Advertisement

சட்டென்று இதயம் படபடக்க அவள் கண்களை வேகமாக சிமிட்டியபடி பார்வையை தாழ்த்தினாள். 
உல்லாசமாக சிரித்தபடி, “அப்போ பிடித்து இருந்தது” என்றவன் சற்று நெருங்கி வந்து அவள் இடையை மென்மையாக அணைத்து அவள் மேனியை தன் மேல் பட்டும் படாமல் நிறுத்தினான்.
அவள் இன்ப அவஸ்த்தையை மீறிய சிறு பயத்துடன் அவனை பார்க்க அவன் மெல்லிய புன்னகையுடன், “ரிலாக்ஸ் ஸ்வீட்டி” என்று கூறி அவள் கன்னத்தில் இதழ் பதித்து, “பை இனியா பேபி” என்று கூறி வெளியேறினான். 
மனதில் எழுந்த பயத்தை விரட்ட அவன் சொன்னது போல் தன்னவனின் முகத்தை மனதில் கொண்டு வந்து ‘என்னால் முடியும்.. அவரை மகிழ்விக்க என்னால் முடியும்’ என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு மனதை திடப் படுத்தினாள்.
அதன் பிறகு வெளியே சென்று அமுதாவுடன் பேசிக் கொண்டே குழந்தையுடன் விளையாடினாள். அங்கே குழந்தைக்காக ஆனந்தன் நிறைய விளையாட்டு சாமான்களை வாங்கி குவித்திருந்தார். அவர்களின் அன்பில் வேற்று ஆள் என்ற எண்ணம் சிறிதுமின்றி அவர்களுடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள். குழந்தையை பற்றி சொல்லவே தேவை இல்லை.. உறவுகளுக்கு ஏங்கியிருந்த குழந்தை நன்றாகவே ஒட்டிக் கொண்டாள்.
மதியம் ப்ரனேஷை கைபேசியில் அழைத்தபோது அவன் எடுக்கவில்லை. கால்மணி நேரம் கழித்து அழைத்த போது எடுத்தவன், “ஹாய் இனியா பேபி”
“சாப்டீங்களா?”
“இனிமேல் தான் சாப்பிடனும்.. நீ?”
“நீங்க சாப்பிட்டதும் சொல்லுங்க”
“என்னை எதிர்பார்க்காமல் ஒழுங்கா சாப்பிடு பேபி.. நான் கிடைக்கும் நேரத்தில் சாப்பிடுவேன்.. திடீர்னு எமர்ஜென்ஸி வரலாம்.. ஸோ………….”
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. நீங்க சாப்பிட்டால் நான் சாப்பிடுவேன்”
“ச்ச்.. இது என்ன பிடிவாதம் இனியா?”
“சுவர் இருந்தால் தான் சித்திரம்.. நீங்கள் இருந்தால் தான் நானும் அபியும்.. உங்கள் ஆரோக்கியம் எனக்கு முக்கியம்.. நான் காத்திருப்பேன் என்ற எண்ணத்தில் ஒழுங்கா சாப்பிடுவீங்க”
“நான் கண்டிப்பா சாப்பிடுவேன் டா.. நீ நேரத்தோடு சாப்பிடு”
“நீங்க எப்போ சாப்பிடுறீங்களோ நானும் அப்பவே சாப்பிடுறேன்”
“நான் சொன்னால் கேட்க……………”
“இந்த ஒரு விஷயத்தில் நான் சொல்வதை நீங்க கேட்கிறீங்க.. சாப்டுட்டு போன் பண்ணுங்க.. சாப்பிடாம எனக்காக பொய் சொல்லக் கூடாது.. இது என் மேல் ஆணை” என்றவள் அவன் பதிலை எதிர் பார்க்காமல் அழைப்பை துண்டித்தாள்.
அவளை சாப்பிட அழைக்க வந்த போது அவள் பேசியதை கேட்ட அமுதா அவள் தலையை ஆதூரத்துடன் தடவிவிட்டு சென்றார். வெளியே சென்றவர் உடனே கணவரை அழைத்து விஷயத்தை நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மனைவிக்காக ப்ரனேஷ் உடனே சாப்பிட நினைத்தாலும் அந்த நேரத்தில் அவசர சிகிச்சைக்கு அழைப்பு வரவும் அங்கே விரைந்து சென்றான். ஒரு மணி நேரம் கழித்து சிகிச்சையை முடித்துவிட்டு உணவை சாப்பிட்டபடி மனைவியை அழைத்தான்.
அழைப்பை எடுத்ததும் அவள், “சாப்ட்டாச்சா?”
“சாப்டுட்டே தான் பேசுறேன்.. நீயும் சாப்பிடு”
“நீங்க சாப்பிட்டு முடிங்க”
“நீயும் சேர்ந்து சாப்பிடு”
“ஹ்ம்ம்.. இன்னைக்கு ஓகே பட் இனி சாப்டுட்டு தான் போன் பண்ணனும்.. இப்போ திடீர்னு எமெர்ஜென்சி வந்தால் பாதி சாப்பாட்டில் எழுந்து போய்டுவீங்க.. ஸோ நீங்க புல்லா சாப்பிட்ட பிறகே இனி கூப்பிடுங்க..”  
“ரொம்ப தான்டி கண்டிஷன் போடுற!” 
அவனது உரிமையான ‘டி’ என்ற அழைப்பில் மகிழ்ச்சியுடன், “இனி அப்படி தான்” என்றாள்.
அவனும் புன்னகையுடன், “சரிங்க மேடம்.. சாப்பிடுங்க.. பை” என்றான்.
“ஹ்ம்ம்.. பை” என்று அழைப்பை துண்டித்தவள் புன்னகையுடனே உணவை உண்டு முடித்தாள். இருவரின் மனமும் மகிழ்ச்சில் இருந்தது.
 
மாலையில் சொன்னது போல் சற்று சீக்கிரம் வந்தவன் மனைவியை அழைத்துக் கொண்டு அவளது தந்தை வீட்டிற்கு சென்றான்.
செல்லும் வழியில் அவன், “உன் சித்தி பேசுறதை கண்டுக்காதே”
“சின்ன வயசில் இருந்து அதை தானே செய்கிறேன்”
“யாரு நீயா! அப்படி செய்து இருந்தால் சாரு சித்தி கிட்ட என்னுடன் நெருங்கி பழகாதீங்க னு சொல்லியிருப்பியா?”
“அது..”
“என்ன?”
“சித்தி பேசியது மட்டுமில்லை.. மற்றவர்களும் நிறைய பேசினாங்க.. ஆனா திருநெல்வேலி போன பிறகு நானே எதிர்பார்க்காத வகையில் நிறைய மாறினேன்”
“அது தான் அம்மா என்பது! அம்முவிற்காக ஒரு பூ புயல் ஆகிவிட்டது”
“இருக்கலாம்.. அப்பறம் சாரதா மேடம்.. ஸ்.. அத்தை தைரியம் சொல்லி ராசி பற்றிய எண்ணத்தையும் மாற்றிவிட்டாங்க”
“ஹ்ம்ம்.. இருந்தாலும் உன் சித்தி நூறு சுகுணாவிற்கு சமம்”
“அதான் என் கூட நீங்க இருக்கிறீங்களே!”
“இன்னைக்கு சரி.. ஆனா நான் உன்னுடன் இல்லாத சமயத்தில் நீ………………”
“நீங்க எப்பொழுதும் என்னுடன் தான் இருப்பீங்க.. என்னுள் என் தைரியமா என்னுடனே இருப்பீங்க”
அவளது கையை பற்றியபடி அவளை திரும்பி பார்த்தவன் உறுதியான குரலில், “நிச்சயம் பேபி” என்றான்.
“பேபி சொல்லாதீங்க.. அபி என்னை கிண்டல் பண்றா”
வாய்விட்டு சிரித்தவன், “என் முதல் பேபி நீ தானே டா.. பழகிக்கோ”
அவள் முறைக்க அவனோ தோளை குலுக்கி புன்னகைத்தான்.  
இருவரும் புன்னகையுடனே இறங்கி சென்றனர். வீட்டின் அழைப்பு மணியை அடித்ததும் கதவை திறந்த அவந்திகாவிடம் ப்ரனேஷ், “உன் பரென்ட்ஸ் இருக்காங்களா?”
“ஹ்ம்ம்.. அப்பா இப்போ தான் வந்தாங்க”
“யாரு அவந்தி?” என்று கேட்டபடி வந்த நாகேஸ்வரி உள்ளே வந்தவர்களை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தார் ஆனால் அடுத்த நொடியே குரலை உயர்த்தி ப்ரனிஷாவை பார்த்து, “எவ்வளவு தைரியம் இருந்தால் என் வீட்டிற்கு வருவ! வெளியே போடி ஓடுகாலி” என்றபடி ப்ரனிஷா அருகே வர,
அவர் முன் ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான் ப்ரனேஷ்.
அவன் சுட்டு விரலை நீட்டி, “அன்னைக்கே சொன்னேன்.. என் இனியாவை தப்பா ஒரு வார்த்தை சொன்ன! உன்னை தொலைச்சிடுவேன்”
பயத்தில் இரண்டடி பின்னால் நகர்ந்து ஒரு நொடி அடங்கியவர் அடுத்த நொடியே நக்கல் குரலில் ப்ரனிஷாவை பார்த்து, “ஒரு வேற்று ஆள் வார்த்தைக்கு வார்த்தை என் இனியா னு சொல்றான் உனக்கு வெக்கமா இல்லை!”
நிமிர்வுடன், “நான் ஏன் வெக்கப்படனும்?” என்றவள் ப்ரனேஷுடன் கை கோர்த்தபடி, “என் கணவர் என்னை என் இனியா னு சொல்லாமல் வேறு எப்படி சொல்வார்”
“என்ன?” என்று நாகேஸ்வரி வாயை திறந்தபடி அதிர்ச்சியுடன் நின்றார்.
அவந்திகா ஆச்சரியத்துடன் ப்ரனிஷாவை பார்த்தாள். அங்கே நிற்பவள் முன்பு நாகேஸ்வரிக்கு பயப்படும் இனியமலர் இல்லை இவள் ப்ரனேஷின் இனியா என்று அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது. அவளுக்கு மட்டுமின்றி மனைவியின் குரலில் வெளியே வந்திருந்த செந்தில்குமாருக்கும் நாகேஸ்வரிக்குமே புரிந்தது. நாகேஸ்வரிக்கு தான் புரிந்த விஷயங்கள் உவப்பாக இல்லை.
நாகேஸ்வரி, “நான் ஓடுகாலினு சொன்னதில் என்ன தப்பு! பெத்த தகப்பனுக்கு தெரியாமல் கல்யாணம் செய்துட்டு வந்து நிற்கிறாள்.. ஏன் ஒரு ஆண் இல்லாமல் உன்னால் இருக்க முடியலையோ”
“ஏய்” என்று குரலை உயர்த்தியபடி நாகேஸ்வரி அருகே சென்ற ப்ரனேஷை ப்ரனிஷா தடுக்கவில்லை என்றால் அவரை அடித்து இருப்பானோ என்னவோ!
அவன் வந்த வேகத்தில் அவர் பின்னால் இருந்த இருக்கையில் விழுந்து இருந்தார்.
ப்ரனிஷா கணவனின் கையை இறுக்கமாக பற்றி, “நீங்க டென்ஷன் ஆகாதீங்க.. இவங்க பேசுவதால் என் தரம் இறங்கிட போறதில்லை.. நான் பேசிக்கிறேன்” என்றவள் நாகேஸ்வரி பக்கம் திரும்பினாள்.
“என்ன சொன்னீங்க! அப்பாவிற்கு தெரியாமல் கல்யாணம் செய்துக்கிட்டேனா! ஆமா நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.. அப்பா னு சொன்னீங்களே! அது யாரு?” என்றவள் வெறுப்புடனும் நக்கலுடனும் செந்தில்குமாரை பார்த்து, “இவரா!!!!” என்றாள். 
பிறகு, “ஒரு நாளாவது எனக்கு அப்பா வா இவர் இருந்து இருப்பாரா? அப்படி இருந்து இருந்தால் என் வாழ்க்கை திசை மாறி போயிருக்காதே!” என்றவள், “அது எதற்கு இப்போ! என்னை பொறுத்தவரை நான் பிறந்த அன்றே என் அம்மா அப்பா இருவருமே இறந்துட்டாங்க.. இங்கே இருப்பவர் உங்கள் கணவரும் அவந்திகாவின் அப்பா மட்டுமே!”
செந்தில்குமார் அவமானத்திலும் சிறு வருத்ததுடனும் தலையை தாழ்த்திக் கொண்டு நின்றார்.
நாகேஸ்வரி தான் குரலை உயர்த்தி, “எப்படியெல்லாம் பேசுறா! அமைதியா இருக்கிறீங்க?” என்று கத்தினார்.
அவரோ, “உன்னை கல்யாணம் பண்ண அன்னைக்கே நான் அமைதியாகிட்டேன்” என்றார்.
அவரை முறைத்த நாகேஸ்வரி ப்ரனிஷாவிடம், “என்னடி ரொம்ப பேசுற! நான் நினைத்தால் உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்.. உன்னை மட்டுமில்லை இதோ நிற்கிறானே இவனையும் தான்”
ப்ரனிஷா அலட்சியமாக பார்க்கவும் அவர் கடும் கோபத்துடன், “இவன் இருக்கிற தைரியத்தில் தானே ஆடுற! உன் ராசி இவனை எப்படி வாழ விடுதுன்னு நான் பார்க்கிறேன்……………”
ப்ரனேஷ், “என் இனியாவின் ராசியில் இனி தான் நான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியுடன் வாழப் போகிறேன்.. அதுமட்டுமில்லை இனியாவின் ராசியில் பல குழந்தைகள் நன்றாக இருக்க போறாங்க.. என்ன பார்க்கிற! அவள் பெயரில் டிரஸ்ட் ஆரம்பித்து இருக்கிறேன்.. அதன் மூலம் பல குழந்தைகள் மருத்துவ சிகிச்சை பெற்று ரொம்பவே நன்றாக இருக்க போறாங்க” என்றான்.
இப்பொழுது தான் அவன் தனது பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்ததிற்கான முழு காரணம் புரியவும் நெகிழ்ச்சியுடனும் காதலுடனும் அவனை பார்த்தாள். மனைவியின் மனநிலையை புரிந்தவன் அவளை பார்த்து அழகாக புன்னகைத்தான்.
இந்த காட்சியை பார்த்த நாகேஸ்வரிக்கு உடம்பு முழுவதும் மிளகாய் அரைத்து பூசியது போல் ஆனது.
அவர் குரலை உயர்த்தி, “ரொம்ப சந்தோஷப்படாதடி.. எப்படியும் உன் முதல் கல்யாணத்தை பற்றி வெளியே சொல்லியிருக்க மாட்டான்.. இவன் உனக்கு இரண்டாவது கணவன் என்பதை ஊரை கூட்டி சொன்னால் போதும்.. இவனது மானம் மரியாதை ஆட்டம் கண்டிடும்” என்றதும் அவளுள் சிறு நடுக்கம் வந்தது ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நிமிர்வுடனே நின்றாள்.
ஆனால் அவளை பற்றி நன்றாக அறிந்த ப்ரனேஷ் அவளது கையை இறுக்கமாக பற்றி தைரியம் கொடுத்தான்.
பின் நிதானமாக நாகேஸ்வரி பக்கம் திரும்பி அவன் பேசுவதற்கு முன்,
அவந்திகா, “அப்படி மட்டும் நீங்க செய்தால்.. நானே யோசிக்காமல் நீங்க மனநலம் பாதிக்கப் பட்டவர் னு சொல்லிடுவேன்” என்றாள் உறுதியான குரலில்.
