Advertisement

இதழ் 19
அசோக்கின் அன்னை சரிந்ததும் மீண்டும் கூட்டம் பரபரப்பாக, மருத்துவர் பரிசோதித்து அவரும் உயிருடன் இல்லை என்று கூறவும் அசோக்கின் தந்தை இடிந்து போய் அமர்ந்தார்.
ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் உயிருடன் இருப்பான் என்று கூறிய மகனின் திடீர் மரணம் அசோக்கின் அன்னையை வெகுவாக தாக்க அவரின் இதயம் தன் இயக்கத்தை நிறுத்தியது.  
அசோக்கின் உடல் நிலை மறைக்கப்பட்டு அவனது சாவிற்கு இனியமலரின் ராசி தான் காரணம் என்று பறை சாற்றப் பட்டது. கூடவே அசோக் தாயின் இறப்பு அதிக பேச்சிற்கு இடம் வகுத்தது.
இனியமலர் உறைந்து போய் அமர்ந்திருந்தாள். 
அதற்கும், “பாரு! ஒன்னுக்கு இரண்டு உயிர் போயிருக்கிறது.. ஆனா இந்த பொண்ணு கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்குது!!” என்று பேசினார்கள்.
இனியமலருக்கு ஆதரவாக பேசப் போன அவந்திகாவை நாகேஸ்வரி தடுத்துவிட்டார். அதிகம் பேசாத செந்தில்குமார் மற்றவர்கள் பேச்சில் தலை குனிந்து நின்றதோடு ‘இவர்கள் சொல்வது போல் மகள் ராசி தான் இதற்கு காரணமோ’ என்று கூட நினைத்தார்.
வக்கீல் தான், “சும்மா வாய்க்கு வந்ததை பேசாதீங்க மா.. அந்த பொண்ணோட  துயர் உங்களுக்கு என்ன தெரியும்! இவங்க விதி முடிந்தது இவங்க போய்ட்டாங்க.. அதுக்கு மலர் என்ன செய்வா?”
அதற்கு அசோக் உறவினர் ஒருவர், “இவ்ளோ பேசுறியே நீ உன் மகனை இந்த பொண்ணை கல்யாணம் செய்துக்க சொல்வியா?”
“எனக்கு மகன் இருந்திருந்தால் நிச்சயம் அதை செய்திருப்பேன்”
“சும்மா இந்த வாய் செவடால் விடாதே!”
அப்பொழுது அசோக்கின் தந்தை, “விடுங்க மச்சான்.. அடுத்து ஆக வேண்டியதை பார்க்கலாம்” என்றதும் முணுமுணுப்புடன் கூட்டம் கலையத் தொடங்கியது.
நாகேஸ்வரியின் உறவுகள் இனியமலரின் காது படவே அவளது ராசியை பற்றி பேசி அவள் மனதை மேலும் மேலும் ரணமாக்கினர்.
கீதா தோழியின் கையை இறுக பற்றியபடி, “இவங்க பேசுறது எதையும் கண்டுக்காதே! உன்னை காயப்படுத்தும் நோக்கத்துடன் பேசுறவங்க.. இத்தனை வருஷம் உன்னுடன் தானே இருக்கிறேன்.. நான் நல்லா தானே இருக்கிறேன்.. இவ்வளவு ஏன் உன் அப்பாவோ சித்தியோ தங்கையோ நல்லா தானே இருக்காங்க” என்று பல ஆறுதல்களை கூறிக் கொண்டே இருந்தாள் ஆனால் இனியமலர் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.
வக்கீல் கிளம்புவதற்கு முன், “என்னுடன் வரியா?” என்று கேட்க அவள் மறுப்பாக தலையை அசைத்தாள்.
அவர் கீதாவிடம், “பார்த்துக்கோ மா” என்று கூறி தனது அடையாள அட்டையை கொடுத்து, “உதவி தேவை என்றால் தயங்காம கூப்பிடு மா” என்று கூறிச் சென்றார்.
கீதா இனியமலருடன் அவள் வீட்டிற்கு கிளம்பிய போது நாகேஸ்வரி, “நீ எதுக்கு வர! நாங்க பார்த்துப்போம்”
“நீங்க எப்படி பார்த்துப்பீங்க னு எனக்கு தெரியும்” 
“என்ன திமிரா?”
“உங்களை விட கம்மி தான்”
“ஏய்” என்றபடி அவர் கை ஒங்க அவர் கையை தடுத்த கீதா, “நான் இனியமலர் இல்லை.. வக்கீல் அங்கிள் போன் நம்பர் கொடுத்திட்டு தான் போயிருக்கார்”
“என்னடி மிரட்டுறியா?”
“ஆமா” என்று அவள் தைரியமாக கூற,
நாகேஸ்வரி தன் கோபத்தை இனியமலரிடம் காட்டினார்.
இனியமலரின்  முதுகில் ஒரு அடி போட்டபடி, “கல்லூளி மங்கை மாதிரி உட்கார்ந்து இருக்கிறதை பார்.. வாய் திறந்து சொல்லுடி.. இவளை கிளம்பச் சொல்” என்று அதட்டினார்.
கீதா ஆள்காட்டி விரலை நீட்டி, “அடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம்.. அவளே கிளம்ப சொன்னாலும் நான் கிளம்ப மாட்டேன்” என்றாள்.
அப்பொழுது அங்கே வந்த செந்தில்குமார், “கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க?” என்று முதல் முறையாக எரிச்சலுடன் பேசினார்.
“இவளும் வரேன் னு சொல்றா”
“எவ்வளவு நேரம் தான் இங்கிருந்து பேச்சு வாங்குறது! அவளும் வந்துட்டு போறா.. கிளம்பு” என்று கூறவும் வேறு வழி இல்லாமல் கிளம்பினார்.
தனிமையில் தோழியிடம் கதறி அழுத இனியமலரை கீதா தான் தேற்றினாள். அன்று கீதா அங்கேயே தங்கி அவளுக்கு ஆறுதலும் அறிவுரையும் பல கூறினாள். 
மெல்ல பேச்சுக்கள் அடங்க, ஒரு வாரம் கழித்து இனியமலர் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தாள். கீதாவை தவிர சக மாணவர்களுக்கு அவளது திருமணம் பற்றி தெரியாது என்பதால் அங்கே அதை பற்றிய பேச்சு இல்லை. வகுப்பு ஆசிரியரிடம் கீதா முன்பே பேசியிருந்ததால் அவரும் இனியமலரிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
சில நாட்கள் கழித்து கீதா, “ப்ரனேஷ் ஏன் உன்னை வந்து பார்க்கவே இல்லை? போன் பண்ணி பார்க்கிறியா?”
அந்த கேள்வி இனியமலரின் மனதிலும் தோன்றியது தான் இருப்பினும் குற்ற உணர்ச்சியில் இருந்தவளுக்கு அவனை தொடர்புக் கொள்ளும் தைரியம் இல்லை. கூடவே மற்றவர்களை போல் அவனும் அவளது ராசி பற்றி நினைத்து விலகி விட்டானோ என்ற எண்ணம் தந்த வலியும் ஒரு ஓரம் இருந்தது.
இனியமலர் அமைதியாக இருக்கவும் கீதா, “வாயை திறந்து பேசு டி.. இப்படியே இருந்த உன்னை ஊமை னு நினைச்சுக்க போறாங்க”
“என்னத்தை பேசச் சொல்ற?”
“ப்ரனேஷ் உன்னை புரிந்துப்பார்”
“வேண்டாம்”
“நான் பேசுறேன்”
“விடு சொல்றேனே! இதை இத்தோடு விட்டிரு”
ஆனால் கீதா அப்படியே விடவில்லை. அவள் ப்ரனேஷை அழைத்த போது ‘அந்த எண் உபயோகத்தில் இல்லை’ என்று வரவும் அவள் சித்ராவின் தங்கையிடம் இனியமலரின் நிலைமையை பற்றி விளக்கி ப்ரனேஷ் பற்றிய விவரங்களை ரகசியமாக சேகரித்து தருமாறு வேண்டினாள்.
அடுத்த மூன்று நாட்களின் அவள் மரத்தடியில் அமர்ந்திருந்த கீதாவிடம் பேசிவிட்டு செல்ல இனியமலர் ‘என்ன’ என்பது போல் பார்த்தாள்.
கீதா சிறு தவிப்புடன் பார்க்கவும் அவள், “என்ன கீது?”
“ப்ரனேஷ் பற்றி விசாரிக்க சொல்லியிருந்தேன்” என்று அமைதியாக கூற,
இனியமலர் கண்ணில் சிறு ஆர்வத்துடன், “என்ன சொன்னா?”
கீதா வேதனையுடன் பார்க்க இனியமலர் சிறு பயத்துடன் எழுந்து, “என்னடி? அவருக்கு ஒன்னுமில்லையே!” என்று அவள் கைகளை பற்றி தவிப்புடன் கேட்டாள்.
“அவர் நல்லா தான் இருக்கிறார்.. ஆனா”  
“ஆனா! என்னடி?”
“அவர் இப்போ மேல் படிப்பிற்காக லண்டன் போயிருக்கிறாராம்”
“அவ்ளோ தானே” என்று அவள் நிம்மதியுடன் கூற,
கீதா மெல்லிய குரலில், “அவரை அவரது நண்பர்கள் கடைசியா பார்த்தது அவங்க பிரெண்ட் அசோக் கல்யாணத்தில்” என்றதும்,
“சரி.. இதுக்கு ஏன் நீ இப்படி இருக்கிற?”
கீதா அதிர்ச்சியுடன் தோழியை பார்க்கவும் அவள் புரியாமல், “என்னடி?” என்று வினவினாள்.
கீதா, “உன்னை கல்யாணம் பண்ணிக்க இருந்தவர் பெயர் கூட தெரியாதா?”
இனியமலருக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.
சில நொடிகள் கழித்து அவள், “நீ.. நீ.. என்ன சொல்ற?”
கீதா வேதனையுடன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டவும்,
“அப்போ அவர்.. அவர் வந்திருந்தாரா?” என்றவள் மண் தரையில் அமர்ந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.
அவள் துயர் கண்டு கீதாவின் கண்களும் கலங்கியது. தனது கண்ணை துடைத்துக் கொண்டு, “அங்கே அஞ்சு நிமிஷம் தான் இருந்திருப்பார் போல.. வந்ததும் கிளம்பிட்டார்னு தான் சொல்றாங்க.. ஸோ கல்யாணம் நின்னது அவருக்கு தெரியாது.. உன்னை அந்த கோலத்தில் பார்த்த அதிர்ச்சியில் கிளம்பி இருப்பார்.. உன் நிலைமையை சொன்னால் நிச்சயம் புரிந்துக்கொள்வார்”
“..”
“மலர்.. நான் சொல்றதை கேள்”
இனியமலர் தலை குனிதபடி அழுகையுடன் மறுப்பாக தலையை அசைத்தாள்.
கீதா, “சொல்றதை கேளுடி.. அவர்…………”
கீதாவை நிமிர்ந்து பார்த்தவள் கண்ணீர் வழியும் விழிகளுடன், “எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேச சொல்ற? அவர் நிலையில் இருந்து யோசித்துப்பார்.. அவருக்கு நான் துரோகம் செய்திருக்கிறேன்” 
“அப்படி இல்லைடி.. உன் நிலைமை”
“ச்ச்.. நான் அவரை விரும்பியதை கூட வீட்டில் சொல்லலை”
“ஆமா சொல்லியிருந்தா மட்டும் உன் சித்தி ’அப்படியாமா.. சந்தோஷமா அவனை கல்யாணம் பண்ணிக்கோ’ னு தான் சொல்லியிருக்கும்! போடி.. என்னை கேட்டால் உன்னுடைய இந்த நிலைக்கே ப்ரனேஷ் தான் காரணம் னு சொல்வேன்”
“லூசு மாதிரி உளறாதே!” என்று அவள் சிறு கோபத்துடன் கூற கீதா அவளை ஆச்சரியமாக பார்த்தாள். 
“என்ன?”
“முதல் முறையாக கோபப்படுற! இதில் இருந்தே உன் கதாலின் ஆழம் தெரியுது”
அவள் விரக்தியான புன்னகையுடன், “தெரிந்து!”
“நீ நினைத்தால் உங்க ரெண்டு பேர் துயரத்தையும் போக்கலாம்”
“அவர் அந்த கல்யாணத்திற்கு வந்துட்டு போயிருக்கார்.. இப்போ லண்டன் படிக்க போயிருக்கார்.. அவர் துயரில் இருப்பார் னு எப்படி சொல்ற?”
“உன் மனசை தொட்டு சொல்லு.. இப்போ அவர் சந்தோஷமா இருப்பாரா?”
“..”
“அந்த மனுஷன் காதலை வெளிப்படையா சொல்லி அவர் நம்பரை உன்னிடம் தந்துட்டு போயிருந்தால் இவ்வளவு கஷ்டம் இல்லை”
“சும்மா சும்மா அவரை சொல்லாத.. அன்னைக்கு அவர் என் நம்பர் கேட்டார் நான் செல் இல்லை சொன்னதும் உனக்கு போன் பண்றேன்னு தான் சொன்னார் நான் தான் வேண்டாம் னு சொன்னேன்”
“ஹ்ம்ம்.. ஆனாலும் விதி உன் வாழ்க்கையில் இப்படி விளையாடக் கூடாது டி”
“போன ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணினேனோ! பிறந்ததில் இருந்து.. சரி விடு”
“இப்போ கூட நீ நினைத்தால்…………….”
“நினைத்தால்? சும்மா அதையே சொல்லாதே! அவர் நம்பர் உன்னிடம் இருக்கிறதா?”
“இல்லை தான்.. ஆனால் முயற்சி செய்தால்………………..”
“வேண்டாம்.. இப்படியே விட்டுரு.. அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பலை”
“ஏன் டி புரிஞ்சுக்காம பேசுற!”
“நீ தான் புரிஞ்சுக்காம பேசுற.. அவரை பொறுத்தவரை நான் துரோகம் செய்தவள்.. என்ன தான் என் நிலைமையை எடுத்து சொன்னாலும்.. ப்ச்.. விடு”
“முயற்சியே பண்ணாமல்………..”
“சரி அவர் நம்பரை வாங்கி தா.. நான் பேசுறேன்”
“நிச்சயம் பேசணும்”
“ஹ்ம்ம்” என்று தலையை ஆட்டியவள் மனதினுள் வேதனைக்கு நடுவில் நம்பிக்கை சிறு துளியாக இருந்தது. ஆனால் அது கானல் நீராக போனது.
ப்ரனேஷ் தனது நண்பர்களின் தொடர்பை முற்றிலும் முறித்துக் கொண்டதால் அவனை தொடர்புக்கொள்ள முடியவில்லை. அவனது காதல் பற்றி அவனது தந்தைக்கு தெரியும் என்பது மட்டும் கீதாவிற்கு தெரிந்து இருந்தால் நிச்சயம் அவரை சந்தித்து தனது தோழியின் வாழ்வில் மலர்ச்சியை கொண்டு வந்திருப்பாள்!  
நாட்கள் மாதங்கள் ஆக இனியமலர் மெல்ல மெல்ல இயல்பிற்கு திரும்பினாள் என்பதை விட திரும்பியதாக காட்டிக் கொண்டாள். இப்பொழுதெல்லாம் நாகேஸ்வரியின் பேச்சுக்கள் அவளை வருத்துவது இல்லை. அந்த அளவிற்கு அவள் மனம் மரத்துப் போய் இருந்தது.
இதற்கிடையில் விமல் மீதான கீதாவின் காதலை பற்றி தெரிந்துக் கொண்டு தோழிக்காக மகிழ்ச்சியடைந்தாள்.
இருவரும் விலங்கியல் முதுகலை படித்து முடித்தனர். இனியமலர் ஒரு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தாள். 
நாகேஸ்வரி இனியமலரின் தாய்மாமா பணத்தை அவந்திகாவை படிக்க வைப்பதற்கும் அவளுக்கு நகை செய்வதற்கும் பயன் படுத்தினார்.
அவந்திகாவிற்கு ஒரு சில வரன்கள் தேடி வர, பிறகு இனியமலரின் நின்றுபோன திருமணத்தை பற்றி அறிந்ததும் விலகிச் சென்றனர்.
உடனே நாகேஸ்வரி இனியமலருக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். இனியமலர் இந்த முறை மறுப்பை தெளிவாக கூற, அவரோ அவந்திகா பெயரை சொல்லி அவள் வாயை அடைத்தார்.
விதிப்படி நடப்பது நடக்கட்டும் என்று மனதை தேற்றிக் கொண்டவள் அவர் கொண்டு வந்த வரனை பார்த்து மனதினுள் அதிர தான் செய்தாள். ஏனெனில் அந்த மணமகனுக்கு இது இரண்டாவது திருமணம்.
அவள் வாய் திறந்து கேட்காத போதும் நாகேஸ்வரி, “என்ன பார்க்கிற! உனக்கும் இது ரெண்டாவது திருமணம் தானே!”
“சித்தி!!!”
“என்னடி குரலை உயர்த்துற! உண்மையை தானே சொல்றேன்.. தாலி கட்டுறதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி அவன் மண்டையை போட்டான்.. இல்லை இந்நேரம் நீ விதவை”
அவள் வலியுடன் அவரை பார்க்க, அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் அவர் தொடர்ந்தார்.
“ஊராரை பொறுத்தவரை அது முதல் கல்யாணம் போல் தான்.. மாப்பிள்ளைக்கு ரெண்டாவது கல்யாணம் என்றாலும் முதல் கல்யாணம் மூலம் குழந்தை குட்டி னு தொல்லை இல்லை தானே! ராசி இல்லாத உன்னை ஒருத்தன் கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னதே பெருசு! அதனால் வாயை மூடிட்டு கல்யாணம் செய்து பிழைக்க பார்” என்றவர், “நீ பிழைக்கிறியோ இல்லையோ என் மகளை நல்ல முறையில் பிழைக்க விடு.. கல்யாணம் முடிந்து அவனுடன் நீ லண்டன் போனால் இந்த வீட்டோட பீடை ஒழிந்தது னு நாங்க நிம்மதியா இருப்போம்.. தப்பித் தவறிக் கூட இங்கே திரும்ப வந்திராத” என்று சேர்த்து கூற அவள் முற்றிலும் ஒடுங்கினாள்.
விஷயம் அறிந்து கீதா தான் தாம்-தும் என்று குதித்தாள் ஆனால் இனியமலரை மீறி அவளால் ஏதும் செய்ய முடியவில்லை.
எந்த வித எதிர்பார்ப்புமின்றி திருமணத்தை எதிர் கொண்டாள். திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையுடன் பேசிக்கொள்ளவில்லை.. அவனும் அழைக்கவில்லை இவளுக்கும் பேச பெரிதாக விருப்பம் இல்லை.
கல்யாணமும் முடிந்தது. திருமணத்தின் போது அவளை பார்த்து சிரித்தான் ஆனால் அன்றும் இருவரும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை.
அன்று இரவு இவள் ஒருவித பயத்துடன் கணவன் அறைக்குள் நுழைந்தாள்.
அவள் பயம் தேவையே இல்லை என்பது போல் அவன் சிறு புன்னகையுடன், “நம் வாழ்க்கையை லண்டன் போய் தொடங்குவோம்.. அலுப்பா இருக்கும் தூங்கு” என்று கூறி படுத்துக் கொண்டான்.
  
மறு நாளே அவன் லண்டன் கிளம்பி சென்றுவிட இவள் மாமனார் மாமியாருடன் இருந்தாள். அங்கே இருந்த நாட்களில் அவர்கள் நல்ல விதமாக பேசியது போல் இருந்தாலும் ஏதோ ஒரு ஒதுக்கம் இருப்பது போல் உணர்ந்தாள். அவளது கணவர் குணம் அவளுக்கு புரியாத புதிராகவே இருந்தது. தொலைபேசியில் பேசுபவன் ஒரு நேரம் நன்றாக பேசுவான் ஒரு நேரம் எரிந்து விழுவான். நன்றாக பேசிய நேரங்களிலும் அவன் காதலாக எதுவும் பேசியது இல்லை. 
திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கழித்து அவள் லண்டன் சென்றாள். 
அத்துடன் நிகழ் காலத்திற்கு திரும்பிய ப்ரனிஷா அன்பரசியிடம், “அதன் பிறகு தான் உனக்கு தெரியுமே!”
“உன் திருமணம் ஏன்…………………”
“அவனுடன் நான் இருந்த நாட்கள் என் வாழ்க்கையின் மோசமான கருப்பு பக்கங்கள்.. அதை பற்றி யோசிக்கக் கூட நான் விரும்பலை.. அதை பற்றி கேட்காதே” என்று முடித்தாள்.
“சரி விடு.. காலையில் ஏன் ஏதோ துரத்துவது போல் ஓடி வந்த?”
“அது..”
“என்ன?”
“சர்வேஷ் சாருடன் இன்னைக்கு ஒருத்தர் வந்திருந்தார்.. பார்த்தியா?”
“ஹ்ம்ம்.. பார்த்தேன்”
“அவர்.. அவர் தான் ப்ரனேஷ்”
ஒரு நொடி அதிர்வது போல் பார்த்தவள், “சரி.. அதற்காக ஏன் லீவ் போட்டு வந்த?”
“அவரை பார்த்தது பழயதை எல்லாம் கிளறிவிட்டது போல் ஆகிருச்சு.. என்னால் அங்கே இருக்க முடியலை”
“அவரை பார்த்து நீ பயப்படுறியா?”
“இல்லை.. ஆனா..”
“ஆனா?”
“அவர் இன்னமும் என்னை நினைத்துக் கொண்டு இருக்கிறாரோ னு……” என்று இழுத்து நிறுத்தினாள்.
“எதை வைத்து சொல்ற?”
“அவர் என்னை இனியா னு கூப்பிட்டார்”
“அதை வைத்து மட்டும்………….”
“இல்லை.. அவர் பார்வையில் நான்.. நான் அதே காதலை பார்த்தேன்.. சொல்ல போனால் அதை விட தீவிரமான காதலை பார்த்தேன்”
“உன் கற்பனையாக கூட இருக்கலாமே!”
“இல்லை”
“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்………………..”
“இல்லை அன்பு.. நான் அவர் பார்வையை மட்டும் வைத்து சொல்லலை.. அவர் ‘என் உயிரில் கலந்தவளை அடையாளம் தெரியாதா!’’ னு சொன்னார்”
“ஓ!” என்று யோசிப்பது போல் பாவித்தவள், “ஒருவேளை அவருக்கு கல்யாணம் ஆகாமல் இப்பவும் உன்னையே நினைத்துக் கொண்டு இருந்தால் உன் பதில்?”
“இது என்ன பேச்சு அன்பு? எனக்கு என் மகள் மட்டும் போதும்” என்று அவள் எரிச்சலுடன் கூறினாள்.
“அப்போ அவரை பற்றி உனக்கு கவலை இல்லையா?”
“அது…..”
“உன்னை காதலித்ததை தவிர அவர் எந்த தவறும் செய்ததா எனக்கு தெரியலை”
“..”
“அவரை இதற்கு முன் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.. இப்போ நீ சொன்னதை கேட்டு ஞாபகம் வந்திருச்சு.. அவரை டிவியில் ஒரு பேட்டியில் பார்த்தேன்.. கொஞ்ச நாள் முன்னாடி பிறந்து அஞ்சு நாள் ஆன பெண் குழந்தைக்கு ஹார்ட் ஆபரேஷன் சக்சஸ்புல்லா பண்ணியிருக்கார்.. சென்னையில் இருக்கும் ‘Healthy Life’ ஹாஸ்பிடல் அவரோடது தான்..”
“சொன்னது போல் பெஸ்ட் ஹார்ட் சர்ஜன் ஆகிட்டார்”
“உன்னிடம் சொன்னதிற்காகவே ஆகியிருக்கலாம்”  
“உளறாதே.. அவர் அவரோட குறிக்கோளை அடைந்து இருக்கிறார்.. இதில் நான் எங்கிருந்து வந்தேன்”
“சரி.. ஆனா நீ ஒன்றை யோசிக்கலாம்..”
“என்ன?”
“இப்படி உயர்ந்த நிலையில் இருப்பவரை கல்யாணம் செய்துக்க நான் நீ னு போட்டி போட்டுட்டு வருவாங்க ஆனா அவர் உன் நினைவில் இருக்கிறார்”
“அப்படி அவர் வந்து உன்னிடம் சொன்னாரா?” என்று முறைப்புடன் கேட்டாள்.
“நீ சொன்னதை வைத்து சொன்னேன்”
“..”
“நீ ஏன் அவரை…………..”
“ப்ளீஸ் அன்பு.. என் வாழ்க்கையில் இன்னொரு ஆணுக்கு நிச்சயம் இடமில்லை”
“ஆனால் அவர்……………”
“அவர் நான் விரும்பியவராக இருக்கலாம் ஆனா அது கடந்த காலம்.. அது கடந்ததாகவே இருக்கட்டும்”
“அவரோட நிகழ் காலமும் நீயாக இருந்தால்?”
“என் நிகழ் காலம் எதிர் காலமெல்லாம் அபி மட்டும் தான்.. இனி இதை பற்றி பேசாதே” என்றபோது அவள் குரலில் பிடிவாதமும் கண்டிப்பும் இருந்தது.
இன்று இது போதும் என்று நினைத்த அன்பரசி, “சரி.. நான் போய் அபி குட்டியை கூட்டிட்டு வரேன்” 
“ஹ்ம்ம்”
“மனசை போட்டு குழப்பிக்காதே!” என்றவள், “அபி ரெண்டு நாளா பார்க் போனும் சொல்லிட்டு இருந்தாள்.. நான் பார்க் போயிட்டு லேட்டா தான் வருவேன்”
“ரொம்ப லேட் ஆக்கிடாத”
“சரி” என்று கூறி கிளம்பியவள் வெளியே சென்றதும் ப்ரனேஷை அழைத்து அவன் மீதான ப்ரனிஷாவின் தற்போதைய கருத்தைக் கூறினாள்.
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement