Advertisement

  இதழ் 25
தன் சிந்தனையில் இருந்து வெளி வந்த ப்ரனிஷா கண்டது தன் எதிரே கன்னத்தில் கை வைத்தபடி தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்த அன்பரசியை தான்.
ப்ரனிஷா சிறு புன்னகையுடன், “என்ன?”
கன்னத்தில் இருந்து கையை எடுத்தபடி, “அப்ப்ப்பா ட்ரீம்ஸ் விட்டு வெளியே வந்துட்டியா! அவந்தி போடுறதை ரெண்டு காபியா போடு! உன் அக்கா கனவு கண்டு டயர்டா இருக்கா”
“நான் ஒன்னும் கனவு காணலை”
“அப்போ அப்படி என்ன சிந்தனை? நான் வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு”
“அது..” என்று ப்ரனிஷா இழுக்கவும்,
“அப்போ மாம்ஸ் பத்தி தானே யோசிச்சிட்டு இருந்த!” என்று கூறி கண்ணடிக்கவும்,
ப்ரனிஷா சிறு பதறலுடன், “நீ நினைப்பது போல் இல்லை”
“நான் என்ன நினைத்தேன்?”
“நான் அவருக்கு போன் பண்ணேன் அவர் எடுக்கலை”
“நீ மாம்ஸ்க்கு போன் பண்ணியா?”
“அது.. அவர் கை பற்றி கேட்க பண்ணேன்” என்று சின்ன குரலில் கூறினாள்.
“மாம்ஸ் ஏதாவது பிஸியா இருந்து இருப்பார்.. திரும்ப பண்ணு”
அவள் மறுப்பாக தலையை ஆட்டவும் அன்பரசி மனதினுள், ‘சொதப்பிட்டீங்களே மாம்ஸ்’ என்று கூறிக்கொண்டு ப்ரனிஷாவிடம், “என்ன?”
“அவர் வேணும்னு தான் எடுக்கலை.. நான் மூணாவது முறை பண்ணப்ப கட் பண்ணிட்டார்..”
“ஓ!”
“அதான் அவர் கோபத்தை பற்றி யோசிச்சிட்டு இருந்தேன்.. ஸ்கூலில் அவர் கோபத்தை பார்த்து ஷாக்கா இருந்தது”
“நீ பேசியதிற்கு இன்னும் ரெண்டு அடியே போட்டிருக்கலாம்.. மாம்ஸ்ஸா இருக்க போய் விட்டுட்டார்” என்று அன்பரசியும்,
“அவர் கோபத்தை பார்த்து அம்மாவே கப்-சிப் னு வாயை மூடிட்டாங்க” என்று அவந்திகாவும் கூறினார்.
அன்பரசியை முறைத்த ப்ரனிஷா அவந்திகாவின் கூற்றை கேட்டு, “என்ன சொல்ற?”
அவந்திகா, “அது.. வந்து கா” என்று தயங்க,
ப்ரனிஷா, “சொல்லு”
“நீ மாமாவை தப்பா நினைக்க கூடாது”
“என்னை விட அவர் மேல் எனக்கு நம்பிக்கை அதிகம்.. சொல்லு”
அன்பரசி, “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று நொடித்துக்கொள்ள, 
ப்ரனிஷா அலட்டிக்கொள்ளாமல், “அவ கிடக்கிறா! நீ சொல்லு”
அன்பரசி ப்ரனிஷாவை முறைக்க, அவந்திகா சிறு ஆச்சரியத்துடன் ப்ரனிஷாவை பார்த்தாள். ப்ரனிஷா தங்கையை பார்த்து, “என்ன?”
“உன்னை இப்படி இயல்பா பார்த்தது இல்லை.. பார்க்க சந்தோஷமா இருக்குது” என்று நெகிழ்ச்சியுடன் கூற, ப்ரனிஷாவிடம் சிறு அமைதி குடியேறியது.
அன்பரசி, “போதும் இமோஷனை குறைச்சிட்டு மாம்ஸ்ஸோட ஆக்சனை பற்றி சொல்லு”
சகோதரிகள் மெலிதாக புன்னகைத்தனர்.
