Advertisement

                    இதயத்திலே ஒரு நினைவு – 21

கமலா ஆச்சி அமைதியாகவே இருக்க, சுகுணா மைதிலியை “நீ மேல போ மைதிலி.. நாங்க பேசிட்டு வர்றோம்…” என்று சொல்ல, 

“அவளும் இருக்கட்டும்.. அவளுக்குத் தெரியாதது எதுவுமில்லை…” என்ற ஆச்சி,

குமரனிடம் “எனக்கு நாளைக்கே என் பேரனுக்கும் மைதிலிக்கும் கல்யாணம் நடந்தா சந்தோசம் தான். ஆனா இது நான் மட்டுமே எடுக்கிற முடிவு இல்லை தானே. இப்போதான் அவங்க வீட்ல ஒரு பெரிய பிரச்சனை நடந்து முடிஞ்சிருக்கு. அங்கயும் ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பேசிருக்காங்க.. எல்லாமே நம்ம யோசிக்கணும்…” என்று தன்மையாகவே சொல்ல,

“நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ம்மா.. ஆனா எங்க பொண்ணு உங்க பேரனுக்காக அங்க இருந்து இங்க வந்திருக்கா… எந்த நம்பிக்கைல வந்தான்னு இப்போ வரைக்கும் எங்களுக்குத் தெரியலை. இதோ இன்னிக்குத் தான் எங்களுக்கு எல்லாம் தெரியும். அவளோட உணர்வுகளுக்கு நாங்க மதிப்பு கொடுக்கிறோம்.. ஆனா பெத்தவங்க நிலைல இருந்து பொண்ணோட எதிர்காலம் எவ்வளோ முக்கியம்னு பார்த்தா தானே தெரியும்…” என்றார் குமரனும்.

ஆச்சிக்கு அவர் சொல்வதும் சரியெனப் பட “சரி… நாளைக்கு அவங்க வரட்டும்.. நீங்க உங்களோட கருத்து சொல்லிடுங்க.. எதுவா இருந்தாலும் கலந்து பேசி முடிவு பண்ணிக்கலாம். பின்வாங்கனும்னு மட்டும் நினைக்க வேணாம்…” என,

“எங்களுக்கு எங்க பொண்ணு தவிச்சு நிக்கிறதை பார்க்கிற தைரியம் இல்லை…” என்றார் சுகுணா.

அதனைக் கேட்டு மெல்ல சிரித்த ஆச்சி “இப்போ கூட அவ தவிச்சிட்டு தான் நிக்கிறா…” என்றவர் மைதிலி முதுகில் லேசாய் தட்டி “மனசுல இத்தனை ஆசை வச்சிட்டு எப்படித்தான் இப்படி கல்லு மாதிரி இருந்தியோ…” என, மைதிலி பதிலே சொல்லவில்லை தலை குனிந்துகொண்டாள்.

குமரனுக்கு தன் மகளை எண்ணி பெருமையே..!

“சரிம்மா.. நீங்க தூங்குங்க.. நாளைக்கு எப்போ வர்றாங்கன்னு மட்டும் பேசிட்டு சொல்லுங்க…” என்றுவிட்டு சுகுணாவும், குமரனும் எழுந்து கொள்ள,

“மைதிலியோட கொஞ்சம் பேசிட்டு அனுப்புறேனே…” என்றார் ஆச்சி.

“சரி…” என்றுவிட்டு இருவரும் மேலே செல்ல,

“சொல்லு மைதிலி.. நீ என்ன நினைக்கிற?” என்றார் நேரடியாக.

“ஆச்சி?!” என்று மைதிலி பார்க்க,

“உங்கப்பா உடனே கல்யாணம் வைக்கனும்னு சொல்லும்போது உன் முகம் லேசா மாறுச்சு.. அதான் கேட்கிறேன்…” என,

“ஹ்ம்ம் இல்ல நம்மளும் அவங்களை ரொம்ப நெருக்கடி செய்யக் கூடாது இல்லையா.. எல்லாத்துக்குமே கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும் தானே. இன்னிக்கு ஒரு கல்யாணம் இல்லைன்னு முடிச்சு நாளிக்கே இன்னொரு கல்யாணம் முடிக்க தேதி சொல்ல சொன்னா அது சரி இல்லை தானே…” என்று மைதிலி பேச,

“உன் மனசு யாருக்கும் வராது. அதான் என் பேரன் இத்தனை வருசமானாலும் மைதிலி மைதிலின்னு இருக்கான் போல…” என்று ஆச்சி சொல்லி சிரிக்க,  மைதிலியும் மெதுவாய் சிரித்துக்கொண்டாள்.

“போ.. போய் சாப்பிட்டு தூங்கு. இன்னிக்காவது நல்லா தூங்கி எந்திரி… நாளைக்கு நீ பளிச்சுன்னு வந்து நிக்கணும்…” என, மைதிலியும் சிரித்துக்கொண்டே தான் மாடியேறினாள்.

அங்கே குமரனோ அமைதியாய் இருக்க, சுகுணா தான் பேசிக்கொண்டே இருந்தார்.

“என்னவோ எனக்குத் தெரியாது. அடுத்த முஹூர்தத்துல நிச்சயமாவது செய்யணும்…” என,

“ம்மா கொஞ்சம் பொறுமையா தான் இரும்மா…” என்றாள் மைதிலி.

“என்ன டி பொறுமை?! பண்றதெல்லாம் பண்ணிட்டு…” என்று எதுவோ பேச வந்தவர் “இங்க பாரு. உன் விருப்பத்துக்கு நாங்க சம்மதிக்கிறோம்.. அதேபோல எங்க முடிவுக்கு நீ கட்டுப்பட்டு நில்லு. நீ வந்தப்போ அந்த பையன் அவங்க குடும்பத்து முடிவுக்கு கட்டுப்பட்டு கல்யாணத்துக்கு தயாரா தானே நின்னாப்ல..” என, மைதிலிக்கு இதற்குமேல் அம்மாவிடம் எதுவும் பேச முடியவில்லை.

குமரனோ “சுகி…” என்று அதட்ட,

“இல்லைங்க.. நாளைக்கே அந்த நந்தினி பொண்ணு வீட்ல வந்து புதுசா பிரச்சனை பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்.. அவங்க வீட்டு பொண்ண வேற அங்கதான் குடுக்க போறாங்க.. அது ஒரு காரணம் போதாதா… அப்போ இவளோட நிலைமை என்னாகும்.. எனக்கு என் பொண்ணோட வாழ்க்கை முக்கியமில்லையா?!” என்று சுகுணா கேட்க,

“ம்மா… அந்தவொரு விசயத்துக்காகத்தான் நான் வந்தப்போவும் அவர் அமைதியா விலகி நின்னார். ஆனா ஒரு நிலைக்கு மேல எல்லாத்தையும் விட நான் தான் வேணும்னு தோணினதுனால தான் இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லப் போனார். அதுக்குள்ள நந்தினி இப்படி செஞ்சிட்டா… அதனால நீ முதல்ல இப்படியெல்லாம் பேசுறது விடு. நாளைக்கு அவங்க வர்றப்போ கொஞ்சம் சந்தோசமா பேசினா எனக்கும் சந்தோசம்…” என்றவள்

“ப்பா நீங்களாவது எடுத்து சொல்லுங்கப்பா…” என்றுவிட்டு சென்று படுத்துக்கொண்டாள்.

“பாத்தீங்களா எப்படி பேசிட்டு போறான்னு…” என்ற சுகுணா புலம்பிக்கொண்டே தான் இருந்தார்.

குமரன் வெளியே ஹாலில் படுத்துக்கொள்ள, சுகுணா உள்ளே மகளோடு படுக்க வந்தவர், மைதிலி ரேகாவோடு பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டு  என்ன நினைத்தாரோ வெளியே வந்து கணவரோடு படுத்துக்கொள்ள,

“என்ன வந்துட்ட..?” என்றார் குமரன்.

“ரேகாவோட பேசிட்டு இருக்கா. எப்படியும் அந்த பையனோட பேசுவா.. நான் எதுக்கு நந்தி மாதிரி…” என்று சுகுணா நொடிக்க, குமரனுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

சுகுணா சொன்னது போலவே மைதிலி அடுத்து ஜெகாவோடு தான் பேசினாள்.

“சொல்லுங்க வாத்தியாரம்மா…” என்று ஜெகா சந்தோசமாய் பேச,

“நாளைக்கு எப்போ வர்றீங்க?!” என்றாள் மைதிலி.

“வர்றீங்க இல்லை.. வர்றாங்க.. அப்பா அம்மா பெரிம்மா இவங்கெல்லாம் தான் வருவாங்க…..” என,

“அப்போ நீங்க?!” என்றாள் ஏமாற்றமாய்.

“நான் கொஞ்சம் லேட்டா தான் வருவேன்…”

“எதுக்கு…?!”

“முதல்ல பெரியவங்க பேசிக்கட்டும் மைதிலி. நான் வந்தா ஏதாவது ஒரு தருணத்துல நான் பேசவேண்டி வரும்.. அது எங்கப்பா எப்படி எடுத்துப்பார்னு தெரியாது. இனியும் எந்த கசப்புகளும் நடக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்…” என்றான் அவளுக்கு புரியும் விதமாய்.

“ம்ம்ம் ஆனா வந்திடுவீங்க தானே…” என்றாள் மைதிலியும்..

“கண்டிப்பா.. ஆச்சி இருக்காங்களே.. நான் வரலன்னா விடுவாங்களா என்ன?!”

“ஹ்ம்ம் அப்பா அம்மா உடனே கல்யாணம் வைக்கனும்னு பேசினாங்க ஆச்சிட்ட…”

“தெரியும் ஆச்சி அம்மாக்கிட்ட எல்லாம் சொல்லிட்டாங்க… நீ சொன்னதையும் சொல்லிட்டாங்க.. அம்மாக்கு உன்மேல ஏகப்பட்ட திருப்தி…” என்று சீரியசாய் பேசிக்கொண்டு இருந்தவன், அவளை கொஞ்சம் சகஜமாக்கும் பொருட்டு,

“அப்பா, பெரிம்மா எல்லாம் கொஞ்சம் அந்த காலம். நீ பாட்டுக்கு ஸ்கர்ட் டாப்ஸ் போட்டு முடிய தூக்கி கிளிப் போட்டுட்டு வந்து நின்னுடாத. அழகா சேலை கட்டிக்கோ…” என்றவன்

“கட்டத் தெரியுமா?!” என்றான் கிண்டலாய்.

தினமும் அவள் கல்லூரிக்கு சேலையில் தானே செல்கிறாள். தெரியாதவன் போல் கேள்வி வேறு.

“ஹ்ம்ம் காலேஜுக்கு போறதுக்கு தான் கட்ட தெரியும். பொண்ணு பார்த்து வர்றதுக்கு எல்லாம் எப்படி கட்டணும்னு தெரியாது…” என்று மைதிலியும் நக்கலாய் சொல்ல,

“அடடா.. என்ன செய்றது.. எனக்கும் தெரியாதே…” என்றான் அப்பாவியாய்.

“உங்களுக்கு என்னதான் தெரிஞ்சது?!” என்று வேண்டுமென்றே மைதிலி சலிப்பது போல் சொல்ல,

“ஆமா உனக்கு மட்டும் எல்லாம் தெரியும்…” என்றான் இவனும் பூடகமாய்.

இருவரின் பேச்சும் இப்படியே நீள, எத்தனை நேரம் இப்படி பேசினரோ தெரியாது, ஆனால் இத்தனை ஆண்டுகால காத்திருப்புக்கும் சேர்த்து வைத்து பேசினர் பேசினர் பேசிக்கொண்டே இருந்தனர்.

ஆனால் இன்னும் கல்லூரி கதையை விட்டு வெளிவந்த பாடில்லை.

மலரும் நினைவுகள் ஓடிக்கொண்டு இருக்க, நேரம் போனதுதான் மிச்சம்..

இது எத்தனை வருட கனவு.. ஏக்கம்..?!

நடக்காதா நடக்காதா என்று இருவருமே ஏங்கித் தவித்த தருணமிது.

இப்படி நடக்குமா? என்று கற்பனையும் கனவுமாய் கண்டுகளித்த பொழுது இது.

மனது ஒரு கற்பனை செய்யும், புத்தி ஒரு காட்சியை கொடுக்கும். இரண்டுக்கும் இடையில் தான் இந்த இரு காதல் மனங்களும் எத்தனை சிக்கி தவித்து சின்னாபின்னம் ஆகின.

ஆனால் அதெல்லாம் கடந்து இப்போது இதோ அனைத்தும் நிஜமாகிப் போக, பேச பேச இருவரின் வார்த்தைகளிலும் அப்படியொரு துள்ளல்.

அவனின் பேச்சுக்கள் அவளுக்கு சிறு சிறு வெட்கங்களை கொடுக்க, அவ்வப்போது மௌனங்களுக்கு சொந்தக்காரி ஆகிப்போனாள் மைதிலி.

காதலித்தாள்.. அவனை காதல் சொல்ல வைத்தாள்… காதல் புரிந்து கையாட்டிப் போனாள்.. காத்திருந்தாள்.. இதோ அவனின்  கரம் பற்ற போகிறாள்….

அத்தனை களிப்பு மைதிலிக்கு..!

“பயங்கரமான ஆளு டி மைத்தி நீ…” என்று ஜெகா சொல்ல,

“நானா?!” என்றாள் விளங்காது.

“ம்ம்ம் நீதான்… நானா வந்தப்போ நீ வேணாம் சொன்ன… இப்போ நீயா வந்து நினைச்சதை நடத்தப் போற தானே…” என்று சொன்ன ஜெகாவினுள் அவளை எண்ணி எண்ணி பேராசை… பேரானந்தம்..

“நான் என்ன பண்ணேன்… எல்லா ரிஸ்க்கும் நீங்க தானே எடுத்தீங்க…”

“ம்ம்ஹும்… அது நீ குடுத்த தைரியம்.. நீ வந்தது எனக்கு நிஜமா பெரிய அதிர்ச்சி… அதையும் தாண்டி, எனக்கு கல்யாணம்னு தெரிஞ்சும் கூட நீ விட்டுக்குடுக்க தயாரா இருந்த.. அதுக்கு நீ சொன்ன காரணங்கள். இப்போ கூட உங்க வீட்ல உடனே கல்யாணம் பண்ணனும் சொன்னதுக்கு நீ எங்களோட சூழ்நிலை புரிஞ்சு பேசுற.. எல்லாம்.. எல்லாமே உன்னை இன்னும் இன்னும் லவ் பண்ண வைக்குது மைத்தி…” என,

“நீங்க பண்ண லவ் விடவா?!” என்றாள் மைத்தி..

“நான் என்ன பண்ணேன்… படிக்கிறப்போ உன் பின்னாடி சுத்தினேன்.. உன்னை பிடிக்கும்.. ரொம்ப பிடிக்கும். நீதான் வேணும்னு நினைச்சேன்.. ஆனா குடும்ப சூழ்நிலைன்னு வர்றப்போ தடுமாறிப் போனேன்.. ஆனா நீ எது எப்படி இருந்தாலும் சரின்னு தைரியமா இங்க வந்து நின்ன பாரு.. அதுவும் நான் சொன்ன வார்த்தைகளை நம்பி.. நிஜமா நீ தான் மைத்தி கிரேட்…” என,

“சரி போதும் போதும் இப்படியே பேசினா பொழுது விடிஞ்சிடும். நாளைக்கு என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க. நான் கொஞ்சம் பளிச்சுன்னு இருக்கணும்…” என்று மைதிலி வம்பு பேச,

“முடிஞ்ச அளவு நாளைக்கு நிச்சயம் பண்றது போல வருவாங்க…” என்றான் ஜெகா.

“வீட்ல அப்படி சொன்னாங்களா?!”

“இல்லை நாளைக்கு சொல்லி அனுப்பனும்…”

“நீங்க ரொம்ப எதுவும் பேச வேணாம்… பெரியவங்க யோசனை என்னவோ அது படி நடக்கட்டும்…”

“ஹ்ம்ம்…” என்று பெருமூச்சு விட்டவன் “சரி நீ தூங்கு…” என,

“நீங்க?!” என்றாள்.

“நானும் தான்…” என்றவனுக்கு அன்றைய தினம் நிஜமாகவே நல்லதொரு தூக்கம் வந்துவிட்டது.

ஆனால் மைதிலிக்கு சரியான உறக்கமில்லை. ஒருவித படபடப்பு. நாளைக்கு என்ன நடக்குமோ என்ற ஒரு பதற்றம். அதே எண்ணத்தோடு காலை பொழுதும் விடிந்திட, சுகுணாவோ, அவள் எழுந்து வந்ததுமே கேட்டார் “எத்தன மணிக்கு வர்றாங்க?!” என்று.

“தெரியலம்மா…” என்றவள் சோம்பலாய் அமர,

“தெரியலையா? நைட்டெல்லாம் பேசிட்டு தானே இருந்த நீ.. கேட்கலையா?” என,

“ம்மா… இப்போதானே விடிஞ்சிருக்கு.. விடிஞ்சதுமே வந்து நிப்பாங்களா? பொறும்மா…” என்றவள் ஜெகாவிற்கு அழைத்துக் கேட்க,

“நான் இப்போதான் முழிக்கிறேன் மைத்தி…” என்றான் அவளை விட சோம்பலாய்.

“சரி கேட்டுட்டு சொல்றீங்களா?” எனும்போதே கீழே ஆச்சி வீட்டில் வேலை செய்யும் பெண் வந்து “அவங்க எல்லாம் காலைல பத்து மணிக்கு வந்திடுவாங்களாம்.. அம்மா சொல்ல சொன்னாங்க…” என, அதற்குமேல் சுகுணா மகளை ஒருநிலையில் இருக்க விடவில்லை.

மைதிலியும் எதுவும் சொல்லவில்லை. அம்மா சொல்வதை எல்லாம் பொறுமையாய் கேட்டபடி தயாராகினாள். சுகுணா எடுத்துக் கொடுத்த புடவையை தான் உடுத்திக்கொண்டாள்.

“நகை எல்லாம் லாக்கர்ல இருக்கு.. நீயும் வர்றப்போ ஒரு சங்கிலியோட வந்துட்ட.. இப்போ என்ன செய்றது…?” என்று சுகுணா கேட்க,

“ம்மா சிம்பிளா இருந்தா போதும்மா…” எனும்போதே, கமலா ஆச்சி ஏற முடியாமல் ஏறி மேலேயே வந்துவிட்டார்.

“ஆச்சி வாங்க…” என்ற மைதிலிக்கு வியப்பே.

சுகுணாவிற்கும் கூட..!

“ரெடி ஆகிட்டியா.. எப்படியும் நீ பட்டுபுடவை நகை எல்லாம் இங்க கொண்டு வந்திருக்க மாட்ட. அவங்க வர்றப்போ ரொம்ப சிம்பிளாவும் இருக்க முடியாதுல்ல. அதான் என்கிட்டே இருந்ததுல புது சேலையும், என்னோட நகை கொஞ்சமும் கொண்டு வந்திருக்கேன்…” என்றவர் கொண்டு வந்ததை அவள் முன்னே வைக்க, சுகுணா இத்தனை எதிர்பார்க்கவே இல்லை.

“நாங்க இப்படி எல்லாம் ஆகும்னு நினைச்சோமா ம்மா…” என்றார் சுகுணா.

“இதெல்லாம் எப்படியும் மைதிலிக்கு தானே வரப்போற நகை. அதை இப்போவே ஒன்னு ரெண்டு போட்டுக்கிட்ட தப்பில்ல…” என்றவர்

“சேலை இதுவே போதுமா?” என, மைதிலியோ சுகுணா என்ன சொல்வாரோ என்று பார்த்தாள்.

“ம்ம்ம் பெரியவங்க ஆசையா கொடுக்கிறாங்க.. மாத்திக்கோ…”  எனும்போதே ரேகாவும் வந்துவிட்டாள்.

அவளும் சும்மா வரவில்லை “எப்படியும் நீ பட்டுப்புடவை நகை எல்லாம் இங்க வச்சிருக்க மாட்ட. அதான் நானே கொண்டு வந்தேன்…” என, ஆச்சியோ “ஏன் டி நான் இதெல்லாம் கவனிக்காம இருப்பேனா?!” என்றார் சிரிப்போடு.

இவர்கள் பேசியபடி இருக்க, அங்கே ஜெகாவின் வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் வேகமாய் வந்தார் கையில் ஒரு பையோடு.

“என்ன சுமதி…?” என்று ஆச்சி கேட்க,

“செல்வியம்மா கொடுத்து விட்டாங்க.. ஜெகா தம்பி சொல்லுச்சாம்…” என்று ஒரு பையை கொடுத்துச் செல்ல, அதிலும் புது பட்டு சேலையும் நகை செட்டும் இருந்தது.

இப்போது மைதிலிக்கு எதை உடுத்துவது, அணிவது என்று பெரும் குழப்பமாகிப் போனது.

     

     

   

         

                         

Advertisement