Advertisement

இதழ் 13
வகுப்பை முடித்துக் கொண்டு ஆசிரியர் அறை செல்ல மனமில்லாமல் உயிரியல் ஆய்வகத்தில் அமர்ந்திருந்த ப்ரனிஷா அருகே அமர்ந்த அன்பரசி, “ஹாட் அண்ட் டாப் டாபிக் நீ தான்”
“தெரிந்தது தானே!”
“யாரும் உன் பர்சனல் விஷயம் பேசலை..”
ப்ரனிஷா சிறு ஆச்சரியத்துடன் நோக்க, அன்பரசி புன்னகையுடன், “நிஜம்.. சுகுணாவிற்கு நீ கொடுத்த அரை பற்றியும் சர்வேஷ் சாரிடம் இழுத்துட்டு போய் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை பற்றியும் தான் பேசிட்டு இருக்காங்க”
“ஆச்சரியம் தான்”
“அதற்கு மகாலட்சுமி மேம் கூட காரணமாக இருக்கலாம்.. அவங்க காரணம் இல்லாமல் வாய் திறக்க மாட்டாங்க..”
“ஹ்ம்ம்.. ஏனோ அவங்களுக்கு என்னை பிடித்திருக்கிறது போல”
“உன் தைரியம் பிடித்து இருக்கலாம்”
“தைரியம்!” என்று விரக்த்தியாக சிரித்தவள், “அது ஏழு ஆண்டுகளுக்கு முன் என்னிடம் இருந்து இருந்தால் என் வாழ்க்கை இப்படி சின்னாப்பின்னமா ஆகியிருக்காது.. பூந்தோட்டம் போன்ற அன்பான குடும்பத்தில் தென்றல் போன்ற காதலுடன் வாழ்ந்துக் கொண்டிருந்திருக்கலாம்” 
“என்ன சொல்ற!”
“ச்ச்.. விடு.. ஏதோ என்னை அறியாமல் உளறிட்டேன்”
அன்பரசி முறைக்கவும், “ப்ளீஸ் அன்பு இப்போ அதை பற்றி பேசும் தெம்பு என்னிடம் இல்லை”
“உன் கஷ்டத்தை என்னிடம் பகிர்ந்தால் உனக்கு புது தெம்பு வரும்”
“யார் சொன்னது?”
“நான் தான்”
“என் கஷ்டத்தையோ சந்தோஷத்தையோ யாருடனும் பகிர்ந்து எனக்கு பழக்கமில்லை.. நான் சொல்லாமலேயே என்னை பற்றி ஓரளவிற்கு தெரிந்த ஒரே தோழி கீதா.. இப்போ அவளுடனும் தொடர்பில்லை..  அவள் நன்மைக்காக நானே தொடர்பை துண்டித்துக் கொண்டேன்”
“அப்போ நான் யாரு?”
ப்ரனிஷா மெல்லிய புன்னகையுடன், “என் தோழி”
“அப்படியா?”
“கண்டிப்பா ஒரு நாள் என்னை பற்றி உன்னிடம் சொல்றேன்.. இப்போ சுருக்கமா சொல்லணும்னா.. கல்யாணம் ஆகி மூணு மாசம் கணவனை பிரிந்து மாமியார் விட்டில் இருந்து, அடுத்த மூணு மாசம் லண்டனில் நரக வாழ்க்கையை அவனுடன் வாழ்ந்து, விட்டால் போதும்னு அரை உயிருடன் இந்தியா வந்து அடுத்த ஆறு மாசத்தில் டைவர்ஸ் வாங்கி.. பிறகு அபிக்கு தாயானேன்..” 
“உன் பரென்ட்ஸ்?”
“என்னை பொறுத்தவரை அபி மட்டுமே என் சொந்தம்”
“கீதா!”
“நல்ல தோழி.. உயிர் தோழி னு சொல்லணும்.. நான் இந்தியா திரும்பினப்ப எனக்கு பக்க பலமாக இருந்தவள்.. அவ(ள்) இல்லைனா நான் இல்லாம கூட போயிருப்பேன்”
“அப்போ……….”
“ஏன் தொடர்பை துண்டித்தேன் னு கேட்கிறியா? அவளுக்காக தான்.. இப்போ கூட அவ(ள்) என் நலனை பற்றி தான் நினைத்துக் கொண்டிருப்பா.. நான் அவளோட தொடர்பை விட்டு ஊரை விட்டு இங்கே வந்த காரணம் விமல்..”
“யாரது?”
“விமல்.. ஜாலி பெர்சன்.. மென்மையானவர் கூட.. அவர் ஸ்கூலில் தான் வேலை பார்த்தேன்.. கீதா போல் எனக்கு அரணாக இருந்த நல்ல மனிதன்.. நான் நல்ல தோழன் என்று நினைக்க அவர் நல்ல கணவனாக ஆசைப்பட்டார்..”
“அதில் தப்பில்லையே! நல்லவர் னு நீயே சொல்ற”
“அவர் நினைப்பில் தப்பில்லாமல் இருக்கலாம்.. ஆனால் நான் தோழனாக தானே பார்த்தேன்.. பார்க்கிறேன்..”
“இதற்கும் கீதாவிற்கும் என்ன சம்பந்தம்?”
“விமல் கீதாவோட அத்தை பையன்.. அவ(ள்) படிக்கிற காலத்தில் இருந்தே அவரை விரும்புறா.. இருந்தும் எனக்காக என் நல் வாழ்விற்காக அவரை விட்டுக் கொடுக்க தயாராக இருந்தா.. நான் யாரிடமும் சொல்லாமல் இங்கே வந்துட்டேன்.. அங்கே H.M ஆ இருக்கிற ரோஸ்மேரி மேடம் சாரதா மேடமோட தோழி.. அவங்க சொல்லி தான் இங்கே வந்தேன்.. என் வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு நடந்த அனைத்தும் சாரதா மேடமிற்கு தெரியும்”
“திருமணத்திற்கு பிறகு என்றால்! அதற்கு முன்னும் ஏதோ இருக்கும் போல!”
ப்ரனிஷா புன்னகைக்கவும் அன்பரசி கடுப்புடன் முறைத்தாள்.
———————————————————————————————————————————————————-
சென்னையில் ப்ரனேஷின் பதிலில் அதிர்ச்சியுடன் நின்றிருந்த அவந்திகா சில நொடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு சிறு கோபத்துடன், “ஆனால் உங்களை கல்யாணம் செய்துக்க எனக்கு விருப்பம் இல்லை” என்றாள்.
நாகேஸ்வரி, “அமைதியா இரு அவந்தி” என்றவர் சமாளிப்பாக சிரித்தபடி அமுதாவை பார்த்து, “அவ சின்ன பொண்ணு தெரியாம பேசுறா.. அதை பெருசுப் படுத்தாதீங்க”
ப்ரனேஷ் நக்கலாக அவரை பார்த்து, “சின்ன பெண்ணிற்கா கல்யாணம் செய்து வைக்கப் போறீங்க?”
நாகேஸ்வரி, “அது இல்லை மாப்பிள்ளை..” என்று தடுமாறினார்.
அவந்திகா இப்பொழுது குழப்பத்துடன் ப்ரனேஷை பார்த்தாள்.
அவளை பார்த்த ப்ரனேஷ், “என் கல்யாணத்திற்கு உன் சம்மதம் தேவை இல்லை” என்றான்.
அமுதா அதிர்ச்சியுடன், “ப்ரனேஷ்” என்று அழைக்க,
ஆனந்தன் தீர்க்கமான குரலில், “ப்ரனேஷ் உன் எண்ணத்தை நேரிடையா சொல்லு” என்றார்.
தந்தையை புன்னகையுடன் மெச்சுதல் பார்வை பார்த்தவன் அடுத்து அவந்திகாவை மெல்லிய புன்னகையுடன் பார்த்து, “நிஜமாக என் கல்யாணத்திற்கு உன் சம்மதம் தேவை இல்லை.. ஏன் என்றால்” என்று கூறி நிறுத்தியவன் இறுக்கத்துடனும் கோபத்துடனும் செந்தில்குமாரை பார்த்து, “நான் கல்யாணம் செய்துக்க விரும்புவது உங்கள் மகள் இனியமலரை” என்றான்.
செந்தில்குமார் நாகேஸ்வரி மற்றும் அவந்திகா அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, அமுதா நடப்பதை புரியாமல் பார்க்க ஆனந்தன் மனதினுள் சிறு குழப்பம் இருந்தாலும் அமைதியாக மகனிற்கு கண்களில் ‘நான் இருக்கிறேன்’ என்று தைரியம் அளித்தார்.
முதலில் சுதாரித்த அவந்திகா ப்ரனேஷ் அருகே வந்து, “டாக்டர் உங்களுக்கு அக்காவை தெரியுமா? இப்போ எங்கே இருக்கா?” என்று படபடப்புடனும் எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் கேட்டாள்.
அமுதா, “அக்கா வா! ஒரே பொண்ணு னு தானே சொன்னீங்க!!!!!!” என்று கேட்க, செந்தில்குமார் அதிர்ச்சியுடன் மனைவியை பார்க்க,
அதே நேரம் நாகேஸ்வரி கோபமாக, “அக்கா வா! யாருக்கு யார் அக்கா?” என்று மகளை பார்த்து கத்தினார்.
ப்ரனேஷ் அமைதியாக தாயை பார்த்து, “அவங்க பொய் சொல்லவில்லை மா.. அவங்களுக்கு ஒரு பொண்ணு தான் ஆனால் மிஸ்டர் செந்தில்குமாருக்கு இரண்டு மகள்கள்” என்றான்.
நாகேஸ்வரி கோபத்துடன் அவனை பார்க்க அவரை அலட்சியமாக பார்த்தவன் குழப்பத்துடன் தன்னை பார்த்துக் கொண்டிருந்த அன்னையை பார்த்து, “இவங்க இவருக்கு இரண்டாவது மனைவி.. என் இனியா.. அதாவது உன் மருமகள் இவரின் முதல் மனைவி மரகதத்தின் மகள்”
அவன் முடித்த அடுத்த நொடி நாகேஸ்வரி ஆவேசமாக, “அந்த ஓடுகாலிக்கு எத்தனை முறை கல்யாணம் செய்வீங்க?”
நாகேஸ்வரி அருகே வந்தவன் கடும் கோபத்துடன் ஆள்காட்டி விரலை நீட்டி, “என் இனியாவை பற்றி ஒரு வார்த்தை தப்பா பேசின!” என்று கர்ஜிக்கவும் நாகப்பாம்பின் குணம் கொண்ட நாகேஸ்வரியே ஒரு நொடி ஆடி போய்ட்டார்.
மகனின் கோபத்தை கண்டு அமுதா பெரும் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க ஆனந்தன் மனைவியின் தோள் மீது கை போட்டு ஆதரவாக தட்டினார்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய அவந்திகா மெல்லிய குரலில், “டாக்டர்…………..”
“என்ன?” என்று அவன் கோபத்துடன் வினவ அவளது வாய் மூடிக் கொண்டது.
ஆனந்தன், “பெரியவங்க செய்த தப்பிற்கு அவந்திகா என்ன செய்வாள்? அவளிடம் ஏன் உன் கோபத்தை காட்டுற!”
ப்ரனேஷ் தணியாத கோபத்துடன், “உங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது (அப்)பா……………………”
“தெரியாது தான்.. ஆனால் அவந்திகா……………………………….”
அவன் அடக்கிய கோபத்துடன், “என் இனியாவிற்கு அநியாயம் நடக்கும் போது இவள் ஒன்றும் விரல் சுப்பும் குழந்தை இல்லையே டாட்”
அவந்திகா, “டாக்டர்” என்று எதோ சொல்ல வர அவனது முறைப்பில் மீண்டும் வாயை மூடிக் கொண்டாள்.
நாகேஸ்வரி கோபத்துடனும் நக்கலுடனும் ப்ரனேஷை பார்த்து, “பூனை கண்ணை மூடிட்டா உலகம் இருண்டதா ஆகிவிடாது”
ப்ரனேஷ், “அதே போல் உன் தவறான வார்த்தைகளால் என் இனியா தவறானவள் ஆகிவிட மாட்டாள்”
“என்ன தான் நீ தலைகீழாக நின்றாலும் நடந்த கல்யாணம் இல்லை என்று ஆகிவிடுமா?” என்று இகழ்ச்சியாக வினவ,
அவனும் அவரை இகழ்ச்சியாக பார்த்தபடி, “இல்லை என்று ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது”
“என்ன!!” என்று நாகேஸ்வரி அதிர்ந்தார். 
ப்ரனேஷின் உறுதியில் இனியமலரின் வாழ்வில் இனி மலர்ச்சி வந்துவிடும் என்ற நம்பிக்கையில் புத்துணர்ச்சியுடன் அவந்திகா அவனை பார்த்தாள்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைத்ததில் செந்தில்குமார் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தார்.
இரண்டு நொடிகளில் சுதாரித்த நாகேஸ்வரி, “என் மகளை பார்க்க வந்துட்டு அந்த கேடுகெட்டவளை நீ எப்படி கல்யாணம் செய்துக்கலாம்? அதற்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்”
வாய்விட்டு சிரித்த ப்ரனேஷ் நாகேஸ்வரியை நக்கலாக பார்த்து, “உன் சம்மதத்தை இங்கே யாரும் கேட்கவில்லை”
நாகேஸ்வரி கோபத்துடன், “அந்த ராசியில்லாதவளை கல்யாணம் செய்தால் நீயும் நாசமா போய்டுவ”
ப்ரனேஷ் கோபத்துடன், “இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை! இனி ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை என் இனியாவை பற்றி தவறா பேசின! அது தான் நீ பேசிய கடைசி வார்த்தையா இருக்கும்.. என் தொழில் மட்டுமில்லை என் பெயரிற்கான அர்த்தமும் ‘உயர் கொடுக்கும் கடவுள்’ தான் ஆனால் என் இனியா விஷயத்தில் அவளுக்கு தொல்லை கொடுப்பவர்களை அழிக்கும் கடவுளா மாற சிறிதும் தயங்க மாட்டேன்.. ஜாக்கிரதை ” என்று மிரட்டியவன் பெற்றோரை பார்த்து, “வாங்க கிளம்பலாம்” என்று கூறி அவர்களை அழைத்துச் சென்றான். 
வீட்டிற்கு செல்லும் வழியில் மௌனமே மூவரையும் ஆட்சி செய்தது. 
ப்ரனேஷின் எண்ணம் எப்பொழுதும் போல் இனியமலரை பற்றியதாக இருந்தாலும் அன்னையை எப்படி சாமாதானம் செய்வது என்றும் அவன் யோசிக்க தவறவில்லை.
ஆனந்தனின் எண்ணம் துப்பறிவாளர் என்ன சொல்லியிருப்பார் என்பதிலும் மனைவியை எப்படி தேற்றப் போகிறோம் என்பதிலும் இருந்தது.
அமுதாவின் மனதினுள் பல எண்ணங்கள் உதித்தது. மகன் காதலித்தது கூட அவருக்கு பெரிய அதிர்ச்சியாக இல்லை ஏனெனில் அவனது திருமண மறுப்பில் இருந்து அதை அவர் ஓரளவிற்கு எதிர் பார்த்திருந்தார், அதுவும் அது தன் கணவருக்கும் தெரியும் என்பதையும் அவர் எதிர்பார்த்தார் தான் ஆனால் இத்தனை நாட்கள் இல்லாமல் அதை பற்றி மகன் இன்று கூறியது அதுவும் அந்நியர்கள் முன் அறிய நேர்ந்தது அவரை வாட்டியது. மகனின் அதீத கோபம் அவருக்கு அதிர்ச்சியை தந்தது. நாகேஸ்வரியின் உண்மையான  குணம் தெரிந்ததும் அவருக்கு அதிர்ச்சியே! தனக்கு ஒருவரை சரியாக கணிக்க தெரியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும் சேர்ந்துக் கொண்டது. மகன் எப்போதிருந்து காதலிக்கிறான்? அந்த பெண்ணும் மகனை காதலித்தாளா? அப்பறம் எப்படி அவளுக்கு வேறு திருமணம் நடந்தது? விவாகரத்து ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது னு சொல்றான் அப்போ ஏன் மூன்று வருடங்கள் அமைதியாக இருந்தான்? என்று பல கேள்விகளும் அவரை குடைந்தது. இவ்வளவு சிந்தனைகள் அவருள் ஓடியபோதும் ஏற்கனவே திருமணம் ஆனவள் தனக்கு மருமகளா? என்ற எண்ணம் சிறிதும் அவருக்கு தோன்றவில்லை.
வீட்டிற்கு சென்றதும் அமுதா அமைதியாக தங்கள் அறைக்கு செல்ல தந்தையும் மகனும் கண்களால் பேசியபடி அவர் பின்னே சென்றனர்.
அமுதா கட்டிலில் அமர்ந்திருக்க அவர் கையை பற்றியபடி தரையில் அமர்ந்த ப்ரனேஷ், “என்னை மன்னிச்சிரு மா ப்ளீஸ்.. இனியாவை பற்றி நான் இன்னைக்கு உன்னிடம் பேசுவதாக தான் இருந்தேன் ஆனால் அதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டது..”
அவர் அவன் முகத்தை நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை.
அவன் தவிப்புடன், “ப்ளீஸ் மா.. என்னை பாரு.. உனக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும் னு எனக்கு புரியுது மா.. ப்ளீஸ் மா.. சாரி மா.. நிஜமாவே இதை பற்றி உன்னிடம் இன்று சொல்வதாக தான் இருந்தேன்.. அங்கே வீட்டிற்குள் செல்வதற்கு முன் கூட நான் சொன்னேனே மா! நம்ம வீட்டிற்கு போகலாம்.. விளக்கமா சொல்றேன்னு சொன்னேனே மா.. இனியா பற்றி எனக்கே சில விஷயங்கள் இன்னைக்கு தான் தெரியும்.. கோவிலை விட்டு வெளியே வந்த போது ஒரு போன் வந்துதே.. அது தான்.. இப்போ கூட இனியா எங்கே இருக்கிறாள் னு எனக்கு தெரியாது.. ஆனால் கண்டு பிடிச்சிருவேன்.. ப்ளீஸ் மா என்னை பாரு.. இப்படி இருக்காத மா.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது” என்று பெரிதும் வருந்திய குரலில் அவன் கூறவும் வருத்த புன்னகையை உதிர்த்தபடி அவனை பார்த்தவர் அவனது தலையை வருடினார்.
அவரின் முகத்தை பார்த்தவன் கண்கள் கலங்க அவரது காலை கட்டிக்கொண்டு, “சாரி மா.. நான் உன்னிடம் சொல்லாததுக்கு காரணம் இருந்தது.. முதலில் இனியாவிடம் என் காதலை சொல்லிவிட்டு உன்னிடம் சொல்லணும் நினைத்தேன்..” என்றவன் அன்னையின் முகத்தை நிமிர்ந்து பார்த்து வலியுடன், “ஆனால் இன்று வரை என் காதலை அவளிடம் நான் சொல்லவே இல்லை” என்றான்.
மகனின் குரலில் இருந்து அவனது வலியை உணர்ந்தவர் தானும் அவனை வருத்த வேண்டாம் என்ற முடிவுடன், “என்ன கண்ணா சொல்ற?” 
“இன்னொன்னும் சொல்றேன் மா.. அப்பா கிட்ட மட்டும் சொல்லிட்டேன்னு நினைக்காத.. அப்பாவே தான் என்னை கண்டுபிடித்து கேட்டாங்க.. நானே உன்னிடம் சொல்வேன்னு அப்பா கிட்ட சொன்னேன்.. ஆனால் நடுவில் என்னென்னவோ நடந்துவிட்டது.. உன்னை கஷ்டப்படுத்த வேண்டாமே னு தான் உன்னிடம் சொல்லவில்லை”
“என்ன நடந்தது? இனியா உன்னை காதலித்தாளா?”
“எனக்கு மட்டும் தான் இனியா உங்களுக்கெல்லாம் மலர்” என்று சிறு குழந்தை போல் அவன் கூறவும் அமுதா முகத்தில் மெல்லிய புன்னகை  அரும்பியது.
“சரி.. மலர் பற்றி சொல்லு”
“அவளும் என்னை காதலித்தாள் மா.. ரெண்டு பேருமே சொல்லிக்கலை.. ஆனால் விதியின் சதியாலும் நாகேஸ்வரியின் பேராசையிலும் வஞ்சத்திலும் நாங்க பிரிஞ்சிட்டோம்.. நானாவது பரவா இல்லை.. இனியா ரொம்ப கஷ்டப்பட்டுட்டா மா.. நாம அவளை நல்ல பார்த்துக்கணும் மா” என்றபோது அவனது குரலில் வலியும் வேதனையும் அதிகமாக இருந்தது.
அமுதா, “நிச்சயம் மலரை நாம நல்லா பார்த்துக்கலாம்.. மேலே உட்கார்ந்து என்ன நடந்ததுன்னு சொல்லு” என்றார்.
“தேங்க்ஸ் மா” என்று சந்தோஷமாக கூறியவன் அவரது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவர் அருகில் அமர்ந்தான்.
இனியமலரை சந்தித்தது முதல் இன்று துப்பறிவாளர் கூறியது வரை சொல்லி முடித்தான். 
ஏழு நீண்ட ஆண்டுகள் மகன் பட்ட கஷ்டத்தையும் அடைந்த வேதனையையும் வலியையும் அறிந்த பின் அவருக்கு அவரது வருத்தம் பெரிதாக தெரியவில்லை. 
அவர் பேச்சின்றி கண்ணீர் வழிய மகனின் கன்னத்தை வருடினார்.
இவ்வளவு நேரம் அமைதியாக நின்றுக் கொண்டிருந்த ஆனந்தன் மனைவியின் மறு புறம் அமர்ந்து அவர் தோளில் அணைவாக கை போட்டபடி, “எல்லாம் சரியாகிடும் மா.. அழாத..” என்றதும் மடை திறந்த வெள்ளமாக அமுதாவிற்கு கண்ணீர் பெருகியது. 
அந்த கண்ணீர் மகனை நினைத்து மட்டுமில்லை வருங்கால மருமகளை நினைத்தும் தான் என்பது அவரது பேச்சில் தெரிந்தது.
அவர் அழுகையின் நடுவே, “ஏன்க இப்படி நடக்கணும்! எப்படி இவனை தனியா அனுப்பினீங்க? என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியலையே! மலரும் ரொம்ப பாவம்ங்க.. நாம அவளை நல்லா பார்த்துக்கணும்” என்றார்.
“நிச்சயமா” என்ற ஆனந்தன் மனைவியின் கண்ணீரை துடைத்து, “நாம வருந்தியது எல்லாம் போதும்.. இனி எல்லாம் நல்லதா தான் நடக்கும்.. உன் பிறந்த நாள் அன்று விடிவு கிடைக்கணும் னு இருக்குது” என்றார்.
அமுதா ப்ரனேஷை பார்த்து, “ரொம்ப கஷ்டப்பட்டுட்ட கண்ணா.. அப்பா சொன்னது போல் இனி எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்றவர் கண்களில் மீண்டும் கண்ணீர் வடிந்தது.
இப்பொழுது அவரது கண்ணீரை ப்ரனேஷ் துடைத்தபடி, “போதும் மா.. அழாத.. பிறந்த நாள் அதுவுமா வேண்டாம் மா” என்றான்.
“ஹ்ம்ம்” என்றார் அழுகையை கட்டுப்படுத்தியபடி.
ஆனந்தன், “இனியமலர் செந்தில்குமார் மகள் னு எப்படி தெரியும்?”
“அவந்திகா கூட பேச போன போது தான் தெரியும்.. உள்ளே போனதும் நான் அவளை பார்க்காமல் ரூமை தான் பார்த்துட்டு இருந்தேன்.. அங்கே டேபிளில் அவளும் இனியாவும் சேர்ந்து இருந்த போட்டோ இருந்தது.. மாலில் நான் அவளை பார்த்தது கூட அன்னைக்கு தள்ளி இருந்து சைடு அங்கிளில் அவளை பார்த்த போது ஒரு நிமிஷம் இனியா போல் இருந்தது.. அதான் பார்த்தேன்.. அதை வைத்து தான்.. சரி அதுவும் நல்லதுக்கே னு நினைப்போம்.. போட்டோ பார்த்ததும் சந்தேகம் வந்தது.. அவளிடம் அப்பா அம்மா பெயர் கேட்டேன்.. பிரேம் மெயில் பண்ணியிருந்ததோடு ஒத்து போச்சு” என்றான்.
“ஹ்ம்ம்.. பிரேம் சீக்கிரம் மலர் இருக்கும் இடத்தை சொல்லுவார் னு நம்புவோம்”
“இல்லை பா.. எனக்கு ஒரு யூகம் இருக்கிறது.. நான் இன்றே ஊருக்கு கிளம்புறேன்”
“எந்த ஊருக்கு?”
“வந்து சொல்றேன்”
அமுதா செல்லமாக முறைக்கவும் அவன் மெல்லிய புன்னகையுடன், “ப்ளீஸ் மா.. இந்த ஒரு முறை.. நாளைக்கு காலையில் உங்களுக்கு நல்ல செய்தியை சொல்வேன் னு நம்புறேன்.. பார்க்கலாம்” என்றான்.
“நாளைக்கு காலை வரை தான் உனக்கு டைம்” என்று அமுதா கூற,
ஆனந்தன் எப்பொழுதும் போல் மென்னகையுடன் அவன் தோளை தட்டி, “ஆல் தி பெஸ்ட்” என்றார்.
“தேங்க்ஸ் டாட்” என்று கூறி அவரை அணைத்தவன், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்குது.. ஊருக்கு கிளம்பிற வேலையை பார்க்கணும்.. ஹாஸ்பிடலிலும் சில இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுக்கணும்.. நான் வரும் வரை………….”
ஆனந்தன், “நான் பார்த்துக்கிறேன்.. சீக்கிரம் வர பார்”
“சரி பா” என்றவன் அன்னை கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டு, “லவ் யூ மாம்” என்று புன்னகையுடன் கூறி வெளியேறினான்.
அவன் வெளியே சென்றதும் அமுதா அமைதியாக இருக்கவும் அவரது முகத்தை நிமிர்த்திய ஆனந்தன், “என்னமா?”
“எப்படி ப்ரனுவை லண்டன் தனியா அனுப்புனீங்க?”
“அவன் மேல் உள்ள நம்பிக்கையில் தான்.. நான் மனநல மருத்துவன் மட்டுமில்லை அவனுடைய அப்பா”
“இருந்தாலும்..”
“அவனுக்கு கொஞ்சம் தனிமை தேவை பட்டது.. அதுமட்டுமில்லை அவனால் இங்கே இருக்கவே முடியலை.. அவன் மாறனும் நினைத்தாலும் மலரின் நினைவுகள் அவனை துரத்தியது.. அங்கே சென்றாலும் அவள் நினைவுகள் இருக்கும் தான் இருந்தாலும் இங்கே அதன் தாக்கம் அதிகமா இருக்கும்.. அவனுக்காக தான் அவனை அனுப்பினேன்”
அமுதா இன்னமும் அமைதியாக இருக்கவும், “இன்னும் என்ன குடையுது உன்னை?”
“அது”
“சொல்லு மா”
“நாகேஸ்வரி உண்மையான குணத்தை என்னால் தெரிந்துக்க முடியலையே! ஒருவேளை நான் நினைத்தது போல் நடந்து இருந்தால் நானே நம் மகனின் வாழ்வை………………………”
“அதான் அப்படி நடக்கலையே”
“..”
“என்ன மா?”
“அது இல்லைங்க.. ஒருவேளை மலரை அவன் காதலிக்காமல் இருந்து அவந்திகா……………..”
“உன்னால் ஒருவரை கணிக்க முடியலையே! அதனால் ப்ரனேஷ் வாழ்வு சீரழிந்து இருந்தால் னு யோசிக்கிறியா?”
அமுதா அமைதியாக ‘ஆம்’ என்பது போல் தலை அசைக்கவும் ஆனந்தன், “நாகேஸ்வரியின் சாகசங்களை பற்றி தான் ப்ரனேஷ் சொன்னானே மா! சிலரின் நடிப்பில் சீக்கிரம் நம்மால் அவர்களை கண்டறிய முடியாது.. ஆனால் நிச்சயம் ஒரு நாள் அவர்கள் குட்டு வெளிப்பட்டுவிடும்.. தேவை இல்லாமல் உன்னை நீயே வருத்திக்காதே.. இனி எல்லாம் நல்லதே நடக்கும்” என்றவர் இன்னும் சில அறிவுரைகளை கூறி மனைவியை தேற்றினார். 
இதழ் திறக்க காத்திருப்போம்

Advertisement