Advertisement

                இதயத்திலே ஒரு நினைவு – 8

“ஜெகா… ஜெகா… என்னடா இப்படி உக்காந்திருக்க…” என்ற வாசுவிற்கு, நண்பனை இப்படி ஒரு கோலத்தில் பார்த்து வருத்தமே.

ஜெகந்நாதன் பதிலே சொல்லாது தலையை பிடித்து அமர்ந்திருக்க, வாசுவோ அவனைப் பிடித்து உலுக்கிக்கொண்டு இருந்தான்.

ஜெகந்நாதன் இரண்டு நாட்களாய் கல்லூரிக்குச் செல்லவில்லை.

அனைவரும் சுற்றுலா சென்று வந்தும் இரண்டு நாட்கள் ஆகிப்போனது. திரும்ப வீட்டிற்கு வரும்போதே ஜெகந்நாதன் கொஞ்சம் சரியில்லாத மன நிலையில் தான் இருந்தான். நண்பர்கள் எல்லாம் ஆட்டம் பாட்டமாய் இருக்க அதிகமாய் ஜெகந்நாதன் எதுவும் வெளிக்காட்டவில்லை.

இந்த சுற்றுலாவிலாது, மைதிலியிடம் தன் மனதில் இருப்பதை வெளிப்படையாய் சொல்லிவிடலாம் என்று எண்ணியிருக்க, அதற்கான வாய்ப்பே அமையவில்லை.

அப்படியே அமைந்தாலும் கூட மைதிலி ஜெகந்நாதனைக் காண்டாலே காத தூரத்திற்கு சென்றுவிடுகிறாள்.

இவனும் எத்தனை தூரம் தான் யார் கண்ணையும் உறுத்தாத வகையில் அவளிடம் பேச முயல்வது. ரேகாவிடம் கூட பேசிப் பார்த்தான். அவள் சொல்லியும் மைதிலி எதையும் பெரிதாய் கேட்கவில்லை.

“டூர் வந்த இடத்துல நானும் சீனியரும் மட்டும் தனியா நின்னு பேசுறதை யாரும் பார்த்தா எவ்வளோ தப்பாகும் தெரியுமா?” என்று சொல்லி வாய் மூடிவிட்டாள் மைதிலி.

இதற்குமேல் என்ன சொல்ல முடியும்?!

ஜெகாவிற்கு இது என்னவோ அவனை அவமானம் செய்துவிட்டதாய் தோன்றிவிட்டது.

பிடிக்கவில்லை எனில் முதலிலேயே சொல்லியிருக்கலாமே. தான் விரும்புவது அவளுக்கும் தெரியும் தானே. அவனின் ஒவ்வொரு பார்வைக்கும் அவளிடம் பதில் உண்டு தானே.

கல்லூரியில் அவன் நிற்கும் இடத்தை அவள் சரியாய் கண்டுகொள்வாள் தானே. அத்தனை ஏன் சதீஸ் வந்து அவளிடம் அவனின் விருப்பம் சொன்னதற்குக் கூட மைதிலி ஜெகந்நாதனிடம் தன் மனதில் அவன்மீது அப்படியொரு எண்ணமில்லை என்றுதானே சொன்னாள்.

இதனை எல்லாமே யோசித்து யோசித்து ஜெகந்நாதன் மிகவும் நொந்து போனான். பிடிக்கவில்லை என்றால் ஆரம்பத்தில் இவன் தன் பின்னே வருகிறான் என்று தெரிந்ததுமே அப்போதே சொல்லியிருக்கவேண்டும். வருடங்களும் ஓடிப்போனது.

இதோ இவள் கல்லூரி இறுதி ஆண்டு. அவனுக்கும் முதுகலை இறுதியாண்டு. இன்னும் பதினைந்து நாட்களில் பிராஜக்ட் என்று கிளம்பிவிடுவார்கள். அதற்குள் ஒரு முடிவிற்கு வரலாம் எனில் மைதிலி பிடிகொடுக்கவே இல்லை.

ஜெகாவினால் இதனை தாங்க முடியவில்லை…!

______________________________-

 

 

மைதிலிக்கு மதுரைக்கு வந்ததே தவறோ என்று தோன்றி விட்டது. நிச்சயமாய் ஜெகந்நாதனை அங்கே அவள் எதிர்பார்க்கவில்லை.

‘ஐயோ…!’ என்று மனது அடித்துக்கொள்ள,

ஆச்சியோ “என்ன மைதிலி இவன்தான் என் பேரன் ஜெகந்நாதன்…” என்றார் பெருமையாய்.

ஆனால் பார்வை மட்டும் மைதிலியின் முக பாவனைகளை கவனித்துக்கொண்டு இருந்தது.

