Advertisement

            இதயத்திலே ஒரு நினைவு – 10

“என்னடா மாப்ள, மைதிலி அப்பாக்கு ட்ரான்ஸ்பர் வந்திருக்காமே…”

“ம்ம்ம்…”

“அப்போ மைதிலி வேற ஊருக்கு போயிடும்ல…”

“ம்ம்ம்…”

“இப்போ என்னடா செய்யப் போற?” என்று வாசு கேட்க,

ஜெகந்நாதனோ “நீ இப்போ எப்படி கேட்கிற?” என்றான் பதிலுக்கு.

“எப்படின்னா?”

“இல்ல நீ கேட்கிறதுல ஒரு நக்கல் தெரியுதே…” என்று ஜெகா, வாசுவின் தோள் மீது கை வைத்து அழுத்த,

“டேய் டேய் வலிக்குதுடா…” என்று அவனிடம் இருந்து விலக முயற்சி செய்தவன் “ஒரு அக்கறைல கேட்டா நீ இப்படி சொல்ற…” என,

“அக்கறை… ம்ம்ம்…” என்று மேலும் அவனின் அழுத்தத்தை கூட்ட,

“டேய் யப்பா சாமி…” என்று ஒருவழியாய் விலகி நின்ற வாசு, ஜெகந்நாதனை முறைத்தான்.

“டேய் நீ யாருன்னு எனக்குத் தெரியும். நான் யாருன்னு உனக்குத் தெரியும்.. நம்ம யாருன்னு இந்த காலேஜுக்கே தெரியும்…” என்று ஜெகா வசனம் பேச,

“தெரியாம உன்னைக் கேட்டுட்டேன்…” என்று கரம் குவித்தான் வாசு.

“அடடா சும்மாடா…” என்று சகஜமாய் அவன் தோள் மீது கை போட்டபடி “எல்லாம் பக்காவா ப்ளான் போட்டு வச்சிருக்கேன்…” என்றான் ஜெகந்நாதன்.

“என்னடா ப்ளானு…”

“நாளைக்கு எப்படியும் மைதிலிய நிறுத்தி பேசத்தான் போறேன்… அடுத்த வாரத்துல இருந்து நம்ம காலேஜ் வர முடியாது.. அவ சொல்ற பதிலை வச்சு அடுத்து என்னன்னு பார்த்துக்கலாம் …”

“சரின்னு சொன்னா?”

“சந்தோசம்.. எந்த ஊருக்கு போகணுமோ போயிக்கோ ஆனா எங்க போனாலும் உனக்காக நான் இங்க இருக்கேன்னு அவளுக்கு நம்பிக்கையும் தைரியமும் கொடுப்பேன்…”

“ஒருவேளை முடியாதுன்னு சொன்னா?”

“ஹா ஹா அப்போவும் இதுதான் சொல்வேன்…” என்ற ஜெகந்நாதனை புரியாது பார்த்தான் வாசு..


“மைத்தி…” என்ற மகனின் அழைப்பு செல்விக்கு எதையோ உணர்த்துவது போலிருந்தால்,

கீழே வந்த மைதிலியின் ஜெகா மீதான பார்வையோ அவருக்கு சற்றே அதிர்ச்சியைக் கொடுத்தது.

அவள் கண்களில் தெரிந்த கோபம், ஆற்றாமை, அதையும் தாண்டி இன்னும் வேறெதுவோ ஒன்று.

மைதிலி வீட்டில் இருக்கும் நேரம், ஸ்கர்ட் டாப்ஸ் இல்லை லெக்கின்ஸ் குர்தி, இப்படித்தான் ஏதாவது உடுத்துவாள். நைட்டி என்ற ஒன்று அவளுக்கு ஆகாத விஷயம். அன்றைய தினம் கருப்பில் மண்டலா டிசைன் போடப்பட்ட ஸ்கர்ட்டும், அதற்கு தோதாய் வெள்ளையில டாப்ஸும் அணிருந்திருக்க, முடியைத் தூக்கி போனிடெயில் போட்டிருந்தாள்.

கீழே இறங்கி வந்தவளின் தோற்றம், நிச்சயம் செல்விக்கு அவர் பார்த்து,  கடந்து வரும் வயது பெண்களின் தோற்றத்தில் இருந்து மாறுபட்டுத்தான் தெரிந்தது. அது அவளின் உடையா இல்லை தோற்றமா என்று கண்டறிய முடியவில்லை.

ஆனால் பார்த்தால் ‘அழகாய் இருக்கிறாள்…’ என்று யாரும் நினைக்காது இருந்திட முடியாது.

“மைத்தி இவங்க என்னோட அம்மா…” என்று ஜெகந்நாதன் அறிமுகம் செய்ய, சம்பிரதமாய் ஒரு புன்னகையை செல்வியிடம் சிந்திவிட்டு, ஜெகாவை அப்பட்டமாய் முறைத்தாள் உன்னை யார் என்னை அழைக்கச் சொன்னது என்று.

‘என்ன என் மகனை முறைக்கிறா?’ என்று பார்த்த செல்விக்கு, ஜெகாவின் கண்களில் தெரிந்த கெஞ்சல் அதையும் தாண்டி பேரதிர்ச்சி கொடுக்க, என்ன நடக்கிறது இங்கே என்று அவருக்கு மண்டை காய்ந்தது.

“நான்தான் கூப்பிட சொன்னேன்… என்ன பண்ணிட்டு இருந்த மைதிலி..?” என்று கமலா சொல்ல,

“படிச்சிட்டு இருந்தேன் ஆச்சி…” என்றாள், அப்போதும் இலகு இல்லாத குரலில்.     

“படிக்கிறியா?”

“ஆமா ஆச்சி.. நாளைக்கு முக்கியமான பாடம் ஒன்னு எடுக்கணும்..” என,

செல்வியோ “ஸ்கூல் டீச்சரா?” என்றார் பேசவேண்டுமே என்று.

“அட… அவ காலேஜு வாத்தியாரம்மா…” என்ற கமலா ஏதோ காமடி சொல்லியது போல் சிரிக்க,

“காலேஜா?!!” என்றபடி செல்வி மீண்டும் ஒருமுறை அவளை ஆராய்வது போல் பார்க்க,

“ஆமா ஆன்ட்டி….” என்றவள் அவர்கள் படித்த கல்லூரியின் பெயரைச் சொல்லி “இவங்க என்னோட சீனியர்…” என்றும் சொல்ல,

“ஓ…!” என்றவர் எதுவும் அடுத்து பேசவில்லை.

இருந்தும் மனதில் என்னவோ இருக்கிறது என்ற எண்ணம் மட்டும் அழுத்தமாய் பதிந்தது.

“அப்பாம்மா எங்கம்மா?”

“சிவகாசி போயிருக்காங்க ஆச்சி. வர ரெண்டு நாளாகும்…”

“விசேசமா?!”

“ஆமா ஆச்சி.. அப்பாக்கு சித்தப்பா பேத்தி கல்யாணம்…”

“சரி சரி..” என்ற கமலா மேலும் ஏதேதோ பேச, அதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, விட்டால் போதும் என்று மைதிலி வேகமாய் சென்றுவிட்டாள்.

போகும் அவளின் வேகத்தையே ஜெகந்நாதன் பார்த்துக்கொண்டு இருக்க, செல்வி “ஜெகா…” என்றழைக்க,

“ம்ம்.. ம்மா…” என்றான் ஒருவித தொய்ந்து போன குரலில்.

“கிளம்பலாமா?”

“ம்ம் போலாம்…” என்றவன் “வர்றேன் ஆச்சி…” என

“போயிட்டு வருவியா நீ?” என்றார் அர்த்தம் பொதிந்த பார்வையோடு.

“பாக்கலாம்…” என்றவன் அம்மாவைப் பார்க்க,

“இல்லம்மா ஜெகாக்கு அங்க வேலை இருக்கு…” என்றார் ஒருமாதிரி குரலில் செல்வி.

அவரின் இந்த மறுப்பே, ஜெகாவிற்கு அம்மா எதையோ மனதில் வைத்து பேசுகிறார் என்று பட, “பாக்கலாம் ஆச்சி…” என்று மீண்டும் சொல்லியவன் “ம்மா போலாம்…” என்று கிளம்பியும் விட்டான்.

வீட்டிற்கு போய் ஜெகா அவனின் பைக்கை நிறுத்தியது தான் தாமதம், செல்வி “மேல உன் ரூமுக்கு போ.. நான் வர்றேன்.. கொஞ்சம் பேசணும்…” என,

“ம்மா…” என்றான் கேள்வியாய்.

“உன்னை மேல போ ன்னு சொன்னேன் ஜெகா…”

“எதுவா இருந்தாலும் வீட்ல வச்சு பேசவேண்டாம்மா…”

“அப்போ எதுவோ இருக்கு தானே?” என்றார் செல்வியும் விடாது.

“சரி வண்டியை இப்படியே திருப்பு. எங்கயாவது கோவிலுக்கு விடு…” என, ஜெகந்நாதனோ, முதலில் தயங்கினாலும், பின் எப்படியாகினும் இதை ஏதாவது ஒரு முடிவிற்குக் கொண்டுத்தானே வர வேண்டும் என்று நினைத்து, மீண்டும் பைக்கைக் கிளப்ப, செல்விக்கோ மனது அடித்துக்கொண்டது.

‘கடவுளே இரண்டு பொண்ணுங்க வாழ்க்கை சம்பந்தப்பட்டது…’ என்று கோவிலுக்கு செல்லும் முன்னமே, வேண்டுதலைத் தொடங்கிவிட்டார்.

அவர்கள் வீட்டில் இருந்து ஒரு பத்து நிமிட தூரத்தில் சிவன் கோவில் ஒன்று உண்டு. பொதுவாய் இந்த நேரத்தில் கூட்டம் இருக்காது. அப்படியே ஆட்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே இருப்பர். ஜெகந்நாதன் அங்கேதான் சென்றான் இப்போது.

கோவிலுக்கு உள்ளே சென்று, இறைவனை மனதார வேண்டிவிட்டு, அம்மா மகன் இருவருமே ஆளுக்கொரு வேண்டுதல் வைத்துவிட்டு, தனியாய் ஓரிடத்தில் வந்து ஆமர்ந்துகொண்டனர்.

அமர்ந்ததுமே செல்வி கேட்டது ஒன்று மட்டுமே “என்ன வேண்டின ஜெகா?” என்று.

அவனோ சிரித்தபடி “சின்னதுல இருந்து வேண்டுறதை வெளிய சொல்லக்கூடாது, நடக்காதுன்னு சொல்லி வளர்த்தது நீங்கதானே ம்மா…” என,

“உனக்கு நிறைய நிறைய சொல்லித்தான் வளர்த்தேன்…” என்றார் இடக்காய்.

“இப்போ வரைக்கும் நான் எதையுமே மீறி நடக்கலையே…” என்றான் அவனும் அதே தொனியில்.

“சரி சொல்லு, அந்த பொண்ணு மைதிலிக்கும் உனக்கும் என்ன?” என்று நேரடியாகவே கேள்விக்கு வர, மனதில் அம்மாவை மெச்சிக்கொண்டான். ஜெகந்நாதன் கொஞ்சம் புன்னகை முகமாய் தான் இருந்தான். எப்படியோ அம்மாவிடம் சொன்னாலாவது கொஞ்சம் மனதில் இருக்கும் பாரம் குறையும் என்று.

“இப்போ எதுக்கு நீ சிரிக்கிற?”

“ஒண்ணுமில்லம்மா..” என்றவன் செல்வியின் கரம் பற்றி “மைத்தி நல்ல பொண்ணும்மா…” என,

“அது எனக்கு தேவையில்லை…” என்றார் கறாராய்.

“அவளை நான் லவ் பண்ணேன் ம்மா…”

“ஓ..!” என்றவர் மகனின் முகத்தை உற்று நோக்கிவிட்டு “இப்போ பண்ணலை அப்படித்தானே…” என,

“பண்ணாலும் வெளிய சொல்ற நிலைல நான் இல்லையே இப்போ…” என்றான் நிஜமாவே வருந்தி.

ஒரு தாயாய்  ஜெகாவின் இந்த பாவனை வேதனையைக் கொடுக்க “உனக்கு நந்தினியைப் பிடிக்கலையா ஜெகா?” என்றார்.

“அதுக்கு முன்னாடியே வருசக்கணக்கா எனக்கு மைத்தியை பிடிச்சிருச்சு ம்மா…” என, செல்வி எதுவும் பேசவில்லை.

சில நிமிடங்கள் அவருக்கும் தேவைதானே…

பின் செல்வியே லேசாய் தெளிந்து “நிரஞ்சனி… நந்தினி ரெண்டு பேருக்கும் என்ன பதில் சொல்ல முடியும் ஜெகா. நந்தினியை நம்ம வேணாம்னு சொன்னா நிச்சயம் அவங்க நிரஞ்சனியை வேணாம் சொல்வாங்க.. அது நம்ம குடும்பத்துக்குள்ள எவ்வளோ பெரிய பிரச்சனை கொண்டு வரும் தெரியுமா?” என,

“அதனால தானே ம்மா நானும் அமைதியா போறேன்…” என்றான் இன்னும் வறண்ட குரலில்.

“டேய்…” என்றவர், மகனின் கரத்தை இறுகப்பற்றி

“மனசுல ஒருத்திய வச்சிட்டு உன்னால சந்தோசமா இருக்க முடியுமா இன்னொரு பொண்ணோட? அதுவும் அந்த பொண்ணு இங்கயே இருக்கு…” என,

“மைத்தி எனக்காகத்தான் வந்தாம்மா…” என்றவன் நடந்தவை அனைத்தையும் சொல்லிவிட, நிஜமாகவே மைதிலி மீது செல்விக்கு நல்லதொரு அப்பிப்ராயம் பிறந்தது.

“இத்தனை நடந்திருக்கு, ஏன் ஜெகா என்கிட்டே முன்னமே சொல்லல?”

“சொல்ற மாதிரியா ம்மா நம்ம சூழ்நிலை இருந்தது…” என்றவன் “ம்மா நீங்க கேட்டீங்க நான் சொல்லிட்டேன். இது நம்மளோட போகட்டும். பெரியம்மாக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க…” என்று சொல்ல,

“நந்தினி கூட சந்தோசமா வாழ்வியா டா?” என்றார் மீண்டும்.

ஜெகந்நாதன் பதில் சொல்லாது இருக்க “பதில் பேசு ஜெகா…?” என்று உலுக்கினார் மகனை.

“எனக்குத் தெரியலைம்மா…” என்றவன் “என்னோட கல்யாணம் எப்படியாவது ஏதாவது ஒருவகைல யாருக்கும் பாதிப்பு இல்லாம நின்னு போயிடனும்னு தான் வேண்டினேன் ம்மா..” என, அதிலேயே செல்விக்கு புரிந்து போனது மகன் மைதிலி இல்லாது வேறு யாரோடும் நல்லதொரு இல்லறம் செய்ய மாட்டான் என்று.

ஆனால் துணிந்து இந்த விசயத்தில் முடிவெடுக்கும் தைரியம் அவருக்கு இல்லை. அதிலும் நாளை திருமணப் புடவை எடுக்கவேறு போகும் சமயத்தில், அதற்குமேல் அவரால் எதையும் யோசிக்கக் கூட முடியவில்லை.

இங்கே இப்படியெனில், அங்கே வெறுமெனே புத்தகத்தை விரித்து வைத்திருந்த மைதிலியின் பார்வையோ சுவரை வெறித்துக்கொண்டு இருந்தது.

ஒருவாரம் என்று சொல்லி வந்திருந்த அவளின் அப்பாவும் அம்மாவும் ஊருக்கு போகும் பேச்சையே இப்போது வரைக்கும் எடுக்கவில்லை. போதாத குறைக்கு கமலாவிடம் வேறு இங்கே இடமோ இல்லை வீடோ சொந்தமாய் வாங்கவேண்டும் என்றுவேறு சொல்லி இருக்கிறார்கள் போல.

இப்போது மீண்டும் கமலா அழைத்து மைதிலியிடம் பேச “நான் வேணாம்னு சொல்றேன், அப்பாவும் அம்மாவும் கேட்க மாட்றாங்க ஆச்சி…” என்றாள் எரிச்சலை அடக்கி.

“நீ ஏன் வேணாம் சொல்ற?”

“இங்க இருந்து என்ன செய்யப் போறோம்?”

“ஏன் இங்க இருந்தா என்ன? உனக்கு இங்கயே ஒரு மாப்பிள்ளை பார்த்து…” எனும்போதே “ஆச்சி… நான் போய் படிக்கணும்…” என்று எழுந்துவிட்டாள்.

என்னவோ இந்த சூழலில் திருமணம் என்ற சொல்லே அவளுக்கு கசப்பாய் இருந்தது. இப்படி எழுந்து வருகிறோமே என்று அவளுக்கும் சங்கடமே. இருந்தும் அவளால் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை.

மேலே வந்தவளுக்கு மனது ஒரு நிலையில் இல்லை…!

அப்படியே அமர்ந்துவிட, சுகுணா அழைத்தார் “என்ன மைத்தி செய்ற?” என்றபடி.

“ம்ம் படிக்கிறேன்…”

“ஓ..! உனக்கு வாட்ஸ் ஆப்ல ஒரு போட்டோ அனுப்பிருக்கேன் பாரு…” என,

“ம்ம்ச் என்னம்மா?” என்றாள் எரிச்சலாய்.

“ஏய் பாரு டி.. பார்த்துட்டு கூப்பிடு…” என்றவர் வைத்துவிட, வேண்டா வெறுப்பாய் அவர் அனுப்பிய புகைப்படம் பார்க்க, பார்த்ததுமே தெரிந்தது மாப்பிள்ளை போட்டோ என்று.

‘இந்த அம்மாவ…’ என்று பல்லைக் கடித்தவள், குமரனுக்கு அழைத்து “என்னப்பா?” என்று கேட்க,

“என்னடா…?” என்றார் பாசமாய்.

“அம்மா போட்டோ அனுப்பிருக்காங்க…”

“ம்ம் எனக்கு ஒரு வகைல அக்கா பையன்.. இங்கதான் மதுரைல பேங்க்ல வேலை. பெர்மனன்ட் ஆகிட்டான்… உனக்கு மேட்சா இருக்கும்னு தோணுது…” என,

“அப்பா…!” என்றவளுக்கு அழுகை பீரிட்டு வந்தது.      

  

 

   

 

  

 

 

   

        

 

 

      

   

      

Advertisement