Advertisement

சுகுணா, “ஏதோ ஒன்னு! தொடர்பு இருப்பதை நீங்களே ஒத்துக்கிறீங்க! அப்பறம் என்னை ஏன்………………….”
“அது எப்படி! நேர்வழி தொடர்பும் கள்ளத் தொடர்பும் ஒன்றா?”
“அப்படியே என்ன தொடர்பு என்பதை சொல்ல வேண்டியது தானே!” என்று சுகுணா இகழ்ச்சியுடனும் நக்கலுடனும் கூற,
ப்ரனேஷ் புன்னகையுடன், “கணவன் மனைவி என்ற தொடர்பு தான்” 
“என்னது!!!” என்று சுகுணா அதிர்ச்சியடைய, மற்றவர்கள் தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்தனர்.
சர்வேஷும் சாரதாவும் உதட்டோரம் அரும்பிய புன்னகையுடன் ப்ரனேஷை பார்த்துக் கொண்டிருக்க, அமுதா ப்ரனிஷா கையை அழுத்தமாக பற்றி ஆறுதல் அளிக்க, அன்பரசியும் அவந்திகாவும் ப்ரனிஷாவை திரும்பி பார்த்தனர்.
அவன் இதை போல் தான் ஏதாவது சொல்வான் என்பதை யூகித்த ப்ரனிஷாவிடம் எந்த அதிர்ச்சியும் இல்லை. விஷயம் அவளது கை மீறி சென்று விட்டதை உணர்ந்தவள் அமைதியாக ப்ரனேஷை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். 
சில நொடிகளில் தெளிந்த சுகுணா, “இல்லை பொய்”
“நான் ஏன் பொய் சொல்ல போறேன்?”
“அவளை காப்பாற்ற.. உங்கள் உறவை நியாயப் படுத்த”
“நான் பொய் சொல்லவில்லை.. நான் தான் இனியாவின் கணவன்” என்று அழுத்தி கூறியவன், “ஐ மீன் நான் ப்ரனிஷாவின் முன்னால் கணவன்.. நான் செய்த ஒரு தவறை பொறுத்துக்கொள்ள முடியாமல் என்னிடம் டைவர்ஸ் வாங்கிட்டு பிரிஞ்சு வந்துட்டா” 
சர்வேஷும் சாரதாவும் மென்னகையுடன் நின்றிருந்தனர்.
அன்பரசி ‘மாம்ஸ் சான்சே இல்லை’ என்பது போல் பார்க்க, அவந்திகா அதிர்ச்சியுடனும் பிரம்மிப்புடனும் அவனை பார்த்தாள்.
அமுதா கூட சிறு அதிர்ச்சி கலந்த மென்னகையுடன் நின்றிருந்தார்.
ப்ரனிஷாவோ ‘எனக்காக ஏன் உங்க மேல் பழியை போட்டுக்கிறீங்க!’ என்ற தவிப்புடனும் தன்னை அவன் காக்கும் விதத்தில் அதிக காதலுடனும் அவனை பார்த்தபடி நின்றிருந்தாள்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, சட்டென்று முகம் பிரகாசிக்க சுகுணா, “பொய்.. நீங்க சொல்றது அனைத்தும் பொய்” என்றவர் நக்கல் குரலில், “அது எப்படி சர்வேஷ் சாருக்கு உங்கள் மனைவியை தெரியாமல் இருக்கும்? ‘சர்வேஷ் சாருக்கு என்னை பற்றி எதுவும் தெரியாது’ னு இவளே முன்பு சொல்லியிருக்கிறாள்”
சுகுணாவின் கேள்வியில் சர்வேஷ் கூட சிறிது அதிர,
ப்ரனேஷோ சிறிதும் பதறாமல் மென்னகையுடன், “அதுவும் உண்மை தான்.. உங்கள் சேர்மன் சாரதா மேடம் என் அம்மாவின் உடன் பிறந்த தங்கை.. ஏழு வருஷத்திற்கு முன் சின்ன மனஸ்தாபத்தால் இரு குடும்பத்திற்கும் நடுவே பேச்சு வார்த்தை நின்று விட்டது.. கிட்ட திட்ட தொடர்பே அருந்த நிலை தான்.. அதனால் என் கல்யாணத்திற்கு அவர்கள் வரவில்லை.. அதனால் ப்ரனிஷாவை அவர்களுக்கு தெரியாது.. அவளுக்கும் இவர்கள் யார் என்று தெரியாது.. அவள் டைவர்ஸ் வாங்கிட்டு பிரிந்த பிறகும் என்னால் அவளை மறக்க முடியவில்லை..” என்றவன் தன்னவளை காதலுடன் பார்த்தபடி, 
“அவள் இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்த நான் அவளிடம் மன்னிப்பு கேட்டு அவளை கூட்டிட்டு போகவே இங்கே வந்தேன்.. சில மாதங்களாக அவளை தேடியவன் அவள் இங்கே இருப்பது தெரிந்ததும் சித்தி குடுபத்துடன் தொடர்பை புதுபித்துக் கொண்டு என்னவளின் மன்னிப்பிற்காகவும் அவள் என்னை ஏற்றுக் கொள்வதற்காகவும் காத்திருக்கிறேன்” என்று நீண்ட விளக்கத்தை கொடுத்தான்.
ப்ரனிஷா கண்ணில் வழிந்த கண்ணீருடன் இமைக்காமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அமுதா சிறு ஆச்சரியத்துடன் மகனை பார்க்க, சர்வேஷும் சாரதாவும் ‘அட பாவி’ என்பது போல் ப்ரனேஷை பார்த்தனர்.
அன்பரசி, ‘எந்த பாலை போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறீங்களே மாம்ஸ்!’ என்று மனதினுள் அவனை மெச்சிக் கொண்டாள்.
அவந்திகா அவனது காதலின் ஆழத்தை கண்டு அதீத பிரம்மிப்புடன் அவனை பார்த்தாள்.
இரண்டு நொடிகளில் தன்னவளிடமிருந்து பார்வையை விலக்கியவன் சுகுணாவை பார்த்து, “இப்பவும் நீங்க நம்பலை என்றால் ஒரு ஆதாரத்தை காட்டுறேன்” என்றவன் சர்வேஷை பார்த்து, “நான் சொன்னது என்னாச்சு?”
அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த சர்வேஷ் கண்களை மூடி திறக்கவும் ப்ரனேஷ் புன்னகையுடன் அன்பரசியை பார்த்து, “அபி ஐடி கார்டை வாங்கிட்டு வா” என்றான்.
அன்பரசி விரிந்த புன்னகையுடன் விரைந்து சென்றாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்த அன்பரசியின் கையில் அபிசாராவின் பள்ளி அடையாள அட்டை இருந்தது. இன்று காலையில் தான் காப்பகத்தில் இருந்த குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கப் பட்டது, அதுவும் நான்கு நாட்களுக்கு முன் ப்ரனேஷின் பரிந்துரையால். 
அன்பரசியிடமிருந்து அடையாள அட்டையை வாங்கிய ப்ரனேஷ் அதை சுகுணா முகத்திற்கு முன் நீட்டி, “இது ப்ரனிஷா குழந்தை அபிசாராவின் ஐடி கார்ட்.. இதில் அப்பா பெயர் என்ன போட்டிருக்கிறது?”
அதை பார்த்த சுகுணா அதிர்ச்சியுடன், “ப்ரனேஷ்” என்று கூறினார்.
ப்ரனிஷா நிற்க முடியாமல் இருக்கையில் அமர்ந்தாள்.
அமுதா, “மலர்” என்றபடி அவள் தோளை ஆதரவாக பற்றினார்.
அப்பொழுது, “அப்பா” என்ற பிஞ்சு குரல் அரங்கத்தின் வாயிலில் கேட்டது. அனைவரின் பார்வையும் வாயிலை நோக்க, அங்கே அபிசாரா நின்றிருந்தாள். அவளது பார்வை ப்ரனேஷிடம் இருந்தது. அன்பரசி பின்னே அவள் ஓடி வந்திருந்ததை யாரும் கவனிக்கவில்லை.
ப்ரனேஷ் சுகுணாவிடம் அடையாள அட்டையை காட்டி பேசியதையும் சுகுணா ‘ப்ரனேஷ்’ என்று கூறியதை கேட்ட குழந்தை அன்று வீட்டில் சித்திகள் பேசியதையும் இதையும் இணைத்து பார்த்து ப்ரனேஷை ‘அப்பா’ என்று அழைத்தாள். 
மகளின் குரலில் ப்ரனிஷா அவளிடம் ஓட குழந்தையோ ‘அப்பா’ என்ற அழைப்புடன் ஓடி சென்று ப்ரனேஷின் கால்களை கட்டிக் கொண்டாள்.
ப்ரனேஷ் கண்ணீருடன், “அம்மு” என்று அழைத்தபடி குழந்தையை தூக்கி முத்த மழையை பொழிந்தான். 
அவனது ஒவ்வொரு முத்தத்திற்கும் குழந்தை, “அப்பா.. இனி என்னுடன் இரு”, “அப்பா.. எங்தேயும்(எங்கேயும்) போதாதே(போகாதே), “பாப்பா தூதவே(கூடவே) இரு”, “பாப்பா அப்பா வேணும்” “பாப்பா சமத்தா இதுபா(இருப்பா).. நீ போதாதே” என்று அழுதபடியே கூறினாள்.
ப்ரனேஷும் கண்ணீருடன், “இல்லை டா குட்டிமா.. அப்பா எங்கேயும் போக மாட்டேன்.. இனி அம்முவையும் அம்மாவையும் விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்.. லவ் யூ குட்டிமா” என்று சமாதானம் செய்தபடியே முத்தங்களை கொடுத்தான்.
இதை பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் கண்களும் லேசாக கலங்கியது. இதை விட பெரிய ஆதாரம் அங்கே தேவையாக இருக்கவில்லை.. அனைவரும் சுகுணாவை திட்டத் தொடங்கவும் அவர் எரிச்சலுடன் ப்ரனிஷாவை முறைத்தபடி வெளியேறினார்.
ப்ரனிஷாவோ அபிசாரா ப்ரனேஷின் பாசப் பிணைப்பை கண்டு ஸ்தம்பித்து நின்றிருந்தாள்.
கலங்கிய கண்களை துடைத்த சர்வேஷ் கம்பீரக் குரலில், “இனி நம் ஸ்கூலில் யாரைப் பற்றியும் எந்த விதமான வம்பு பேச்சும் வரக் கூடாது.. அப்படி யாராவது பேசுவதாக தெரிந்தால் விசாரணை இன்றி வேலையை விட்டு நீக்கி விடுவேன்..” என்றவன், “செக்-அப் பண்ணிகாதவங்க நாளைக்கு உங்களுக்கு வகுப்பு இல்லாத நேரத்தில் வந்து செக் பண்ணிக்கோங்க.. இப்போ எல்லோரும் வீட்டிற்கு கிளம்பலாம்” என்றான்.
அனைவரும் கிளம்பினர். எஞ்சி இருந்தது சாரதா, அமுதா, சர்வேஷ் அன்பரசி, அவந்திகா, ப்ரனேஷ் ப்ரனிஷா மற்றும் அபிசாரா.
ப்ரனேஷ், “அம்மு குட்டி இங்கே எப்படி வந்தீங்க?”
“நான் அபி.. நீ அம்மு சொல்ற?”
ப்ரனேஷ் புன்னகையுடன், “அப்பாவுக்கு எப்பொழுதும் நீங்க அம்மு தான்”
“ஓ” என்ற குழந்தை, “அப்பா அம்மா எப்தி(எப்படி) தூபிதுவ(கூப்பிடுவ)?”
அவன் காதலுடன் தன்னவளை பார்த்தபடி, “அம்மாவை நான் இனியா ஸ்வீட்டி பேபி னு கூப்பிடுவேன்”
குழந்தை இடுப்பில் இரு கைகளையும் வைத்தபடி முறைப்புடன், “எனத்து(எனக்கு) ஒரு பேர் அம்மா மத்தும்(மட்டும்) நிறைய பேர்” என்றது.
வாய்விட்டு சிரித்தவன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு, “உங்களுக்கு தான் அம்மாவை விட நிறைய பெயர்.. அம்மு.. குட்டிமா.. அபி குட்டி.. பாப்பா.. செல்லக் குட்டி.. பட்டுக் குட்டி.. தங்கமா.. இன்னும் நிறைய”
குழந்தை மகிழ்ச்சியுடன் கை தட்டி குதித்தபடி அன்னையை பார்த்து, “அம்மா பாப்பாத்து(பாப்பாக்கு) தான் நிறைய பேர்” என்று இரு கைகளையும் விரித்து காட்டியது.
இதுவரை மகளை இவ்வளவு மகிழ்ச்சியுடன் பார்த்திறாத ப்ரனிஷா சிறு ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் புன்னகைத்தாலும் மகளின் ஏக்கத்தை நினைத்து சிறு வலி நெஞ்சின் ஓரத்தில் எழுந்தது.
அமுதா, “அப்பாவை பார்த்ததும் அபி குட்டி பாட்டியை மறந்துட்டா” என்றதும் குழந்தை, “அமுதா பாத்தி” என்று அவரிடம் ஓடினாள்.
சாரதா, “வீட்டிற்கு கிளம்பலாம்” என்றதும் அனைவரும் கிளம்ப ஆயுத்தமாக,
ப்ரனிஷா மெல்லிய குரலில், “நானும் அபியும் எங்க அவீடிற்கு போறோம் மேடம்” என்றாள்.
ப்ரனேஷ் அமைதியாக அவளை பார்த்தபடி நின்றிருந்தான். அவனது துளைக்கும் பார்வையை உணர்ந்தவள் அவன் பக்கம் திரும்பவே இல்லை.   
சாரதா, “வீட்டிற்கு போய் பேசிக்கலாம்.. இப்போ நீ எங்களுடன் வர” என்று பேச்சை முடித்துவிட அவள் வேறு வழி இல்லாமல் கிளம்பினாள்.
வீட்டிற்கு சென்றதும் சாரதா அன்பரசியை பார்த்து, “நீங்கலாம் சாப்டாச்சா?”
“சாப்பிட்டோம் அத்தை”
“சரி” என்றவர், ப்ரனேஷை பார்த்து, “மலரை உன் ரூமுக்கு கூட்டிட்டு போய் பேசு” என்றார்.
பிறகு ஒரு அறையை காட்டி, “அன்பு நீயும் அவந்திகாவும் இந்த ரூமில் ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. அபியை கூட்டிட்டு போய் தூங்க வை” என்றவர் தன்னை முறைத்துக் கொண்டு நின்ற மகனை பார்த்து, “சாப்டுட்டு நீ உன் ரூமிற்கு போ.. அபியை தூங்க வைத்த பின் உன்னுடன் ஹாலில் உட்கார்ந்து பேசுவாள்” என்றவர் ‘ஹாலில்’ என்ற வார்த்தையை அழுத்திக் கூறினார்.
அவன் மேலும் கடுப்புடன் முறைக்கவும் அவர் அலட்டிக் கொள்ளாமல், “ஹ்ம்ம்.. சாப்பிட வாடா” என்று விரட்டினார்.
அமுதா தன் கையில் இருந்த குழந்தையிடம், “அபி குட்டி பாட்டி கூட தூங்குறீங்களா?”
“அப்பா!”
“அப்பா எங்கேயும் போக மாட்டான்.. நீ தூங்கி எழும் போது இங்கே தான் இருப்பான்.. இப்போ தூங்க போகலாமா?”
“அம்மா!”
“அம்மாவும் தான்”
குழந்தை, “அப்பா அம்மா நான் பாத்தி(பாட்டி) தூத(கூட) தூங்த(தூங்க) போறேன்” என்றாள்.
ப்ரனேஷ் புன்னகையுடன், “சமத்தா தூங்குங்க குட்டிமா.. அப்பாவும் அம்மாவும் இங்கேயே தான் இருப்போம்..”
‘சரி’ என்பது போல் தலையை ஆட்டிய குழந்தை, “போலாம் பாத்தி” என்றாள்.
“சரி” என்ற அமுதா அன்பரசியை புன்னகையுடன் பார்த்து, “நீ சர்வா கூட பேசிட்டு இரு மா” என்றுவிட்டு குழந்தையுடன் சென்றார்.
சர்வேஷ் அன்னையை பார்த்து சிரிக்க அவரோ, “அக்கா!” என்று போலியான கோபத்துடன் அழைத்தார். ஆனால் அதை கேட்க அங்கே அமுதா இல்லை.
தயக்கத்துடன் நின்றிருந்த அவந்திகாவை பார்த்த சாரதா புன்னகையுடன், “தயக்கமின்றி உன் வீடு போல் இருமா.. போய் ரெஸ்ட் எடு.. அன்பு கொஞ்ச நேரத்தில் வந்திருவா” என்றார்.
‘சரி’ என்பது போல் தலையை ஆட்டிய அவந்திகா அவர் சொன்ன அறைக்குள் சென்றாள்.
சாரதா சர்வேஷிடம், “சாப்டுட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு அவளை ரெஸ்ட் எடுக்க அனுப்புற!” என்று சிறு கண்டிப்புடன் கூறிவிட்டு உணவறைக்கு சென்றார்.
ப்ரனேஷ், “இனியா” என்று அழைக்கவும் அவனை பார்த்தாள்.
அவன், “வா” என்ற ஒற்றை சொல்லுடன் செல்ல அவளுக்கு அவனிடம் கேட்க கேள்விகள் இருந்ததால் மறுபேச்சின்றி அவன் அறைக்கு சென்றாள்.
சர்வேஷ், “கொடுத்து வைத்தவன்” என்று முணுமுணுக்க,
அன்பரசி முறைப்புடன், “கண்ணு வைக்காதீங்க” என்றவள், “என்னவோ அவங்க அப்படியே ரொமன்ஸ் பண்ணிட போற மாதிரி பெரு மூச்சு விடுறீங்க!”
சிறிது அசடு வழிந்தவன், “அவங்களை விடு.. இப்போ நாம ரொமன்ஸ் பண்ணலாமா?” என்றபோது சாரதா, “சர்வா சாப்பிட வா” என்று அழைக்கவும் அவன், “அம்மா!!!” என்று பல்லை கடித்தபடி நகர அன்பரசி வாய்விட்டு சிரித்தாள்.
அவன் அவளை திரும்பி பார்த்து, “தனியா சிக்கும் போது இந்த சிரிக்கிற வாயை என்ன செய்றேன் பார்” என்றான்.
“கூப்பிட்டீங்களா அத்தை” என்றபடி அவனுக்கு முன் அவள் சென்று விட அவன் சிரிப்புடன், “சிக்காமலா போவ!” என்று கூறியபடி சென்றான்.
ப்ரனேஷ் அறைக்கு சென்றதும் இருக்கையை காட்டி, “உட்கார்” என்றவன் மெத்தையில் அமர்ந்தான்.
ப்ரனிஷா, “ஏன் இப்படி பண்ணிணீங்க?” என்று தவிப்புடனும் இயலாமையுடனும் வினவினாள்.
கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவன் தீர்க்கமான பார்வையுடன், “எப்படி பண்ணேன்?”
“ச்ச்.. பதில் சொல்லுங்க”
“அம்முவின் ஐடி கார்ட் பற்றி கேட்கிற என்றால்.. கோடிட்ட இடத்தை நிரப்புவது போல் அப்பா என்ற இடத்தில் நீ போட்டிருந்த கோட்டில் என் பெயரை எழுதினேன்.. அவ்ளோ தான்”
“எவ்ளோ ஈஸியா சொல்றீங்க!!!” என்று அவள் சிறு கோபத்துடன் வினவ,
அவன், “நிச்சயம் ஈஸியான விஷயம் இல்லை.. என் பொண்ணு என் பாசத்திற்கு எவ்ளோ ஏங்கி போயிருக்கா னு பார்த்த தானே! நானும் உன் காதலுக்கும் அம்முவின் பாசத்திற்கும் ஏங்கி வெம்பி போய் தான் நிற்கிறேன்”
சட்டென்று கோபம் வடிய அவள் இயலாமையுடன், “இனி அபியை எப்படி நான் சமாளிப்பேன்?”
“ஏன் சமாளிக்கணும்? என்னுடன் வந்தால் பிரச்சனையே இல்லையே!”  
“இது நடக்காது னு நான் சொல்லியும் ஏன் இப்படி பண்ணிணீங்க?”
“திரும்ப திரும்ப அதையே சொல்லாத”
“நீங்க என்ன சொன்னாலும் என் முடிவில் மாற்றம் இல்லை.. அபியை நான் சமாளிச்……………………….”
வேகமாக அவள் அருகே வந்து அவளது தோள்களை பற்றி உலுக்கியவன், “ஏன் டி என்னை உயிருடன் கொல்ற! வாழ்ந்தே பார்க்காமல் என்னால் வாழ முடியாது னு சொல்ற! தாம்பத்தியம் கல்யாண வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டுமே! அதை தவிர கல்யாண வாழ்க்கையில் அழகான நிறைய விஷயங்கள் இருக்கிறது.. அதை நான் உனக்கு காட்டுறேன்டி..” என்றவன், “நீ என்னை விட்டு போனாலும் என் வாழ்க்கையில் தாம்பத்தியம் இருக்க போறது இல்லை.. உன்னை தவிர வேறு எந்த பெண்ணுக்கும் என் மனதில் இடம் இல்லை.. அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்கிறது!!!!” என்று வருத்ததுடனும் வலியுடனும் முடித்தான்.
அவள் அழுகையுடன் மறுப்பாக தலையை அசைக்கவும், 
அவன் கைகளை விலக்கி கோபத்தை கட்டு படுத்தும் நோக்கத்துடன் இரண்டு நொடிகள் கண்களை மூடி நின்றான்.
பிறகு கண்களை திறந்தவன், “இதற்கு மேல் உன்னிடம் கெஞ்ச என்னால் முடியாது.. நாளைக்கு நைட் வரை தான் உனக்கு டைம்.. நாளைக்கு நான் சென்னை கிளம்பிடுவேன்.. ஆனா ஒன்னு.. இனி நீயே நினைத்தாலும் ஒன்றை மாற்ற முடியாது.. நீ என்னுடன் இல்லை என்றாலும் உன் கணவன் நான் மட்டுமே! இங்கே இருப்பவர்களுக்கு நான் தான் உன் கணவன்.. அம்மு நம் குழந்தை தான்” என்றவன் அவள் முகத்தை பார்க்காமல் கதவை நோக்கி கையை காட்டினான்.
அவள் கேவலை அடக்கியபடி வெளியே சென்றாள்.  
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement