Advertisement

இதழ் 22
சர்வேஷ் அறைக்கு சற்று தள்ளி இருந்த மண்பானையில் இருந்து தண்ணீரை எடுத்து குடித்து தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்த ப்ரனிஷா சர்வேஷ் அறைக் கதவை தட்டினாள். அவனது அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்றாள்.
என்ன தான் அவள் தண்ணீர் குடித்து தன் மனதை சமன் செய்திருந்தாலும் அவளது முகத்தை கண்டு ‘ஏதோ சரி இல்லை’ என்பதை புரிந்துக் கொண்ட சர்வேஷ் அதை பற்றி எதுவும் கேட்காமல் அவளை அழைத்த காரணத்தைப் பற்றி பேசினான்.
“இன்று மதியத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு நம்ம ஸ்கூலில் ப்ரனேஷ் தலைமையில் மெடிக்கல் கேம்ப் நடக்க போகிறது.. இந்த ஒரு வாரமும் அவனுக்கு உதவியாக அவனுடன் இருந்து பார்த்துக்கோங்க.. உங்கள் வகுப்பு நேரங்களில் அன்பரசி மேடம் அவனுக்கு உதவியாக இருக்கட்டும்”
அவள் கோபத்துடன், “பிரின்சிபால் வேலையை பார்க்கிறீங்களா இல்லை வேறு எதுவும் வேலையா?”
‘டேய் ப்ரனேஷ்’ என்று மனதினுள் நினைத்து பல்லை கடித்தவன் கோபத்துடன், “சொந்த விஷயங்களை ஸ்கூலினுள் நான் நுழைப்பது இல்லை.. அவன் நடத்தும் மெடிக்கல் கேம்ப்பில் நமக்கு தான் நன்மை.. அதனால் அவனுக்கு தெரிந்த உங்களை உதவியாக இருக்க சொன்னேன்..”
“சாரி சார்.. எனக்கு இதில் விருப்பம் இல்லை.. அன்பரசி மேடமை பார்த்துக்க சொல்லுங்க”
“இந்த சாரி.. சொன்னதை செய்ய முடியாததிற்கா இல்லை என்னை பேசியதிற்கா?”
“சாரி.. நான் பேசியது அதிகம் தான்.. வேறு டென்ஷனில் யோசிக்காம பேசிட்டேன்.. மன்னிச்சிருங்க”
“சரி நீங்க போய் அன்பரசி மேடமை வர சொல்லுங்க”  
அவள் தயக்கத்துடன் அவனை பார்க்கவும் அவன், “வந்ததுமே உங்க முகம் சரியில்லாததை கவனித்தேன்.. விடுங்க.. நான் பெருசா எடுத்துக்கலை”
“தேங்க்ஸ்” என்று சங்கடத்துடன் கூறி சென்றவளுக்கு ப்ரனேஷ் மீது கோபம் வந்தது.
ஆசிரியர் அறைக்கு சென்றவள் அன்பரசியிடம், “சர்வேஷ் சார் உன்னை கூபிடுறார்”
“என்னையா! எதுக்கு?”
“அவர் ஏதோ மெடிக்கல் கேம்ப் நடத்த போறாராம்.. அதை பற்றி பேசணுமாம்”
‘அதுக்கு இவளை தானே அனுப்புறதா பேச்சு’ என்று மனதினுள் குழம்பியவள் ப்ரனிஷாவின் முகத்தை உற்று பார்த்தாள்.
ப்ரனிஷா, “என்ன?”
“அவர் னு இப்போ யாரை சொன்ன!”
“உனக்கு தெரியாதா?”
“சர்வேஷ் சாரையும் அவர் னு சொல்லுவ.. ஹீரோ சாரையும் அவர் னு சொல்லுவ.. என் சின்ன மூளை குழம்பாதா?” என்று அறியாதது போல் கூற, ப்ரனிஷா முறைத்தாள்.
“சரி.. நான் போய் சாரை பார்த்துட்டு வரேன்” என்றவள், “அந்த அவர் ஹீரோ சார் தானே” என்று கண்ணடித்து கேட்கவும்.
“ரொம்ப முக்கியம்! போய் வேலையை பாரு” என்று விரட்டினாள்.
அன்பரசி சென்றதும் தன் இடத்தில் அமர்ந்தவள் கைபேசியில் குறுஞ்செய்தி வந்த சத்தம் கேட்கவும் அதை எடுத்துப் பார்த்தாள். புது எண்னில் இருந்து வந்திருந்தது. ‘சாரி’ என்று ஆரம்பித்து இருக்கவும் அது ப்ரனேஷ் அனுப்பியது என்று குறுஞ்செய்தியை திறக்காமலேயே அவளுக்கு புரிந்தது.
சிறு தயக்கத்துடன் தான் அதை படிக்க ஆரம்பித்தாள்.
“சாரி.. என்னை அறியாமல் நடந்துவிட்டது.. ஏழு ஆண்டின் தவிப்பாக கருதி என்னை மன்னிக்கவும்.. ப்ளீஸ்.. இனி இது போல் நடக்காது.. சாரி” என்று அனுப்பி இருந்தான்.
அதையே வெறித்து பார்த்தவள் பதில் அனுப்பாமல் கைபேசியை கைபையினுள் போட்டாள்.
அவள் மனநிலையை அவளாலேயே புரிந்துக்கொள்ள முடியவில்லை.. அவனது செய்கையால் அவன் மேல் கோபம் கொள்ளும் மனம் அதே நேரத்தில் அவனது செய்கையை ரசிக்கவும் செய்கிறது. சர்வேஷிடம் அதிகமாக பேசிய தாக்கத்தில் ப்ரனேஷ் மேல் கோபமாக இருந்தவளின் மனம் குறுஞ்செய்தியை படித்ததும் அமைதி அடைந்த மாயம் புரியாமல் குழம்பினாள். 
சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவள் தலையை உலுக்கிக் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பாடம் எடுக்க சென்றாள்.
சர்வேஷின் அனுமதியுடன் அவன் அறையினுள் சிறு பயத்துடன் சென்ற அன்பரசி அமைதியாக நின்றாள்.
அவளை பார்த்ததும் காலையில் ப்ரனேஷ் கூறியது தான் அவனுக்கு நியாபகம் வந்தது. அவளது அழகு முதல் முறையாக அவன் விழிகளில் விழுந்து மனதினுள் பதிந்தது.
சில நொடிகள் மௌனத்தில் கழிய அவள் மெல்லிய குரலில், “சார்” என்றாள்.
அவளது குரல் கூட இனிமையாக இருப்பது போல் தோன்றியது. அடுத்த நொடியே அவனது மனசாட்சி ‘டேய் என்ன பண்ணிட்டு இருக்க! இப்போ தானே சொந்த விஷயத்தை ஸ்கூலினுள் நுழைப்பது இல்லை னு வாய் கிழிய பேசின’ என்று இடித்துரைக்கவும் தலையை சிறிது உலுக்கிக் கொண்டான்.
அவனது நிலை அறியாத அன்பரசி பயம் நீங்கி அவனை வினோதமாக பார்த்தாள்.
அவன் மனதினுள், ‘இது எனக்கு தேவை தான்’ என்று சொல்லிக் கொண்டு கம்பீரக் குரலில், “இன்று மதியத்தில் இருந்து மெடிக்கல் கேம்ப் நடக்க போவது உங்களுக்கு தெரியும் னு நினைக்கிறேன்……………….”
“மாம்ஸ்…………..” என்று ஆரம்பித்தவள் ‘ஸ்’ என்று ஒரு கண்ணை சுருக்கி பல்லை கடித்தாள். 
தனது பேச்சின் நடுவே குறுக்கிட்டவளை சிறு எரிச்சலுடன் பார்த்தவனின் உதட்டின் ஓரம் அவளது செய்கையில் மென்னகை அரும்பியது.
அவள், “சாரி.. ப்ரனேஷ் சார் சொன்னார்.. ஆனா ப்ரனிஷா தானே அவர் கூட இருக்க போறதா பேச்சு! என்னை கூப்பிட்டு இருக்கீங்க!” என்றவளை அவன் இமைக்காமல் பார்த்தான்.
அவனது பார்வையில் அவள் சிறு கூச்சத்துடன், “சார்”
“முதல் முறையா என்னிடம் இயல்பா பேசியிருக்கீங்க!”
அவள் பதில் சொல்வதறியாது அமைதியாக நின்றாள்.
அவன், “இப்படியே எப்பொழுதும் பேசலாமே! என்னை கண்டால் பூச்சாண்டி போல் ஏன் பயப்படுறீங்க?”
“அப்..படியெல்லாம் இல்லை சார்”
“இதோ இப்போ கூட பயம் வந்து ஒட்டிகிறதே!”
‘அதுவா வந்து ஒட்டிக்கிட்டா நான் என்ன பண்ண! இன்னைக்கு இவருக்கு என்னாச்சு?’ என்று மனதினுள் கேட்டுக் கொண்டவள் மீண்டும் பதில் சொல்வதறியாது அவனை பார்த்தாள்.
“பயப்படாமல் பேசுவதற்கு உங்கள் தோழியிடம் ட்ரைனிங் எடுத்துக்கோங்க” என்றவன் சிறு புன்னகையுடன், “ஆனா அளவா எடுத்துக்கோங்க.. இல்லை என்னை தாளிச்சு தள்ளிருவீங்க” என்றான்.
அவள் சிறிது வாயை திறந்து ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
சர்வேஷிற்கே தன்னை நினைத்து ஆச்சரியமாக தான் இருந்தது. ப்ரனேஷ் கூறியதின் தாக்கமா இல்லை முன்பே தனக்கே தெரியாமல் அன்பரசி தன் மனதில் தடம் பதித்து இருக்கிறாளா? என்று குழம்பினான். எதுவோ! அவனுக்கு அவளிடம் பேசுவது பிடித்து இருந்தது. அதுவும் அவனது ‘சொந்த விஷயம் பள்ளியில் கிடையாது’ என்ற கோட்பாட்டையும் மீறி அவளிடம் பேசுவது பிடித்தது.
அவள் பயமின்றி தன்னுடன் இயல்பாக பேச வேண்டும் என்ற ஆவல் தோன்றிய நொடி அவனுக்கு அவன் மனம் புரிந்தது. முன்பு அவளது பயத்தை கண்டு தனக்கு ஏன் எரிச்சலும் கோபமும் வந்தது என்றும் இப்பொழுது புரிந்தது.  
தன் மனம் செல்லும் பாதை ஓரளவிற்கு புரிந்ததும் அவனது பார்வையில் அவள் வித்யாசமாக தெரிந்தாள். அவள் தற்போது நிற்கும் நிலையை மனம் ரசிக்க, அவனுக்கு அவளது கோலம் கவிதை போல் தோன்றியது.
இவ்வளவையும் அவனது மனம் சில நொடிகளில் ஆராய்ந்து இருக்க, மெல்ல சுதாரித்தவன், “என்ன?” என்று புருவம் உயர்த்தி கேட்டான்.
சட்டென்று முகபாவத்தை மாற்றியவள் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
அதைக் கூட ரசித்தவன் மென்னகையுடன், “நம்ம பிளானை உங்க தோழி முறியடிச்சிட்டாங்க.. இப்போ ப்ரனேஷிற்கு உதவியா நீங்க தான் போகணும்.. உங்களுக்கு வகுப்பு இருக்கும் நேரம் யாரை அனுப்பலாம்?”
“இன்னைக்கு மதியம் எனக்கு வகுப்பு இல்லை.. நாளைக்கு ஏதாவது செய்து எனக்கு பதில் அவளை அனுப்புறேன்.. முடியவில்லை என்றால் யாரை அனுப்புறதுன்னு யோசிக்கலாம்”
“ஸோ.. உங்கள் தோழி பற்றி பேசினால் இயல்பா பேசுவீங்க”
“அப்படியெல்லாம் இல்லை சார்” என்று அவள் சிறு தயக்கத்துடன் கூறினாள்.
“சரி கிளம்புங்க” என்றவன் அவள் கதவை திறக்க போகவும், “அரசி” என்று அழைத்தான்.
அவள் ‘என்னையா கூப்பிட்டார்!’ என்ற குழப்பத்துடன் திரும்பினாள்.
அவன் அவளது கண்களை பார்த்து ஆழ்ந்த குரலில், “என் வீட்டை ஆளும் அரசியாக வரியா?” என்று கேட்டான்.
‘இவர் என்ன சொல்கிறார்?’ என்று புரியாமல் அவள் திருதிருவென்று முழிக்கவும்,
அவன் விரிந்த புன்னகையுடன், “என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா னு கேட்டேன்” என்றான்.
ஒரு நொடி விரிந்த கண்களுடன் பெரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவள் அடுத்த நொடி மயங்கி கீழே விழுந்திருந்தாள்.
“அரசி” என்று பதற்றத்துடன் ஓடி வந்தவன் அறையில் இருந்த சோபாவில் அவளை படுக்க வைத்து தண்ணீர் தெளித்தான்.
அவள் கண் விழிக்கவில்லை என்றதும் பதற்றத்துடன் கைபேசியை எடுத்து ப்ரனேஷை அழைத்தான். 
ப்ரனேஷ், “சொல்லு டா”
“எங்க இருக்க?” என்று அவன் பதற்றத்துடன் கேட்டான்.
“என்னாச்சு டா? நீ எங்க இருக்க? ஏன் பதற்றமா இருக்க?”
“உடனே என் ரூமுக்கு வா”
“ரெண்டு நிமிஷத்தில் வரேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தவன் சொன்னது போல் இரண்டு நிமிடத்தில் அறையினுள் நுழைந்தான்.
ப்ரனேஷ், “என்னடா பண்ண? என்ன சொல்லி பயமுறுத்தின?” என்று கேட்டபடி அன்பரசியை பரிசோதித்தான்.
சர்வேஷ் முறைத்தபடி, “நான் ஒன்னும் பயமுறுத்தலை.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா னு தான் கேட்டேன்” என்று நொந்துப் போய் கூறினான்.
ப்ரனேஷ் பரிசோதிப்பத்தை நிறுத்தி வாய்விட்டு சிரித்தான்.
சர்வேஷ் கடுப்புடன், “போதும்.. அவளை பாரு” என்றான்.
“அதுக்குள்ள பல்ப் எரிஞ்சிடுச்சு போல! ஆனாலும் நீ ரொம்ப பாஸ்ட் டா” 
“அட போடா! நானே நொந்து போய் இருக்கிறேன்.. எப்படி இருக்கா னு சொல்லு?”
“பயப்பட ஒன்றுமில்லை டா.. கொஞ்சம் வீக்கா தெரியுறா.. அதிர்ச்சியில் மயக்கமாகியிருப்பா.. அஞ்சு நிமிஷத்தில் முழிச்சிருவா” என்றவன், “எதுக்கும் இனியாவை வரச் சொல்.. அன்பு முழிக்கும் போது பக்கத்தில் அவ இருந்தா பெட்டர்.. இனியா கிளாஸ் போறதை பார்த்தேன்..”
வகுப்பு அட்டவனைகளை ஆராய்ந்தவன் கதவை லேசாக திறந்து பியூனிடம், “சுகுணா மேடமை இந்த ஹவர் டுவெல்த் போக சொல்லிட்டு அங்கே இருக்கும் ப்ரனிஷா மேடமை என் ரூமுக்கு வர சொல்” என்றான்.

Advertisement