Advertisement

                     இதயத்திலே ஒரு நினைவு – 3

 

டேய் மச்சான் அங்கபாரு உன் ஆளு தனியா போகுது…”

“ஏய்.. ஆளு கீளுன்னு சொன்ன பேசுறதுக்கு வாய் இருக்காது. மைதிலி அவ பேரு.. மைலிதின்னு சொல்லு இல்லை தங்கச்சின்னு சொல்லு…”

“அதுசரி… அப்படி எத்தனை பேரு வாயை உடைப்ப நீ?”

“எத்தனை பேரு வந்தாலும்…” என்ற ஜெகா தனது பைக்கை ஒரு ஆக்ரோஷதோடு கிளப்பிக்கொண்டு போனான்…

 “என்ன டி மைத்தி கண்ணெல்லாம் இப்படி வீங்கிருக்கு…”

“தூக்கமே வரல ரேகா…”

“என்னத்துக்கு.. நீதான் சாப்பிட்டதுமே தூங்குற ஆளாச்சே…” என்ற ரேகா மைதிலியை சந்தேகமாய் பார்க்க,

“என்னைய தொட்டுப்பாரு கொஞ்சம் காய்ச்சல் அடிக்கிதான்னு…” என்று மைதிலி பாவமாய் முகம் வைத்து சொல்ல,

“ஒரு கன்றாவியும் அடிக்கல. எதுக்கு தூங்கல அதை சொல்லு…”

“அது.. அ.. அதுவந்து…”

“சொல்லித் தொலை டி.. அசைன்மென்ட் நோட் வேற போய் சம்பிட் பண்ணனும்…” 

“நான் ஒன்னும் சொல்லல.. நீ போய் நோட் வச்சிட்டு வா.. இதோ என்னோடதும் எடுத்துட்டு போ…” என்று மைதிலி பிகு செய்ய,

“ஏய் இப்போ சொல்லப் போறியா இல்லையா நீ?” என்று ரேகா மிரட்டினாள்.

“அ.. அது நேத்து நீ லீவ் போட்டியா…”

“ஆமா…”

“சாயங்காலம் வீட்டுக்கு நான் மட்டுமா போனேனா..”

“ஏய் ராகம் பாடாத..”

“சரி சரி.. போறப்போ.. சீ.. சீனியர் வந்தாங்க…”

“ஜெகாண்ணாவா…”

“ஆமா..”

“ஹ்ம்ம் அப்புறம்…”

“எனக்கு நேரா வந்து… உன்னோட பேசணும்னு சொன்னாங்களா? எனக்கு செமையா டென்சன் ஆகிடுச்சி டி…” என்றவளின் முகமே பதற்றமாய் இருந்தது.

“எதுக்கு டென்சன்…”

“டென்சன் ஆகாம.. டக்குனு பைக்ல வந்து என் சைக்கிள வழி மறிச்சு நின்னாங்க. நான் விழுந்திருந்தா என்னாகுறது…”

“ஓ! அப்போ நீ விழுந்திருந்தா என்னாகுறதுன்னு தான் பயம். மத்தபடி எதுவுமில்ல..”

“ம்ம்ச் போடி இவளே…”

“இதுக்கா தூங்கல?”

“ஆமா தூக்கமே வரல.. கண்ண மூடினா அவங்க வந்து நின்னதே தான் நியாபகம் வருது…”

“சரிதான்…”

***********************************************************************************

ஜெகந்நாதன்…

இரண்டு நாட்களாய் அவனுக்கு மனதில் இருந்த சிறிது அமைதியும் நிம்மதியும் காணாமல் போயிருந்தது. மைதிலி வந்தது தெரியும். இருந்தும் அவளை நேரில் காண அவன் முயற்சிக்கவில்லை.

வெள்ளிக்கிழமை அவளைக் கோவிலில் சந்திப்பான் என்று அவனும் நினைக்கவில்லை. அவள் காணும் முன்னமே இவன் கண்டுவிட்டான். இருந்தும் காணாததுபோல் இருந்துகொண்டான்.

அவளைப் பார்த்த அந்த நிமிடம் அவனுள் எழுந்த ஒரு அதிர்வு அவனுக்குத்தானே தெரியும்..

மறந்து போனதாய் நினைத்திருந்தான்.

அது இல்லை என்று அப்பட்டமாய், தாய் மீனாட்சி காட்டிவிட்டாள்.

வீடு வந்து சேர்ந்த பின்னரும் எந்த வேலையிலும் அவனுக்கு மனது லயிக்கவில்லை. எதிலுமே அவனது சிந்தை ஒட்டவில்லை. எல்லாமே பட்டென்று கல்லூரி கால நியாபகங்களுக்கு போய்விட்டது.

அவன் சந்தோசமாய், உற்சாகமாய், ஆர்ப்பாட்டமாய், இருந்த காலமது.

வசதி வாய்ப்பான குடும்பம். அதனால் படித்து பட்டம் பெற்றால் போதும் என்ற நிலைதான். பணம் சம்பாதனை பற்றிய கவலையும் இல்லை. தோட்டம், வயல், கடைகள் என்று எல்லாம் இருந்தன. அப்பாவும் பெரியப்பாவும் தான் பார்த்துக்கொண்டார்கள்.

கூட்டுக்குடும்பமே…!

பெரியப்பாவிற்கு ஒரு மகனும் மகளும். இவன் பெற்றோர்களுக்கு ஒற்றைப் பிள்ளை.

மதுரை மைந்தர்களுக்கே உரிய மிடுக்கும் தோரணையுமாய்த் தான் இருப்பான் ஜெகா. வீட்டிலும் அப்படியே. அண்ணன் பட்டினத்திற்கு படிக்கப் போய்விட, தங்கை இவனது செல்லம். பெரியப்பா பெரியம்மா அம்மா அப்பா என்று எல்லாருமே ஜெகாவின் பேச்சிற்கு மதிப்பளிப்பர்.

அண்ணன் கூட அப்படியே..

‘எதுன்னாலும் தம்பிக்கிட்ட கேட்டுக்கோங்க..’ என்றிடுவான்.

சந்தோசமாய் துள்ளித் திரிந்த காலமது.

எல்லாம் மைதிலியை காணும் வரைக்கும்.

கண்ட பின்னரோ, ஜெகா இன்னும் ஜொலிக்கத் தொடங்கினான். இன்னும் துள்ளலும் துடிப்பும் கூடியது.

கண்டதும் காதல் தான்..!

பார்த்ததுமே அவனுக்குப் பிடித்துப்போனது.

‘டேய் மச்சா இவ தான்டா எனக்கு…’ என்பதில் உறுதியாகவே இருந்தான்.

மைதிலி மட்டும் சம்மதம் சொல்லியிருந்தாள், அப்போதே திருமணம் செய்ய வேண்டிய நிலை வந்தாலும் செய்யத் தயாராய்த் தான் இருந்தான். ஆனால் அவள் சம்மதிக்கவில்லையே.

பிடித்திருந்தும் சம்மதிக்கவில்லை..!

அதுதான் அவனுக்கு பெரும் ஆற்றாமை..!

இப்போதானால் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி, சரி இனி என்னவென்று பார்ப்போம் என்று நினைத்திருந்த வேளையில், வந்துவிட்டாள்.

அவன் நிம்மதியை அடித்து நொறுக்கவென்று வந்தேவிட்டாள்.

இடைப்பட்ட காலம் ஜெகாவிற்கு வாழ்வில் நிறைய கற்றுத் தந்து இருந்தது. இழப்புகள் ஏராளம்.

குடும்பமாய் சுற்றுலா செல்ல, எதிர்பாராத விபத்து..

பெரியப்பா, அவரின் மகன், அவனின் மனைவி எல்லாரையும் பறிகொடுத்து, பெரியப்பா மகளின் ஒரு காலிலும் பலத்த அடி. குடும்பமே நிலைகுலைந்து போனது..

ஜெகாவிற்கு தலையில் லேசானதொரு அடி மட்டுமே. அவனின் அப்பா அம்மாவிற்கும் சிறிய எலும்பு முரிவுகளோடு தப்பிக்க, அந்த கோர விபத்து தந்த வலியில் இருந்து மீளவே அவர்களுக்கு இரண்டு வருடங்கள் மேலானது.

அதிலும் ஜெகாவின் பெரியப்பா மகள், அதாவது அவனின் செல்ல தங்கை நிரஞ்சனி, இன்னமும் கூட காலை லேசாய் சாய்த்து வைத்துத்தான் நடக்கிறாள். இயல்பான நடை மாறிப்போனது. ஓடி ஆடிய வீட்டினில் வேகமாய் கூட அவளால் நடந்திட முடியாது போனது.

அப்பா அண்ணன் அண்ணி என்று எல்லாரையும் ஒருசேர பலி கொடுத்து, இப்போது அவளது தைரியம் எல்லாம் ஜெகந்நாதன் மட்டுமே.

“அவளை எப்பவும் விட்டிடாத ஜெகா…” என்று பெரிம்மா ரத்னா அடிக்கடி கூறுவது வழக்கமாய் இருந்தது.

காரணம்….

அண்ணன் மனைவியின் தங்கைதான் நந்தினி..

நந்தினியின் சித்தப்பா மகனுக்குத்தான் நிரஞ்சனியை பேசி முடித்திருந்தார்கள் இரண்டு வருடங்கள் முன்னமே.

விபத்து ஏற்பட்டு, அதன்பின்னே நிரஞ்சனி நடந்திட முடியாது போக, திருமணம் தள்ளிப்போனது.

ஒருநிலையில் திருமணம் நடக்குமா என்ற பயம் கூட ஆனது.

எல்லாவற்றையும் ஜெகந்நாதனும், அவனின் அப்பாவும் சரி செய்வதற்குள் இதோ இரண்டு ஆண்டுகள் ஓடிப்போனது.

“நீங்க ஏன் சம்பந்தி கவலைப்படுறீங்க.. உங்க பொண்ணு எங்க வீட்ல வந்து சந்தோசமா வாழுவா.. நாங்க நல்லபடியா பார்த்துப்போம்.. உங்களுக்கு பயமிருந்தா எங்க வீட்டு பொண்ண உங்களுக்கு மருமகளா அனுப்புறோம்…” என்று மாப்பிள்ளை வீட்டினர் இப்படித்தான் சம்பந்தம் பேசி, நந்தினியை ஜெகந்நாதனிற்கு பேசி முடித்தனர்.

திருமணப் பேச்சு என்றதுமே ஜெகாவிற்கு மைதிலி நினைவு வந்ததுதான். ஆனால் அவனது சூழ்நிலை அவன் தன் விருப்பங்களை பற்றி எல்லாம் சிந்திக்கும் நிலையில் இல்லை. அதற்குமேலே ஒருவேளை மைதிலிக்கு மற்றொரு வாழ்வு கூட அமைந்திருக்கலாம்.

காதல் கை கூடாமல் போனவர்கள் எல்லாம், அதனையேவா நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்?! ஏதோ ஒரு சூழலில் ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரிலாவது தனக்கானதொரு வாழ்வை அமைத்துக்கொண்டு தானே வாழ்கிறார்கள்.

இப்படியெல்லாம் யோசித்து யோசித்துத்தான் ஜெகா தன் மனதை ஒருவழியாய் சமாதானம் செய்து, திருமணத்திற்கு சம்மதம் என்று சொன்னான்.

தன் தங்கைக்கு எப்படி மனதும் உணர்வுகளும் இருக்குமோ அதுபோலத்தானே நந்தினிக்கும் இருக்கும்?!

எக்காரணம் கொண்டும், தான் ஒருத்தி மீது கொண்ட விருப்பத்தின் காரணமாய் இன்னொரு பெண்ணை நோகடித்து விடக்கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தான் ஜெகந்நாதன். இவை எல்லாமே ரேகாவிற்குத் தெரியும்.

மைதிலியோடு முதல்முறை  பேசும்போதே இதனை எல்லாம் சொல்லவேண்டும் என்று நினைத்தாள், பின் இருவரின் வாழ்வும் வெவ்வேறு பாதையில் இருக்கையில் ஏன் ஒருவரைப் பற்றி ஒருவரிடம் பேசவேண்டும் என்று ஜெகாவிடம் கூட மைதிலி வருவதை சொல்லவில்லை ரேகா.

தெரியும்போது தெரிந்துகொள்ளட்டும் என்று இருந்துவிட்டாள்.

ஆனால் மைதிலி வந்தது ஜெகந்நாதனுக்காக என்று தெரியவும் ரேகாவும் கொஞ்சம் ஆடித்தான் போனாள்.

இது எப்படியானதொரு சிக்கல்?!

ஜெகந்நாதனும் அதே யோசனையில் தான் இருந்தான்.

‘எதுக்காக இத்தனை வருஷம் இல்லாம இப்போ வந்திருக்கா? வேலைக்காக அப்படின்னா கண்டிப்பா இங்க மைதிலி வந்திருக்கவே தேவை இல்லை. சென்னைல கிடைக்காத வேலையா?! தன் அப்பா அம்மாவைக் கூட விட்டு இவ்வளோ தூரம் வரணுமா அவ?’ என்று யோசித்து யோசித்து இந்த இரண்டு நாட்களும் தலை வலியோடு சுற்றியது தான் மிச்சம்.

“என்ன ஜெகா.. எப்படியோ இருக்க?” என்று ரத்னா அவனுக்கு உணவு பரிமாறிக்கொண்டே கேட்க,

“அதெல்லாம் இல்ல பெரிம்மா…” என்றான் வேகமாய்.

“இல்லையே நந்தினி வந்துட்டு போனதில இருந்து நீ என்னவோ போல ஆகிட்ட. ஏன் ரெண்டு பேருக்கும் சண்டையா?”

‘ஓ! இப்படி வேற யோசிப்பாங்களோ…’ என்று எண்ணியவன் “அதெல்லாம் இல்ல பெரிம்மா.. கொஞ்சம் வேலை டென்சன்.. வயல் வேலை நடக்குது.. ஆளுங்க சரியா வரலை…” என்று எதையோ சொல்லி சமாளிக்க,

“ஏன்ணா நந்தினி அண்ணி உன்னோட நல்லாத்தானே பேசுறாங்க..?” என்றாள் நிரஞ்சனி.

“ஆமா நிரஞ்சனி…” என்றவனின் கவனம் எல்லாம் தட்டில் இருப்பது போலவே வைத்துக்கொண்டான்.

திருமணம் பேசி முடித்தபின்னர் கூட நந்தினி அப்படியொன்று ஆர்வமோ, ஆசையோ கொண்டு பேசியது எல்லாம் இல்லை. அதிலும் கூட அவளாக அழைத்தும் பேசியதில்லை. இவனும் அப்படியே. அவள் பேசினாள் பேசுவான். இன்னும் தான் மாறவேண்டும் என்று எண்ணியிருந்தான்.

நந்தினி இங்கே ஏதேனும் விசேசம் அது இதென்றால் பெற்றோர் உடன் வருவாள். அப்படி வருகையில் இவனிடம் மாமா என்றழைத்து பேசுவாள் அவ்வளவே. எப்போதாவது வெளியே அழைத்துக்கொண்டு போகக் கேட்பாள். எங்கே மற்ற பெண்கள் போலே மணிக்கணக்கில் பேச வேண்டும், ஊர் சுற்றவேண்டும் என்றெல்லாம் கேட்டுவிடுவாளோ என்று ஜெகா நினைத்திருக்க நல்லவேளை நந்தினி அப்படி இல்லை என்றதும் ஒரு நிம்மதி.

அதற்காகவே அவள் மீது ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுப்போனது. இவள் தன்னைப் புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கையும் கூட வர ஆரம்பித்து இருந்தது.

இனியாவது எல்லாம் நல்லபடியாய் நடந்திடவேண்டும் என்று ஜெகந்நாதன் இருந்த போது தான், மைதிலி மதுரை விஜயம் செய்திருப்பது.

அதிலும் அவனைக் கண்டதும் அவள் முகத்தினில் அவன் முன்னெப்போதும் காணும் அதே ஒரு திடுக் உணர்வும், ஒருவித பரவசமும். இது எப்போதுமே மைதிலி முகத்தில் தோன்றும் ஒன்று. அதுவே அப்போதெல்லாம் ‘அவளுக்கு உன்னை புடிக்கும்டா…’ என்று  தனக்கு தானே சொல்ல வைத்த ஒன்று.

இப்போதும் அது மாறாது அப்படியே கோவிலில் வைத்து மைதிலி முகம் பிரதிபலிக்க ‘ஆண்டவா?!’ என்று நிஜமாய் நொந்தே போனான் ஜெகந்நாதன்.

‘எப்போது வந்திருக்கிறாள்?!’ என்ற கோபம் கூட..

‘இப்போது வந்தென்ன செய்ய?!’ என்ற ஆற்றாமையும்..

ஆம்! இனி என்ன செய்வது?!!!!

இதே சிந்தனை தான் மைதிலிக்கும்..

இனி என்ன செய்வது?!

‘ஊருக்கே போயிடலாமா?!’ என்று கூட யோசித்தாள்.

அம்மா அவ்வளோதான் பேசி பேசியே ஒருவழி செய்திடுவார். அத்துனை சொல்லியிருந்தார் சுகுணா. அதெல்லாம் மீறித்தான் மைதிலி வந்தது. இப்போது திரும்பச் சென்றால்? அவ்வளவே..

என்ன செய்வது என்று யோசித்தே படுத்திருந்தால் மைதிலி.

இந்த இரண்டு நாட்களாக ரேகாவிடம் கூட அதிகம் பேசவில்லை மைதிலி.

ரேகாவின் வீட்டிலும் விருந்தினர் வந்திருக்க, அவளுமே கொஞ்சம் வேலையாய் இருந்திட, மைதிலிக்கு யாரோடும் பேசும் நிலையும் இல்லை.

பெரிதாய் எதிலோ தோற்ற உணர்வு..!

எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும் தானே…!

அப்பா அம்மாவிடம் கூட இரண்டொரு வார்த்தையில் பதில் சொல்லி அலைபேசியை வைத்துவிட்டாள்.

பெற்றவர்கள் மனது சும்மா இருக்குமா என்ன?!

“மைத்தி… அங்க பேசாம ஒரு வீடு பாரு.. அப்பாக்கு அடுத்து லீவ் வருது.. வந்து உன்னை பார்த்த மாதிரியும் இருக்கும் தங்கின மாதிரியும் இருக்கும்…” என்று சுகுணா சொல்ல, மைதிலிக்கு இது அடுத்த அதிர்ச்சி.

“எது… இங்க வர்றீங்களா?” என்றாள்.

“ஆமா…”

“அதெல்லாம் வேணாம்…”

“ஏய் அப்பாக்கு லீவ் ஒருவாரம் வருது டி…”

“அதுக்கு…”

“ஒரு வீடு பாரு… இல்லையா ரேகாக்கிட்ட நானே பேசி பார்க்கச் சொல்றேன்…” என்று சுகுணா முடித்துவிட்டார்.

                           

         

 

     

 

Advertisement