த்து வேலை கொடுங்க”
“எந்த திறமையை பார்த்து? பொய் சொல்லும் திறமையா?”
“வாட்?”
“எதற்கு இவ்வளவு அதிர்ச்சி?” என்று அவன் அலட்சியத்துடன் வினவ, எழுந்து மேஜை மேல் இருந்த தனது கோப்பியத்தை எடுத்தவள் நிமிர்வுடன், “நான் சர்வேஷ் சாரை பார்க்க முடியுமா?” என்று வினவினாள்.
அவன் இடுங்கிய விழிகளுடன் அவளை பார்த்தான், அவளோ சிறிதும் அச்சமின்றி நேர்பார்வையுடன் அவனை பார்த்தாள். அதில் அவன் புருவசுழிப்பில் சிறு முடிச்சு விழுந்தது. பொதுவாக அவனது இந்த பார்வையில் தப்பு செய்தவர்கள் முகத்தில் பதற்றம் வந்துவிடும் ஆனால் இவளது நேர்பார்வையும் தைரியமும் அவனை மேலும் குழப்பியது.
அவள் மீண்டும், “சர்வேஷ் சார் இருக்கிறாரா? அவரை பார்க்க முடியுமா?”
அங்கே இருந்த பெண்மணி, “அவருடன் தான் இவ்வளவு நேரமும் பேசிட்டு இருக்கிறீங்க” 
அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள். அவள் இதை சிறிதும் எதிர் பார்க்கவில்லை. சர்வேஷ் தன் வயதை ஒத்தவனாக இருப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை அத்தோடு அவன் வினவியதில் இருந்து நிச்சயம் அவன் சர்வேஷாக இருக்கும் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
அவன், “இப்போ உண்மையை சொல்றீங்களா?”
சட்டென்று நிமிர்ந்து நின்றவள், “நான் இவ்வளவு நேரம் உண்மையை தான் சொன்னேன்”
அவன் அடக்கிய கோபத்துடன், “என்னை உங்களுக்கு தெரியுமா? இதற்கு முன் பார்த்து இருக்கிறீங்களா?”
“உங்களை இப்பொழுது தான் முதல் முறையாக பார்க்கிறேன்”
“அப்பறம் தெரியும் என்றது பொய் இல்லையா?”
“இல்லை”
“மிஸ்.ப்ரனிஷா என் கோபத்தை கிளறாதீங்க..”
“சாரதா மேடம் என்னை பற்றி சொல்வதாக சொன்னாங்க”
“அடுத்த பொய்யா! என் நேரத்தை வீணாக்காமல் கிளம்புங்க”
“சார் ப்ளீஸ்”
“உங்கள் அறிமுகமே சரியில்லை”
ஒரே ஒரு நொடி தன் நிலையை நினைத்து வருந்தியவள், “சாரதா மேடம் சொல்லி தான் இங்கே வந்தேன்.. அவங்க உங்களிடம் என்னை பற்றி சொல்வதாக சொன்னாங்க.. அது கூட சிபாரிசு இல்லை.. உங்களது கேள்விகளுக்கான பதில்கள் தான் அவை.. என் திறமையை சோதித்து உங்களுக்கு திருப்தி என்றால் வேலை கொடுங்க.. எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம்”
“உங்கள் பொய்களை நம்ப நான் ஆள் இல்லை.. யூ மே கோ”
“சார் ப்ளீஸ்.. ஒரே ஒரு முறை சாரதா மேடமிற்கு அழைத்து பாருங்களேன்” என்று அவள் கெஞ்சும் குரலில் கேட்டாள்.
அவன் எரிச்சலுடன், “அவங்க இப்பொழுது இங்கே இல்லை.. அவங்க இருக்கும் இடத்தில் சிக்னல் இருக்காது.. பேச முடியாது.. அது தெரிந்து தான் உன் டிராமாவை நடத்துகிறாயோ என்னவோ” என்று ஒருமையில் பேசினான்.
அவள் சிறு கோபத்துடன், “அப்படி டிராமா பண்ணி நான் என்ன சாதிக்க போறேன்? என் திறமையை காட்ட ஒரு வாய்ப்பு தானே கேட்கிறேன்.. உங்கள் அம்மா அங்கேயேவா இருந்துவிட போகிறார்கள்? இங்கே வரும் போது நான் பொய் சொன்னால் என் குட்டு வெளிப்பட்டு விடாதா?”
அவனும் கோபத்துடன், “அதற்கு வேறு என்ன டிராமா பண்ணுவியோ”
கோபத்துடன் அவனை முறைத்தவள், “தன்க் யூ சார்” என்று கூறிவிட்டு கிளம்ப, அவள் கதவருகே சென்றபோது, “ஒரு நிமிஷம்” என்று குரல் கேட்டது.
அவள் திரும்பி பார்க்க, சர்வேஷ் தனது இடதுபுறம் இருந்த ஆணிடம், “அங்கிள்……………”
“அவங்களிடம் பொய் இல்லை” என்று அவர் உறுதியாக கூறவும் அவள் முகத்தில் இருந்த கோபம் நீங்கி சிறு நிம்மதி பிறந்தது.
சர்வேஷ், “எனக்கு நம்பிக்கை இல்லை” என்று எரிச்சலுடன் கூறினான்.
அவர், “இண்டர்வியு பண்ணலாம்.. இவங்க திறமையில் நமக்கு திருப்தி ஏற்பட்டால் அம்மா பேசும் போது இவங்க சொன்னதை உறுதிபடுத்திக் கொள்ளலாம்”
சட்டென்று நினைவு வந்தவளாக, “என்னை நம்பியத்திற்கு ரொம்ப தேங்க்ஸ் சார்.. சார் இங்கே இருக்கிற க்ரஷில் தான் என் பெண் அபிசாராவை விட்டிருக்கிறேன்.. சாரதா மேடம் அவங்களிடம் பேசியதால் தான் எந்த கேள்விகளுமின்றி அவளை சேர்த்துகிட்டாங்க.. நீங்க வேணா கேட்டு பாருங்க” 
அவள் சாதாரணமாக தான் ‘எந்த கேள்விகளுமின்றி’ என்று கூறினாள் ஆனால் சர்வேஷிற்கோ அவள் தன்னை வேண்டுமென்று குத்தி காட்டியதாக தோன்ற அவளை முறைத்தான்.
அவன் முறைப்பை பார்த்து அஞ்சாமல் அவள் நிமிர்வுடனே நின்றாள்.
அவன் சிறு இகழ்ச்சி கலந்த கோபத்துடன், “ரெசியுமில் மிஸ் போட்டிருக்கிறீங்க! இப்போ பொண்ணு!!”
அவள் அடக்கிய கோபத்துடன், “அம் அ சிங்கிள் பரென்ட்”
“அப்டினா?”
“அது என் பெர்சனல்”
“நீங்கள் இங்கே வேலை பார்ப்பதாக இருந்தால் உங்களின் சில பெர்சனல் விஷயம் எனக்கு தெரியனும்”
“வாட்!”
“எஸ்.. எனக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம்.. அதுவும் பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் குணம் ரொம்பவே முக்கியம்” 
கண்களை இறுக மூடி திறந்தவள், “நான் ஒழுக்கமற்றவளாக இருந்தால் உங்கள் தாய் என்னை இங்கே அனுப்பி இருக்க மாட்டார்களே”
“அதை நீ இன்னும் நிருபிக்க வில்லை”
“முன்பு நான் வேலை பார்த்தது பள்ளியில்……………………….”
“நீ அவசர அவசரமா அங்கிருந்து ஓடி வந்…………………”
“சார்.. தேவை இல்லாத வார்த்தைகளை விடாதீங்க”
“நீ தான் இப்படி பேச வைக்கிறாய்.. நான் கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொன்னால் இந்த பேச்சிற்கெல்லாம் அவசியமே இல்லையே”
“..”
“என்ன?”
“இங்கே வேலை பார்த்தால் தானே என் பெர்சனல் விஷயம் உங்களுக்கு தெரியனும் னு சொன்னீங்க.. நீங்க வேலை கொடுக்கும் முடிவிற்கு வந்தால் சொல்றேன்”
அவன் எரிச்சலுடனும் கோபத்துடனும் ஏதோ சொல்ல வர, முன்பு அவளுக்கு ஆதரவாக பேசியவர், “சர்வா” என்று அழைக்கவும் அவன் தனது கோபத்தை கட்டுபடுத்திக் கொண்டு, அருகில் இருந்த பெண்மணியிடம், “க்ரஷிற்கு போன் பண்ணி கேளுங்க மேடம்” என்றான்.
அவன் சொன்னதை செய்தவர் பேசிவிட்டு, “இவங்க சொன்னது உண்மை தான் சார்” என்றதும் அவன், “சரி அங்கிள் நீங்க சொன்னது போல் செய்யலாம்.. நீங்களே கேள்விகளை ஆரம்பிங்க.. உங்க சப்ஜெக்ட் தான்” என்று வேண்டா வெறுப்புடன் கூறினான்.
அவர் பல கேள்விகளை கேட்டதும் அந்த பெண்மணி சில கேள்விகளை கேட்டார். இருவரும் அவளது திறமையில் திருப்தியாக இருப்பதாக கூறவும் அவன் கடுமையான குரலிலேயே, “அம்மாவிடம் பேசிவிட்டு வேலை தருவதா வேண்டாமா என்று முடிவு செய்கிறேன்.. இப்போ கிளம்பலாம்” என்றான்.
மெல்லிய புன்னகையுடன், “தன்க் யூ சார்” என்றவள் மற்றவர்களை பார்த்து, “தன்க் யூ சார்.. தன்க் யூ மேடம்” என்று கூறிவிட்டே வெளியேறினாள்.
சில மணி நேரங்கள் கழித்து தன் அறைக்கு வந்த ப்ரனேஷின் சிந்தனை முழுவதும் தன் மனம் கவர்ந்தவளை பற்றி தான் இருந்தது. அவளை முதல் முதலாக சந்தித்தது இப்பொழுது கூட அவனது நெஞ்சம் எனும் பெட்டகத்தில் பசுமை மாறாமல் இருந்தது. 
அவனது சிந்தனை ஏழு வருடங்கள் பின்னோக்கி சென்றது. அவன் மருத்துவ பட்டப்படிப்பு(MBBS) முடித்து மேற்படிப்பின்(‘RESIDENCY IN SURGERY’) இறுதி ஆண்டில் இருந்த போது தான் அவளை முதல் முறையாக பார்த்தான்.  
ப்ரனேஷ் நண்பர்களுடன் கல்லூரி அருகே இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தபடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது தோழன் ஒருவன் இவனை சிகரெட் பிடிக்க வற்புறுத்தினான். இவன் மிக அரிதான நேரத்தில் சிகரெட் பிடிப்பான் தான் ஆனால் அன்று பிடிக்க தோன்றவில்லை. இவன் மறுப்பு சொல்ல இவனை வற்புருத்தியவனோ சிகரெட்டை இவன் வாய் அருகே கொண்டு செல்ல, இவன் முகத்தை திருப்பி மறுத்தான். 
அப்பொழுது ஒரு ஆட்டோ இவர்கள் அருகில் நிற்க, அதிலிருந்து புயலின் வேகத்துடன் அவர்கள் அருகே வந்த இளம் பெண் ப்ரனேஷை வற்புருத்தியவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து முறைப்புடன், “அவர் தான் வேண்டாம் னு சொல்றாரே! தேவை இல்லாத இந்த கெட்ட பழக்கத்தை ஏன் கட்டாயப்படுத்தி பழக்கப்படுத்த முயற்சிக்கிறாய்?” என்றவள் ப்ரனேஷ் பக்கம் திரும்பி, “இப்படி புத்தியில் உரைப்பது போல் மறுப்பு சொல்லணும்”  என்று கூறி அவர்கள் பதிலை எதிர் பார்க்காமல் ஆட்டோவில் ஏறிச் சென்றுவிட்டாள். 
அடி வாங்கிய நண்பன் இவனை முறைக்க இவன் வாய் விட்டு சிரித்தான். அவளது செய்கையில் பார்த்த முதல் நாளே அவனது மனம் அவளிடம் சரணடைந்தது. அவளது அழகை விட அவளது குணம் அவனை வெகுவாக கவர்ந்தது. அந்த நொடியே ‘இனி சிகரெட் பிடிக்க கூடாது’ என்ற தீர்மானத்தை எடுத்தான்.
கைபேசியில் வந்த அழைப்பு சத்தத்தில் நிகழ் காலத்திற்கு திரும்பினான். அழைத்தது அவனது அன்னை. எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவன் அழைப்பு முடியும் தருவாயில் எடுத்தான்.
அவன் அன்னை, “உன்னை ரொம்ப கஷ்ட படுத்துறேனா கண்ணா” என்று கரகரத்த குரலில் வினவவும்,
அவன், “அப்படியெல்லாம் இல்லை மா”
“அப்போ நீ கிளம்பி வர அப்பாவை டிக்கெட் எடுக்க சொல்றேன்”
“அம்மா!” என்று அவன் சிறிது குரலை உயர்த்த, அவரோ, “என்ன டா?” என்று மிரட்டினார்.
“உன்னை பற்றி தெரிந்தும் ஏமாந்துட்டேனே!”
“நீ எமகாதகன் டா”
“உன் பையனாச்சே!” என்றவன், “சரி எதுக்கு கூப்பிட்ட?”
“சும்மா தான்”
“அப்போ வைக்கிறேன்”
“சரி”
அழைப்பை துண்டிக்க போனவன், “அம்மா.. நீ பேசினதில் வருத்தம் தான் ஆனால் அதிலேயே உழன்று கொண்டு இருக்க மாட்டேன்.. கவலை படாத” என்றவன் அவர் பதில் கூறும் முன் அழைப்பை துண்டித்தான்.
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement