Advertisement

                     இதயத்திலே ஒரு நினைவு – 20

ஜெகந்நாதன் என்ன சொல்லியும் மைதிலி கேட்பதாய் இல்லை. தன் மனதை கல்லாக்கிக்கொண்டாள்.

ஜெகாவும் அவளுக்கு நல்ல முறையில் தான் எடுத்து சொன்னான். இருந்தும் எவ்வித பலனுமில்லை.

ஒருநிலைக்கு மேலே ஜெகந்நாதனுக்கே தான் இப்படி ஒரு பெண்ணிடம் கெஞ்சுவது போல் பேசி நிற்பது  எரிச்சலாய் இருக்க,

“முடிவா நீ என்ன சொல்ற மைதிலி?” என்றான்.

“என்னோட முடிவு எப்பவுமே இதுதான்…” என்றாள் அவளும்.

“ஓ..!”

“நீங்க உங்க லைப் பாருங்க.. நான் இன்னும் கொஞ்ச நாள்ல கிளம்பிடுவேன்…”

“ஓ..!”

“உங்களுக்கு எதிர்காலத்துல என்னைவிட நல்ல பொண்ணா கிடைக்கும்…”

“ஓ…!”

“நிஜம்மா…” என்று மைதிலி பேச பேச

ஜெகாவின் பதில் “ஓ..!” மட்டுமே.

அதில் கடுப்பானவள் “ம்ம்ச் என்ன?” என்று அவனை நேருக்கு நேர் பார்த்து முறைக்க,

“இல்ல நீ ரொம்ப சின்சியரா என் வாழ்க்கைப் பத்தி பேசிட்டு இருந்தியா அதான்..” என்றவன் “சரி உன்னோட மனசு எப்பவுமே மாறாது அப்படிதானே?” என்றான் அவளை ஆழப் பார்த்து.

“கண்டிப்பா…”

“உறுதியா சொல்ல முடியுமா உன்னால…?”

“இப்போதைக்கு இதுதான் என்னோட முடிவு.. அப்புறம் நான் இங்கருந்து போயிடுவேன் இல்லையா… வாழ்க்கை மாறும்… அப்போ எண்ணங்களும் மாறும்தானே… உங்களுக்குமே அப்படித்தான்…”

“ஒருவேளை என்னால உன்னை மறக்கவே முடியலை அப்படின்னா, நான் என்ன செய்றது? அதுக்கும் நீ பதில் சொல்லிட்டு போ…” என்று ஜெகா சொல்ல, திகைத்துப் பார்த்தாள் மைதிலி.

“ம்ம் சொல்லு… ஒருவேளை என்னால நீ இல்லாம இருக்கவே முடியாது அப்படின்னா, உன்னை தவிர வேற ஒரு பொண்ணை என்னால நினைக்கவே முடியாது அப்படின்னா அப்போ நான் என்ன பண்றது?” என்று தீவிரமாய் கேட்டான் ஜெகா.

“மறக்க முயற்சி பண்ணுங்களேன்…” என்றவளின் குரல் கெஞ்சியது.

‘நீ இப்படி எல்லாம் என்னிடம் பேசினால், அடியோடு என் மனம் உன்னில் சாய்ந்துவிடும்…’ என்று அவளின் பார்வை சொல்லாமல் சொல்ல,

“சரி விடு. ஒருவேளை உன்னால என்னை மறக்கவே முடியலை அப்படின்னா, என்னைத் தவிர உன்னால இன்னொருத்தர் நினைக்கவே முடியலை அப்படின்னா அப்போ நீ என்ன பண்ணுவ?” என்று கேள்வியை அவள்பக்கம் திருப்ப,

“இதென்ன இப்படி?!” என்றாள் பதில் சொல்லத் தெரியாமல்.

“பதில் சொல்லு மைதிலி… எனக்கு ஏதாவது ஒரு தெளிவு வேணும் தானே… பிடிக்காதவ வேணாம் சொன்னா கூட சரி. ஆனா என்னை உனக்கு இவ்வளோ பிடிச்சிருக்கு, இதோ இப்போ கூட உன்னோட கண் என்னை ரசிக்குது. வெறுப்பு கொஞ்சம் கூட இல்லை.. அப்படியிருக்கப்போ வேணாம்னு நீ சொல்றதை என் மனசு கொஞ்சமாவது ஏத்துக்கணும் இல்லையா..?” என,

“என்னை கேட்டீங்க தானே.. நீங்க சொல்லுங்க, இப்போ நான் போறேன்.. வேணாம் சொல்லிட்டுத் தான் போறேன்.. ஆனா ஒருவேளை எதிர்காலத்துல எனக்கு நீங்க தான் வேணும்னு தோணிச்சுன்னா நான் என்ன பண்ணட்டும்?” என்று இதழில் சிறு புன்னகையோடு, கண்களில் லேசாய் எட்டிப்பார்த்த ஆவலோடு மைதிலி கேட்க,

“தைரியமா என்னைத் தேடி நீ வரலாம்…” என்றான் ஜெகந்நாதன் நிமிர்ந்து நின்று.

மைதிலியின் புன்னகை விரிய, “உங்களுக்கு கல்யாணம் ஆகிருந்தா?!” என்று கேட்க,

“கண்டிப்பா அப்படி ஒரு சூழல் வருதுன்னா, என் வாழ்க்கைக்கு நான் ஒரு முடிவு எடுக்குறதுக்கு முன்ன நான் உன்னை தேடி வருவேன். நீ எங்க இருந்தாலும்.. அப்போவும் உன்னோட பதில் எனக்கு முக்கியம்…” என,

“நீங்க வர்றப்போ ஒருவேளை எனக்கு கல்யாணம் ஆகிருந்தா?” என்றாள் மைதிலி விடாது.

“ஒன்னும் பண்ண முடியாது!” என்று ஜெகா தோளைக் குலுக்க

“ஹ்ம்ம் பேச்சு மாறக் கூடாது… சரியா…” என்றவள் சிரித்த முகமாய் தான் நின்றாள்..

அவளின் இந்த பார்வை அவனுக்கு ஏதோ ஒரு நம்பிக்கையை கொடுத்தது. மைதிலி மீண்டும் திரும்பி வருவாள் என்று… தன்னைத் தேடி வருவாள் என்று.. குறையாத காதலோடு வருவாள் என்று..

அதே நம்பிக்கையே, அவளது இந்த மறுப்பை ஏற்க வைத்தது. அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்க வைத்தது.

மைதிலிக்கும் மனதில் இதுதான் அப்போது….

படிக்கும் வயதில் காதல் அதெல்லாம் வேண்டாம்.. சிறிது காலம் போகட்டும்… நம் மனதின் விருப்பமும், தெளிவும் அப்போது தெரியும் என்று அவனிடம் தலையாட்டி விடைபெற்று சென்றாள்…

 ———–

 

 

ஜெகாவோடு பேசிய பிறகு மைதிலிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இன்னும் ஜெகாவிடம் இங்கே அப்பா அம்மாவிற்கு எல்லாம் தெரியும் என்பதை அவள் சொல்லவில்லையே.

அதில்லாமல், இந்த நேரத்தில் அவர்கள் எல்லாம் இங்கே வந்தால் என்ன செய்வது என்று நகத்தை கடித்தவள், வேறென்ன செய்ய “அப்பா…” என்றழைத்தபடி குமரனை தேடிச் சென்றாள்.

சுகுணாவும், குமரனும் பேசிக்கொண்டு தான் இருந்தனர்.

“ப்பா… ம்மா…” என்றவள் அடுத்து எப்படி சொல்வது என்று நிற்க, அவள் முகத்தில் இருக்கும் பதற்றம் கண்டு

“என்னாச்சு?” என்றனர் இருவருமே.

“அ.. அது.. அவங்க வீட்ல இருந்து வர்றாங்களாம்…” என்று சொல்ல,

சுகுணா வேண்டுமென்றே “யார் வீட்ல இருந்து?” என்று கேட்க,

“ம்ம்ச் ம்மா…” என்றாள் பாவமாய்.

“சொல்லு சொல்லு…” என்று சுகுணா வேண்டா வெறுப்பாய் கேட்பதுபோல் கேட்க,

“இல்ல.. அது.. அவங்கம்மா ஆச்சி… எல்லாம்…” எனும்போதே “இப்போ நீ ஏன் இவ்வளோ டென்சன் ஆகுற?” என்றார் குமரன்.

“இல்ல வர்றாங்கன்னு சொன்னாங்க…” என்றவள் அங்கேயே பொத்தென்று அமர,

“வரட்டும் பேசலாம்…” என்றார் அவர் நிதானமாய்.

மைதிலிக்கோ மனது அடித்துக்கொண்டது. முழுதாய் அங்கே என்ன நடந்தது என்பது தெரியாது தானே. அவளின் பதற்றம் அவளுக்கு. ஐந்து நிமிடமே ஐந்து மணி நேரம் போல் கழிய, கீழே ஜெகாவின் வண்டி சத்தம்.

‘போச்சு எல்லாம் வந்துட்டாங்க…’ என்று எண்ணியவளுக்கு ஒரு சந்தோஷ படபடப்பு.

வேகமாய் மாடியில் இருந்து எட்டிப் பார்க்க, ஆச்சியும் அவனும் தான் வந்திருந்தனர்.

மகளின் இந்த இத்தனை செய்கைகளையும் பெற்றவர்கள் பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்.

ஆச்சி மேலே இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே செல்ல, ஜெகாவோ உள்ளே செல்லாது வெளியே வாசலில் வண்டி மீது சாய்ந்து நின்றுகொண்டான். அவன் என்ன கண்டான் இவளின் பெற்றவர்களிடம் இவள் எல்லாம் சொல்லிவிட்டாள் என்று.

“ஆச்சி நீயா பேசுறது போல பேசு…” என்றுவேறு சொல்லி அனுப்பியிருக்க, மைதிலி தன்னை பார்ப்பது கண்டு கை அசைத்தான். 

மைதிலி அவனுக்கு பதில் சொல்லும் முன்னமே “மைத்தி…” என்றபடி சுகுணா அங்கே வர, வேகமாய் மைதிலி அம்மாவின் பக்கம் திரும்பி நின்றாள்.

ஜெகா மேலே பார்த்துக்கொண்டு இருந்தவனை, மேலிருந்து சுகுணாவும் பார்த்துவிட, மகளை முறைத்தார்.

“அதும்மா ஆச்சி…” என்று அவள் பதில் சொல்லும் போதே,

“மைதிலி…” என்று ஆச்சி கிழிருந்து சத்தமிட,

“ஆச்சி..” என்றாள் வேகமாய்.

ஜெகாவோ, மைதிலியின் அம்மாவைக் கண்டதும் என்ன செய்வது என்று தெரியாமல், நேரே வீட்டினுள் செல்ல,  ஆச்சி அவனை கேள்வியாய் பார்க்க, அதே நேரம் மைதிலியும் மேலிருந்து கீழே வேகமாய் வந்திருந்தாள்.

அவளின் பதற்றம் அவளுக்கு..

“ஆச்சி…” என்று வந்து நிற்க,

அங்கே மாடியில் சுகுணாவோ “அப்படியே ஓடுறா கூப்பிட்டதும்.. கீழ அந்த பையன் வந்திருக்காப்ல போல…” என்று குமரனிடம் சொல்ல,

“அப்படியா?” என்று நெற்றியை தேய்த்தவர், “வா நம்மலே போய் பேசலாம்…” என,

“எது?! நம்மலே போறதா… விளையாடாதீங்க… உங்க பொண்ணு  வரட்டும் முதல்ல.. பின்ன பார்ப்போம்…” என்றுவிட்டார் உறுதியாய்.

குமரனும் அதற்கு சரி என்று சொல்லி நிற்க, கீழே ஆச்சியோ மைதிலியை பிடி பிடியென பிடித்துவிட்டார்.

“ஆனா உன்னை சும்மா சொல்லக் கூடாது. அழுத்தம்.. இவன்தான் வாய் இப்படின்னா நீயுமா இப்படி? ஜாடிக்கு ஏத்த மூடி… இவ்வளோ தூரத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கீங்க.. அந்த நந்தினியோட அப்பா அமைதியா போனதுனால ஆச்சு. இல்லன்னா இப்போ வரைக்கும் எதுவும் பண்ணிருக்க முடியாது…” என,

“அதில்ல ஆச்சி…” என்று கையை பிசைந்து கொண்டு நின்றாள்.

“என்னவோ.. பள்ளிக்கூடம் படிக்கும்போதே எல்லாம் வீட்ட விட்டு போகுதுங்க.. உங்களை அப்படி எல்லாம் பண்ண சொல்லல.. ஆனா வாய் விட்டாவது சொல்லணும் தானே..”

“ஆச்சி போதும்.. தப்பு என்மேலயும் தான்…” என்று ஜெகா சொல்ல,

“என்னவோ… எத்தனை கூத்து இன்னிக்கு…” என்றவர் சலித்துக்கொண்டார்.

“நாளைக்கு இவங்க வீட்ல இருந்து வர்றாங்க.. இப்போ நான் வந்து உன் அப்பா அம்மாக்கிட்ட பேசட்டுமா?” என்றார் மைதிலியிடம்.

“அப்பா அம்மாக்கிட்ட நானே சொல்லிட்டேன் ஆச்சி…” என்றவள், வேகமாய் ஜெகாவைப் பார்க்க, அவன் பார்வையில் ஒரு அதிர்ச்சியும் சிறு மெச்சுதலும் இருந்தது.

“என்ன சொல்ற நீ?” என்று ஆச்சி கேட்க

“ஆமா ஆச்சி.. நானே சொல்லிட்டேன்…” என்றவள் நடந்ததை சொல்ல,

“ஓ…!” என்றவர் “சரி வா நானே வர்றேன்…” என்று அவளோடு மாடியேறிப் போகப் பார்க்க,

“ஆச்சி… நான் போறேன்…” என்றான் ஜெகந்நாதன்.

“ஆமா ஆச்சி.. நான் போய் பேசுறேன்… அதுதானே சரி…..” என,

“இல்லடா நீ வேணாம்.. அதுவும் இந்த நேரத்துல. சிலது எல்லாம் பெரியவங்க தான் முதல்ல பேசணும்…” என்று ஆச்சி சொல்லும்போதே,

“மைத்தி…” என்று சுகுணா அங்கே மாடிபடியில் நின்று அழைப்பது கேட்டது.

“ம்மா இதோ வர்றேன்…” என்றவள் “அம்மா என்மேல கோபமா இருக்காங்க…” என்று ஜெகாவைப் பார்த்து சொல்ல,

“பின்ன கொஞ்சுவாங்களா??!” என்று பட்டென்று பாட்டி கேட்க,

ஜெகாவோ “விடு பார்த்துக்கலாம்…” என்று ஆறுதல் சொல்ல,

“ஆச்சி நீங்களுமே இருங்க.. காலைல பேசிக்கலாம்…” என்றாள் மைதிலி.

“அப்படி இல்லை. அவங்களுக்கு தெரியலைன்னா பரவாயில்லை. நீயே சொல்லிட்ட.. நானாவது வந்து பேசினா தான் சரி…” என,

“சரி ஆச்சி. அப்போ நான் கிளம்புறேன்.. நீங்க பேசுங்க…” என்று ஜெகா சொல்ல,

“மைதிலி இன்னும் என்ன பண்ற?!” என்ற சுகுணாவின் குரல் வெகு அருகில் கேட்க,

“நான் கிளம்பாம உன் அம்மா போக மாட்டாங்க…” என்று சிரித்தபடி சொன்னவன், “வர்றேன் ஆச்சி…” என்று சொல்லிவிட்டு

“இன்னிக்காவது நிம்மதியா தூங்கு…” என்று மைதிலியிடம் சொல்லிச் செல்ல, அவனின் வண்டி கிளம்பவும் சுகுணா கீழே வந்தே விட்டார்.

குமரனிடம் போகவேண்டாம் என்றவருக்கு ஒரு அளவுக்கு மேலே பொறுமையாய் இருக்க முடியவில்லை.

“வாம்மா…” என்று ஆச்சி வரவேற்றவர், “நானே மாடிக்கு வரலாம்னு இருந்தேன்…” என,

“அது மைதிலி வந்து நேரமாச்சா…” என்று சொல்லியபடி சுகுணா அமர,

“மைதிலி அப்பாவும் வந்துட்டா கூட நல்லது…” என்று ஆச்சி சோர்வாகவே அமர்ந்தார்.

மைதிலி தன் அம்மாவைப் பார்க்க “போ போய் அப்பாவ கூட்டிட்டு வா…” என, மைதிலி இப்போதும் கூட வேகமாய் தான் போனாள்.

போகும் அவளையே தான் இரு பெண்களும் பார்த்திருக்க “ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க பொண்ண.. இந்த காலத்துல யார் இப்படி இருக்கா. பெத்தவங்களுக்குத் தெரியாம என்னென்னவோ செய்யுதுங்க…” என்று ஆச்சி புகழ்ந்து பேச, பெற்றவராய் கொஞ்சம் சுகுணாவின் மனம் குளிரவே செய்தது.

“மனசுக்குள்ளயே வச்சிருந்திருக்கா.. என்னால கூட கண்டுபிடிக்க முடியலை..” என்று சுகுணா கொஞ்சம் ஆதங்கமாகவே சொல்ல,

“பின்ன என் பேரன் மட்டும் என்னவாம்… எதுல ரெண்டு பேருக்கும் பொருத்தமோ, மனச வெளிக்காட்டிக்காம இருக்கிறதுல ரெண்டு பேருக்கும் பயங்கர பொருத்தம்…” என குமரனும் வந்துவிட்டார் அங்கே.

“வாங்க உக்காருங்க…” என்று ஆச்சி அவரையும் அமரும்படி சொன்னவர்

“நீ என்ன நிக்கிற.. நீயும் உக்காரு வா…” என்று மைதிலியை தன்னருகே அமர்த்திக்கொள்ள, அவரின் இந்த செய்கையே மைதிலி மீது இவருக்கு எத்தனை கரிசனம் என்று புரிய வைத்தது.

குமரன் அமைதியாகவே இருக்க “என்னால மாடிக்கு ஏறி வர முடியலை.. அதான் உங்களை கூட்டி வர சொன்னேன்…” என்று ஆச்சி தன்மையாக பேச,

“அதனால என்னம்மா…” என்றவர் சுகுணாவைப் பார்க்க,

ஆச்சியோ “மைதிலி உங்கட்ட எல்லாம் சொல்லிட்டதா சொன்னா…” என்று ஆரம்பிக்க,

“ஆமாம்…” என்றார் குமரனும்..

“நாளைக்கு என் மகளும் மருமகனும் வர்றதா சொல்லிருக்காங்க. இந்நேரத்துக்கு வர்றது சரியில்லை தானே…”

“சரிதான்.. ஆனா ஒன்னு எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம் இவங்க கல்யாணம் நடந்துட்டா நல்லதுன்னு எங்களுக்கு படுது…” என்று குமரன் சொல்ல, ஆச்சி கொஞ்சம் அதிர்ந்து தான் பார்த்தார்.

இப்போது தானே ஒரு பெரும் பஞ்சாயத்து முடிந்து இருக்கிறது. உடனே திருமணம் என்றால்?!

சரி என்று உடனே சொல்ல முடியாது கமலா ஆச்சி மௌனமாய் பார்த்திருந்தார்.

 

   

              

 

    

 

        

          

             

  

Advertisement