Advertisement

                     இதயத்திலே ஒரு நினைவு – 24

மைதிலி – ஜெகந்நாதன் நிச்சயதார்த்தம் நிகழ்ந்தேறிக்கொண்டு இருந்தது. மிக மிக  நெருங்கிய உறவுகளையே ஜெகந்நாதன் வீட்டினர் அழைத்திருக்க, குமரனும் கூட அப்படித்தான் அழைத்திருந்தார்.

மதுரையில் தான் நிச்சயதார்த்தம்…!

சில தேவையில்லாத பேச்சுக்களை, வம்புகளை தவிர்க்கவே இவ்வேற்பாடு. பாண்டியன் சற்று தயங்கித்தான் சொன்னார் இதனை. இருந்தும் குமரன் அதனை புரிந்துகொள்ள, மொத்தமே இருவீட்டாரையும் சேர்த்து நூற்றி ஐம்பது பேர் இருப்பர்.

மைதிலி தேவதையாய் தான் ஜொலித்தாள்..!

மனதில் இருந்த மகிழ்ச்சி அவளது முகத்தில் அப்படியே தெரிய, ஜெகந்நாதனின் கம்பீரம் இன்னும் மெறுகேரியதாய்  தான் இருந்தது. அவனது அங்காளி பங்காளி இளவட்டங்கள் சிலர் வந்திருக்க, எல்லாம் அவனை சூழ்ந்து இருந்தனர்.

ரமேஷும் வந்திருக்க, நிரஞ்சனிக்கோ ஒரு புதுவிட உணர்வு.. மேடையில் மைதிலி பக்கத்தில், ஏறக்குறைய அவளுமே ஒரு மணப்பெண் போல் அலங்கரித்து நிற்க, பார்வை எல்லாம் ரமேஷ் பக்கம் தான் இருந்தது.

ரத்னா எதிலும் கலந்துகொள்ளாத பாவனையில், முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். கேட்பவர்களுக்கு எல்லாம்  “ரெண்டு நாளா ப்ரெஷர் கூடிருக்கு..” என்று உபரித் தகவல் வேறு சொல்லிக்கொண்டு இருக்க, செல்வி தான் பம்பரமாய் சுற்றிக்கொண்டு இருந்தார்.

அவருக்கு இணையாக சுகுணாவும்.. சொந்தபந்தங்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் இன்முகமாகவே பதில் சொல்லி, மண்டபத்தை வளைய வந்துகொண்டு இருந்தார்.

மைதிலிக்கோ நொடிக்கொருத் தரம் பார்வை எல்லாம் ஜெகா பக்கம் சென்று வர, ஜெகந்நாதனும் கூட அப்படித்தான், நண்பர்கள் உறவினர்கள் சூழ இருந்தாலும் அவ்வப்போது மேடையையும் பார்த்துகொண்டு இருக்க, வாசுவோ “ஏன்டா மாப்ள பொண்ணு பக்கத்துல உனக்கும் ஒரு சேர் போட்டு இருக்கலாம்ல…” என,

“அது கடைசியா தான்…” என்றான் ஜெகா.

இதையே மைதிலியும் ரேகாவிடம் கேட்டாள்.

“உங்க அண்ணன் அங்க கீழ உக்காந்து இருக்கிறதுக்கு இங்க வந்தாவது உக்காரலாம்…” என,

“அதெல்லாம் இப்போ இல்லை. கடைசியில தான்…” என்றாள் ரேகா மெதுவாய்.

வம்பு பேச்சுக்கள் ஜெகந்நாதன் சொந்தங்கள் அரசல்புரசலாய் பேசினாலும், குமரனிடம் அவர் பக்கத்து ஆட்கள் சிலர் “என்ன குமரா, மாப்பிள்ளை வீடு ஊர்லையே பெரிய குடும்பம்.. ஆள் அம்பு ஜாஸ்தி அப்படின்னு சொன்ன.. அப்படி ஒன்னும் ஆளுங்க ஜாஸ்தி காணோமே…” என்று கேட்க,

குமரனோ “அது கல்யாணத்துக்கு எல்லாம் வருவாங்க.. திடீர்னு நிச்சயம் பண்ணது இல்லையா… அதுனால நெருங்கிய ஆளுங்களை மட்டும் தான் கூப்பிட்டு இருக்காங்க…” என,

“அப்போ அவங்க ஊர்லயே  வைக்காம, ஏன் இங்க வந்து நிச்சயம் வைக்கணும்..?” என்று அடுத்த கேள்வி வந்தது.

“இங்கன எல்லாம் வந்து போக வசதியா இருக்கும்… கல்யாணமே இங்க தான் மதுரைல வைக்கலாம்னு இருக்கோம். விருந்து எல்லாம் ஊர்ல தான்..” என்று குமரனும் விடாது சமாளித்து வர, பாண்டியன் காதிலும் இந்த பேச்சுக்கள் எல்லாம் அவரின் ஆட்கள் மூலம் வந்து விழுந்தபடி தான் இருந்தது.

எப்படியோ, இந்த நிச்சயம் நல்லபடியாய் நடந்து முடிந்தால் போதும் என்றிருக்க, யாரும் எதையும் பெரிது படுத்தவேண்டாம் என்று சொல்லிவிட்டார் பாண்டியன்.

செல்வி வந்து பாண்டியனிடம் “ஏங்க நம்ம தட்டு அடுக்கிட்டு, அடுத்து தட்டு மாத்தனும்.. நேரமாச்சு…” என்று சொல்லி அழைக்க, அடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடக்க, செல்வி இருபத்தியொரு தட்டுகளை மாப்பிள்ளை வீட்டு சீராய் பெண்ணுக்கு அடுக்கச் செய்ய, வம்பு பேசிய வாய்கள் கொஞ்சம் மூட, அதனையும் விட, நிச்சயத்திற்கு என்று பெண்ணுக்கு பத்து பவுனில் அழகிய கல் வேலைபாடு கொண்ட ஆரம் ஒன்றையும் அணிவிக்க, அவ்வளவு தான் மைதிலி பக்கத்து சொந்தங்கள் எல்லாம் வேறெதுவும் அடுத்து பேசவில்லை.

“பரவாயில்ல… பெரிய ஆளுங்க தான்…” என்று  ஜாடையில் பேசிக்கொள்ள,

அடுத்து ஜெகந்நாதன் மேடையேற, அவனுக்கும் மைதிலி பக்கத்தில் ஒரு இருக்காய் தயாராய் வந்துவிட, மாப்பிள்ளையின் பரிசாக, மைதிலிக்கு ஜெகந்நாதன் வைர மோதிரம் தான் அணிவித்தான்.

இருவரின் முகத்தினில் இருக்கும் மகிழ்ச்சியும், மைதிலி விரலில் மின்னிய வைரத்தோடு தான் போட்டி போட்டது.

ஆச்சி இதனை எல்லாம் மன நிறைவோடு முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தபடி இருக்க, வந்திருந்த ஜெகந்நாதன் பக்க சொந்தங்களுக்கு எல்லாமே, அவனின் இந்த பூரிப்பு கண்ணில் தப்பாமல் விழுந்தது.

காரணம் நந்தினியோடு நிச்சயம் நடக்கையில் ஜெகா ஒரு இறுகிய நிலையிலும், எதிலும் ஒட்டாமலும் தான் இருந்தான். இதோ இப்படியான சிரிப்பும், சந்தோசமும் அவன் முகத்தில் அன்று சிறிதளவு கூட இல்லை. ஆனால் இன்று அவனின் முகத்தில் இருக்கும் புன்னகை நொடிப்பொழுது கூட மறையவில்லை.

ரத்னா கூட இதனை எல்லாம் கவனித்துத் தான் இருந்தார்.

என்ன இருந்தாலும் பாசமில்லாது போகுமா என்ன?!

ஜெகந்நாதனின் சந்தோசம் கண்டு அவருக்குமே கொஞ்சம் மனம் இளகியது தான். எதுவும் பேசாமல், அவரும் மேடையேறிக்கொள்ள, செல்வி கண்டும் காணாது இருந்துகொண்டார்.

இப்போது எது பேசினாலும் அது பெரிதாகும் என்று தெரியும்..

மாப்பிள்ளை வீட்டினில் இருந்து இத்தனை செய்திருக்க, குமரன் சும்மா இருப்பாரா என்ன? மாப்பிள்ளைக்கு என்று ஐந்து பவுனில் சங்கிலியும், மூன்று பவுனில் கை சங்கிலியும் அணிவிக்க, ஜெகந்நாதன் பக்கத்து ஆட்களும் கூட கொஞ்சம் மெச்சுதலாய் தான் பார்த்தனர்.

அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும் முடிய, அடுத்து ஒவ்வொருவராய் வந்து, மேடையேறி மாப்பிள்ளை பெண்ணை ஆசிர்வாதம் செய்ய, கிடைக்கும் நேரத்தில் ஜெகாவும் மைதிலியும் பேசிக்கொண்டு தான் இருந்தனர்.

ஜெகா “ஆமா நான் உனக்கு கிப்ட் கொடுத்தேன்ல.. நீ என்ன எனக்கு கொடுக்கப் போற?” என்று கேட்க,

“ஹா?! என்னது?!” என்றாள் மைதிலி எதுவும் கேட்காத பாவனையில்.

“உனக்கு ரிங் வாங்கிட்டு வந்து போட்டேன்ல.. நீ எனக்கு என்ன கொடுக்கப் போற?” என,

“ஷ்..!! ஆமால்ல மறந்தே போனேன்…” என்றவள் “சரி நான் ஒரு கேள்வி கேட்பேன்.. பதில் சரியா சொல்லிட்டா உங்களுக்கான கிப்ட் இப்போவே எல்லார் முன்னாடியும் தருவேன்…” என,

அப்போதிருந்த மன நிலையில் ஜெகா எதுவும் யோசிக்காமல் “சரி கேளு..” என்றுவிட்டான் வேகமாய்.

“நிஜமா பதில் சரியா சொன்னாதான் பரிசு எல்லாம்…” என்று மைதிலி கண்களை விரிக்க,

“அட நீ கேளும்மா முதல்ல…” என்றான் அசால்ட்டாய்.

“இன்னிக்கு என்ன நாள்?!” என்று மைதிலி கேட்டதும் தான் ஜெகாவிற்கு சுதாரிப்பு வந்தது.

‘கிராதகி…!’ என்று அப்போதும் அவனால் கடியாது இருக்கவே முடியவில்லை.

பதில் சொல்லாது ஜெகந்நாதன் இருக்க, அதற்குள் பாண்டியனின் நண்பர்கள் சிலர் மேடை ஏறிட, இவர்களின் பேச்சும் தடைபெற்றது. அடுத்த சில நிமிடங்கள், வந்தவர்களோடு பேசுவதிலும், புகைப்படம் எடுப்பதிலும் கழிய, வந்திருந்த ஆட்களில் முக்கால்வாசி பேர் விருந்துண்ண சென்றிருக்க, புகைப்படக்காரர் அவரின் வேலையை ஆரம்பித்தார்.

“சார் நான் சொல்ற போஸ்ல நில்லுங்க…” என்று ஆரம்பிக்க,

மைதிலியோ “அண்ணா எனக்கு போஸ் கொடுத்து எல்லாம் நிற்க வராது.. நல்லாவும் இருக்காது.. அதனால கேண்டிட் எடுங்க…” என, அவரோ பாவமாய் ஜெகாவின் முகம் பார்க்க,

“அட அவர் ஆசைக்கும் ரெண்டு மூணு போஸ் குடுத்தா என்ன?” என்றான்.

“என்னால சிரிப்பு அடக்க முடியாது..” என்று மைதிலி சொல்ல,

“டி சத்தியமா இதெல்லாம் டூ மச்..” என்றான் ஜெகா.

“ஷ்..! போஸ் கொடுத்து எடுக்கிறது விட, கேண்டிட்ல எடுக்கிறது எல்லாம் செமையா இருக்கும். தெரியுமா?” என்று இருவரும் பேசியபடி இருக்க,

“சார் சூப்பர் சார்… செமையா வந்திருக்கு…” என்று புகைப்படக்காரர் ஒரு சில புகைப்படங்களை காண்பிக்க, நிஜமாகவே இருவரின் ஒவ்வொரு முக பாவனையும் இயற்கையாய் அங்கே பதிவாகியிருக்க, மைதிலி ‘எப்படி?!’ என்று பார்த்தாள்.

“நீ சொன்னா சரிதான்…” என்று ஜெகா, ஜகா வாங்கிக்கொள்ள,

“சார் காஸ்டியும் மாத்திட்டு வாங்க.. வேற மாதிரி கொஞ்சம் எடுக்கலாம்…” என, இருவரும் உடை மாற்றச் செல்ல, அவரவர் அறைகளில் வைத்து மாப்பிள்ளை பெண்ணை தனி தனியே வேறு படம் எடுத்துக்கொண்டார்.

ஜெகாவிடம் வந்தவரோ “சார் மேடம் ரூம்ல லைட்டிங் நல்லாருக்கு.. நீங்க அங்க இருங்க.. நான் வந்திடுறேன்…” என்று புகைப்படக்காரர் சொல்ல, ஜெகாவும் சரி என்று செல்வியிடம் சொல்ல, செல்வியோடு தான் ஜெகா மைதிலியின் அறைக்குச் சென்றான்.

குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை என்பதால், மைதிலி அப்போதும் பிரெஷாக இருக்க, “போட்டோஸ் எடுக்கணுமாம்…” என்று செல்வி சொல்லவுமே, அறையில் மைதிலியோடு இருந்தவர்கள் எல்லாம் வெளி செல்ல, இப்போது ஜெகாவும் மைதிலியும் மட்டுமே.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ஜெகா அப்போதும் கேட்டான் “ஹேய்..! எனக்கென்னவோ கிப்ட் கொண்டு வந்திட்டு இன்னும் குடுக்காம இருக்க பாரேன்…” என,

“நீங்க தான் நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லல…” என்றாள் இவளும்.

“இன்னிக்கு கூட கேள்வி கேட்ட எப்படி வாத்தியாரம்மா…” என்றவன் இயல்பாய் அவளருகே வந்தமர,

“வாத்தியாரம்மா சொல்லிட்டீங்க தானே அப்போ எப்போன்னாலும் எங்கனாலும் கேள்வி கேட்க உரிமை இருக்கு…” என்றவள் “நிஜமா பதில் தெரியலைதானே…” என்றாள்.

“தெரியலை.. ஆனா எனக்கு நீ கிப்ட் குடு…” என்று சிறுவன் போல் ஜெகந்நாதன் அடம் பிடிக்க,

“அடடா…!” என்றவள் கண்டுகொள்ளாது இருப்பதுபோல் பாசாங்கு செய்ய,

“சரி குடுக்கவேணாம் காட்டு…” என்றான் ஆவலாய்.

அவனுக்கு நிஜமாகவே மைதிலி தனக்கு என்ன வாங்கி இருக்கிறாள் என்று பார்க்க ஆசை.

“காட்டவெல்லாம் முடியாது…”

“ம்ம்ச் மைத்தி….!” என்று ஜெகா சொல்லி முடிக்கும் முன்னே, கண்ணிமைக்கும் நேரத்தில், மைதிலி அவனின் கன்னத்தில் இதழ் பதித்து மீண்டிருக்க, ஜெகாவிற்கு என்ன நடந்தது இப்போது என்பது போல் இருந்தது.

“ஹேய்…! என்ன பண்ண நீ…” என்று ஜெகா கேட்க,

“என்ன பண்ணேன்…??!! ம்ம்ம் ம்ம்ம் என்ன பண்ணேன்…?!” என்று மைதிலி முகத்தை அப்படி இப்படி திருப்பியபடி கேட்க,

“மைதிலி இப்படியெல்லாம் பண்ணாத டி…” என்றவன் “நீ இப்படி லிப்ஸ்டிக் போட்டு வச்சிருக்க.. என்னால ஒன்னும் பண்ண முடியாது…” என்று கடுப்படிக்க,

“ஹா ஹா எப்படி என் கிப்ட்?!” என்றாள் சிரித்தபடி.

“அடிப்பாவி இதான் உன் கிப்ட்டா? இதையா எல்லார் முன்னாடியும் தர்றேன்னு சொன்ன?”

“எப்படியும் நீங்க பதில் சொல்ல போறதில்லன்னு தெரியும்… அதான்…” என்றவள் மீண்டும் சிரிக்க,

“போச்சு போ இன்னிக்கு என்னவோ ஆச்சு உனக்கு…” என்றவன் அமர்ந்தபடி அவளை தோளோடு அணைத்து, தலையோடு தலை வைத்தவன், மெதுவாய் அவள் கன்னத்தில் இதழ் பதிக்க, மைதிலி வேகமாய் அவள் கண்கள் மூடிக்கொண்டாள்.

இருவருக்குமான இந்த பொழுது.. எத்தனை அழகானது என்று அவர்களின் மனது மட்டுமே உணரும்..

அந்த அழகை ரசித்து இருவரும் இருக்க, கதவு தட்டும் ஓசை கேட்டு விலகி அமர்ந்துகொண்டனர்.

மீண்டும் புகைப்படக்காரர் தான்.

அடுத்த ஒரு அரைமணி நேரம் அவரோடு செலவு செய்ய, ரேவதி வந்துவிட்டாள். 

“பந்தி எல்லாம் முடிஞ்சது.. நம்ம வீட்டு ஆளுங்க மட்டும் தான் சாப்பிடனும். நீங்களும் வந்துட்டா எல்லாம் ஒண்ணா சாப்பிடலாம்…” என்றழைக்க, இருவரும் கிளம்பினர்.

இப்படி அழகாய், அம்சமாய் ஆனந்தமாய் நிகழ்ந்தேறியது இருவரின் நிச்சயமும். கற்பனைகள் ஆயிரம் கண்டிருக்கலாம். ஆனால் நிஜத்தின் ருசி தனிதானே. அதை இருவருமே உணர்ந்து இருந்தனர்.

நிச்சயம் முடிந்து அடுத்த இரண்டு நாட்கள் மைதிலி கல்லூரி செல்லவில்லை. வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் கிளம்பிய பிறகு, குமரன் ஆச்சியிடம் “வேறு வீடு பார்க்கிறோம்…” என,

“எதுக்கு?!” என்றார் திடுக்கென்று.

“இல்லம்மா கல்யாணம் வருது இல்லையா… ஆளுங்க நிறைய வருவாங்க போவாங்க.. அதான் வேற வீடு கொஞ்சம் பெருசா பாக்கலாம்னு.. சொந்தமா வாங்கிடலாமானு கூட யோசிக்கிறோம்…” என்று சுகுணா சொல்ல,

“நீங்க சொந்தமா வாங்குங்க.. ஆனா நீங்க சென்னைல இருங்க.. அப்போதான் மைதிலிக்கு வந்து போக நல்லாருக்கும். இதோ உள்ளூர்ல பொண்ணு குடுத்து என் மக வந்து இங்க தங்குறதே இல்லை. மருமகன் வர்றதே வருசத்துக்கு ஒன்னோ ரெண்டோ தடவை தான்…” என, பெரியவரின் பேச்சில் இருந்த உண்மை புரிந்தது.

“சந்தோசமா வீடு வாங்குங்க… கல்யாணத்துக்கு பிறகு வீடு வாடைகக்கு தானே விட முடியும்… சொந்த பந்தம் வர போக இருக்க வேற வீடு கொஞ்ச நாளைக்கு பார்த்துக்கிட்டா ஆச்சு.. சாமானெல்லாம் அடுக்கி எதுக்கு ரெண்டு செலவு… நீங்க வர்றப்போ இங்கயே தங்கிட்டா போச்சு…” என,

சுகுணா தயக்கமாய் குமரன் முகம் பார்க்க, அவரோ மகளின் முகம் பார்க்க, “அவர்ட்ட பேசிட்டு சொல்றேன்ப்பா…” என்றாள்.

என்ன இருந்தாலும் ஆச்சி, ஜெகாவின் ஆச்சி அல்லவா.. அவனுக்குத் தெரியாமல் இதில் முடிவு சொல்ல முடியாது இல்லையா.

மைதிலி இதனை ஜெகந்நாதனிடம் பேச, அவனுமே கூட அதைத்தான் சொன்னான்.

“வீடு வாங்கட்டும் நல்லதுதான். ஆனா கொஞ்ச நாள் இல்ல கொஞ்ச வருஷம் அவங்க சென்னைல இருக்கட்டும்.. அப்போதான் உனக்கும் போய் வர நல்லாருக்கும்.. இங்க கல்யாணத்துக்கு ரிலேடிவ்ஸ் வந்து தங்குறதுக்கு நம்ம ஏற்பாடு பண்ணிக்கலாம்..” என,  மைதிலி இதனை பெற்றவர்களிடம் சொல்ல,  குமரனும் சுகுணாவும் சரி என்று விட்டனர்.

குமரன் அப்போதே முடிவு செய்துவிட்டார். வாங்கும் புதிய வீட்டினை மகளுக்கு திருமணப் பரிசாகக் கொடுத்துவிட வேண்டும் என்று.

அடுத்தடுத்து திருமண வேலைகள் ஜரூராய் நடக்க, அன்று மைதிலி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்துகொண்டு இருக்கையில், வழியில் பாண்டியன் நிற்க, அருகே அவரின் காரும், காருக்குள்ள செல்வியும் இருக்க, தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டாள் மைதிலி.

கார் ரிப்பேர் போலும்..!

“மாமா…!” என்று தயங்கி அழைத்தபடி மைதிலி  ஸ்கூட்டி நிறுத்தி இறங்க,

“அட வா ம்மா…” எனும்போதே செல்வியும் காரினில் இருந்து இறங்கிவிட்டார்.

“வாம்மா… காலேஜ் முடிச்சு வர்றியா…” என,

“ஆமா அத்தை…” என்றவள் “என்னாச்சு?!” என்றாள்.

“ஒரு விசேசம்னு சிவசாகி போயிட்டு வந்தோம்.. ஊருக்குள்ள நுழையும்போது கார் ரிப்பேர்.. அதான் டிரைவர் பாக்குறாரு…” என்று செல்வி சொல்ல,

“ஓ..!” என்றவள் கிளம்புவதா எப்படி என்று யோசித்து நிற்க,

பாண்டியனோ “ஜெகா தென்னன்தோப்புல இருப்பான்.. அதான் கூப்பிடல.. இல்லன்னா இன்னொரு கார் கொண்டு வந்திருப்பான்…” என்றவர் என்ன யோசித்தாரோ “செல்வி நீ மருமக கூட போ.. நான் பசங்க யாரும் வந்தா பைக்ல வந்துடுறேன்…” என,

மைதிலி ‘என்னது?!’ என்பதுபோல் பார்க்க,

“ஆமால்ல…” என்ற செல்வி “என்னைய வீட்ல விடேன் ம்மா…” என்றார்.

“அ.. சரி.. சரிங்கத்தை…” என்றவள் ஸ்கூட்டியில் அமர, செல்வியும் அமர்ந்துகொண்டார்.

இது ஒரு புது அனுபவம் மருமகளாய் வரப்போகிறவளும் மாமியாராய் ஆகப்போகிறவும் ஒன்றாய் ஸ்கூட்டியில் செல்வது. ஜெகந்நாதனின் வீட்டிற்கு மெயின் ரோட்டில் இருந்து சின்ன சின்ன சந்துக்கள் வழியாய் தான் செல்ல வேண்டும்.

அதன்பின்னே தான் மற்றொரு பெரிய சந்து வந்து அவர்களின் வீடு இரண்டு சந்திற்கும் அடைத்து, பெரிதாய் இருக்கும்.  மைதிலிக்கு வழி தெரியும் தான். இருந்தாலும் செல்வியிடமும் கேட்டுக்கொள்ள, அந்த சிறிய சந்துக்களில் ஆட்களின் நடமாட்டமும் நிறைய இருக்க, மைதிலி ஸ்கூட்டியை கொஞ்சம் நிறுத்தி நிறுத்தி மெதுவாகத்தான் ஓட்டினாள்.

வழியில் சில பெண்களோ “என்ன மதினி, மருமக கூட..?” என்று விசாரிக்க,

செல்வி அதற்கெல்லாம் பதிலே சொல்லவில்லை சிரித்தே நகர்ந்துவிட்டார்.

“இப்படி ரோட்ல யார் என்ன பேசினாலும் பொதுவா பதில் சொல்லிட்டு நடந்துடனும் மைதிலி. இல்லையோ சிரிச்சிட்டு வந்திடனும். ரொம்ப தவிர்க்க முடியாத ஆட்கள்னா மட்டும் நின்னு பேசினா போதும்.. சரியா…” என, சரி என்று தலையை ஆட்டிக்கொண்டாள்.

    ஒருவழியாய் வீடு வந்து சேர, “உள்ளே விடு…” என்று செல்வி சொல்ல, வெளி கேட்டைத் தாண்டி மைதிலி ஸ்கூட்டியை உள்ளே விட, “உள்ள வாம்மா…” என்றபடி தான் இறங்கினார்  செல்வி.

“நானா?!” என்று மைதிலி கேட்க,

“ம்ம் இதிலென்ன இருக்கு… நான்லாம் கல்யாணத்துக்கு முன்ன இங்க வந்திருக்கேன்.. நீ வாழப் போற வீடு..” என,

“அது அத்தை…” என்று தயங்கினாள்.

வீட்டில் அப்பா அம்மாவிடம் சொல்லவில்லை இல்லையா?!

வழியில் பார்த்து கூட்டி வருவது வேறு. வீட்டிற்குள் வருவது வேறில்லையா?!

“உள்ள வா… உங்கம்மா கிட்ட நான் பேசுறேன்…” என, மைதிலி மனதில் ஒருவித சந்தோசத்தோடு தான் உள்ளே நுழைந்தாள்.

ஜெகா இருக்க மாட்டான், எப்படியும் ஒரு ஐந்தோ இல்லை பத்து நிமிடத்தில் கிளம்பிடலாம் என்று உள்ளே வர, செல்வி வேகமாய் முன்னே நுழைந்தவர் “அக்கா… நிரு…” என்றபடி அழைத்தவர்

“லலிதா ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா…” என, மைதிலி முதன்முதலில் அங்கே வருகிறாள் இல்லையா, அவளது படபடப்பு அவளுக்கு.

“வா வந்து உக்காரு…” என்றவர் சோபாவை காட்ட, வீட்டின் விஸ்தாரிப்பிலும், அங்கிருந்த பொருட்களின் பழமையிலும் அதன் மெருகிலும் மைதிலி கொஞ்சம் பார்வையை செலுத்தியபடி தான் அமர்ந்தாள்.

“இப்போவே இதெல்லாம் பார்த்து எப்படி சுத்தம் செய்றதுன்னு டென்சன் ஆகிடாத. எல்லாத்துக்கும் ஆள் தான். நம்ம சமையல் மட்டும் முன்ன நின்னு செய்யணும். வேலை வாங்குறது தான் இங்க எனக்கும் அக்காக்கும் வேலையே…” எனும்போதே, ரத்னா வந்துவிட, உடன் நிரஞ்சனியும் வர,

“அண்ணி…” என்று அவள் வந்து மைதிலி அருகே அமர்ந்துகொள்ள,

ரத்னா ‘என்ன இது?!’ என்று செல்வியைப் பார்த்தவர் “வா ம்மா…” என்றபடி அங்கே அமர,

“கார் ரிப்பேர்க்கா… அவர் அங்கத்தான் இருக்கார். மைதிலி காலேஜ் முடிஞ்சு வந்தா அந்தப்பக்கம். அப்படியே வந்துட்டேன் நான்…” என்றவர் “லலிதா…” என்று மீண்டும் குரல் கொடுக்க,

“ம்மா… எனக்கு சூடா காபி போடச் சொல்லுங்க…” என்றபடி ஜெகா மாடியில் இருந்து இறங்கி வர, இறங்கியவனின் பார்வையும் மைதிலி மீது தான் இருந்தது, அவனின் குரல் கேட்டு நிமிர்ந்தவளின் பார்வையும் அவன் மீது தான் இருந்தது.

இருவருக்குமே ஒரு திடுக்கிடல் தான்.

அட!  என்ற ஆச்சர்யமும் தான்.

“ஹேய் மைத்தி…!” என்றவனின் நடையில் வேகம் வர,

“என்ன திடீர்னு இப்படி சர்ப்ரைஸ்…” என்றான்.

மீண்டும் செல்வி நடந்ததைச் சொல்ல “ஹப்பாடி இனிமே எங்கம்மா என்னை பைக் எடுக்க சொல்லமாட்டாங்க…” என்றபடி அங்கேயே அமர,

செல்வியோ “பேசிட்டு இருங்க வர்றேன்…” என்று எழுந்து சமையல் அறைப்பக்கம் போக, அதற்குள் ஜூசும் வந்துவிட, ரத்னா தான் எடுத்து மைதிலி கையில் கொடுத்தார்.

செல்வி அடுத்த சில நொடிகளில் மகனுக்கு காபி கலக்கி வர, மைதிலி இதனை எல்லாம் கவனித்துத் தான் அமர்ந்திருந்தாள்.

“மைதிலி ரெண்டு நிமிஷம் பிரெஷ் ஆகிட்டு அப்படியே உங்க அம்மாக்கிட்ட பேசிட்டு வந்திடுறேன்…” என்று செல்வி செல்ல,

“அண்ணி பேசிட்டு இருங்க நான் வந்திடுறேன்…” என்று நிரஞ்சனியும் நகர்ந்துவிட, ரத்னாவும் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு எழுந்துகொண்டார்.

இவர்கள் மட்டுமே ஹாலில் இருக்க, “ஓய்..! என்ன இப்படி?” என்றான் ஜெகா சந்தோசமாய்.

“நீங்க இருக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்…” என,

“இப்போதான் வந்தேன்… குளிச்சிட்டு கீழ வந்தா நீ…” என்றவன் “வா வீடு சுத்தி பாக்கலாம்…” என, அவள் கையில் ஜூசோடும், இவன் கையில் காபியோடும் நடை எடுக்க, அடுத்த ஒருமணி நேரம் எப்படி போனது என்றே மைதிலிக்குத் தெரியவில்லை.

ஜெகா வீட்டில் ஒரு லுங்கியும், பனியனிலும் இருக்க “இப்படித்தான் இருப்பீங்களா?!” என்றாள்

“ஏன் நீதான் ஏகப்பட்ட கற்பனை எல்லாம் பண்ணி இருக்கியே.. என்னை எந்த காஸ்டியூம்ல பண்ண?” என,

“ம்ம்ம்… உங்களுக்கு காஸ்டியூம் வேற முக்கியமா?!” என்று மைதிலி சிரிக்க,

“அடிப்பாவி..?!” என்று வாயில் கை வைத்தவன்

“நீ இப்படி பேசினா நானும் பேசுவேன்.. அப்புறம் ச்சி அப்படின்னு ராகம் பாடுவ நீ.. டெய்லி போன்ல இதானே பண்ற…” என,

“சரி சரி… இந்த ஷார்ட்ஸ் டி ஷர்ட் இப்படி…” என்றவள் “இதுவும் நல்லாத்தான் இருக்கு…” என, அடுத்து அவனின் அறை வர,

“இதான் என்னோட ரூம். இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம ரூம்…” என்றவன் “இல்லல்ல… இது எப்போவோ நம்மளோட ரூம் ஆகிடுச்சு…” என்றவன் “உள்ள வா…” என்றழைக்க,

“ம்ம்ஹூம்…” என்றாள்.

“எதுக்கு?!”

“அது ஒரு த்ரில் இருக்கும் முதல் தடவ நான் இந்த ரூம்குள்ள வர்றப்போ. அது நான் உணரனும்.. இப்போவே வந்துட்டா அப்போ ஒன்னும் தெரியாம போயிட்டா?!” என,

“யம்மாடி…!” என்று நெஞ்சில் கை வைத்தவன் “ஆனாலும் நீ ரொம்ப யோசிக்கிற…” என்றபடி அவளை தோட்டம் பக்கம் அழைத்துச் செல்ல, நேரம் போனது தெரியவில்லை இருவருக்கும்.                             

   

            

 

 

    

                                       

             

                                      

Advertisement