நாகேஸ்வரி அதிர்ச்சியுடன் மகளை பார்க்க அவள் கோபத்துடன், “என்ன பார்க்கிறீங்க? அக்காவிற்கு நீங்க செய்த கொடுமைகள் எல்லாமே எனக்கு தெரியும்.. அதுவும் உங்கள் வாய் மூலமாகவே” என்று வேதனையுடன் கூறியவள், “எப்படி மா இப்படி பண்ணீங்க! உங்களுக்கு மகளா பிறந்ததை நினைத்து எனக்கு அவமானமா இருக்குது.. நீங்க அக்கா வாழ்க்கையை கெடுத்ததால் தான் நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் னு சொன்னேன்.. அக்காவிடம் பணத்தை வாங்கிய பிறகாவது அவளை நிம்மதியா இருக்க விட்டிருக்கலாமே! உங்களுக்கு ஒன்னு தெரியுமா? அந்த வக்கீல் பணத்தை கொடுக்க விடாம ஸ்டே வாங்குறதா இருந்திருக்கார்.. அக்கா தான் எனக்காக என் படிப்பிற்காக அவரை சமாளித்து பணத்தை கொடுத்து இருக்கிறாள்.. ஆனா நீங்க.. ச்ச்” என்று வெறுப்புடன் முகத்தை திருப்பினாள்.
அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த நாகேஸ்வரியின் முகத்திற்கு முன் சொடக்கு போட்டு அவர் கவனத்தை தன் பக்கம் திருப்பிய ப்ரனேஷ், “இனி எங்கள் வாழ்வில் குறிக்கிடாமல் இருப்பது தான் உனக்கும் நல்லது உன் குடும்பத்திற்கும் நல்லது.. என்ன பார்க்கிற! உன் மகளாவது உன்னை பைத்தியம் னு வாய் வார்த்தையா தான் சொல்லுவாள் ஆனால் நான் அதை உண்மை ஆக்கிடுவேன்.. நான் மற்றவர்களுக்கு தான் உயிரை கொடுப்பவன்.. உன் விஷயத்தில் என்றும் அழிக்கும் கடவுள் தான்.. அத்துடன் விட மாட்டேன்.. இனியாவை ஏமாற்றி பணத்தை வாங்கியதாக கேஸ் போடுவேன்.. அதை உன்னால் திருப்பி கொடுக்க முடியுமா? அப்பறம் உன் மகளின் வாழ்க்கை கேள்விக் குறி தான்.. இனி உன் மகளுக்காகவாது எங்களை நெருங்காமல் இரு” 
அவந்திகாவை பார்த்தவன், “வர சண்டே எங்க வீட்டில் சின்ன பார்ட்டி.. இனியாவையும் அம்முவையும் அறிமுகப் படுத்துவதற்காக…..” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுது,
ப்ரனிஷா, “அழைப்பு உனக்கு மட்டும் தான்” என்று அழுத்திக் கூறியதன் மூலம் ‘நீ மட்டுமே எனக்கு உறவு’ என்று சொல்லாமல் சொன்னாள்.
அவந்திகா அமைதியாக தலையை அசைக்கவும் இருவரும் வெளியேறினர்.
அவர்கள் சென்ற பிறகும் அமைதியாக அமர்ந்திருந்த தாயை பார்த்த அவந்திகா எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
செந்தில்குமார், “இனி மலர் விஷயத்தில் தலையிடாதே.. அது தான் நமக்கு நல்லது.. முக்கியமா அவந்தி வாழ்க்கையில் புயலை இழுத்து விட்டிராதே..” என்றுவிட்டு அவரும் எழுந்து சென்றுவிட்டார்.
இனி அமைதியாக இருப்பதை தவிர நாகேஸ்வரிக்கு வேறு வழி இல்லை.. அவரை பல் பிடுங்கிய பாம்பாக அடங்கியிருந்தான் இனியாவின் ப்ரனேஷ்.
 
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement