Advertisement

                        இதயத்திலே ஒரு நினைவு – 9

“டி மைத்தி… நம்ம கிளாஸ் தேவி இருக்காள்ல அவளையும் மேத்ஸ் டிப்பார்ட்மென்ட் தினேஷ் இருக்கான்ல, ரெண்டு பேரையும் சஸ்பென்ட் பண்ணிட்டாங்கலாம்…”

ரேகாவின் முகத்தில் அப்படியொரு பதற்றம்…

“தெரியும்…” என்று கூறிய மைதிலியின் முகத்திலோ என்ன இருந்தது என்றே கண்டுகொள்ள முடியவில்லை.

அன்றைய தினம் முதல் வகுப்பிற்குப் பிறகு, கல்லூரி முழுவதும் இதுவே பேச்சாய் இருந்தது. அதிலும் தேவி  இவர்கள் வகுப்பு என்றதும், இவர்களது வகுப்பில் சற்று கூடுதல் பதற்றமும்.

ஆளாளுக்கு ஒவ்வொரு கதை பேசினர்..

“ஏன் டி இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணது உனக்குத் தெரியுமா?”

“ம்ம்ச் டூர் வந்தப்போ தான் தெரியும்?”

“அடிப்பாவி உன்னோட தானே நானும் இருந்தேன்… எனக்கு நீ சொல்லவே இல்லையே…” என்று ரேகா கேட்க,

“உன்கிட்ட சொன்னேன்… நீ செல்பி எடுக்கிறதுலயே பிசியா இருந்த.. அப்புறம் நானும் விட்டுட்டேன்…” என்று மைதிலியும் சொல்ல,

“டூர் வந்தப்போ எப்படி உனக்குத் தெரியும்?” என்றாள் ரேகா விளங்காது.

“தேவி தினேஷ் கூட போன்ல பேசிட்டே இருந்தா… அவனும் அவன் பிரண்ட்ஸ் கூட தனியா வந்திருந்தான் போல. ரெண்டு பேரும் தனியா போய் நின்னு பேசிட்டு இருந்ததை ஹெச் ஓ டி பார்த்துட்டார்…” என,

“அச்சோ..!” என்றாள் ரேகா வாயில் கை வைத்து.

“ஆமா…!”

“ஆமா இதெப்படி உனக்குத் தெரியும்..?”

“ஹெச் ஓ டி கூப்பிட்டு அவங்க ரெண்டு பேரையும் திட்டிட்டு இருந்தப்போ பார்த்தேன்…”

“ஓ..!”

“இது தேவையா?! இப்போ பாரு காலேஜ் முழுக்க இதுதான் பேச்சு. திரும்ப இங்க கால் வைக்க முடியுமா? பைனல் இயர் ரெண்டு பேருமே… கடைசி நேரத்துல இப்படியொரு கெட்டப்பேரு தேவையா?! இனி செமெஸ்டர்க்கு மட்டும் தான் அவங்க வர முடியும்.. எவ்வளோ அசிங்கம்…” என்று மைதிலி பொரிய, ரேகா அமைதியாகவே இருந்தாள்.

ஒருவேளை இதனால் தான் மைதிலி சுற்றுலாவில் ஜெகந்நாதனை தவிர்த்தாளோ…

தவிர்க்கிறாளோ..?!

ரேகா இதனை கேட்டே விட்டாள் அவளிடம்.

“இதுவும் ஒரு காரணம். பாரேன் அவங்க பேரன்ட்ஸ் வந்து எப்படி நின்னிருந்தாங்க. யார் முகத்தையும் பார்க்கக் கூட இல்லை. என்னால யார் முன்னாடியும் அசிங்கப்பட்டு நிற்க முடியாது. எங்கப்பா அம்மாவையும் நிற்க வைக்க முடியாது…”

“அப்போ உனக்கு ஜெகாண்ணாவ பிடிக்கலையா?!”

“பிடிக்கும்… அது உங்க அண்ணனுக்கும் தெரியும். ஆனாலும் வேண்டாம். நான் இங்கயே இருக்கப் போறதில்ல. ஆனா உங்கண்ணன் அப்படியில்ல. இது உங்க ஊரு.. ஒரு சின்ன பிரச்சனை ஆச்சுன்னா கூட, அது அவங்க குடும்பத்தையே தலை குனிய வைக்கும்…” என,

இவளுக்கு அவன் மீது இருப்பது எப்படியானதொரு பிரியம் என்று ரேகா சற்றே வியந்து தான் பார்த்தாள்.

“இது உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரிஞ்சதா இருக்கணும். இந்த விஷயம் வெளிய தெரிஞ்சது… அவ்வளோதான்…”

“அப்போ… நீ முடியாதுன்னு சொல்ல போறியா…?”

“எதுவுமே பேச போறதில்லை. இன்னும் கொஞ்ச நாள் தான் படிப்பு முடிஞ்சிடும். அப்பாக்கு சென்னைல ட்ரான்ஸ்பர் வந்திடுச்சு…” என்றாள் மைதிலி சுரத்தே இல்லாது.

“என்ன டி சொல்ற?!”

“ஆமா ரேகா… எங்களுக்குள்ள பிடித்தம் இருந்தாலும் இது சரியா வராது. யாரையும் நான் தலைக்குனிவு செய்ய விரும்பல. கஷ்டம் எங்க ரெண்டு பேரோட போகட்டும்…” என்ற மைதிலியின் குரல் உறுதியாகவே இருந்தது.

 

_______________________

 

      

சுகுணாவும், குமரனும் மகளைக் காண வந்துவிட்டனர். சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்திருக்க, மைதிலி விமான நிலையம் சென்று அழைத்துக்கொண்டு வந்திருந்தாள்.  வந்தவர்கள் முதலில் கமலாவைப் பார்த்துவிட்டே மாடிக்குச் செல்ல, சுகுணாவிற்கு இங்கு வந்ததும் பழைய நியாபகங்கள்.

“இங்க இருந்தப்போ எவ்வளோ நிம்மதியா இருந்தேன் தெரியுமா…? பக்கத்துல இருக்கவங்க அப்படி பேசி பழகினாங்க…” என்று மகளிடம் சொல்ல,

“ஏன் அங்க என்ன குறை உனக்கு?” என்றார் குமரன்.

“என்ன குறை..? இவ காலேஜ் போய்டுவா. நீங்க ஆபிஸ் போயிடுவீங்க.. நான் வீட்டுக்குள்ளயே இருக்கணும்..”

“உன்னைய நான் வெளிய எங்கயும் போகவேணாம் சொன்னேனா?!”

“நீங்க சொல்லல.. ஆனா எனக்கு செட் சேரல.. இங்க அப்படியா..?” என்றவர் சந்தோசமாய் “எல்லாரையும் போய் பார்க்கணும்…” என்றார்.

மைதிலி எல்லாவற்றையும் அமைதியாகவே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

இங்கே வந்து அம்மா இத்தனை மகிழ்ச்சியாய் உணர்வார்  என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அப்பாவின் முகத்தில் கூட கொஞ்சம் புன்னகை ஒட்டிக்கொண்டு இருக்க, இவர்களிடம் எப்படிச் சொல்வது, தான் இன்னும் சிறிது நாளில் வந்துவிடுவேன் என்று.

“என்ன டி நீ அமைதியாவே இருக்க?!” என்று சுகுணா கேட்க,

“இல்லம்மா… நீங்க பேசுறதை பார்த்துட்டு இருந்தேன்…” என்றாள்.

“ம்ம் கீழ இருக்க ஆச்சி கூட நல்லா பேசுறாங்க…”

“சூப்பரா பேசுவாங்க.. நல்ல டைப்..”

“பரவாயில்ல ரேகா உனக்கு நல்ல இடமா தான் பார்த்து வச்சிருக்கா…” என்று குமரனும் சொல்ல,

“ஆமாப்பா.. எனக்குத்தான் இங்க என்னவோ வந்ததுல இருந்து எதுவும் சரியா இல்லை…” என்று மைதிலி வேண்டுமென்றே கூறினாள்.

“ஏன் என்னாச்சு?!”

அப்பாவும் அம்மாவும் ஒரே நேரத்தில் கேட்க, “என்னவோ உங்க கூட இருந்தது போல இல்லை…” என,

“அதான் வந்துட்டோமே. நானும் அப்பாவும் கூட பேசினோம். மைதிலிக்கு இந்த பக்கமே வரன் பார்க்கலாம். சென்னை வீட்ட வாடகை விட்டுட்டு, ரிட்டயர்மென்ட் பணத்துல இங்கயே சொந்தமா ஒரு வீடு வாங்கிடலாம்னு…” என்று சுகுணா சொல்லவும், மைதிலிக்கு தலையில் இடி விழுந்தது போலிருந்தது.

“என்னது?!” என்று அதிர்ந்து கேட்க,

“ஆமா மைத்தி… அம்மா சொல்றதும் நல்ல ஐடியா தானே…” என்றார் குமரனும்.

“என்னப்பா நீங்களும் இப்படி சொல்றீங்க?”

“பின்ன நம்ம சொந்தக்காரங்க முக்காவாசி திண்டுக்கல், சிவகாசின்னு இருக்காங்க… இங்க இருந்தா எல்லாத்துக்கும் பக்கம். எத்தனை நாள் தான் நானும் வேலை பின்னாடியே ஓடுறது.. வந்தது வந்தாச்சு இங்கயே ஒரு வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்துடலாம். இல்லை இடம் வாங்கி கட்டறதுன்னாலும் சரி…” என, மைதிலிக்கு இதயம் தாறுமாறாய் அடித்துக்கொண்டது.

குப்பென்று வியர்ப்பது போலிருக்க, வேகமாய் தண்ணீர் மொண்டு குடித்தாள்.

“நீ என்னவோ சரியே இல்லை மைத்தி…” என்று சுகுணா சொல்ல,

“அதைத்தானே நானும் சொன்னேன் ம்மா எனக்கு இங்க என்னவோ சரியா இல்லைன்னு…” என்றாள் அவளும்.

“அதெல்லாம் நமக்குன்னு ஒரு சொந்த வீடு வாங்கி இருந்தா எல்லாம் சரியாகிடும். எங்க முடிவுல நாங்க உறுதியா இருக்கோம்…” என்று சுகுணா சொல்ல, இவர்களின் பேச்சு இப்படியே நீள,

அங்கே ஜெகாவின் வீட்டிலோ செல்வியும் ரத்னாவும், திருமண புடவை எடுக்கப் போவது பற்றி ஜெகாவிடம் பேச, அவனோ “நீங்களே பார்த்து எடுங்க…” என்றான் சுரத்தே இல்லாது.

நிரஞ்சனியோ “அண்ணா.. கல்யாண மாப்பிள்ளை நீயும் தான். நந்தினி அண்ணியும் வருவாங்க. நீ இல்லாம எப்படி?” என்று ரகளை செய்ய,

“எனக்கு புடவை பத்தி எல்லாம் எதுவும் தெரியாது நிரஞ்சனி…” என்றான் அவனும்.

“இருக்கட்டும். ஆனா வந்தா தானே அண்ணிக்கு எது நல்லாருக்கும்னு தெரியும். பார்க்க முடியும்…”

“இந்த வேலையே வேணாம்… நீங்களே எல்லாரும் போயிட்டு…” என்று ஜெகந்நாதன் சொல்ல, அவனது கவனம் இங்கில்லை என்று செல்வியும் சரி ரத்னாவும் சரி புரிந்துகொண்டனர்.

வேறு எதையோ மனதில் போட்டு அவனாய் யோசித்துக்கொண்டு இருக்கிறான் என்று அந்த இரு தாய்களுக்கும் புரிந்தது.

செல்வி பெற்றவர் என்றால், ரத்னா ஜெகந்நாதனை வளர்த்தவர் ஆகிற்றே.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ஜெகா அமைதியாகவே இருந்தான்.

நிரஞ்சனி அடுத்து அவளது அறைக்குள் சென்றுவிட, ரத்னாவோ ஜெகந்நாதனிடம் “என்ன ஜெகா எதுவும் வெளிய பிரச்னையா?” என்றார்.

“இல்லையே பெரியம்மா…”

“பின்ன முகத்துல வாட்டம் தானே தெரியுது…”

“அதெல்லாம் இல்ல பெரியம்மா…”

“ம்ம் உனக்கு பொறுப்பு ஜாஸ்தின்னு தெரியும் ஜெகா. ஆனாலும் நீ சிரிச்சுட்டு சந்தோசமா இருந்தா தான் எங்களுக்குத் தைரியமும் நிம்மதியும்…” என்றவர் செல்வியிடம் என்னவென்று கேள் என்று ஜாடை காட்டிவிட்டு உள்ளே சென்றுவிட,

செல்வியோ “என்னடா…?!” என,

“என்னம்மா…” என்றான்..

“ஏன் எப்படியோ இருக்க?”

“அடடா அதெல்லாம் இல்லம்மா…” என்றான் எரிச்சலாய்.

“எங்களுக்கு கண்ணு தெரியாதா?”

“அது நீங்கதான் சொல்லணும்… தெரியுதா இல்லையான்னு…”

“இப்படி பேசி பேசியே நீ எங்க வாய் அடைச்சிடு…” என்றவர் “ஆமா உங்க ஆச்சி என்ன புதுசா வீட்ல ஆள் குடி வச்சிருக்கு…” என்றார், பேச்சை மாற்றும் விதமாய்.

கமலாவிடம் சென்றால், நிச்சயம் பேரனை பேச வைத்துவிடுவார் என்று செல்விக்குத் தெரியும். அதன் பொருட்டே இந்த பேச்சை எடுக்க, அது ஜெகாவிற்கு தெரியாதா என்ன?!

“நீயே உங்கம்மாக்கிட்ட கேட்கவேண்டியது தானே…” என்றான் அம்மாவிடம்.

“எங்கடா பேச நேரமிருக்கு. இங்கன இருக்கு வீடு. போய் கூட பார்க்க முடியல…” என்றவர் “சாயங்கலாம் கூட்டிட்டு போறியா?”  என,

“இத்தன வருசமா நான் தான் கூட்டிட்டு போனேனா?!” என்றான்.

“அதெல்லாம் தெரியாது.. கூட்டிட்டு போறியா இல்லையா?”

“கூட்டிட்டு போய் விடுவேன். திரும்ப வர்றப்போ கால் பண்ணு வந்து வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்…” என,

“ஏன் உனக்கு வேற வேலை இருக்கா?” என்றார் செல்வி.

“நான் வெட்டியா சுத்திட்டு இருக்கேனா?” என்றான் பட்டென்று.

‘அட…! இவனுக்கு என்ன ஆச்சு…’ என்று செல்வி பார்க்க, ஜெகா எழுந்து சென்றுவிட்டான்.

மகன் மனதிற்குள் எதையோ போட்டுக்கொண்டு நிம்மதி இல்லாது தவிக்கிறான் என்று செல்விக்கு ஊர்ஜிதமாகிட, கணவனிடமும் இதனை சொல்ல “முன்ன மாதிரி நான் நிறைய வெளி வேலை பார்க்கிறது இல்லை. எல்லாமே அவனேதான் பார்க்கிறான் போறான் வர்றான். இப்போ கல்யாண வேலை வேற… அழைச்சல் ஜாஸ்தி.. டென்சன் இருக்கத்தானே செய்யும்…” என்று அவர் சொல்ல,

செல்வியின் மனது சமாதானம் ஆகிடவில்லை..

அன்று மாலையே அம்மாவைப் பார்க்கவென்று கமலாவின் வீட்டிற்கு ஜெகாவிடம் சொல்லாமலேயே சென்றுவிட்டார். போனதும் மகன் என்னவோ சரியில்லை என்று சொல்ல,

“அது உனக்கு இப்போத்தான் தெரியுதா?” என்றார் கமலா மகளை சடைத்து.

“ஏம்மா இப்படி சொல்றீங்க?”

“பின்ன கல்யாணத் தேதி எல்லாம் குறிச்சீங்க சரி. பொண்ணு அவனுக்கு பிடித்தமான்னு யோசிக்கணும் தானே…”

“ம்மா..! அவனைக் கேட்காம நாங்க எதுவும் செய்யல…” என்றார் செல்வி.

“சூழ்நிலை அவன் சரின்னு சொல்லனும்னு இருக்கு. அப்படியிருக்கப்போ நீங்க மாத்தி யோசிக்கணும்…” என்று கமலாவும் விடாது பேச,

“நந்தினிய பிடிக்கலன்னு உங்கட்ட எதுவும் சொன்னானா?” என்றார் செல்வி நேரடியாய்.

“எனக்கே பிடிக்கலை…” என்று ஆச்சி பட்டென்று பேச,

“ம்மா..!” என்றார் செல்வி சற்றே எரிச்சலுடன்..

“அட உன் மகனை வர சொல்லு. என் முன்ன நேரா வச்சு கேளு.. அதைவிட்டுட்டு என்னைய வந்து கேட்டிட்டு இருக்க…” என, ஜெகாவிற்கு அழைத்தார் செல்வி.

இன்னும் ஐந்து நிமிடத்தில் வருவதாய் சொல்ல, அதற்குள் வெளியே செல்லவென மேலிருந்து சுகுணாவும் குமரனும் வர, இவர்கள் இருவரும் முன்னிருந்த போர்டிக்கோவில் அமர்ந்திருக்க, சம்பிரதாயமாய் சுகுணா கமலாவிடம் பேச,

“மைதிலியோட அப்பா அம்மா.. இன்னிக்குத்தான் வந்தாங்க…” என்று கமலா செல்விக்கு அறிமுகம் செய்து வைக்க, இரண்டொரு நொடி பேசிவிட்டு தம்பதிகள் இருவரும் கிளம்பிவிட்டனர்.

அவர்கள் செல்லவுமே “என்னம்மா திடீர்னு ஆளுங்களை எல்லாம் குடி வைக்கிற?” என,

“ஏன் வைச்சா என்ன?” என்றார் அவரும்.

“இத்தனை வருஷம் அப்படி இல்லையே…”

“ரேகா வந்து கேட்டா. மைதிலி பொண்ணும் நல்ல பொண்ணா இருந்துச்சு.. எனக்கும் பிடிச்சு போச்சு.. அதான்…” என, ஜெகாவும் வந்துவிட்டான்.

“ஒரு பொண்ணா தான் இருக்கா?” என்றார் அப்போதும் செல்வி பேச்சை தொடர்ந்து.

“ஆமா.. நம்ம ஜெகாவுக்குக் கூட தெரியும்.. அவனோட ஜூனியராம்…” என, அப்படியா என்று பார்த்தார் மகனை.

இந்த பேச்சு பேசும்போதா தான் வரவேண்டும் என்று ஜெகந்நாதன் நினைக்க “என்கிட்டே நீ சொல்லவே இல்லடா…” என்றார் செல்வி.

“அதான் நான் சொல்லிட்டேனே…” என்று கமலா சொல்ல,

“ம்ம் நீங்களே நல்ல பொண்ணுன்னு சொன்னா அது பெரிய விஷயம் தான்…” என்று அம்மாவை கிண்டல் செய்தார் செல்வி.

இத்தனை பேச்சிற்கும் ஜெகந்நாதன் பேசாது இருக்க, “டேய்… மைதிலிய கூப்பிடு.. உங்கம்மாவும் பார்க்கட்டும்…” என, ஜெகந்நாதன் ஆச்சியை முறைக்க,

“அட கூப்பிடு…” என்று கமலா சொல்ல,

மைதிலியின் அலைபேசிக்கு அழைத்த ஜெகந்நாதன் “மைத்தி.. கீழ வாயேன்..” என, அத்துனை நேரம் சகஜமாய் பேசிக்கொண்டு இருந்த செல்விக்கு ஜெகாவின் ‘மைத்தி…’ என்ற அழைப்பு வித்தியாசமாய், ஏன் வியப்பாய் கூட இருந்தது.

இதுநாள் வரைக்கும் ஜெகந்நாதன் யாரையும் சுருக்கமாய் பெயர் சொல்லி அழைத்ததில்லை. நிரஞ்சனியைக் கூட முழு பெயர் சொல்லித்தான் அழைப்பான்.

ஆனால் யாரோ ஒரு பெண்ணை ‘மைத்தி…’ என்று விளிப்பது, மகனுக்கு அத்தனை எளிதா?

கொஞ்சம் அவரின் பார்வை மாறியது நிஜமே…!

        

 

  

                

   

  

                       

Advertisement