Advertisement

                        இதயத்திலே ஒரு நினைவு – 22

மைதிலிக்கு வந்திருக்கும் புடவை நகைகளில் எதை அணிவது என்று குழப்பம் என்றால், சுகுணாவோ கொஞ்சம் வாயடைத்துப் போய்விட்டார். மைதிலியை இப்படி கவனிப்பார்கள் என்று அவர் நினைக்கவில்லை.

மகளின் முகத்தை அமைதியாய் பார்க்க, கமலா ஆச்சியோ செல்விக்கு அழைத்து “முடிவு பண்ணி தட்டு மாத்தி நிச்சயம் பண்றதுக்கு முன்னாடி உங்க வீட்டு புடவை நகை எல்லாம் அவ எப்படி போட்டுக்குவா…?” என்று கேட்க,

“ம்மா நான் சொல்லி பார்த்துட்டேன்.. உங்க பேரன் தான் பிடிவாதமா குடுத்து அனுப்பினான்..” என்றார் செல்வி.

“இதெல்லாம் ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிடு…” என்று ஆச்சி முடிவாய் பேசியவர், போனையும் வைத்துவிட்டு

“மைதிலி நான் கொண்டு வந்தது ரேகா கொண்டு வந்தது இதுல எது வேணுமோ போட்டுக்கோ… அங்க இருந்து வந்தது அப்படியே இருக்கட்டும். எதுவும் முறைன்னு ஒன்னு இருக்கு…” என,

அவர் வார்த்தையை மீறி எதுவும் செய்ய முடியாது இல்லையா, அதனால் தான் போட்டிருக்கும் ரவிக்கைக்கு எந்த சேலை சரியாக வரும் என்று பார்க்க, ரேகா கொண்டு வந்திருந்த சேலை பொருந்தி வந்தது.

“பாட்டி என்னோட ப்ளவ்ஸ்க்கு இந்த சேலை சரியா வரும்…” என்று மைதிலி சொல்ல,

“அப்போ சரி கட்டிக்கோ.. நகை?!” என்றார் அடுத்து.

“நீங்க கொண்டு வந்தது போட்டுக்கிறேன்…” என,

“கெட்டிக்காரி நீ…” என்றவர் “ரேகா மைதிலிக்கு உதவி செய்…” என்று எழுந்துகொள்ள,

“ம்மா இங்கயே இருங்க…” என்றார் சுகுணா.

“இருக்கத்தான் செய்யணும். இன்னொரு தடவ கீழ இறங்கி ஏற முடியாது. இவங்க ரெடி ஆகட்டும் நம்ம ஹால்ல இருப்போம்…” என்றவர் நடக்க, சுகுணா மீண்டும் ஒருமுறை மகளின் முகம் பார்த்துவிட்டு நடந்தார்.

இருவரும் சென்றதுமே ரேகா வந்து “மைத்தி…” என்று கட்டிக்கொள்ள, மைதிலிக்கும் பெரும் சந்தோசம்.

“எப்படியோ மைத்தி… எல்லாம் நல்லபடியா நடக்கப் போகுது…” என்று ரேகா சொல்ல,

“நான் உனக்குத் தேங்க்ஸ் சொல்லித்தான் ஆகணும்.. ஆனா நீ திட்டுவ…” என்றாள் மைதிலி மனதார.

“போ டி லூசு…”

“நீ மட்டும் ஒவ்வொரு தடவையும் என்னை பேசி பேசி நிறுத்தி வைக்கலன்னா எப்போவோ நானும் கிளம்பிப் போயிருப்பேன் ரேகா. நீ இங்க ஆச்சிக்கிட்ட பேசி எவ்வளோ பண்ணிருக்க…”

“அடியே… இதேது எனக்கு ஒண்ணுன்னா நீ எதுவும் செய்ய மாட்டியா என்ன?”

இப்படியே பேசியபடி மைதிலியை ரேகா தயார் செய்ய “டி ஆச்சி நிறைய நகை கொண்டு வந்திருக்காங்க. இவ்வளோ வேணாம்…” என்றாள் மைதிலி.

“எது இது நிறையவா.. அடி போ டி.. இதெல்லாம் கம்மி.. நீ பேசாம இரு….” என்ற ரேகா, எடுத்து எடுத்து அவளுக்கு அணிவித்து விட,

“இங்க பாரு எனக்கு இப்படி எல்லாம் போட்டா பிடிக்காது…” என்றாள் மைதிலி.

“அதுசரி.. நாகமலை புதுக்கோட்டை பாண்டியன் மருமகளுக்கு நகை நிறைய போட பிடிக்காதுன்னு சொன்னா ஊரே சிரிக்கும்.. பேசாம இரு…” என்றவள் மைதிலியை அழகு பார்க்க,

“இப்படி மட்டும் என் ஸ்டூடன்ஸ் பார்த்தா கண்டிப்பா கேலி செய்வாங்க…” என்றாள் மைதிலி.

“ஜெகாண்ணா வீட்ல அவங்கப்பா பெரியம்மா எல்லாம் கொஞ்சம் இப்படித்தான் எதிர்பார்ப்பாங்க.. உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ கொஞ்ச நாளைக்கு நீ அவங்க சொல்றத கேட்டு நட.. அப்புறம் ஜெகாண்ணாவே போக போக சரி பண்ணிடும்…” என, மைதிலி சரி என்று கேட்டுக்கொண்டாள்.

அங்கே ஜெகாவின் வீட்டிலோ ரத்னா முகத்தைத் திருப்பிக்கொண்டு இருந்தார். செல்விக்கு கொஞ்சம் எரிச்சலாய் தான் வந்தது. இருந்தும் என்ன செய்ய,

“க்கா உங்களுக்கே நடந்தது எல்லாம் தெரியும் தான…” என,

“என்னவோ செல்வி எனக்கு இதுல பெருசா ஈடுபாடு இல்லை. உடனே இப்போ ஜெகாக்கு பேசி முடிக்கனுமா? கொஞ்சம் இடைவெளி விட்டா என்ன?” என்றார்..

“என்னக்கா பேசுறீங்க.. அந்த பொண்ண அப்போ அம்போன்னு விட முடியுமா.. நம்ம போய் ஒரு உறுதி குடுக்கவேணாமா?” என்றார் செல்வியும் பதிலுக்கு.

“என்னவோ… அவங்கவங்களுக்கு இருக்கிறவங்க இருந்தா தான் எதுவும் சரியா நடக்கும் போல…” என்று முனங்க,

நிரஞ்சனி தான் “சித்தி நீங்க எதுவும் நினைக்காதீங்க…” என்றாள் ஆறுதலாய்.

என்னதான் நெருங்கிய உறவுகளாய் இருந்தாலும், ஒரே வீட்டினில் வசித்தாலும், சில நேரங்களில் ஏற்படும் விரிசல்களை தவிர்க்கவே முடியாது. அது இயற்கையும் கூட.

அப்படித்தான் ஆகியது ரத்னா மனதிலும்…!

பாண்டியன் எல்லாவற்றையும் கவனித்தவர் செல்வியிடம் “நீ பதிலுக்கு பதில் பேசாத செல்வி அண்ணிக்கிட்ட. கொஞ்ச நாள் அமைதியா இரு. எல்லாம் சரியா போகும்…” என,

“பார்க்கலாம்…” என்றுவிட்டு போனார் செல்வியும்.

இப்படியே பேசி பேசி அவர்கள் தயாராகி வர, பாண்டியனுக்கு மைதிலியை  பார்த்ததும் திருப்தியாய் இருந்தது. தன் மகனுக்கு ஏற்ற ஜோடிதான் என்று எண்ணிக்கொண்டார். செல்வி தான் ஏற்கனவே பார்த்திருக்கிறாரே, இருந்தும் கொஞ்சம் அலங்காரத்தில் பார்க்க, மைதிலி இன்னும் அழகியாய் அவருக்குத் தெரிந்தாள்.

  நிரஞ்சனிக்கும்  மைதிலியை பார்த்ததுமே பிடித்து இருந்தது. ரத்னா தான் ஒரு எடை  போடும் பார்வையோடு அமர்ந்திருந்தார். மைதிலி ஆச்சியின் நகைகளை அணிந்திருந்தது கண்டு ரத்னாவிற்கு ஒருவித கிண்டல் தான்.

“என்ன சித்தி இப்போவே உங்க நகை எல்லாம் கொடுத்துட்டீங்க போல…” என்று நக்கலாய் தான் கேட்டார்.

“எனக்கு ஜெகா வேற மைதிலி வேற இல்லை…” என்றார் ஆச்சி ஒரே பேச்சாய்.

நகை பற்றிய பேச்சு என்றதும், மைதிலிக்கும் சரி அவளின் பெற்றோர்களுக்கும் சரி முகம் வாடிட, செல்வி அதனைக் கண்டவர் “மைதிலிக்கு நகையே தேவை இல்லை. சாதாரணமா இருந்தாளே நல்லாத்தான் இருப்பா. நான் தான் பார்த்தேனே…” என, அப்போதும் கூட மைதிலி முகம் தெளியவில்லை.

நிரஞ்சனி, ரத்தனாவை முறைத்தவள் ஜெகாவிற்கு ஒரு குறுஞ்செய்தி தட்டிவிட்டாள், சீக்கிரம் வா என்று.

ஜெகந்நாதன் தங்கையிடம் சொல்லியே அனுப்பியிருந்தான். எதுவாக இருந்தாலும் எனக்கு அவ்வப்போது தகவல் கொடு என்று.

நிரஞ்சனியிடம் இருந்து மெசேஜ் என்றதுமே ஜெகா அடுத்து வேறெதுவும் யோசிக்கவில்லை கிளம்பிவிட்டான். இன்னும் அங்கே பேச்சுக்கள் கூட ஆரம்பம் ஆகவில்லை. ரத்னா அதற்குள் பேசியிருக்க, குமரனோ மகளிடம் “போ ம்மா போய் கேசுவல் மாத்திக்கோ…” என்றுவிட்டார்.

மைதிலிக்குமே இதற்குமேல் சேலை நகை என்று அணிந்து அமர்ந்திருக்க விருப்பமில்லை. என்ன ஜெகந்நாதன் வந்து அவளை  இப்படி ஒருமுறை பார்த்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பாள். குமரன் வேறு இப்படி சொல்ல, கொஞ்சம் மைதிலிக்கு தவிப்பாய் தான் இருந்தது.

ஆச்சியோ செல்வியோ கூட ரத்னா இப்படி பேசியபிறகு மைதிலியை இப்படியே இரு என்று சொல்ல முடியவில்லை. நிரஞ்சனிதான் “சித்தி அண்ணா கிளம்பிட்டாங்களாம்…” என்று சொல்ல,

“இதுக்கு ஜெகா நம்மளோடவே வந்திருக்கலாம்…” என்றார் ரத்னா அப்போதும் நக்கலாய்.

மைதிலிக்கு ஜெகா வருகிறான் என்றதும் தான் பெரும் தைரியமே. எப்படியும் சிறிதொரு நிமிடத்தில் வந்திடுவான் என்பதால் அவள் அப்படியே அமர்ந்திருக்க சுகுணாவோ “மைதிலி அப்பா சொன்னார்ல…” என,

“ம்மா…” என்றாள் பாவமாய்.

மகளின் மனது அவருக்குப் புரியாதா என்ன?

பாண்டியன் தான் ஆரம்பித்தார் “நீங்க என்ன சொல்றீங்க? பசங்க முடிவு பண்ணிட்டாங்க. அதை நல்லபடியா முடிச்சு வைக்கிறது நம்ம கடமை…” என,

குமரனோ “எத்தனை சீக்கிரம் கல்யாணம் முடிக்கனுமோ அத்தனை சீக்கிரம் முடிச்சிட்டா நல்லதுன்னு எங்களோட கறுத்து…” என்று அவரும் வெளிப்படையாய் சொல்ல,

“உடனேவா?!” என்றார் பாண்டியன் சற்று அதிர்ச்சியாய்.

செல்வி முதல் நாள் ஆச்சி பேசியது எதையும் கணவரிடம் சொல்லியிருக்கவில்லை. எதுவும் நேருக்கு நேர் பேசி முடிவு செய்துகொள்வோம் என்று சொல்லாமல் விட, பாண்டியனுக்கு இது அதிர்ச்சி தான். ஆனால் செல்வி சாதாரணமாய் இருக்க,  

“ஆமாங்க… மைதிலி சென்னைல இருந்து இங்க வந்ததுக்கே எங்க ஆளுங்க எல்லாம் நிறைய கேள்வி கேட்டாங்க.. அவளுக்கு வரனும் வந்தபடி தான் இருக்கு.. நாங்க ஒரு அளவுக்கு மேல லேட் பண்ண முடியாது இல்லையா?!” என்று குமரன் சொல்ல, பெண்ணை பெற்ற அப்பாவாய் அவரின் காரணங்கள் சரியானதே.

பாண்டியன் உடனே எந்தவொரு பதிலும் சொல்லாது மனைவி முகம் பார்க்க, குமரன் மேலும் பேசினார்.

“உங்க சூழ்நிலை எங்களுக்கும் புரியுது.. ஆனா யோசிச்சுப் பார்த்தா இதுதான் சரின்னு எங்களுக்குத் தோணுது…” என,

“ஹ்ம்ம்… எங்க பக்கம் இருக்க பெரிய மனுசங்க சிலரை கலந்து பேசிட்டுத் தான் நான் இது முடிவு சொல்ல முடியும்… ஏன்னா இப்போதான் ஒரு கல்யாணம் வேணாம்னு நிறுத்தி இருக்கோம்.. கொஞ்சம் சிக்கல் ஆகிட்டா பிரச்சனை தானே…” என்றார் பாண்டியனும்.

“நிஜம்… நல்லபடியா கலந்து பேசிட்டு சொல்லுங்க…” என்று குமரன் சொல்ல,

“வர்ற முஹூர்தத்துல நிச்சயம் பண்ணிக்கலாம். நிச்சயம் பண்றப்போ கல்யாணம் பத்தி பேசி முடிவு பண்ணிடலாம்…” என்றார் பாண்டியன்.

அவரால் திடமாய் சரி என்று உடனே சொல்ல முடியவில்லை. குமரனும் அதிகம் அழுத்தம் கொடுப்பது போல் பேசவில்லை.  

செல்வி சுகுணாவோடு ஏதோ பேச, ரத்னா சும்மா இருக்காது “எங்க பொண்ணுக்கு நாங்க நூறு சவரன் கிட்ட போடுறோம்…” என்று பேச,

சுகுணாவோ “எங்கட்ட இருக்கிறது எல்லாமே மைதிலிக்குத் தான்…” என்றார் புன்னகை மாறாது.

மைதிலிக்கு இந்த பேச்சுக்கள் எல்லாம் ஒருவித திடுக்கிடல் தந்தது. இதனால் எதுவும் வம்புகள் வருமோ என்று நினைக்க, அதற்குள் ஜெகந்நாதனும் அங்கே வந்துவிட்டான். வெள்ளை வேட்டி சட்டையில் வந்திருந்தான். பார்க்கவே ஆள் அத்தனை அம்சமாய் இருக்க, குமரன் அப்போதுதானே நேரில் பார்க்கிறார், மகளுக்கு சரியானதொரு ஜோடியாய் இருக்கும் என்று எண்ணிக்கொள்ள, பாண்டியன் தான் அறிமுகம் செய்து வைத்தார்.

ஜெகந்நாதனின் கண்கள் மைதிலியைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தது. அத்தனை நேரம் ஒருவித தவிப்பில் இருந்தவளுக்கு இப்போது அவனைக் கண்டதுமே அப்படியொரு ஆசுவாசம்.

‘நான் பார்த்துக்கொள்கிறேன்..’ என்பது போல ஜெகா இமைகளை மூடித் திறக்க, மைதிலி மெல்லமாய் அவனைக் கண்டு சிரித்தாள்.

“ஹ்ம்ம் இப்போத்தான் பொண்ணுக்கு சிரிப்பே வருது…” என்று ரத்னா சொல்ல,

“பின்ன இத்தனை வருசக் காத்திருப்பு இல்லையா?!” என்றார் ஆச்சி.

அதற்குள் சுகுணாவும் ரேகாவும் அனைவருக்கும் காபி, பலகாரம் எல்லாம் எடுத்து கொண்டு வந்து வைக்க, செல்வியோ “நீ போ ம்மா போய் ட்ரெஸ் மாத்திட்டு வர்றதுன்னா வா…” என,

“ம்ம்…” என்று மைதிலி எழுந்து கொள்ள,

“நான் கொஞ்சம் மைதிலியோட பேசணுமே…” என்றான் ஜெகந்நாதன் குமரனைப் பார்த்து.

பேசணுமா?! என்று தான் அனைவரும் பார்த்தனர்.

“இதுவர நாங்க மனசு விட்டு பேசினது ரொம்ப ரொம்ப கம்மி. இன்னிக்கு நாள் எங்களுக்கு ரொம்பவே ஸ்பெசல்…” என்று ஜெகா பேச, யாராலும் எதுவும் சொல்ல முடியவில்லை.

மறுத்துப் பேச முடியுமா என்ன?!

மைதிலி ஜெகந்நாதனை ஒருமுறை நேர்கொண்டு பார்த்துவிட்டு, எழுந்து செல்ல, ஜெகாவும் அவள் பின்னோடு சென்றான்.

பெரியவர்கள் அனைவரும் அங்கே ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, மைதிலி எழுந்து வெளியே ரோஜா செடிகள் வைத்திருக்கும் இடத்திற்குத் தான் வந்தாள். வெயில் வேறு அடிக்க,

ஜெந்நாதனோ “நீ உள்ள போவன்னு பார்த்தா இங்க வெளிய வந்து வெயில்ல நிக்கிற…” என்றவன் அவளை இழுத்து கொஞ்சமே கொஞ்சம் இருந்த்த நிழலில் நிறுத்த,

“இருக்குறது ஒரு ரூம்.. எல்லாரும் இருக்கப்போ ரூம்குள்ள போறது நல்லா இல்லை தானே…” என்றவள், “நீங்க ஏன் வெய்யில்ல நிக்கிறீங்க.. இந்த பக்கம் நில்லுங்க…” என,

“எனக்கு வெயில் மழை எல்லாம் சகஜம் தான்…” என்றவன் “அதுக்குள்ள நீ டிரஸ் மாத்தணுமா? நானே இன்னிக்குத் தான் உன்னை இப்படி பாக்குறேன்…” என்றான் ஆர்வமாய்.

அவனது பார்வை அவளுக்கு கொஞ்சம் வெட்கம் தர, “அட என்ன நீ வெட்கம் எல்லாம் படுற?!” என்றான் ஆச்சர்யமாய்.

“இப்படி பேசினா என்ன பண்ண?” என்றவள் நிமிர்ந்து அவனைப் பார்க்கவே இல்லை.

“இப்போ நான் என்ன பேசிட்டேன் அப்படி?!” என்றவனுக்கோ பார்வை அவளை விட்டு விலகவே இல்லை.

தலையை குனிந்துகொண்டே “அப்பா சீக்கிரம் கல்யாணம் வைக்கணும் சொல்றார்…” என்று மீண்டும் அதையே சொல்ல,

“சரி வச்சுக்கலாம்…” என்றான் ஜெகா புன்னகையோடு.

பட்டென்று மைதிலி நிமிர்ந்து பார்க்க “எப்பவும் நீ நேருக்கு நேர் தானே பார்த்து பேசுவ.. அப்படியே பேசு.. வெட்கம் வந்தாலும் சரி…” என,

“சிலது எல்லாம் இயல்பா விட்டுடனும்…” என்றவள் “உங்க வீட்ல சம்மதிப்பாங்களா?!” என்றாள் அடுத்து.

“சம்மதிப்பாங்க…” என்றவன் குரலே அத்துனை உறுதியாய் ஒலிக்க,

“எப்படி?!” என்றாள் வேகமாய்.

“எங்கப்பா பத்தி எனக்குத் தெரியும்…” என்றவன் “உன் மனசுல வேறென்னவோ ஓடுது…” என்று கேட்க,

“இல்லையே…” என்றாள் வேகமாய்.

“என் மைதிக்கு பொய் சொல்லத் தெரியாது…” என்றவனின் விழிகள் அவளது கண்களோடு கலந்து நிற்க,

“இல்ல நிரஞ்சனிக்கு நூறு சவரன் கிட்ட…” என்று மைதிலி சொல்லும்போதே,

“பெரிம்மா பேசினாங்களா?!” என்றவன் “அவங்க அப்பப்போ அப்படித்தான் பேசுவாங்க. ஆனா மனசால எதுவும் தப்பா நினைக்க மாட்டாங்க. இப்போ நடந்த கலாட்டா எல்லாம் அவங்களுக்கு நிரஞ்சனி கல்யாணம் நடக்குமா இல்லையான்னு ஒரு டென்சன் கொடுத்திடுச்சு. அதான் இப்படி…” என, மைதிலி அப்போதும் அவளது பாவனையை மாற்றவில்லை.

“மைதிலி நீ ‘பினான்சியலி இன்டிபென்டன்ட்…’ உன்னோட அப்பாவைக் கூட நீ காசு பணத்துக்கு எதிர்பார்க்கத் தேவையில்லை. ஆனா நிரஞ்சனி அப்படி இல்லை. அவ வீட்டோட இருந்து வளர்ந்துட்டா. கல்யாணமே ஆனாலும் நாளைக்கு எல்லாத்துக்கும் அவ ரமேஷ் முகத்தைத் தான் பார்க்கணும். அதனால அவளுக்கு நிறைய நிறைய செய்றோம்.

அண்ணா இருந்திருந்தா அதுவேற. இப்போ எனக்கு எப்படியோ அதுபோலவே தான் அவளுக்கும் எல்லாமே சரி பங்கு. நீ இதெல்லாம் எதுவுமே யோசிக்காத…” என,

மைதிலி மெல்ல சிரிக்க “என்ன சிரிப்பு?” என்றான்.

“இல்லை உன் அப்பாவையே நீ எதிர்ப்பார்க்கத் தேவையில்லைன்னு சொல்றதுபோல சொல்லி, என்னையும் எதிர்பார்க்காதன்னு சொல்றீங்களா?! ” என்றாள் கிண்டலாய்.

“அடிப்பாவி?! உனக்கு என்ன வேணும்?! இப்போவே சொல்லு வாங்கலாம்…”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். சரி இன்னிக்கு என்ன நாள்?” என்றாள் வேகமாய்.

“என்ன நாள்?!” என்றவனுக்கு கொஞ்சம் கூட எதுவும் நினைவில் வரவில்லை.

“நிஜமா தெரியலையா?!”

“என்ன நாள் மைதிலி.. நிஜமா தெரியலை…”

“ம்ம்ச் நீங்க எல்லாம் இத்தனை வருஷம் மனசுக்குள்ள உருகி உருகி லவ் பண்ணதே வேஸ்ட்…”

“அடி கிராதகி என்ன இப்படி சொல்லிட்ட நீ?!”

“பின்ன… காலேஜ் டேஸ்ல இதே தேதில தான் முதன்முதல்ல நீங்க என்கிட்டே பேசினீங்க. வந்து உன் பேர் என்ன கேட்டீங்க… அதுகூட மறந்து போச்சா உங்களுக்கு?!” என்றவளுக்கு நிஜமாய் கோபமே.

“ஓ…!” என்றவன் நெற்றியை கீறிக்கொள்ள,

“எல்லாமே மறந்துட்டீங்க…” என்று உதடு பிதுக்கினாள்.

“ஆனா உன்னை மறக்கலையே மைத்தி…” என்று ஜெகா சமாளிக்கப் பார்க்க,

“அதெல்லாம் செல்லாது. இதுபோல நிறைய டேட்ஸ் இருக்கு.. எல்லாம் யோசிச்சு நியாபகம் வைங்க. அப்பப்போ கேட்பேன்…” என்று சொல்லிவிட்டு செல்ல,

“நீ எனக்கு வீட்டம்மா தான் வாத்தியாரம்மா இல்லை…” என்றபடி ஜெகாவும் அவள் பின்னோடு செல்ல, பெரியவர்களுக்கு என்னவோ இவர்களின் ஜோடிப் பொருத்தம் பிடித்தே இருந்தது.

              

      

          

  

 

             

            

Advertisement