Advertisement

இதழ் 20
அன்பரசி கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் அழைப்பு மணி அடிக்கவும் யாராக இருக்கும் என்ற யோசனையுடன் கதவை திறந்த ப்ரனிஷா ப்ரனேஷை கண்டு பெரிதாக அதிர்ந்தாள்.
 
அவன் புன்னகையுடன், “உள்ளே கூப்பிட மாட்டியா?”
 
அவள் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும் அவன், “இனியா” என்று அழைத்தான்.
 
அவள், “நான் ப்ரனிஷா.. முன்ன பின்ன தெரியாதவர்களை நான் உள்ளே அனுமதிப்பது இல்லை”
 
அவன் அவளை தீர்க்கமாக பார்க்கவும் பார்வையை தாழ்த்தினாள்.
 
தீர்க்கமான குரலில், “உன்னிடம் பேசாமல் நான் கிளம்பப் போவது இல்லை..” என்றவன் கைகளை கட்டிக் கொண்டு சற்று தள்ளி இருந்த சுற்றுச் சுவர் கதவருகே சென்று நின்று கொண்டான்.
 
சில நொடிகள் கழித்து அவள் மெல்லிய குரலில், “உள்ள வாங்க” என்றாள்.
 
அவன் மனதினுள் புன்னகைத்தாலும் வெளியே முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
 
ப்ரனிஷா அவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறினாள். ப்ரனிஷாவாக மட்டும் இருந்திருந்தால் அவனை சமாளித்து இருப்பாள் ஆனால் அவளோ இப்பொழுது இனியமலருக்கும் ப்ரனிஷாவிற்கும் நடுவில் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள்.
 
உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தவன், “நீயும் உட்காரு” என்றான்.
 
அவள் தயக்கத்துடன் அமரவும் அவன், “சுத்தி வளைத்து பேச விரும்பலை.. நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?”
 
“என்ன!!!!” என்று குரல் உயர்த்தி கேட்டவள் அதிர்ச்சியுடன் இருக்கையை விட்டு எழுந்திருந்தாள். சற்று முன் அன்பரசி பேசியது தான் என்றாலும் ப்ரனேஷ் வாயிலாக கேட்ட போது அதிரத் தான் செய்தாள்.
 
அவன் தீர்க்கமான குரலில், “நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் னு கேட்டேன்” என்றான்.
 
அவள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, அதிர்ச்சியில் விரிந்த அவளது விழியினுள் எப்பொழுதும் போல் விழத் துடித்த மனதை அடக்கி தீர்க்கமான பார்வையுடன், “என்ன?” என்று கேட்டு புருவம் உயர்த்தினான்.
 
அவள், “நான் திருமணமானவள்”
 
அவன் மென்னகை புரியவும் அவள் எரிச்சலுடன், “என்ன?”
 
“முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட இப்படி தான் கேட்பீங்களா னு கோபம் வரலை ஸோ நீ இனியமலர் தான் சரியா!”
 
“..”
 
“நீ இல்லை னு சொன்னாலும் அது தான் உண்மை.. சரி இப்போ நீ சொன்னதுக்கு வரேன்.. இப்போ நீ மிஸ் தானே!”
 
அவள் எரிச்சலுடன், “என்ன பேச்சு இது? எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்”
 
“உன் திருமணம் ரத்தாகி மூன்று வருடங்கள் ஆகிறது.. என் அம்மு அதாவது நம் அபிசாரா எப்படி உனக்கு கிடைத்தாள் என்று அனைத்தும் தெரிந்து தான் கேட்கிறேன்.. சொல் எப்போ திருமணம் செய்துக் கொள்ளலாம்”
 
அவனது ‘என் அம்மு’ மற்றும் ‘நம் அபிசாரா’ என்ற வார்த்தைகளில் முதலில் அதிர்ந்தவள் அடுத்த நொடியே கோபத்துடன், “அவள் என் மகள்.. எனக்கு மட்டும் தான் மகள்” என்றவள் சிறு நக்கல் குரலில், “என்னை பற்றி எல்லாம் தெரியுமோ?”
 
அவன் பதில் சொல்ல வருவதை பொருட்படுத்தாமல் அவள் குறையாத கோபத்துடன், “இன்னொருமுறை ஒரு ஆணின் கையில் என் வாழ்க்கையை கொடுக்க எனக்கு துளியும் விருப்பம் இல்லை”
 
“அந்த ஆண் நானாக இருந்தாலுமா?”
 
“நீங்க மட்டும் என்ன ஸ்பெஷல்?”
 
“நான் ஸ்பெஷல் இல்லையா?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.
 
அவள் தீர்க்கமான குரலில், “இல்லை” என்றாள்.
 
மனதினுள் ‘நீ ரொம்பவே கஷ்டப்படனும் போலவே டா!’ என்று சொல்லிக் கொண்டவன் அவளிடம், “ஒத்துக்கொள்கிறேன் சிறு வயது முதல் நீ அடைந்த கஷ்டங்கள் முழுவதும் எனக்கு தெரியாது தான்.. உன் முதல் திருமணம் ஏன் முறிந்தது என்றும் எனக்கு தெரியாது தான்.. ஆனால் நாகேஸ்வரி மற்றும் அந்த ரமேஷ்(அவளது முன்னால் கணவன்) உன்னை ரொம்ப காயப்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரியும்.. கூடவே உன் காயங்களுக்கு மருந்தாக இருந்து என் அன்பால் உன் பழைய வாழ்க்கையை மறக்கடிக்க என்னால் முடியும் என்று உறுதியாக தெரியும்”
 
“என் மனதை பற்றி என்னை விட உங்களுக்கு ரொம்ப தெரியும் போல!”
 
“ஒருத்தன் தப்பனவானா இருந்ததை வைத்து இன்னொரு ஆணை நம்ப தயாரில்லை னு சொல்லிரியே! ஏழு வருடங்களுக்கு முன் எனக்கு கிடைத்த ஏமாற்றத்தில் நான் எந்த பெண்ணையும் நம்பக் கூடாது”
 
ஒரு நொடி மனதினுள் அதிர்ந்தவள் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “நான் உங்களை ஏமாற்றவில்லை” என்று சிறு தவிப்புடன் கூறினாள்.
 
அவன் அமைதியான குரலில், “நான் ஏமாற்றம் னு சொன்னேனே தவிர நீ ஏமாற்றியதாக சொல்லவில்லையே!”
 
அவள் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தாள்.
 
அவன் அசையாத பார்வையுடன், “என்னை பற்றி உனக்கு எதுவும் தெரியாது.. என் போன் நம்பர் கூட உன்னிடம் இல்லை.. உன் சூழ்நிலை உன்னை அந்த முடிவை எடுக்க வைத்திருக்கும்.. நீ முடிவை எடுத்த என்று சொல்வதை விட அந்த முடிவிற்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டிருப்பாய் னு தான் சொல்லணும்” என்றான்.
 
அவனது புரிதலில் ஆச்சரியமடைந்தவளது மனம் ‘என் மேல் இவ்வளவு அன்பு வைக்காதே! நான் அதற்கு தகுதியானவள் இல்லை’ என்று கூவியது. மனம் கலங்கினாலும் வெளியே திடமாக நின்றாள். இந்த கலக்கம் அவனை நினைத்து அவனின் நல்வாழ்வை நினைத்து. 
 
சில நொடிகள் மௌனத்தில் கழிய அவன் தான் அதைக் கலைத்தான்.
 
அவன், “பழையதை பேசி உன் மனதை வருத்த எனக்கு விருப்பம் இல்லை தான் இருந்தாலும் இந்த ஒரே ஒரு முறை.. அன்றைய என் சூழ்நிலை மற்றும் மனநிலையை சொல்ல நினைக்கிறேன்.. 
அசோக் என்னுடைய நண்பன்.. நான் கேம்ப்பில் இருந்து வந்த அன்று தான் அவன் கல்யாணம்.. கண்டிப்பாக வர வேண்டும் என்று சொன்னதால் போனேன்.. திருமண அழைப்பிதழை கூட பார்க்காமல் வந்ததும் கிளம்பிச் சென்றேன்.. அங்கே மணப்பெண்ணாக உன்னை பார்த்த நொடியில் நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.. ஒரு நாள் முன்னாடி வந்திருந்தால் கூட நான் அவனிடம் பேசி உன்னை கல்யாணம் செய்திருப்பேன்.. அந்த கடைசி நொடியில் கூட நம் காதலை பற்றி சொல்லி இருந்தால் அவன் விலகி இருப்பான் ஆனால் அந்த நேரத்தில் அதிர்ச்சியில் என் மூளை வேலை செய்யவில்லை என்பது தான் உண்மை.. 
அங்கிருந்து நான் எப்படி என் அப்பா வேலை பார்த்த ஹாஸ்பிடல் போனேன்னு எனக்கே தெரியலை.. என் அப்பா மட்டும் இல்லை நான் இப்பொழுது உன் முன் ஒரு மனநோயாளியா தான் இருந்திருப்பேன்(அவள் பெரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்).. 
நம் இரண்டாவது சந்திப்பன்று ஆனால் சந்திப்பதற்கு முன்பே என் மனம் என் அப்பாவிற்கு தெரியும்.. 
நடைபிணமாக இருந்த எனக்கு மறுஜன்மம் கொடுத்து என் மேல் நம்பிக்கை வைத்து என்னை தனியாக லண்டன் அனுப்பினார்.
என் பெற்றோருக்காக என் மனதை தேற்றினாலும் உன்னை மறக்க என்னால் முடியவில்லை.. நாம் சந்தித்தது நான்கு முறை மட்டுமே ஆனால் அதன் நினைவுகள் மட்டுமே என்னை செலுத்தியது.. செலுத்துகிறது..”
 
இப்பொழுது கனத்த மௌனம் நிலவியது. இந்த முறை மௌனத்தை கலைத்தது ப்ரனிஷா. அவனுக்காக மனம் வருந்தினாலும் அவனின் நல்வாழ்விற்காக அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் பேசினாள்.
 
அவள் மெல்லிய குரலில், “ஒரு காலத்தில் நான் உங்களை விரும்பி இருக்கலாம்.. ஆனால் இப்போது என் மனதில் என் மகளை தவிர வேறு யாருக்கும் இடமில்லை.. ப்ளீஸ் என்னை தொந்தரவு செய்யாமல் கிளம்புங்க”
 
“நான் உன்னை தொந்தரவு செய்கிறேனா?” என்று அவன் வருத்தத்துடன் கேட்கவும்,
 
அவள், “ப்ளீஸ் நீங்க வேறு கல்யாணம் செய்துக்கோங்க” 
 
“என் வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது உன்னுடன் தான்” என்று உறுதியுடன் கூறியவன், “ஏழு ஆண்டுகளாக அம்மா கெஞ்சியும் அழுதும் இந்தியா வராத நான் இங்கே வந்ததிற்கு காரணம் நீ”
 
“எ..ன்..ன சொல்..றீங்க?” 
 
“என் நண்பன் ஒருவன் மூலம் அசோக்குடன் உனக்கு திருமணம் நடக்கவில்லை என்று தெரிந்ததும் இந்தியா வந்துவிட்டேன்.. நீ எங்கே இருக்கிற? எப்படி இருக்கிற? இந்த இடைப்பட்ட காலத்தில் உனக்கு திருமணம் நடந்ததா? என்று எதுவும் தெரியாது.. ஆனால் என்னால் அங்கே இருக்க முடியவில்லை.. மூச்சுவிடவே முடியாதது போல் தவித்தேன்.. இங்கே வந்த பிறகு என் தேடல் தோல்வியில் முடிந்தாலும் ஏதோ ஒன்று என்னை செலுத்தியது. அது நீ எனக்கே எனக்காக பிறந்தவள் என்று சொல்லியது.. ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் மூலம் உன்னை கண்டு பிடிக்க இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது.. 
நேற்று தான் அவர் உன்னை பற்றிய விவரங்களை அனுப்பினார் ஆனால் நீ கோயம்புத்தூரில் இருந்து எங்கு சென்றாய் னு கண்டுபிடித்து சொல்வதாக தான் சொன்னார்.. சர்வேஷிடம் பேசும் போது ஒரு நாள் உன்னை பற்றி சொல்லியிருந்தான்.. அந்த டிடெக்டிவ் அனுப்பியதில் நீ உன் பெயரை ப்ரனிஷா என்று மாற்றியதாக குறிப்பு இருந்தது. முதலில் கூட அந்த பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது னு தான் தோணியது.. அப்பறம் யோசித்த போது சர்வேஷ் சொன்னது ஞாபகம் வந்ததும் உடனே இங்கே கிளம்பி வந்துட்டேன்..” என்றவன் அவள் கண்களை ஆழ்ந்து நோக்கி, “என் பெற்றோருக்கு நான் உன்னை தேடி வந்திருப்பதும் தெரியும் உன் கடந்த காலம் பற்றியும் தெரியும்.. எப்பொழுது என் மனைவியாக நம் வீட்டிற்கு நீ வருவ னு காத்திட்டு இருக்காங்க”
 
அவள் தலையில் கை வைத்தபடி அமர்ந்தாள். அவன் தன்னிலை விளக்கம் சொல்ல ஆரம்பித்ததும் அவனுக்காக துடித்த மனம் இப்பொழுது கனத்தது. சில நொடிகள் நிமிஷங்கள் ஆக அவன் தண்ணீர் எடுத்து வந்து அவளுக்கு கொடுத்தான்.
 
அவனை நிமிர்ந்து பார்க்காமல் வங்கி பருகியவள் பின் அவனை பார்த்து, “ஒரு பெண் தனியாக வாழவே முடியாதா? ஏன் எல்லோரும் என்னை இப்படி கார்னர் பண்றீங்க?”
 
“எல்லோரும் னா என்ன சொல்ல வர? நானும் விமலும் ஒன்றா?”
 
“அவர் கூட பரவா இல்லை”
 
ஒரு நொடி கண்ணை மூடி மூச்சை இழுத்துவிட்டவன் அவளை தீர்க்கமாக பார்த்து, “நான் உன்னை இமோஷனல்லா கார்னர் பண்றதா நீ நினைக்கிற! ஆனா நான் என் மனநிலை பற்றி பத்து பெர்சென்ட் கூட சொல்லவில்லை..” என்று வெறுமையுடன் அவளை பார்த்தவன் பின் கனிவான பார்வையுடன், “இன்னும் கொஞ்ச நாளில் அம்மு வளர வளர நீ அதிகமாக பிரச்சனைகளை சந்திக்க நேரும்..” என்றவன் அவள் கண்களை ஆழ்ந்து நோக்கி மென்மையான குரலில், “வலிக்கிறது என்பதற்காக காயத்திற்கு மருந்து போடாமல் இருக்க முடியாது.. நீ இப்போ சந்தோஷமா வாழ்றியா? நிச்சயம் இல்லை.. சந்தோசம் என்ற கனியை இதுவரை உன் வாழ் நாளில் நீ சுவைத்ததே இல்லை.. 
மனம் ஒத்த இனிமையான வாழ்வை ஏன் நாம வாழக் கூடாது? எனக்கு ஒரு வாய்ப்பு கொடு ப்ளீஸ்”
 
“ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க என் மனதில் என் மகள்…………………..”
 
“நீ தான் புரியாமல் பேசுற.. என்னை மட்டுமில்லை உன் மனதையும் நீ புரிந்துக்கொள்ள வில்லை”
 
“ஒரு காலத்தில் நான் உங்களை விரும்பி இருக்கலாம்……………”
 
“அது கடந்த காலம் இல்லை”
 
“இல்லை அது கடந்த காலம் தான்” 
 
“நிச்சயம் இல்லை.. உன் திருமணத்திற்கு முன் என் மீதான காதலை உன்னுள் புதைத்ததாக நீ நினைக்கலாம் ஆனால் அது நீர் பூத்த நெருப்பாக இன்றும் உன்னில் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது”
 
“நிச்சயம் இல்லை.. உளறாமல் கிளம்புங்க” என்று கோபத்துடன் கூறி கதவை நோக்கி கையை காட்டினாள்.
 
அவன், “இப்போ நான் கிளம்புறேன் ஆனால் நிச்சயம் திரும்ப வருவேன்.. நான் சொன்னதை யோசித்துப்பார்.. நான் சொன்னதிற்கு வலுவான சாட்சி உன் பெயர்.. என்ன பார்க்கிற! எத்தனையோ பெயர்கள் இருக்க ‘ப்ரனேஷ்’ என்ற என் பெயரை ஓட்டி ‘ப்ரனிஷா’ என்று நீ உன் பெயரை மாற்றிக் கொண்டதிலேயே உன் மனதில் நான் எவ்வளவு ஆழமாக கல்வெட்டில் பதிந்தது போல் பதிந்து இருக்கிறேன் என்று தெரிகிறது” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான்.
 
அவன் கூறிச் சென்ற செய்தியில் அவள் அதிர்ச்சியுடன் வாயடைத்துப் போய் அமர்ந்தாள். எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்து இருந்தாளோ அன்பரசி அபிசாராவுடன் வந்ததும் மகளுக்காக சிரித்து பேசினாலும் அவள் மனதினுள் ப்ரனேஷ் கூறிச் சென்ற விஷயமே ஓடிக் கொண்டிருந்தது. அன்பரசி அவளை தொந்தரவு செய்யாமல் உடனே கிளம்பிவிட்டாள்.
 
மகளை குளிப்பாட்டி உணவுண்ண வைத்து தூங்கவைத்தவள் உறக்கமின்றி படுத்திருந்தாள். விடியலின் போது ஒரு முடிவிற்கு வந்திருந்தாள். அது அவள் ப்ரனேஷை மறுமணம் செய்யக் கூடாது என்பது தான். 
 
ப்ரனேஷ் மீதான தனது நேசத்தை அவள் புரிந்துக் கொண்டாலும் அவனது நல்வாழ்வை கருதியே இந்த முடிவை எடுத்து இருந்தாள். நெஞ்சின் ஓரம் ஒரு வலி இருந்தாலும் இந்த முடிவை செயல் படுத்தும் உறுதியுடன் இருந்தாள்.
 
ப்ரனிஷாவின் உறுதி நிலைத்து இருக்குமா இல்லை ப்ரனேஷை கண்டதும் பனிக்கட்டியாக கரைத்து விடுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். 


அன்று பள்ளிக்கு சென்றதும் அவள் கண்கள் அவளையும் மீறி ப்ரனேஷை தேடியது. அவன் கண்ணில் படவில்லை என்றதும் நிம்மதியாகவும் இருந்தது வருத்தமாகவும் இருந்தது. அன்று மட்டுமில்லாமல் அடுத்து வந்த இரண்டு நாட்களும் அவனை காணவில்லை என்றதும் அவள் அவனை தேடத்தொடங்கியதில் தன் மனதை முழுவதுமாக புரிந்துக் கொண்டவள் அதிர்ந்தாலும் முடிவை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. 
 
ப்ரனேஷ் சென்ற மூன்றாவது நாள் மாலை அன்பரசி, “மூணு நாளா ரொம்ப அமைதியா இருக்கிற.. மனதை போட்டு என்ன குழப்பிட்டு இருக்கிற?”
 
“அப்படியெல்லாம் இல்லை”
 
“நீ அவரை மிஸ் பண்றியா?”
 
ப்ரனிஷா உணர்ச்சியற்ற பார்வையை பார்க்கவும் அவள், “இல்லை அன்னைக்கு நான் அபியை கூட்டிட்டு வந்தப்போ அவர் உன் வீட்டில் இருந்து கிளம்பினதை பார்த்தேன்.. அதான்…”
 
“எனக்கு என் மகள் மட்டும் போதும்”
 
“அவளுக்கு பின்”
 
“..”
 
“உன் மனதில் என்ன நினைக்கிற? என்னிடமாவது சொல்லக் கூடாதா?”
 
“..”
 
“அன்னைக்கு அவர் என்ன சொன்னார்?”
 
ப்ரனேஷ் பேசியதை கூறியவள், “இப்படி ஏழு வருஷமாக என்னை நினைத்துக் கொண்டு தனியாக இருப்பார் னு நான் எதிர் பார்க்கவே இல்லை.. அவர் அவரோட மனநிலையை பத்து பெர்சென்ட் கூட சொல்லலை னு சொன்னார்.. இதை கேட்டே என் மனம் கனத்துப் போயிருக்கிறது..”
 
அன்பரசி மனதினுள்  ‘மாம்ஸ் என்னா போடு போட்டிருக்கீங்க! செம்ம! இவள் பெயரை பற்றி நான் யோசிக்கவே இல்லை.. நீங்க சொன்னது போல் இவளுக்கே இவள் மனது தெரியவில்லை.. இவள் தனக்குத் தானே கட்டியிருக்கும் கோட்டையை சீக்கிரம் உடைத்து இவள் மனதினுள் கொடியை நடுங்க மாம்ஸ்’ என்று கூறிக் கொண்டாள்.
 
அன்பரசி, “என்ன முடிவு பண்ணியிருக்க?”
 
“அவர் சொன்னது போல் என் மனம் அவரை மறக்காமல் இருக்கலாம் ஆனா என்னால் அவரை கல்யாணம் செய்துக்க முடியாது”
 
“ஏன் நீ அவரை கல்யாணம் பண்ண தயங்கிற? உன் முதல் கல்யாணத்தை நினைத்து தயங்குறியா?”
 
“மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை.. ப்ளீஸ் அதை பற்றி பேசாதே”
 
“உனக்காக இல்லைனாலும் அவருக்காகவும் அபிக்காகவும்……………..” 
 
“ப்ளீஸ் இதை பற்றி இதற்கு மேல் பேசாதே”
 
“ஒன்னே ஒன்னு சொல்றேன்.. அவர் நிச்சயம் வேறு கல்யாணம் செய்துக்க மாட்டார்.. இதய மருத்துவரான அவரை இதய நோயாளியா மாற்றிவிடாதே”
 
“அன்பு!” என்று அவள் அதிர்வுடன் அழைத்தாள்.
 
அன்பரசி அமைதியாக அவளை பார்க்கவும் அவள் படபடப்புடன், “நானே இந்த மூன்று நாளா அவர் வராததால் அவருக்கு ஏதும் ஆகியிருக்குமோனு பயத்தில் இருக்கிறேன்.. நீ இப்படி பேசாதே”
 
அன்பரசி அவள் தோளை தட்டி தண்ணீர் பருக கொடுத்து, “ரிலாக்ஸ்.. அவருக்கு ஒன்றுமிருக்காது”
 
இரண்டு நொடிகள் அமைதியாக இருந்தவள், “அன்பு அவரை பற்றி சர்வேஷ் சாரிடம் கேட்டுச் சொல்றியா?”
 
“நானா!!!”
 
“ப்ளீஸ்”
 
“சாரி ப்ரனிஷா.. சர்வேஷ் சாரிடம் என்னால் பேச முடியாது.. நீயே கேளேன்”
 
“ச்ச்”
 
“சர்வேஷ் சாரிடம் பேச உனக்கென்ன தயக்கம்? நீ தயங்க மாட்டியே!”
 
“நான் விசாரித்தால் அதை பற்றி சர்வேஷ் சார் அவரிடம் சொன்னால் அவருக்கு தேவை இல்லாத ஹோப் கொடுத்தது போல் ஆகிவிடும்”
 
“நான் கேட்டால் மட்டும் தெரியாதுனா நினைக்கிற!”
 
“ஹ்ம்ம்.. அதுவும் சரி தான்.. எனக்காக தான் கேட்கிற னு ரெண்டு பேருமே கண்டு பிடிச்சிருவாங்க” என்றவள் பெருமூச்சொன்றை வெளியிட்டு, “சரி விடு” என்றாள்.
 
அன்பரசி, “இவ்வளவு தவிக்கிறவள் அவரை கல்யாணம் செய்தால் தான் என்ன?”
 
“இதை பற்றி பேசாதே னு சொன்னேன்”
 
“முன்பே வேறு யாரையும் கல்யாணம் செய்துக்காதவர் இப்போ செய்வார் னு நினைக்கிறியா?”
 
“நான் அவர் மனதை மாற்றுவேன்”
 
“உன் மனதை மாற்றினால் உனக்கும் அபிக்கும் நல்லது.. அவருக்கும் கூட நல்லது..”
 
“ப்ளீஸ் அன்பு”
 
“ச்ச்.. போடி” என்று அலுத்துக் கொண்டாள்.



இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement