Advertisement

இதழ் 21
அடுத்த நாள் காலையில் ப்ரனிஷா தெரு வாசலில் கோலம் போடுவதற்காக கதவை திறந்த பொழுது வெளியே புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்த ப்ரனேஷை கண்டு கனவோ இல்லை பிரம்மையோ என்ற எண்ணத்தில் கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தாள்.
ப்ரனேஷ் புன்னகையுடன், “கனவில்லை நிஜம்.. குட் மார்னிங் பேபி”
அவள் கண்களை விரித்து பார்க்கவும், அவன், “உன் வாயை விட உன் விழிகள் அதிகம் பேசுது ஸ்வீட்டி.. உன் இதழ் திறக்க காத்திருக்கிறேன்” என்று காதலுடனும் கிறக்கத்துடனும் கூறினான்.
அவள் அதிர்ச்சியுடன் நின்றுக் கொண்டிருந்தாள்.
அவன், “அரை மணி நேரம் முன்பே வந்துட்டேன்.. பெல் அடிச்சு அம்மு எழுந்திர கூடாதேன்னு நீ வரதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்”
இப்பொழுது தான் சுயத்திற்கு வந்தவள், “ஸீன் கிரியேட் பண்ணாமல் கிளம்புங்க”
அவன் சிறு கோபத்துடன், “என் காதல் உனக்கு ஸீன் போடுவது போல் இருக்குதா?”
“ச்ச்.. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தப்பா நினைக்க போறாங்க.. கிளம்புங்க” என்று அவள் அலுத்துக் கொண்டாள்.
அவன் கண்கள் மின்ன, “அப்போ உனக்கு ஓகே தானே!”
அவள் முறைக்கவும் அவன் மென்னகையுடன், “இல்லை.. இந்த மூணு நாளில் நீ என்னை ரொம்ப மிஸ் பண்ணதா எனக்கு உளவுத்துறை ரிப்போர்ட் வந்தது.. அதான் பார்க்க வந்தேன்”
அவள் யோசனையுடன் பார்க்கவும் அவன் விரிந்த புன்னகையுடன், “திட்டலை.. ஸோ நான் சொன்னது உண்மை” என்று கூறி புருவம் உயர்த்தவும் அவள் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு அவனை பார்த்து முறைத்தாள்.
அவளது முறைப்பை கண்டுக் கொள்ளாதவன், “அப்போ தைரியமா இதை கொடுக்கலாம்!” என்றவன் வலது கையில் பின்னால் மறைத்து வைத்திருந்த ஒற்றை சிகப்பு ரோஜாவை நீட்டி கண்ணில் காதலுடன், “ஐ லவ் யூ ஸ்வீட்டி” என்றான்.
இதை சற்றும் எதிர்பார்க்காதவள் மீண்டும் அதிர்ச்சியுடன் நின்றாள்.
அப்பொழுது “அம்மா.. பாப்பா எழுந்தா.. அம்மா எங்த(எங்க)?” என்ற அபிசாராவின் குரல் கேட்கவும் அவன் அவசரமாக அவள் கையில் ரோஜாவை திணித்து, “அப்பறம் பார்க்கலாம் ஸ்வீட்டி.. பை” என்று கூறி கிளம்பியவன் திரும்பி வந்து, “லவ் யூ ஸோ மச் இனியா பேபி” என்று கூறி உதட்டசைவில் சிறு முத்தம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.
அவன் செல்லவும் அங்கே வந்த அபிசாரா, “அம்மா பாப்பா தேதி(தேடி) என்றாள்.
ப்ரனேஷின் இந்த அவதாரத்தை சற்றும் எதிர் பார்க்காதவள் சிலையாய் நின்றிருந்தாள்.
அன்னையிடமிருந்து பதில் இல்லை என்றதும் குழந்தை அன்னையின் கால்களை கட்டி, “அம்மா.. தூத்து(தூக்கு)என்றாள்.
அப்பொழுது தான் சுய உணர்வுக்கு வந்த ப்ரனிஷா குழந்தையை தூக்கி விரிந்த புன்னகையுடன், “குட் மார்னிங் செல்லக் குட்டி” என்று கூறி கன்னத்தில் முத்தமிட்டாள்.
குழந்தையும் அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டு ரோஜாவை காட்டி, “இது பாப்பாத்தா (பாப்பாக்கா)?”
அரை நொடி தயங்கியவள் பின் புன்னகையுடன், “பாப்பாக்கு தான்” என்றாள்.
“யாரு தந்தா?”
“அது ஒரு அ………….” ‘அங்கிள்’ என்று சொல்ல வந்தவள் ஏனோ தயங்கி “அம்மாக்கு தெரிந்தவங்க கொடுத்தாங்க” என்றாள்.
“யாரு?”
“பாப்பாக்கு தெரியாது”
“அம்மா உதம்பு(உடம்பு) சரியா?”
“ஏன் டா?”
“அம்மா உதம்பு சரி இல்ல நாளைக்கு(நேற்று) சித்தி சொன்னா.. அம்மா சிரித்தலை(சிரிக்கலை).. இப்போ அம்மா சிரிச்சா” என்றதும் பெரிதும் அதிர்ந்தவள் மகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு இரு கன்னத்திலும் முத்தம் கொடுத்து, “அம்மாக்கு ஒண்ணுமில்லை செல்லம்” என்றாள்.
குழந்தை புன்னகையுடன் அவளை கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தது.  
தன் மனதில் அபி மட்டும் இருப்பதாக அவள் ப்ரனேஷிடம் சொல்லியிருக்க, அவள் மனமோ அவனுக்கு ஏதோ ஆபத்தோ என்ற பயத்தில் மகளை கூட சரியாக கவனிக்காமல் இருந்திருப்பதை கண்டு பெரிதும் அதிர்ந்தாள்.
அதன் பிறகு அவள் கவனம் முழுவதும் மகளிடம் தான் இருந்தது. சிறிது நேரம் மகளுடன் சிரித்து விளையாடியவள் சமையலைக் கூட மகளுடன் பேசியபடியே தான் செய்தாள். அதன் பிறகு பள்ளிக்கு கிளம்பியவள் மகளின் விருப்பபடி மகள் தலையில் அந்த ஒற்றை ரோஜாவை வைத்துவிட்டாள்.
ர்வேஷ் தனது காலை ஓட்டத்தை முடித்து வீட்டின் உள்ளே நுழைந்த போது புன்னகையுடன் உள்ளே வந்த ப்ரனேஷ், “குட் மார்னிங்” என்றான்.
சர்வேஷ், “நீ எப்போ டா வந்த!”
“எதுக்கு இவ்ளோ ஷாக்?”
“அதானே! நீ தான் எனக்கு ஷாக் கொடுக்கிறதுக்காகவே பிறந்தவனாச்சே!” என்றவன், “அது சரி.. முகத்தில் தௌசண்ட் வாட்ஸ் பல்ப் எரியுது! என்ன விஷயம்?”
“அவன் தேவதையை பார்த்துட்டு வரான்” என்ற அமுதாவின் குரலில்,
சர்வேஷ், “நீங்க எப்போ பெரியம்மா வந்தீங்க?”
“நீ எழுந்திருக்கிறதுக்கு முன்னாடியே வந்துட்டேன்.. இவனுடன் தான் காரில் வந்தேன்.. என்னை வாசலில் இறக்கி விட்டுட்டு மலரை பார்க்க ஓடிட்டான்.. இங்கே இருக்கிற அடுத்த தெருவுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி போனவன் இப்போ தான் வரான்.. என்னன்னு கேளு..”
சர்வேஷ், “அடப் பாவி!!!”
ப்ரனேஷ், “ஷாக்கை குறை! ஷாக்கை குறை” என்றான் புன்னகையுடன்.
சர்வேஷ், “இது என்ன டா! ப்ரனேஷ் 2.0 வெர்ஷனா! செம்ம பார்மில் இருக்கிற போல!”
ப்ரனேஷ் வாய்விட்டு சிரித்தபடி, “யா.. யா” என்றான்.
ப்ரனேஷின் மகிழ்ச்சியை கண்டு அமுதாவின் கண்கள் கலங்கியது. தமக்கையின் நிலை அறிந்து சாரதா அதரவாக அவர் தோளை பற்றினார். 
அன்னையின் மனநிலையை மாற்றும் எண்ணத்துடன் ப்ரனேஷ் உற்சாக குரலில், “என்ன அமுத சுரபி! தங்கள் மருமகள் என்ன சொன்னாள் னு தெரிய வேண்டாமா?”
அவன் நினைத்தது போல் அவர் குழந்தையின் ஆர்வத்துடன், “என்ன டா சொன்னா?” என்று கேட்டார்.
அவன் உதட்டை பிதுக்கி, “ஒண்ணுமே சொல்லலை”
சர்வேஷ், “இதுக்கா இந்த பில்டப்!” என்று கூற,
அமுதா, “ச்ச்.. என்னடா!” என்றார் ஆர்வம் வடிந்தவராக.
ப்ரனேஷ் புன்னகையுடன், “அதுவே பெரிய வெற்றி தான் மா!”
அமுதா முறைக்கவும் ப்ரனேஷ், “பின்ன! உன் மருமகளிடம் அடி வாங்காமல் வந்ததே பெரிய வெற்றி இல்லையா!”
“அப்படி என்னடா பண்ண?”
“ஐ லவ் யூ சொல்லி சின்னதா பறக்கும் முத்தம் கொடுத்துட்டு வந்தேன்” என்று அவன் வெகு சாதாரணமாக கூற மற்ற மூவரும் அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் அவனை பார்த்தனர்.
முதலில் சுதாரித்த சர்வேஷ், “சொல்லிட்டு ஓடி வந்திருப்பியே!”
“பின்ன!”
வாய்விட்டு சிரித்த சர்வேஷ், “அதான் உன் ஆக்சனுக்கு ரியாக்சன் தெரியலை”
“அது அம்மு எழுந்து வரும் சத்தம் கேட்டதா! அதான் ஓடி வந்துட்டேன்”
“இல்லனா நின்னு ரியாக்சனை பார்த்துட்டு வந்திருப்ப!” என்று சிறு நக்கலுடன் சர்வேஷ் கேட்க,
ப்ரனேஷ், “விடு.. விடு..”
“ஸ்கூலுக்கு வா.. செம்மையா வரவேற்பு கிடைக்கும்”
“நிச்சயம் எதிர்வினையா இருக்காது” என்று அவன் புன்னகையுடன் கூறவும் சர்வேஷ் ஆச்சரியத்துடன் பார்த்தான்.
ப்ரனேஷ் புன்னகையுடன் கண்ணடித்து, “வெயிட் அண்ட் ஸீ ப்ரோ” என்றான்.
பிறகு அன்னையை பார்த்து, “என்ன மா இன்னுமா நீ ஷாக்கில் இருந்து மீளல!”
“என் மருமகளிடம் நான் எப்போ ஐ லவ் யூ சொல்லலாம் னு யோசிச்சிட்டு இருந்தேன்”
ப்ரனேஷ், “நான் இல்லாதப்ப டாக்டர் சார் செம ட்ரைனிங் கொடுத்திருக்கார் போல!” என்றும்,
சர்வேஷ், “அம்மாவும் பையனும் ஒரு முடிவோட தான் இருக்கிறீங்க போல!” என்றும் ஒரே நேரத்தில் கூற நால்வர் முகத்திலும் புன்னகை அரும்பியது.
ப்ரனேஷ் சாரதாவிடம், “சித்தி நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?” என்று தீவிரமான குரலில் கேட்டான்.
சாரதா, “இல்லை சொல்லு”
“எனக்கு என்னவோ இந்த ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை.. ஜாதக பொருத்தத்தை விட மன பொருத்தம் தான் முக்கியம் என்பது என் கருத்து.. உங்களுக்கு தாத்தா ஜாதகம் பார்த்து தான் கல்யாணம் செய்து வைத்தார் ஆனா…………….”
அமுதா, “ப்ரனு” என்று சிறு கண்டிப்புடன் அழைக்க, சாரதா, “விடு (அக்)கா.. அவன் சொல்லி முடிக்கட்டும்” என்றவர் ப்ரனேஷை பார்த்து, “என்னை விடு.. இப்போ எதுக்கு இதை பத்தி சொல்ற? சர்வாவிற்கு பொண்ணு ஏதும் பார்த்து இருக்கிறியா?” என்று சரியாக கணித்துக் கேட்டார்.
ப்ரனேஷ் புன்னகையுடன், “எப்பவும் நீங்க ஷார்ப் சித்தி”
சாரதா புன்னகையுடன், “பொண்ணு யாரு?”
“அதையும் கெஸ் பண்ணியிருக்கனுமே!”
“ஒரு அனுமானம் இருக்குது தான்.. இருந்தாலும் நீயே சொல்” என்றார்.
‘இங்கே என்ன டா நடக்கிறது!’ என்பது போல் சர்வேஷ் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
ப்ரனேஷ், “அன்பு.. அன்பரசி” 
சாரதா புன்னகையுடன், “நினைத்தேன்” என்று கூற, 
சர்வேஷ், “டேய்! என் ஸ்கூலில் வேலை செய்றவங்களை போய்……………..”
ப்ரனேஷ், “நீ ஏன் அப்படி நினைக்கிற! தரகர் மூலம் உனக்கு ஒரு வரன் வருது.. அந்த பொண்ணு உன் ஸ்கூலில் வேலை பார்க்குது.. அப்படி நினை”
“என்னை கண்டாலே பயப்படுவாங்க டா!”
“அது நீ டெரர் பீஸா பில்டப் கொடுத்ததால்”
“மத்தவங்க இப்படியா பயப்படுறாங்க!”
“யாரு கண்டா! கல்யாணத்திற்கு பிறகு நீ அன்புவை கண்டு பயப்படலாம்!”
“டேய்! அதுக்குள்ளே எங்கே போய்ட்டடா! நான் அந்த எண்ணத்துடன் அவங்களை பார்த்தது இல்லை”
“நீ யாரை தான் அப்படி பார்த்த!”
சர்வேஷ் முறைக்கவும் ப்ரனேஷ், “சரி.. இனி அந்த எண்ணத்துடன் பாரு” என்றவன், “எல்லோரையும் இல்லை டா.. அன்புவை மட்டும் பாரு”
சர்வேஷ் முறைத்துவிட்டு, “உன் கல்யாண வேலையை பார்க்காமல் என் கல்யாண வேலையை ஏன் பார்க்கிற!”
“நான் சீரியஸ்ஸா கேட்கிறேன்.. சித்தி பார்த்திருக்கும் பெண் அன்பு என்றால் உன் முடிவு என்ன? அன்புவிடம் என்ன குறை?”
ஒரு நொடி மெளனமாக இருந்தவன், “எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்”
“ஒரு நாள் டைம் தரேன்”
சர்வேஷ், “இதெல்லாம் ரொம்ப ஓவர் டா” என்றதை கண்டுக் கொள்ளாத ப்ரனேஷ், “சித்தி நீங்க என்ன சொல்றீங்க?”
“எனக்கு சம்மதம்.. இனி முடிவு எடுக்க வேண்டியது சர்வா தான்”
“அப்போ கூடிய சீக்கிரம் நம்ம வீட்டில் ரெண்டு கல்யாணம் நடக்கும்”
“நான் இன்னும் என் முடிவை சொல்லலை” என்று சர்வேஷ் கூற, 
ப்ரனேஷ், “என் மச்சினிச்சியை பிடிக்காமல் வேறு யாரை உனக்கு பிடிக்க போகுது!”
சர்வேஷ் ‘அடப்பாவி’ என்பது போல் பார்த்தான்.
ப்ரனேஷ், “சரி சரி.. சீக்கிரம் கிளம்பி வா.. நான் என் ஸ்வீட்டியை பார்க்க போகணும்” என்றவன் போகிற போக்கில், “என் ஸ்வீட்டி கிட்ட மெடிக்கல் கேம்ப் பற்றியும் என்னுடன் இருந்து உதவி செய்வது பற்றியும் நீ தான் சொல்ற.. ஞாபகம் வச்சுக்கோ..” என்றான்.
 
ள்ளியில் மகளை அவளது வகுப்பில் விட்டுவிட்டு ஆசிரியர் அறைக்கு வந்ததும் ப்ரனிஷாவின் மனம் அவளைக் கேட்காமல் ப்ரனேஷை பற்றி தான் சிந்திக்கத் தொடங்கியது. காலையில் அவன் செய்த கலாட்டாவை பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.
முன்பு ஒரு நாள் அவளது மறுப்பையும் மீறி விமல் இதை போல் ஒற்றை ரோஜாவுடன் அவனது காதலை சொன்னபோது அவளுக்கு கோபமும் எரிச்சலும் வந்தது ஆனால் இன்று ப்ரனேஷ் சொன்ன போது அதிர்ந்தாலும் உள்ளுக்குள் அதை ரசிக்கத் தான் செய்தாள்.
அவளது சிந்தனையை கலைப்பது போல் அனபரசி, “என்ன இன்னைக்கு முகத்தில் தனி ஒளி தெரியுது?”
“அதெல்லாம் இல்லை.. நான் எப்பொழுதும் போல் தான் இருக்கிறேன்” 
“உன் ஆளை மீட் பண்ணிட்ட போல!”
ப்ரனிஷா முறைக்கவும் அன்பரசி, “உன்னை விரும்பும் ஆள்.. அதை தான் உன் ஆள் னு சொன்னேன்.. எப்புடி?” என்றபடி இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்.
ப்ரனிஷாவின் முறைப்பில் மாற்றம் இல்லை என்றதும், அன்பரசி சிறிது அசடு வழிந்தபடி, “சரி.. ஹீரோ சார் னு சொல்றேன்.. இது ஓகே வா!!!”
“யாருக்கு ஹீரோ?”
“அதை நீ தான் சொல்லணும்”
“நான் தான் சொல்லிட்டேனே!”
“சரி பேச்சு ட்ராக் மாறுது… உன் முகத்தின் ஒளி வட்டத்திற்கு காரணம் என்னவோ?”
“அதெல்லாம் ஒன்றுமில்லை னு சொல்றேனே!”
“சரி கேள்வியை மாற்றி கேட்கிறேன்.. ஹீரோ சார் உன்னிடம் வந்து பேசினாரா? இல்லை தரிசனம் கொடுத்தாரா?”
“அது” என்று அவள் சிறிது தயங்கவும்,
அன்பரசி உற்சாகத்துடன், “அப்போ ஹீரோ சாரை மீட் பண்ணிட்ட! சொல்லு சொல்லு.. என்ன சொன்னார்”
“சொன்னா ஓட்டக் கூடாது?”
“சரி”
“அதை பற்றி பேசக் கூடாது”
“சரி”
“அவர் காலையில் வீட்டிற்கு வந்து ப்ரொபோஸ் பண்ணார்”
அன்பரசி அதிர்ச்சியுடன் வாயின் மீது கையை வைத்தபடி பார்த்தாள்.
இரண்டு நொடிகள் கழித்து அன்பரசி மெல்ல, “உனக்கு கோபம் வரலையா?”
ப்ரனிஷா இல்லை என்பது போல் தலையை ஆட்டினாள்.
அன்பரசி, “அப்போ!!!”
“நான் அதற்கு மேல் யோசிக்க விரும்பலை ஆனா எனக்கு எரிச்சலோ கோபமோ வரலை..”
“அவர் என்ன சொன்னார்?”
“அதை தானே இப்போ சொன்னேன்”
“உன் அமைதியை பார்த்து என்ன சொன்னார்?”
அவள் மெல்லிய புன்னகையுடன், “சொல்லிட்டு ஓடிட்டார்”
“ஹீரோ சாருக்கு கூட உன்னை கண்டால் பயம் போல!”
ப்ரனிஷா செல்லமாக முறைக்க அப்பொழுது அன்பரசி சிறு ஆச்சரியத்துடன், “ஹே! இது என்ன டைரி மில்க் சில்க் சாக்லெட்!!!” என்று மேஜை மீது இருந்ததை சுட்டிக் காட்டி கேட்டாள்.
ப்ரனிஷா, “யாரு வச்சா? எனக்கு தெரியாதே!” என்று யோசித்தவள் சிறு கோபத்துடன், “அவர் வேலையா தான் இருக்கும்.. இது என்ன ஸ்கூலில் வைத்து!” என்றாள்.
அப்பொழுது பியூன் வந்து அவளிடம், “மேம் உங்களை பிரின்சிபால் சார் கூப்பிடுறார்” என்று கூறிச் சென்றான்.
அவள் கிளம்பும் போது அன்பரசி புன்னகையுடன், “கூப்பிட்டது சர்வேஷ் சாரா இல்லை ஹீரோ சாரா!”
ப்ரனிஷா உண்மையாக முறைத்துவிட்டு சென்றாள்.
அன்பரசி மனதினுள், ‘பெண் சிங்கம் என்னைக்கு நம்ம மேல் பாயப் போகுதோ!’ என்று கூறிக் கொண்டு தன் வேலையை பார்க்கச் சென்றாள்.
ப்ரனிஷா சர்வேஷ் அறைக்கு சென்றுக் கொண்டிருந்த போது அவளுக்கு எதிரில் புன்னகையுடன் ப்ரனேஷ் வரவும் அவள் கோபத்துடன், “ஸ்கூலில் வந்து என்ன வேலை பார்க்கிறீங்க! ஒழுக்கம் என் உயிர் மூச்சு னு சொல்லும் உங்க பிரெண்ட் உங்களை மட்டும் ஒன்னும் சொல்றது இல்லையா?”
(ப்ரனிஷா ப்ரனேஷை சர்வேஷின் நண்பனாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்)
அவன் புரியாமல், “என்ன சொல்ற? யாரை சொல்ற?”
அவள் கடுமையாக முறைக்கவும் அவன், “நிஜமாவே எனக்கு எதுவும் புரியலை”
அவள், “என் மேஜையில் டைரி மில்க் சில்க் சாக்லேட் வைத்தது நீங்க தானே! ஸ்கூலில் உங்க வேலையை காட்டாதீங்க”
“அப்போ வெளியே ஓகே வா!”
அவள் முறைத்தாள்.
அவன், “ஹே! என்ன சொன்ன! சாக்லெட்டா! எனக்கு உன் டேபிள் எதுனே தெரியாது.. இதில் நான்………………………..” என்று சொல்லிக் கொண்டிருத்த போது, “எக்ஸ்கியுஸ் மீ மேம்” என்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருத்தி கூறினாள்.
ப்ரனிஷா, “சொல்லு ஸ்வேதா”
அவள் சின்ன டைரி மில்க் சாக்லெட்டை நீட்டியபடி, “இன்னைக்கு எனக்கு பர்த் டே மேம்” என்றாள்.
புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்ட ப்ரனிஷா, “ஹப்பி பர்த்டே” என்றாள்.
அந்த மாணவி, “உங்களுக்கு தான் முதலில் சாக்லெட் தரனும் நினைத்தேன்.. நீங்க வரலை.. மேக்ஸ் ஸ்பெஷல் கிளாஸ் டைம் ஆகிருச்சு னு உங்க டேபிளில் ஒரு சில்க் சாக்லெட் வச்சேன் மேம்”
ஒரு நொடி மனதினுள் அதிர்ந்தவள் தன்னை சமாளித்து, “பார்த்தேன்.. நீ தானா அது.. தேங்க்ஸ்.. அப்போ இது எதுக்கு?”
“அது கையில் தரலையே மேம்”
“பரவா இல்லை.. வேறு யாருக்காவது கொடு”
“அபி குட்டிக்கு கொடுங்க மேம்” 
“அதுவே பெருசா தான் இருந்தது.. அபிக்கு நான் அதிகம் சாக்லெட் தரது இல்லை.. இதை வேறு யாருக்காவது கொடு”
அரை மனதுடன் வாங்கியவள், ப்ரனேஷிடம் திரும்பி, “உங்களுக்கு நான் எடுத்துட்டு வரலை சார்.. சாரி.. இப்போ எடுத்துட்டு வரேன்” என்று திரும்ப,
அவன் புன்னகையுடன், “இப்போ தான் உன் கையில் இருக்கிறதே!”
அவள் சிறு தயக்கத்துடன், “அது மேம் வேண்டாம் னு சொன்னது”
“பரவா இல்லை.. அதையே கொடு” என்றவனது பார்வை அரை நொடி தன்னவளை பார்த்து மீண்டது. அவன் கண்ணில் இருந்த செய்தியில் அவள் சிறிது திணறினாள்.
அந்த மாணவி ப்ரனிஷாவை பார்க்க, அவள் தலையசைக்கவும் ப்ரனேஷிடம் கொடுத்தாள்.
அதை வாங்கியவன், “ஹப்பி பர்த்டே.. காட் ப்ளஸ் யூ” என்றான்.
“தன்க் யூ சார்” என்று புன்னகையுடன் கூறியவள் ப்ரனிஷாவிடம், “ஓகே மேம்.. நான் கிளாஸ் போறேன்”
“ஹ்ம்ம்” என்றதும் அந்த மாணவி கிளம்பினாள்.
ப்ரனேஷ் புருவம் உயர்த்தி ‘எப்பவும் உன் நினைப்பு என்னை பற்றி தானா! இப்ப என்ன சொல்ற!’ என்பது போல் பார்க்கவும் அவள் பதில் சொல்வறியாது திருதிருவென முழித்தாள்.
அதை பார்த்து அவன் சத்தமாக சிரிக்கவும் அவள் சட்டென்று அவன் வாயை தனது கரத்தால் மூடி சுற்றி முற்றி பார்த்தாள்.
தன்னவளின் முதல் ஸ்பரிசத்தில் அவன் ஒரு நொடி ஸ்தம்பித்தான். அடுத்த நொடியே வாய்ப்பை நழுவ விரும்பாமல் அவளது தளிர் கைகளில் லேசாக இதழ் பதித்தான்.
உடனே அதிர்ச்சியுடன் கையை விலக்கியவள் அவனை பார்த்தாள்.
தன்னை மீறி நடந்த ஒன்றுக்கு என்னவென்று விளக்கம் சொல்வது என்று அவன் தவிப்புடன் அவளை பார்க்க, அவளோ கலங்கிய விழிகளுடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement