Advertisement

“அண்ணா! அண்ணா.. என்னை விட்டுட்டு போகாத ணா.. என்னை ஏன் ணா தள்ளிவிட்ட! என்னையும் உன்னுடன் கூட்டிட்டு போயிருக்கலாமே! ஏன் ணா இப்படி பண்ண! நீ இல்லாம தனியா நான் எப்படி இருப்பேன்? ஏன் இப்படி பண்ண!” என்று உயிரற்ற உடலை உலுக்கியபடி கதறி அழுதாள். அவளது கதறலை பார்த்து அந்த நண்பன் கண்களில் நிற்காமல் கண்ணீர் வந்தது.
அப்பொழுது முதலுதவி வண்டி வந்தது.
அவளது மாமா தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்க, அவள் அத்தை மற்றும் மாமன் மகனிற்கு அடுத்தடுத்த காரியங்கள் முடிந்திருந்தது. அவளது மாமாவும் அடுத்த மூன்று நாட்களின் இறந்து இருந்தார். ஆனால் பாண்டிச்சேரியில் இருந்த வீட்டை இனியமலரின் வாரிசுகளுக்கு எழுதி வைத்திருந்தவர் தொழிலை விற்ற பணத்தை(விபத்து நடந்ததிற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் மனைவியின் மருத்துவ செலவிற்காக பாண்டிச்சேரியில் இருந்த தொழிலை விற்று இருந்தார்) அவள் திருமணம் அன்று கிடைக்குமாறு உயில் எழுதி இருந்தார்.  
எல்லாம் முடிந்து மீண்டும் பழைய நரகத்திற்கு வந்தாள் இனியமலர். வந்த அன்றே நாகேஸ்வரி அவளது கைபேசியை பறித்துக் கொண்டார். நாகேஸ்வரி முன்பு போல் அடிக்க வில்லை என்றாலும் அவரது நாக்கு என்னும் கத்தியால் அவளது மென்மையான மனதை குத்திக் கிழித்துக் கொண்டே இருப்பார். அதுவும் அவர் ‘உன் ராசியால் தான் உன் அத்தை நீ போனதும் படுத்தாள்.. அப்பறம் அந்த குடும்பத்தையே காவு வாங்கிட்டியே’ என்றும் ‘அது எப்படி டி! நீ மட்டும் குத்துக்கல்லாட்டம் இருக்கிற ஆனா அந்த குடுபத்தை உருகுலைச்சிட்ட!’ என்று கூறும் பொழுது அவள் இதயத்தில் ரத்தம் கசிவது போல் துடிப்பாள்.
அப்பொழுது அவளுக்கு ஆறுதலாக இருந்த ஒரே ஆள் அவள் தோழி கீதா.
கீதா, “அதெல்லாம் இல்லை.. அவங்க விதி.. அவங்க போய்ட்டாங்க” என்பாள்.
இவளது மௌனத்தை பார்த்து, “லூசு உன்னால் தான் உன் அத்தை இத்தனை வருஷம் உயிருடன் இருந்தாங்க.. நீ இல்லாமல் நிச்சயமா தனியா அவங்க சமாளிச்சு இருக்க முடியாது!”
“நான் போகாமல் இருந்து இருந்தால் அவங்களுக்கு உடம்புக்கே ஒன்னும் வந்திருக்காதே!”
“வர கோபத்துக்கு அப்படியே வாயில் போடுவேன்.. பேசுறா பாரு! உன் அண்ணன் உபதேசமெல்லாம் என்னாச்சு! மறுமடியும் முருங்கை மரம் ஏறுறியா?”
அண்ணன் பேச்சு வரவும் அவள் கண்கள் கலங்க, “ச்ச்.. அன்றைக்கு அவன் குடிக்காமல் இருந்து இருக்கலாம்”
“ஹ்ம்ம்.. இது பேச்சு! அன்றைக்கு நடந்த விபத்து உன் அண்ணன் குடித்ததால் நிகழ்ந்தது.. என்ன புரியுதா!”
“ச்ச்..”
“இன்னொரு முறை சித்தி சொன்னா! ஆட்டு குட்டி சொல்லுச்சு னு ராசி அது இது னு பேசு! நான் கொலைகாரி ஆகிடுவேன்”
“..”
“என்ன புரிந்ததா?”
இனியமலர் மெல்ல தலையை அசைத்தாள்.
கீதா, “உன் சித்திக்கு சரியா தான் பெயர் வைத்து இருக்காங்க.. உடம்பு முழுவதும் விஷம் கொண்ட நாக பாம்பு தான்டி உன் சித்தி”
“பெரியவங்களை தப்பா பேசாத”
“அந்தம்மாவா பெரியவங்க! ஏதாவது சொல்லிட போறேன்” என்றவள் “சரி அவந்தி உன்னிடம் பேசுறாளா?”
“ச்ச்.. முன்னாடியே இரண்டு வார்த்தை தேவைக்கு எப்பவாது தான் பேசுவா.. இத்தனை வருட இடைவேளையில் அது கூட இப்போ இல்லை”
“நீ போய் பேச வேண்டியது தானே!”
“எதுக்கு சித்தி இன்னும் வார்த்தையால் என்னை கொல்றதுக்கா!”
“நீயும் பேச வேண்டியது தானே”
“போடி.. அவங்க பேசுறதிலேயே என் மனம் செத்து போய்டும்.. அப்பறம் எங்கே வார்த்தை வரது? ஒருமுறை அப்பா ஏதோ பேச வந்தார் ஆனா சித்தி வந்ததும் அவர் பேசாமல் போய்ட்டார் நானும் போய்ட்டேன்.. ஆனா அதுக்கே ‘என்ன! எங்களையும் காவு வாங்கும் எண்ணத்தில் இருக்கிறியா? தள்ளியே இரு அப்போ தான் உன் ராசியில் இருந்து நாங்க தப்பிக்க முடியும்’ னு சொன்னாங்க”
“அப்போ ஹாஸ்டலில் சேரு”
அவள் விரக்தியான புன்னகையுடன், “விட்டால் தானே!”
“இவ்வளவு பேசுறவங்க உன்னை ஏன் வீட்டை விட்டு போக தடை சொல்றாங்க”  
“மாமா என் பெயரில் போட்டிருக்கும் பணம்.. அது என் கல்யாணத்தன்று தான் கிடைக்கும்.. தனியே போய்விட்டால் அவங்களுக்கு அது கிடைக்காது னு பயம்”
“என்னவோ போ! எனக்கு என்னவோ நீ கொஞ்சம் வாய் திறந்து பேசினால் அவங்க கொஞ்சமாவது அடங்கி இருப்பாங்க னு தான் தோணுது”
“ச்ச்.. இன்னும் அதிகமா தான் பேசுவாங்க”
“சரி உன் சித்தி பேச்சை விடு..” என்றவள் பேச்சை மாற்றி தோழியை சிறிது சிரிக்க வைத்தாள்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல இனியமலர் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் இருந்த பொழுது, ஒரு நாள் மாலை தலைவலி காரணமாக பேருந்தில் செல்லாமல் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது தான் ப்ரனேஷை முதல் முறையாக பார்த்தாள். அப்பொழுது ப்ரனேஷை அவன் நண்பன் ஒருவன் வெண்சுருட்டை(Cigarette) பிடிக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தான்.
அதை பார்த்ததும் அவளுக்கு அவள் அண்ணன்(மாமன் மகன்) ஞாபகம் வரவும் எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ!
ஓட்டுனரிடம், “அண்ணா வண்டியை கொஞ்சம் திருப்பி அந்த பசங்க பக்கத்தில் நிறுத்துங்க” என்றாள்.
அவர் அவள் சொன்னபடி வண்டியை நிறுத்தியதும் புயலின் வேகத்துடன் அவர்கள் அருகே சென்றவள் ப்ரனேஷை வற்புருத்தியவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து முறைப்புடன், “அவர் தான் வேண்டாம் னு சொல்றாரே! தேவை இல்லாத இந்த கெட்ட பழக்கத்தை ஏன் கட்டாயப்படுத்தி பழக்கப்படுத்த முயற்சிக்கிற?” என்றாள்.
பிறகு ப்ரனேஷ் பக்கம் திரும்பி, “இப்படி புத்தியில் உரைப்பது போல் மறுப்பு சொல்லணும்”  என்று கூறி அவர்கள் பதிலை எதிர் பார்க்காமல் ஆட்டோவில் ஏறி, “வண்டியை எடுங்க ணா” என்றாள்.
அந்த ஓட்டுனர் வண்டியை ஓட்டியபடி, “உனக்கு ஏன் மா இந்த வேண்டாத வேலை?” என்று அக்கறையான குரலில் கூறினார்.
அவள் கண்கள் கலங்குவதை கண்ணாடியில் பார்த்தவர், “அந்த தம்பி உனக்கு தெரிந்தவரா மா?”
அவள் கலங்கிய விழிகளுடன் ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
அவர் குழப்பத்துடன் அவளை பார்த்தார். 
சில நொடிகளில் தன்னை கட்டுப் படுத்தியவள் மெல்லிய குரலில், “இதை போல் கட்டாயப்படுத்தியதால் ஒரே ஒரு முறை தண்ணி அடித்த என் அண்ணனை அன்றே ஒரு விபத்தில் இழந்துவிட்டேன்” என்றாள்.
அவர் வருத்தமான குரலில், “சாரி மா”
“பரவா இல்லை அண்ணா” என்று மெல்லிய குரலில் கூறினாள்.
அவர், “இருந்தாலும் கோபத்தை கொஞ்சம் கட்டு படுத்திக்கோ மா.. ஒரு நேரம் போல் இன்னொரு நேரம் இருக்காது.. அடி வாங்கிய பையன் உன்னை பழி வாங்க கிளம்பினால் உன் நிலை?” என்றதும் அவளுள் கலவரம் பிறந்தது.
அவள் பயத்துடன், “அவன்.. அவன் என்னை எதுவும் செய்திடுவானா அண்ணா!”
அவர் அவளது குணத்தை கணிக்க முடியாமல் குழம்பிப் போனார். இருந்தாலும் தற்போதைய பயத்தை போக்கும் விதமாக, “அப்படி சொல்லலை.. இனி இப்படி நடந்துக்காத மா” என்றார்.
“ஹ்ம்ம்” என்று தலையை ஆட்டியவள் மனதினுள் ‘எப்படி எனக்கு இப்படி ஒரு கோபமும் தைரியமும் வந்தது?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். 
இப்படி தைரியத்துடன் நாகேஸ்வரியை அவள் எதிர்த்து இருந்தால் அவள் வாழ்க்கை சின்னாப்பின்னமாகாமல் இருந்து இருக்கும் ஆனால் அவளது தைரியமோ குறிஞ்சி பூ போல் அரிதான ஒன்றாக அல்லவா இருந்து விட்டது! 
முதல் இரண்டு நாட்கள் பயத்தில் தான் இருந்தாள். அவள் அடித்தவன் அவளை ஏதும் செய்து விடுவானோ என்று பயந்தவள் ரோட்டில் செல்லும் போது யாரேனும் அவளை தொடர்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே சென்று வந்தாள். நாட்கள் செல்ல அதை பற்றியே மறந்து போனாள்.
சில மாதங்கள் கழித்து ப்ரனேஷை ஒரு சிறுவனை காப்பாற்றிய பொழுது பார்த்தாள். அவனது வெளிப்படையான பேச்சு அவளுக்கு பிடித்தது. இருப்பினும் அவனிடம் பேசவிடாமல் தடுத்தது அவளது இயல்பான ஒதுங்கிச் செல்லும் குணம். அவள் அதிகம் பேசி பழகிய இரண்டு ஜீவன்கள் அவள் அண்ணனும் கீதாவும் மட்டுமே.
அவனிடம் பேசாமல் வந்துவிட்டாலும் அவன் முகமும், அவளை கண்டதும் அவன் கண்கள் சிரித்தவிதமும் அவளை தூங்க விடாமல் இம்சித்தது. ஏதோ சொல்லத் தெரியாத அவஸ்த்தையை உணர்ந்தாள். அது அவளுக்கு பிடித்தது இருப்பினும் அதிகம் பயம் கொடுத்தது.
இரண்டு நாட்கள் இப்படியே தவிப்புடன் கழிய மூன்றாம் நாள் எதிர்பாராத விதமாக அவனை தோழியின் அக்கா திருமணத்தில் சந்தித்தாள். நாகேஸ்வரி உறவில் ஒரு திருமணத்திற்காக வெளி ஊரிற்கு சென்றிருக்க இவள் இங்கே வந்திருந்தாள் ஆனால் கடைசி நேரத்தில் கீதாவின் அன்னைக்கு உடம்பு சரியில்லை என்று அவள் வரவில்லை என்றதும் கடுப்பில் இருந்தவள் ப்ரனேஷை கண்டதும் இன்பமாக அதிர்ந்தாள். அன்று நிற்க இருந்த திருமணத்தை அவன் வெற்றிகரமாக நடத்திய போது அவன் அவள் மனதினுள் முழுவதுமாக ஆக்கிரமித்தான். அதனாலேயே தன் தயக்கத்தையும் மீறி அவனிடம் சில வார்த்தைகள் பேசினாள். அப்பொழுது அவன் வசீகர புன்னகையுடனும் கண்ணில் காதலுடனும் ‘என்ன சொல்லட்டுமா?’ என்று கேட்டபொழுது அவளது இதயம் படபடத்தது. தோழியின் அக்கா அழைக்கவும் தப்பித்தோம் என்று ஓடிவிட்டாள் ஆனால் மனதினுள் இனிமையாக உணர்ந்தவள் அன்று மண்டபத்தில் இருந்தவரை அவன் அறியாமல் அவனை தான் ரசித்துக் கொண்டிருந்தாள். 
வீட்டிற்கு சென்றவளுக்கு தன் மனம் முழுவதும் புரிந்தது ஆனால் அவனை பற்றி எதுவும் தெரியாமல் இது சரி வருமா என்ற கவலையும் பயமும் இருந்தது. பயத்தையும் மீறி அவனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. அவனை எப்படி எங்கே சந்திப்பது என்று தெரியாமல் பெரிதும் தவித்தாள்.
கீதா கூட, “நீ என்னவோ சரியில்லை.. என்னடி ஆச்சு?”
மனதை கஷ்டப்பட்டு மறைத்து, “நான் எப்பொழுதும் போல் தான் இருக்கிறேன்” என்றாள்.
“எப்பொழுதும் போல் தான் இருக்கிற ஆனா ஏதோ வித்தியாசம் தெரியுது”
“அப்படியெல்லாம் இல்லை”
“என்னிடம் எதுவும் மறைக்கிறியா?”
“என்ன.. நான்.. எதுவும் மறைக்கலை”
“நிச்சயம் ஏதோ இருக்கிறது”
“இல்லை டி”
“சரி சொல்லணும் நினைக்கிறப்ப நீயே சொல்லு” என்றதோடு முடித்துக் கொண்டாள். 
அன்று மாலை தான் ப்ரனேஷ் அவளை சந்திக்க வந்தான். காதலை சொல்லாமலேயே இருவரும் மற்றவரிடம் அதை உணர்ந்தனர். 
ப்ரனேஷ் சென்றதும் கோபத்துடன் முறைத்த கீதாவை கெஞ்சி கொஞ்சி மலை இறக்கியவள் தன் மனதை பற்றி அவளிடம் சொன்னாள்.
கீதா, “பார்க்க நல்லவனை போல் தான் தெரியுது ஆனா அவனைப் பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாதே!”
“அது சித்ரா அக்கா ஹஸ்பண்டு கிட்ட கேட்டா தெரிந்துவிடுமே”
“பார் டா! காதல் வந்ததும் மலர் கூட புயல் ஆகிட்டா”
“ஹே சும்மா இருடி” என்று வெக்கப்பட,
கீதா மகிழ்ச்சியுடன், “இதே மகிழ்ச்சியுடன் எப்பொழுதும் இரு.. இனி உனக்கு விடிவு காலம் தான்” என்றாள்.
இருவரும் மகிழ்ச்சியுடனே வீட்டிற்கு சென்றனர்.
ப்ரனேஷிடம் பேச முடியாவிட்டாலும் அவனுடன் பேசிய பொழுதுகள் அவளது நெஞ்சம் எனும் பெட்டகத்தில் பொக்கிஷமாக இருந்து அவளை மகிழ்ச்சியுடன் வலம் வர வைத்தது. கண்ணில் காதலுடன் இதழில் உறைந்த புன்னகையுடன் கூடிய அவனது முகமே நித்தமும் அவள் சிந்தனையில் இருந்தது. ஆனால் அவளது மகிழ்ச்சி ஒரு வாரம் தான் நிலைத்திருந்தது.
ப்ரனேஷ் முகாமிற்கு சென்ற ஒரு வாரத்தில் ஞாயிறு மாலை அவளிடம் மல்லிகை பூவை கொடுத்தபடி நாகேஸ்வரி, “சீக்கிரம் பட்டுப் புடவை கட்டி இந்த பூவை வச்சு கிளம்பு”
“என்ன சித்தி?”
“கேள்வி கேட்கிற அளவிற்கு வந்துட்டியா?”
“இல்லை சித்தி”
“போய் கிளம்பிட்டு வா னு சொன்னேன்”
அதற்கு மேல் அவரிடம் பேச முடியாமல் தன் அறைக்கு சென்று கிளம்பியவள் மனதினுள் ‘என்ன? எதற்கு?’ என்ற குழப்பத்தையும் மீறி ஏதோ ஒரு படபடப்பு இருந்தது. என்னவோ சரியில்லை என்று அவளது உள்மனம் அடித்துக் கொண்டது.
அவள் கிளம்பிக் கொண்டிருந்த பொழுது வெளியே பேச்சுக் குரல்கள் கேட்டது. யாராக இருக்கும் என்ற யோசனையுடன் வேகமாக கிளம்பினாள்.
அவள் கிளம்பி முடித்ததும் கதவை தட்டிய நாகேஸ்வரி அவள் கதவை திறந்ததும் காபி குவளைகள் நிறைந்த தட்டை கொடுத்து, “இதை வந்திருக்கிறவங்களுக்கு போய் கொடு” என்றதும் அவள் மனம் பெரிதும் அதிர்ந்தது.
அவள், “சி..த்..தி” என்று அதிர்ச்சியுடன் சத்தமின்றி அழைக்க, அவர், “போ னு சொன்னேன்” என்று அதட்டினார்.

Advertisement