Advertisement

அவன் கதவை அடைத்ததும் ப்ரனேஷ், “அனுப்ப வேற ஆளே இல்லையா?”
“என்ன பண்றது இப்போ அவங்க தான் ப்ரீயா இருக்காங்க”
“ஆனாலும்! நீ என்ன அவ்ளோ பெரிய டெரர் பீஸா டா! பயபுள்ள இப்படி மயங்கிடுச்சே!”
“டேய் வேணாம்! நானே கடுப்பில் இருக்கிறேன்”
“ஹா..ஹா..ஹா” 
“வேணாம் டா.. மெடிக்கல் கேம்ப்பை கேன்சல் பண்ணிடுவேன்”
“என்னை பகச்சுக்காத! உனக்கு நல்லதில்லை” என்று புன்னகையுடன் கூற,
சர்வேஷ், “ஏன்?”
“அன்புக்கு வேப்பிலை அடிச்சு உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்க என்னாலும் இனியாவாலும் தான் முடியும்”
“உங்க உதவி ஒன்றும் தேவை இல்லை.. என் அரசியிடம் சம்மதம் வாங்க எனக்கு தெரியும்”
“பார் டா! அரசியாம்”
“ஹ்ம்ம்.. என் மனதை ஆள்பவள் எனக்கு அரசி தானே!” என்ற போது அவன் முகத்தில் சிறு வெக்கம் வந்தது. ஆண்களின் வெக்கம் கூட அழகு தான்.
ப்ரனேஷ் மகிழ்ச்சியுடன் சர்வேஷை கட்டிப் பிடித்து, “வாழ்த்துக்கள் டா” என்றான்.
அப்பொழுது கதவு தட்டும் சத்தத்துடன், “மே ஐ கம் இன் சார்” என்ற குரலும் கேட்டது.
சர்வேஷ் சிறிது தயங்க ப்ரனேஷ், “என்ன?”
“வேறு யாரும் இருந்தால்?”
“இது இனியா தான்.. குரல் தெரியலையா?” என்றவன் சிறு புன்னகையுடன், “இனி உனக்கு அன்பு குரல் மட்டும் தான் தெரியும்” என்றான்.
சர்வேஷ் செல்லமாக முறைத்துவிட்டு கம்பீர குரலில், “எஸ் கம் இன்” என்றான்.
ப்ரனேஷ், “எப்படி கெத்து காமிக்கணும் னு உன்னிடம் கத்துக்கணும் டா” என்றதும் நிஜமாகவே முறைத்தான்.
உள்ளே வந்த ப்ரனிஷா ப்ரனேஷை கண்டு தயங்கினாள்.
சர்வேஷ், “ப்ரனேஷை தவிர யாரும் உங்க கண்ணுக்கு தெரிய மாட்டாங்களா?”
அவள் சர்வேஷை பார்த்து முறைக்கவும் அவன், “உண்மையை தானே சொன்னேன்” என்றபடி கையை அன்பரசியை நோக்கி நீட்டினான்.
அன்பரசியை பார்த்ததும் பதற்றத்துடன் அவள் அருகில் ஓடியவள் அவளின் கன்னத்தை தட்டியபடி, “அன்பு.. அன்பு” என்றாள் பதற்றத்துடன்.
ப்ரனேஷ், “பயப்பட ஒன்றுமில்லை.. இப்போ முழிச்சிடுவா..ங்க”
“என்னாச்சு?” என்றவளது பார்வையும் கவனமும் அன்பரசியிடம் தான் இருந்தது.
ப்ரனேஷ் சர்வேஷை பார்த்து சிரிக்க அவன் இவனை பார்த்து முறைத்தான்.
பதில் இல்லை என்றதும் திரும்பிப் பார்த்தவள் இருவரின் முக பாவத்தை கண்டு குழப்பத்துடன், “என்ன?” என்றாள்.
ப்ரனேஷ் சர்வேஷை நோக்கி கையை காட்ட, சர்வேஷ், “அதை உங்க தோழியிடமே கேளுங்க” என்றான் சிறு கடுப்புடன்.
அப்பொழுது லேசாக கண்ணை திறந்த அன்பரசி ப்ரனிஷாவை கண்டதும் எழுந்து அமர்ந்து, “கனவா!” என்றவள் நெற்றியை தட்டி, “டெரர் சிரிச்சு பேசும் போதே கனவு னு எனக்கு தெரிந்து இருக்கணும்.. ஆனாலும் எனக்கு ஏன் இப்படி ஒரு கனவு வந்தது?” என்றாள் 
ப்ரனேஷின் சிரிப்பு சத்தத்தில் பார்வையை சுழற்றிய அன்பரசி தன்னை முறைத்துக் கொண்டு நின்ற சர்வேஷை பார்த்ததும் அதிர்ச்சியுடன் சட்டென்று எழுந்து நின்றாள். அவள் பயத்துடன் ப்ரனிஷாவின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.
ப்ரனிஷா ஒன்றும் புரியாமல் முழிக்க, ப்ரனேஷ் அன்பரசியையும் சர்வேஷையும் மறந்தவனாக தன்னவளை பார்த்துக் கொண்டு இருந்தான்.
சர்வேஷ் அன்பரசியிடம் பார்வையை பதித்தபடி, “ப்ரனேஷ் மலரை கூட்டிட்டு போ” என்றான்.
‘மலர்’ என்ற அழைப்பில் ப்ரனிஷா சர்வேஷை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
ப்ரனேஷ், “சர்வா சாயுங்காலம் இனியா வீட்டிலோ பார்க்கிலோ வைத்து பேசு.. இப்போ வேண்டாம்.. உடனே வெளியே போறது நல்லதல்ல.. தேவை இல்லாத பேச்சு வரும்.. நீ வேற சுகுணாவை இனியாவிற்கு பதில் அனுப்பி இருக்க”
ப்ரனேஷின் கூற்றில் நிதர்சனம் புரிய சர்வேஷ் கண்களை மூடி தன் மனதை கட்டு படுத்த முயற்சித்து வெற்றியும் பெற்றான். அதன் பிறகு அவன் அன்பரசியை பார்க்கவில்லை.
அவன் ப்ரனேஷிடம், “உனக்கு உதவியா ப்ரனிஷா வர விருப்படலை.. அர..” அரை நொடி தயங்கி “அரசி தான் வருவா” என்றான்.
ப்ரனேஷ் ப்ரனிஷாவை பார்த்தான். அவனது கண்கள் ‘என்னை மன்னிக்க மாட்டியா?’ என்று மன்றாடுவது போல் பார்த்தது.
அவனது விழி வீச்சை தாங்க முடியாமல் ப்ரனிஷா பார்வையை தாழ்த்தினாள். 
அன்பரசியின் பார்வையோ சர்வேஷிடம் தான் இருந்து. அவனது முகத்தில் வந்து போன உணர்வுகளை பார்த்தவள் அவனை தான் காயப் படுத்திவிட்டதை உணர்ந்தாள். அன்பிற்காக எங்கும் அவளது மென்மையான மனம் அவனிற்காக வருந்தியது.
அன்பரசி சிறிது கலங்கிய குரலில், “சார்” என்று அழைக்க,
அவளது ‘சார்’ என்ற அழைப்பில் சர்வேஷிடம் ஒரு இறுக்கம் வந்தது. அவன் மனசாட்சி, ‘இப்போ தானே உன் மனதை சொல்லி இருக்க! அவளுக்கு டைம் கொடு’ என்று கூறவும் தனது காதல் கொண்ட மனதை அடக்கி அவளை பார்த்து, “நாம சாயுங்காலம் பேசலாம்” என்றான்.
ப்ரனிஷா, “என்ன நடக்குது னு யாரவது சொல்றீங்களா?”
சர்வேஷ், “அதை ப்ரனிஷாவா கேட்கிறீங்களா மலரா கேட்கிறீங்களா?”
ப்ரனிஷா, “புரியலை” என்றாள்.
ப்ரனேஷ் யோசனையுடன் சர்வேஷை பார்க்க, அவனோ, “இப்போ நீங்க கேட்ட கேள்வி என் சொந்த விஷயம்.. ப்ரனிஷாவிடம் நான் அபிஷியலா தான் பேசுவேன்.. மலர் என்றால்…………………..”
“இது என்னை கூப்பிடும் போது தெரியலையா?”
“அப்போ எனக்கு அரசியின் நலம் தான் பெரிதாக பட்டது.. இப்போ அப்படி இல்லை”
“ஓ! ஆனா என் தோழிக்கு நான் ப்ரனிஷா தானே!”
சர்வேஷ் அன்பரசியை பார்த்தபடி, “அவளும் நீங்க மலராக இருக்க தான் விரும்புவாள்”
ப்ரனிஷா சொல்வதறியாது தவித்தாள். 
அன்பரசி இருவருக்கும் நடுவில் தத்தளித்தவளாக சர்வேஷை பார்த்து கண்ணில் கெஞ்சினாள்.
ப்ரனேஷ், “சர்வா” என்று அதட்டவும் சர்வேஷ், “என்னால் முடியலை டா! என் மனம் அறிந்ததில் இருந்து இந்த சில நிமிட தவிப்பையே என்னால் தாங்க முடியலை.. நீ எப்படி டா ஏழு வருடங்களாக!!” என்று கூறி நிறுத்தினான்.
ப்ரனிஷா வேதனையுடன் கண்களை மூடி திறந்தாள்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய சர்வேஷ் வேதனை குரலில், “எப்படி டா உன்னால் முடியுது? உன்னை போல் இருக்க சத்தியமா என்னால் முடியாது டா.. இதய மருத்துவரான உனக்கு இதயத்தில் இப்படி ஒரு வலி! எப்படி டா உன் இதயம் தாங்குது!”
“சார்!!!” என்று குரலை உயர்த்திய ப்ரனிஷா, “அவர் நூறு வயசு வரை நல்லா இருப்பார்”
“எதுக்கு? இல்லை எதுக்குன்னு கேட்கிறேன்? இப்படி கொஞ்சம் கொஞ்சமா அவனை சாகடிக்கிறதுக்கு……………………………”
“ப்ளீஸ்.. வேணாம்.. அவர் நல்ல இப்பார்” என்றபடி தரையில் அமர்ந்தவள் கதறி அழத் தொடங்கினாள். 
அன்பரசி அவள் அருகே அமர போக சர்வேஷ், “அரசி” என்று அழுத்தமாக அழைத்தான்.
அவள் அவனை பார்க்கவும் அவன் ப்ரனேஷை கண்காட்டினான்.
கண்ணில் வழிந்த கண்ணீருடன் ப்ரனேஷ் ப்ரனிஷா அருகே சென்றான். அவன் அவளது தோளில் அதரவாக கையை வைக்கவும் அவள் அவனது சட்டையை இறுக்கி பிடித்தபடி கதறினாள். 
முன்பு அவனை தவறவிட்டதிற்காவும், இப்பொழுது கைக்கெட்டிய தூரத்தில் அவன் இருந்தும் அவனை சேர முடியாத தன் நிலையை நினைத்தும், தான் அணுஅணுவாய் அவனை வதைபதற்காவும் சேர்த்து கதறினாள்.
ப்ரனேஷ் அதரவாக அவளை அணைத்துக் கொண்டான். 
சில நிமிடங்கள் அவளை அழ விட்டவன், “ஒண்ணுமில்லை டா.. உன்னை நீயே வருத்திக்காத.. உனக்காக எத்தனை வருஷமானாலும் நான் காத்திருப்பேன்.. நிச்சயம் உன் மனம் மாறும்” என்று சமாதானம் செய்தான்.
மெல்ல அவளது அழுகை கேவலாக மாறி நின்றது. அழுகை நின்ற பிறகு தான் அவள் தான் இருக்கும் நிலையை உணர்ந்தாள். அடுத்த நொடி அவனை விட்டு விலகினாள்.
அவளது மனநிலையை புரிந்துக் கொண்டு ப்ரனேஷ் புன்னகையுடன் அவளை பார்த்தான். 
அவள் அவசரமாக விலகியதை கூட புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த ப்ரனேஷை பிரம்மிப்புடன் சர்வேஷ் பார்த்தான். 
ப்ரனேஷின் காதலை கண்டு அன்பரசி அவனை ஆச்சரியத்துடனும் மரியாதையுடனும் பார்த்தாள். ‘தனக்கும் இப்படி ஒரு காதல் கிடைக்குமா?’ என்ற கேள்வி அவள் மனதினுள் எழுந்ததும் அவளது பார்வை அவளையும் அறியாமல் சர்வேஷிடம் சென்றது.
அவளை பார்த்த சர்வேஷ் அவள் கண்ணில் தெரிந்த சிறு ஏக்கத்தை கண்டுக்கொண்டான். அவன், ‘நான் இருக்கிறேன்’ என்பது போல் பார்த்து கண்ணை மூடி திறக்கவும் அவள் ‘என் மனம் அவருக்கு புரியுதா!’ என்ற ஆச்சரியத்துடன் அவனை பார்த்தாள். அவளது பாவனையில் அவன் அவளை பார்த்து புன்னகைத்தான்.
ப்ரனேஷ் மேஜை மீது இருந்த தண்ணீர் பாட்டிலை ப்ரனிஷாவிடம் கொடுத்தான். அவள் சிறிது பருகியதும் அவன், “இப்போ பரவா இல்லையா?”
அவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
அவன், “இனியா” என்று காதலுடன் மென்மையாக அழைக்கவும் அவளையும் மீறி அவள் கண்கள் அவனை நோக்கியது.
அவன், “மனசை போட்டு குழப்பிக்காதே! காலம் தான் சிறந்த மருந்து.. நான் சந்தோஷமா காத்திருப்பேன்”
அவள் அமைதியாக இருக்கவும் அவன், “அம்முவை போய் பார்த்தேன்.. அந்த ரோஜா உன் கையில் இருந்ததை விட இப்போ தான் ரொம்ப அழகா இருக்கிறது” என்று மென்னகையுடன் கூற, அவள் செல்லமாக முறைத்தாள்.
அவளது முறைப்பில் அவனது மென்னகை புன்னகையாக விரிந்தது. 
இதழ் திறக்க காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥

Advertisement