Advertisement

அபி, “நீங்த(நீங்க) என் துடவே(கூடவே) இருத்தியா(இருக்கியா) ப்ளீஸ்? திச்சா(கிச்சா) தச்சு தாம்(ராம்) எல்லாம் அப்பா பாத்தி தாத்தா எல்லா இருத்தா(இருக்கா).. அபி பாப்பா யாரும் இல்ல”
ப்ரனிஷா வேதனையுடன் கண்களை மூடி திறக்க, குழந்தையின் ஏக்கத்தை கண்டு மற்றவர்கள் மனமும் வருந்தியது.
அமுதா கண்ணில் கண்ணீருடன் மண்டியிட்டு அமர்ந்து குழந்தையை வாரி அணைத்து, “தங்கமே!” என்றார்.
பிறகு குழந்தையை கைவளையினுள் வைத்தபடியே ப்ரனிஷாவை பார்த்து, “நீயும் அபியும் என்னுடன் வந்திடுங்க மலர்.. நான் உங்களை நல்லா பார்த்துக்கிறேன்” என்று கெஞ்சுவது போல் கேட்டார்.
ப்ரனிஷா அதிர்ச்சியுடன் புரியாமல் அவரை பார்க்க, அமுதா, “நான் ப்ரனேஷின் அம்மா” என்றதும் ‘தொப்’ என்று ப்ரனிஷா தரையில் அமர்ந்தாள்.
அபி அமுதாவின் முகத்தையும் ப்ரனிஷாவின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்தாள். பின் அமுதாவின் கண்ணீரை துடைத்தவள் ப்ரனிஷா அருகில் சென்று அமர்ந்து அவளது கன்னத்தில் கை வைத்தாள்.
ப்ரனிஷா குழந்தையை இறுக்கமாக அணைத்தாள். 
அபி அன்னையின் கழுத்தை கட்டிக் கொண்டு, “ப்ரனேஷ் தாத்தர் அபி அப்பா வா?” என்றதும் குழந்தையை அணைப்பில் இருந்து பிரித்த ப்ரனிஷா அதிர்ச்சியுடன், “அபி” என்று குரலை உயர்த்தினாள். 
ப்ரனிஷா, “அபிக்கு அம்மா அப்பா எல்லாமே அம்மா தான்.. புரிந்ததா?” என்று சிறு கோபத்துடன் கூறினாள்.
குழந்தை உதட்டை பிதுக்கியபடி அழுகையை கட்டுபடுத்தியது.
சாரதா, “உன் கோபத்தை குழந்தையிடம் காட்டாதே” என்றவர் “அன்பு குழந்தையை பக்கத்தில் இருக்கும் பார்க் கூட்டிட்டு போங்க” என்றார்.
அன்பரசி குழந்தையை தூக்க வர அவளோ மறுப்பாக தலையை அசைத்து அன்னையின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.
ப்ரனிஷா குழந்தையை அணைத்து முத்தம் கொடுத்து, “போயிட்டு வா டா தங்கம்” என்றதும் குழந்தை மனமே இல்லாமல் கிளம்பினாள்.
அன்பரசி மற்றும் அவந்திகா குழந்தையை அழைத்துச் சென்றனர்.
அமுதா, “ப்ரனேஷ் ஒரு டாக்டரா எவ்வளவு சாதித்து வெற்றிகள் பெற்றாலும் அவனது வாழ்க்கை நீ அவனுடன் இருந்தால் மட்டுமே முழுமை பெரும்.. நான் அவனுக்காக மட்டும் பேசலை உனக்காகவும் சொல்றேன்..” என்றவர் அவளது கன்னத்தை மென்மையாக பற்றி, “உனக்கு அத்தையா இல்லாமல் அம்மாவா இருந்து உன்னை நான் நல்லா பார்த்துப்பேன்.. அபி குட்டி எப்பொழுதுமே நம்ம வீட்டு இளவரசி” என்றார்.
அவள் உடைந்து அழுதாள். அவளை மடிதாங்கி தலையை வருடி சிறிது நேரம் அவளை அழ விட்டவர், “போதும் டா.. நீ அழுததெல்லாம் போதும்.. நம்ம வீட்டுக்கு வா.. இனி சந்தோசம் மட்டுமே உன் வாழ்வில் நிறைந்திருக்கும்” என்றார்.
கண்களை துடைத்து நிமிர்ந்து அமர்ந்தவள், “அந்த கொடுப்பினை எனக்கு இல்லை மா” என்றாள் கசந்த குரலில்.
“ஏன் டா?” என்று அமுதா வினவ,
“அதெல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.. நீ சம்மதித்தால் எல்லாம் சரியாகும்” என்று சாரதா சிறு கண்டிப்புடன் கூறினார்.
அவள், “அவர் கைக்கு மருந்து போட்டாரா மா?”
அமுதா பதில் சொல்லும் முன் சாரதா, “அதை நீயே அவனிடம் கேட்க வேண்டியதானே!”
“அவர் என் மேல் கோபத்தில் இருக்கிறார்.. நான் போன் பண்ணப்ப கட் பண்ணிட்டார்” 
அமுதா அவள் கையை பற்றி, “நான் போய் அவனை திட்டுறேன்.. அவனே பேசுவான்”  
சாரதா, “அக்கா கொஞ்சி தாலாட்டு பாடுறதை விட்டுட்டு ஒழுங்கா சம்மதிக்க சொல்லு”
அமுதா, “அது தான் கண்டிக்கிறதுக்கு நீ இருக்கிறியே!” என்றவர் ப்ரனிஷாவை பார்த்து புன்னகையுடன், “நம்மை பார்த்து அவளுக்கு பொறாமை டா” என்றார்.
சாரதா, “உன்னை விட என் அத்தை என் மேல் பாசத்தை பொழிந்தாங்க பொழியிறாங்க”
“நீ மட்டும் பாச மழையில் நனைவ! மலரை நான் அதட்டனுமாக்கும்!!”
“அதட்ட வேண்டிய நேரத்தில் அதட்ட தான் வேணும்”
“அதெல்லாம் அன்பா சொன்னாளே கேட்பா” என்றவர் ப்ரனிஷாவை பார்த்து, “என்னடா!” என்றார்.
அவள் இருவரையும் சிறு ஆச்சரியத்துடன் பார்க்கவும் அமுதா புன்னகையுடன், “சின்ன வயசில் இதை விட அதிகமா அடிச்சுப்போம் ஆனா அடுத்த நிமிஷமே சேர்ந்துப்போம்.. நாங்க எப்பவுமே இப்படி தான்.. நான் அமைதி என்றால் இவள் அதிரடி” என்றார்.
அவள் மெலிதாக புன்னகைத்தாள். பிறகு, “நான் அவரை பார்க்கணும் மா”
“அவனை வர சொல்லவா?”
“நானே வரேன்” என்றவள் அன்பரசியை கைபேசியில் அழைத்து விஷயத்தை கூறிவிட்டு, “கிளம்பலாம் மா” என்றாள்.
விட்டத்தை வெறித்தபடி மெத்தையில் படுத்திருந்த ப்ரனேஷ் கதவு தட்டும் சத்தத்தில், “கதவு திறந்து தான் மா இருக்குது.. உள்ளே வாங்க” என்றான்.
கதவு திறந்து முடிய சத்தத்திற்கு பிறகும் அன்னை பேசவில்லை என்றதும் தலையை திருப்பி பார்த்தவன் அங்கே நின்றுக் கொண்டிருந்த ப்ரனிஷாவை பார்த்து அதிர்ச்சியுடன் எழுந்து அமர்ந்தான்.
அவள் கலங்கிய விழிகளுடன் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனும் இமைக்காமல் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் முகத்தில் இருந்து கைக்கு பார்வையை மாற்றியவள் அதை ஆராய்ந்தாள். கட்டு போட்டிருந்ததால் அவளுக்கு எதுவும் தெரியவில்லை.
அவள் அவன் முகத்தை பார்த்து மெல்லிய குரலில், “கை எப்படி இருக்குது?”
“என் இதயத்தை விட பெட்டரா தான் இருக்குது”
அவள், “ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
மூச்சை ஒருமுறை இழுத்து விட்டவன், “சரி இப்போ கொஞ்சம் ஓபன்னா பேசலாமா?”
அவள் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, “தனிமையில் இருவரும் கஷ்டப் படுவதை விட தாம்பத்தியமற்ற திருமண வாழ்வை வாழலாமே!”
அவள் கண்கள் ஆச்சரியத்தில் பெரிதும் விரிந்தது. அவள் எதை பற்றி பேச வந்தாளோ அதைப் பற்றி அவன் கூறவும் அவள் பெரிதும் ஆச்சரியமடைந்தாள். என்ன அவள் இதை பற்றி பேசி பிரிந்துவிடலாம் என்று கூற நினைத்தாள் ஆனால் அவனோ சேர்ந்து வாழ்வதை பற்றி கூறுகிறான். 
“நான் யோசித்தவரையில் நீ என்னை மறுப்பதற்கு இருக்கும் ஒரே காரணம் உன் கடந்த காலமாக தான் எனக்கு தோன்றியது.. என்னை கல்யாணம் செய்தால் நீ சந்தோஷமாய் இருப்பாய் ஆனால் என் சந்தோசம் போய்டும் னு சொன்னதாக அன்பு சொன்னாள்.. எல்லாம் சேர்த்து யோசித்த போது அந்த சைக்கோவால் நீ மனதளவில் மட்டுமின்றி உடலளவிலும் அவதி பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.. அதனால் இதயம் முழுக்க என் மேல் காதல் இருந்தாலும் உன் உடலோ மனமோ என்னுடனான தாம்பத்தியத்தை ஏற்காது.. அதனால் என்னை நினைத்து எனக்காக தான் நீ என்னை மறுக்கிறாய்.. என்ன சரியா?”
அவள் கண்ணில் கண்ணீர் வழிய அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் அவள் கண்களை ஆழ்ந்து நோக்கி, “எனக்கு வேண்டியது உன் மனம்.. உடல் இல்லை.. ஒருவேளை என் அன்பினால் உன் மனம் கடந்த காலத்தை முற்றிலும் மறந்து என்னை உன் கணவனாக ஏற்றுக்கொள்ளலாம்.. இல்லை.. அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்றாலும் பரவாயில்லை.. நீ பெயரளவில் என் மனைவியா என் அருகில் இருந்தால் போதும்..” என்றவன் கலங்கிய கண்களுடன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து கைகளை தொடை மீது வைத்தபடி, “சத்தியமா என்னால் முடியலைடி.. இதற்கு மேல் என் இதயம் தாங்காது”  என்றான்.
அவள் வாய்விட்டு சத்தமாக கதறியபடி கீழே அமர்ந்தாள். 
அவள், “என்னாலும் முடியலையே! எனக்கு நீங்க வேணும் ஆனா வேண்டாம்.. என்னால் பழசை மறக்க முடியலையே! இப்போ கூட சில நேரம் தூக்கத்தில் திடீர்னு பயந்து எழுந்து உட்கார்ந்துக்கிறேன்.. அவன்.. அவன்..” என்று கேவலுடன் ஏதோ சொல்ல வந்து முடியாமல் நிறுத்தினாள்.
அதற்கு மேல் பொறுக்க முடியாமல் ப்ரனேஷ் எழுந்து சென்று தோளோடு அவளை அணைத்துக் கொண்டான்.
அன்று காலையில் செய்தது போல் அவன் சட்டையை இறுக்கமாக பற்றிக் கொண்டு அழுதாள்.
அவன் அவள் முதுகை வருடி கொடுத்தபடி, “சொல்லிடு டா.. வெளியே சொன்னால் மனதில் இருக்கும் பயம் கூட விலகிட வாய்ப்பு இருக்கிறது.. என்னை உன் அம்மாவா நினைத்து சொல்”
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “சிலது அம்மாவிடம் கூட சொல்ல முடியாது.. எனக்கு எதுவுமே சொல்லி பழக்கமுமில்லையே! சொல்ல எனக்கு தான் யாரும் இல்லையே!”
“நான் இருக்கிறேன் டா.. உனக்கு அம்மாவா அப்பாவா சகோதரனா நண்பனா தோழியா எல்லாமுமா நான் இருக்கிறேன் டா” என்றவன் அவளை இறுக்கமாக அணைத்தான்.
அந்த நேரத்தில் அவளுக்கும் அவன் அணைப்பு தேவை பட்டது. சில நொடிகள் மெளனமாக இருந்தவள் மெல்ல அவனை விட்டு விலகி அமர்ந்தாள். பின் தரையை பார்த்தபடி பேசத் தொடங்கினாள்.
“நீங்க சொன்னது போல் அவன் ஒரு சைக்கோ தான்.. எப்படி என்னை விட்டான்னு இப்பவரை எனக்கே தெரியலை.. அவன் என்னை நெருங்கினாலே பயப்படும் அளவிற்கு உடலளவில் அவனால் காயப்பட்டேன்.. அவன் நினைத்தால் நான்.. நான் அவனுடன்.. படுக்கணும்.. எனக்கு விருப்பம் இல்லை னு சொல்லவே முடியாது.. ஒரே ஒரு முறை தைரியத்தை வரவைத்துக் கொண்டு சொன்ன போது…” என்று நிறுத்தி அவன் முகத்தை பார்த்தாள்.
“அடித்தானா?”
“அடிக்கவும் செய்வான் ஆனா அன்னைக்கு வார்த்தைகளால் அடித்தான்..” என்றவள் மீண்டும் தரையை பார்த்தபடி,  “நான் உன் கணவன் தானே! தெருவில் போறவன் இல்லையே! நீ என் மனைவி தானே விலை மகள் இல்லையே! எனக்கு வேணும் னா நீ என்னுடன் படுத்து தான் ஆகணும் னு சொன்னான்..”
ப்ரனேஷின் உடல் விறைத்தது. அவளது வலியை கண்டு அவன் இதயத்தில் ரத்தம் கசிந்தது. அவன் இயலாமையுடனும் கோபத்துடனும் கையை ஓங்கி தரையில் குத்தினான். அடிப்பட்ட கையினால் குத்தியதில் காயத்தில் ரத்தம் கசிந்தது.
அதை கண்டு அவள் பதற, அவனோ இறுகிய குரலில், “சொல்லி முடி” என்றான்.
அவள், “உங்க கை….”
“நீ சொல்லி முடிச்சிரு ப்ளீஸ்”
“ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சவும் அறையில் இருந்த மருந்து பெட்டியை எடுத்து காயத்தை மீண்டும் சுத்தம் செய்து மருந்திட்டான்.
பிறகு, “இப்போ சொல்லு” என்றான்.
அவள், “சில நாட்கள் விடிய விடிய டார்ச்சர் பண்ணியிருக்கான்.. சில நேரம் அவனுக்கு திருப்தியா இல்லன்னு சொல்லி அடிப்பான்.. சில நாட்கள் நான் தூங்கியபோது வன்மையா நடந்திருக்கிறான்.. என்னை பொறுத்தவரை அவன் மனிதனே இல்லை ஒரு அரக்கன்” என்று உணர்ச்சியற்ற குரலில் சொல்லி முடித்தவள் மெல்ல ப்ரனேஷை நிமிர்ந்து பார்த்து, “இதை எல்லாம் நான் கீதாவிடம் கூட சொன்னது இல்லை.. அவன் அடித்து கொடுமை படுத்தினான் னு மட்டும் தான் சொன்னேன்.. உங்களிடம் சொன்னதிற்கு காரணம்.. என்னால் கடந்த காலத்தை கடந்து வர முடியலை.. நீங்க வேண்டும் னு மனம் சொன்னாலும் உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிடுவேனோ என்ற பயம் தான் அதை விட அதிகமா இருக்குது.. ப்ளீஸ் என்னை இப்படியே விட்டுருங்க.. இங்கே என்னை சந்தித்ததை மறந்திருங்க.. உங்களை பொறுத்தவரை நான் திருமணமானவளாகவே இருந்துட்டு போறேன்”
“இப்போ மட்டும் நான் சொர்கத்திலா வாழ்ந்திட்டு இருக்கிறேன்! உன்னுடன் நரகம் கூட எனக்கு சொர்க்கமா தான் தெரியும்..”
அவள் விரக்கிதியான புன்னகையுடன், “இதெல்லாம் பேசுறதுக்கு தான் சரி வரும்”
“சரி தனிமை நரகில் இருப்பதற்கு பதில் நீ தரும் நரகம் மேல்.. இது ஓகே யா?”
“ப்ளீஸ்.. என்னை இப்படியே விட்டுருங்க” என்றவள் வேகமாக எழுந்து வெளியேறினாள். 
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement