Advertisement

                                                               இதயத்திலே ஒரு நினைவு – 23

          “காமதேனு பால்பண்ணை…” ஜெகந்நாதன் வழக்காமான அவனின் பாவனையில் சொல்லிக்கொண்டு இருக்க,

“டேய் வந்ததுல இருந்து நாலு தடவ இதையே சொல்லிட்டு இருக்க நீ…” என்றான் வாசு.

“சும்மாடா…” என்றவன் புன்னகை முகமாய் தான் இருந்தான்.

“ஒரே சிரிப்பு தான் உனக்கு. சரி சரி என்ன திடீர்னு இங்க விஜயம். இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயம் வச்சுக்கிட்டு..”

“பின்ன உன்னை நேர்ல பார்த்து கூப்பிட வேணாமா?” என்ற ஜெகா அலைபேசியை எடுத்து “கிளம்பிட்டியா மைத்தி…” என, வாசு ‘அதானே பார்த்தேன்…’ என்பது போல் பார்த்தான்.

“வந்துட்டே இருக்கேன் …” என்று மைதிலி சொல்லிவிட்டு வைக்க,

“என்னடா என்னை கூப்பிட வந்தியா இல்ல வேற ப்ளான் பண்ணி வந்தியா நீ?” என்று வாசு கேட்க,

“அட ஏன் டா நீ வேற.. மைத்தி ஒரே அடம் மீனாட்சி அம்மன் கோவில் கூப்பிட்டு போகச் சொல்லி. அங்க இருந்து ஒண்ணா கிளம்பி வந்தோம் வை, அவ்வளோதான். ஆளாளுக்கு ஒன்னு பேசுவாங்க.. இப்போவே வீட்ல நிறைய ஆளுங்க வந்தாச்சு…” என்ற ஜெகா நேரத்தைப் பார்த்தான்.

இந்த பத்துநாட்களும் எப்படி போனது என்றே  தெரியவில்லை அவனுக்கு. அத்துனை வேகமாய் கடந்திருந்தது. ஜெகாவின் வீட்டில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. அனைவரும் ஒருபக்கம் என்றால் ரத்னா மட்டும் தனி.

எல்லாவற்றிற்கும் அவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிப்போனது.

செல்வி ஒருகட்டத்தில் வெறுத்தே போனார்.

பாண்டியனோ “இப்போதைக்கு எதுவும் பேசாத முதல்ல நல்லபடியா ரெண்டு கல்யாணமும் முடியட்டும்…” என்றவர், அவர்கள் பக்கத்து ஆட்களில் கொஞ்சம் பெரிய தலைகளை சந்திந்து பேச, ஜெகாவும் கூட அவரோடு சென்றிருந்தான்.

“நல்லதுதானே… ஏற்கனவே முன்ன குறிச்ச முஹூர்த்தம்ல கல்யாணம் வச்சுக்கிட்டா நல்லதுதானே…” என்றனர்.

“அதுக்கில்ல.. நந்தினி பொண்ணு வீட்ல இருந்து எதுவும் பிரச்சனை பண்ணா என்ன செய்றது?” என்றார் பாண்டியன் தயங்கி.

இன்னும் நிரஞ்சனி ரமேஷ் திருமணம் நடந்திருக்கவில்லையே.. அந்த தயக்கம் அவருக்கு.

“அப்படி ஒன்னு நடந்தா நாங்கெல்லாம் எதுக்கிருக்கோம் பாண்டி. எங்களுக்கு ஒண்ணுன்னா நீ வந்து நிக்கிறது இல்லையா.. தைரியமா நல்லது செயப்பா…” என்று தைரியம் சொல்லி அனுப்ப,

முன்னரே, ஜெகந்நாதான் நந்தினிக்கு குறித்திருந்த அதே திருமண தேதியிலேயே மைதிலி ஜெகந்நாதன் திருமணம் முடிவாகி இருந்தது. நிச்சயத்தன்று திருமணப் பத்திரிக்கை எழுதலாம் என்று இரு வீட்டாரும் முடிவு செய்ய, பாண்டியன் அனைத்து சங்கதிகளையும் ரமேஷின் அப்பாவை கலக்காது செய்வதில்லை.

என்ன செய்வது சில நேரங்களில் கொஞ்சம் அனைவரையும் சரிகட்டி அனுசரித்துத் தான் போகவேண்டி உள்ளது. இந்த விசயத்தில் ரமேஷ் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தான். ஒருமுறை ஜெகந்நாதனை நேரில் கூட வந்து பார்த்தான்.

“நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க மச்சான். எங்க சித்தப்பா அப்படித்தான். மாத்த முடியாது. நந்தினிய காலேஜ்ல சேர்க்க போயிருக்காங்க.. எந்த பிரச்சனையும் வராது. நல்லபடியா எல்லாம் நடக்கும்…” என்று வந்து தைரியம் சொல்லிச் செல்ல, ஜெகாவிற்கு அப்போது தான் நிம்மதியாய் மூச்சு விட முடிந்தது.

இங்கே இப்படியெனில் அங்கே மைதிலி வீட்டிலோ, திடீரென்று திருமணம்  பேசி முடித்திருக்கவும், அவர்களின் சொந்தத்தில் ஆளாளுக்கு ஒன்று பேச, குமரன் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

“மைதிலிக்கு பிடிச்சிருந்தது. பார்த்து பேசினதுல எங்களுக்கும் திருப்தி. அதுனால முடிச்சிட்டோம்…” என்று.

இதற்குமேல் யார் என்ன சொல்ல முடியும். வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசு ஊர் உலகம் தானே இது.

அனைத்திற்கும் நடுவில் ஜெகாவிற்கும், மைதிலிக்குமான பொழுது ரம்யமாய் நகர்ந்தது. வழக்கம் போல அவள் கல்லூரிக்குச் சென்று வர, குமரன் மகளுக்கு புதிதாய் ஒரு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்தார்.

“என்னப்பா திடீர்னு…?” என,

“இங்கதான் இருக்கப்போற.. உனக்குன்னு சொந்தமா வண்டி இருந்தா நல்லதுதானே…” என, ஸ்கூட்டியில் தான் கல்லூரிக்குச் சென்று வந்தாள்.

    எப்படியும் இரண்டு நாளுக்கு ஒருமுறையாவது ஆச்சியை பார்க்க வரும் சாக்கில் அங்கே ஜெகா வந்துவிட, அதுவும் சரியாய் அவள் கல்லூரி விட்டு வீட்டிற்கு வரும் நேரம் பார்த்து தான் வருவான். தனியே இவர்கள் தான் வேறெங்கு சந்திப்பது. உள்ளூரில் இருப்பவர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்னை. இப்போதே ஊருக்குள் அரசல் புரசலாய் பேச்சு வெளிவரத் தொடங்கி இருந்தது.

மைதிலியை கல்லூரியில் கூட சில ஆசிரியைகள் கேட்டார்கள் “எங்க ஊருக்கே மருமகளா வரப்போற போல…” என்று.

அனைத்தையும் சிரித்த முகத்துடனே கடந்து வந்த மைதிலிக்கு ஏனோ ஜெகந்நாதனோடு மீனாட்சி அம்மனை ஒருமுறை தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும் என்று அத்துனை ஆசை கொண்டது மனம்.

ஜெகந்நாதன் கூட யோசித்தான் தான். இன்னும் இரண்டே நாளில்  நிச்சயம் வைத்துக்கொண்டு இன்று போவது எப்படி என்று. ஆனால் மைதிலி பிடிவாதமாய் சொல்லிவிட்டாள்.

“இதுவர நமக்கு வெளிய போற வாய்ப்பே கிடைக்கல.. லவ் தான் ஒழுங்கா பண்ணல.. அட்லீஸ்ட் நிச்சயம் ஆகறதுக்கு முன்னவாது என்னை வெளிய கூட்டிட்டு போங்க…” என,

“ஆனாலும் உனக்கு பிடிவாதம் ஜாஸ்தி மைத்தி…” என்று செல்லமாய் அலுத்துக்கொண்டான் ஜெகந்நாதன்.

“உங்கள விடவா?!”

“நானா?!”

“ஆமா.. சரி சரி பேச்சு மாத்தாதீங்க… கூட்டிட்டு போக முடியுமா முடியாதா?”

“ஹ்ம்ம் சரி நாளைக்கு போலாம்…” என்று சொல்லி இதோ இப்போது அவளுக்காக காத்திருக்க, மைதிலியும் சொன்னது போலவே வந்துவிட்டாள்.

அவளுக்கு வாசுவை நேரில் சென்று பார்த்து ஒருமுறை பேசவேண்டும் என்றும் இருந்தது. அதனாலே ஜெகந்நாதன் இங்கே வந்திருக்க, மைதிலியும் அங்கேயே வந்துவிட்டாள்.

“வாசுண்ணா எப்படி இருக்கீங்க?” என்றபடி வந்த மைதிலியை பார்த்து சந்தோசமே வாசுவிற்கு.

“வாம்மா வா.. நல்லாருக்கேன்… ஒருவழியா நல்ல முடிவுக்கு வந்துட்டீங்க ரெண்டு பேரும்…” என்ற வாசு

“முதன்முதல்ல வந்திருக்க, ஜெகா வீட்டுக்கு கூட்டிட்டு வா…” என்று எழுந்து கொள்ள, மைதிலி ஜெகந்நாதன் முகம் பார்த்தாள்.

“அட… பின்னாடி தான் வீடு… வாங்க…” என, ஜெகந்நாதன் மைதிலியை என்னவென்று கேட்பதுபோல் பார்க்க, மைதிலி சம்மதமாய் தலையசைக்கவும் இருவருமே எழுந்து வந்தனர்.

வாசுவிற்கு அத்துனை சந்தோசம். இருவரின் காதலும் கைகூடும் என்பது அவன் கனவில் கூட நினைக்கவில்லை. இருந்தாலும் தன் நண்பன் சந்தோசமாய் வாழவேண்டும் என்று நினைத்தவனுக்கு, அவன் விரும்பிய வாழ்வே அவனுக்கு அமைகிறது என்கையில் அப்படியொரு நிம்மதியாய் இருந்தது.

ஜெகாவிற்கும் மைதிலிக்கும் கூட சந்தோசம் தான். அதே மகிழ்ச்சியோடு தான் தங்களின் நிச்சயத்திற்கு, வாசுவின் வீட்டில் அழைப்பு வைத்துவிட்டு வந்தனர் இருவரும். மைதிலி அங்கிருந்து இங்கு வருவதற்கு ஜெகா கால் டாக்சி அமர்த்தியிருக்க, இங்கே வந்து இருவரும் பின் ஜெகாவின் காரில் கோவில் செல்வதாய் ஏற்பாடு.

அதுபோலவே இருவரும் கிளம்ப, ஜெகாதான் காரை ஓட்டினான்.

மைதிலியோ “திருப்பரங்குன்றம் போயிட்டு அப்படியே மீனாட்சி அம்மன் கோவில் போவோமா?!” என, ஜெகா முறைக்க,

“என்னாச்சு..?!” என்றாள்.

“இத்தனை வருஷத்துல இப்போதான் முதன்முதலா வெளிய வர்றோம்.. ஒரு சினிமா, ஷாப்பிங் மால், இல்ல வேறெதுவும் போலாம் அப்படின்னு சொல்றத விட்டுட்டு, கோவில் கோவிலா கூட்டிட்டு சுத்த சொல்ற நீ…”

“ஹா…! அதுக்கு நான் என்ன செய்றது?! நான் அப்போ இங்க இருக்கும்போது இங்கெல்லாம் உங்களோட போகணும்னு ஆசை.. மதுரைல இவ்வளோ மாற்றங்கள் வரும்னு நான் என்ன நினைச்சேன்…” என்றவள்

“உங்களோட இங்க எல்லாம் வந்து சாமி கும்பிடனும்.. நீங்க எனக்கு பொட்டு வச்சு விடனும்… புதுமண்டபம்ல கண்ணாடி வளையல் வாங்கித் தரனும்… இப்படியெல்லாம் ஆசைப்படுவேன். சில நேரம் அதுவே நடக்குறது போல கற்பனை கூட மனசுக்குள்ள ஓடும் தெரியுமா…” என்றவளின் குரலில் அப்படியொரு காதல்.

அது அவனுக்குப் புரியாதா என்ன?!

மைதிலியின் தோள் மீது கை போட்டு தன் மீது சாய்த்துக்கொண்டான்.

“வீட்டுக்கு எப்போ போகணும்னு சொல்லிட்டு வந்த?”

“அம்மாக்கிட்ட பார்லர் போறேன்னு சொல்லிட்டுத் தான் வந்தேன். சோ கொஞ்சம் லேட்டானாலும் ஒண்ணுமில்ல.. ஆனாலும் சொல்லிட்டேன் உங்களோட தான் போறேன்னு…” என,

“அடிப்பாவி அப்போ நான் தான் பொய் சொல்லிட்டு வந்திருக்கேனா?!”

“உங்களை யார் பொய் சொல்ல சொன்னா?!”

“அது சரி…!” என்று தலையை ஆட்டியவன் அடுத்து செல்விக்குத் தான் அழைத்தான்.

“ம்மா இங்க வாசுவ பார்க்க வந்திருந்தேன்.. கிளம்பி வந்துட்டு இருக்கப்போ மைதிலி இங்க ஏதோ வேலையா வந்திருப்பா போல… அப்படியே கோவில் போயிட்டு வர்றோம்…” என, செல்வியும் சரி என்று விட, மைதிலிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவன் தோளில் வாகாய் சாய்ந்து இருந்தவள், இருக்கையில் சாய்ந்து அமர்ந்து சிரிக்க,

“இப்போ நீ வந்தது எப்படியும் ஆச்சிக்குத் தெரியவரும். அப்போ அம்மாக்கிட்ட சொல்வாங்க. நான் சொல்லாம வந்தது அம்மாக்கு கஷ்டமா போயிடும்…” என்றான் ஜெகா.

“நிஜம்தான். அவங்க இவ்வளோ நடந்தும் கூட நம்மை புரிஞ்சு நடந்துக்கிட்டாங்க இல்லையா…” என்றவள் மீண்டும் அவளாகவே அவன் மீது சாய, அதற்குள் கோவிலும் வந்துவிட்டது.

அவள் சொன்னதுபோல திருப்பரங்குன்றம் வந்து, அருள்தரும் முருகனை வேண்டிவிட்டு, அப்படியே மீனாட்சி அம்மன் கோவில் செல்ல, சரியான வெயில், அதற்குமேல் கூட்டம் வேறு.

“ஆமா பார்லர் வேற போகணும் சொன்னியே.. அதெல்லாம் தேவையா?!” என்று கேட்டபடி, சிறப்பு தரிசனத்திற்கு ஜெகா ஏற்பாடு செய்ய,

“பின்ன, தரிசனம் முடிச்சிட்டு, ஹோட்டல் போயிட்டு, அப்படியே மதியம் மேல பார்லர் போயிட்டு…” என்று மைதிலி நீட்டி சொல்ல,

“அடியேய்…!” என்று அலறித்தான் விட்டான் ஜெகந்நாதன்.

“என்ன?!”

“உன்னோட பார்லர் எல்லாம் என்னால வர முடியாது…”

“அட உங்களுக்கும் சேர்த்து தான் அப்பாயின்மென்ட் ப்பா… வந்து ஒரு பேசியல் போடுங்க… நிச்சயத்தன்னிக்கு ஜொலிப்பீங்க…” என்றாள் சிரித்து.

“மைத்தி விளையாடாத.. எனக்கு இதெல்லாம் பழக்கமே இல்லை…” என்றான்.

ஜெகந்நாதன் நிஜமாகவே டென்சன் ஆகிவிட்டான் போல. அது அவனின் முகத்திலேயே தெரிய

“ஹா ஹா… பயந்துட்டீங்களா?! சும்மா சொன்னேன்…” என்றவள் “ஹோட்டல் வரைக்கும் தான் நீங்க…” என,

“அப்புறம் நீ எப்படி வீட்டுக்கு போறது?” என்றான் வேகமாய்.

“எனக்கு பார்லர்ல மூணு மணி நேரத்துக்கு மேல ஆகும்.. சோ வர்றப்போ கால் டாக்ஸி…” எனும்போதே,

“நீ முடிச்சிட்டு அப்போ கால் பண்ணு. நானே வந்து கூப்பிட்டு போறேன்…” என்று சொல்லி முடித்துவிட்டான் ஜெகா.

இப்படி இவர்கள் பேசி பேசியே, சாமி தரிசனம் செய்யப் போய், நல்லதொரு முறையில் மீனாட்சி அம்மனையும், சுந்தரேஸ்வரரையும் பார்த்து வேண்டிவிட்டு வர, மைதிலிக்கு இப்போதுதான் மனது திருப்தியாய் இருந்தது.

ஜெகந்நாதனோடு மைதிலி பேசியபடி வர, ஜெகாவோ, தன் கையில் இருந்த குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியில் சட்டென்று வைத்துவிட, மைதிலி ஒருநொடி நின்றுதான் விட்டாள்.

பார்வையில் அப்படியொரு திகைப்பு..!

உடலில் அப்படியொரு சிலிர்ப்பு…!

கற்பனையில் கண்டுகளித்த காட்சி தான் இது… இன்று அது நிஜத்தில் நடக்க, நிச்சயமாய் மைதிலியால் ஒருநொடி எதையுமே உணரமுடியவில்லை. திகைத்துத் தான் பார்த்தாள்.

“என்ன மைத்தி…?!” என்றவன் அவளின் கரம் பற்றி அழைத்து வர, சட்டென்று மைதிலிக்கு கண்கள் கலங்கிப்போனது.

“ஒண்ணுமில்ல…” என்று தலையை ஆட்டியவள், யாரும் அறியாபடி கண்களை குனிந்து துடைத்துக்கொள்ள,

“அடி பைத்தியமே….!” என்று செல்லமாய் ஜெகா கடிந்து கொள்ள,

“ஆமா உங்கமேல…” என்றாள் யோசிக்காது.

“நீ இன்னிக்கு என்னை ஒரு வழி பண்ண போற…” என்று சொல்லியபடி, ஜெகா ஒரு இடம் பார்த்து அமர, மைதிலியும் அங்கேயே அவனின் அருகில் அமர்ந்துகொள்ள,

ஜெகந்நாதன் “எனக்கு இப்போ எப்படி இருக்குத் தெரியுமா?” என்றான் கரகரப்பான குரலில்.

அவனுக்குமே கண்கள் லேசாய் சிவந்திருக்க, “இப்போ நீங்க என்மேல பைத்தியமா?!” என்றாள் மைதிலி புன்னகையோடு.

“ரொம்பவே…! பைத்தியம்… மயக்கம்… பித்தம்… இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்…” என, மைதிலிக்கு வார்த்தைகளே வரவில்லை.

   

      

     

 

      

 

        

 

        

 

Advertisement