இதயத்திலே ஒரு நினைவு – 20
ஜெகந்நாதன் என்ன சொல்லியும் மைதிலி கேட்பதாய் இல்லை. தன் மனதை கல்லாக்கிக்கொண்டாள்.
ஜெகாவும் அவளுக்கு நல்ல முறையில் தான் எடுத்து சொன்னான். இருந்தும் எவ்வித பலனுமில்லை.
ஒருநிலைக்கு மேலே ஜெகந்நாதனுக்கே தான் இப்படி ஒரு பெண்ணிடம் கெஞ்சுவது போல் பேசி நிற்பது எரிச்சலாய் இருக்க,
“முடிவா நீ என்ன சொல்ற மைதிலி?” என்றான்.
“என்னோட முடிவு எப்பவுமே இதுதான்…” என்றாள் அவளும்.
“ஓ..!”
“நீங்க உங்க லைப் பாருங்க.. நான் இன்னும் கொஞ்ச நாள்ல கிளம்பிடுவேன்…”
“ஓ..!”
“உங்களுக்கு எதிர்காலத்துல என்னைவிட நல்ல பொண்ணா கிடைக்கும்…”
“ஓ…!”
“நிஜம்மா…” என்று மைதிலி பேச பேச
ஜெகாவின் பதில் “ஓ..!” மட்டுமே.
அதில் கடுப்பானவள் “ம்ம்ச் என்ன?” என்று அவனை நேருக்கு நேர் பார்த்து முறைக்க,
“இல்ல நீ ரொம்ப சின்சியரா என் வாழ்க்கைப் பத்தி பேசிட்டு இருந்தியா அதான்..” என்றவன் “சரி உன்னோட மனசு எப்பவுமே மாறாது அப்படிதானே?” என்றான் அவளை ஆழப் பார்த்து.
“கண்டிப்பா…”
“உறுதியா சொல்ல முடியுமா உன்னால…?”
“இப்போதைக்கு இதுதான் என்னோட முடிவு.. அப்புறம் நான் இங்கருந்து போயிடுவேன் இல்லையா… வாழ்க்கை மாறும்… அப்போ எண்ணங்களும் மாறும்தானே… உங்களுக்குமே அப்படித்தான்…”
“ஒருவேளை என்னால உன்னை மறக்கவே முடியலை அப்படின்னா, நான் என்ன செய்றது? அதுக்கும் நீ பதில் சொல்லிட்டு போ…” என்று ஜெகா சொல்ல, திகைத்துப் பார்த்தாள் மைதிலி.
“ம்ம் சொல்லு… ஒருவேளை என்னால நீ இல்லாம இருக்கவே முடியாது அப்படின்னா, உன்னை தவிர வேற ஒரு பொண்ணை என்னால நினைக்கவே முடியாது அப்படின்னா அப்போ நான் என்ன பண்றது?” என்று தீவிரமாய் கேட்டான் ஜெகா.
“மறக்க முயற்சி பண்ணுங்களேன்…” என்றவளின் குரல் கெஞ்சியது.
‘நீ இப்படி எல்லாம் என்னிடம் பேசினால், அடியோடு என் மனம் உன்னில் சாய்ந்துவிடும்…’ என்று அவளின் பார்வை சொல்லாமல் சொல்ல,
“சரி விடு. ஒருவேளை உன்னால என்னை மறக்கவே முடியலை அப்படின்னா, என்னைத் தவிர உன்னால இன்னொருத்தர் நினைக்கவே முடியலை அப்படின்னா அப்போ நீ என்ன பண்ணுவ?” என்று கேள்வியை அவள்பக்கம் திருப்ப,
“இதென்ன இப்படி?!” என்றாள் பதில் சொல்லத் தெரியாமல்.
“பதில் சொல்லு மைதிலி… எனக்கு ஏதாவது ஒரு தெளிவு வேணும் தானே… பிடிக்காதவ வேணாம் சொன்னா கூட சரி. ஆனா என்னை உனக்கு இவ்வளோ பிடிச்சிருக்கு, இதோ இப்போ கூட உன்னோட கண் என்னை ரசிக்குது. வெறுப்பு கொஞ்சம் கூட இல்லை.. அப்படியிருக்கப்போ வேணாம்னு நீ சொல்றதை என் மனசு கொஞ்சமாவது ஏத்துக்கணும் இல்லையா..?” என,
“என்னை கேட்டீங்க தானே.. நீங்க சொல்லுங்க, இப்போ நான் போறேன்.. வேணாம் சொல்லிட்டுத் தான் போறேன்.. ஆனா ஒருவேளை எதிர்காலத்துல எனக்கு நீங்க தான் வேணும்னு தோணிச்சுன்னா நான் என்ன பண்ணட்டும்?” என்று இதழில் சிறு புன்னகையோடு, கண்களில் லேசாய் எட்டிப்பார்த்த ஆவலோடு மைதிலி கேட்க,
“தைரியமா என்னைத் தேடி நீ வரலாம்…” என்றான் ஜெகந்நாதன் நிமிர்ந்து நின்று.
மைதிலியின் புன்னகை விரிய, “உங்களுக்கு கல்யாணம் ஆகிருந்தா?!” என்று கேட்க,
“கண்டிப்பா அப்படி ஒரு சூழல் வருதுன்னா, என் வாழ்க்கைக்கு நான் ஒரு முடிவு எடுக்குறதுக்கு முன்ன நான் உன்னை தேடி வருவேன். நீ எங்க இருந்தாலும்.. அப்போவும் உன்னோட பதில் எனக்கு முக்கியம்…” என,
“நீங்க வர்றப்போ ஒருவேளை எனக்கு கல்யாணம் ஆகிருந்தா?” என்றாள் மைதிலி விடாது.
“ஒன்னும் பண்ண முடியாது!” என்று ஜெகா தோளைக் குலுக்க
“ஹ்ம்ம் பேச்சு மாறக் கூடாது… சரியா…” என்றவள் சிரித்த முகமாய் தான் நின்றாள்..
அவளின் இந்த பார்வை அவனுக்கு ஏதோ ஒரு நம்பிக்கையை கொடுத்தது. மைதிலி மீண்டும் திரும்பி வருவாள் என்று… தன்னைத் தேடி வருவாள் என்று.. குறையாத காதலோடு வருவாள் என்று..
அதே நம்பிக்கையே, அவளது இந்த மறுப்பை ஏற்க வைத்தது. அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்க வைத்தது.
மைதிலிக்கும் மனதில் இதுதான் அப்போது….
படிக்கும் வயதில் காதல் அதெல்லாம் வேண்டாம்.. சிறிது காலம் போகட்டும்… நம் மனதின் விருப்பமும், தெளிவும் அப்போது தெரியும் என்று அவனிடம் தலையாட்டி விடைபெற்று சென்றாள்…
———–