Advertisement

தடதட என்று ஓடிக்கொண்டிருந்த ரயிலின் இரைச்சலுக்கு இணையாக அதனுள் இருந்த மக்களின் பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மடியில் அமர மறுத்து திமிறிக் கொண்டிருந்த மகளை அடக்க முயற்சித்து தோற்ற ப்ரனிஷா மெல்லிய குரலில், “அபி குட்டி சமத்தா உட்கார்ந்து இருந்தால் அம்மா சாக்லேட் தருவேன்”
“சாத்தி(சாக்கி) தா பாப்பா உத்தார்(உக்கார்)என்று மழலை குரலில் பேரம் பேசினாள் அவளது இரண்டேகால் வயது மகள் அபிசாரா.
ப்ரனிஷா புன்னகையுடன் சிறிய சாக்லேட்டை மகளிடம் கொடுத்தாள். தனது பிஞ்சு விரல்களால் உறையை பியித்து சாக்லேட்டை வாயில் போட்டதும் விரிந்த புன்னகையுடன் தலையை ஆட்டி, “யம்மி யம்மி சாத்தி” என்றது குழந்தை.
ப்ரனிஷா அதை ரசித்து புன்னகையுடன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டாள். குழந்தை மேலும் விரிந்த புன்னகையுடன் மறு கன்னத்தை காட்டவும் மற்றொரு முத்தம் கொடுத்தாள்.
சாக்லேட் உண்டதும் குழந்தை மறுபடியும் இறங்க முயற்சிக்க, ப்ரனிஷா குழந்தைக்கு பிடித்த சிறு கதைகளை சொல்ல தொடங்கினாள்.
சிறிது நேரம் கழித்து ப்ரனிஷா, “இன்னும் கொஞ்ச நேரத்தில் அபி செல்லம் தூங்க போறாளாம்”
மறுப்பாக தலை அசைத்த குழந்தை, “அபி விளாடுவா(விளையாடுவாள்)
“அபி செல்லம் அம்மாவோட தங்க பாப்பா தானே! அம்மா சொன்னால் கேட்பாளே”
“ம்”
“அப்போ தூங்கலாமா?”
“தூங்கி வேணா”
“சமத்து பாப்பா தானே நீ.. அங்க பாரு எல்லோரும் படுத்து தூங்கிட்டு இருக்காங்க.. அம்மாவுக்கும் தூக்கம் தூக்கமா வருது.. அம்மா தூங்கி பாட்டு பாடுவேனாம் அபி குட்டிமா சமத்தா தூங்குவாளாம்.. தூங்கி எழும்போது நாம எங்க இருப்போம்?”
“தின்னவேலி(திருநெல்வேலி)
“ஹ்ம்ம்.. கரெக்ட்.. இப்போ அம்மா தூங்கி பாட்டு பாடட்டுமா?”
“ம்”
“சமத்து பாப்பா” என்றபடி மடியில் மகளை படுக்க வைத்தவள்,
‘லாலி லாலி லாலி லாலி..
லாலி லாலி லாலி லாலி..
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி…’ என்று மகளுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் பாடினாள். அதே பாடலை இரண்டு முறை பாடி முடிக்கவும் அபிசாரா உறங்கவும் சரியாக இருந்தது.
 
ஜன்னல் வழியே இருளின் நடுவே ஆங்காங்கே தெரிந்த சிறு சிறு வெளிச்சங்களை பார்த்துக் கொண்டிருந்த ப்ரனிஷாவின் மனம் தன் வாழ்க்கையிலும் இருளை போன்ற சோதனைகளுக்கு நடுவே சிறு சிறு மகிழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்று நினைத்துக் கொண்டது. சோதனைகளின் வடிகால் தனது மகள் என்று தோன்றவும் அனிச்சை செயலாக அவளது பார்வையும் கரமும் மகளை வருடியது. மகளை தட்டி கொடுத்தபடி தனது வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை அசை போட்டுக் கொண்டிருந்தவளை உறக்கம் மெல்ல தழுவியது.
இருளை விரட்டிய சூரிய கதிர்கள் முகத்தில் லேசாக படவும் விழிகளை திறந்தவள் மகளின் முகத்தை பார்த்தாள். உறக்கத்தில் அபிசாரா மெல்லிய புன்னகையை உதிர்க்க அந்த புன்னகை ப்ரனிஷாவின் இதழிலும் ஒட்டிக் கொண்டது. புத்துணர்ச்சியுடன் ஜன்னல் வெளியே பார்த்தவளின் முன் அழகிய இயற்கை காட்சி இருந்தது. சூரியனின் வரவை மகிழ்ச்சியுடன் வரவேற்பது போல் சூரியகாந்தி பூக்கள் மெல்லிய தென்றலுடன் அசைந்தாடிக்கொண்டிருந்து.   
ரயிலினுள் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். சிலர் பல்லை துலக்கிக் கொண்டிருக்க, சிலர் காபி விற்பவரிடம் காபி வாங்கி கொண்டிருக்க, சிலர் காபியை அருந்திக் கொண்டிருக்க, சிலர் தலை முடியை வாரிக் கொண்டிருக்க, சிலர் கைபேசியில் ரயிலின் வருகை பற்றி உறவினரிடம் கூறிக் கொண்டிருக்க, சில தாய்மார்கள் பிள்ளைகளை எழுப்பிக் கொண்டிருக்க, சிலர் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தனர்.
தனக்கொரு காபியை வாங்கியவள் மகளுக்காக பாலை வாங்கி ஃப்லஸ்கில் ஊற்றினாள். பத்து நிமிடங்கள் கழித்து ரயில் திருநெல்வேலியில் நின்றது. மக்கள் அவசர அவசரமாக இறங்கினர். அனைவரும் இறங்கிய பின் நிதானமாக உறங்கிக் கொண்டிருந்த மகளை தூக்கியவள் தோளில் ஒரு பையும் கையில் பெரிய பெட்டியுமாக இறங்கினாள். முதல் முறையாக வந்திருக்கும் ஊரில் தெரியாத முகங்களின் நடுவே நின்ற போது ஒரு நொடி அவளது மனம் கலக்கம் கொண்டது ஆனால் அடுத்த நொடியே கலக்கத்தை விரட்டி நிமிர்ந்து நின்றாள். இது தான் ப்ரனிஷா, இன்னல்கள் பல சந்தித்தாலும் துவண்டு போகாமல் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் துணிவும் நம்பிக்கையும் அவளிடம் நிறைந்திருந்தது.
வீட்டு தோட்டத்தில் கைபேசியின் செவிப்பொறி மூலம் மெல்லிய பாடல்களை கேட்டப் படி மெதுவாக ஓடிக் கொண்டிருந்தான் சர்வேஷ். அவனது இசை மழையை தடை செய்வது போல் கைபேசி சிணுங்கியது. யார் என்று பார்த்தவனின் முகம் மலர்ந்தது. அழைப்பை எடுத்த சர்வேஷ், “ஹாப்பி பர்த்டே ப்ரனேஷ்”
“தன்க் யூ அண்ட் விஷ் யூ வெரி ஹாப்பி பர்த்டே”
“தன்க் யூ.. இந்த வருஷமும் நீ என்னை முந்திக் கொண்டாய்.. இப்ப தான் வீட்டிற்கு வந்தியா?”
“ஹ்ம்ம்.. வந்து குளிச்சிட்டு அப்பா அம்மாவிடம் பேசிட்டு உன்னை கூப்பிட்டேன்”
“உனக்கு லைஃப் எப்படி போகுது?”
“பைன்.. சித்தி எப்படி இருக்காங்க? உனக்கு எப்படி போகுது?”
“இப்போ புது பிரன்ச் ஆரம்பித்ததில் நேரம் கிடைப்பதே இல்லை.. அம்மா ஒரே திட்டு”
“எதற்கு?”
“இந்த புது பிரன்ச் ஆரம்பித்ததில் ஞாயிற்றுக்கிழமையும் வெளியே போயிடுறேன்..”
“ஓ”
“ஹ்ம்ம்.. உன் திட்டம் என்ன?”
“திட்டம் என்ன என்றால்?”
“லண்டனில் செட்டில் ஆகிற திட்டமா?”
“இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை”
“இதை என்னை நம்ப சொல்கிறாயா?”
“நம்புவதும் நம்பாததும் உன் இஷ்டம்”
“டேய் அண்ணா வேணாம்!!!”
“அண்ணனா! யாரு அது?”
“எல்லாம் நான்கு வருடங்கள் எனக்கு முன்னால் பிறந்த என் பெரியம்மா மகனான திரு ப்ரனேஷ் அவர்களை தான் சொல்கிறேன்”
“இது எப்போதில் இருந்து?”
“போதும் ப்ரனேஷ்.. சீரியஸாக கேட்கிறேன்……………..”
“பிறந்தநாள் அதுவுமா சீரியஸாக இருக்க சொல்கிறாயே”
“டேய்”
“என்ன?”
“ஆமா இவரு ஒன்றும் தெரியாத பாப்பா”
“சரி டா அதை விடு.. உன்னுடைய திட்டம் என்ன?”
“திட்டம் என்ன என்றால்?”
“நான் கேட்டது எனக்கேவா?”
“ஆனால் நான் உன்னை போல் எதையும் மறைக்காமல் பேச்சை மாற்றாமல் உள்ளது உள்ள படி சொல்வேன்”
இவனது பேச்சு பாதிக்காதது போல் சாதாரண குரலில், “நீ எப்போது கல்யாணம் பண்ணிக் கொள்ள போகிறாய்?”
“நீ எப்போது பண்ண போகிறாய்?”
“யாரோ உள்ளது உள்ள படி பதில் சொல்வதாக சொன்ன ஞாபகம்”
“இப்பொழுதும் அதையே தான் சொல்கிறேன்”
“அப்போ நான் கேட்டதுக்கு பதிலை சொல்லு”
“நீ முதலில் பதிலை சொல்லு”
“நான் தான் முதலில் கேட்டேன்”
“நான் சொன்னதும் நீ சொல்வாயா?”
“இன்றைக்கு என்னாயிற்று உனக்கு?”
“இன்றைக்கு தான் நீ சிக்கி இருக்கிறாய்”
“ஏன் இதற்கு முன் நாம் இதை பற்றி பேசியது இல்லையா?”
“நான் மட்டும் தான் பேசியிருக்கிறேன்.. நீ பதில் சொல்லாமல் பேச்சை மாற்றி விடுவாய்”
“அம்மா உன்னிடம் பேசினாங்களா?”
சில நொடிகள் மௌனத்தில் கழிய பெருமூச்சொன்றை வெளியிட்ட ப்ரனேஷ், “அம் மரீட் டு மை ப்ரோஃபஷன்”
“மருத்துவர்கள் கல்யாணம் செய்து கொள்வது இல்லையா? உன் அப்பாவே ஒரு மருத்துவர் தானே”
“நீ பதில் கேட்ட, நான் சொல்லிட்டேன்.. இப்பொழுது உன் முறை”
இதற்கு மேல் அவனிடமிருந்து பதில் வராது என்பதை அறிந்த சர்வேஷ் பெருமூச்சொன்றை வெளியிட்டபடி, “என் மனம் கவர்ந்த எந்த பெண்ணையும் இதுவரை சந்திக்கவில்லை டா”
“எனக்கு ஒரு சந்தேகம்”
“என்ன?”
“உன் ஸ்கூலில் அதிகம் வேலை செய்பவர்கள் பெண்கள் தானே”
“ஆமாம் ஆனால் அதில் முக்கால்வாசி திருமணமானவர்கள்”
“ஓ! மற்றவர்கள்?”
“ச்ச்..”
“உன்னிடம் யாரும் காதல் சொல்லவில்லையா?”
“காதல் என்று யாரும் சொன்னதில்லை ஆனால் ஒரு சிலர் என்னை கவர முயற்சி செய்தனர்”
“செய்தனரா? செய்கின்றனரா?”
“அப்படியும் சொல்லலாம்”
ப்ரனேஷ் புன்னகையுடன், “நீ என்ன செய்வாய்?”
“ஒரு சில பேச்சோடு நிறுத்திக் கொண்டால் கண்டுக்காமல் விட்டுவிடுவேன்.. அவர்களும் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று விட்டு விடுவார்கள்.. பேச்சோடு நிற்கவில்லை என்றால் வேலையை விட்டு தூக்கி விடுவேன்”
“சூப்பர்”
“பின்ன பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியரிடமே ஒழுக்கம் இல்லை என்றால்!”
“நீ எப்போ டா இவ்வளவு நல்லவனாகினாய்?”
“விடு விடு.. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா”
இருவரும் சிரித்தனர். ப்ரனேஷ், “சரி டா.. நாலு மணிக்கு ஒன்னரை வயது குழந்தைக்கு ஆபரேஷன் பண்ணனும்.. ரெண்டு மணி நேரமாவது தூங்கி எழுந்தால் தான் சரியாக இருக்கும்………”
“ஒன்னரை வயது குழந்தைக்கு இதயத்தில் அறுவை சிகிச்சையா?”
“பிறக்கும் குழந்தைக்கே இதய நோய் வருகிறது.. ஹ்ம்ம்.. எல்லாம் வளர்ந்து வரும் உணவு கலப்படம் தான் காரணம்.. சரி டா.. டேக் கேர்.. பை” 
“யூ டூ டேக் கேர்.. பை” என்றபடி அழைப்பை துண்டித்தவன் வீட்டினுள் சென்றான்.
லண்டனில் தன் வீட்டு மெத்தையில் படுத்த ப்ரனேஷ், ‘எப்படி என்னை விட்டு செல்ல மனம் வந்ததடி?’ என்றபடி கண்களை மூடினான். மூடிய விழிகளுக்குள் அவன் மனம் கவர்ந்த நங்கை புன்னகையுடன் அழகு தேவதையாக வந்து நின்றாள். 

Advertisement