Advertisement

இதழ் 18
இனியமலர் குனிந்த தலை நிமிராமல் கலங்கிய கண்களுடன் வந்திருந்தவர்களுக்கு காபியை கொடுத்துவிட்டு தன் அறைக்கு செல்ல திரும்ப நாகேஸ்வரி அவள் கையை பிடித்து நிறுத்தினார். முதல் முறையாக அவர் கையை தட்டிவிட்டு சென்றாள்.
நாகேஸ்வரி, “சின்ன பெண் இல்லையா! வெக்கப் படுறா” என்று சமாளித்தார். அவளை பெண் பார்க்க ப்ரனேஷின் நண்பன் அசோக்கும் அவனது பெற்றோரும் வந்திருந்தனர்.
பெற்றோரிடம் கண்ணசைவில் சம்மதம் சொன்ன அசோக், “என்னை பற்றி எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா?”
நாகேஸ்வரி, “சொல்லிட்டேன்.. அவளுக்கு பரிபூரண சம்மதம் தான் ஆனால் படிப்பு பாதியில் நின்று விடுமோ னு சின்ன பயம் இருக்கிறது அவ்ளோ தான்”
அசோக், “கல்யாணத்திற்கு பிறகு நிச்சயம் அவள் படிக்கலாம்.. மேலே படிக்கணும் என்று நினைத்தால் கூட படிக்கட்டும்” 
“அப்பறம் என்ன! வெற்றிலை பாக்கை மாற்றி கல்யாண நாளை குறித்துவிட வேண்டியது தான்” 
அசோக், “இனியமலர் சம்மதம்” என்று இழுக்க,
நாகேஸ்வரி, “சம்மதம் என்பதால் தானே உங்கள் முன் வந்து நின்றாள்” என்றார்.
“இருந்தாலும்” என்று அவன் இழுக்க, அவனது தாய், “அதான் சொல்றாங்களே.. விடு அசோக்” என்றார். 
எங்கே திரும்ப திரும்ப கேட்டு இனியமலர் வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ என்ற பயம் அவருக்கு. இதய நோய் காரணமாக இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் மகன் இவ்வுலகை நீத்து விடுவான் என்ற உண்மையை அறிந்ததும் முதலில் துயரில் மூழ்கியவர் அதன் பிறகு மகனை கல்யாணம் செய்துக்கொள்ள வற்புறுத்தினார். 
‘தெரிந்தே ஒரு பெண்ணின் வாழ்வை அழிக்க என்னால் முடியாது மா’ என்று மறுத்த மகனை ‘எனக்கு உன் வாரிசு வேண்டும் டா.. என்னால் முடியலை டா.. ப்ளீஸ்.. உன் நிலைமையை பற்றி உண்மையை சொல்லியே பெண் கேட்கிறேன்’  என்று கதறலுடன் கெஞ்சி அவனை சம்மதிக்க வைத்தார். அப்பொழுது கூட தன் நிலை அறிந்து தன்னை கல்யாணம் செய்துக்கொள்ள யாரும் முன் வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் சம்மதித்தான். 
இனியமலர் புகைப்படத்தை பார்த்ததும் அவனுக்கு பிடித்தது இருப்பினும் தன்னால் ஒரு பெண்ணில் வாழ்வு அழிவதா என்று வெகுவாக தயங்கியவனை அவனது அன்னை தான் சமாதானம் செய்தார். ஒரு பெண்ணின் வாழ்வை அழிப்பது தெரிந்தே அவர் சுயநலமாக முடிவெடுத்தார். 
‘டௌரியோ நகையோ எதுவும் வேண்டாம் பெண் நல்ல குணமாக இருக்க வேண்டும்’ என்ற அவரது வார்த்தைகள் இனியமலரின் வாழ்வை கேள்விக்குறி ஆக்க போதுமானதாக இருந்தது. 
அடுத்து வேலைகள் விரைவாக நடந்தது. அடுத்த பத்தாவது நாள் கல்யாண நாளாக குறிக்கப்பட்டது. 
அவர்கள் கிளம்பிச் சென்ற பிறகு இனியமலர் இந்த திருமணம் தனக்கு வேண்டாம் என்றாள். காரணம் கேட்டதிற்கு படிப்பை கூற கல்யாணத்திற்கு பிறகு படிக்கலாம் என்று கூறவும் அவள் கெஞ்சலில் இறங்கினாள். ஆனால் அவளது கெஞ்சல்களை நாகேஸ்வரி சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவரது நோக்கம் பைசா செலவில்லாமல் இனியமலரின் கல்யாணத்தை நடத்துவதோடு அவள் மாமா பணத்தை அடைவதாக இருந்தது. 
இனியமலரின் கெஞ்சல்களை கேட்டு அவந்திகா கூட, “எதுக்கு மா இந்த அவசர கல்யாணம்? அக்கா தான் வேணாம் னு சொல்றாளே! விட வேண்டியது தானே!” என்று கூறினாள்.
“இன்னுமா அவளை அக்கா னு கூப்டுட்டு இருக்க!” என்று அதட்டிய நாகேஸ்வரி, “எப்போ என்ன செய்யணும் னு எனக்கு தெரியும்.. அப்படி ஒன்றும் அவள் குழந்தை இல்லை.. இது கல்யாண வயது தான்”
“கவர்மென்ட்டே பெண்ணின் திருமண வயது இருவத்தி ஒன்று னு தானே சொல்லுது.. இப்போ அவளுக்கு இருவது தானே!”
கோபத்துடன் மகளை முறைத்தவர், “நல்ல வரன்.. என்னால் விட முடியாது.. நீ உன் வேலையை மட்டும் பார்” என்று கூறி சென்றுவிட்டார்.
அவந்திகாவிடம் பேசிவிட்டு இனியமலரிடம் சென்றவர், “அப்படி என்னடி செய்றேன்! கல்யாணம் தானே பண்ணிக்க சொல்றேன்.. ஏதோ உன் வாழ்க்கையை சீரழிப்பது போல் கெஞ்சிட்டு இருக்க!” என்று சிறிதும் உறுத்தல் இல்லாமல் நாகூசாமல் சொன்னவர், “அதான் கல்யாணத்திற்கு அப்பறம் படிக்கலாம்னு சொல்லிட்டாங்களே! இனி உன் கெஞ்சல் இல்லை அழுகை சத்தம் கேட்டுது நான் பொல்லாதவள் ஆகிடுவேன்” என்று மிரட்டிவிட்டு சென்றார். 
அசோக்கின் உடல் நிலையைப் பற்றி நாகேஸ்வரி தவிர வேறு யாருக்கும் தெரியாது.
அடுத்தநாள் அவள் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த போது நாகேஸ்வரி, “கல்யாணம் முடிந்து காலேஜ் போனா போதும்”
அவள் அதிர்ச்சியுடன் பார்க்க நாகேஸ்வரி, “என்ன?”
“அது.. சித்தி.. ரொம்ப நாள் லீவ் தர மாட்டாங்க…”
“கல்யாணம் என்று சொன்னால் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. அவந்தி அப்பா உன் சாரிடம் பேசிப்பாங்க”
“இல்லை சித்தி.. லேப் வேற இருக்குது.. கல்யாணத்திற்கு பிறகு வேற லீவ் போடணுமே! இப்போ போறேனே!” என்று வாய்க்கு வந்த காரணத்தை சொன்னாள்.
நாகேஸ்வரி, “என்ன கல்யாணத்தை நிறுத்த திட்டம் போடுறியா? அந்த கீதா கூட சேர்ந்துட்டு ஏதாவது செய்ய நினைச்ச! உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் அந்த கீதாவிற்கு அக்சிடென்ட் பண்ணி கையை காலை உடைச்சிருவேன்” 
அவள் பெரும் அதிர்ச்சியுடன் பார்க்க, அவர், “சும்மா விளையாட்டுக்கு சொல்லலை.. நான் சொன்னதை செய்வேன்.. எனக்கு இந்த கல்யாணம் ரொம்ப முக்கியம்.. என்ன புரியுதா?”
தலையை ஆட்ட கூட முடியாத அளவிற்கு அவள் அதிர்ச்சியில் இருக்க அவர், “வெள்ளிக்கிழமை வரை காலேஜ் போ.. சனிக்கிழமையில் இருந்து லீவ் போடுற.. கல்யாணத்தை நிறுத்த ஏதாவது திட்டம் போட்ட உன் தோழிக்கு தான் பிரச்சனை” என்று கூறி சென்றார்.
கீதாவிற்கு உடல் நிலை சரியில்லாததால் அவள் கல்லூரிக்கு வரவில்லை. கீதாவும் இல்லாமல் இனியமலர் தேற்றுவார் இன்றி பெரிதும் துயரப்பட்டாள்.
அடுத்த நாள் கடைசி முயற்சியாக தனது தோழியிடம்(சித்ராவின் தங்கை) சென்று, “ஷர்மி ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”
“என்ன டி?”
“உன் அக்கா கல்யாணத்தில் பிரச்சனை வந்தப்ப ஒருத்தர் அதை சால்வ் பண்ணாரே………….”
“அத்தான் பிரெண்ட் ப்ரனேஷ் அண்ணாவை சொல்றியா?” 
“ஹ்ம்ம்.. அவர் போன் நம்பர் வாங்கி தர முடியுமா?”
“நீ எதுக்கு கேட்கிற?”
“அது..” என்று திணறியவள், “ப்ளீஸ் டி” என்று கெஞ்சினாள்.
“ஏதும் பிரச்சனையா டி?” என்று அவள் அக்கறையுடன் கேட்டாள்.
“இல்லை.. அவர் நம்பர் மட்டும் வாங்கி தா ப்ளீஸ்”
“சரி ஆனா அவசரமா வேணுமா?”
“ஏன்?”
“இல்லை அக்கா இப்போ ஹனிமூன் போயிருக்கா அதான் கேட்கிறேன்”
“எப்போ வருவாங்க?”
“குலுமனாலி போயிருக்கா.. வர நாலு நாள் ஆகும்.. சிக்னல் ப்ராப்ளம் இருப்பதால் அவளை ரீச் பண்றது கொஞ்சம் கஷ்டமா இருக்குது.. நான் ஒரு ரெண்டு நாளில் கேட்டு சொல்றேன்”
“சரி.. தேங்க்ஸ் டி” என்று கூறி சென்றவளின் மனம் நம்பிக்கை இழக்கத் தொடங்கி இருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து தோழியிடம் கேட்டபோது அவள், “சாரி டி.. அக்காக்கு அந்த க்ளைமெட் ஒத்துக்காம வீசிங் வந்து கொஞ்சம் கஷ்ட பட்டுட்டு இருக்கா.. என்னால் இதை பற்றி பேச முடியலை.. ஆனா நான் நீ சொன்ன அன்னைக்கே வாட்ஸ்-அப் பண்ணி கேட்டேன்.. அதை அவ இன்னும் பார்க்கவே இல்லை..” என்று தவிப்புடன் கூறினாள்.
தன் விதியை நினைத்து நொந்தவள் வெளியே சிறு புன்னகையுடன், “பரவா இல்லை.. விடு.. தேங்க்ஸ்” என்றாள்.
திருமணத்திற்காக அவள் விடுமுறை எடுக்கும் நாளும் வந்தது. கீதாவின் உடல்நிலை பற்றி அறிந்தவள் தன் நிலையை பற்றி அவளிடம் பகிர முடியாமல் தத்தளித்தாள். 
இனியமலரின் கல்யாணத்திற்கு முந்தின நாள் தான் உடல்நிலை தேறி கீதா கல்லூரி வந்தாள். சித்ராவின் தங்கையின் மூலம் ப்ரனேஷ் எண்னை இனியமலர் கேட்டதை அறிந்த கீதா அன்று மாலை அவளை பார்க்க அவள் வீட்டிற்கு சென்றாள்.
வீட்டு வாசலில் கட்டியிருந்த வாழைமரத்தை பார்த்ததும் ப்ரனேஷ் எண்னை அவள் கேட்டதிற்கான காரணம் புரிய கீதா அதிர்ச்சியுடன் உள்ளே விரைந்தாள்.
அவளை பார்த்ததும் நாகேஸ்வரி எரிச்சலுடன், “நாளைக்கு தானே கல்யாணம்.. இன்னைக்கே வந்திருக்க!” என்று ‘எதுக்கு வந்திருக்க?’ என்று கேட்காமல் கேட்டார்.
அவரது உதாசினத்தை பொருட்படுத்தாமல், “உடம்பு சரியில்லை னு ஒரு வாரம் நான் காலேஜ் வரலை..  இன்னைக்கு தான் வந்தேன்.. அதான் பார்க்க வந்தேன்” என்று கூறிக் கொண்டிருந்த போது,
கலங்கிய குரலில், “கீதா” என்று ஓடி வந்த இனியமலர் அவளை கட்டிக் கொண்டாள்.
நாகேஸ்வரி, “வீட்டில் உறவுக்காரங்கள் இருக்காங்க.. இது என்ன நாடகம்!” என்றபோது யாரோ அவரை அழைக்க,  “சொன்னது ஞாபகம் இருக்குது தானே!” என்று மிரட்டிவிட்டே சென்றார்.
கீதா, “உன் ரூமிற்கு போகலாம்”
“அங்கே சில உறவுக்காரங்க இருக்காங்க”
“என்னடி இது?”
“ச்ச்.. என் விதி.. விடு”
தன் பார்வையை சுழற்றிய கீதா தாழ்ந்த குரலில், “அவர் நம்பரை ஷர்மி கொடுத்தாள்”
ஒரு நொடி கண்ணில் ஒளிபெற பார்த்த இனியமலர் அடுத்த நொடியே, “ச்ச்.. இனி ஒன்றும் பண்ண முடியாது விடு”
“இப்போ கூட நேரம் இருக்கிறது”
இனியமலர் மறுப்பாக தலையை ஆட்ட, கீதா, “என்னடி?”
“அவர் உறுதியா எதுவும் சொல்லாத நிலையில் நாம எதுவும் செய்ய முடியாது”
“நானும் அவர் கண்ணில்……………….” யாரோ வரவும் பேச்சை நிறுத்தினாள். அவர் சென்றதும், “எனக்கு நம்பிக்கை இருக்கிறது……………”
“வேண்டாம்.. விடு..” 
“நான் பேசுறேன் டி”
“நீ பேசக் கூடாது”
“எனக்கு வர கோபத்திற்கு! லூசா டி நீ”
“அவர் மனம் நமக்கு தெரியாது.. சரி ஒருவேளை அது உண்மை என்றாலும் அவர் இப்போ எந்த ஊரில் இருக்கிறாரோ! இனி அவர் கிளம்பி வந்து எதுவும் ஆக போறதில்லை.. விடு”
கீதா ஏதோ சொல்ல வர அங்கே வந்த நாகேஸ்வரி, “பாசத்தை பொழிஞ்சது போதும்.. இங்கே நிறைய வேலை இருக்கிறது.. நாளைக்கு முகூர்த்ததிற்கு முடித்தால் வா.. இப்போ கிளம்பு” என்றார்.
இனியமலர், “நாளைக்கு பார்க்கலாம்.. நீ கிளம்பு..”
“கல்யாணம் எங்கே? முகூர்த்தம் எத்தனை மணிக்கு?”
இனியமலர் தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்க கீதா, “என்னடி?” என்று மீண்டும் அதிர்ந்தாள்.
இனியமலர் வெறுமையான புன்னகையுடன், “தெரிஞ்சுக்க தோணலை” என்றாள்.
துயரத்துடன் தோழியை பார்த்தவள், “இன்விடேஷன் இருக்கா?”
“இரு எடுத்துட்டு வரேன்” என்று கூறி இனியமலர் உள்ளே செல்ல,
நாகேஸ்வரி, “சில ஜென்மங்களுக்கு சூடு சொரணை சுத்தமா கிடையாது” என்று கூற,
கீதா அதை காதில் வாங்காதது போல் நின்றாள்.
இனியமலர் வந்து அழைப்பிதழை கொடுக்கவும், “நாளைக்கு பார்க்கலாம்” என்று கூறிச் சென்றாள்.
நாகேஸ்வரி, “உன் தோழியிடம் சொல்லி வை.. இந்த கல்யாணத்தில் மட்டும் அவளால் ஏதாவது பிரச்சனை வந்தது அப்பறம் அவள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை”
“அவள் எதுவும் செய்ய மாட்டாள் சித்தி”
“அப்போ நீ செய்ய போறியா?”
“இல்லை சித்தி”
“ஹ்ம்ம்.. அதான் உனக்கு நல்லது” என்றவர், “என் ரூமுக்கு வா.. கொஞ்சம் பேசணும்” என்று கூறி செல்ல, இவள் யோசனையுடன் சென்றாள்.
அவள் உள்ளே வந்ததும் கதவை மூடியவர் ஒரு பத்திரத்தை அவளிடம் நீட்டி, “இதில் கையெழுத்து போடு”
“என்ன சித்தி இது?”
“நாளைக்கு உன் கையில் உன் மாமன் பணம் வந்து சேரும்.. அதை என்னிடம் அப்படியே தருவதாக எழுதி இருக்கிறேன்”
அவள் படித்துப்பார்த்து கையெழுத்து போட்டாள்.
அவர், “நாசமா போனவன் வீட்டை மட்டும் உன் வாரிசு பேரில் எழுதிட்டான்” என்று அவர் பொறும, அவள் உணர்ச்சியற்ற குரலில், “நான் போகட்டுமா சித்தி?”
“சரி.. அழுது வடியாமல் சிரிச்ச மாதிரி முகத்தை வச்சுக்கோ! இல்லைனா வந்தவங்களை வேற சமாளிக்கணும்”
அவள் சரி என்பது போல் தலையை ஆட்டிச் சென்றாள்.
அடுத்த நாள் பெண் அழைத்து செல்லும் போதே கீதா வந்து விட்டாள்.  நாகேஸ்வரியின் பேச்சுக்களை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் இனியமலருடன் பசை போல் ஒட்டிக் கொண்டு இருந்தாள். 
மாப்பிள்ளை சடங்கு நடந்துக் கொண்டிருந்த பொழுது, இனியமலரின் மாமா நியமித்திருந்த நேர்மையான வக்கீல் நண்பர் அவளிடம் சென்று அவளுக்கு சேர வேண்டிய பெரும் தொகையை காசோலையாக ஒப்படைத்தார். சரியாக அந்த நேரத்தில் நாகேஸ்வரி உள்ளே வந்தார். அவள் அந்த தொகை எவ்வளவு என்று கூட பார்க்காமல் அந்த காசோலையை அவரிடம் கொடுத்தாள். அந்த தொகையை பார்த்தவரின் கண்கள் இன்ப அதிர்ச்சியில் விரிந்தது.
வக்கீல், “சதா உனக்காக தந்தது மா”
“தெரியும் அங்கிள்”
“ஒரு நொடியில் அவனது முயற்சியை முறியடிச்சிட்டியே!” என்று அவர் ஆதங்கத்துடன் கூற, 
நாகேஸ்வரி எரிச்சலுடனும் கோபத்துடனும், “யோவ் வக்கீல்.. அதான் வந்த வேலை முடிந்ததே கிளம்பு” என்றார்.
அவர் முறைப்புடன், “இந்த தொகை முழுவதும் மலரிடம் சென்றால் தான் என் வேலை முடியும்.. இந்த சவுண்ட் விடுற வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம்.. உன் வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்தி உள்ள தூக்கி வச்சிருவேன்.. ஜாக்கிரதை.. என்ன பார்க்கிற! மலரை நீ கொடுமை படுத்துறது! அவளை ஏமாற்றி இந்த பணத்தை வாங்கியது னு செக்சன் செக்சனா உன் மேல் வழக்கு போட்டு உள்ள தள்ளட்டுமா!”
நாகேஸ்வரி உடனே பம்மினார். சிரித்தபடி, “செக் பத்திரமா இருக்கட்டும்னு என்னிடம் கொடுத்தாள்.. அதற்கு ஏன் சார் டென்ஷன் ஆகுறீங்க!”
அவர் அதை கண்டுக்கொள்ளாமல், “மலர்.. இது உன் பணம்”
அவள் விரக்தியுடன் சிரித்தபடி, “எனக்கு அது பயன் படாது அங்கிள்”
அவர் கூர்மையுடன் அவளை பார்த்து, “இந்த கல்யாணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா மா?”
நாகேஸ்வரி அவசரமாக, “பொண்ணை அழச்சிட்டு வர சொல்றாங்க.. வா போகலாம்” என்றார்.
வக்கீல், “மலர்.. பதில் சொல்லு”
“அப்படியெல்லாம் இல்லை அங்கிள்” என்று இனியமலர் கூற, 
கீதா, “பொய் சொல்றா சார்.. அவளுக்கு இந்த கல்யாணத்தில் துளிக் கூட விருப்பம் இல்லை”
நாகேஸ்வரி கொலை வெறியுடன் கீதாவை பார்த்தார்.
இனியமலர், “அப்படியெல்லாம் இல்லை அங்கிள்.. முதலில் தான் அப்படி.. படிப்பை பற்றிய கவலை இருந்தது.. கல்யாணத்திற்கு அப்பறம் படிக்கலாம்னு சொல்லிட்டாங்க.. அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை” என்று கூறி புன்னகைத்தாள்.
அவளது புன்னகையில் உயிர் இல்லை என்பதை புரிந்துக் கொண்டவர் கடைசி முயற்சியாக, “உனக்கு விருப்பம் இல்லை என்றால் இப்போ கூட நான் இந்த கல்யாணத்தை நிறுத்துறேன் மா”
“அப்படியெல்லாம் இல்லை அங்கிள்.. நீங்க நிம்மதியா போய் உட்காருங்க”
“சதா கடைசி நொடி வரை உன்னை பற்றி தான் கவலை பட்டான் மா.. ஏதாவது உதவி தேவை என்றால் தயங்காமல் கேள்” 
“சரி அங்கிள்” என்று அவள் தலையை ஆட்ட அவர் ஒன்றும் செய்ய முடியாமல் வெளியே சென்று இருக்கையில் அமர்ந்தார்.
நாகேஸ்வரி கீதாவை முறைத்தபடி கோபத்துடன் ஏதோ கூற வர அப்பொழுது உறவினர் ஒருவர், “பொண்ண கூட்டிட்டு வர சொல்றாங்க” என்றதும் கீதா தோழியை அழைத்துச் சென்றாள்.
இனியமலர் உணர்ச்சியற்ற ஜடம் போல் அய்யர் சொன்னதை செய்துக் கொண்டிருந்தாள்.
அடுத்து முகூர்த்த புடவை கட்டி அசோக்கின் அருகில் அமர்ந்த நொடி உள்ளுக்குள் அவள் செத்துவிட்டாள். 
தாலியை கையில் எடுத்த அசோக் சரியவும் அனைவரிடமும் பதற்றம் தொற்றிக் கொண்டது ஆனால் அதிகம் பதற்றம் கொள்ள வேண்டிய இனியமலரோ அதை உணரவே இல்லை.
கீதா அவளை உலுக்கவும் தான் சுற்றுப் புரத்தை கவனித்தவள் முதல் முறையாக அசோக்கின் முகத்தை பார்த்தாள். இயல்பில் இளகிய மனம் கொண்டவள் எழுந்து அவன் தலை அருகில் ஓடினாள்.
அசோக்கின் அன்னை அவன் தலையை மடி தாங்கியிருக்க, அவனது தந்தை அவன் முகத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார்.
திருமணத்திற்கு வந்த மருத்துவர் ஒருவர் அவனை பரிசோதித்து அதிர்வுடன் தலையை மறுப்பாக அசைக்க அசோக்கின் அன்னை பெரும் குரலுடன் அழத் தொடங்கினார்.
இனியமலரை பிடித்திருந்த காரணத்தால் அசோக்கின் மனம் மெல்ல இந்த திருமணத்தை ஏற்றதோடு ஆவர்வத்தோடு எதிர்கொண்டது. இன்று அவனிற்கு இருந்த அதிக மகிழ்ச்சியும் படபடப்புமே அவன் இதயத்தை செயலிழக்க செய்தது. 
கூட்டத்தில் ஒருவர், “என்ன ஒரு ராசியோ! தாலி கட்டுறதுக்கு முன்பே இப்படி பையனை காவு வாங்கிட்டாளே!” என்று கூற, 
அசோக்கின் அன்னை, “இன்னும் கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்திருப்பே! இப்படி ஜாதகம் பார்க்காமல் ராசி இல்லாதவளை உனக்கு பார்த்து நானே உன்னை கொன்னுட்டேனே ராஜா” என்று கேவலுடன் புலம்பியபடி சரிந்தார்.

Advertisement