Advertisement

  இதழ் 26
ப்ரனிஷா ப்ரனேஷை சந்தித்து ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று அவள் பேசி சென்ற பிறகு ப்ரனேஷ் அவளை சந்திக்கவில்லை. அவன் தினமும் பள்ளிக்கு சென்றாலும் அவள் கண்ணில் படவில்லை. இதில் அவள் பெரிதும் தவித்தாலும் அவனது நலனை கருதி எப்பொழுதும் போல் தன் துயரை தன்னுள் புதைத்துக் கொண்டாள்.
இதற்கிடையில் சர்வேஷின் அழைப்பை ஏற்று அன்பரசி அவன் வீட்டிற்கு சென்றாள். சாரதா அமுதா ப்ரனேஷ் சொர்ணம்(வேலையாள்) என்று அனைவரும் அவளை அன்புடன் வரவேற்றனர். சிறிது நேரம் அவளுடன் பேசியவர்கள் அவளுக்கும் சர்வேஷிற்கும் தனிமை கொடுத்து விலகினார்கள்.
அவளை தன் அறைக்கு அழைத்து சென்ற சர்வேஷ் கதவை திறந்து ஆங்கிலேயர் பாணியில் குனிந்து புன்னகையுடன், “மகாராணியை தங்கள் அறைக்கு அன்புடன் வரவேற்கிறேன்” என்றான்.
“சும்மா சும்மா மகாராணி சொல்லாதீங்க” என்ற செல்ல சிணுங்கலுடன் அவள் உள்ளே சென்றாள்.
அவன் அதே புன்னகையுடன், “நீ என் மகாராணி தானே!” என்றவன் பார்வையில் சிறு மாற்றம் கொண்டுவந்து, “இனி கல்யாணத்திற்கு முன் இப்படி சிணுங்காதே!” என்றான்.
அறையை சுற்றி பார்த்தபடி, “ஏன்?” என்றவள் அவனிடமிருந்து பதில் வரவில்லை என்றதும் அவனை பார்த்தாள். 
அவன் பார்வையின் மாற்றத்தை கண்டுக்கொண்டவள் சிறு படபடப்புடன், “ஹாலுக்கு போகலாம் வாங்க” என்றபடி கிளம்பினாள்.
ஆனால் சட்டென்று அவள் கையை பிடித்தவன், “ஏய் நில்லு” என்றான்.
இதை எதிர்பார்க்காதவள் அவன் பிடித்து இழுத்து நிறுத்திய வேகத்தில் அவன் மேல் வந்து மோதி நின்றாள்.  இதை அவனும் எதிர்பார்க்கவில்லை ஆனால் சந்தர்பத்தை தவறவிடாமல் அவனது கைகள் ஆக்டபஸ் போன்று அவளை வளைத்துக் கொண்டது.
அவள் அவன் முகத்தை பார்க்கும் துணிவின்றி அவன் நெஞ்சை பார்த்தபடி, “ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
“அரசி என்னை பார்” என்று அவன் ஹஸ்கி குரலில் கூறினான்.
அவள் மறுப்பாக தலையை அசைத்தாள்.
அவன் காதலுடன் கிறக்கமான குரலில், “அரசி” என்று அழைத்தான்.
அவள் மெல்ல தயக்கத்துடன் விழிகளை உயர்த்தினாள். 
அவன் அவள் கண்களை பார்த்து, “நிஜமா நான் எதையும் பிளான் பண்ணலை.. ஆனா இப்போ என்னால் முடியலை.. ப்ளீஸ் ஒரே ஒரு கிஸ்” என்று காதலுடனும் தாபத்துடனும் கூறியதும் அவள் கண்ணில் இருந்த அலைபுறுதல் நீங்கியது.
அவன் கண்களில் சம்மதம் கேட்க அவள் வெக்கத்துடன் பார்வையை தாழ்த்தினாள்.
அவள் வெக்கத்தை ரசித்தபடி புன்னகையுடன் ஒற்றை விரலால் அவள் நாடியை பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தினான்.
வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல் அவளுள் எழுந்த இன்ப அவஸ்த்தையையும் இதய படபடப்பையும் தாழ முடியாமல் அவள் விழிகளை மூடியிருந்தாள்.
மூடிய அவள் விழிகளில் மென்மையாக இதழ் ஒற்றியவன் அவள் கண்களை திறந்ததும் கண்களை பார்த்தபடி காதலுடன் அவளது இதழ்களை தன் இதழால் தீண்டினான். தன்னுள் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தவள் முதலில் நடுங்கினாலும் பின் அவனது முத்தத்தில் கரையத் தொடங்கினாள். அவள் கைகள் அவளையும் அறியாமல் அவன் முதுகை பற்றியது.
இந்த நிமிடம் அப்படியே நீளாதா என்பது போல் தேன் உண்ட வண்டாக முத்தத்தை நீட்டிக் கொண்டே சென்றவன் அவள் மூச்சு காற்றுக்கு திணறவும் தான் மனமே இல்லாமல் இதழை பிரித்தான்.
சில நொடிகளில் நிதானத்திற்கு வந்தவள் அவனை விட்டு விலக முயற்சித்தாள் ஆனால் முடியவில்லை. 
அவள், “ப்ளீஸ்” என்று கெஞ்சவும்,
அவன் சிறு பெருமூச்சை வெளியிட்டபடி, “சரி” என்றபடி தன் கைகளை தளர்த்தினான்.
அவள் சட்டென்று விலகி தரையை பார்த்தபடி நின்றாள்.
அவள் முகத்தை ஆசையுடன் பருகியவன் மெல்லிய குரலில், “பிடித்ததா?” என்று வினவினான்.
“அஹன்” என்று அவள் புரியாமல் விழிக்க, அவன் புன்னகையுடன், “பிடித்ததா னு கேட்டேன்”  
அவள் இப்பொழுதும், “ஹ.. என்ன கேட்டீங்க?” என்று வினவ, 
அவன் விரிந்த புன்னகையுடன், “ஹ்ம்ம்.. இன்னொரு முத்தம் கொடுத்து தான் தெளிய வைக்கணும் போல!” என்று கூற,
சட்டென்று தெளிந்தவள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள். 
அவன் முகத்தில் தெரிந்த குறும்பில் நிம்மதியடைந்தவள் செல்லக் கோபத்துடன், “கேடி! ஒன்னு தானே சொன்னீங்க?”
“நான் ஒரு கிஸ் தானே தந்தேன்”
அவள் ஆச்சரியத்துடன் பார்க்கவும் அவன், “என்ன?”
“நீங்க கூட பொய் சொல்றீங்களே!”
அவன் வாய்விட்டு சிரித்தபடி, “இதெல்லாம் பொய்யா!”
“பின்ன இல்லையா?”
“இந்த விஷயத்தில் பொய் மெய் னு வித்தியாசம் கிடையாது.. ஆனா நான் நிஜமாவே பொய் சொல்லலை”
அவள் இடுப்பில் கைவைத்து செல்லமாக முறைக்கவும், 
அவள் நின்ற அழகை ரசித்தவன், “இப்படியெல்லாம் நின்றால் பிறகு நடப்பதிற்கு நான் பொறுப்பில்லை” என்றவனது பார்வை கிறக்கத்துடன் அவள் உதட்டில் பதியவும் அவள் பதட்டத்துடன் கையை தளர்த்தி உதட்டை கடித்தபடி தரையை பார்த்தாள்.
அவன் புன்னகையுடன், “ரிலாக்ஸ்..” என்றவன் அவளது பதற்றம் குறைந்ததும், “நான் இதழில் தான் சொன்னேன்.. அங்கே ஒன்னே ஒன்னு தானே தந்தேன்” என்று கூறி கண்ணடித்தான்.
அவள் வெக்கத்துடன் பார்வையை மீண்டும் தாழ்த்தினாள்.
அவன், “என்ன?”
அவள் எங்கோ பார்த்தபடி, “அப்போ கண்ணில் கொடுத்தது?”
“இனி என் முகத்தை பார்க்காமல் பேசினால் நிச்சயம் முத்தம் தான் பனிஷ்மென்ட்”
அவள் அவசரமாக அவன் முகத்தை பார்த்து, “நீங்களும் இனி இப்படி பண்ணாதீங்க?”
“எப்படி?”
“கண்ணடிக்கிறது.. அப்படி பார்க்கிறது”
“அப்போ கிஸ் ஓகே யா?”
“இல்லை.. அதுவும் தான்” என்று அவள் அவசரமாக கூறவும் அவன் மீண்டும் வாய்விட்டு சிரித்தான்.
அவள் அவன் முகத்தை இமைக்காமல் பார்க்கவும் புருவம் உயர்த்தினான். அதில் சுய உணர்வு பெற்றவள் சிறு வெக்க புன்னகையுடன் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
“ஒரு நிமிஷம்” என்றவன் அறையில் இருந்த அலமாரியை திறந்து சிறிய தங்க மோதிர பெட்டியை எடுத்தான்.
அதை பார்த்தவள் சிறு பயத்துடனும் தயக்கத்துடனும் பின்னால் நகரவும், அவன், “அரசி” என்று அழுத்தத்துடன் அழைத்தான்.
“இதெல்லாம் வேணாமே ப்ளீஸ்” என்று கெஞ்சும் குரலில் கூறினாள்.
அவன் அதை அவளிடம் காட்டினான். அதில் சர்வேஷ் என்று எழுதி இருந்தது.
அவன், “இதை வேண்டாம் னு சொன்னால் நீ என்னையே வேண்டாம் னு சொல்வது போல்” என்று சற்று அழுத்தத்துடன் கூறவும் அவள் தவிப்புடன் அவனை பார்த்தாள்.
அவன் மெல்லிய புன்னகையுடன், “முதல் முறையா நம்ம வீட்டிற்கு வந்திருக்க! அதை கொண்டாட சின்ன பரிசு.. அவ்ளோ தான்”
அவள் அப்பொழுதும் தவிப்புடனும் சிறு பயத்துடனும் பார்க்கவும் அவன் அவள் கன்னத்தில் கையை வைத்து கனிவுடன், “என்ன டா?”
“கொஞ்சம் பயமா இருக்குது”
அவன் அவளை மென்மையாக அணைத்து, “இப்போ பயமா இருக்குதா?”
அவள் சிறிது கலங்கிய கண்களுடன் ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டி அவன் நெஞ்சில் முகத்தை பதித்தாள்.
அவன் அவள் தலையில் தனது கன்னத்தை வைத்தபடி, “நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன் டா.. நீ எப்பவும் யாருக்காவும் எதுக்காகவும் பயப்படக் கூடாது..”
“ஹ்ம்ம்”
“பெயரளவில் மட்டுமின்றி நீ செயலிலும் ஒரு அரசியை போல் இருக்கணும்..” என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி, “என்ன?”
“ஹ்ம்ம்”
“இதை ஏன் சொல்றேனா! நாளைக்கு நம்ம விஷயம் தெரிந்ததும் சுகுணா போன்ற ஆட்கள் பொறாமையில் ஏதாவது உன் காதுபட பேசுவாங்க.. அப்போ நீ தைரியமா நிமிர்ந்து நின்று சமாளிக்கணும்.. ஒன்றை நன்றாக மனதில் பதித்துக் கொள்.. உன்னை பேசும் தகுதி அவர்களுக்கு கிடையாது.. இனி அவர்கள் உனக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள்.. அதாவது நீ தான் அவர்களுக்கு சம்பளம் தரும் முதலாளி”
அவள் கண்கள் விரியவும் அவன் புன்னகையுடன் மென்மையாக அவள் கண்களில் முத்தமிட்டான்.
அவள் சட்டென்று விலகவும், அவன் விலக விடாமல் அவள் கையை பற்றி அதில் மோதிரத்தை போட்டு விட்டான்.
அவள் நெகிழ்ச்சியுடன் மோதிரத்தை பார்த்துக் கொண்டிருக்கவும், அவளை சகஜமாக்கும் எண்ணத்துடன் அவன் சிரிப்புடன், “நான் முத்தம் கொடுத்தால் மேடமிற்கு தைரியம் வந்திரும் போலவே!”
“அதெல்லாம் இல்லை.. நான் தைரியசாலி தான்”  
“அப்படியா!”
“ஆமா”
“அப்போ நான் முத்தம் கொடுத்தால் பயப்படாமல் ஏற்றுகொள்வ!”
ஒரு நொடி அதிர்ந்தவள் பின், “ஆமா” என்று மிடக்காக கூறி, பின் புன்னகையுடன், “ஆனால் கல்யாணத்திற்கு பிறகு” என்றுவிட்டு வெளியே ஓடினாள். 
வெளியே இவர்களுக்காவே காத்திருப்பது போல் சாரதா அமர்ந்திருந்தார்.
அவர் அன்பரசியை பார்த்து புன்னகையுடன், “இங்கே வந்து உட்காரு” என்று கூறிவிட்டு, “சொர்ணம்” என்று குரல் கொடுத்தார்.
அவள் அவர் அருகே அமர்ந்ததும் சர்வேஷ் புன்னகையுடன் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.
சொர்ணம் வந்து சிற்றூண்டி கொடுத்துவிட்டு சென்றதும், சர்வேஷ், “நாளைக்கு எங்கள் கல்யாணத்தை பற்றி அறிவிப்பு கொடுத்திரலாம் னு நினைக்கிறன் மா”
“நல்லது.. இப்போ தான் ஜோசியரிடம் பேசினேன்.. அடுத்த மாசம் பத்தாம் தேதி உங்க(ள்) கல்யாணத்தை வச்சிக்கலாம் சொன்னார்”
“இன்னும் மூணு வாரம் இருக்கிறது மா!” என்று அவன் சோகமாக கூற, 
சாரதா புன்னகையுடன், “மூணு வாரம் தான் இருக்கிறது.. அதற்குள் மண்டபம் பார்க்கணும்.. பத்திரிக்கை அடிக்கணும்.. சொந்தக்காரங்களுக்கு கொடுக்கணும்……..”
“அதெல்லாம் மக்சிமம் பத்து நாளில் பண்ணிடலாம்.. மண்டபம் பிடிச்சிட்டா போதும்.. என் பிரெண்ட் பிரஸ் வைச்சிருக்கிறான்.. ரெண்டு நாளில் பத்திரிக்கை வந்திரும்.. கொரியர் பண்ணால் அடுத்த நாளே சொந்தக்காரங்களுக்கு கிடைத்து விடும்.. கல்யாண வேலைகளுக்கும் ஆள் இருக்காங்க.. இப்போலம் காண்ட்ராக்ட் போல் எல்லா வேலைகளுக்கும் ஆள் இருக்கிறாங்க.. அப்பறம் என்ன!”
“அது சரி.. நீ விட்டா இப்போவே இவ கழுத்தில் தாலி கட்டிடுவ”
“உங்க பையனை உங்களுக்கு தெரியாதா மா!” என்று அவன் புன்னகையுடன் கூற,
அவரும் புன்னகையுடன், “வெக்கமே இல்லையா டா!”
“அம்மா கிட்ட வொய் வெக்கம்?”
“ஹ்ம்ம்.. அப்பறம்.. இந்த மூணு வாரமும் நீ பிரான்ச் ஸ்கூல் போ.. நான் இங்கே பார்த்துக்கிறேன்”
“அம்மா இது அநியாயம்.. என்னால் முடியாது” என்று சிறு பையனை போல் அடம் பிடித்தான். அன்பரசி அவனது பாவனையில் சிரித்தாள்.
அவன் செல்லமாக அவளை முறைத்து கண்ணில் ‘தனியா மாட்டும் போது கவனிச்சிக்கிறேன்’ என்று மிரட்டினான். அவளோ அவனுக்கு அழகு காட்டி சிரித்தாள். 
இவர்களின் சம்பாஷணையை பார்க்காதது போல் பார்த்த சாரதாவிற்கு நிறைவாக இருந்தது.
சாரதா தொண்டையை செருமி இருவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
அவர், “தப்பான பேச்சிற்கு இடம் கொடுக்க கூடாது” என்று சிறு கண்டிப்புடன் கூற,
சர்வேஷ் கோபத்துடன், “பேசுறவங்க பேச தான் மா செய்வாங்க.. அதுக்கா………………..”
“சர்வா!” என்று அழுத்தத்துடன் அழைக்கவும் அவன் பேச்சை நிறுத்தினாலும் சிறு கோபத்துடன் பார்த்தான்.
அன்பரசி இருவரையும் சிறு பயத்துடன் பார்த்தாள்.
சாரதா, “நீ எதையும் பொருட் படுத்த மாட்ட ஆனா அன்பு அப்படி இல்லை” என்றதும் அவளை பார்த்தவன் அவள் கண்ணில் தெரிந்த பயத்தில் கோபம் தணிந்தாலும் அவளை பார்த்து, “இப்போ தானே சொன்னேன்.. பயப்படக் கூடாது னு” என்று சிறு கோபத்துடனே கூறினான்.
அதில் அவள் மேலும் பயப்பட அவள் கையை பற்றிய சாரதா, “சர்வா இப்படி தான் அன்பு.. எவ்வளவுக்கு எவ்வளவு அன்பும் பாசமும் கொண்டவனோ அவ்வளவு கோபமும் வரும் ஆனா அவன் கோபம் நியாமானதா தான் இருக்கும்.. அவன் கோபத்தைக் கண்டு பயந்து ஒதுங்காமல் அவனை அரவணைத்து அன்பா பார்த்துக்கோ.. என்ன தான் கோபம் இருந்தாலும் உன் அன்பிற்கு முன் அது செல்லாது” என்றதும் அவள் அவனை திரும்பி பார்த்தாள்.
அவன் இருந்த நிலையில் மாற்றம் இல்லை. அவனை எப்படி மலை இறக்க என்று யோசித்தவள் மெல்லிய குரலில், “நான் தைரியமா இருப்பேன்” என்று கூறி, புன்னகையுடன், “நீங்க தான் என் கூடவே இருந்து தைரியம் கொடுப்பீங்களே!” என்றவள் ‘கொடுப்பீங்களே’ என்றதில் அழுத்தம் கொடுத்து இரு பொருள் பட கூறினாள்.
அவன் சிறு யோசனையுடன் பார்க்க அவள் தலையை சரித்து குறும்புடன் ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்தவும் அவள் கூறியதின் பொருள் புரியவும் அவன் இதழ்கள் புன்னகையில் விரிந்தது. கூடவே அவன் பார்வை அவள் இதழுக்கு செல்லவும் அவள் சாரதாவை சுட்டி காட்டி கண்ணில் மிரட்டினாள்.
அவன் வாய்விட்டு சிரித்தபடி, “அம்மா நீங்க சொன்னது சரி தான்” என்றான்.
அவரும் புன்னகையுடன், “என்ன டா சரி?”
“உங்க(ள்) மருமகள் கூறியதில் என் கோபம் காணமல் போயிருச்சே!” என்றவன் அவளை பார்த்து கண்சிமிட்டினான்.
அவன் சாரதா முன் கண்ணடிக்கவும் அவள் சிறு படபடப்புடனும் வெக்கதுடனும் பார்வையை தாழ்த்தினாள். அதை எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவன் ரசித்தான்.
சாரதா, “சரி கல்யாணம் முடியும் வரை இங்கே வராதே னு சொல்லைலை.. கொஞ்சம் நேரம் வந்துட்டு போ.. கல்யாணம் முடிந்ததும் பிரான்ச் ஸ்கூலை அன்பு பார்த்துக்கட்டும்…………”
அன்பரசி அதிர்ச்சியுடன், “மேடம்”
சாரதா, “மேடம் இல்லை அத்தை”
அவள் நாக்கை கடித்து, “சாரி அத்தை.. அதிர்ச்சியில் தெரியாம வந்திருச்சு” என்றவள், “என்னை போய் பிரான்ச்……………………..”
“உன்னால் முடியும்” என்று அழுத்தத்துடன் சர்வேஷ் கூறினான்.
அவன் குரலில் அவள் அடங்கினாலும் அவளுள் தயக்கம் இருக்கத் தான் செய்தது.
சர்வேஷ், “உன்னால் நிச்சயம் முடியும்.. டீச் பண்றதில் உனக்கு அதிக ஆர்வம் உண்டு.. ஸோ ஒரே ஒரு கிளாஸ்க்கு மட்டும் எடுத்துட்டு ஸ்கூலை பார்த்துக்கோ.. நீ பழக்கப்படும் வரை நான் உன்னுடன் இருப்பேன்”
“ஹ்ம்ம்”
சாரதா, “அவனுக்கு எல்லா விதத்திலும் பக்க பலமா துணையா நீ இருக்கனும் டா” என்றதும் சட்டென்று உறுதி பெற்றவள் அவனை பார்த்து, “நீங்க சொல்லிக் கொடுங்க நான் பார்த்துகிறேன்” என்றாள்.
சாரதா அவள் கையை தட்டிக் கொடுக்க, அவன் புன்னகையுடன், “குட்.. தட்’ஸ் மை கேர்ள்” என்றான். 
அதன் பிறகு அனைவரும் ஒன்றாக இரவு உணவை உண்டனர். உண்ட பிறகு கிளம்பும் நேரம் அன்பரசி ப்ரனேஷிடம் தனியாக, “மாம்ஸ்.. எங்க கல்யாணத்தை வைத்து ப்ரனிஷாவை கார்னர் பண்ணலாமா?”
“எப்படி? அவள் சம்மதித்தால் தான் நீ சம்மதிப்பதாகவா?”
“ஹ்ம்ம்”
“அவள் என்னை எனக்காக.. அவளுக்காக.. எங்களுக்காக மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்”  
“நிச்சயம் மனசு மாறுவா மாம்ஸ்”
“கண்டிப்பா” என்றான் புன்னகையுடன்.
அப்பொழுது அங்கே வந்த சர்வேஷ், “கிளம்பலாமா?”
“ஹ்ம்ம்” என்றவள் அனைவரிடமும் கூறிக்கொண்டு கிளம்பினாள்.
அவளது விடுதிக்கு செல்லும் வழியில் ப்ரனேஷிடம் பேசியதை அவள் சர்வேஷிடம் கூறினாள்.
சர்வேஷ், “அவன் சொல்வது சரி தானே! அவனது காத்திருப்பு வீண் போகாது”
“மாம்ஸ் என்ன பிளானில் இருக்கிறார்?”
“தெரியலை.. அன்னைக்கு மலர் பேசிட்டு போன பிறகு கொஞ்ச நேரம் வெளியே வரவே இல்லை.. அப்பறம் தெளிந்த முகத்துடன் இயல்பா பேசினான்.. என்ன பிளான் கேட்டதுக்கு சிரிக்க மட்டும் தான் செய்தான்”
“ப்ரனிஷா என்ன சொன்னா னு கேட்டீங்களா?”
“இப்படியே தனியே விட சொல்றாங்களாம்”
“ச்ச்..” என்று அலுத்துக் கொண்டவள், “என்ன காரணம் சொன்னாளாம்?”
“கேட்டேன்.. அவங்க கடந்த காலத்தை பற்றி அவன் கணிதத்தை உறுதி செய்ததா சொன்னான்.. அவ்ளோ தான்”
“என்ன பண்ண?”
“இப்போதைக்கு நாம எதுவும் பண்ண முடியாது.. அவனும் அமைதியா தான் இருக்க சொல்றான்.. ஆனா ஒன்னே ஒன்னு பண்ண சொன்னான்”
“என்ன?” என்று ஆர்வத்துடன் கேட்டவள் சர்வேஷ் சொன்னதை கேட்டு அதிர்ச்சியுடன், “நீங்க அவர் சொன்னதை பண்ணிட்டீங்களா?”
“ஹ்ம்ம்”
“ப்ரனிஷா எப்படி ரியாக்ட் பண்ணுவா னு தெரியலையே!”
“பார்க்கலாம்” என்றபோது விடுதி வந்திருந்தது.
அவள் இறங்க போனபோது அவன், “அரசி” என்று மென்மையாக அழைத்தான்.
அவள் பார்க்கவும் அவன் கண்ணில் காதலுடன், “ஐ லவ் யூ” என்றான்.
அவள் வெக்கத்துடன், “நானும்” என்றாள்.
அவன் புன்னகையுடன், “நீயும்!!!”
“..”
“ஹ்ம்ம்.. சொல்லு”
“நானும் ஐ லவ் யூ” என்று வெக்கத்துடன் சொன்னவள் சொன்ன வேகத்தில் இறங்க முயற்சித்தாள் ஆனால் முடியவில்லை.
அவள் சொன்ன அடுத்த நொடி அவனது இறுகிய அணைப்பில் இருந்தாள்.
அவள் ‘ப்ளீஸ்’ என்று கூற வாய் திறந்த போது அதை சொல்ல விடாமல் அவன் அவளது இதழ்களை சிறை செய்திருந்தான்.
சில நொடிகளில் விலகியவன் அவள் கைகளை பற்றி, “இப்படியே உன்னை கூட்டி போக மனம் துடிக்குது.. லவ் யூ கண்ணம்மா.. பேரன் பேத்தி வந்த பிறகும் இதே காதலுடன் நாம் சந்தோஷமா வாழனும்.. வாழ்வோம்” என்றான்.
அவள் கலங்கிய கண்களுடன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
அவன், “லூசு.. எதுக்கு கண் கலங்குற?”
“இது ஆனந்த கண்ணீர்.. நான் கல்யாணத்தை பற்றி யோசிக்கவே இல்லை.. என் தகுதி…………….”
“என்ன பேச்சு அரசி.. உனக்கு என்ன குறை?”
“இது உங்கள் பெருந்தன்மை ஆனால் உண்மை……………………”
“உண்மையும் அது தான்..” என்றவன் “இனி தகுதி அது இது னு உன் வாயில் வரவே கூடாது.. என்ன?” என்று அவன் கண்டிப்புடன் கூறவும், 
அவள் புன்னகையுடன் ‘சரி’ என்று தலையை ஆட்டி, “முன் ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்திருக்கணும்.. அதான் உங்கள் காதல் எனக்கு கிடைத்து இருக்கிறது” 
“அன்புவின் அன்பு கிடைக்க நானும் புண்ணியம் செய்திருப்பேன் போல!” என்று கண் சிமிட்டினான்.
சில நொடிகள் அவன் முகத்தை இமைக்காமல் பார்த்தவள் மெல்ல அவன் நெஞ்சில் சாய்ந்தாள். அவள் தோளில் மென்மையாக கை போட்டு கனிவுடன், “என்ன டா?”
தானே அவனிடம் நெருங்கியும் சந்தர்பத்தை பயன் படுத்திக்கொள்ளாமல் தன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அன்புடன் ‘என்ன டா’ என்று கேட்டவன் மீது காதல் பொங்கியது அவளுக்கு. 
அவள் எம்பி அவன் கன்னத்தில் பட்டும் படாமல் இதழ் பத்தித்தாள்.
அவன் இன்ப அதிர்ச்சியுடன், “என்ன டா ஆச்சு?”
கண்ணில் ஆனந்த கண்ணீருடன் இதழில் புன்னகையுடன், “உங்க மேல் இப்போ தான் அதிகமா லவ் வருது”
அவன் விரிந்த புன்னகையுடன், “ஏனாம்?”
அவள் தன் மனதில் பட்டதை சொல்லவும் அவன், “என்ன சர்வேஷுக்கு வந்த சோதனை!!!!!!”
அவள் புரியாமல் பார்க்கவும் அவன், “பின்ன! இப்படி நச்சுன்னு நெஞ்சில் சாய்ந்து கன்னத்தில் வேற முத்தம் கொடுத்துட்டு என் கையையும் உதட்டையும் கட்டி போடுவது போல் பேசினால் நான் என்ன செய்வேன்!!!!” என்று அவன் பாவம் போல் கூறவும் அவள் வாய்விட்டு சிரித்தாள்.
அவள் சிரிப்பை ரசித்தவன் அவளது கலங்கிய கண்களை துடைத்து நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, “எப்பொழுதும் இப்படி மகிழ்ச்சியுடன் இரு” என்றான்.
“உங்கள் அன்பும் காதலும் இருக்கும் வரை என் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது”
அவன் சிரிப்புடன், “அப்போ எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் தான் இருப்ப” 
“ஹ்ம்ம்”
சில நொடிகள் மௌனத்தில் கழிய அவன், “எவ்ளோ நேரம் இப்படியே இருக்கிறதா ஐடியா? எனக்கு ஓகே தான் ஆனால் உன் வார்டன் கதவை மூடிற போறாங்க” என்றதும் அவள் சட்டென்று விலகி கீழே இறங்கினாள்.
அவன் சிரிப்புடன் பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்தான்.
அவள் வெக்கத்துடன் அதை பெற்றுக் கொண்டு, “சரி.. கிளம்புங்க” என்றாள்.
“நீ உள்ளே போ”
“ஹ்ம்ம்” என்றவள் திரும்பி திரும்பி பார்த்தபடி உள்ளே சென்றாள். அவன் நெஞ்சம் நிறைந்த காதலுடன், கண்ணில் கனவுடன் வண்டியை கிளப்பிக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
ர்வேஷ் சொன்னது போல் அடுத்த நாள் தலைமை பள்ளியிலும் கிளை பள்ளியிலும் கூட்டம் கூட்டி தனது திருமணத்தை அறிவித்தான்.
அவன் சொன்னது போல் சுகுணா மற்றும் சில ஆசிரியர்கள் பொறாமையில் பொங்கினர். அன்பரசி பின்னாலும் அவள் காதுபடவே இகழ்ச்சியாக சிலர் பேசினார்கள். அன்பரசி காதுபட அதிகம் இகழ்ச்சியாக பேசியது சுகுணா தான். அன்பரசி அதை கண்டு கொள்ளாமல் கடந்து செல்லவும் சுகுணாவிற்கு எரிச்சலும் கடுப்பும் அதிகமாகியது.
ன்று மதியம் ஆசிரியர் அறையில் அன்பரசியும் ப்ரனிஷாவும் பேசியபடி உணவை உண்டுக் கொண்டிருந்தனர். 
அன்பரசி, “என்ன முடிவு பண்ணியிருக்க?”
“என்ன?”
“புரியாதது போல் பேசாதே.. நீ போய் பேசிட்டு வந்து ஒரு வாரம் ஆகுது.. என்ன பேசின? என்ன முடிவு எடுத்து இருக்க?”
“என் முடிவில் மாற்றம் இல்லை.. அதற்கான காரணத்தை தான் அன்னைக்கு பேசினேன்.. அதை ஏற்றுக் கொண்டு அவரே விலகி தானே இருக்கிறார்” என்றபோது என்ன முயன்றும் அவள் குரலில் வலியை மறைக்க முடியவில்லை.
“அதில் உனக்கு சந்தோஷமா?”
“நிச்சயமா”
“பொய் சொல்லாதே! உன் குரலே…………….”
“அவருக்கு இதான் நல்லது”
“உனக்கு?”
“விடு.. உன் கல்யாணத்தை பற்றி பேசலாம்..”
“அபி என்ன சொல்றா?”
“என்ன சொல்லணும்?”
ப்ரனிஷாவை முறைத்த அன்பரசி, “அப்பா பற்றி எதுவும் திரும்ப கேட்டாளா?”
“இல்லை.. என் கோபத்தை பார்த்து அமைதியா இருக்கலாம்”
“பாவம் குட்டி.. அபிக்காகவாது……………………..”
“என்னைக்கு முகூர்த்த புடவை எடுக்க போறீங்க?”
சிறு பெருமூச்சை வெளிட்ட அன்பரசி, “போறீங்க இல்லை.. போறோம்”
“நான் எதற்கு?”
அன்பரசியின் முறைப்பில், “சரி வரேன்”
“அது”
அப்பொழுது சுகுணா இவர்கள் காதுபட அருகில் இருந்த ஆசிரியரிடம் பேசத் தொடங்கினார்.
“இந்த அன்பரசியை சும்மா சொல்லக் கூடாது.. ஒன்னும் தெரியாத பாப்பா போல் இருந்துட்டு இப்படி பெரிய இடத்தை பிடிச்சிட்டா பாரேன்”
“ஹ்ம்ம்.. ஆமா கா”
சுகுணா ப்ரனிஷாவை வெறுப்புடன் பார்த்தபடி, “எல்லாம் புதுசா வந்த ஆள் கூட்டு சேர்ந்த பிறகு தான்.. அவ தான் எப்படி வளைத்து போடுறது னு சொல்லி கொடுத்திருப்பா”
ப்ரனிஷா திரும்பி முறைக்கவும் சுகுணா பேசிக் கொண்டிருந்த ஆசிரியர் மெல்லிய குரலில், “அக்கா வேணாம்.. பெண் சிங்கத்தை சீண்டாதீங்க.. சேதாரம் உங்களுக்கு தான்”
“அவ சிங்கம் னா நான் யாரு?”
அந்த ஆசிரியர் மனதினுள் ‘நீ நரி’ என்று சொல்லிக் கொண்டு வெளியே சிரித்தபடி, “ஹீ.. ஹீ.. நீங்களும் சிங்கம் தான் கா” என்றார்.
சுகுணா, “எனக்கு என்னவோ அந்த ராகுல் சொன்னது உண்மையோ னு தோணுது”
“என்ன சொன்னான் கா” என்று ஆர்வமாக கேட்கவும்,
சுகுணா உற்சாகத்துடன் அன்பரசியை ஓரப்பார்வை பார்த்தபடி, “இவ அவனுடன் இளித்து பேசிட்டு தான் இருந்து இருக்கா…. அவன் கல்யாணம் னு சொன்னதும் கம்பியை நீட்டிட்டா.. இப்போ தானே காரணம் தெரியுது.. பெரிய இடம் கிடைத்ததும் அவனை கலட்டி விட்டிருப்பா!”
ப்ரனிஷா கோபத்துடன் எழ போக, அன்பரசி அவள் கையை பிடித்து நிறுத்தி, “விடு.. சாக்கடையில் கல் எறிந்தால் சாக்கடை தண்ணி நம்ம மேல் தான் படும்.. என்னை பற்றி எனக்கு வேண்டியவர்களுக்கு தெரியும்” என்றாள்.
ப்ரனிஷா சிறு ஆச்சரியத்துடன் தோழியை பார்த்தாள். முன்பு வடு சொல்லிற்கு அஞ்சி அழும் அன்பரசி இவள் இல்லை என்பது புரிந்தது.
ப்ரனிஷா மெல்லிய புன்னகையுடன், “சார் செம்ம ட்ரைனிங் கொடுத்திருக்கார் போல! உன்னை இப்படி தைரியமா தெளிவா பார்க்க சந்தோஷமா இருக்குது”
அன்பரசி சிறு வெக்கத்துடன், “அவர் மட்டுமில்லை.. அத்தையும் நிறைய தைரியம் சொன்னாங்க”
“இருந்தாலும் சார் கொடுத்த தைரியம் ஸ்பெஷல் தானே!”
அப்பொழுது சர்வேஷ் நெஞ்சில் சாய்ந்து ஆறுதல் பெற்றது நினைவிற்கு வரவும் அவள் முகத்தில் வெக்கப் பூக்கள் பூத்தது.
ப்ரனிஷா, “இப்பவே கல்யாண களை வந்திருச்சு” 
“ச்ச்.. சும்மா இரு”
இருவரும் சிரித்தனர்.
இவர்கள் சிரிப்பை கண்டு சுகுவாணிற்கு எரிந்தது.
சுகுணா, “நான் சொல்றதை எழுதி வச்சுக்கோ! இவள் பெருசா ஒன்னும் வாழ்ந்திர மாட்டாள்.. தன்னிடம் வேலை செய்யும் பெண்ணிடம் மயக்கம் கொள்ளும் ஆண் எப்படி இருப்பார்! இது இத்தோடு நிற்கும் நினைக்கிற! இன்று இவள் அடுத்து யாரோ?” என்று சொல்லி முடிக்கும் முன் அவர் முன் பத்திரகாளியாக நின்றிருந்தாள் அன்பரசி.
தன்னை சொன்ன போது பொறுத்துக் கொண்ட அன்பரசியால் சர்வேஷை தவறாக கூறியதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அன்பரசி சீற்றத்துடன், “என்ன சொன்ன?”
சுகுணா அலட்சியத்துடன், “உண்மையை தானே சொன்னேன்”
“அவரை பற்றி என்ன சொன்ன?”
“இன்னைக்கு நீ நாளைக்கு………………” என்று முடிக்கும் முன் அன்பரசியிடமிருந்து அடி வாங்கியிருந்தார்.
அன்பரசி கோபத்துடன், “அவரை பற்றி தப்பா பேசின தொலைச்சிடுவேன்” என்று மிரட்டிவிட்டு செல்ல,
ப்ரனிஷா போகிற போக்கில் நக்கல் குரலில், “ஷர்மிளா மேம் உங்க அக்காவை பார்த்து நடந்துக்க சொல்லுங்க.. இனி அன்பரசி தான் அவங்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி.. அவள் நினைத்தால் உங்க அக்காவை ஒன்னும் இல்லாமல் செய்திடலாம்” என்று விட்டு செல்ல, சுகுணாவிற்கு திகு திகு வென்று எரிந்தது.
சுகுணாவிற்கு ஏதாவது செய்தே ஆகணும் என்ற வெறி கிளம்பியது. சர்வேஷை நினைத்து அன்பரசியிடம் அடக்கி வாசிக்க தான் நினைத்தார். ஆனால் ப்ரனிஷா மீது வெறுப்பும் கோபமும் அதிகரித்தது.
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement