Advertisement

                  இதயத்திலே ஒரு நினைவு – 7

     “என்ன டி இப்படி திடீர்னு டூர் ப்ளான் போட்டுட்டாங்க…” என்று ரேகா கேட்க,

“ஆமா எனக்கும் ஆச்சர்யமாய் இருக்கு…” என்றாள் மைதிலி.

“உங்க வீட்ல சரின்னு சொல்லிடுவாங்களா?!”

“தெரியலை.. கேட்கணும் ரேகா… உங்க வீட்ல எப்படி?”

“நானும் கேட்கணும்… ஆனா விடுவாங்களா தெரியலை..”

“ஏன் டி?”

“ஜெகாண்ணா வந்தா விடுவாங்க…”

“இது வேறயா? ஆனா அவங்க கிளாஸ் தனியா தானே போவாங்க.. நம்ம ஜூனியர்ஸ்ல..”

“ஆமா.. ஆனா டிப்பார்ட்மென்ட் டூர் தானே… இந்த வருஷம் எல்லாரும் போறதா தான் பேச்சு..”

“இது எனக்குத் தெரியாதே…”

“நீ எந்த கவனத்துல தான் இருக்க..?”

“அப்.. அப்போ சீனியர் வர்றாங்களா?!”

“நீ வந்தா அண்ணனும் வரும்…” என்று ரேகா சொல்லவும், மைதிலி அவளை முறைக்க,

“நிஜம்மா… நீ வந்தா அண்ணன் வரும்… அண்ணன் வந்தா நான் வருவேன்… நம்ம ஜாலியா போலாம்…”  என்றதும் மைதிலி முறைக்க,

“என்ன டி நிஜம்மா தான் சொல்றேன்…” என்றாள் ரேகா.

மைதிலிக்கு ஆசையாய் தான் இருந்தது. சுற்றுலா செல்ல. இதுவரைக்கும் அப்படியெல்லாம் சென்றதில்லை. அப்பா அம்மாவினோடு சென்று இருக்கிறாள். ஆனால் நண்பர்களோடு என்பது இதுதான் முதல் முறை. வீட்டினில் கேட்டால் வேண்டாம் என்றெல்லாம் சொல்லவே மாட்டார்கள்.

ஆனால்  போன இடத்தில் நிச்சயம் ஜெகந்நாதன் சும்மா இருக்க மாட்டான் என்று மைதிலிக்கு தெரியும். நாளுக்கு நாள் ஜெகாவின் நினைவு அவளுக்கும் தான் அதிகமாய் இருந்தது. அதைக்காட்டிலும் இந்த வயதில் இதெல்லாம் சகஜம் மனதை கட்டுக்குள் வைப்பது நம் கையில் இருக்கிறது என்று என்றோ அவளின் அப்பா சொல்லியிருந்தார். அதுவும் நினைவு இருந்தது.

ஆசைக்கும் அறிவுக்கும் நடுவே மாட்டிக்கொண்டு தான் விழித்தாள் மைதிலி.

“டேய் மாப்ள.. என்னடா டூர் ப்ளான் திடீர்னு…”

“தெரியலைடா ஜூனியர் பசங்க வந்து கேட்டானுங்க… டிப்பார்ட்மென்ட்ல சரின்னு சொல்லிட்டாங்க போல…”

“சார் எப்படி…”

“எப்படின்னா?!”

“இல்ல நீ ஒன்னு யோசிச்சு வச்சிருப்பியே…”

“போலாம் போலாம்.. எல்லாம் வர்றாங்கன்னா போலாம்…” என்று ஜெகா சிரித்தபடி சொல்ல,

“எல்லாமா  இல்லை மைதிலியா?!” என்று வாசுவும் கேட்க, ஜெகந்நாதன் புன்னகை முகமாய் தான் நின்றிருந்தான்.

___________________________

 

 

“ஆச்சி… என்னோட பிரன்ட் மைதிலி…” என்று ரேகா அறிமுகம் செய்துவைக்க, கமலாவோ “சின்னதுல பார்த்த மாதிரி இருக்கே…” என்றார்.

“இங்கதானே காலேஜ் படிச்சா…” எனவும் மைதிலி கமலாவைப் பார்த்து புன்னகைக்க,

“ம்ம்ம்…” என்று மேலும் கீழுமாய் பார்த்தார் கமலா.

‘நல்லாத்தான் இருக்கா…’ என்று நினைத்தும் கொண்டார்.

“மேல போய் பாரு. என் பேரன் வந்து நேத்தே எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டான்…” என, மைதிலிக்கு இது புதிது.

ஆள் விட்டு எல்லாம் செய்ததாய் தான் ரேகா சொன்னாள். யார் மூலமாய் செய்கிறாள் என்று மைதிலி கேட்கவில்லை. இருந்தும் அவள் ஜெகாவை வைத்து செய்திருப்பாள் என்றும் அவள் நினைக்கவில்லை. இப்போது பாட்டி பேரன் என்று சொல்ல, யாரென்று ரேகாவைப் பார்த்தாள் மைதிலி.

ரேகா பொதுவாய் புன்னகைத்தவள், “மேல போய் பார்த்துட்டு வா மைத்தி…” என,

“ம்ம்ம்…” என்றவள், மாடிக்குச் செல்ல,

“ஆச்சி…” என்று அவரின் பக்கம் சென்று அமர்ந்தவள் “எப்படி இருக்கா மைதிலி?!” என,    

“நல்லாத்தான் இருக்கா..” என்றார் சாதாரணமாய்.

“நந்தினிய விட நல்லாருக்காளா?” என, கமலா கேள்வியாய்  ரேகாவைப் பார்க்க,

“காலேஜ் படிக்கிறப்போ மைதிலியத்தான் ஜெகாண்ணா ரொம்ப விரும்புச்சு ஆச்சி. கல்யாணம் பண்ணனும்னு ஆசைல இருந்துச்சு. இப்போ மைதிலிக்கும் அண்ணன் மேல விருப்பம். இத்தன வருஷம் கழிச்சும் தேடி வந்திருக்கா. ஆனா ஜெகாண்ணாக்கு கல்யாணம்னு கேட்டு அவளுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. ஜெகண்ணாவும் பாவம்…”  என்று ரேகா அனைத்தையும் சொல்லிட, கமலாவிற்கு வியப்பாய் இருந்தது.

ஜெகா விரும்பினானா?! அதவே அவருக்கு பெரிய ஆச்சர்யம்..

‘இத இந்த  பையன் முதல்லயே சொல்லிருந்தா என்னவாம்?!’ என்று அங்கலாயப்பாய் இருந்தது.

“மைதிலி ஊருக்குக் கிளம்புறேன்னு சொல்லிட்டு இருக்கா ஆச்சி.. அதுவரைக்கும் இங்க இருக்கட்டுமே…” என,

“இருக்கட்டும் தாராளமா…” என்ற கமலாவின் பேச்சிலேயே ரேகாவிற்கு புரிந்து போனது இனி கமலா சும்மா இருக்கப்போவது இல்லை என்று.

மைதிலி மாடிக்கு வந்தவளுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். ரேகா ‘எல்லாம் செட் பண்ணியாச்சு…’ என்று சொல்லிருக்க, மிஞ்சி மிஞ்சி போனால் சமையல் சாமான்கள் கொஞ்சம், மளிகை பொருட்கள் கொஞ்சம் வாங்கி வைத்திருப்பாள் என்றே நினைத்தாள்.

ஆனால் ஒரு வீட்டினில் என்னென்ன பொருட்கள் இருக்குமோ அத்தனையும் இருந்தது. கட்டில் மெத்தை, பிரிட்ஜ், மிக்சி, கேஸ் அடுப்பு என்று எல்லாமே.. உடைகள் மட்டுமே எடுத்துக்கொண்டு வந்தால் போதும். அவ்வளவே..

‘என்னடா இது?!’ என்று மைதிலிக்கு இன்னமுமே அந்த வியப்பு தீரவில்லை. மாடியில் இருந்த காலி இடத்தில் நிறைய ரோஜா செடிகள் வேறு இருக்க, மைதிலிக்கு சும்மாவே ரோஜா செடிகள் வளர்ப்பது என்றால் இஷ்டம். இப்போது கேட்கவே தேவையில்லை. மிகவும் பிடித்துப்போனது.

மீண்டும் ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு கீழே வர, “என்னம்மா எல்லாம் ஓகே வா…” என்றார் ஆச்சி.

“ம்ம்ம்…” என்று புன்னகைத்தவள் “ரோஸ் செடி எல்லாம் நிறைய இருக்கு ஆச்சி…” என,

“ஆமா என் பேரன் வேலை. அவங்க வீட்ல வளர்க்கிறது பத்தாம இங்க வேற கொண்டு வந்து வச்சிருக்கான். புதுசா ஒரு கலர் பார்த்தா போதும் செடி கொண்டு வந்து வச்சிடுவான். வாரத்துல ஒருநாள் மணிக்கணக்கா இங்க வந்து செடிகளோட உக்காந்து இருப்பான்…” என்று பெருமையாய் பேச,

யாரந்த பேரன் என்று தெரியாததால் “ஓ! அப்படியா… எனக்குமே ரோஸ் செடி வளர்க்கிறதுன்னா ரொம்ப இஷ்டம். நானுமே அங்க எங்க வீட்ல நிறைய செடி வாங்கி வச்சிருக்கேன்…” என்று சொல்ல, கமலா ரேகாவை அர்த்தமாய் தான் பார்த்தார்.

ரேகா எதுவும் சொல்லாது புன்னகைக்க “டி ரேகா எல்லாமே பக்காவா செட் பண்ணிருக்கன்னு சொல்லவே இல்லையே நீ…” என்று மைதிலி கேட்க,

“நான் எதுவுமே பண்ணல டி மைதிலி…” என்றவள் “ஆச்சிக்கிட்ட சொன்னேன். அவங்களே ஆள் வச்சு செஞ்சிட்டாங்க…” என,

“தேங்க்ஸ் ஆச்சி…” என்றாள் மைதிலி உணர்ந்து.

“அட எனக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம். நான் ஒரு போன் போட்டு என் பேரனுக்கு சொன்னேன். அவன் எல்லாமே பண்ணிட்டான்…”

“அவங்களுக்கு என்னோட தேங்க்ஸ் சொன்னேன் சொல்லிடுங்க ஆச்சி…”

“நான் ஏன் சொல்லணும்.. தினமும் சாயங்காலம் என்னைப் பார்க்க வருவான்… வர்றப்போ நீயே சொல்லிக்கோ…” என,

“சரி…” என்று தலையை ஆட்டிக்கொண்டாள்.

ரேகா மேலும் சிறிது நேரம் இருக்க, மைதிலி “சரி ரேகா நான் கிளம்புறேன். ஹாஸ்டல் காலிபண்ண எழுதி கொடுக்கணும். அங்கருந்து திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரணும்.. நாளைக்கு நல்ல நேரம் பார்த்து சொல்லுங்க ஆச்சி. பால் காய்ச்சிடலம்…” என்று ரேகாவிடமும், கமலாவிடமும்  மைதிலி சொல்ல, 

“நீ போ நான் கால் பண்றேன்…” என்றாள் ரேகா.

இருவரிடமும் மைதிலி சொல்லிக்கொண்டு கிளம்ப, கமலா அடுத்து நிறைய கேள்விகள் ரேகாவிடம் கேட்டு ஒரு வழி செய்துவிட்டார். சரியாய் மைதிலி கிளம்பிய பத்தாவது நிமிடம் ஜெகந்நாதன் அங்கே வர

“வாடாப்பா பெரிய மனுசா…” என்ற கமலா

“ஏன்டா இப்படி பண்ற நீ?!” என்று வருந்த,

“ஆச்சி…” என்றவன் ரேகாவைப் பார்க்க “நான் கிளம்புறேன்…” என்று அவளும் எழுந்துகொள்ள,

“இப்போ எதுக்கு அவளைப் பாக்குற.. நீ மனசுக்குள்ளயே வச்சு புழுங்குனா யார் என்ன செய்ய முடியும்? யாருக்குத்தான் மனசு தாங்கும்…” என்றவர் “முடிவு எடுக்கவேண்டியது நீ… மைதிலிய உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னா சொல்லு நான் முன்ன நின்னு செய்றேன். யார் என்ன கத்தி கடப்பாரை தூக்கிட்டு வர்றாங்கன்னு பார்ப்போம்…” என்று பேச, ஜெகாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

ரேகா இதற்குமேல் தான் இங்கே இருக்கக் கூடாது என்று கிளம்பிவிட்டாள்.

ஜெகாவோ கமலாவிடம் பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாவே இருக்க

“என்னடா நீ?! யாருக்கு நல்லவனா இருக்கணும்னு நீ நினைக்கிற? முதல்ல உனக்கு நீ நல்லவனா இருக்கப் பாரு.. நீ இத்தன சாமான் வாங்கி வந்து குவிக்கும்போதே என்னடான்னு நினைச்சேன். பார்த்தா கதை இப்படி இருக்கு.. மனசுல இவ்வளோ ஆசை வச்சிட்டு இன்னொருத்தியோட நீ எப்படி வாழ்வ? அது துரோகமும் கூட…” என,

“நிரஞ்சனி… நந்தினி… இவங்க ரெண்டு பேருக்கும் நான் என்ன பதில் சொல்வேன் ஆச்சி…” என்றான் உணர்வற்ற குரலில்.

“அட போடா பைத்தியக்காரா.. பேசினா தீராத பிரச்சனைன்னு எதுவுமே இல்லை…”

“இப்போ அதெல்லாம் தாண்டியாச்சு ஆச்சி.. அடுத்த வாரம் பத்திரிக்கை அடிக்கப் போறாங்க.. முதல்ல எனக்கும் நந்தினிக்கும் கல்யாணம்.. அடுத்து ரெண்டு நாள்ல வர்ற முகுர்த்தம்ல நிரந்ஜனிக்கும் மச்சானுக்கும் கல்யாணம்…” என,

“ம்ம்ச் முதல்ல நீ உங்கம்மாவ வர சொல்லு…” என்றார் கறாராய்.

“வந்தாலும் நீ எதுவும் பேசக்கூடாது ஆச்சி…” என்றான் அதைவிட கறாராய்.

இங்கே இவர்களின் சம்பாசனை இப்படியிருக்க, மைதிலிக்கு மனதில் காரணமின்றி ஏதோ ஓர் இதம்.. புது வீடு அந்த ரோஜா செடிகள் எல்லாம் அவளுக்கு நிறைய பிடித்திருந்தது. அதைவிட கமலா.. மிகவும் பழகியவர் போல ஒரு உணர்வு..

ஹாஸ்டல் வந்ததும் அப்பா அம்மாவிற்கு அழைத்துப் பேச, சுகுணாவோ “பரவாயில்லயே இந்த ரேகா பொண்ணு எள்ளுன்னா எண்ணெயா நிக்கிறாளே… சனிக்கிழமை காலைல நாங்க அங்க இருப்போம்…” என்றுவிட்டார்.

அடுத்தடுத்து கடகடவென வேலை நடக்க, ஒருவழியாய் அனைத்துப் பொருட்களையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு எப்போதடா விடியும் என்று படுத்திருந்தாள் மைதிலி.  

மறுநாள் காலையில் கல்லூரிக்குச் செல்லும் முன்னமே, இங்கே வீட்டிற்கு வந்து நல்லதொரு நேரத்தில் பால் காய்ச்சி விட, உந்தன் ரேகாவும் அவள் கணவனும் இருக்க, ஆச்சி மட்டுமே இருந்தார் உடன் அவருக்கு வேலை செய்யும் ஒரு பெண்மணி.

அவருக்கு டம்பளரில் பாலை எடுத்து வந்தவள் “என்ன ஆச்சி உங்க பேரனையும் வர சொல்லிருக்கலாம் தானே…” என,

“அவனுக்கு என்னவோ வேலைன்னு வரலை….” என்றார் பொத்தாம் பொதுவாய்.

“ம்ம் சரி…” என்றவள் பேசாது நிற்க,

“உங்கப்பாம்மா வர வரைக்கும் இங்கயே சாப்பிடு.. இந்தம்மா நல்லா சமைக்கும்… காலேஜ் போற வேகத்துல நீ என்ன சமைப்ப. சாப்பிடுவ..?” என,

“எனக்கு சமைக்கவெல்லாம் தெரியாது ஆச்சி…” என்றாள் மைதிலி.

“அட…! தெரியாதா… சரிதான் அப்போ நீயே ஏதாவது சமைச்சு சாப்பிடு. அப்போத்தான் பழக்கம் வரும். கல்யாணம் ஆனா புருசனுக்கு நல்லா ருசியா செஞ்சு போடணும்..” என, சட்டென்று அவளுக்கு ஜெகாவின் நினைவு வந்துவிட்டது.

கண்கள் அப்படியே குளமாகிட, ஒன்றும் பேசாமல் தலை குனிந்து கொண்டாள் மைதிலி.

அவளின் கண்கள் உடனே கலங்கியதை கமலாவும் கவனித்துவிட, இது எளிதில் முடியும் விசயமில்லை என்று ஊர்ஜிதமானது.

சிறிது நேரத்தில், ரேகா கொண்டு வந்திருந்த உணவை உண்டுவிட்டு மைதிலி கல்லூரி கிளம்பிட, ஜெகாவோ என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தான். மைதிலியை மறந்துவிட்டு இன்னொரு பெண்ணோடு வாழ்வது என்பதெல்லாம் அவனால் நினைக்கக் கூட இப்போது முடியவில்லை.

ஒருவேளை மைதிலி வராமலே போயிருந்தால், அது வேறு விஷயம். வந்துவிட்டாள். அதுவும் அவனுக்காக.. இப்போது விட முடியுமா?!

மைதிலி கிளம்புவதில் உறுதியாய் இருக்கிறாள் என்பது தெரிந்த ஒன்றே…!

தான் தான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தான்..

அம்மாவிடம் சொன்னால் புரிந்துகொள்வார் தான். ஆனால் இத்தனை தூரம் வந்த பின்னே எப்படி சொல்வது? எதை சொல்வது?!

குழம்பிப்போய் அமர்ந்திருந்தான்..

மாலை ஆனதுமே ஆச்சி பேரனுக்கு அழைக்க “நான் வரல ஆச்சி…” என்றான்.

“ம்ம்ச்… வா டா வாழைப்பூ வடை செஞ்சிருக்கா. உனக்கு பிடிக்குமே.. வா…” என,

“ஆச்சி..!” என்று பல்லைக் கடித்தான்.

“வா நீ முதல்ல…” என, அவன் வீட்டில் இருந்து இங்கே பத்து நிமிடம் கூட இல்லை. வந்துவிட்டான்..

“ஏன் ஆச்சி இப்படி பண்ற நீ…” என்று சலிப்பாய் அமர, அடுத்து கமலா மைதிலிக்கு அழைப்பு விடுத்தார் “என் பேரனுக்கு தேங்க்ஸ் சொல்லணும் சொன்னியே.. வந்திருக்கான் வந்து சொல்லு…” என்று அலைபேசியில் அழைக்க,

அவளோ ஏதோ கல்லூரி படிக்கும் மாணவனாய் இருப்பான் என்ற நோக்கில் “வர்றேன் ஆச்சி…” என்றவள், வேகமாய் கீழே வர, நிச்சயம் மைதிலி அங்கே ஜெகந்நாதனை எதிர்பார்க்கவில்லை.     

 

                                        

 

 


     

 

Advertisement