அன்பரசி, “அது நல்ல பிள்ளைகளுக்கு அழகு.. ஓகே நவ் ஸ்டார்ட் மியூசிக்” என்றாள்.
அவந்திகா, “மாமாவோட அம்மா அவருக்கே தெரியாமல் என்னை பொண்ணு பார்க்க நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க……” என்று ஆரம்பித்து அன்று நடந்ததை கூறினாள். அதன் பிறகு ப்ரனேஷ் ப்ரனிஷாவை சந்தித்து விட்டு சென்னை சென்ற அன்று அவள் அவனை சந்தித்து தன்னிலை விளக்கம் கொடுத்து கெஞ்சியதை பற்றியும், இங்கே வர அவனிடம் போராடியது பற்றியும் கூறினாள்.
அன்பரசி, “சிவனிடம் அடங்கும் பாம்பை போல் உன் அம்மா அடங்கிட்டாங்க னு சொல்லு”
ப்ரனிஷா, “அன்பு.. என்ன உவமை இது?” என்று கண்டன குரலில் கூற,
அன்பரசி, “சாரி அவந்தி” என்று கூறிவிட்டு, “பின்ன உன் சித்தியை எப்படி சொல்ல?”
ப்ரனிஷா முறைக்கவும் அன்பரசி, “சரி சரி” என்று இறங்கி வந்தாள்.
அவந்திகா, “மாமா இன்னைக்கு அபியை தன் உயிர் என்றும் உன்னை சுவாசம் என்றும் சொன்னார்.. அதாவது நீங்க ரெண்டு பேர் இல்லாமல் அவர் இல்லை னு சொல்லாமல் சொன்னார்.. அவரை மிஸ் பண்ணிடாத.. உன் சம்மதத்தில் உங்க ரெண்டு பேருக்குமே நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.. அபி குட்டிக்கும் நல்ல அப்பா கிடைப்பார்.. இன்னைக்கு அபியை அவர் முதல் முதலா தொட்டு பேசியது, அணைத்து முத்தமிட்டது எல்லாத்திலும் சொந்த மகளை முதல் முறை பார்க்கும் ஒரு தந்தையின் தவிப்பும் பரவசமும் நிறைந்து இருந்தது.. மாமா பாவம் கா.. சீக்கிரம் சம்மதம் சொல்லிடு”
ப்ரனிஷா கண்களை மூடிக்கொள்ள அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அப்பொழுது அங்கே வந்த அபிசாரா, “சித்தி மாமா யாரு? அபி துட்டி(குட்டி) அப்பா யாரு? எங்த(எங்க)?” என்று கேள்விகளை அடுக்கவும் அதிர்ச்சியில் கண்ணை திறந்த ப்ரனிஷா கண்களை துடைத்துக் கொண்டு கலவரத்துடன் மகளை பார்த்தாள்.
(வீட்டிற்கு வந்ததும் அபிசாராவிடம் அவந்திகாவை சித்தி என்று ப்ரனிஷா அறிமுகம் செய்தாள்.. சிறிது நேரம் அவந்திகாவுடன் விளையாடிய குழந்தை அதன் பிறகு தொலைக்காட்சி பார்க்க சென்ற பொழுது தான் அன்பரசி வீட்டிற்கு வந்தாள்.. குழந்தை தொலைக்காட்சி பார்க்கும் தைரியத்தில் தான் மூவரும் பேசினர் ஆனால் தொலைக்காட்சி பார்த்தபடி அவர்கள் பேசியதை அரைகுறையாக குழந்தை கேட்டதை அவர்கள் அறியவில்லை) 
அவந்திகா பதில் சொல்வதறியாது திணறியபடி ப்ரனிஷாவை பார்த்து கண்ணில் மன்னிப்பு கேட்டாள்.
அபிசாரா அடுத்து அன்பரசியை பார்த்து, “நீ சொல்லு.. மாம்ஸ் யாரு?” என்று கேட்டாள்.
மூவரும் அதிர்ச்சியுடன் அவளை பார்த்துக் கொண்டிருக்க, குழந்தை, “ஹ்ம்ம்.. சொல்லு சித்தி” என்று அன்பரசியையும் அவந்திகாவையும் பார்த்து மீண்டும் கேட்டாள்.
அன்பரசி ஒரு முடிவிற்கு வந்தவளாக குழந்தை அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்து, “இன்னைக்கு உன்னை செக் பண்ணாங்களே ஒரு டாக்டர்…………….”
“ஹ்ம்ம்.. ப்ரனேஷ் தாத்தர்.. துத்(குட்) தாத்தர்”
“ஹ்ம்ம்.. அவங்களை தான் மாம்ஸ் னு சொன்னேன்”
“ஓ” என்றவள், அவந்திகாவை பார்த்தாள்.
அவந்திகா, “நானும் அவங்களை தான் மாமா னு சொன்னேன்”
மீண்டும், “ஓ” என்ற குழந்தை, “நீ மாம்ஸ் சொல்ற.. நான் எப்தி(எப்படி) சொல்ல? அபி அப்பா யாரு?”
ப்ரனிஷாவின் இதயம் வெளியே வந்துவிடுவது போல் வேகமாக துடித்தது.
அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் குழந்தை, “நானு.. நானு” என்று துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடவும் தான் ப்ரனிஷா இழுத்து பிடித்திருந்த மூச்சை வெளியிட்டாள். அவந்திகா குழந்தை பின்னால் செல்ல,
அன்பரசி, “இப்போ தப்பிச்சிட்ட.. அபி எப்படியும் திரும்ப கேட்பா.. பதிலை யோசித்து வை.. நல்ல பதிலா சொல்” என்று கூறிவிட்டு சென்றாள்.
வந்திருப்பது யார்? தன் வீட்டிற்கு வந்திருப்பவர்களை தான் தான் வரவேற்க வேண்டும் என்பதையெல்லாம் மறந்தவளாக தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.
அவந்திகா கதவை திறந்ததும், அபிசாரா, “ஹை.. சாரு பாத்தி” என்று குதித்தாள்.
சாரதா புன்னகையுடன் உள்ளே வந்து குழந்தையை தூக்கிக்கொள்ள அவந்திகா புன்னகையுடன், “வாங்க” என்று சாரதாவையும் அமுதாவையும் வரவேற்றாள். 
சாரதா, “அபி குட்டி என்ன பண்ணிட்டு இருந்தா?”
“சித்தி தூட(கூட) விளையாதினா(விளையாடினா)
“ஓ! இவங்க யாரு?” என்று அவந்திகாவை பார்த்து கேட்டார்.
“தெரியாதா? அவன்தி சித்தி” என்ற குழந்தை அமுதாவைக் காட்டி, “இது யாரு?”
“என்னோட அக்கா.. உனக்கு அமுதா பாட்டி..” என்றதும் அமுதா ஆர்வத்துடன், “அபி குட்டி பாட்டி கிட்ட வரீங்களா?”
குழந்தை சாரதாவின் முகத்தை பார்த்தாள். சாரதா ‘போ’ என்பது போல் தலையை அசைக்கவும் புன்னகையுடன் அமுதாவிடம் சென்றாள்.
குழந்தையை தூக்கியதும் கன்னத்தில் முத்தமிட்ட அமுதா புன்னகையுடன், “அபி குட்டியை பார்க்க தான் அமுதா பாட்டி வந்தேன்”
“என்ன தெரியுமா?”
“ஹ்ம்ம்.. உங்களை பற்றி சாரு பாட்டி நிறைய சொல்லியிருக்காங்க.. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்” என்றவர் “நான் உனக்கு முத்தம் கொடுத்தேனே.. நீ எனக்கு குடுக்கவே இல்லை” என்று கூறி முகத்தை அழுவது போல் வைத்தார்.
“இதுத்து(இதுக்கு) போய் அழுவ?” என்று கேட்டு அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்து, “இப்போ ஓதே(ஓகே)?” என்று கேட்டாள்.
அமுதா விரிந்த புன்னகையுடன், “ஓகே” என்றார்.
சாரதா அன்பரசியை பார்த்து புன்னகையுடன், “என்ன மருமகளே! எப்படி இருக்க?”
அன்பரசி வெக்கம் கலந்த புன்னகையுடன், “நல்லா இருக்கிறேன்” என்றாள்.
அவர் அவளது வெக்கத்தை ரசித்தபடி, “ப்ரனிஷா எங்கே? ஆளை காணும்?”
“அபி கொடுத்த ஷாக்கில் இருந்து மீளலை போல.. வாங்க உள்ளே போகலாம்” என்று அன்பரசி உள்ளே அழைத்தாள்.
(அந்த வீட்டில் கதவை திறந்ததும் சிறிய வரவேற்பு அறையை தான்டி தான் கூடம்(ஹால்) இருக்க, கூடத்தின்(ஹாலின்) இடதுபுறம் சமையலறை இருக்க வலது புறம் ஒற்றை படுக்கை அறை இருந்தது)
அமுதாவும் அபியும் தனி உலகில் இருக்கவும் சாரதா புன்னகையுடன், “நாம போகலாம் வாங்க” என்றார்.
அபி அமுதாவுடன் சட்டென்று ஒட்டிக் கொண்டதை சிறு ஆச்சரியத்துடன் பார்த்தபடி அவந்திகா உள்ளே சென்றாள். ஏனெனில் அபி அவளுடன் இப்படி சட்டென்று ஒட்டிக்கொள்ள வில்லை.. ப்ரனிஷா இரண்டு முறை சொன்ன பிறகே பேசினாள், விளையாடினாள்.
உள்ளே சென்று ப்ரனிஷாவை பார்த்த சாரதா, “அபி அப்படி என்ன ஷாக் கொடுத்தாள்?”
அன்பரசி நடந்ததை சுருக்கமாக கூறவும் அவர், “மலர்” என்று அழைத்தார்.
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த ப்ரனிஷா சாரதாவை பார்த்து அவசரமாக எழுந்து, “வாங்க மேடம்” என்றாள்.
“அபி அப்பா யாரு னு முடிவு பண்ணிட்டியா?”
அவள் அமைதியாக இருக்கவும் அவர், “ப்ரனேஷை எனக்கு நல்லா தெரியும்.. அவனை தவிர யாரும் உன்னையும் அபியையும் நல்லா பார்த்துக்க முடியாது” என்றார்.
அப்பொழுது அமுதாவும் அபியும் உள்ளே வந்தனர். ப்ரனிஷா அமுதாவை யார் என்பது போல் பார்க்க,
அபிசாரா, “அம்மா.. அமுதா பாத்தி(பட்டி) சூப்பர்.. நிறைய ததை(கதை) சொன்னா.. பாப்பாத்து(பாப்பாக்கு) பார்பி, கிளே தந்தா..” என்று ஆரவாரத்துடன் கூறினாள்.
சாரதா, “என்னுடைய அக்கா.. ஊரில் இருந்து வந்திருக்காங்க.. அபியை பற்றி சொன்னேன்.. பார்க்கணும் னு ஆசைபட்டாங்க.. அதான் கூடிட்டு வந்தேன்”
ப்ரனிஷா மெல்லிய புன்னகையுடன், “வாங்க” என்றாள்.
அபி அமுதா கையில் இருந்து இறங்கி அன்னையிடம் சென்று கையை பிடித்து இழுத்து, “துனி(குனி)என்றாள்.
ப்ரனிஷா குனிந்ததும் குழந்தை அவள் காதில் ரகசிய குரலில், “அமுதா பாத்தி நாமே வச்சிபோமா.. ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
அதிர்வுடன் பார்த்த ப்ரனிஷா, “அப்படியெல்லாம் சொல்லக் கூடாது” என்று கண்டிப்புடன் கூறினாள்.
அபி, “வொய்? ப்ளீஸ் மம்மி.. ப்ளீஸ்” குரலை சற்று உயர்த்தி கெஞ்சினாள்.
அமுதா, “என்னாச்சு?”
ப்ரனிஷா சங்கோஜத்துடன், “இல்ல.. ஒண்ணுமில்லை” என்று கூற,

Advertisement