Advertisement

இதழ் 23
பள்ளியின் முதல் தளத்தில் உள்ள சிறிய அரங்கத்தில் ப்ரனேஷ் தலைமையில் மருத்துவ முகாம் நடந்துக் கொண்டிருந்தது. ப்ரனேஷை தவிர அவனது மருத்துவமனையை சேர்ந்த இரண்டு மூத்த மருத்துவர்களும் இரண்டு இளைய மருத்துவர்களும் ஐந்து செவிலியர்களும் இருந்தனர். இவர்களுடன் அன்பரசியும் இருந்தாள்.
மதியம் மூன்று மணி அளவில் அன்பரசி ப்ரனேஷிடம் வந்து, “சார்” என்று அழைக்கவும் அவன் அவளை பார்த்த பார்வையில் அவள், “இல்லை.. மற்றவர்கள் முன்……” என்று சிறிது தயங்கினாள்.
அவன், “நான் இந்த ஸ்கூலில் வேலை பார்க்கவில்லை”
“இல்லை.. மற்ற டாக்டர்ஸ்”
“நீ என் ஹாஸ்பிடலில் வேலை பார்க்கவில்லை.. ஸோ எப்பொழுதும் நான் உனக்கு உன் அக்கா கணவர் தான்”
“ஓகே மாம்ஸ்” என்று கூறி அவள் புன்னகைக்கவும்,
அவனும் புன்னகையுடன், “சரி என்ன விஷயமா கூப்பிட்ட?”
“மூணு மணி ஆகப் போகுது.. க்ரஷ் குழந்தைகளை கூட்டிட்டு வரட்டுமா?”
“சரி.. அவங்களை பார்த்து முடித்ததும் பிப்டீன் மினிட்ஸ் பிரேக் எடுத்துக்கலாம்”
“சரி” என்று கூறி திரும்பியவள், சற்று தள்ளி இருந்து தன்னையும் ப்ரனேஷையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அவந்திகா முன் சென்று கையை அசைத்து, “என்ன?” என்றாள்.
அவள், “டாக்டருடன் எப்படி இப்படி இயல்பா பேசுற!”
(ஆம்.. வந்திருந்த இளைய மருத்துவர்களுள் ஒருத்தி இனியமலரின் தங்கை அவந்திகா தான். அவள் கஷ்டப்பட்டு ப்ரனேஷிடம் தன்னிலை விளக்கம் கொடுத்து கெஞ்சி இனியமலரை பார்ப்பதற்காகவே மருத்துவ குழுவுடன் வந்திருக்கிறாள். அதுவும் நாகேஸ்வரிக்கு தெரியாமல் வந்திருக்கிறாள்.
ப்ரனேஷ் அவந்திகா மற்றும் அன்பரசியிடம் ஒருவருக்கொருவரை அறிமுகம் செய்ததின் பலனாக கடந்த மூன்று மணி நேரத்தில் இருவருக்கும் நடுவில் நட்பு மொட்டுவிட்டிருந்தது. அதற்கு இருவருக்கும் பொதுவான இனியமலர் என்ற ப்ரனிஷா தான் காரணம் என்பது மிகையல்ல)   
அன்பரசி, “ஏன்?”
“என் மனதினிலும் அவர் என் அக்கா கணவர் தான்.. ஆனாலும் என்னால் ஹாஸ்பிடல் இல்லாம வெளியிடங்களில் கூட அவரிடம் உரிமையா பேச முடியலை.. ஒரு பயம் இருந்துட்டே இருக்குது”
“மாம்ஸ் கிட்ட பயமா?” என்று அன்பரசி ஆச்சரியத்துடன் வினவ, 
அவந்திகா சிறிதும் குறையாத ஆச்சரியத்துடன், “என்ன இப்படி கேட்டுட்ட!!!”
“ஏன்?”
“அவர் எங்க வீட்டுக்கு வந்து என் அம்மாவை மிரட்டியதை பார்த்திருந்தால் இப்படி பேச மாட்ட! அப்படியே நெற்றிக்கண் திறந்த ருத்ரமூர்த்தியை நேரில் பார்த்தது போல் இருந்தது” என்றபோது அன்றைய நினைவில் அவள் உடல் சிலிர்த்தது.
அன்பரசி, “மாம்ஸ் ஆ!”
“எனக்கும் முதலில் அதிர்ச்சியா தான் இருந்தது.. அதற்கு பிறகு தான் அவரை பார்த்தால் பயம் தானா வருது”
“மாம்ஸ் ஹாஸ்பிடலில் எப்படி?”
“எப்பொழுதும் சிரித்த முகமா தான் இருப்பார்.. வார்ட் பாயிடம் கூட இன்முகத்துடன் தட்டி கொடுத்து வேலை வாங்குவார்.. மருத்துவத்தில் அவரது டெடிகேஷன் பஷனை(passion) பார்த்து ப்ரம்மிச்சு போயிருக்கிறேன்.. நான் னு இல்லை.. எங்க ஹாஸ்பிடலில் இருக்கும் எல்லோருக்குமே அவர் காட் பாதர் போல் தான்.. கொஞ்ச நேரம் அவருடன் பேசினாலே நாங்க செய்றது வேலையா தெரியாது.. அவர் சொல்லாமலேயே நாங்களே எங்களை அர்பணிச்சிருவோம்.. அவர் சான்சே இல்லை……….”
அப்பொழுது ப்ரனேஷ், “அவந்திகா” என்று அழைக்கவும் அவளிடம் சட்டென்று இயல்புத்தன்மை நீங்கி சிறு பயம் வந்தது.
அவள், “டாக்டர்” என்றபடி அவன் அருகில் வந்து நின்றாள்.
அவன் அன்பரசியை பார்த்து, “நீ க்ரஷ் குழந்தைகளை கூப்பிட போகலை?”
அவள், “இதோ” என்று சென்றதும்,
அவன் அவந்திகாவை பார்த்து, “உன் அக்காவை போய் பார்க்கலையா? அதுக்கு தானே வந்த?”
“அது”
“என்ன?”
“…”
“அவ உன் அம்மா வந்தாலே முகத்தை திருப்பாமல் பேசுவா.. உன்னிடமா முகத்தை திருப்ப போறா!”
“அக்கா நல்லா தான் பேசுவா! எனக்கு தான் குற்ற உணர்ச்சியா இருக்குது”
“உன் மேல் தப்பில்லையே!”
அவந்திகா ஆச்சரியத்துடன் பார்க்கவும் அவன், “என்னடா அன்னைக்கு நாம அவ்ளோ பேசிய போது பதில் ஏதும் சொல்லாதவன் இப்போ இப்படி சொல்றானே! னு ஆச்சரியமா இருக்குதா?”
அவள் ஆம் என்றும் இல்லை என்றும் தலையை ஆட்ட அவன் மெல்லிய புன்னகையுடன், “நீ சொன்னது உண்மைன்னு எப்படி நம்புவது?”
“நான் பொய் சொல்லலை டாக்டர்”
“தெரியும்.. கீதாவிடம் விசாரித்தேன்” என்றவன் புன்னகையுடன், “ஹாஸ்பிடல் வெளியே என்னை மாமா னு கூப்பிடு”
அவள் சிறிது கலங்கிய கண்களுடன் ‘சரி’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
அவன், “சரி இப்போ வரப் போற பட்ச் முடிந்ததும் உன் அக்காவை போய் பார்க்கலாம்.. நானும் வரேன்”
அவந்திகா, “சரி” என்று கூற,
அப்பொழுது உள்ளே வந்த அன்பரசி சிரிப்புடன், “மாம்ஸ் இது தான் பக்கத்து இலைக்கு பாயாசம் என்பதா!”
அவனும் சிரிப்புடன், “நாங்கலாம் பாயாசம் வேணும்னா வாளியோட குடிக்கிற ஆள்.. பக்கத்து இலையை சொல்லிட்டு இருக்க மாட்டோம்”
“அப்படிங்கிறீங்க!”
“ஆமா” என்றவன், “என்ன அதுகுள்ளா வந்துட்ட? குட்டீஸ் எங்கே?”
“இங்கே இருந்தே முத்து(பியூன்) அண்ணாவை கூப்பிட்டு சொல்லிட்டேன்”
“ஓ” 
அடுத்த ஐந்து நிமிடத்தில் குட்டி குட்டி குழந்தைகள் ஒருவர் தோளின் மீது ஒருவர் கை வைத்து ரயிலை போல் மெதுவாக உள்ளே நுழைந்தனர். மொத்தம் எட்டு குழந்தைகள் இருந்தனர். அவர்களின் வயது இரண்டில் இருந்து மூன்றுக்குள் இருந்தது.
அப்பொழுது அந்த அரங்கத்தின் அருகே இருந்த வகுப்பில் ஆசிரியர் இல்லாமல் சத்தம் சற்று அதிகமாக வரவும் அன்பரசி அங்கே விரைந்தாள்.
ப்ரனேஷிடம் முதலில் வந்தது அபிசாரா தான். அவன் இதயம் சிறிது படபடக்க ஒருவித பரவசத்துடன் அவளது இரு தோள்களையும் மென்மையாக பற்றினான்.
அபிசாரா, “நீ ஊசி போதுவியா(போடுவியா?)?”
அவன், “இல்லை” என்று தலையை ஆட்டினான்.
“எதுத்து(எதுக்கு) செத்(செக்) பண்ற?”
“நீங்க ஹெல்தியா இருக்கீங்களா னு செக் பண்றேன்”
“ஓ! நான் ஹெல்தி.. அப்போ ஏன் செத்?”
“உங்களுக்கே நீங்க ஹெல்தி னு தெரியுமா?”
குழந்தை மகிழ்ச்சியுடன் வேகமாக ‘ஆம்’ என்று தலையை ஆட்டியது.
அவன் புன்னகையுடன், “ஆனா எனக்கு தெரியாதே! அதான் செக் பண்றேன்”
“ஓ”
“சரி இப்போ செக் பண்ணலாமா?”
“நீ குத்(குட்) தாத்தார்(டாக்டர்)” 
“தன்க் யூ”
“வெல்தம்(வெல்கம்)என்ற குழந்தை, “நான் உன்ன எப்தி தூப்பித?”
“என்ன கேட்கிறீங்க? எனக்கு புரியலையே!”
“ஐயோ!! நான் உன்ன எப்தி தூப்பித னு தேத்தேன்.. புரிதா?”
அவன் சிறு யோசனையின் பின் விரிந்த புன்னகையுடன், “ஓ! என்னை எப்படி கூப்பிட னு கேட்டியா?”
குழந்தையும் விரிந்த புன்னகையுடன் தலையை ஆட்டி, “ஹ்ம்ம்” என்றாள்.
அபிசாராவின் பேச்சையும் அபிநயத்தையும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்த அவந்திகா சிறு புன்னகையுடன், “டாக்டர் அங்கிள் னு கூப்பிடு” என்று கூற அவளை திரும்பி பார்த்த ப்ரனேஷின் கண்ணில் அனல் பறந்தது. 
அப்பொழுது உள்ளே வந்த அன்பரசி பெரும் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தாள்.
அவன் கோபத்தைக் கண்டு பயந்த அவந்திகா, ‘இப்போ எதுக்கு முறைக்கிறார்?’ என்று குழம்பினாள்.
முகத்தை சீராக மாற்றிவிட்டு குழந்தை பக்கம் திரும்பியவன் புன்னகையுடன், “டாக்டர் னு மட்டும் கூப்பிடு” என்று கூறிவிட்டு அவளை பரிசோதிக்க தொடங்கினான்.
அன்பரசி அவந்திகா காதில் மெல்லிய குரலில், “நீ அப்போ சொன்னதை நான் இப்போ நம்புறேன்”
“என்ன?”
“மாம்ஸ் கோபத்தை பற்றி சொன்னியே!”
“இப்பவாச்சும் நம்புறியே!”
“அதான் நேரிலேயே பார்த்துட்டேனே!”
“இப்போ என்ன தப்பு பண்ணேன் னு தெரியலையே!”
“அவர் கோபத்தை பார்த்தால் உன்னை அடிக்காம விட்டதே பெருசு”
“ஏன்?” என்று பெரும் அதிர்ச்சியுடன் அவந்திகா வினவ அன்பரசி, “பின்ன அப்பா னு கூப்பிட வேண்டிய குழந்தையிடம் அங்கிள் னு சொல்ல சொன்னா!”
சட்டென்று குழந்தையை திரும்பி பார்த்தவள் அன்பரசியை பார்த்து, “மலர் அக்கா பொண்ணா?”
அன்பரசி புன்னகையுடன் ‘ஆம்’ என்று தலையை ஆட்டினாள்.
இப்பொழுது அவந்திகாவிடம் ஒருவித பரவசம் வந்து ஒட்டிக்கொண்டது. 
அப்பொழுது தான் அன்பரசியை பார்த்த அபிசாரா குதுகலத்துடன், “சித்தி” என்றாள்.
அன்பரசி இடுப்பில் கை வைத்தபடி கண்ணை உருட்டி, “ஸ்கூலில் எப்படி கூப்பிட சொன்னேன்”
“ஹீ.. ஹீ.. மேம்” 
“ஹ்ம்ம்.. ஒழுங்கா நில்லு.. டாக்டர் செக் பண்ணி முடிக்கட்டும்”
“ஹ்ம்ம்”
பரிசோதனையை முடித்த ப்ரனேஷ் புன்னகையுடன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி, “நீங்க சொன்னது போல் நீங்க ஹெல்தி தான்” என்றான்.
குழந்தை புன்னகையுடன், “நான் சொன்னே(னே)என்று கூறிவிட்டு அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க அவன் கண்களோ இன்பத்தில் சிறிது கலங்கியது.
இரண்டு நொடிகள் சிலையாய் இருந்தவன் குழந்தையை அணைத்து தூக்கி கலங்கிய விழிகளுடன் குழந்தையின் இரு கன்னத்திலும் முத்தம் கொடுத்தான்.
அவன் கையில் இருந்தபடியே குழந்தை, “நீ ஏன் அழுற? அதி (அடி) பத்துச்சா(பட்டுச்சா)?”
அவன் வார்த்தைகளின்றி உதட்டில் மெல்லிய சிரிப்புடனும் கண்களில் வழிந்த கண்ணீருடனும் ‘ஆம்’ என்று தலையை ஆட்டினான்.
“எங்த(எங்க)?”
அவன் இதயத்தை காட்டவும் குழந்தை அவன் நெஞ்சை தடவி கொடுத்து நெஞ்சில் முத்தம் கொடுத்து புன்னகையுடன் அவனை பார்த்து, “இப்போ சரியா போச்சா?”
“ஹ்ம்ம்”
“துத்(குட்)என்றபடி குழந்தை அவன் கண்ணீரை துடைத்தது.
அவன் மீண்டும் குழந்தையை அணைத்து அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.
குழந்தை, “உன் பெயர் என்ன?”
அன்பரசி, “உங்க சொல்லணும்” என்று கூற ப்ரனேஷ் புன்னகையுடன், “இருக்கட்டும் விடு” என்றுவிட்டு குழந்தையிடம், “ப்ரனேஷ்”
“சித்தி அம்மா பேர் மாதி(மாதரி) இருத்து(இருக்கு)என்றதும் பெரியவர்கள் மூவருமே சிறிது அதிர்ந்தனர். 
அன்பரசி, “ஆமா” என்று கூறினாள்.
குழந்தை என்ன நினைத்ததோ, “ஐ லவ் யூ ப்ரனேஷ் தாத்தார்” என்று கூறி ப்ரனேஷை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டது.
ப்ரனேஷின் உடலும் உள்ளமும் சிலிர்த்தது. அவன் மீண்டும் வார்த்தைகளின்றி குழந்தையை இமைக்காமல் பார்த்தான்.
அப்பொழுது அபிசாராவின் காப்பாளர் அவளை அழைக்கவும் அவள், “பை” என்று கூறி சென்றாள்.
மற்ற குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு காப்பாளர் கிளம்பினார். ப்ரனேஷ் மற்றும் அவந்திகாவை தவிர மற்ற குழுவினர் இடைவெளிக்கு வெளியே சென்றனர்.
அன்பரசி கரகரத்த குரலில், “ப்ரனிஷாவை இப்படி தான் ஐ லவ் யூ மம்மி னு சொல்லி கட்டி பிடித்து முத்தம் கொடுப்பா” என்றாள்.
ப்ரனேஷ் ஜென்ம பலனை அடைந்தது போல் உணர்ந்தான். அவன் உள்ளம் ‘லவ் யூ ஸோ மச் அம்மு’ என்றது.
அவந்திகா, “டாக்டர்” என்று அழைத்தாள்.
அவன் திரும்பி பார்த்ததும், “சாரி.. நான் அபி குட்டியை இப்போ தான் முதல் முறையா பார்க்கிறேன்” என்று சின்ன குரலில் கூறியவள், “உங்க வாட்ஸ்-அப் ஓபன் பண்ணுங்க.. ஒரு சின்ன சர்ப்ரைஸ்” என்றாள்.
தனது கைபேசியை எடுத்து புலனத்தை திறந்தவன் அவந்திகா அனுப்பியதை கண்டு கண்ணில் தனி ஒளியுடன் இதழில் மென்னகையுடன் மெய் சிலிர்க்க நின்றிருந்தான்.
அன்பரசி, “மாம்ஸ் இவ்வளவு உணர்ச்சிவசப் படுற அளவுக்கு அப்படி என்ன அனுப்பின?”
அவந்திகா தன் கைபேசியை காட்டினாள். அதில் அபிசாரா சிரிப்புடன் ப்ரனேஷை அணைத்து கன்னத்தில் முத்தமிட ப்ரனேஷ் கண்களை மூடி அதை ரசித்துக் கொண்டிருப்பது போல் புகைப்படம் இருந்தது.
அன்பரசி, “வாவ்! செம்ம! கலக்கிட்ட” என்றாள்.
அன்பரசியின் குரலில் தன்னிலை அடைந்த ப்ரனேஷ் நெகிழ்ந்த புன்னகையுடன் அவந்திகாவை பார்த்து, “தேங்க்ஸ்” என்றான்.
அன்பரசி, “என்ன மாம்ஸ் மகளை பார்த்ததும் மனைவியை மறந்துட்டீங்க”
அவன் புன்னகையுடன், “மறக்கிறதா! அம்மு என் உயிர் என்றால் இனியா என் சுவாசம்”
அன்பரசி கைகளை தேய்த்தபடி, “செம்ம மாம்ஸ்.. புல்லரிக்குது”
“கொழுப்பு! போ.. போய் இனியாவை பயாலஜி லேப் கூடிட்டு வா.. நாங்க அங்க வெயிட் பண்றோம்”
“சரி” என்று புன்னகையுடன் கூறி சென்றாள்.
ப்ரனேஷும் அவந்திகாவும் ஆய்வு கூடத்தை நெருங்கிய போது ப்ரனிஷா அங்கே தனியாக இருப்பதை பார்த்த ப்ரனேஷ், “அவந்திகா நீ கொஞ்சம் வெயிட் பண்ணு.. இரண்டு நிமிஷம் இனியா கூட பேசிட்டு கூப்பிடுறேன்”
“சரி டாக்டர்” என்றவள் தூணின் மறைவில் நின்றுக் கொண்டாள்.      
அவன் உள்ளே சென்று, “ஹாய் ஸ்வீட்டி குட் அஃப்டர் நூன்” என்றதும் உருபெருக்கியின்(Microscope) மூலம் ஏதோ ஆய்வு செய்துக் கொண்டிருந்தவள் அவனை பார்த்து முறைத்தாள்.
“காலையில் பார்த்த பிறகு இப்போ தான் வரேன்னு கோபமா?”
அவள் அவனை கண்டுக் கொள்ளாமல் ஆய்வை தொடர்ந்தாள்.
அவன், “நீ என் ப்ரொபோசலை ஏற்கும் வரை உனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்துவிட்டேன்.. ஆனால் எல்லாமே இன்ப அதிர்ச்சிகள்”
அவள் மனம் சிறிது படபடத்தது. அதை மறைத்து அவனை அமைதியாக பார்த்தாள்.
அவன் புன்னகையுடன், “என்ன பேபி.. ரெடியா?”
“..”
“வொய் திஸ் மௌன விரதம்?”
‘உங்களை விலக்க எனக்கு வேறு வழி தெரியலையே!’ என்று மனதினுள் கூறிக்கொள்ள,
அவன் அவள் கண்களை பார்த்து, “நீ பேசாமல் இருந்தால் நான் விலகிடுவேன் னு நினைக்கிறியா?” என்று வினவியதும் அவள் கண்கள் எப்பொழுதும் போல் இப்பொழுதும் ஆச்சரியத்தில் விரிந்தது.
அவன், “இனி உன்னை விட்டு நான் விலகனும் என்றால் அது என் உயிர் பிரியும் போது தான்.. அப்பொழுது கூட உன்னை என்னுடன் கூட்டிச் செல்ல முடிந்தால் கூட்டி சென்றுவிடுவேன்”
“ப்ளீஸ்” என்று அவள் கலங்கிய விழிகளுடன் கெஞ்சினாள்.
அவன் அவள் கண்களை ஆழ்ந்து நோக்கவும் அவள், “ப்ளீஸ் என் மேல் இவ்வளவு அன்பு வைக்காதீங்க”
“உன் மேல் வைக்காமல் வேறு யாரு மேல் வைப்பேன்?”
“நான் உங்களுக்கு தகுதியானவள் இல்லை”
“உன் மனதை நான் மட்டுமே தீண்டினேன் தீண்டுகிறேன் என்றதில் நீ மட்டுமே எனக்கு தகுதியானவள்” என்றவன், “சரி இப்போ சர்ப்ரைஸ் நம்பர் டூ.. என்னடா டூ சொல்றேன் னு யோசிக்கிறியா! காலையில் ப்ரொபோஸ் செய்த போது அதிர்ச்சியுடன் தானே பார்த்த ஸோ அது தான் நம்பர் ஒன் அண்ட் நான் மட்டுமே உனக்கு நம்பர் ஒன்” என்று கூறி கண் சிமிட்டினான்.
அவள் பதில் சொல்வதறியாது திணறுகையிலேயே, அவன் வாயிலை அடைந்து, “வெளியே வாங்க டாக்டர்” என்றான்.
‘யார்’ என்று யோசனையுடன் பாத்தவள் உள்ளே வந்த தங்கையை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுடன் ஓடி வந்து அணைத்து, “எப்படி இருக்க அவந்தி?” என்றாள்.
அவந்திகா, “நல்லா இருக்கிறேன்.. ரொம்ப சாரி (அக்)கா.. உண்மை தெரியாமல் உன்னை நானும் தனிமைப்படுத்திட்டேன்.. உனக்கு நடந்த கொடுமைகள் பற்றி சத்தியமா எனக்கு தெரியாது கா.. அம்மாவின் சதி பற்றி தெரிந்து இருந்தால் நிச்சயம் தடுத்து இருப்பேன்.. சாரி கா”
மெல்லிய புன்னகையுடன் தங்கையின் கன்னத்தை வருடியபடி, “உன்னை பற்றி எனக்கு தெரியாதா?” என்றவள், “சதி அது இது னு என்ன பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு! அவங்க எனக்கு கல்யாணம் செய்து வைத்தாங்க அவ்ளோ தான்.. என் விதி………………….”
“இல்லை கா.. முதலில் பார்த்த மாப்பிள்ளை ஒரு இதய நோயாளி என்றும் கொஞ்ச நாளில் இறந்து விடுவான் என்பது தெரிந்தே தான் அம்மா உனக்கு அவனை பார்த்து இருக்காங்க.. அப்படி இருந்தும் கல்யாண மண்டபத்தில் உன் ராசி பற்றி பேசிய போது வாய் திறக்கவில்லை.. என்னையும் உனக்கு ஆதரவா பேச விடலை.. சாரி கா..” என்று கண் கலங்கினாள். 
ப்ரனிஷாவிற்கு அதிர்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை.
அவந்திகா ப்ரனிஷாவின் கையை பற்றிக் கொண்டு, “முதலில் எனக்கு எதுவும் தெரியாது கா.. சில மாதங்களுக்கு முன்பு அம்மா அவங்க பிரெண்ட் கிட்ட அவங்க பண்ணது எல்லாத்தையும் பெருமையா சொல்லிட்டு இருந்ததை நான் கேட்டுட்டேன்.. எனக்கு எப்படி இருந்தது தெரியுமா! அம்மா மேல் வெறுப்பும் கோபமும் வந்தது.. உன்னை உடனே பார்க்கணும் போல இருந்தது.. உனக்கு போன் பண்ணேன் உபயோகத்தில் இல்லை னு வந்தது.. கிட்டதிட்ட மூன்று வருடங்கள் உன்னிடம் தொடர்பே இல்லாமல் இருந்ததை நினைத்து எனக்கு என் மேல் வெறுப்பும் கோபமும் வந்தது.. முன்பு சில நேரங்களில் உன்னை பற்றி நினைப்பேன்.. ஆனா நீயே பேசலைன்னு பேசாமல் விட்டுட்டேன்.. எப்படி உன்னை தொடர்பு கொள்வதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருந்தப்ப ஒரு நாள் கீதா அக்காவை பார்த்தேன்.. நான் கெஞ்சி கேட்டதால் நீ இந்தியா  வந்ததையும் டைவர்ஸ் ஆனதையும் மட்டும் சொன்னாங்க.. நீ இருக்கும் இடத்தை சொல்ல மாட்டேன் னு சொல்லிட்டாங்க.. சாரி கா..” 
ப்ரனிஷா அசையாமல் நின்றுக் கொண்டிருந்தாள். அவளது நிலை உணர்ந்து ப்ரனேஷ்,  “இனியா” என்று அழைத்தான்.
அவள் அவனை இயந்திரமாக பார்க்கவும் அவளது கவனத்தை திசை திருப்ப அவன் அவளை பார்த்து கண்ணடித்து உதட்டசைவில் சிறு முத்தம் கொடுத்தான். சட்டென்று சுதாரித்தவள் அவனை முறைத்துவிட்டு சிறு பதற்றத்துடன் தங்கையை பார்த்தாள். அவந்திகாவின் கவனம் தன்னிடம் மட்டுமே இருப்பதை கண்டு நிம்மதி அடைந்தவள் அவனை மீண்டும் முறைத்தாள்.
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement