Advertisement

இதழ் 17
வீட்டிற்கு சென்ற இனியமலர் என்ற ப்ரனிஷாவின் மனதினுள் அலை அலையாக கடந்த கால நினைவுகள் எழுந்து அவளை மூழ்கடித்தது. 
எவ்வளவு நேரம் பழையதை நினைத்தபடி கண்களை மூடி அமர்ந்திருந்தாளோ! அவளது சிந்தனையை கலைப்பது போல் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
கதவை திறந்தவள் வெளியே நின்றுக் கொண்டிருந்த அன்பரசியை பார்த்ததும், “அபி எங்க?”
“இப்போ மணி என்ன?”
“என்ன?”
“மதியம் தான் ஆகுது.. இவ்னிங் போய் கூட்டிட்டு வரேன்.. இப்போ உனக்காக தான் வந்தேன்”
“எனக்கென்ன?”
அன்பரசி முறைக்கவும், ப்ரனிஷா, “என்ன?”
“ஒன்றுமில்லாம தான் காலையில் ஓடி வந்தியா? இப்போ கூட நேரம் காலம் தெரியாமல் முழிச்சிட்டு இருக்கிற”
“..”
“என்ன?”
“உள்ளே வா”
உள்ளே சென்று அமர்ந்ததும் அன்பரசி, “இப்போ சொல்லு.. காலையில் உன் முகமே சரியில்லை.. அதான் லீவ் போட்டுட்டு வந்தேன்.. இன்னைக்கு உன்னை பற்றி நீ சொல்லியே ஆகணும்”
“ஹ்ம்ம்.. சொல்றேன்” என்றவள் அவளை பற்றி சொல்லத் தொடங்கினாள்.
இனியமலர் பிறந்த போதே பிரசவத்தில் அவளது அன்னை மரகதம் இருந்துவிட்டார். மரகதம் தேர்ந்தெடுத்த ‘இனியமலர்’ என்ற பெயரை மகளுக்கு வைத்தாலும், மனைவி இறந்த துயரில் இருந்த செந்தில்குமாருக்கு இனியமலர் மேல் சிறு வெறுப்பு நெஞ்சின் ஓரம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது. அந்த நெருப்பை அணையவிடாமல் நாகேஸ்வரி பார்த்துக் கொண்டார். அன்னையின் வற்புறுத்தலில் நாகேஸ்வரியை இரண்டாம் தாரமாக மணந்தார். இனியமலருக்கு இரண்டு வயது இருந்த போது நாகேஸ்வரிக்கு அவந்திகா பிறந்தாள். 
இனியமலரை தந்தையுடன் மட்டுமின்றி தங்கையுடனும் பழகவிடாமல் தனிமை படுத்தினார் நாகேஸ்வரி. செந்தில்குமார் மனதில் இனியமலர் மேல் இருந்த சிறு வெறுப்பை வளர்த்ததோடு அவள் ராசி இல்லாதவள் என்பதையும் அவர் மனதில் பதித்தார். அவர் மனதில் மட்டுமின்றி இனியமலர் மனதிலும் பதிக்கும் எண்ணத்தில் அவளை திட்டும் பொழுதும் அடிக்கும் பொழுதும் ‘ராசி இல்லாத ஜென்மம்’ என்றே கூறுவார். ஐந்து வயதில் ஆசையாக அவந்திகாவை கொஞ்சிய போது கிடைத்த அடியில் சிறுமியான இனியமலர் அதன் பிறகு அவந்திகா பக்கம் போகவே பயந்தாள். ஆனால் வளர வளர அவந்திகாவோ அன்னை போல் அல்லாமல் தமக்கை மேல் பாசமாக தான் இருந்ததாள். தன் முகம் பார்த்து அழகாக சிரிக்கும் அவந்திகாவை தவிர்க்க முடியாமல் நாகேஸ்வரி அறியாமல் தங்கையுடன் இனியமலர் விளையாடினாள் ஆனால் அதை ஒரு நாள் பார்த்துவிட்டு நாகேஸ்வரி கரண்டியால் அவளை அடித்த போது அவள் வலது காலில் அந்த கரண்டி சற்று ஆழமாக பதம் பார்த்ததின் விளைவாக ஏற்பட்ட காயம் இன்றும் அவள் காலில் வடுவாக இருக்கிறது. அதன் பிறகு அவந்திகா அவள் அருகில் வந்தாலும் எட்டியே நின்றாள். 
அதையும் மீறி ஒரு முறை பத்து வயது அவந்திகா இனியமலரை அணைத்ததை பார்த்த நாகேஸ்வரி அவந்திகா விளையாட வெளியே சென்றதும் இனியமலரை பிரம்பால் அடித்து விளாசினார். அவருக்கு அவளை அடிக்க ஏதாவது காரணம் வேண்டும். அன்று இது காரணமாக அமைந்தது.
வலியில் துடித்த பன்னிரண்டு வயது இனியமலர், “நான் அவளிடம் பேசுறதே இல்லை சித்தி.. அவள் தான் என்னை கட்டிப் பிடித்தாள்”
“என் மகளையே குற்றம் சொல்றியா?” என்றபடி அவர் இன்னும் வேகமாக அடித்தார்.
அவள் அழுகையுடன், “வேண்டாம் சித்தி.. வலிக்குது” என்று கெஞ்சினாள். ஆனால் அவர் அடிப்பதை நிறுத்தவே இல்லை.
அப்பொழுது தண்ணீர் குடிக்க என்று உள்ளே வந்த அவந்திகா தமக்கையின் கதறலை கேட்டு வேகமாக உள்ளே ஓடினாள்.
அன்னையின் கையை பிடித்து தடுத்த அவந்திகா, “அக்காவை ஏன் மா அடிக்கிறீங்க?” என்று குரலை உயர்த்தினாள்.
நாகேஸ்வரி, “அவள் என்ன பண்ணா னு உனக்கு தெரியாது.. என் கையை விடு”
“என்ன அக்கா பண்ண?”
உண்மையை சொல்ல நினைத்த இனியமலர் நகேஸ்வரின் பார்வையில் பார்வையை தாழ்த்தி அமைதியாக நின்றாள்.
நாகேஸ்வரி குரலை உயர்த்தி, “அவள் எப்படி சொல்வாள்?”
“சரி நீங்களே சொல்லுங்க”
“உன் மேல் இருந்த பொறாமையில் நீ ஆசை ஆசையா வாங்கிய பிறந்த நாள் டிரெஸ்ஸை கிழித்ததோடு உன் பிறந்த நாளுக்காக அப்பா ஆசையா  வாங்கி தந்த சைக்கிளையும் உடைத்து விட்டாள்”
இனியமலர் அதிர்ச்சியுடன் தங்கையை பார்க்க, அவந்திகா அதிர்ச்சியுடன், “நீயா அக்கா செய்த?” என்று வினவினாள்.
இனியமலர் இயலாமையுடன் தங்கையை பார்க்க நாகேஸ்வரி, “நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் ஏன் பொய் சொல்லப் போறேன்.. நானே என் கண்ணால் பார்த்தேன்”
அவந்திகா வெறுப்புடன், “உனக்கு என் மேல் பொறாமை னு அம்மா சொல்லும் போதெல்லாம் நான் நம்பலை கா.. ஆனா இப்போ.. ஐ ஹேட் யூ” என்றவள் கலங்கிய கண்களுடன் அறைக்கு சென்றாள்.
நாகேஸ்வரி, “உண்மையை அவளிடம் சொல்ல நினைத்த உன்னை வீட்டை விட்டே துரத்திவிடுவேன்.. ஜாக்கிரதை” என்று மிரட்டிவிட்டு அறைக்கு சென்றவர் மேலும் இனியமலரை பற்றி தவறாக கூறி அவந்திகாவை அவளை வெறுக்க செய்தார். 
அன்னை கூற்றை ஆராயும் திறன் சிறு வயது அவந்திகாவிற்கு இல்லாததாலோ அந்த நேரம் அவள் குழம்பி இருந்த காரணத்தினாலோ அன்னை கூறியதை நம்பினாள். நாகேஸ்வரி மேல் கொண்ட பயத்தில் சும்மாவே இனியமலர் அவந்திகாவிடம் அதிகம் பேசமாட்டாள். அவந்திகா அவளை இழுத்து வைத்து பேசினால் தான் உண்டு.. அதன் பிறகு சகோதரிகள் இடையே பெரிய இடைவேளி உருவானது.
அடுத்து வந்த நாட்களில் இனியமலர் முற்றிலும் முடங்கிப் போனாள். பேசுவதையே நிறுத்தினாள். பள்ளியில் கூட சக மாணவர்களுடன் பேசுவதை நிறுத்தியிருந்தாள். அதன் விளைவாக அவள் ‘சிடுமூஞ்சி’ ‘அழுமூஞ்சி’ என்ற பெயர்களை பெற்றாள். கூடவே சிலர் அவள் காதுபடவே அவளை ‘ராசி இல்லாதவள்’ என்று பேசினர். மெல்ல ‘தான் ராசி இல்லாதவள் தானோ!’ என்ற எண்ணம் அவள் மனதினுள் பதிந்தது. 
எப்பொழுதும் அரை வயிற்றுடன் வீட்டு வேலைகளை செய்தபடி படித்துக் கொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று அவள் அமைதியாக இருந்தாலும் நாகேஸ்வரி ஏதாவது காரணம் கண்டு பிடித்து அவளை அடிக்கவோ திட்டவோ செய்வார் ஆனால் அதை அவந்திகா மற்றும் செந்தில்குமார் அறியாமல் செய்வார். ஒருசில நேரம் அவர்கள் அறிய நேர்ந்தால் பழியை இனியமலர் மேல் சுமத்தி மேலும் அந்த சிறுமியை கூனிக் குறுக செய்தார். இத்தனை கொடுமைகளை செய்தாலும் நாகேஸ்வரி அவள் படிப்பை மட்டும் நிறுத்தவில்லை. நல்ல படிப்பவளின் படிப்பை நிறுத்தினால் ஊரார் அவரை தூற்றுவர் என்ற எண்ணம் தான் அதற்கு காரணம்.
இந்த நரகத்தில் இருந்து தற்காலிக விடிவுகாலம் பதினான்காவது  வயதில் எட்டாம் வகுப்பின் இறுதியாண்டு விடுமுறையின் போது அவள் பூப்பெய்த போது கிடைத்தது. ஆம் அவள் பெரியவள் ஆன போது அவளை பார்க்க வந்த அவளது தாய் மாமன் மனைவி மூலம் அந்த விடிவுகாலம் வந்தது.
மரகத்திற்கு திருமணமான பொழுது அவர் தந்தை இறந்திருக்க, அண்ணன் தான் அவருக்கு திருமணம் செய்து வைத்தார். அப்பொழுது அண்ணனுக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் பையன் இருந்தான். மரகதிற்கு திருமணம் ஆன புதிதில் அன்னையும் இறந்துவிட சொந்தம் என்று சொல்லிக்கொள்ள அண்ணன் மட்டுமே இருந்தார். மரகதம் இறந்த பிறகு அவரது அண்ணன் இங்கே வருவதை குறைத்து பிறகு நிறுத்திவிட்டார். அவர் நிறுத்திவிட்டார் என்று சொல்வதை விட நாகேஸ்வரி  பேச்சு அவரை நிறுத்த செய்தது என்றே சொல்ல வேண்டும். 
இனியமலர் பெரியவள் ஆனதை அறிந்ததும் பல ஆண்டுகள் கழித்து தங்கை மகளை பார்க்க மாமன் சீருடன் மனைவியை அழைத்துச் சென்றார். அங்கே இரண்டு நாட்கள் தங்கி இருந்ததில் இனியமலரின் கஷ்டத்தை புரிந்துக் கொண்ட அவளது அத்தை அவர்கள் கிளம்பும் பொழுது அவளை அழைத்துச் செல்வதாக கூறினார். முதலில் கோபம் கொண்ட செந்தில்குமார் நாகேஸ்வரி சம்மதம் சொல்லவும் ‘சரி’ என்றார். செந்தில்குமார் மகள் மேல் கொண்ட பாசத்தில் மறுக்கவில்லை தனது கௌரவத்திற்கு இழுக்கு வந்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில் தான் மறுத்தார். நாகேஸ்வரி சம்மதம் சொன்னதிற்கு காரணம் அப்பொழுது மரகத்தின் அண்ணன் நல்ல நிலைமையில் இருந்தார். இனியமலரை அவருடன் அனுப்பி பிறகு அவரது சொத்தில் பங்கு கேட்கும் எண்ணம் தான் அவர் சம்மதம் சொன்னதிற்கு காரணம். நாகேஸ்வரியின் எண்ணத்தை இனியமலரின் அத்தை அறியாமல் இல்லை இருப்பினும் இனியமலரின் நலனை கருதி அழைத்துச் செல்லும் முடிவெடுத்தார்.  
இனியமலர் முதலில் பயந்தாலும் அவள் அத்தை கண்களில் தெரிந்த பாசத்தில் தைரியம் வர பெற்றவளாக கிளம்பினாள். இருப்பினும் தங்கை தந்தையை விட்டு தனது அடையாளத்தை விட்டு செல்லும் வருத்தமும், தன்னை பிரிவதில் சிறிதும் வருத்தமின்றி வழியனுப்பும் தங்கை மற்றும் தந்தையை நினைத்து மனதில் எழுந்த வலியுடனும் தான் கிளம்பினாள்.
என்ன தான் அன்னையின் உபதேசத்தில் இனியமலரை வெறுத்தாலும் அவள் கிளம்பும் பொழுது அவந்திகாவிற்கு சிறிது வருத்தமாக தான் இருந்தது ஆனால் அதை காட்டிக்கொள்ளவில்லை.  
மரகதத்தின் அண்ணன் பாண்டிச்சேரியில் இருந்தார். அவர்களுடன் சென்ற இனியமலரை அவளது கூட்டுக்குள் இருந்து வெளி கொண்டுவர அவளது அத்தையும் மாமன் மகனும் பெரிதும் போராடினர். அவள் அங்கு சென்ற இரண்டு மாதத்தில் உடல் நலம் குன்றி அவள் அத்தை படுக்கையில் விழ இனியமலர் தான் வீட்டை பார்த்துக் கொண்டாள். 
பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாமன் மகனுக்கும் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த இவளுக்கும் நடுவில் நல்ல புரிதலும் அன்பும் வளர்ந்தது. முதல் முதலில் தன் மேல் அன்பை பொழிந்த மாமன் மகனை அவளுக்கு மிகவும் பிடித்தது. அவனை அண்ணன் என்றே அழைத்தாள். அவனும் அவளை தங்கையாக தான் நினைத்து பாசத்தை பொழிந்தான். இருவரும் அண்ணன் தங்கையாக தான் வளர்ந்தனர். அவன் அவளது மௌனத்தை உடைத்து சிரித்து பேச செய்ததோடு ராசி பற்றிய அவளது எண்ணத்தையும் மாற்றினான்.
ஓராண்டு கழித்து அவனது கல்லூரி படிப்பிற்காகவும் அவள் அத்தையின் மருத்துவதிற்காகவும் சென்னை வந்தனர். சென்னை வந்த பிறகு ஒருமுறை கூட அவள் தந்தை மற்றும் தங்கையை போய் பார்க்கவில்லை. மனதினுள் அவர்களை பார்க்கும் ஆசை இருந்தாலும் அவர்கள் அதை விரும்பமாட்டார்கள் என்பதால் தவிர்த்தாள். 
இப்பொழுது சேர்ந்த பள்ளியில் கிடைத்த அருமையான தோழி தான் கீதா.  பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த போதிலும் மாமாவிற்கு கஷ்டம் கொடுக்க விரும்பாமல் விலங்கியல் இளங்கலையில்(B.Sc Zoology) தான் தனக்கு விருப்பம் இருப்பதாக கூறி சேர்ந்தாள். கீதாவும் அவளுடன் அதே கல்லூரியில் அதே பிரிவில் சேர்ந்து இருந்தாள். 
வாழ்க்கை அவளுக்கு இனிமையாக சென்றுக் கொண்டிருந்தது. மகிழ்ச்சியாக பாட்டம்பூச்சியை போல் சுற்றிக் கொண்டிருந்தாள். ஆனால் அது அவளுக்கு நிலைக்கவில்லை.
அவள் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தாள். அவள் மாமன் மகன் பெயர்பெற்ற மென்பொருள் நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தான். முதல் மாதம் சம்பளம் வந்ததும் தந்தையிடம் அதை கொடுத்துவிட்டு கல்லூரி நண்பர்களுக்கு விருந்து கொடுக்க சென்றிருந்தான்.
    அன்று நள்ளிரவு அவள் அத்தைக்கு மூச்சு திணறல் எடுத்தது. மருத்துவமனை கூட்டிப்போற நிலையில் அவர் இருக்கவும், வீடு திரும்பியிராத மாமன் மகனை அலைபேசியில் தொடர்புக்கொள்ள முயற்சித்தாள் ஆனால் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்’ என்ற செய்தியே மறுபடியும் மறுபடியும் கிடைத்தது. அதன் பிறகு  நேரத்தை வீணடிக்காமல் அவளும் அவளது மாமாவும் பரபரப்பாக மருத்துவமனைக்கு கிளம்ப தயாராகினர். 
அவர்கள் வீட்டை பூட்டும் நேரத்தில் நண்பனுடன் வண்டியில் வந்து இறங்கிய மகனை பார்த்த அவள் மாமா கலங்கிய குரலில், “நல்லவேளை வந்த! அம்மாக்கு ரொம்ப முடியலை.. ஹாஸ்பிடல் போகணும்.. எனக்கு கையெல்லாம் நடுங்குது நீ காரை எடு” என்றார். 
தந்தையின் கலக்கம் கண்டு மறுக்க முடியாமல் வண்டியை கிளப்பப் போனான்.
அவன் நண்பன் அவன் காதில், “இந்த நிலைமையில் வேண்டாம் டா!”
“நான் பார்த்துக்கிறேன்.. நீ கிளம்பு” என்றவன் நண்பர்களின் வற்புறுத்தலில் அன்று தான் முதல் முறையாக சிறிது குடித்திருந்தான். தனது இந்த செய்கை தன் குடுபத்தையே அழிக்க போவதை அறிந்திருந்தால் குடித்திருக்க மாட்டானோ! இல்லை குறைந்தது வண்டியை ஓட்டாமலாவது இருந்திருப்பானோ!
அவன் நண்பன் மனம் கேட்காமல் அவர்கள் வண்டியை தொடர்ந்து தனது இருசக்கர வண்டியில் சென்றான்.
இனியமலர் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த மாமன் மகன் அருகே முன் இருக்கையில் அமர்ந்து இருக்க, அவள் மாமா பின் இருக்கையில் மனைவியை மடியில் தாங்கியபடி கலங்கிய மனதுடன் அமர்ந்திருந்தார். அவர் இருந்த மன நிலையில் மகனின் தடுமாற்றத்தை கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து இனியமலர் அவனது தடுமாற்றத்தை கவனித்த போது நிலைமை கை மீறி இருந்தது. ஆம் அவன் எதிரே வேகமாக வந்த லாரியுடன் மோதியிருந்தான் ஆனால் மோதுவதற்கு ஒரு நொடி முன் இடதுப்புற கதவை திறத்து இனியமலரை வெளியே தள்ளியிருந்தான்.
நொடிபொழுதில் நடந்து முடிந்திருந்தது அந்த விபத்து. 
அவன் நண்பன், “வண்டியை எடுக்காதேனு சொன்னேனே டா!” என்று அலறியபடி தனது வண்டியை கீழே போட்டபடி நண்பன் வண்டி அருகே ஓடினான்.
லாரி ஓட்டுனர் தப்பித்து ஓடியிருந்தான் ஏனெனில் அவன் மேல் தான் தவறு முழுவதும் இருந்தது. நள்ளிரவு என்பதால் ஒரு வழிப்பாதையில் சட்டென்று நுழைந்திருந்தான், அதுவும் அதி வேகமாக வந்திருந்தான். இனியமலரின் மாமன் மகன் நிதானத்தில் இருந்து இருந்தால் விபத்தை தவிர்த்து இருப்பான்.
கீழே விழுந்ததில் சில சிராய்ப்புகளுடன் தப்பிய இனியமலர் சிறிது சிரமத்துடன் வண்டி அருகே ஓடினாள்.
நள்ளிரவு என்பதால் ஆட்கள் யாருமில்லை. அந்த நண்பனும் இனியமலரும் சேர்ந்து மூவரையும் வண்டியின் வெளியே இழுத்தனர். அவளது அத்தை விபத்தில் இறந்து இருக்க, மாமன் மகன் கடைசி விநாடிகளை எண்ணிக் கொண்டிருக்க மாமா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இனியமலர் அதிர்ச்சியுடன் அழுதுக் கொண்டிருக்க, அந்த நண்பன் தான் முதலுதவி வண்டியை தனது கைபேசியில் இருந்து அழைத்தான்.
இனியமலர் மாமன் மகனின் கையை பிடித்து கேவலுடன், “அண்ணா.. அண்ணா.. என்னை பாருங்க” என்றாள்.
அவளது கதறலில் சிறிது கண்ணை திறந்தவன் சிரமத்துடன் மறு கையை மெல்ல தூக்கி அவள் கன்னத்தில் வைத்து, “என்னை மன்னிச்சிடு டா.. பிரெண்ட்ஸ் கம்பல் பண்ணதால் கொஞ்சமா குடிச்சேன்.. உன்னை இப்படி தனியே தவிக்க விட்டுட்டு போவேன்னு தெரிந்து இருந்தால் சத்தியமா குடிச்சு இருக்க மாட்டேன்.. என்னை மன்னி……………” என்று சிரமத்துடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவன் உயிர் பிரிந்து இருந்தது. 

Advertisement