ஜெகாவும் இறுக்கிப் போய் அமர்ந்திருக்க, மைதிலியோ “சரிங்க ஆச்சி…” என்றாள் சுரத்தே இல்லாது.

“என்னவோ சொல்லணும் சொன்னியே…”

“இ… இல்ல ஆச்சி…” என்று மைதிலி சொல்ல,

“நான் கிளம்புறேன் ஆச்சி…” என்றான் ஜெகா.

“இப்போதானே வந்த நீ…” என்றவர் “மைதிலி இவனைத் தெரியுமா உனக்கு…” என்று ஆழம் பார்க்க,

தெரியும் என்று சொன்னால், சகஜமாய் பேசவேண்டும். தெரியாது என்று சொல்லிடவே முடியாது. மைதிலி பாவமாய் தான் ஜெகந்நாதனை பார்த்தாள் இப்போது. கமலாவிற்கு உண்மை தெரியும் என்று மைதிலிக்குத் தெரியாது ஆனால் ஜெகந்நாதனிற்குத் தெரியுமே.

“ஆச்சி நீ என்னை எதுக்குக் கூப்பிட்ட. இப்போ என்ன செஞ்சிட்டு இருக்க?!” என்று ஜெகா கேட்க,

“வாழைப்பூ வடை சாப்பிட கூப்பிட்டேன்.. ஆனா இந்த பொண்ணு தான் உங்க பேரன் வந்தா சொல்லுங்க நான் நன்றி சொல்லணும் சொல்லிச்சு…” என்று கமலாவும் பேச, மைதிலிக்கு தலையில் அடித்துக்கொள்வோமா என்று இருந்தது.

“தேங்க்ஸ் எல்லாம் எதுவும் வேணாம்…” என்றவன் “எனக்கு வேலை இருக்கு ஆச்சி…” என்று எழுந்துகொள்ள, மைதிலிக்கு அப்பாடி என்ற உணர்வு. கூடவே இந்த ரேகாவை என்ன செய்தால் தகும் என்ற கோபமும்.

பின்னே இப்படி வந்து சிக்கவைத்துவிட்டாளே அவள்…!

“அட இருடா…” என்று ஜெகந்நாதனின் கையைப் பிடித்த கமலா, “உன்னோட பேசணும்…”  என்று சொல்ல, மைதிலியோ இதுதான் சாக்கென்று “நான் மாடிக்கு போறேன் ஆச்சி…” என்றாள் வேகமாய்.

“ஏன் வேலை இருக்கா உனக்கு?”

“ஆ.. ஆமா…” என்றதும் அவளை ஒருமுறை ஆழப் பார்த்துவிட்டு

“சரி நீ போ…” என்றிட, மைதிலியும் விட்டால் போதுமென்று ஓடிவிட்டாள்.

மேலே வந்ததுமே முதலில் அவள் செய்தது ரேகாவை அழைத்து வசை மழை பொழிந்தது தான்.

கடைசியில் “எல்லாம் தெரிஞ்சே நீ இப்படி பண்ணலாமா ரேகா…” என்கையில் மைதிலியின் குரல் உடைந்துவிட்டது.

எத்தனை முறைதான் அவள் தன்னை தானே திடம் செய்துகொள்வது.

“நீயும் சரி அண்ணனும் சரி மனசுக்குள்ள வச்சிக்கிட்டு எத்தனை நாளைக்குத்தான் கஷ்டப்படுவீங்க…?” என்று ரேகா கேட்க,

“ம்ம்ச் உனக்கு எவ்வளோ சொன்னாலும் புரியாது ரேகா…” என்றவள் வைத்துவிட்டாள்.

மைதிலிக்கு நிஜமாய் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. பெற்றவர்கள் இங்கே வர கிளம்பி இருக்கையில் திடீரென தான் அங்கே போய் நிற்க முடியாது. என்ன ஏதென்று உண்மையான காரணத்தை சொல்லிட நேரும். ஒருநிலைக்கு மேலே மைதிலியால் அதை இதை சொல்லி சமாளிக்க முடியாது. உண்மையை சொன்னால் நிச்சயம் அப்பாவும் அம்மாவும் வருந்துவர்.

ஜெகாவின் பாட்டி வீடு என்று தெரிந்தும் இங்கே அவளால் இருக்கவும் இனி முடியாது. மனது ஏனோ அதற்கு இடம் தரவில்லை. மறந்திட வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை. விலகிட வேண்டும் என்று முடிவு எடுத்திருந்த போது, இங்கேயே வந்தமர்ந்தால், அது எப்படி?

என்ன யோசித்தும் உடனே அவளால் என்ன செய்திட முடியும் என்று ஒரு முடிவிற்கு வர முடியாது தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

சத்தியமாய் தனக்கு இப்படி ஒரு சூழல் வாழ்வில் வரும் என்று மைதிலி கனவில் கூட எண்ணியதில்லை. கல்லூரி மாணவியாய் இருந்த போது வேறு, இப்போது அவள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியையும் கூட. அவளது மதிப்பும், மரியாதையும் எங்கும் எப்போதும் இறங்குவது என்பது அவளால் தாள முடியாது.

‘போதும் மைத்தி.. வேலையும் வேணாம் ஒன்னும் வேணாம்… எதுவுமே வேண்டாம்… நீ இங்கிருந்து கிளம்பிடு மைத்தி… அப்பா அம்மா வந்துட்டு போகவும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி கிளம்பிடு மைதிலி…’ என்று அவளது மனம் கூப்பாடு போட,

‘அப்போ… தோல்வியை ஏற்றுக்கொள்கிறாயா?’ என்று அவளின் மனசாட்சி வேறு எட்டிப்பார்த்தது.

‘ச்சே இதுங்க வேற நேரம் காலம் பார்க்காம…’ என்று மைதிலி சலித்துக்கொள்ள,

“மைத்தி…” என்ற ஜெகாவின் குரல் அவளை விலுக்கென்று நிமிர்ந்து பார்க்க வைத்தது.

வீட்டினுள் செல்லாது, அங்கிருந்த ரோஜா செடிகளுக்கு அருகில் தான் அமர்ந்திருந்தாள். ஜெகந்நாதன் கிளம்பியிருப்பான் என்று நினைத்தாள். இப்போதும் அவள் எதிர்பாராத ஒன்றே நிகழ்ந்தது.

அது, அவளைத் தேடி அவன் வந்தது…!

“மைத்தி…” என்று மீண்டும் ஜெகா அழைக்க,

“நீங்க என்னை எப்படி கூப்பிடாதீங்க…” என்றாள் கோபமாய்..

“மைத்தி ப்ளீஸ்…” என்று ஜெகா இறங்கி வந்து பேச,

“ப்ளீஸ்…” என்று கரம் கூப்பியவள் “அப்படி கூப்பிடாதீங்க…” என்றாள் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாது.

பின்னே கல்லூரி காலத்தில் இருந்து அவளுள் ஒலிப்பது அவனின் அழைப்பான ‘மைத்தி…’ தானே.

அவளுக்கு நெருக்கமான அனைவருமே அப்படித்தான் அழைப்பர். ஆனாலும் ஜெகாவின் ‘மைத்தி…’ மட்டும் மைதிலிக்கு நெருக்கமான ஒன்று.

“எனக்கு உன்னை வேற எப்படியும் கூப்பிட பிடிக்காதே…” என,

“நீங்க எப்படியும் கூப்பிடவே வேணாம்…” என்றாள் பட்டென்று..

கோபம், ஆதங்கம், ஆவேசம் எல்லாமே அவளுக்கு..!

“நான் சொல்றதை கொஞ்சம் கேளேன் மைத்தி…” என, மைதிலி எரித்து விடுவது போலே அவனை முறைத்து நின்றாள்.

“உன்னோட கோபம் எனக்குப் புரியுது…” என்று அவன் ஏதோ சொல்ல வருகையில்

“நீங்க எதுவும் பேசவே வேணாம். நான் இங்க வந்ததே தப்பு. அது எனக்கு இப்போதான் புரியுது. நீங்க என்னிக்கோ சொன்னதை வச்சு இத்தனை வருஷம் கழிச்சு நான் வந்தது தப்பு தான்…” என்று மைதிலி பேசிக்கொண்டே போக,

“அப்போ… இப்போவாது ஒத்துக்கிறியா நீ எனக்காகத்தான் வந்தன்னு…” என்று ஜெகந்நாதன் கேட்ட நேரடி கேள்வியில் மைதிலி கொஞ்சம் திடுக் என்று தான் உணர்ந்தாள்.

நம்மை நாமே காட்டிக்கொடுத்து விட்டோமோ..!

அந்த பாவனை அவளின் முகத்தில் அப்பட்டமாய் தெரிய, ஜெகந்நாதன் முகத்தினில் அப்போதும் லேசானதொரு புன்னகை “சொல்லேன் மைத்தி.. இப்போவாது சொல்லேன்.. ஒருதடவ என்னை பிடிக்கும்னு சொல்லேன்.. நீ இதுவரைக்கும் என்கிட்ட சொன்னதே இல்லையே…” என,

சற்றே மறைந்திருந்த கோபம், மீண்டும் தலைதூக்க

“இன்னும் ரெண்டே மாசத்துல கல்யாணம் ஆகப்போற புது மாப்பிள்ளைக் கிட்ட இப்படி எல்லாம் பேச நான் அறிவு இல்லாதவ இல்ல.. எனக்குன்னு ஒரு சுயமரியாதை உண்டு…” என்றாள் சற்றே நிமிர்ந்து..

“நீ உன் விருப்பத்தை சொன்னா, நான் அதை நிறைவேத்த எந்த அளவுக்கும் போய் அதை நடத்திக்காட்டுவேன்னு சொன்னா?” என்று ஜெகந்நாதன் தன்னுயர்த்திற்கு நிமிர்ந்து நின்று கேட்க, மைதிலி ஸ்தம்பித்துத்தான் போய்விட்டாள்.

இதென்ன திடீரென்று இப்படி?!

“சொல்லு மைத்தி…”

“ம்ம்ச்… நீங்க எதுவும் செய்யவும் வேணாம்.. நான் எதுவும் சொல்லவும் வேணாம். நீங்க கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருங்க.. நான் அப்பா அம்மா வந்துட்டு போகவும் அடுத்து ஒரு ரெண்டு மூணு நாள்ல கிளம்பிடுவேன். அவ்வளோதான்…” என,

“அவ்வளோதானா?!” என்றான் அவனும் தீர்க்கமாய் பார்த்து.

“ஆமா…!”

அவளது குரலும் திண்ணமாய் ஒலித்தது.

“எப்பவுமே உனக்கு என்னை தவிக்க வைக்க மட்டும் தான் தெரியும்…” என,

“உங்களுக்குமே எப்பவும் என்னை பரிதவிக்க வைக்க மட்டும்தான் தெரியும்…” என்றாள் பதிலுக்கு.

“பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாத நீ…” என்றவனின் குரலிலும் முகத்திலும் அப்பட்டமாய் வேதனை தெரிய,

“நீங்க ரொம்ப பெரிய மனுசர்.. அப்படித்தான் சொல்லணும்…” என்றாள் குதர்க்கமாய்..

“ஓ…! அப்போ நீ திரும்ப கிளம்பி போறதுல உறுதியா இருக்க?” என,

“ஆமாம்…!” என்றாள் தயை தாட்சண்யை இல்லாது.  

“சரி… அப்போ இதையும் கேட்டுக்கோ…” என்றவன், தன் திருமணத்திற்கான ஏற்பாடும், அதற்கான காரணத்தையும், அவர்கள் குடும்பத்தில் நடந்த இழப்புகள் பற்றியும் சொல்ல, அனைத்தையும் கேட்க கேட்க மைதிலிக்கு மனது ஒருநிலையில் இல்லை.

இவன் இத்தனையை தாங்கிக்கொண்டு தன் முன்னே நிற்கிறானா என்று நினைக்கும் போதே அவனை இறுக கட்டிக்கொண்டு அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. அவனின் துன்பம் அவளதுபோல் தோன்ற, மனதில் பாரமும் கூடிக்கொண்டது.

“எ… என்ன சொல்றீங்க நீங்க?!” என்று கேட்கையில் நா தந்தியடிக்க,

“ஆமா…! இதுதான் நடந்தது…” என,

“நா… நான் கிளம்பித்தான் ஆகணும். எ.. என்னால ரெண்டு பொண்ணுங்க லைப் கெட வேணாம்…” என்றவள் அப்படியே முகத்தை மூடி கீழே சரிந்து அமர்ந்துவிட்டாள்.

அழுகை வரவில்லை. மாறாய் அவனை நேர்கொண்டு காண முடியவில்லை. நான் நேசிக்கும் ஒருவனை தான் இப்படியொரு இக்கட்டில் வந்து நிறுத்தி இருக்கிறோமா என்று நினைக்கையில் அவளுக்கு அது தாங்கவே முடியாத ஒரு வலியை கொடுத்தது.

“மைத்தி…” என்று ஜெகா அருகே வர,

“ப்ளீஸ்… நீங்க போங்க.. நான் கிளம்புறது உறுதி…” என்றாள் உறுதி மாறாத குரலில்.

கமலா கொஞ்சம் எடுத்து சொல்லி, உன் நிலைமையை சொல்லி மைதிலியை கொஞ்சம் காத்திருக்கச் சொல், நாம் ஏதாவது முயன்று செய்யலாம் என்று தைரியம் கொடுக்க, ஆசை கொண்ட மனதும் கூட அல்லவா, ஜெகந்நாதன் நெஞ்சிலும், சிறு நம்பிக்கைத் துளி வேர் விட, அதன் பொருட்டே மைதிலியிடம் இப்போது பேச வந்தான்.

ஆனால் இப்போதும் அவள் செல்வதிலேயே உறுதியாய் நிற்க, அவனால் வேறென்ன செய்ய முடியும்?!          

                    

   

   

 

 

Advertisement