Advertisement

  இதழ் 27
அன்று தான் மருத்துவ முகாமின் கடைசி நாள். சுகுணா பேசியதை பற்றி அன்பரசி சர்வேஷிடம் சொல்லாததால் சுகுணா தைரியமாக சுற்றிக் கொண்டிருந்தார்.
சுகுணா ஒரு ஆசிரியரிடம், “என்னமோ ப்ரனிஷா பற்றி அன்னைக்கு வக்காலத்து வாங்கினியே! இப்போ என்ன பண்றா தெரியுமா!”
அவர் ‘நீயே சொல்’ என்பது போல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.
சுகுணா கடுப்பை மனதினுள் மறைத்துக் கொண்டு, “வந்திருக்கிற பெரிய டாக்டருடன் கூத்தடிச்சிட்டு இருக்கிறா”
“முடிச்சிட்டீங்களா? எனக்கு கிளாஸ்க்கு நேரமாச்சு” என்றபடி கிளம்ப எத்தனிக்க, அவர் கையை பிடித்து நிறுத்திய சுகுணா, “அதெல்லாம் நேரம் இருக்குது.. நீ நான் சொன்னதை நம்பலைல.. இரு” என்றவர் சற்று தள்ளி போய்க் கொண்டிருந்த ஒரு மாணவியை அழைத்தார்.
அந்த ஆசிரியர் எரிச்சலுடன், “என்ன பண்றீங்க மேடம்?”
“இரு.. இரு” என்றவர் இன்னும் சில ஆசிரியர்களையும் அழைத்தார்.
மற்ற ஆசிரியர்கள் வரவும் அந்த மாணவியும்(அன்று பிறந்தநாள் சாக்லெட் கொடுத்த மாணவி) வந்தாள்.
சுகுணா அந்த மாணவியிடம், “உன் பிறந்த நாளுக்கு நீ கொடுத்த சாக்லேட்டை ப்ரனிஷா மேடம் என்ன பண்ணாங்க?”
“அது”
“சொல்லு” 
சுகுணாவிடம் பயம் கொண்ட அந்த மாணவி அன்று நடந்ததை கூறினாள்.
“சரி.. நீ போ” என்ற சுகுணா வெற்றி புன்னகையுடன் மற்ற ஆசிரியர்களை பார்த்து, “நான் சொன்ன போது நம்பலையே! இப்போ என்ன சொல்றீங்க?”
முதலில் பேசிய ஆசிரியர், “இதில் என்ன இருக்கிறது?” என்று சாதாரணமாக வினவினார்.
சுகுணா பல்லை கடித்துக் கொண்டு, “பானு இது சாதாரண விஷயம் இல்லை.. அந்த ஸ்டுடென்ட்டே கொடுக்க தயங்கி இருக்கிறா ஆனா இவ கொடுக்க சொல்லியிருக்கா! ஒரு சின்ன பொண்ணுக்கு கூட அது சரியில்லை னு தெரியுது..”
ஒரு ஆசிரியர், “அதானே!” என்று சுகுணாவை ஒத்து ஊத,
சுகுணா மகிழ்ச்சியுடன், “இது மட்டுமில்லை.. அன்னைக்கு அவ அந்த டாக்டர் கையை பிடிச்சிட்டு பேசியதை நானே என் கண்ணால் பார்த்தேன்” என்று பொய் கூறினார்.
“என்ன!” என்று சில அதிர்ச்சி குரல்கள் ஒலிக்கவும் மேலும் குஷியான சுகுணா தனது கட்டுக்கதையை அளந்து விட தொடங்கினார். 
இரண்டு மூன்று ஆசிரியர்கள் அதை கேட்க விருப்பமின்றி கிளம்பினாலும் ஆர்வத்துடன் கேட்க சிலர் இருந்தனர். சுகுணா கிளப்பிய வதந்தி காட்டு தீ போல் பரவியது. ஒரு கட்டத்தில் ‘ப்ரனிஷா டாக்டர் கையை பிடிச்சிட்டு பேசியதை  டுவெல்த் ஸ்டுடென்ட் ஸ்வேதா பார்த்ததா சொன்னா.. ஒரு ஸ்டுடென்ட் அதுவும் ப்ரனிஷாவை ரொம்ப பிடித்த ஸ்டுடென்ட்டே சொன்னால் அதில் உண்மை இல்லாமலா இருக்கும்!’  என்று விஷயம் உரு மாறி ஆசிரியர்களிடையே பரவத் தொடங்கியது.
வந்திகா ப்ரனேஷிடம், “டாக்டர் இனி டீச்சர்ஸ் மட்டும் தான் இருக்காங்க”
மணியை பார்த்தவன், “இப்போ பனிரெண்டு தானே ஆகுது.. இன்னைக்கு மதியம் பசங்களுக்கு ஸ்கூல் லீவ்.. ஸோ மதியம் லன்ச் முடிச்சிட்டு பார்த்துக்கோங்க.. நான் கிளம்புறேன்..”
அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவள், “மாமா நிஜமாவே அக்கா சொன்னதை கேட்டு விலகி போக முடிவெடுத்துட்டீங்களா?”
தன் பார்வையை சுழற்றியவன் மற்ற குழுவினர் தங்களை கவனிக்கவில்லை என்றதும் அவளை தீர்க்கமாக பார்த்தான்.
அவள் சிறு பயத்துடன், “சாரி டாக்டர்.. தெரியாம….”
“சரி விடு”
“நீங்க விட்டுட்டீங்களா?” 
வேலை நேரத்தில் சொந்த விஷயத்தைப் பற்றி பேச அவன் விரும்பவில்லை தான் இருந்தாலும் அவளது தவிப்பை பார்த்தவன் மென்னகையுடன், “நீங்க என்ன நினைக்கிறீங்க?”
அவனது மென்னகையில் நம்பிக்கை பெற்றவள், “லேசில் விட மாட்டீங்க னு தான் நினைக்கிறேன்” 
“அப்பறம் என்ன?”
“அது வந்து…”
“வேலை நேரத்தில் வேலையை மட்டும் பார்க்கலாமே!”
“ஹ்ம்ம்”
“குட்” என்றவன் திரும்பி பார்த்தான். அவனது குழுவினர் மட்டுமே இருந்தனர்.
அவன் சற்று குரலை உயர்த்தி, “பிரெண்ட்ஸ்” என்றான்.
அனைவரும் அவன் அருகே வரவும் அவன் புன்னகையுடன், “லன்ச் முடிச்சிட்டு டீச்சர்ஸ் எல்லோரையும் செக் பண்ணிட்டு கிளம்பிடலாம்.. எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்குது.. ஸோ நான் இப்போ கிளம்புறேன்.. இந்த முகாமை வெற்றிகரமா நடத்த உதவியதிற்கு நன்றி.. அதுக்கு ட்ரீட்டா இன்னைக்கு நைட் எல்லோருக்கும் டின்னர் ஹோட்டல் ஜானகிராமில்.. நைட் சந்திக்கலாம்” என்றான்.
அனைவரும், “சூர் டாக்டர்” “தேங்க்ஸ் டாக்டர்” “சூப்பர் சார்” என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். 
அவன் புன்னகையுடன் விடை பெற்றான்.
மதிய உணவு இடைவெளிக்கு பிறகு ஆசிரியர்களுக்கான மருத்துவ நுண்ணாய்வு தொடங்கியது.
வீட்டிற்கு சென்ற ப்ரனேஷ் மதிய உணவை முடித்த பிறகு தன்னவளை பார்க்க வேண்டும் போல் இருக்கவும் பள்ளிக்கு கிளம்பி வந்தான்.
அவன் முகாம் நடந்துக் கொண்டிருந்த அரங்கத்தை நெருங்கிய போது சுகுணாவின் பேச்சை ஜன்னல் வழியாக கேட்டு கொதிநிலையை அடைந்தான்.
அப்பொழுது சுகுணா ஒரு ஆசிரியரிடம் ஆர்வத்துடன் ப்ரனிஷா பற்றி அவதூறு சொல்லிக் கொண்டிருந்தார். அந்த ஆசிரியர் நம்பவில்லை என்றதும், “ஷர்மி நீயே சொல்லு” என்று அருகில் இருந்த மற்றொரு ஆசிரியரிடம் கூறினார்.
ஷர்மிளா, “ஆமா மேடம் அக்கா சொல்றது உண்மை தான்.. டுவெல்த் ஸ்டுடென்ட் ஸ்வேதா கூட ப்ரனிஷா டாக்டர் கையை பிடித்து பேசியதை பார்த்ததா சொன்னா.. நம்பிக்கை இல்லைனா ஸ்வேதாவை கேளுங்க”
“என்ன பேச்சு இது! ஒரு டீச்சர் பற்றி ஒரு ஸ்டுடென்ட் கிட்ட கேட்பதா?”
“பின்ன நம்ப மாட்டீக்கீங்களே!”
“நீங்க சொல்லும் விஷயம் அப்படி”
“சரி இதை சொன்னால் நம்புவீங்க.. ஸ்வேதா அதை சொன்ன போது பானு மேம் அங்கே தான் இருந்தாங்க”
“என்ன!” என்று அந்த ஆசிரியர் அவர்கள் கூறியதை நம்ப முடியாமல் நம்பினார். 
சுகுணா மேலும் ப்ரனேஷ் ப்ரனிஷா நடுவே கள்ளத் தொடர்பு இருப்பது போல் சில பொய்களை சொல்லத் தொடங்கினார்.
ப்ரனேஷ் பல்லை கடித்து கை முஷ்டியை இறுக்கி முடியபடி கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தான். சில நொடிகளில் சர்வேஷை கைபேசியில் அழைத்தவன் அவன் அழைப்பை எடுத்ததும் அடக்கிய கோபத்துடன், “இப்போ நீ எங்கே இருக்க?”
“இப்போ தான் சாப்பிட வீட்டிற்கு வந்தேன்.. என்னாச்சு? என்ன பிரச்சனை?”
“இன்னும் அஞ்சு நிமிஷத்தில் நீ ஸ்கூலில் இருக்கிற” என்றவன் சர்வேஷ் பதிலை எதிர்பாராமல் அழைப்பை துண்டித்து விட்டு வேக நடையுடன் உள்ளே சென்றான்.
உள்ளே சென்றவன் சுகுணா இருந்த பக்கம் பார்வையை திருப்பாமல் ப்ரனிஷாவை தேடினான். அவள் அங்கே இல்லை என்றதும் அவந்திகாவை அழைத்தான்.
ஒரு ஆசிரியரை பரிசோதித்துக் கொண்டிருந்தவள், “ஒன் மினிட் டாக்டர்” என்றாள்.
ஆனால் ப்ரனேஷ் பொறுமை இல்லாமல் பல்லை கடித்துக் கொண்டு, “அவந்திகா” என்று சற்று குரலை உயர்த்தி அழைத்தான்.
அவனது குரலின் பேதத்தை அப்பொழுது தான் கண்டுக் கொண்டவள் அதிர்ச்சியுடன் அவனை திரும்பி பார்த்தாள். அவன் கோபத்தை அடக்கியபடி நின்றதை பார்த்தவள் பயத்துடன், “எக்ஸ்கியூஸ் மீ மேம்” என்று கூறிவிட்டு அவன் அருகே கிட்டதிட்ட ஓடினாள்.
அவன், “இனியா எங்கே!”
அவள் பயத்துடன், “அக்காவும் அன்புவும் கடைசி வரேன்னு சொன்னாங்க”
“ரெண்டு பேரையும் இப்பவே போய் கூட்டிட்டு வா” என்றான்.
அவள் பயமும் குழப்பமுமாக விரைந்து சென்றாள்.
அவந்திகா நேராக உயிரியல் ஆய்வு கூடத்திற்கு சென்றாள். அங்கே தான் ப்ரனிஷாவும் அன்பரசியும் இருந்தனர்.
அவந்திகா, “அக்கா மாமா உங்க ரெண்டு பேரையும் உடனே கூட்டிட்டு வரச் சொன்னார்”
ப்ரனிஷா முறைப்புடன், “இன்னும் என்ன மாமா னு சொல்லிட்டு இருக்க!”
அவந்திகா பல்லை கடித்தபடி, “இப்போ இது ரொம்ப முக்கியம்! சீக்கிரம் வா.. அங்கே மாமா கோபமா இருக்கிறார்”
“ஏன்?” என்று அன்பரசியும், “என்னாச்சு?” என்று ப்ரனிஷாவும் சிறு பதற்றற்துடன் வினவினர்.
அவந்திகா, “தெரியலை.. வரமாட்டேன் னு சொல்லி வீட்டிற்கு போனவர் திடீர்னு வந்து நிற்கிறார் அதுவும் கோபத்துடன்.. எனக்கு என்னவோ அவர் ருத்ரதாண்டம் ஆட ரெடியா இருப்பது போல் தோணுது.. ஆனா யாரிடம் எதுக்காக ஆட போறார் னு தான் தெரியலை”
“என்னடி சொல்ற?”
“ச்ச்.. சீக்கிரம் வா அக்கா” என்று அவசரப் படுத்தி இருவரையும் அழைத்துக் கொண்டு அரங்கத்திற்கு சென்றாள்.
மூவரும் சென்ற போது ப்ரனேஷ் கோபத்தை அடக்கியபடி ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான்.
ப்ரனிஷா நேரே அவனிடம் சென்று, “என்னாச்சு?” என்று வினவினாள்.
சுகுணா மற்ற ஆசிரியர்களிடம் “நான் சொல்லலை.. இப்போ நம்புறீங்களா?” என்று கூறினார்.
ப்ரனேஷ் தாழ்ந்த குரலில், “உன்னை பற்றி என்ன பேசிட்டு இருக்காங்க னு தெரியுமா?”
அவள் குழப்பத்துடன் பார்க்கவும் அவன் தாழ்ந்த குரலில் ஆனால் அழுத்தத்துடன், “உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு என்ன பேசிட்டு இருக்காங்க னு தெரியுமா?”
அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்து ‘இல்லை’ என்பது போல் தலையை அசைத்தாள்.
அவன் அன்பரசியை பார்க்கவும் அவள் தாழ்ந்த குரலில், “எனக்கும் எதுவும் தெரியாது.. மார்னிங் ஃபுல்லா இங்கே தான் இருந்தேன்.. அப்பறம் ப்ரனிஷா கூட பயோ லேபில் இருந்தேன்.. ப்ரனிஷா இன்னைக்கு முழுவதும் லேபில் தான் இருந்தாள்” என்று தோழிக்கும் சேர்த்து பதிலை சொன்னாள்.
ப்ரனேஷ் தன் குழுவினரை பார்த்து, “பிரெண்ட்ஸ்.. நீங்க கிளம்புங்க.. சாரி மீதி செக்-அப் நாளைக்கு காலையில் வைத்துக் கொள்ளலாம்” என்றவன் வரவழைத்த சிறு புன்னகையுடன், “நைட் ஹோட்டல் ஜானகிராமில் மீட் பண்ணலாம்” என்றான்.
அவர்களுக்கு சிறு குழப்பம் இருந்தாலும் மறுபேச்சின்றி கிளம்பினர்.
அவந்திகா ப்ரனேஷை பார்க்க அவன், “நீ இரு” என்றான்.
பிறகு சுகுணாவை சுட்டு விரலால் சுட்டிக்காட்டி தீர்க்கமாக பார்த்து, “கொஞ்ச நேரத்திற்கு முன் சொன்னதை இப்போ சொல்லு” என்றான்.
அன்பரசி வெறுப்படன் சுகுணாவை பார்க்க, அவந்திகா மனதினுள் ‘செத்தான் டா சேகர்’ என்று நினைத்துக் கொள்ள, ப்ரனிஷாவோ ‘என்னால் அவருக்கு கெட்ட பெயரா!’ என்ற எண்ணத்தில் ஊமையானாள்.
ப்ரனேஷ் பற்றி அறியாத சுகுணா அலட்சியத்துடன், “உண்மையை தானே சொன்னேன்” என்றார்.
“என்ன உண்மை?” என்று கோபத்துடன் கர்ஜித்தவன் அருகில் இருந்த மேஜையை ஓங்கி அடித்ததில் அந்த மர-மேஜை உடைந்தது.
அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க சுகுணாவிற்கு பயம் வந்தது.
அப்பொழுது சர்வேஷ் சாரதா மற்றும் அமுதா அங்கே வந்தனர். சர்வேஷை பார்த்ததும் சுகுணாவிற்கு பயத்தில் உடல் நடுங்கத் தொடங்கியது.
அரங்கத்தை நோட்டமிட்டபடி உள்ளே வந்த சர்வேஷ், “என்னாச்சு ப்ரனேஷ்?” என்றான்.
ப்ரனேஷ், “உன் ஸ்டாஃப்ஸ் எல்லோரும் இங்கே இருக்கிறாங்களா?”
மீண்டும் பார்வையை சுழற்றியவன், “சிலர் இல்லை” என்றான்.
“உடனே எல்லோரையும் வரச் சொல்”
சர்வேஷ், “முத்து” என்றதும் அந்த பியூன், “இதோ சார்” என்று அவசரமாக வெளியே ஓடினான்.
அமுதா ப்ரனேஷ் அருகே சென்று, “என்னாச்சு ப்ரனு?”
அப்பொழுது தான் அன்னையை கவனித்தவன் கோபத்தை சற்று குறைத்து, “சொல்றேன் மா” என்றதோடு நிறுத்திக்கொள்ள அவர் அமைதியானார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த பள்ளியில் வேலை செய்யும் அனைவரும்(ஆயாம்மா முதற்கொண்டு) அங்கே இருந்தனர்.  (குழந்தைகள் காப்பகத்தை பார்த்துக்கொள்ளும் ஒரு ஆசிரியரை தவிர)  
சர்வேஷ், “எல்லோரும் வந்தாச்சு”
ப்ரனேஷ் சுகுணாவை பார்த்து, “இப்போ சொல்லு” என்றான்.
சுகுணா பயத்துடன் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டு நிற்கவும், 
“உண்மையை சொன்னதா சொன்ன? இப்போ ஏன் அமைதியா இருக்கிற?” என்ற ப்ரனேஷ் கோபத்துடன் சர்வேஷ் பக்கம் திரும்பி, “இனி இவ இங்கே வேலை செய்யக் கூடாது சர்வா! நான் உன் ஸ்கூல் விஷயத்தில் தலையிடுறதா நினைத்தால்…………………….”
“என் அண்ணனுக்கு இங்கே எல்லா உரிமையும் உண்டு.. என்ன நடந்துச்சு னு சொல்லு”
ப்ரனேஷ் சர்வேஷின் அண்ணன் என்ற செய்தி அனைவருக்கும் புதிது. சுகுணா மனதினுள் ‘ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டோம் போலவே! இனி அவ்ளோ தான்’ என்று காலம் கடந்து யோசித்தார். 
ஒரு நொடி கண்ணை மூடி திறந்த ப்ரனேஷ் உணர்ச்சியற்ற குரலில், “எனக்கும் இனியாவிற்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறதாம்”
சர்வேஷ் கடும் கோபத்துடன் சுகுணாவை பார்க்க அவரோ பயத்தை மீறி ‘இனியா யாரு?’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
அமுதா ப்ரனிஷா அருகே சென்று அவள் கையை ஆதரவுடன் பற்றினார். அவள் கலங்கிய கண்களுடன் அவரை பார்க்க அவர் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் கண்களை மூடி திறந்தார். 
சர்வேஷ் கோபத்துடன் சுகுணாவை பார்த்து, “நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. என் கண் முன்னாடி நிற்காம கிளம்பு இல்லை பொம்பளை னு பார்க்காம அடிச்சிற போறேன்.. உன் செட்டில்மென்ட் வாங்குறதுக்கு கூட நீ வராதே.. உன் ஹஸ்பெண்டை அனுப்பு” என்றான்.
சுகுணா, “சார்.. நான்…………….”
“உன்னை கிளம்ப சொன்னேன்” என்று சர்வேஷ் உறுமினான்.
ப்ரனேஷ், “கொஞ்சம் இரு சர்வா.. என் இனியா மீது சுமத்திய குற்றம் பொய் னு நிரூபணம் ஆனதும் கிளம்பட்டும்”
“இவளிடம் நிரூபிக்கணும் னு அவசியம் இல்லை”
“அது இவளுக்காக இல்லை.. மற்றவர்கள் மனதில் இவள் விதைத்து இருக்கும் நஞ்சை விலக்க” என்றவன், “பானு மேம் யாரு?” என்று வினவினான்.
ஒருவர் எழுந்து நின்றதும், “காலையில் டுவெல்த் ஸ்டுடென்ட் ஸ்வேதா என்ன சொன்னாள்?”
அவர் யோசனையுடன் பார்க்கவும் ப்ரனேஷ், “இனியா! ஐ மீன் இனியமலர் என்ற ப்ரனிஷா என் கையை பிடித்து பேசிட்டு இருந்ததை பார்த்ததா சொன்னாளா?”
சுகுணா மனதினுள், ‘இவ தான் இனியா வா! இன்னொரு பெயர் இருப்பதை சொல்லவே இல்லையே! சரியான திமிர் பிடிச்ச அழுத்தக்காரி’ என்று கூறிக் கொண்டார்.
பானு, “இல்லை.. அப்படி சுகுணா மேடம் தான் சொன்னாங்க.. ஸ்வேதா அவள் பிறந்த நாள் அன்று அவள் கொடுத்த சாக்லேட்டை ப்ரனிஷா வாங்க மறுத்ததை பற்றியும் அதை நீங்க கேட்டதாகவும்.. அதை கொடுக்க ஸ்வேதா தயங்கிய போது ப்ரனிஷா கொடுக்க சொன்னதால் உங்களிடம் கொடுத்ததா சொன்னாள்”
“ஹ்ம்ம்.. அது உண்மை தான்.. அதில் தவறு இருப்பதா எனக்கு எதுவும் தோணலையே!”
“நானும் அதை தான் சார் சொன்னேன்.. அப்போ தான் சுகுணா மேடம் ப்ரனிஷா உங்க கையை பிடித்தபடி பேசியதை பார்த்ததா சொன்னாங்க.. அதற்கு மேலும் ஏதோ சொன்னாங்க பட் நான் அங்கிருந்து போய்ட்டேன்..”
“தன்க் யூ மேம்” என்றவன் சுகுணாவை தீர்க்கமாக பார்த்தான்.
‘வேலையே போனப் பின் இவர்களிடம் எனக்கு என்ன பயம்? ஆனால் போறதுக்கு முன் இந்த ப்ரனிஷாவை சும்மா விடக் கூடாது’ என்ற முடிவிற்கு வந்திருந்த சுகுணா அலட்சியத்துடன், “நான் சொன்னது முழுவதும் பொய் இல்லை.. ஏன் இப்போ கூட உள்ளே வந்ததும் அவ உங்களிடம் தானே வந்து பேசினாள்.. அதுவும் உரிமையுடன் பேசினாளே!”
ப்ரனேஷ் தன் அருகில் நின்றிருந்த ப்ரனிஷாவை திரும்பி பார்த்தான். அப்பொழுது அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் உதடு அசைவது வெளியே தெரியாதபடி, “இப்போ நான் என்ன சொன்னாலும் மறுத்து பேசக் கூடாது.. இது என் மீது ஆணை” என்றான்.
அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க அவனோ மெல்லிய புன்னகையுடன் பார்வையை சுகுணாவிடம் திருப்பி, “எங்களுக்குள் தொடர்பு இல்லை னு நான் சொல்லவே இல்லையே! ஆனால் அது கள்ளத் தொடர்பு இல்லை னு தான் சொல்றேன்” என்றான்.
ஆசிரியர்கள் ‘இவன் என்ன சொல்கிறான்?’ என்று யோசனையுடனும் குழப்பத்துடனும் அவனை பார்க்க, ப்ரனிஷாவோ அதிர்ச்சியுடனும் தவிப்புடனும் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அவன் தன்னை கார்னர் செய்ய போவதாக அவளுக்கு தோன்றியது.

Advertisement