Advertisement

          இதயத்திலே ஒரு நினைவு – 4

           “ஜெகா… உன் ஆ.. இல்லல்ல.. தங்கச்சிக்கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டியா?” என்று அவனின் உற்ற நண்பன் வாசு கேட்க,

“அட நீ வேற… இல்லடா…” என்றான் வருத்தமாய் ஜெகா.

“ஏன் மாப்ள? அன்னிக்கு அவ்வளோ வேகமா போன… பேசலியா நீ?”

“ம்ம்ஹூம்…”

“ஏன் மாப்ள?”

“நான் போய் பைக்க நிறுத்தினதுமே பயந்துட்டு ஓடிட்டா…” என்று ஜெகந்நாதன் சொல்ல,

“அதான பார்த்தேன். நீ போன வேகம் அப்படி.. சிலதெல்லாம் சாத்வீகமா பதவிசா பண்ணனும் மாப்ள…” என்ற வாசுவை ஜெகா, அடிக்கும் நோக்கில் பார்க்க,

“பார்த்தியா பார்த்தியா.. லவ் பத்தி பேசும்போது கொஞ்சம்கூட உனக்கு அந்த பீலே வரல.. என்னவோ பெட் மேட்ச் ஆடி எதிர் டீம் கூட சண்டைக்கு போக ரெடியா நிக்கிறவன் மாதிரியே பேசுற…” என,

ஜெகாவிற்கும் நாம் அப்படியா இருக்கிறோம் என்று யோசனை வந்தது.

‘அப்படியா?!’ என்று வாசுவைப் பார்க்க,

“ஆமா டா.. மைதிலி எனக்கு தெரிஞ்சு கொஞ்சம் சாப்ட் டைப். அதுக்கிட்ட போய் நீ அடாவடியா முன்ன நின்னா பயந்து தான் போகும். முதல்ல அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்குமான்னு தெரிஞ்சுக்கோ அதுக்கப்புறம் லவ் சொல்லு. கண்டிப்பா சரின்னு சொல்லும்…” என்ற வாசுவின் வார்த்தைகள் மிக சரியானதை ஜெகாவிற்குப் பட, மைதிலிக்கு தன்னைப் பிடித்திருக்கிறதா என்று கண்டறிய முயன்றான்.

அடுத்து வந்த சில நாட்கள் அமைதியாகவே கழிய, மைதிலிக்கு வியப்பாய் இருந்தது.

ரேகாவிடம் கூட கேட்டாள் “சீனியர்க்கு என்னாச்சு?” என்று.

“நல்லாத்தானே இருக்காங்க..”

“ஓ..!”

“ஆமா நீ எதுக்கு கேக்குற?” என்று ரேகா சந்தேகமாய் பார்க்க,

“இல்ல.. கொஞ்ச நாளா முன்னாடி பின்னாடி வர்றதில்லை அதான் கேட்டேன்…” என்றவளின் குரலில் என்ன இருந்ததோ தெரியவில்லை,

ரேகா கண்களை இடுக்கி “வரலைன்னு வருத்தமா? இல்லை நிம்மதியா?” என்று கேட்க,

“இங்க பாரு டி.. நான் கேள்வி கேட்டா பதில் மட்டும் சொல்லு. எதிர்கேள்வி கேட்காத…” என்றுவிட்டு போய்விட்டாள் மைதிலி.

“அதுசரி…!” என்று நொடித்து நின்ற ரேகாவை ஜெகந்நாதன் பிடித்துக்கொண்டான்.

“என்ன சொல்லிட்டு போறா உன் பிரண்டு…” என்றவனை விசித்திரமாய் பார்த்தாள் ரேகா.

ஜெகா அப்படியெல்லாம் தானாய் வந்து பேசும் ரகமில்லையே..!

ரேகா அமைதியாய் நிற்க “சொல்லு ரேகா…”

“ஹ்ம்ம் உங்கண்ணனுக்கு புத்தி வந்திடுச்சு போலன்னு சொன்னா…” என,

“ஏய்..!” என்று ஜெகா பாசமாய் கடிய,

“நிஜம்மா ண்ணா…” என்றாள் ரேகா.

“அப்போ.. என்னைப் பத்தித்தான் பேசிருக்கா…” என்றவன் சிரித்துக்கொண்டே கிளம்பிவிட்டான்.

ரேகாவோ ‘இவங்க ரெண்டு பேருமே லூசா இல்லை நான் லூசா…’ என்று புலம்பியபடி அவளும் சென்றாள்.

“இங்க பாரு ரேகா… அம்மா சொல்றாங்கன்னு நீ எதுவும் வீடெல்லாம் பார்த்துக் கொடுக்காத..” என்று கன்டிப்பாய் மைதிலி பேச,

“அம்மா என்கிட்டே நேரடியா கேட்கிறப்போ நான் எப்படி வேணாம் சொல்ல முடியும்…” என்றாள் சங்கடமாய் ரேகா.

“வேணாம்னா வேணாம்…”

“அதான் நானும் கேக்குறேன் எதுக்கு வேணாம்?”

“ம்ம்ச் அவங்க இங்க வந்து ஒருவாரம் இருக்கிறதுக்காக எல்லாம் ஒரு வீடு பாக்க முடியுமா டி?!”

“பார்த்தா என்ன? நீ ஹாஸ்டல் வந்து மெலிஞ்சு தெரியுற… வீடு எடுத்து தங்கினா, அப்பாம்மா அடிக்கடி வந்து போவாங்க.. நானும் ஏதாவது சமைச்சு கொடுப்பேன். கொஞ்சம் நீயும் நல்ல சோறு சாப்பிடலாம்…” என்று ரேகா சொல்ல,

“ம்ம்ச் எனக்கு சமைக்கவெல்லாம் தெரியாது…” என்றாள் கடுப்பாய் மைதிலி.

நிஜமே..!

மைதிலிக்கு சமைக்கத் தெரியாது. அதன்பொருட்டே அவள் விடுதியில் தங்கியது. இல்லையெனில் எப்போதோ அவள் இங்கு வீடு பார்த்திருப்பாள். இப்போது அம்மா கண்டிப்பாய் சொல்லவும், மீறவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை.

அதன் பொருட்டே ரேகாவை மிரட்டுவது.

‘அட அல்பமே…!’ என்று ரேகா பார்க்க,

“என்னடி ஆமா எனக்கு சமைக்கத் தெரியாது.. எங்கம்மா ப்ளான் இதுவாத்தான் இருக்கும்.. தனியா இருந்தா எனக்காக நான் ஏதாவது செய்யத்தான் வேணும். அப்படியாவது பழகுவேன்னு தான் இப்படி பண்றாங்க…” என,

“அப்போ கண்டிப்பா வீடு பார்க்க வேண்டியது தான்…” என்றாள் நக்கலாய் ரேகா.

“ஒன்னும் வேணாம்…” என்று மைதிலி உறுதியாய் சொல்ல,

“அப்போ வேறெதுவோ காரணம் இருக்கு…” என்றாள் ரேகாவும் சரியாய்.

“ஆமா…!” என்ற மைதிலியின் குரலில் நான் ஒரு முடிவிற்கு வந்துவிட்டேன் என்பதாய் இருக்க,

“என்ன மைதிலி…” என்றாள் சற்றே வருத்தமாய் ரேகா.

“இன்னும் ஒரு மாசத்துல இங்கருந்து ரிலீவ் ஆகலாம்னு இருக்கேன். இப்போவே கிளம்பினா அம்மா ஏன் எதுக்குன்னு கேட்பாங்க. பதில் சொல்ல முடியாது. பொய்யும் சொல்ல முடியாது…”

“ஏய் என்ன விளையாடுறியா?! ஏன் கிளம்புற நீ?!”

“இருந்து என்ன செய்ய?!”

“வேலைக்குத்தான வந்த நீ…?”

“ம்ம்ச்…”

“சொல்லித்தொலை டி.. இப்போவாது உன் மனசுல என்ன இருக்குன்னு பேசு மைதிலி நீ…” என்று ரேகா சொல்லும் போதே, மைதிலியின் கண்கள் கண்ணீரை சொரிந்துவிட்டது.

“ஏய் லூசு இப்போ எதுக்கு அழற…?” என்கையில், மைதிலிக்கு அப்படியொரு அழுகை.

நல்லவேளை ரேகாவின் வீட்டில் யாருமில்லை… அந்தமட்டும் நிம்மதி என்று ரேகா சற்றே ஆசுவாசம் செய்துகொண்டாள். சிறிது நேரம் மைதிலி அழட்டும் என்று விட்டவள்,

“இன்னும் எவ்வளோ நேரம் அழுவ நீ?!” என்று கொஞ்சம் அதட்டியே பேச,

“சாரி…” என்றவள், முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு “நான் கிளம்புறேன்…” என்று எழப் பார்க்க,

“மைத்தி என்னை டென்சன் பண்ணாத நீ…” என்று அமர வைத்தவள், அவளுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, மைதிலி சிறிது நேரம் அமைதியாய் இருந்தாள்.

“பேசு மைத்தி இப்போவாது…”

“ஹ்ம்ம்… சீனியர பார்க்கத்தான் வந்தேன். உனக்குத் தெரியும்தான. அப்போவே அவங்களை எனக்குப் புடிக்கும். ஆனா அதை சொல்ற தைரியமோ அவங்க விருப்பத்தை ஏத்துக்கிற தைரியமோ அப்போ எனக்கில்லை. இத்தனை வருஷம் என்ன பண்ணன்னு நீ கேட்கலாம். ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருந்தா அவங்களும் கண்டிப்பா காத்திருப்பாங்கன்னு எனக்குத் தெரியும்.

ஆனா என்மேலயே எனக்கு அப்போ நம்பிக்கை இல்லை. அதுவுமில்லாம, நான் பேசி, ஒருவேளை ரெண்டு வீட்லயும் சரின்னு சொல்லாம அது நடக்காம போயிருந்தா கண்டிப்பா வலி அதிகம் எல்லாருக்கும். ஆனா என்னால வேற யாரையும் எல்லாம் நினைக்கக் கூட முடியல, இவங்களை மறக்கவும் முடியலை. இப்போ அவங்க சந்தோசமா அவங்களுக்கான லைப்ப தேடிக்கிட்டாங்க. அது தப்புன்னும் நான் சொல்ல முடியாது..

   இப்போ என்னோட முடிவுகள் தப்பா போகாதுன்னு என் அப்பாம்மாக்கு நல்லா தெரியும். என்னை நானே வளர்த்திக்கிட்டேன். நம்ம பொண்ணு விருப்பம் தவறா இருக்காதுன்னு அவங்களுக்குத் தெரியும். ஒரு முயற்சி எடுத்துப் பார்க்கலாம்னு தான் வந்தேன்…” என்றவள் மேலும் அழ,

“ஒருவேளை நீ வரும்போதே ஜெகாண்ணாக்கு கல்யாணம் ஆகிருந்தா?” என்ற ரேகாவின் கேள்விக்கு மைதிலியால் பதில் சொல்ல முடியவில்லை.

அப்படியும் கூட ஆகிருக்கலாம் தானே..!

மைதிலி பதில் சொல்லாது விசும்ப, “சரி அதுக்கெதுக்கு நீ கிளம்புறேன்னு சொல்ற?”

“பின்ன இருந்து அவங்க கல்யாணத்தைப் பார்த்து, விருந்து சாப்பிட்டு,  மொய் வச்சிட்டு போக சொல்றியா?” என்றாள் கோபமாய்.

திருமணமே இதுவரைக்கும் ஆகவில்லை என்கையில் ஜெகா இன்னொரு முறை ஏன் முயற்சிக்கவில்லை என்ற கோபம் மைதிலிக்கு. அவளுக்கென்ன தெரியும் ஜெகந்நாதன் அனுபவித்த வேதனைகள். ரேகா சொல்கையில் அதனை கவனிக்கவேயில்லையே.

மைதிலி எதையோ தவறாய் புரிந்துகொண்ட கோவப்படுகிறாள் என்று ரேகாவிற்கு புரிய, அதனை தெளிய வைக்க, “இங்க பாரு டி ஜெகண்ணாவும் ஒன்னும்…” என்று ரேகா எடுத்து சொல்ல வர,

“ரேகா…!” என்ற அழைப்பு இருவரையும் திடுக்கிட வைத்தது.

காரணம் அந்த குரல் ஜெகந்நாதன் உடையது..!

“ண்ணா…” என்று ரேகா அதிர்ச்சியாய் பார்க்க, மைதிலியோ ‘எப்போது வந்தான் இவன்…’ என்று கேள்வியாய் பார்த்தது.

‘கேட்டிருப்பானோ…’ என்று மைதிலிக்கு இதயம் அடித்துக்கொள்ள, ரேகாவும் அதையே நினைத்தாள்.

ஜெகந்நாதன் ரேகாவோடு பேசவே வீடு வந்திருந்தான். அவனுக்கு தெரிந்தே ஆகவேண்டி இருந்தது மைதிலி எந்த காரணத்திற்காக இங்கே வந்திருக்கிறாள் என்பது. தனக்காக என்றால், நிச்சயம் இதுநாள் வரைக்கும் அவள் பேசாது இருந்திருக்க மாட்டாள். நிஜமாகவே வேலைக்காக என்றால் இத்தனை தூரம் அவள் வரவேண்டிய அவசியமே இல்லை.

அதனால் ரேகாவிடம் பேசலாம் என்றுதான் ஜெகா வந்தது. அவன் உள்ளே நுழையும் நேரம் மைதிலி அழுதுகொண்டு இருக்க, அப்படியே அமைதியாய் நின்றுவிட்டான். வீட்டில் யாருமில்லை என்று தெரியும். ரேகாவும் மைதிலியும் ஹாலில் தான் இருந்தனர்.

அதைவைத்தே அவன் புரிந்துகொண்டான்.

தான் இப்போது உள்ளே நுழைந்தால் நிச்சயம் மைதிலி பேச்சை நிறுத்துவாள் இல்லை கிளம்புவாள் என்று தெரியும். ஆக தான் கிளம்பலாம் என்று எண்ணியவனை மைதிலியின் வார்த்தைகள் அப்படியே நிற்க வைத்து விட்டது.

‘தனக்காகத்தானா?!!!’

இதனை அவன் இதயம் உணர்கையில் தான் காதல் வீண் போகவில்லை என்ற உணர்வு எழ, அது ஒரு தனி சந்தோசம் கொடுக்கத்தான் செய்தது.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதில் அவன் கொஞ்சம் கர்வமாகக் கூட உணர்ந்தான்.

ஆனால் என்ன பிரயோஜனம்?!

எதுவுமில்லை…!

           ஜெகந்நாதனிற்கு, தான் நேசித்தவளின் விருப்பத்தைத் தெரிந்து கொண்ட உணர்வை ரசிக்கக் கூட முடியவில்லை. இதயத்தில் பெரும் பாரம் ஒன்று வந்து அமர்ந்து கொண்டது.

           என்ன செய்வது?!

அவளை அப்படியே போ என இதற்குமேலும் விட முடியுமா?! 

அப்படி அவள் சென்றுவிட்டால், அதுவும் காதலோடு வந்தவள் கண்ணீரோடு போகிறாள் என்று தெரிந்தே இவனால் சும்மா இருந்திட முடியுமா?! இல்லை அவனால் நிம்மாதியாகத்தான் வாழ முடியுமா?!

‘கிராதகி… எப்போது வந்திருக்கிறாள்…’ என்று கடியத்தான் முடிந்தது அவனால்.

போ என்று விடவும் முடியாமல்.. இரு என்று சொல்லவும் முடியாமல் ஜெகாவின் நிலை அந்தோ பரிதாபம்.

           அப்படி அவன் என்ன செய்வது என்று திண்டாடிய நேரம்தாம் ரேகா, உண்மையை சொல்ல வாய் திறந்தது. என்னவோ அதுவும் ஜெகந்நாதனுக்கு பிடிக்கவில்லை. தன் திருமணத்தின் காரணம் இந்த நிலையில் மைதிலிக்கு தெரிவது அவனுக்கு விருப்பமாய் இல்லை.

அதன் பொருட்டே அவன் ‘ரேகா…’ என்றழைத்து தடுத்து நிறுத்தியது. 

மைதிலியின் கண்களில் வழிந்த நீர் அப்படியே கண்களோடு நின்றுவிட, அவளை ஒரு பார்த்தபடி தான் ஜெகந்நாதன் உள்ளே வந்தான்.

“ண்ணா.. எப்.. எப்போ வந்தீங்க…?” என்ற ரேகாவிற்கு படக் படக் என்று அடித்துக்கொண்டது.

‘எப்பவுமே இவங்களுக்கு நடுவில நானே சிக்கனுமா?!’ என்ற உணர்வு…

“இ.. இப்போதான்…” என்றவன் வெகு சாதாரணமாய் சொல்ல,

‘நிஜமா?!’ என்று இரு பெண்களுமே பார்த்தனர்.

“ஏன் ரேகா நான் தப்பான நேரத்துல வந்துட்டேனா?” என்றவன் மைதிலியைப் பார்க்க,

“இ.. இல்லண்ணா… நாங்க பேசிட்டே இருந்தோமா.. ஒருவேளை…” என்று ரேகா திக்கி திக்கி பதில் சொல்லும்போதே

“நீ கவனிக்காம எல்லாம் இல்லை. நான் இப்போதான் ரேகா அப்படின்னு கூப்பிட்டுக்கிட்டே வந்தேன்…” என்றவன் வேண்டுமென்றே பார்வையை ஓட விட்டு “எங்க குட்டீஸ், மச்சான் எல்லாம் காணோம்…” என,

“ஒரே அடம்ணா வெளிய கூட்டிட்டு போக சொல்லி அதான் அவர் கூட்டிட்டு போயிருக்கார்…” என்றவள், “நான் காபி போட்டு கொண்டு வர்றேன்…” என,

“அதெல்லாம் வேணாம்…” என்று ஜெகா சொல்ல,

“இல்லண்ணா இருங்க…” என்று ரேகா சமையலறை நோக்கிப் போக,

மைதிலியோ “நான் கிளம்புறேன் ரேகா…” என்று எழுந்தவளின் பார்வை ஜெகாவை தொட்டு மீள,

‘போய் விடுவாயா நீ?!’

‘போய் தான் பாரேன்…’ என்றுதான் ஜெகந்நாதன் பார்த்து வைத்தான்.         

 

               

                      

Advertisement