Advertisement

                    இதயத்திலே ஒரு நினைவு – 6

“டி ரேகா… சீனியர்க்கு எங்க வீட்டு மொபைல் நம்பர் கொடுத்தியா?” என்று கேட்ட மைதிலியின் முகத்தில் ஏகப்பட்ட கோபம்

“எங்கண்ணன் என்கிட்டே கேட்கவுமில்ல. நான் கொடுக்கவுமில்ல..”

“ஓ..!”

“இப்போ எதுக்கு இந்த திடீர் விசாரணை?”

“இல்ல நேத்து சாயங்காலம் எங்க வீட்டு மொபைலுக்கு புது நம்பர்ல இருந்து கால் வந்துச்சு… முதல்ல எங்கம்மா எடுத்தாங்க கட் ஆகிடுச்சு. அடுத்து நான் எடுத்து ஹலோ சொல்லவும், மைத்தி… அப்படின்னு சொன்னாங்களா, எனக்கு முதல்ல தெரியலை. யாருன்னு கேட்டேன்.. அப்படியே கட் ஆகிடுச்சு.. எனக்கென்னவோ சீனியர் வாய்ஸ் மாதிரி தான் இருந்தது…”

“காமாலை காரன் கண்ணுக்கு பாக்குறது எல்லாம் மஞ்சளா தெரியுமாம்.. அதுமாதிரி இருக்கு உனக்கு இப்போ..”

“ஏய்…”

“பின்ன என்ன டி.. நம்ம கிளாஸ் பசங்க கூட யாராவது கால் பண்ணிருக்கலாம்..”

“யாருக்கும் என் நம்பர் தெரியாது…”

“உன் நம்பர் இல்லை.. உன் வீட்டு நம்பர்ன்னு சொல்லு.. உனக்குன்னு ஒரு போன் வாங்க சொன்னா வேணாங்குற…”

“வீட்ல இருக்க மொபைலே நான் தான் யூஸ் பண்றேன்.. பின்ன எதுக்குன்னு எனக்குன்னு ஒரு போன்..” என்றவள், “கண்டிப்பா அது சீனியர் குரல் தான்…” என்றுசொல்ல,

“உனக்கு தெரியணும்னா போய் ஜெகாண்ணா கிட்டயே கேட்டுட்டு வா…” என்ற ரேகாவிற்கு ஏகப்பட்ட கடுப்பு.

ஜெகந்நாதனோ வாசுவிடம் பொரிந்துத் தள்ளிக்கொண்டு இருந்தான். “என்னோட குரல் தெரியலையா டா மாப்ள… யாருன்னு கேக்குறா டா…” என்று..

“ஆமா உன்னோட குரல் ஊர் உலகம் அறிஞ்ச குரல்… கேட்டதுமே கண்டு பிடிக்க…”

“டேய்…!”

“சரி சரி… இப்போ யாருன்னு கேட்டதுல என்ன வந்துச்சு உனக்கு. நீதான் பேசுறன்னு  சொல்ல வேண்டியதுதானே…”

“மைத்தின்னு கூப்பிட்டதுலயே கண்டுப்பிடிப்பான்னு எவ்வளோ அசையா பேசினேன் தெரியுமா? யாருன்னு கேட்கவும் கடுப்பாகிடுச்சு….”

“விளங்கும்…”

“என்ன சொன்ன..?!” என்று ஜெகா வேகமாய் கேட்க,

“இல்ல நீயும் உன்னோட லவ்வ சொல்லிடுவ, அந்த பொண்ணும் உடனே சரின்னு சொல்லிடும்…” என்று வாசு நக்கலாய் பேச,

“ம்ம்ச் நேரமே அமைய மாட்டேங்குது டா.. இது நம்ம ஊரு… சின்னதா எதுவும் பண்ணா கூட பெருசா ஆகும்.. எனக்கொண்ணும் இல்லை இப்போவே அவளை கல்யாணம் செய்யணும் அப்படின்னா கூட செய்வேன்…” என,

“நீ ஒரு விசயத்துல இவ்வளோ தீவிரமா இருந்து இப்போத்தான் டா பாக்குறேன்…” என்றான் வாசு.

“வாழ்க்கைல ஏதாவது ஒரு விசயத்துல நாம தீவிரம் காட்டனும்.. படிப்போ வேலையோ இல்லை செய்ற தொழிலோ இப்படி.. அப்படி இல்லைன்னா நம்ம வாழ்க்கைல தீவிரம் காட்டனும்.. என்னைப் பொறுத்த வரைக்கும் மைதிலிய என்னோட வாழ்க்கையா நினைக்கிறேன்…” என்ற ஜெகந்நாதனின் கண்களில் அப்படியொரு காதல்..

அவனுடன் பள்ளியில் இருந்து ஒன்றாய் பழகி வரும் வாசுவிற்கு, ஜெகாவை நினைத்து அப்படி ஆச்சர்யமாய் இருந்தது. எப்போதுமே ஜெகாவிடம் கொஞ்சம் அலட்சியம் இருக்கும். ஆனால் மைதிலியை கண்டத்தில் இருந்து அந்த அலட்சியங்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை..

எப்படியாவது இவனின் இந்த காதல் கை கூடவேண்டும் என்று வாசு மனதார வேண்டினான் அப்போதே…

__________________

 

 

மதுரை அவனியாபுரம், காமதேனு பால்பண்ணை, உரிமையாளர் வாசு என்ற பெயர் பலகையை வழக்கமான கிண்டல் தொனியில் வாசித்தான் ஜெகந்நாதன்.

ஆம்! வாசு இப்போது இருப்பது அவனியாபுரத்தில்.

சொந்தமாய் பால்பண்ணை வைத்திருந்தான். இருபது நாட்டு மாடுகள் இருந்தன. நல்ல வருமானம். நிம்மதியான வாழ்வு என்று இருந்தான். கடந்த வருடம் தான் திருமணம் நடந்திருந்தது.

அடிக்கடி ஜெகந்நாதனும், வாசுவும் சந்தித்துக்கொள்வார்கள். இங்கே வரும்போதெல்லாம் ஜெகா, இந்த பெயர் பலகையை இப்படித்தான் வாசிப்பான். ஏனோ வாசுவை கிண்டல் செய்வதில் ஒரு தனி சந்தோசம்.

இப்போதும் அப்படி வாசித்தான் தான், ஆனால் வாசிக்கையில் அவனின் தொனியில் தெறிக்கும் கேலி இப்போதில்லை. அதை வாசு கண்டுகொண்டான்.

“வா மாப்ள…” என்று வரவேற்றவன், “என்ன ஒருமாதிரி இருக்க…” என்று நேரடியாய் கேட்க,

“மைதிலி வந்துட்டா…” என்றான் அவனும் நேரடியாகவே.

“என்னது… நிஜமாவாடா?” என்று கேட்டவனுக்கு சந்தோசமாய் இருந்தாலும், ஜெகாவின் திருமணம் பற்றி தெரியும் என்பதால்

“இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க…?” என்றான்.

“சத்தியமா தெரியலைடா. கல்யாணத்துல இருந்து விலகவே முடியாது. மாப்பிள்ளை வீட்ல ஒவ்வொரு பேச்சுலயும் ரெண்டு கல்யாணம் பத்தித்தான் பேசுறாங்க. கல்யாண வேலையும் ஆரம்பிச்சிட்டோம். நான் பின்வாங்க முடியாது. ஆனா அதே நேரம் மைதிலி எனக்காக வந்திருக்கான்னு தெரிஞ்சும் அவளை அப்படியே போ ன்னும் விட முடியலை…”

“நீ பேசினியா மைதிலியோட…”

“மனசு விட்டு நாங்க பேசிக்கல. ஆனா அவ ரேகாக்கிட்ட பேசினதை நான் கேட்டேன்…” என்றவன் அன்று நடந்ததை சொல்ல,

“கிறுக்கா…! பிடிவாதம் காட்டுற நேரமா இது.. ஒன்னு எல்லாத்தையும் சொல்லி அந்த பொண்ண ஊருக்கு அனுப்பு.. இல்லை உன் மனசுல இருக்கிறதை உன் வீட்ல சொல்லு.. எப்பவும் யாரும் எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க முடியாது…” என்று வாசு எடுத்து சொன்னான்..

“நிஜம் தான்.. ஆனா நிரஞ்சனி.. அவளுக்கு நான் என்ன பதில் சொல்றது.. நந்தினி அந்த பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சு…”

“அப்போ மைதிலி மட்டும் என்ன பாவம் பண்ணா…?!”

சாட்டையாய் வந்து அடித்தது வாசுவின் வார்த்தைகள்..

ஜெகந்நாதன் அமைதியாய் இருக்க “உன்னோட நிலைமை புரியுது.. ஆனா லேட் பண்றதுக்கான நேரம் இது இல்ல.. மைதிலிக்கிட்ட உன்னோட நிலைமையை சொல்லி ஊருக்கு அனுப்பிடு.. அதுதான் நல்லது. அந்த பொண்ணுக்கு கஷ்டமா இருக்கலாம்.. ஆனா எதுவுமே தெரியாம அந்த பொண்ணு தானா ஒன்னு நினைச்சிட்டு கஷ்டப்படுறதுக்கு இது எவ்வளோ பரவாயில்லை…”

“நீ சொல்றது சரி தான். ஆனா வாசு அவ என்கிட்டே இதெல்லாம் வேணாம் சொல்லிட்டு போறப்போ, நான்தானே சொன்னேன்  நீ எங்க போனாலும் ஒருநாள் உன்னைத் தேடி வருவேன்னு. இல்லை உனக்கு எப்போவாது என்மேல விருப்பம்னு நீ உணர்ந்தா எப்போவேனா நீ என்னைத் தேடி வரலாம்னு சொன்னேன்.  அப்போ அவ முகத்துல ஒரு சிரிப்பு வந்துட்டு போச்சு. இப்பவும் அது என் கண்ணுக்குள்ள நிக்குது.

வாக்கு தவறினது நான்தானே. நான் அவளை தேடி போகல.. ஆனா அவளே என்னைத் தேடி வந்துட்டா. இப்போ எனக்குக் கல்யாணம்னு கேள்விப்பட்ட அவளோட கோபம் நியாயம் தானே…”

“ஓஹோ..! இப்படி எல்லாம் நீ வாக்குக் கொடுத்து வச்சிருக்கியா?!!”

“ம்ம்ச் அப்போ ஒரு வேகத்துல பேசினேன். ஆனா நிஜமா அதை மைதிலி மனசுல வச்சிட்டு வருவான்னு நினைக்கல…”

“சரி நீ ஒரு தடவையாது முயற்சி எடுத்திருக்கலாம் இல்லையா ஜெகா…”

“எங்கடா…?! முயற்சி எடுக்கலாம்னு நான் நினைக்கும் போதுதான் ஆக்சிடன்ட் ஆச்சு.. அதுக்கப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே. அப்புறம் நான் எந்த முகத்தை வச்சிட்டு போறது அவளைப் பார்க்க. என்ன இப்போ வந்தவ, அப்போவே எனக்கு சரின்னு சொல்லிருக்கலாம்.. அந்த கோபம் வருத்தமெல்லாம் எனக்கு இருக்கு…” என்றான் வேதனையுடன்..

“நீ நினைச்சா நல்லதா ஒரு முடிவுக்கு வரலாம் ஜெகா…” என்ற நண்பனின் வார்த்தைகள் ஜெகந்நாதனின் மனதிற்கு சற்று திடம் கொடுத்தது..

“சரிடா பாக்கலாம்… வீட்ல கேட்டதா சொல்லு…” என்றவன் கிளம்பிவிட, வாசுவிற்கு இவர்களை எண்ணி கஷ்டமாய் இருந்தது.

மைதிலி கல்லூரியில் இருந்தாள். அன்றைய தினம் அவளுக்கு இரண்டு வகுப்புகள் மட்டுமே. அதிலும் ஒன்று லேப் என்பதால் கொஞ்சம் இல்லை நிறையவே நேரம் கிடைத்தது. கல்லூரியில் ஒவ்வொரு இடமும் அவளுக்கு பழையதை நினைவு படுத்தியது.

எங்கு பார்த்தாலும் ஜெகா தான் தெரிந்தான்..

பழைய நினைவுகள் எல்லாமே காட்சிகளாய் கண்களுக்குத் தெரியத் தொடங்க ‘ச்சே நான் இங்க வந்தே இருக்கக் கூடாது…’ என்று அன்றைய தினத்தில் நூறாவது முறையாய் எண்ணியிருப்பாள்.

“என்ன மைதிலி டல்லா இருக்கீங்க உடம்பு சரியில்லையா?” என்று உடன் பணிபுரியும், அவளை விட இரண்டொரு வயது மூத்த கிரிஜா கேட்க,

“இல்ல… திடீர்னு ஒருமாதிரி இருக்கு…” என்றாள் முயன்று வரவைத புன்னகையோடு.

“ம்ம் அப்பா அம்மா விட்டு வந்து இருக்கீங்க இல்லையா அப்படித்தான் இருக்கும்.. போக போக சரியாகிடும்.. பிரீதானே இன்னிக்கு உங்களுக்கு சொல்லிட்டு கூட கிளம்பிப் போகலாம் தானே…”

“ரூமுக்குத்தான் போகணும்.. அங்க போயும் தனியா தானே இருக்கணும்…” என்ற மைதிலியின் மனது நிஜமாய் தனிமையை உணர்ந்தது.

“ஏன் ரூமுக்கு போறீங்க… உங்க பிரண்ட்ஸ் இங்க இருக்காங்க தானே.. அவங்களைப் போய் பாருங்க.. இல்லை ஏதாவது கோவிலுக்குப் போங்க.. இல்லை சும்மாவது ஊர் சுத்துங்க.. சரியாகிடும்…” என,

“தேங்க்ஸ் கிரிஜா மேம்…” என்றவளுக்கு எங்கேயும் செல்லும் எண்ணமும் இல்லை.

ரேகா வீட்டிற்கு அவளது சின்ன மாமனார் குடும்பம் வந்திருக்க, அங்கேயும் போக முடியாது.

‘ச்சே பேசாம அம்மா அப்பா வர்றேன்னு சொன்னதும் சரின்னு சொல்லிருக்கலாம்…’ என்றவளுக்கு திடீரென்று ஒரு யோசனை

பெற்றோர்களின் அருகாமைக்கு மனது ஏங்கியது நிஜமே..!

‘ஒரு மாசம் தானே.. அப்பா அம்மாவும் வந்து இங்க இருக்கட்டும்.. பின்ன எல்லாம் கிளம்பிக்கலாம்..’ என்று எண்ணியவள் ரேகாவிற்கு அழைத்தாள்.

“சொல்லு டி…”

“சாரி டிஸ்டப் பண்ணிட்டேனா…”  

“இல்லல்ல.. சொல்லு டி என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்க…? கிளாஸ் இல்லையா?”

“ப்ரீதான்.. எனக்கு ஒரு வீடு பாரேன்…” என, ரேகாவிற்கு நம்பவே முடியவில்லை.

“என்னடி சொல்ற?!”

“ம்ம்ச் ஆமா.. பாரு… முடியுமா?!”

“வீடெல்லாம் இருக்கு… ஆனா ஒரு ரூம் ஹால் கிட்சேன் இவ்வளோதான்.. அவசரமில்லைன்னா வேற நல்லதா பாக்கலாம்…”

“ஹேய் இதுவே போதும்… அப்பா அம்மா வந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. ஆமா யாரு வீடு?” என்ற மைதிலிக்கு சட்டென்று ஒரு உற்சாகம்.

“எனக்கு பாட்டி முறை வேணாம்.. அவங்க மட்டும் தான் இருக்காங்க. பார்த்துக்க ஒரு ஆள்.. நான் சொல்றது மாடி போர்சன்..”

“பரவாயில்லை.. எங்கன்னு சொல்லு நான் போய் பாக்குறேன்..”

“அதெல்லாம் வேணாம் திங்க்ஸ் எல்லாம் செட் பண்ணிட்டு நானே சொல்றேன்…” என்ற ரேகாவிற்கு மைதிலி ஜெகா விசயத்தில் கண்டிப்பாய் ஏதேனும் நல்லதொரு முடிவு வரவேண்டும் என்ற எண்ணம்.

“உனக்கு ஏன் டி வேலை…”

“நீ பேசாம இரு மைத்தி.. நான் தான் பாத்துக்கிறேன் சொல்றேன்ல.. நீ அமைதியா இரு.. எல்லாம் முடிச்சிட்டு சொல்றேன்.. நாளைக்கு நானே உன்னை கூட்டிட்டு போறேன்…” என்றவள் வைத்துவிட்டாள்.

மைதிலிக்கு பொறுமையை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. பாட்டிமுறையா யாராய் இருக்கும் என்று யோசித்துப் பார்க்க பதில் தெரியவில்லை.

அடுத்து அவளின் அம்மாவிற்கு அழைத்து “ம்மா ரேகா வீடு பார்த்திருக்கா…” என,

“என்ன திடீர்னு உனக்கு போதி மரம் கிடைச்சிருக்கு…” என்றார் நக்கலாய் சுகுணா.

“பார்த்தியா நீ…!”

“நாங்க வரட்டுமா.. எல்லாம் செட் பண்ணனும்ல…”

“அதெல்லாம் இங்க பார்த்துக்கலாம். ரேகா செய்றேன் சொல்லிருக்கா நானும் போய்பேன்… நான் சொல்றப்போ வாங்க…” என,

“ம்ம் சரி…” என்ற சுகுணாவிற்கு சந்தோசமே மகளைப் பார்க்கப் போகிறோம் என்று.

ரேகா சொன்ன பாட்டியின் வீடு வேறு யாருடையதும் அல்ல, ஜெகாவின் அம்மாவின் அம்மா வீடு. அதாவது ஜெகந்நாதனின் பாட்டி வீடு. கமலாவிற்கு ஜெகந்நாதன் என்றால் கொள்ளைப் பிரியம். என்னவோ அவருக்கு நந்தினியை ஜெகாவிற்கு முடிப்பதில் இஷ்டமில்லை.

ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டே இருப்பார். இப்போது வயதும் ஆகிப்போனதால், அவர் பேச்சை யாரும் பெரிதாய் எடுப்பதில்லை. செல்வி அவருக்கு ஒரே பெண். கமலாவோடு ஒரு ஆள் போட்டு தங்க வைத்து பார்த்துக்கொள்ள வைத்திருக்கிறார்கள். தினமும் செல்வியோ இல்லை ஜெகாவோ வந்து பார்த்துவிட்டு போவர்.

மைதிலியை அங்கே கொண்டு போய் அமர்த்தி, பாட்டியின் காதில் விஷயத்தைப் போட்டால் நிச்சயம் ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என்று ரேகாவிற்கு தோன்ற, சட்டென்று இந்தவொரு முடிவிற்கு வந்துவிட்டாள்.

அடுத்து அவள் அழைத்தது ஜெகாவை…

“ண்ணா…” என்று விசயத்தை சொல்ல,

“நிச்சயம் அங்க தான் வீடு வேணுமா..?” என்றான்.

“வேற பாதுகாப்பான இடம் வேணுமே…”

“அடுத்த மாசம் கிளம்பப் போறாளே.. பின்ன என்ன?”

“நீங்களே இப்படி சொன்னா எப்படிண்ணா…” என்ற ரேகாவின் வார்த்தைகள், ஜெகாவிற்கு ஆயிரம் அர்த்தங்களை உணர்த்தியது.

“சரி…” என்றவன், மைதிலி அங்கே வந்து தங்க எல்லா ஏற்பாடுகளும் செய்தான்.

               

        

         

 

Advertisement