Advertisement

இதழ் 14
திருநெல்வேலியில் ப்ரனிஷா மகளை மடியில் வைத்துக் கொண்டு, “சாரி டா குட்டிமா.. ரொம்ப பயந்துட்டீங்களா? அம்மா இனி அப்படி கோபப்பட மாட்டேன்.. அந்த மேம் ரொம்ப பேட்.. அதான் அம்மா அப்படி கோபப்பட்டேன்” என்று மீண்டும் சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள்.
குழந்தை, “இத்ஸ்(இட்ஸ்) ஓதே(ஓகே) மா.. பாப்பா சிரிச்சா அம்மா சிரி” என்று கூறி சிரிக்கவும் குழந்தையை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
குழந்தை மறு கன்னத்தை காட்டவும் புன்னகையுடன் அந்த கன்னத்திலும் முத்தமிட்டாள். குழந்தையும் சிரித்தது. 
அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் ‘யாராக இருக்கும்?’ என்ற யோசனையுடன் ப்ரனிஷா எழ, குழந்தை, “அன்பு சித்தி.. பாப்பா பாஸ்தா ததுவா” என்றது.
ப்ரனிஷா, “சித்தியா! அன்பு சொல்லி கொடுத்தாளா?”
குழந்தை புன்னகையுடன், “ஹ்ம்ம்.. சித்தி தான் அப்தி சொன்னா”
“சொன்னாங்க சொல்லணும்”
குழந்தை மறுப்பாக தலையை ஆட்டி, “சொன்னா” என்றது.
ப்ரனிஷா செல்லமாக முறைக்கவும் மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது. 
“இரு உன்னை வந்து கவனிக்கிறேன்” என்றபடி கதவை திறந்தவள் திகைத்தாள். 
ஏனெனில் அங்கே நின்றுக் கொண்டிருந்தது சர்வேஷும் சாரதாவும். சர்வேஷ் அவள் வீட்டிற்கு வருவது இதுவே முதல் முறை.
குழந்தை, “சாரு பாட்டி” என்று குதுகலத்துடன் அவரிடம் செல்லவும் சுதாரித்த ப்ரனிஷா, “வாங்க” என்றபடி நகர்ந்தாள்.
சாரதா புன்னகையுடன் குழந்தையை தூக்கியபடி, “எப்படி இருக்கீங்க செல்ல குட்டி?” என்று வினவியபடி உள்ளே வந்தார்.
குழந்தை, “நல்லா இருதேன்”
சர்வேஷ் சிறு தயக்கத்துடன் உள்ளே வந்தான்.
ப்ரனிஷா, “உட்காருங்க.. இதோ வந்துடுறேன்” என்றபடி நகர பார்க்க, 
சாரதா, “எதுவும் வேணாம்.. வந்து உட்கார்”
“இல்லை மேடம்.. காபி தான் போட போறேன்”
அவர் முறைக்கவும் அவள், “என்ன மேடம்?”
“என்னை எப்படி கூப்பிட சொன்னேன்?”
“இல்லை.. மேடம்.. அது சரி வராது”
“உன்னை அம்மா னு தானே கூப்பிட சொன்னேன்! ஆன்ட்டி-னோ அத்தை-னோ கூப்பிட சொல்லலையே!”
“..”
“என்ன?”
“நீங்கே என்னிடம் இருந்து தள்ளி இருப்பது தான் உங்களுக்கு நல்லது மேடம்”
சாரதா நிஜமாக முறைத்தபடி, “இந்த எண்ணத்தை விட மாட்டியா?”
சர்வேஷ் புரியாமல் பார்க்கவும் அவர், “அவள் ராசி இல்லாதவளாம்.. நான் அவளுடன் நெருங்கி பழகினால் எனக்கு தேவை இல்லாத பிரச்சனைகள் தான் வருமாம்” என்று கோபத்துடன் கூற,
சர்வேஷ் ஆச்சரியத்துடன் அவளை பார்த்து, “உங்களை போல்ட் பெர்சன் னு நினைத்தேன்.. உங்களிடம் இதை நிச்சயம் எதிர் பார்க்கவில்லை”
அவள் அமைதியாக இருக்கவும் அவன், “அபி உங்களுடன் இருப்பதால் தானே சந்தோஷமா இருக்கிறாள்” என்றதும் அவள் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
சாரதா, “என் கணவர் இறந்த போது இதை போல் பல பேச்சுக்களை நானும் கேட்டிருக்கிறேன்.. அதில் துவண்டு போனால் வாழ்க்கையை ஜெய்க்க முடியாது” 
“சரி மேடம்”
அவரது முறைப்பில், “சரி.. மா” என்று சிறு திணறலுடன் கூறினாள்.
“ஒரு நிமிஷம்.. இதோ வந்துறேன்” என்றபடி அவள் நகர பார்க்க,
அவர் மீண்டும், “எதுவும் வேண்டாம் னு சொன்னேனே”
“தண்ணியாவது கொண்டு வரேன்” என்றபடி உள்ளே சென்று இரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தாள்.
அபிசாரா, “அம்மா.. எனத்து(எனக்கு)என்றதும் அவளது தண்ணீர் பாட்டிலை கொடுத்தாள்.
அவள் சர்வேஷை பார்த்து, “என்ன விஷயம் சார்?”
சாரதா, “நாம ‘பேபி-டி.வி’ பார்க்கலாமா?” என்று கேட்டபடி குழந்தையை தூக்கிச் சென்றார்.
சர்வேஷ், “சாரி…………..”
“நீங்க எதுக்கு சார் சாரி கேட்கிறீங்க? என்னால் தான் உங்கள் பெயருக்கு இழுக்கு.. நான் தான் சாரி கேட்கணும்”
“உங்கள் மேல் ஏதும் தப்பு இல்லையே! இதுக்கும் நீங்க ஒதுங்கித் தான் போனீங்க.. உங்கள் ஒதுக்கதிற்கான காரணம் எனக்கு இப்போ புரியுது.. நான் கூட உங்கள் ஒதுக்கதிற்கு அபியின் அப்பா தான் காரணமோ னு  நினைத்தேன்.. (அவளிடம் சிறு இறுக்கம் வந்து போனது) ஆனால் அதற்கு காரணம் இந்த ஸோசைட்டி னு இப்போ தான் புரியுது.. உங்களிடம் ஸ்கூலில் பேச முடியாதுன்னு தான் வீட்டிற்கு வந்தேன்.. மற்றவர்கள் தப்பா ஏதும் நினைக்க கூடாதுன்னு தான் அம்மாவை கூட்டிட்டு வந்தேன்”
“..”
“இப்பவும் நான் உங்களை என் தோழியா தான் நினைக்கிறேன்.. உங்களின் திறமையும் தைரியமும் நான் வியக்கும் விஷயம்.. அதனாலேயே நான் உங்களுடன் தோழமையுடன் பழக நினைக்கிறேன்.. இன்று நடந்த விஷயத்தில் நீங்க நம்ம ஸ்கூலை விட்டு……………..”
“போக மாட்டேன்.. இந்த மாதிரி பேச்சுக்கள் எல்லா இடத்திலும் இருப்பது தான்.. நான் என்னை பற்றி சொல்லாமல் இருந்தது அதிக பேச்சிற்கு இடம் கொடுத்து விட்டது”
“ஏன்?”
“புரியலை”
“உங்களை பற்றி ஏன் சொல்லவில்லை? என்ன பிரச்சனை? நான் தெரிந்துக்கலாமா? கட்டாயம் இல்லை.. சொல்ல விருப்பப்பட்டால் சொல்லுங்க”
அவள் சிறு ஆச்சரியத்துடன் பார்க்கவும் அவன், “என்ன?”
“உங்க(ள்) அம்மா கிட்ட கேட்கலையா?”
“முதலில் அம்மா சொல்ல வந்த போது நான் கேட்கலை.. அப்பறம் நீங்க என் தோழமையை ஏற்றால் விருப்பம் இருந்தால் நீங்களே சொல்லுவீங்க னு விட்டுட்டேன்”
“தேங்க்ஸ்”
சில நொடிகள் மௌனத்தில் கழிய, அவன், “உங்கள் கணவர்?”
அவள் மெல்லிய புன்னகையுடன், “சொல்ல விருப்பம் இருந்தால் தானே சொல்ல சொன்னீங்க”
அவனும் மெல்லிய புன்னகையுடன், “அதற்காக நான் கேட்க மாட்டேன் னு சொல்லலையே”
“ஹ்ம்ம்.. அவன் இப்போ எங்கே இருக்கிறான்னு எனக்கு தெரியாது. தெரிந்துக்கவும் விரும்பலை.. நான் தான் டைவர்ஸ் கேட்டேன்.. எப்படி அதை கொடுத்தான் னு எனக்கு இப்போவரை தெரியலை..” என்றவள் தலையை உலுக்கி மெல்லிய புன்னகையுடன், “என் பெயரிற்கு முன் இருக்கும் ‘மிஸ்’-க்கு காரணம் இப்போ உங்களுக்கு சொல்லிட்டேன்”
“இதை ஏன் மறைக்க நினைச்சீங்க னு இப்பவும் எனக்கு புரியலை?”
“என்னை பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம்னு நான் நினைத்ததிற்கு காரணம் வேறு.. முதல் நாள் இந்த வேலை வேண்டாம் னு நான் சொன்னதிற்கு கூட அதான் காரணம்”
“என்ன?”
“என் திருமண வாழ்க்கை தோழ்வியடைந்த போது எனக்கு அடைக்கலம் கொடுத்தது என் தோழி கீதா” என்று ஆரம்பித்து கீதா மற்றும் விமல் பற்றி அன்பரசியிடம் சொன்னதை சொன்னாள்.
அவன் அமைதியாக இருக்கவும் அவள், “என்ன சார் அமைதியாகிட்டீங்க?”
“இதற்காக நீங்க இப்படி அவசர அவசரமா கிளம்பி வந்திருக்க தேவை இல்லையோ னு தோணுது.. விமல் நல்லவரா தான் தெரிகிறார்.. நீங்க சொல்லி புரிய வச்சிருக்கலாம்”
அவள் முகத்தில் எதை கண்டானோ அவன், “வேற எதுவும் இருக்கிறதா?”
எப்பொழுதும் போல் அவனை மனதினுள் மெச்சியவள், “என் கடந்த காலத்தின் சிறு பகுதியை தான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன்.. நீங்க சொன்னது போல் விமல் நல்லவர் தான்.. நான் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் அவர் கேட்கலை.. என் மறுப்பை பொருட்படுத்தாமல் ஒரு வருடம் போராடி அவர் வீட்டில் சம்மதம் வாங்கினார்.. அப்புறம் தான் நான்..” என்று ஏதோ சொல்ல வந்தவள் ஒரு நொடி நிறுத்தி, “அப்பவும் நான் சம்மதிக்கலை.. அதன் பிறகும் ஒரு வருடம் என் சம்மதத்திற்காக காத்திருந்தார்.. கீதா அவரை விரும்புற விஷயம் அவருக்கு தெரியாது.. இப்போ தெரிந்திருக்கலாம்.. அவர் அபியிடம் தன்னை அப்பா என்று சொல்லி கொடுக்க முயற்சிக்கவும் என்னால் அங்கே இருக்க முடியலை.. உடனே அவர் மனம் மாறும் னு சொல்லலை.. ஆனால் மாறும்.. கீதா தான் அவருக்கு ஏற்றவள்”
“இப்போ விமல் உங்களை தேடி வந்தால் என்ன செய்வீங்க?”
“நான் இங்கே இருப்பது அவருக்கு தான் தெரியாதே!”
“அவர் நண்பர் சைபர் கிரைமில் இருப்பதாக சொன்னீங்க.. அது போக ஒரு டிடெக்டிவ் மூலமா கூட உங்களை கண்டு பிடிக்கலாமே! நீங்க சொல்வதில் இருந்து அவர் காதல் ஆழமானதா எனக்கு தோணுது”
“அவர் காதல் ஆழமானதா இருக்கலாம்.. ஆனால் என் மனதில் காதல் இல்லையே!”
“தப்பா நினைச்சுக்காதீங்க.. நீங்க ஏன் அவர் காதலை ஏற்க கூடாது?”
“ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் இருக்க முடியாதா?”
“அப்படி சொல்லலை.. நீங்கள் சொன்னதை வைத்து தான் சொல்றேன்.. அவர் உங்களுக்கு கணவராக மட்டும் ஆசைப்படலை.. அபிக்கு அப்பாவா  இருக்கவும் தான் ஆசைப படுகிறார்.. உங்களுக்காக இல்லை என்றாலும் அபிக்காக அவரை கல்யாணம் செய்யலாமே”
“என் மகளுக்கு அம்மா அப்பா வா நானே இருப்பேன்”
சர்வேஷ் ஏதோ சொல்ல வர அவள், “ப்ளீஸ்.. இதற்கு மேல் இதை பற்றி பேச வேண்டாம்.. இன்னொரு முறை ஒரு ஆண் கையில் என் வாழ்க்கையை கொடுக்க எனக்கு துளியும் விருப்பம் இல்லை.. என் வாழ்க்கையை நானே பார்த்துக்கிறேன்.. என் கடந்த காலத்தை பற்றி உங்களிடம் சொன்னதுக்கு காரணம்…………” என்று அவள் சிறிது தயங்க,
“உங்கள் மனதில் என் மேல் எந்த நோக்கமும் இல்லை என்பதோடு என்றும் அப்படி ஒரு எண்ணம் வராது என்பதை தெளிவுப் படுத்த.. அதுமட்டுமில்லாம என் மனதில் எந்த எண்ணமும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் தான்..” என்று அவன் சொல்லி முடிக்கவும் அவள் ஆச்சரியத்துடனும் நிம்மதியுடனும் அவனை பார்த்தாள்.
அவன், “சரி தானே!”
அவள் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டவும் அவன் சிறு புன்னகையுடன், “கவலைப் படாதீங்க.. நீங்க எப்போதும் எனக்கு நல்ல தோழி தான்..”
அவளும் மெல்லிய புன்னகையுடன், “தேங்க்ஸ்” என்றாள்.
“எதற்கு?”
“என்னை புரிந்து கொண்டதிற்கு”
“அப்போ என்னை புரிந்து கொண்டதிற்காக நான் தேங்க்ஸ் சொல்லனுமா?”
அவள் புன்னகையுடன், “அது உங்கள் இஷ்டம்.. ஆனால் நான் உங்களை போல் இல்லாமல் உங்கள் தேங்க்ஸ் ஏற்றுக் கொள்வேன்”
“அதற்காகலாம் தேங்க்ஸ் சொல்ல முடியாது.. நட்பிற்குள் தேங்க்ஸ் சாரி தேவை இல்லை என்று நினைப்பவன் நான்”
அவள் புன்னகைத்தாள்.
அவன், “அப்பறம்.. சுகுணா மேடத்தை எச்சரிக்கையோடு விட்டதில் உங்களுக்கு வருத்தம் இருக்கிறதா?”
“இல்லை.. நீங்க காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டீங்க னு தெரியும்.. இதில் நீங்களும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அமைதியா இருந்திருக்கலாம்”
“ஹ்ம்ம்.. சரி தான்.. வேறு யாரையாவது பற்றி பேசி இருந்தால் நிச்சயம் சஸ்பென்ஷன் அல்லது வேலையை விட்டு கூட தூக்கி இருப்பேன்.. இப்போ நான் செய்தால் என்னை பேசிய கோபத்தில் செய்ததாக மற்றவர்கள் நினைக்க வாய்ப்பு இருப்பதால் தான் அமைதியா விட்டுட்டேன்.. ஆனால் இதையே அவங்க தொடர்ந்தால் நிச்சயம் வேலையை விட்டு தூக்கிருவேன்” என்றவன் சிரிப்புடன், “ஆனால் இனி உங்களை பற்றி பேசும் தைரியம் அவங்களுக்கு வரும் னு எனக்கு தோணலை”
“அப்படியெல்லாம் சொல்லிட முடியாது.. கொஞ்ச நாள் அமைதியா இருப்பாங்க.. அவ்ளோ தான்.. இந்த மாதிரி ஆட்கள் திருந்த மாட்டாங்க”
“ஹ்ம்ம்.. பார்க்கலாம்.. சரி நான் கிளம்புறேன்” என்றவன், “அம்மா” என்று அழைத்தான்.
சாரதா வரவும் இருவரும் விடைபெற்றனர். 
வண்டியை ஓடிக் கொண்டிருந்த சர்வேஷ் யோசனையில் இருக்கவும் அமைதியாக வந்த சாரதா வீட்டிற்கு சென்றதும், “என்ன யோசனை?” என்று வினவினார்.
“அவங்க முன்னால் கணவரால் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருப்பாங்க போல”
“எதை வைத்து அப்படி சொல்ற?”
“அவரை பற்றி பேசும் போது ஒருமையில் தான் பேசுனாங்க.. அது போக அப்போ அவங்க கண்ணில் வெறுப்பா கோபமா வலியா னு பிரித்தெடுக்க முடியாத ஒரு உணர்வை பார்த்தேன்.. இன்னொரு ஆணை நம்ப அவங்க தயாரா இல்லை.. என்னிடம் தோழமையுடன் பேசினாலும் அதில் ஒரு விலகல் இருப்பது போல் தான் எனக்கு தோணுது..”
“..”
“என்ன மா?”
“நான் என்ன சொல்ல?”
“அவங்க கணவர் பற்றி உங்களுக்கு தெரியுமா?”
“எனக்கு அவளோட திருமண வாழ்க்கையை பற்றி பெருசா எதுவும் தெரியாது”
“அவங்க பெரென்ட்ஸ்?”
“அதுவும் தெரியாது”
“என்ன மா இப்படி சொல்றீங்க? மேரி ஆன்ட்டி கிட்ட பேசலையா நீங்க?”
“மேரி உதவியுடன் தான் வந்திருப்பாள் னு விமலும் கீதாவும் நிச்சயம் கண்டு பிடிச்சிருவாங்க னு தான் அவ போனில் பேசாம லெட்டர் எழுதி கொடுத்திருக்கா.. அது போக அவளுக்குமே இவளை பற்றி முழுசா தெரியாது”
“என்ன மா சொல்றீங்க?”
“இங்கே இருக்கிற அளவு கூட இவ அங்கே இருந்தது போல் தெரியலை.. ரொம்ப அமைதியான பொண்ணு.. தான் உண்டு தன் வேலை உண்டு னு இருப்பா னு தான் மேரி எழுதி இருந்தாள் ஆனா இங்கே…………….”
“இங்கேயும் அப்படி தானே மா இருக்காங்க!”
“அவளை அமைதி னு சொன்னா நீ என்ன சொல்லுவ?”
“அவங்க அமைதி தான் மா.. என்னிடம் அவங்க நடந்துக் கொண்டதை வைத்து அவங்களை கோபக்காரி னு சொல்ல முடியாதே”
“நானும் அப்படி சொல்லலை.. அவளுக்கு கோபப்படவே தெரியாது.. கோபம் னா என்னனு கூட தெரியாது னு மேரி சொல்லி இருந்தாள்.. அது போக அங்கே ஆரம்பத்தில் வாழ்வில் பிடிப்பே இல்லாமல் தான் இருந்து இருப்பா போல.. அபி வந்த பிறகு தான் ஏதோ கொஞ்சமாவது பேச ஆரம்பித்து இருக்கிறாள்.. இங்கே ஸ்டுடென்ட்ஸ் கிட்ட பழகுறது போல் அங்கே பழகி இருக்க மாட்டாள் னு தான் நினைக்கிறன்..”
“இப்போ மேரி ஆன்ட்டி கிட்ட பேசலாமே மா?”
“நானும் யோசித்தேன்.. அப்பறம் வேணாம் னு விட்டுட்டேன்.. அதுக்கு ரெண்டு காரணங்கள்.. ஒன்னு விமலுக்கு இவளை பற்றி தெரிய வந்திரக் கூடாது.. இன்னொன்னு மேரிக்கே இவளை பற்றி பெருசா எதுவும் தெரிந்தது போல் தெரியலை.. இவள் கல்யாண வாழ்க்கை பற்றி கூட அவளுக்கு தெரியாது..”
“..”
“என்ன?”
“கொஞ்ச நாள் கழித்து முடிஞ்சா அவங்களின் கடந்த காலத்தைப் பற்றி கேட்டுப் பாருங்க.. விமலை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டாங்க அதுக்கு கீதா முக்கிய காரணம்.. அவங்க இப்படியே இருக்கணும் னு இல்லையே! விமல் இல்லாட்டி வேற யாரையாவது கல்யாணம் செய்துக்கலாமே! பார்க்கலாம்.. மாற்றம் ஒன்று தானே மற்றம் இல்லாதது”
“ஹ்ம்ம்.. பார்க்கலாம்”  என்றார்.
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement