Advertisement

இதழ் 15
தனது மெதுவோட்டத்தை முடித்துக் கொண்டு வீட்டின் கூடத்திற்குள் நுழைந்த சர்வேஷ் தனது கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தான். மீண்டும் மீண்டும் கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தான்.
சோபாவில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த ப்ரனேஷ் புன்னகையுடன், “போதும் டா.. வந்து உட்காரு” என்றான்.
சர்வேஷ் சோபாவில் அமர்ந்தபடி, “இன்னைக்கு புயலுடன் கூடிய மழை தான்”
ப்ரனேஷ் மென்னகை புரிந்தான்.
சாரதா வந்து மகனிற்கு சத்துமாவு கஞ்சி கொடுக்கவும் அதை பருகியபடி, “என்ன விஷயம் சார்?” என்றான்.
“ஏன் நான் விஷயம் இருந்தால் தான் வரணுமா?”
“இல்லை தான் ஆனால் நீ விஷயம் இல்லாமல் வர மாட்டியே! அதுவும் இப்படி சொல்லாமல் கொள்ளாமல்”
“நீ கல்யாண பத்திரிக்கை தருவது போல் தெரியலை அதான் நான் கொடுக்கலாம் னு வந்தேன்” என்றதும் சர்வேஷிற்கு பொறை ஏறியது.
சாரதா மகிழ்ச்சியுடன், “நிஜமாவாடா சொல்ற?” என்று வினவினார்.
ப்ரனேஷ் புன்னகையுடன், “இப்போ இல்லை ஆனால் கூடிய சீக்கிரம் தருவேன்”
சாரதா, “ரொம்ப சந்தோஷம் டா.. அக்கா ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவா”
ப்ரனேஷ் சர்வேஷை பார்த்து, “என்ன டா அமைதியா இருக்கிற?”
“நீ கொடுத்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளல”
“என் கல்யாணம் அவ்ளோ பெரிய அதிர்ச்சியாவா இருக்குது?”
“பின்ன இல்லையா?”
“சரி நீ எப்போ தரப் போற?”
“நானா மாட்டேன் னு சொல்றேன்” என்றவன், “சரி உன் விஷயத்திற்கு வா”
“பொண்ணு பார்க்க தான் வந்திருக்கிறேன்”
“என்ன டா சொல்ற? பெரியம்மா பெரியப்பா இல்லாம தனியாவா?”
“இது வேற மாதிரி பொண்ணு பார்க்கிறது..”
“என்னைக்கு தான் புரியுற மாதிரி பேசுவ?”
“அது ஒரு பெரிய கதை.. அப்பறம் சொல்றேன்.. நீ போய் குளிச்சு கிளம்பு..”
“ஏன் டா இப்படி சஸ்பென்ஸ்ஸில் வைக்கிற?”
ப்ரனேஷ் சிரிக்கவும் சர்வேஷ் முறைத்தான்.
சாரதா, “பொண்ணு பெயர் என்ன?”
ப்ரனேஷ் நெஞ்சம் நிறைந்த காதலை கண்ணில் தேக்கியபடி, “இனியமலர்” என்று மென்மையாக உச்சரித்தான்.
சாரதா, “அருமையான பெயர்..” என்றவர், “அந்த பொண்ணை லவ் பண்றியா?”
ப்ரனேஷ் பதில் சொல்லும் முன் சர்வேஷ் புன்னகையுடன், “அதான் அகத்தின் அழகு முகத்தில் தெரியுதே!” என்று கூறி ப்ரனேஷிடம், “சொல்லவே இல்லை பார்த்தியா? எத்தனை முறை கேட்டு இருப்பேன்!” என்று சிறு ஆதங்கத்துடன் கேட்டான்.
ப்ரனேஷ், “சாரி டா.. சொல்ற மாதிரி சூழ் நிலை இல்லை.. கண்டிப்பா விவரமா சொல்றேன்.. இப்போ போய் நீ கிளம்பு”
“என்னமோ சொல்ற! நானும் போறேன்” என்று கூறி தன் அறைக்கு சென்றான்.
“சித்தி நான் இங்கே வந்திருப்பது அப்பா அம்மாவிற்கு தெரியாது.. சாயுங்காலம் பேசிக்கோங்க..” என்ற ப்ரனேஷ் சாரதா கேள்வி கேட்கும் முன், “நானும் கிளம்பிட்டு வரேன்” என்று கூறி அவன் அறைக்கு சென்றான்.
இருவரும்குளித்து கிளம்பி காலை உணவிற்காக உணவறைக்கு வந்தனர்.
சாரதா இருவருக்கும் உணவை பருமாரினார்.
“நீங்களும் உட்காருங்க சித்தி” என்று ப்ரனேஷும், “நீங்களும் உட்காருங்க மா” என்று சர்வேஷும் ஒன்றாக கூறினர்.
சாரதா புன்னகையுடன், “எனக்கு கொஞ்சம் நேரமாகனும்.. நீங்க சாப்பிடுங்க” என்றார்.
சர்வேஷ், “அப்புறம் என்ன பிளான்? நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகவா இல்லை உன்னுடன் எங்கேயும் வரணுமா?”
ப்ரனேஷ் புன்னகையுடன், “உன்னுடன் நான் ஸ்கூலுக்கு வரேன்”
“என்ன பிளான்?”
“சொல்றேன்”
“என் மண்டை காய விடுறதில் அப்படி என்னடா சந்தோசம்!”
ப்ரனேஷ் சிரிக்கவும் சர்வேஷ் முறைத்தான். 
[ஒரே ஒரு நாள் அதுவும் கொஞ்ச நேரத்துக்கே இவ்ளோ டென்ஷன் ஆகுறியே சர்வா! நாங்க எவ்ளோ நாள் மண்டை காஞ்சோம் னு நீங்க எல்லோரும் சொல்றது எனக்கு இங்கே வரை கேட்குது.. ஹீ ஹீ ஹீ.. இன்னைக்கு இனியா யாருன்னு confirm ஆகிடும்.. இப்போ கூட அன்புவா ப்ரனிஷாவா னு சொல்ல மாட்டிக்கிறீயே னு திட்டபிடாது.. என்ன இருந்தாலும் ப்ரனேஷ் சொன்னா தானே நல்லா இருக்கும்.. அதான்]
சாரதா, “சொல்லாமல் எங்கே போக போறான்.. சாப்பிடு” என்றார்.
இருவரும் உணவை முடித்துக் கொண்டு சர்வேஷின் பள்ளிக்கு சென்றனர்.
பள்ளியில் தனது அறைக்கு சென்றதும் சர்வேஷ், “இப்பவாது சொல்லு”
“சொல்றேன்.. அதற்கு முன் உன் பிரெண்ட்-டை வரச் சொல்”
“யாரை சொல்ற?”
“நல்லவள் வல்லவள் நாலும் தெரிந்தவள்.. ரொம்ப டிப்பிரென்ட் அது இது னு பில்ட்-அப் கொடுத்து, தோழமையுடன் தான் பழக விரும்புறேன்னு சொன்னியே அவளைத் தான் சொல்றேன்”
சர்வேஷ் யோசனையுடனும் குழப்பத்துடனும் பார்க்கவும் ப்ரனேஷ், “என்ன டா?”
“ப்ரனிஷாவை எதுக்கு கூப்பிட சொல்ற? அதுவும் ஒருமையில் பேசுற? அன்னைக்கு சொன்னப்ப கூட தெரிந்த மாதிரி சொல்லலை? இல்லை.. இனியமலருக்கு தெரிந்தவங்களா?”
“ஸ்கூல் நடத்துறேன் னு டீச்சர் மாதிரி இப்படி கேள்வி மேல் கேள்வியா கேட்காத டா”
“டேய்”
“நீ முதலில் உன் பிரெண்ட்-டை வரச் சொல்லு”
“நீ ஒரு இம்சை டா” என்றவன் பியூனை அழைத்து ப்ரனிஷாவை அழைக்குமாறு கூறினான்.
ஐந்து நிமிடத்தில், “மே ஐ கம் இன் சார்?” என்ற குரலில் அவ்வளவு நேரம் அமைதியாக இருப்பது போல் வெளியே காட்டிக் கொண்ட ப்ரனேஷிடம் வெளிப்படையாகே பரபரப்பு தெரிந்தது.
சர்வேஷ் தமையனை பார்த்தபடி, “எஸ்” என்றான்.
உள்ளே வந்த ப்ரனிஷா, “குட் மார்னிங் சார்”
“குட் மார்னிங்”
“என்ன விஷயமா வர சொன்னீங்க?”
சொல்வதறியாது ஒரு நொடி சர்வேஷ் திணற, அவனை காப்பது போல் ப்ரனேஷ், “நான் தான் வர சொன்னேன்” என்றான்.
அப்பொழுது தான் அவன் பக்கம் திரும்பிய ப்ரனிஷா அடுத்து சர்வேஷை யோசனையுடன் பார்த்து, “இவங்க யாரு சார்?” என்று வினவினாள்.
சர்வேஷ் குழப்பத்துடன் தமையனை பார்க்க, அவனோ கண்ணில் காதலுடன் மென்மையான குரலில், “எப்படி இருக்கிற இனியா?” என்றான்.
சர்வேஷ் அதிர்ச்சியுடன் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தான். ப்ரனிஷா இனியமலரின் தோழியாக இருப்பாள் என்று நினைத்தவன் அவள் தான் இனியமலர் என்பதை சற்றும் எதிர் பார்க்கவில்லை.
ப்ரனிஷாவோ புருவத்தை சுருக்கி, “என் பெயர் ப்ரனிஷா.. நீங்க வேற யாரோ னு நினைத்து என்னிடம் பேசுறீங்க னு நினைக்கிறேன்”
ப்ரனேஷ் புன்னகையுடன், “பெயரை மாற்றினால் எனக்கு என் உயிரில் கலந்தவளை அடையாளம் தெரியாதா?”
ப்ரனிஷா சிறு படபடப்புடன், “என்ன உளறல்? நான் ஏன் சார் பெயரை மாற்றனும்? என் பெயர் ப்ரனிஷா தான்” என்றவள் சர்வேஷ் பக்கம் திரும்பி, “என்ன சார் இதெல்லாம்?”
சொல்வதறியாது திணறிய சர்வேஷ் தமையனை பார்த்து, “என்ன டா?”
“இவ என் இனியா தான்” என்றவனது பேச்சு சர்வேஷிடம் என்றாலும் பார்வையோ ப்ரனிஷாவிடம் இருந்தது. பல வருடங்கள் கழித்து தன்னவளை பார்த்தவனது கண்கள் அவளை விட்டு சற்றும் நகரவில்லை.
கோபத்துடன் ப்ரனேஷை பார்த்து, “உங்கள் உளறலை கேட்க எனக்கு நேரமில்லை” என்று படபடத்த ப்ரனிஷா சர்வேஷிடம் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினாள்.
சர்வேஷ், “நிஜமா ப்ரனிஷா தான் இனியமலரா?”
ப்ரனேஷ் அமைதியாக ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினான்.
சர்வேஷ், “அவங்க கல்யாணம் ஆனவங்க!”
“உனக்கு எப்போ தெரியும்?”
“என்ன?”
“அன்னைக்கு பேசும் போது கல்யாணம் ஆனதா நீ சொல்லலையே!”
“நேத்து தான் தெரியும்”
“ஓ!” என்றவன், “அப்போ அது முறிந்து மூன்று வருடங்கள் ஆகிறது-னும் தெரிந்து இருக்குமே!”
“என்னடா சொல்ற?” என்று சர்வேஷ் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“எதுக்கு இவ்ளோ ஷாக்?”
“விவாகரத்து ஆனது தெரியும் ஆனா..”
“என்ன?”
“விவாகரத்து ஆகி மூன்னு வருஷம் னு சொல்ற!!!! ஆனா அபிக்கு ரெண்டரை வயசு தான் ஆகுது”
“அபிசாரா” என்று மென்னகையுடன் மென்மையாக சொல்லிப் பார்த்தவன், “அழகான பெயர் இல்லையா டா! அபிசாரா அர்த்தம் தெரியுமா? ‘ஒளியை தருபவள்’ என்பது தான் அர்த்தம்.. தன் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்து ஒளியாக இருக்கிறாள் என்ற அர்த்தத்தில் தான் இந்த பெயரை வைத்திருக்கிறாள்”
ப்ரனேஷின் முகத்தில் தெரிந்த காதலை, பாசத்தை, பரவசத்தை பிரம்மிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் ப்ரனேஷ் போட்ட முடிச்சுக்களை அறிந்துக் கொள்ளும் நோக்கத்துடன், “டேய்!” என்று அழைத்தான்.
“என்ன டா?”
“கேட்டதுக்கு பதிலை சொல்லித்தொலை டா.. காலையில் இருந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சியா கொடுத்துட்டு இருக்கிற! இதற்கு மேல் என் இதயம் தாங்காது டா”
“நான் இருக்க பயம் ஏன்?”
“நீ தான் என் பயமே”
“என்ன பயம்?”
“இன்னும் என்னவெல்லாம் சொல்லி என் இதயத்தை ஓய்க்கப் போறியோ!!”
ப்ரனேஷ் வாய்விட்டு சிரிக்க, சர்வேஷ் முறைத்தான்.
சர்வேஷ் கடுப்புடன், “இப்போ சொல்ல போறியா இல்லையா?”
ப்ரனேஷ் மெல்லிய புன்னகையுடன் உறுதியான குரலில், “அபிசாரா என் மகள்”
சர்வேஷ் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்தான். 
[ஐயோ! அடுத்த முடிச்சா! இப்போ தானே ஒன்னு முடிவிற்கு வந்தது னு அலறக் கூடாது]
ப்ரனேஷ் அமைதியாக துப்பறிவாளர் அனுப்பிய விவரங்கள் அடங்கிய கோப்பியத்தை அவனிடம் நீட்டினான்.
சர்வேஷ், “என்ன?”
“படிச்சு பார்”
அதை படித்து முடித்த சர்வேஷ் மீண்டும் அதே கேள்வியை தான் கேட்டான்.
சர்வேஷ் உண்மையை நம்பியும் நம்பாமலும், “நிஜமாவே ப்ரனிஷா இனியமலர் தானா?” என்று மீண்டும் கேட்டான்.
“..”
“இப்போ புரியுது அவங்க ஏன் தன்னை பற்றி சொல்லிகொள்ளவில்லை னு.. ஆனா அவங்க மனசை மாற்றுவதற்கு கொஞ்சம் இல்லை ரொம்பவே நீ கஷ்டப்படனும்”
ப்ரனேஷ் மெலிதாக புன்னகைக்க, சர்வேஷ், “நேத்து அவங்க வீட்டிற்கு போன போது ‘இன்னொரு முறை ஒரு ஆண் கையில் என் வாழ்க்கையை கொடுக்க எனக்கு துளியும் விருப்பம் இல்லை’ னு சொன்னாங்க..”
“ஆனா என்னை நம்புவாள்” என்று ப்ரனேஷ் உறுதியாக கூறினான்.
“எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற?”
ப்ரனேஷ் சிறு புன்னகையுடன் தன் காதல் கதையை கூறினான்.
சர்வேஷ், “நீ அந்த கேம்ப்புக்கு போகாமல் இருந்து இருக்கலாம்” 
பெருமூச்சொன்றை வெளியிட்ட ப்ரனேஷ், “அதை பற்றி நான் நினைக்காத நாள் இல்லை.. அங்கே போகாமல் இருந்து இருந்தால் என் இனியாவை நான் இழந்து இருக்க மாட்டேன்”
“இப்பவும் நீ இழக்கவில்லை” என்று ப்ரனேஷின் தோளை சர்வேஷ் தட்டிக் கொடுத்தான்.
ப்ரனேஷ் புன்னகையுடன், “இழக்க மாட்டேன்” என்று உறுதியுடன் கூறினான்.
“ஆனா கஷ்டபடனும்”
“இத்தனை நாள் பட்ட கஷ்டத்தை விடவா பெருசு!”
“ஹ்ம்ம்.. அவங்க மனசில் தாழ்வு மனப்பான்மையும் இருக்கிறது”
ப்ரனேஷ் யோசனையாக பார்க்க, சர்வேஷ், “மற்றவர்கள் ஏற்படுத்திய காயங்கள் அவங்களுக்குள் இந்த எண்ணத்தை விதைத்து இருக்கிறது னு நினைக்கிறேன்.. தான் ராசி இல்லாதவர் என்று நினைக்கிறாங்க.. அம்மாவையே நெருங்கி பழக வேண்டாம் னு சொல்றாங்க.. கேட்டா ‘என் ராசி உங்களையும் வருத்தும்’ னு சொல்றாங்க”
ப்ரனேஷ் கோபத்துடன் கை முஷ்டியை இறுக்கி, “அந்த நாகேஷ்வரிக்கு ஏதாவது செய்யணும் டா”
“நிச்சயம் செய்யலாம்.. முதலில் ப்ரனிஷாவை கவனி”
“ஹ்ம்ம்..”
“ஆனா உன்னை பற்றி இதில் இல்லையே?” என்று கோப்பியத்தை சுட்டிக் காட்டினான்.
“என்னை பற்றியோ எங்க காதலை பற்றியோ யாருக்கும் தெரியாது”
“கடைசியா நீ பேசிய போது ப்ரனிஷா கூட இருந்த பிரெண்ட்?”
“அது கீதா தான்.. ஒரு முறை பார்த்த என்னை மறந்து இருக்கலாம்”
“ப்ரனிஷாவிற்கு நிஜமாவே உன்னை தெரியலையா?”
ப்ரனேஷ் புன்னகையுடன், “நீ என்ன நினைக்கிற?”
“இருந்த அதிர்ச்சியில் சரியா கவனிக்கலை”
“என்னை அவள் நிச்சயம் மறந்து இருக்க மாட்டாள்..”
“உன்னை பார்த்த போது சிறு அதிர்ச்சி கூடவா இருந்திருக்காது?”
“நிச்சயம் இருந்து இருக்கும்.. அனேகமா அவ(ள்) ரூமிற்கு வருவதற்கு முன்னாடியே என்னை பார்த்து இருக்கணும்.. ‘என் உயிரில் கலந்தவள்’ னு நான் சொன்னதை கேட்டு அவள் படபடத்ததே அவள் என்னை மறக்கவில்லை என்பதை உறுதி செய்யுது”
“ஆண்கள் விஷயத்தில் பொதுவாவே அவங்க டென்ஷன் ஆவாங்க”
“இருக்கலாம் ஆனால் இதே இது வேறு யாராவது அப்படி சொல்லி இருந்தால் அமைதியா வெளியே போயிருக்க மாட்டா”
“ஹ்ம்ம்.. அதுவும் சரி தான்.. அடித்துக் கூட இருக்கலாம்”
ப்ரனேஷ் மனக்கண்ணில் முதல் முறையாக அவளை சந்தித்த நிகழ்வு படமாக ஓட அவன் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.
சர்வேஷ் மென்னகையுடன், “என்னடா மலரும் நினைவுகளா?”
“ஹ்ம்ம்.. முதல் முறை அவளை பார்த்த போது படபட பட்டாசா தான் இருந்தா ஆனா அதுக்கு அப்பறம் பார்த்த போதெல்லாம் பெயரிற்கு ஏற்றார் போல் இனிமையான மென்மையான மலரை போல் இருந்தா”
“இங்கே ஸ்கூலில் கேட்டுப் பார்.. யாரும் அவங்களை மென்மையானவங்க னு சொல்ல மாட்டங்க”
“ஏன்?”
சுகுணாவுடன் நடந்த பிரச்சனையை பற்றி கூறிய சர்வேஷ், “இப்படி தைரியமா இருக்கிறவங்க எப்படி ‘ராசி’ அது இது னு யோசிக்கிறாங்க?”
“அது அப்படி இல்லை.. அந்த நாகப்பாம்பு ராசி பற்றி ரொம்ப வருஷம் அவ மனதில் உரு ஏற்றி இருக்கலாம்.. இல்லை அசோக்(கல்யாணத்திற்கு சில நிமிடங்கள் முன் இறந்த ப்ரனேஷின் நண்பன்) இறப்பிற்கு பிறகு பலர் ஏற்படுத்திய காயத்தின் விளைவாக இருக்கலாம்.. ஆனா அவளோட நேற்றைய கோபம் அபி மனதை வருத்தியதால் வந்தது”
“ஹ்ம்ம்.. இருக்கலாம்” என்றவன், “ஏன் உன்னை தெரியாது போல் நடந்துக்கணும்?”
“நிறைய காரணம் இருக்கலாம்”
“அப்படி என்ன காரணங்கள்?”
“இப்போ அவள் ப்ரனிஷா.. நான் அவளை இனியா னு கூப்பிட்டேன்.. அதனால் வம்பு பேச்சு வருமே னு நினைத்து இருக்கலாம்..
கடந்த காலத்தின் சுவடு திரும்ப வேண்டாம் னு நினைக்கலாம்..
என்னை அவாய்ட் பண்ண நினைக்கலாம்.. 
அவளது இக்கட்டான சூழ்நிலையில் அவளை நான் காக்க வரலைன்னு என் மேல் கோபம் இருக்கலாம்..”
“நீ என்ன டா செஞ்ச? உன் சூழ்நிலை…………….”
“நான் கொஞ்சம் நிதானித்து அவளை பற்றி விசாரித்து இருந்தால் அசோக் இறந்ததும் நான் அவளை காப்பாற்றி இருக்கலாம்!” என்று வேதனையுடன் கூறியவன், “அவள் மனதில் என்ன இருக்கிறதுன்னு போக போக தான் தெரியும்.. என் மேல் கோபம் இருக்கலாம் ஆனா வெறுப்பு நிச்சயம் இருக்காது.. அவள் மனதில் புதைந்து இருக்கும் என் மேலான காதலிற்கு நான் உயிர் கொடுப்பேன்” 
“இருவரும் சேர்ந்தால் சரி”
“நான் இன்னமும் அவளை பாதிக்கிறேன் என்றால் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து லீவ் சொல்லிட்டு வீட்டிற்கு கிளம்புவா”
“பார்க்கலாம்”
“நிச்சயம் வருவாள்”
“சரி.. அடுத்து என்ன செய்ய போற?”
“இன்னைக்கு சென்னை கிளம்புறேன்”
“டேய்!”
ப்ரனேஷ் புன்னகையுடன், “ரெண்டு நாளில் வந்திருவேன்.. அப்பறம் ஒரு வாரம் உன் ஸ்கூலில் இருப்பவங்களுக்கு மெடிக்கல் செக்-அப் பண்ண போறேன்.. அதுக்கு உதவியா இனியாவை என்னுடன் இருக்க சொல்ல போற நீ”
“அட பாவி”
“நான் அப்பாவி டா”
“யாரு நீ தானே!”
“எஸ்”
அப்பொழுது ‘மே ஐ கம் இன் சார்’ என்ற ப்ரனிஷாவின் குரல் கேட்கவும் சர்வேஷ் சிறு ஆச்சரியம் கலந்த மெச்சுதல் பார்வையுடன் ப்ரனேஷை பார்க்க, அவனோ புன்னகைத்தான்.
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement