Advertisement

  ப்ரனேஷின் மனம் எப்பொழுதும் போல் அன்றும் ‘உன் கண்கள் என்னை கண்டதும் மின்னியதே! அதில் என் மீதான பிடித்தம் கண்டேனே! அது பொய்யா! எப்படி என்னை விட்டு செல்ல மனம் வந்ததடி?’ என்று புலம்பியது. 
உறங்க மறுத்த மனதை தான் அறுவை சிகிச்சை செய்ய விருக்கும் குழந்தையை முன் நிறுத்தி அடக்கினான். ஒருவாறு தூங்கி எழுந்து கிளம்பியவன் மருத்துவமனை சென்றதும் மனதின் வலியை மறந்து முழு மருத்துவனாக மாறினான். 
திருநெல்வேலி ரயில் நிலையத்தின் தலைவரிடம் விசாரித்து அருகே இருந்த நல்ல விடுதி ஒன்றில் அறையை பதிவு செய்த ப்ரனிஷா அபிசாராவுடன் குளித்து கிளம்பினாள். அந்த விடுதியில் இருந்த உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு தனது கல்வி சான்றிதழ்கள் அடங்கிய ஒரு கோப்பியத்துடனும் மகளுக்கு தேவையான தண்ணீர், பால் மற்றும் பிஸ்கட் அடங்கிய மகளிர் கைபையை(handbag) எடுத்துக் கொண்டு மகளுடன் கிளம்பியவள் பேருந்தில் ஏறி சென்ற இடம் ஒரு பள்ளி. அது சர்வேஷின் பள்ளி.
அந்த பள்ளி காவலனிடம் விசாரித்து அந்த பள்ளியின் உரிமையாளர் வீட்டிற்கு சென்றாள். 
அவள் வீட்டிற்கு செல்லவும் சர்வேஷ் பள்ளி வந்தடையவும் சரியாக இருந்தது.
வீட்டு காவலாளி, “யாரை பார்க்கணும்?”
“சாரதா மேடம்”
அவளது உடையையும் குழந்தையையும் பார்த்தவன் சதகம் ஏதுமின்றி உள்ளே செல்ல அனுமதித்தான்.
அவள் உள்ளே சென்று வீட்டு உள் வாயிலை அடையவும் ஒரு வேலையாள், “சார் இப்போ தான் வெளியே போனாங்க”
“நான் சாரதா மேடம் பார்க்க வந்தேன்”
“உங்க பெயர்?”
“ப்ரனிஷா.. ரோஸ்மேரி மேடம் அனுப்புனாங்க னு சொல்லுங்க”
“சரி.. இங்கே உட்காருங்க” என்று வீட்டு தாழ்வாரத்தில் இருந்த இருக்கையை காட்டிவிட்டு சென்றார்.
இரண்டு நிமிடங்களில் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வரவும் ப்ரனிஷா கை கூப்பியபடி எழுந்து நின்று, “வணக்கம் மேடம்” என்றவள் ஒரு கடிதத்தை நீட்டி, “இதை மேரி மேடம் கொடுத்தாங்க”
அதை பிரித்து படித்தவர் புன்னகையுடன், “இன்னைக்கு இண்டர்வியு இருக்கிறதா என் பையன் சொன்னான்.. அவனை போய் பாரு.. பெயர் சர்வேஷ்”
“இண்டர்வியு எந்த கிளாஸுக்கு மேடம்?”
“நாலஞ்சு சொன்னான்.. டுவெல்த் பயோலாஜி உனக்கு சரி வரும்.. ரோஸி என் க்ளோஸ் பிரெண்ட்.. அவ உனக்கு வேலை வாய்ப்பு தான் தர சொல்லி இருக்கிறாள்.. அதில் இருந்தே உன் திறமை எனக்கு புரியுது.. நிச்சயம் நீ செலக்ட் ஆவ.. ஆல் தி பெஸ்ட்”
ப்ரனிஷா சிறு புன்னகையுடன், “தன்க் யூ மேடம்” என்றாள் பிறகு சிறு தயக்கத்துடன், “என்னிடம் எக்ஸ்பிரியன்ஸ் செர்டிபிகேட் இல்லை”
“அதையும் பற்றி சொல்லி இருக்கிறாள்.. நான் என் மகனிடம் பேசிக்கிறேன்”
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்”
“இப்போ எங்கே தங்கி இருக்கிற?”
“இன்னைக்கு காலையில் தான் வந்தேன்.. இங்கே யாரையும் எனக்கு தெரியாது.. ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டு XXX ஹோட்டலில் ரூம் போட்டிருக்கிறேன்.. இனி தான் வீடு பார்க்கணும்..”
“பொண்ணு பெயரென்ன?”
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த குழந்தை, “ஏ பேர் அபிசாரா” என்றது.
சாரதா புன்னகையுடன் குழந்தையை தூக்கி, “உங்க வயசென்ன?”
“அப்தினா?” என்று குழந்தை வினவ ப்ரனிஷா சிறு புன்னகையுடன், “ரெண்டேகால் வயசு”
சாரதா, “அம்மா கூட சேர்ந்து நீங்களும் ஸ்கூல் போறீங்களா?”
“எப்பவும் அப்தி தான் போவேன்” என்று குழந்தை கூற, ப்ரனிஷா, “பழைய ஸ்கூலில் ஸ்டாஃப் குழந்தைகளை பார்த்துக்க அங்கேயே ஏற்பாடு செய்து இருந்தாங்க”
“இங்கேயும் இருக்கிறது”
ப்ரனிஷா முகத்தில் எதை கண்டாரோ, அவர், “அது என் கண்ட்ரோல் தான்.. நீ தரும் விவரங்கள் என்னை தான்டி வெளியே போகாது”
அவள் வார்த்தைகளின்றி அவரை பார்க்க, அவர் சிறு புன்னகையுடன் அவளது தோளை தட்டிக் கொடுத்தார்.
அவர், “சரி.. இண்டர்வியு நேரம் ஆகுது.. போயிட்டு வா.. வீடிற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்”
குழந்தையை வாங்கியபடி, “இல்லை மேடம்.. அது நானே…………..”
“நான் பெருசா எதுவும் செய்ய போறதில்லை.. வீட்டில் வேலை செய்றவங்க கிட்ட கேட்டு சொல்றேன்”
“சரி மேடம்.. இண்டர்வியு அட்டென்ட் பண்ணிட்டு வரேன்”
“அபியை அங்கே க்ரஷில் விட்டுட்டு போ.. நான் போன் பண்ணி சொல்லிடுறேன்”
“சரி மேடம்.. வரேன்” என்று கூறி கிளம்பினாள்.
பள்ளிக்கு சென்றவள் சாரதா கூறியது போல் அங்கே இருந்த குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு சென்றாள். அதிக கூட்டம் இருந்ததால் அவளை உள்ளே அழைத்த போது மணி மதியம் 1. 
    நான்கு மணி நேரம் போராடி வெற்றிகரமாக ஆறுவை சிகிச்சை செய்து முடித்து வெளியே வந்த ப்ரனேஷின் முகத்திலும் உடலிலும் இருந்த சோர்வு அந்த குழந்தையின் பெற்றோர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் மறைந்தது. அவர்களின் நன்றியை சிறு புன்னகையுடன் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு நம்பிக்கையான வார்த்தைகளை கூறி தன் அறைக்கு சென்றான்.  
ப்ரனேஷ் அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு தனது அறைக்கு சென்ற அரை மணி நேரம் கழித்து அவனது அன்னை கைபேசியில் அழைத்தார்.
“சொல்லு மா”
“நீ தான் டா சொல்லணும்”
“ச்ச்.. அம்மா இப்போ தான் மா ஆப்ரேஷன் முடிச்சிட்டு வந்து உட்காருறேன்.. அப்………….”
“நீ உன் ரூமுக்கு வந்து அரை மணி நேரம் ஆச்சு”
அவன் மனதினுள் அன்னையிடம் தன்னை மாட்டி விட்ட தோழி ஜஸ்மின்னை திட்டிவிட்டு பல்லை கடித்துக் கொண்டு, “அம்மா” என்றான்.
“என்னடா?”
“ஏன் மா இப்படி டார்ச்சர் பண்ற?”
“அம்மா அப்பாவை வந்து பார்க்கிறது உனக்கு டார்ச்சரா?” 
“அதான் ஸ்கைப்பில் பார்க்கிறோமே!”
“இப்போ இந்தியா வர முடியுமா முடியாதா?”
“பிறந்த நாள் அன்னைக்கும் ஏன் மா படுத்துற?”
“உன் பிறந்த நாள் பரிசா நீ இங்கே வரேன் னு சொல்லு”
“என் பிறந்த நாளுக்கு நீ தான் பரிசு தரனும்…………………….”
“வர முடியுமா முடியாதா?”
“நான் செய்ய வேண்டிய ஆப்ரேஷன்ஸ் நிறைய இருக்கிறது”
“வேற வேற நாட்டில் இருந்து உன்னை தேடி அங்கே வந்து பண்றவங்க இந்தியா வந்து பண்ண மாட்டாங்களா?”
“அங்கே……………”
“அப்பா உனக்குன்னு நீ சொல்ற வசதிகளுடன் கட்டிட்டு இருக்கிற ஹாஸ்பிடல் இன்னும் மூணு வாரத்தில் முடிந்து விடும்……………………….”
“நான் கேட்டேனா?”
“உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறார்?”
“ச்ச்”
“இன்னும் ஒரு மாசத்தில் அந்த ஹாஸ்பிடலை திறக்கணும் னு நான் சொல்லிட்டேன்.. திறப்பு விழா தேதியை அப்பா நாளைக்கு அனௌன்ஸ் பண்ணிடுவாங்க.. அதுக்கு நீ இங்கே இருக்கிற.. அதுமட்டுமில்லை.. இனி நீ இங்கே தான் இருக்கிற.. உன் திறமையை தேடி ஆட்கள் இங்கே வருவாங்க.. உன்னுடைய முக்கியமான அப்பாயின்மென்ட்ஸ் ஒரு மாதம் வரை தான் உறுதி செய்ய பட்டிருக்கிறது.. ஸோ ஒரு மாசம் தான் உனக்கு டைம்..”
“நான் வர மாட்டேன்”
சில நொடிகள் மெளனமாக இருந்தவர் அமைதியான உறுதியான குரலில், “நீ வருவ” என்றார்.
“மாட்டேன்”
“திறப்பு விழாக்கு வேணா வராம இருப்ப ஆனா என் கருமாதிக்கு கூடவா வராம இருப்ப?” என்றவர் அவன் பதில் கூறும் முன் அழைப்பை துண்டித்திருந்தார்.
அன்னையின் கூற்றில் பெரிதும் அதிர்ந்தவன் அவரை அழைத்தான். அவர் அழைப்பை எடுக்க வில்லை.
ப்ரனேஷின் தந்தை ஆனந்தன் அவனது அன்னை அமுதாவிடம், “நீ பேசியது ரொம்ப தப்பு”
“..”
“எனக்கும் அவன் இங்கே வரணும் னு ஆசை தான் ஆனால் அவனை இப்படி நிர்பந்தப்படுத்தி வர வைப்பதில் விருப்பம் இல்லை.. அதுவும் இன்று நீ பேசியது…………..”
“எனக்கு வேற வழி தெரியலை..”
“அதுக்குன்னு இப்படியா பேசுவ?”
“இதுவரை என்னைக்காவது இப்படி பேசியிருக்கிறேனா?”
“இப்போ மட்டும் ஏன் இப்படி?”
“இப்போ அவனுக்கு வயசு முப்பத்திமூணு.. சின்ன வயசுலேயே புகழின் உச்சியை எட்டிவிட்டான்.. ஆனால் அவனது சொந்த வாழ்க்கை?”
“என்ன தான் நீ காரணம் சொன்னாலும் அவனிடம் பேசியது ரொம்ப தப்பு.. நீ அவனது மனசை மட்டும் காயபடுத்தலை.. பல உயிர்களுடன் விளையாடுற.. என்ன பார்க்கிற! எந்த ஒரு சர்ஜனுக்கும் மனநிலை நன்றாக இருப்பது முக்கியம் அதுவும் ஹார்ட் சர்ஜனுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.. முதல்ல அவனிடம் பேசு.. இந்த பத்து நிமிஷத்தில் எத்தனை முறை போன் பண்ணிட்டான்”
“நீங்க பேசுங்க”
“இப்போ நீ பேசலை நான் உன்னிடம் பேசுவது இது தான் கடைசி”
அமுதா கணவரை முறைத்துவிட்டு மகனை அழைத்தார். அவன் அழைப்பை எடுத்ததும், “நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்……………….”
“கொஞ்சம் இல்லை மா ரொம்ப அதிகமா……………………” என்று அவன் பேசியதை கவனிக்காதது போல் அமுதா தொடர்ந்து பேசினார்.
“சாரி.. நான் உன்னை கஷ்டபடுத்தனும் னு சொல்லலை…………”
“அப்பா பக்கத்துல தான் இருக்காரா?”
“ஹ்ம்ம்..”
“அப்போ இந்த சாரி அப்பாவுக்காக”
“..”
“..”
“சாரி”
“சும்மா சாரி சொன்னதுக்காக சாரி யா?”
“நிஜமாவே சாரி கண்ணா.. நான்.. நான்.. அப்படி பேசணும்னு நினைக்கலை ஆனா ஏதோ ஒரு வேகத்தில் பேசிட்டேன்.. அது தப்புன்னு தெரிந்தாலும் நீ இங்கே வந்துவிட மாட்டியா என்ற எண்ணத்தில் தான்…………………” என்று அவரது குரல் கலங்கவும்,
“புரியுது மா.. விடுங்க”
“நீ இங்கே வந்திருவ தானே”
“..”
“போடா” என்றவர் அழைப்பை துண்டித்துவிட்டு அறைக்கு சென்றார்.
மகனை அழைத்த ஆனந்தன் அவன் அழைப்பை எடுத்ததும், “நீ எப்போ வரணும் நினைக்கிறியோ அப்போ வா…………….”
“அப்பா……………”
“இரு நான் பேசி முடிச்சிக்கிறேன்.. எதனால் நீ இங்கே வர மறுக்கிறாய்? அம்மா உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றது இயல்பான விஷயம் தான்.. அதில் உனக்கு விருப்பம் இல்லை என்றால் அதை சமாளிக்க உன்னால் முடியாதா?” என்றவர் ஏதோ சொல்ல வந்து நிறுத்தவும்,
அவன், “என்ன பா?”
“ஒன்றுமில்லை”
“சொல்லுங்க”
“இதை சொல்ல வேண்டாம் னு நினைத்தேன் ஆனால்..  எனக்கு நீயும் முக்கியம் உன் அம்மாவும் முக்கியம்.. சிறந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவனான நீ உன் அம்மாவை இதய நோயாளியா மாத்திராத”
“ரெண்டு பேரும் இப்படி இமோஷனல் ப்ளக்மெயில் பண்றீங்க”
“நான் உண்மை நிலவரத்தை சொன்னேன்.. நானும் நீயும் தான் அவ உலகம்.. உன்னை ரொம்ப மிஸ் பண்றா.. உன்னை பற்றிய கவலை அவளுக்கு அதிகமா இருக்கிறது.. நீ இங்கே அவளுடன் இருந்தால் அது குறையும்னு நான் நினைக்கிறேன்.. அப்பறம் உன் இஷ்டம்”  
“ச்ச்” என்று எரிச்சலுடன் அழைப்பை துண்டித்தவன் தனது தோழி ஜாஸ்மின்னை இண்டர்காம் மூலம் அழைத்தான்.
ஜாஸ்மின், “ஜஸ் ஹியர்”
“என் ரூமுக்கு உடனே வா” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
ஐந்து நிமிடங்களில் ஜாஸ்மின் அவன் அறைக்கு வந்தாள்.
அவன் முறைக்கவும் அவள், “என்ன டா?”
“உனக்கு சம்பளம் ஹாஸ்பிடல் கொடுக்குதா என் அம்மா வா?”
“நீ தெளிவா பேசினாலே எனக்கு புரியாது இதுல புரியாத மாதிரி பேசினா!”
அவன் கடுமையாக முறைக்கவும் அவள், “இந்த முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. விஷயத்தை ஒழுங்கா சொல்லு டா”
“என் செடியுள் என்ன? நான் எப்போ ஆபிரஷன் பண்றேன்.. எப்போ ரூமுக்கு வரேன்னு புள்ளி விவரம் சொல்றதுக்கு அம்மா தனியா சம்பளம் தராங்களா?”
‘பயபுள்ள இதான் கடுப்பில இருக்குதா!’ என்று மனதினுள் கூறியவள் அவனிடம், “உன் அம்மா கிவ் அண்ட் டேக் பாலிஸியில் தெரிஞ்சுகிட்டாங்க”
“என்ன?”
“அதான் போட்டு வாங்குறது”
“என்ன கேட்டாங்க?”
“உனக்கு போன் பண்ணாங்களாம் நீ எடுக்கலையாம்.. நீ ஆபிரஷனில் இருக்கியா னு கேட்டாங்க.. இல்லையே அரை மணி நேரம் முன்னாடியே முடிஞ்சிருச்சே னு சொன்னேன்.. அப்பறம் இப்பலாம் உன்னிடம் பேசவே முடிறது இல்லையாம் ரொம்ப பிஸியா? ஒரு நாளைக்கு எத்தனை ஆபிரஷன் பண்ற? சாப்பிடுறியா? தூங்குறியானு பாசமா பல பிட்டுகளை போட்டு நடுவில எனக்கே தெரியாம உன் ஒரு மாத செடியுள் பற்றி கேட்டு தெரிஞ்சு கிட்டாங்க..”
“…”
“பேசாம உன் அம்மா சைக்காட்ரிஸ்ட் ஆ ப்ராக்டிஸ் பண்ணலாம்”
அவன் மெல்லிய புன்னகையுடன், “சிறந்த சைக்காட்ரிஸ்ட் மனைவி ஆட்சே!”
“அப்பா சிரிச்சிட்டியா! உன் அம்மா பற்றி தெரிந்தும் ஒரு பச்சை பிள்ளையை இப்படி மிரட்டலாமா!”
“நீ பச்சை பிள்ளையா! மார்க் கேட்டான்…………”
“அவனுக்கு எப்போதும் நான் பச்சை பிள்ளை தான்”
“அப்பறம் எப்படி ரெண்டு பச்சை பிள்ளைகள் வந்தது”
“ஏய்!” என்று ஆள்காட்டி விரலால் மிரட்டியவள், “மார்க் கூட சேர்ந்து இப்பலாம் நீயும் ‘A’ ஆ பேசுற” என்றபோது உள்ளே வந்த மார்க், “என்ன என் பெயர் அடிபடுது” என்று ஆங்கிலத்தில் வினவினான். (ஜாஸ்மின் இந்திய தமிழ் பெண் ஆனால் அவள் கணவன் மார்க் லண்டன் குடிமகன்)
அவர்களது ஆங்கில உரையாடலை தமிழில் தருகிறேன்……
ஜாஸ்மின் மார்க்கின் தோளில் தொங்கியபடி, “இவன் என்னை ரொம்ப மிரட்டுறான்” என்று செல்லம் கொஞ்சினாள்.
மார்க் போலி கோபத்துடன், “என் செல்லத்தை எதுக்கு மிரட்டுற?”
ப்ரனேஷ் மெல்லிய புன்னகையுடன், “மிரட்டலை.. ஒரு சந்தேகம் கேட்டேன்”
“என்ன?”
“அவ பச்சை பிள்ளையாம்.. அதான் இந்த பச்சை பிள்ளையை கல்யாணம் செய்து எப்படி நீ இரண்டு பிள்ளைகளை பெற்றாய் னு கேட்டேன்”
மார்க் விஷம புன்னகையுடன், “ஜஸ் எதையும் ஒருமுறை சொல்லி கொடுத்தா நச்சுன்னு புரிஞ்சுப்பா” என்றவன் அவளை பார்த்து கண்சிமிட்ட, அவள் மார்க் தலையில் கொட்டி, “போங்க டா” என்று தமிழில் கூறிவிட்டு வெளியே சென்றாள். 
மார்க், “என்ன முடிவு பண்ணி இருக்க?”
ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்ட ப்ரனேஷ், “யோசிக்கணும்”
“இந்தியா போறதில் உனக்கு என்ன பிரச்சனை?”
“…”
“உன்னை என்ன கையை காலை கட்டியா கல்யாணம் செய்துக்க சொல்ல போறாங்க?”
“கண்ணுக்கு தெரியாத பாச விலங்கால் கட்டுவாங்க”
“என்ன சொல்ற?”
“ச்ச்.. உனக்கு புரியாது”
“ஜஸ் கூட எங்க கல்யாணம் முன்னாடி இப்படி பேசினா! ஏன் இந்தியர்கள் இப்படி இருக்கிறீர்கள்? உன் வாழ்க்கையை நீ தானே வாழ போற! அதை ஏன் உன் பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள்?”
“இந்த பாச பிணைப்பையும் உன்னால் புரிந்துக்கொள்ள முடியாது” என்று மென்னகையுடன் ப்ரனேஷ் கூற மார்க் தோளை குலுக்கினான். 
அப்பொழுது அறுவை சிகிச்சை அறையில் இருந்து ப்ரனேஷிற்கு அவசர அழைப்பு வரவும் அவன் வேகமாக எழுந்து சென்றான்.
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement